ஞாநி..சில நினைவுகள்.

708x500xgnani.jpg.pagespeed.ic.QAlhGbMQGU

வாழ்வின் சூட்சமக் கோடுகள் விசித்திரமானவை. யாராலும் வகைப்படுத்த இயலாத மர்மச் சுழிகளால் வாழ்வெனும் நதி நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறது. எவரோடு எவர் பிணைக்கப்படுவர் …பிரிக்கப்படுவர் என்று தெரியாத வாழ்வின் பொல்லாத பகடை ஆட்டத்தில் தான் நானும்,அவரும் அறிமுகமானோம். 2006-07 காலக்கட்டம். அப்போது அவர் புகழ்ப்பெற்ற எழுத்தாளர். அவரது நவீன நாடகங்கள் மூலமாகவும்,எழுத்துக்கள் மூலமாகவும் தமிழுலகம் தெரிந்த ஆளுமையாக உருவான அக்காலக் கட்டத்தில் தான் அவர் ஆனந்த விகடனில் ஓ பக்கங்கள் என்கிற தொடரை எழுதத் தொடங்கினார். பரவலான வாசகர் வரவேற்பை பெற்ற அத்தொடரில் ஒருமுறை பெரியார்-அண்ணா குறித்து ஒப்பீடு செய்து பெரியார் அரசியலில் தோற்றார்,அண்ணா வென்றார் என ஒப்பீடு செய்து எழுதினார்.

இணைய உலகம் தமிழகத்தில் அறிமுகமற்ற காலக்கட்டம். அண்ணன் அறிவுமதி என்கிற பல்கலைகழகத்தின் பயிற்சி மாணவனாக பயின்றுக் கொண்டிருந்த நான் தம்பி இயக்குனர் முரளி மனோகர் உதவியோடு ஞாநியின் எழுத்துக்களில் தெரியும் ஆரிய மனம் என்ற தலைப்பில் பெரியாரை இழிவுப்படுத்தியதாக குற்றம் சாட்டி ஞாநியை நேரடியாக தாக்கி ஒரு விவாதக்கட்டுரையை எழுதினேன். அதை ஞாநியின் ஆதரவாளர்கள் உருவாக்கி வைத்திருந்த ஞாநி தி ரைட்டர் என்கிற ஆர்குட் பக்கத்தில் வெளியிட்டேன். நாலாப்புறமும் ஞாநியின் ஆதரவாளர்கள் எனக்கு எதிராக பெரும் விவாதத்தை தொடங்கினர். சமூக வலைதளங்களில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் என்கிற முறையில் முதன்முறையாக விரிவாக நடந்த விவாதம் அது. என்னோடு கோவை Yuvan PrabhaKaran , விடாது கருப்பு,சசி, Packiarajan Sethuramalingam ,Don Ashok R ,சீறிதர், Murali Manohar Vishnupuram Saravanan ஒட்டக்கூத்தன் என பலர் கொண்ட பெரும் படை இணைந்தது. பெரியாரியம் குறித்த நீண்ட அந்த விவாதத்தில் திராவிடம்,ஆரியம் ,ஈழம் ,அம்பேத்கரியம் என பல்வேறு அரசியல் கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இதில் என்ன ஆச்சரியம் என்றால் எழுத்தாளர் ஞாநியே நேரடியாக இவ்விவாதங்களில் பங்கேற்றார்.

மிகப்பெரிய ஆரிய பார்ப்பனீய இந்துத்துவ எதிர்ப்புணர்ச்சியோடு நாங்கள் அந்த விவாதங்களில் பங்கேற்றோம். இந்த விவாதம் நடந்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஞாநி அதே தொடரில்.. கலைஞர்.மு.கருணாநிதிக்கு வயதாகி விட்டது. அவர் அரசியலிருந்து ஓய்வு பெற வேண்டும் என எழுதப் போக… மேலும் நாங்கள் உக்கிரமானோம். ஈழப்போர் உக்கிரமாக நடந்துக்கொண்டு இருக்கிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு செயலாளர் அண்ணன் தமிழ்ச்செல்வன் சிங்களனின் குண்டு வீச்சினால் கொல்லப்படுகிறார். அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி இரங்கல் கவிதை ஒன்றை வெளியிட்டார். நாங்கள் கலைஞரை உச்சியில் வைத்து ஞாநியை தாக்கி எழுதி விவாதித்து கொண்டிருந்தோம். முதன்முறையாக எங்களது விவாதம் அண்ணன் அறிவுமதி அவர்களால் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அது அப்போதைய முதல்வர் கருணாநிதி யின் பார்வைக்கும் சென்று விட..அவரே என்னை அழைத்து நமது பிள்ளைகள் ஆரிய ஆதிக்கத்தை உடைத்து இணைய தளத்திலும் நுழைந்து விட்டதாக வாழ்த்தினார். பிறகு தம்பி என்னாரெஸ் பெரியார் மூலமாக திக தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் திடலுக்கு எம்மை அழைத்து வாழ்த்த..பெரும் உற்சாகமானோம். அய்யா சுப.வீ ,அண்ணன் திருமா,அண்ணன் சீமான் ,கொளத்தூர் மணி, எழுத்தாளர் பாமரன் போன்றோர் இந்த விவாதத்தையும், எங்களையும் பொது வெளிக்கு அறிமுகப்படுத்தினர். அதே உற்சாகத்தில் நாங்கள் ஆர்குட்டில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்கிற குழுமத்தை உருவாக்கினோம்.இணைய வெளி சார்ந்து முதன் முறையாக ஒரு கலந்தாய்வுக்கூட்டத்தை சென்னை கோல்டன் பீச்சில் நடத்தினோம். அக்கலந்துரையாடலில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,அண்ணன் அறிவுமதி,பாமரன்,அண்ணன் சீமான்,பேரா.சுப.வீ போன்ற ஆளுமைகள் கலந்துக் கொண்டனர்.

இவ்வளவிற்கும் காரணமான ஞாநி எங்களோடு விவாதித்துக் கொண்டே தான் சொல்ல வந்தவற்றை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருந்தார். இறுதியில் நாங்களும் சமரசமாகாமல் தொடரவே..ஒரு கட்டத்தில் இனி எங்களோடு விவாதிக்கப் போவதில்லை எனவும்,சமூக வலைதளங்களில் இனி வரப்போவதில்லை என அறிவித்து விட்டு அமைதியானார். அய்யா சுப.வீ அவர்களை தாக்கி குங்குமம் இதழில் அவர் எழுதிய பத்திக்கும் நான் கடும் எதிர்வினை ஆற்றி இருந்த போதிலும்..ஒரு திருமணத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்த போது வாங்க..செந்தில் என அழைத்து என்னை இறுக அணைத்துக் கொண்டார்.
மாற்றுக் கருத்து கொண்டு இருந்ததாலேயே எதிரியாக நினைக்க தேவை இல்லை என அவர் கொண்டிருந்த புரிதல் ….அவர் மீதான எம் மதிப்பை அதிகரிக்கச் செய்தது.
திமுக தலைமை குறித்து அவர் வைத்திருந்த விமர்சனங்கள் காலப்போக்கில் உண்மையானப் பொழுதும்,அவற்றை நானே விமர்சித்து எழுதிய போதும்.. அவர் நான் அன்றே சொன்னேன் இல்லையா என்பது போல் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார்.
ஒரு முறை அவரை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து இது குறித்து பேசிக் கொண்டு இருந்த போது..நாங்கள் அந்த விவாதத்தில் தோற்று விட்டோம் என இன்று உணர்கிறேன் என்று தணிந்தக்குரலில் வருத்தமாக சொன்னேன்.
இல்லை..இல்லை.. நீங்கள் தோற்கவில்லை.தீவிரமாக இயங்கிய உங்களைப் போன்றோரை தனது செயல்பாடுகளால்..இழந்த கருணாநிதி தான் தோற்றார் என்றார் அவர். மேலும்…அது போன்ற கற்றுக்கொள்கிற…நாகரீக புரிதலுடன் கூடிய விவாதம் அதற்கு பிறகு சமூக வலைதளங்களில் எங்கும் நடக்க வில்லை எனவும் அதற்கான இடமே இல்லை எனவும் வருந்தினார்.
அவரை எதிர்த்து எழுதிய நாங்கள்..அதன் மூலமாக பொது வெளிக்கு அறிமுகமாகி வெவ்வேறு அமைப்புகளில் மதிப்பார்ந்த இடங்களில் இன்று இருக்கிறோம்.

எதிர்க்கவும்..எதிர்க்கப்படவும் கூட ஞாநி போன்ற தகுதி வாய்ந்த எதிரி தேவையாய் இருக்கிறது. வசவுகளும்,தனி மனித தாக்குதல்களும் நிரம்பிய இன்றைய சமூக வலைதளங்களில் ஞாநி போன்றோருக்கு இடமில்லை தான்.

நமக்கும் இடமில்லை என்பதுதான் ஞாநி சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்ற செய்தி.

போய் வாருங்கள் ஞாநி. நான் எழுதுகிற எழுத்துக்களில் எல்லாம்..நான் விரும்பியோ..விரும்பாமலோ நீங்கள் நினைவுக்கூரப்படுவீர்கள்.

அவ்வகையில்..நீங்கள் தான் அன்று வென்றீர்கள்.

மணி செந்தில்
15.01.2018.

173 total views, 3 views today

தூரிகைப் போராளிக்கு புகழ் வணக்கம்.

 

19961232_322073331550875_5509818354733020721_n

அண்ணன் இராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான…
நான் எழுதிய விடுதலைக்கு விலங்கு நூலுக்கான அட்டைப்படம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்ட போது..

சீமான் அண்ணன் தான் அய்யாவிடம் தர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.

எனக்கு டிராஸ்கி மருதுவின் மேலதான் மயக்கம்.

இருந்தாலும் அண்ணன் சொல்லி விட்டாரே என சற்று ஒவ்வாமையோடுதான் அவரை சந்திக்க போனேன்.

ஒரே ஒரு ஈர்ப்பு..மனுசன் எங்க ஊர்க்காரர்.

வைகறை என அழைக்கப்படும் அவரது வீட்டில் நிகழ்ந்தது எங்கள் முதல் சந்திப்பு.

ஒரு டிராயரோடு உட்கார்ந்து எனது புத்தகத்தை படிக்க தொடங்கினார்..

சில பக்கங்களை படித்த பிறகு..அவரது கண்கள் கலங்க தொடங்கின..

புத்தகத்தை மூடி வைத்து விட்டு நீ போய் வா.. என்று அனுப்பி வைத்து விட்டார்.

என்ன இவர் ஒன்றுமே சொல்லாமல் அனுப்பிட்டாரே என்று ஏமாற்றம்.

பிறகு மறுநாள் நான் சந்தித்த போது மனசே சரியில்லப்பா.. இரவெல்லாம் தூங்கல.. படிச்சி முடிச்ச உடனே வரைஞ்சிட்டேன் என அவர் அளித்த ஓவியம் தான் அந்நூலுக்கு உயிரானது.

அதன் பின்னர் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றப் பணிகளில் சந்தித்த போது விடுதலைக்கு விலங்கு பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.

தலைவர் பிரபாகரன் பற்றி இது வரை வெளிவராத ஒரு புதிய கோணத்தில் நான் எழுத விருந்த திட்டத்தை அவரிடம் ஒரு முறை விவரித்தேன்.

கண்கள் மினுக்க சொன்னார்..

இதுக்கும் நான் தாண்டா அட்டைப்படம்.

கடைசியாக என் அண்ணன் அறிவுமதி மகள் எழிலின் திருமணத்தில் பார்த்தும் இதே பேச்சு.

நானும் எழுத வில்லை.

அவரும் போய்விட்டார்.

என்றாவது அந்த நூலை நான் எழுதும் போது..

காற்றோடு கரைந்து மிதந்து வரும் அவரது மாயக்கரம் சுமந்த மந்திரத் தூரிகை அந்த அட்டைப்படத்தை வரையும்.

போய் வா போராட்டக் கிழவா..

நாங்கள் இடும் முழக்கங்களில்லாம்..நீ ஊறிக்கொண்டே இருப்பாய்..

தூரிகைப்போராளி வீர.சந்தானம்
அவர்களுக்கு எம்
புகழ் வணக்கம்.

 

148 total views, 3 views today

பனித்துளிகளின் வியாபாரி

 

 

16298627_248346298923579_4402940604851716045_n

 

நீல ஆகாயத்தின் கீழ் பச்சைப் போர்வை என விரிந்திருந்த பசும் புற்களின் நுனியில் சேகரித்த பனித்துளிகளை விற்பவன் நேற்று வந்திருந்தான்.

கண்ணாடிக்குடுவையினுள் மின்னிக் கொண்டிருந்த அந்த பனித்துளிகள் இதுவரை பார்த்தறியாத தூய்மையால் ஏரிப்பரப்பில் படர்ந்திருந்த நிலவொளியை ஒத்திருந்தன.
மெல்ல நெருங்கி பார்க்கும் போது அந்த பனிக்குமிழியை பார்ப்பவரின் பால்ய முகம் தெரிந்து பரவசப்படுத்தியது.

பனித்துளிகளை சுமக்கும் அந்த கண்ணாடிக்குடுவைவினை அப்படியே ஏந்தி முகத்தில் வைத்து மகிழ்ந்தவர் கன்னத்தில் முதல் முத்தம் தந்த இதழ்களின் தடம் பதிந்தது.

என்ன விலை..என்ன விலை

என கேட்பவர்களிடத்து பச்சை விழிகளைக் கொண்ட அந்த செவ்வண்ண சட்டைக்காரன் சொன்னான்.

உங்கள் ஆன்மாவின் அழியாத நினைவுகளில் முதல் மூன்றினை தாருங்கள். கூடவே உங்களின் ஈரம் அடர்ந்த முத்தம் ஒன்றினையும்.

விசித்திர விலையை கேட்டவர்கள் விக்கித்துப் போனார்கள். அழியாத நினைவுகள் காலத்தின் கலையாத ஓவியம் அல்லவா..அதை விற்று வெறும் பனித்துளிகள் வாங்குவதா…முத்தம் என்பது நம் அந்தரங்கத்தின் நுழைவாயில் அல்லவா..அதை கொடுத்து பசும் புற்களின் ஈரம் அடைவதா.. என்றெல்லாம் குழுமி இருந்தோர் மத்தியிலே குழப்பம் ஏற்பட்டது.

என்னிடத்தில் முத்தம் இருக்கிறது. ஆனால் என் நினைவுகளை வாழ்வின் எதிர்பாராத தருணங்களின் வண்ணம் கொண்டு வெறுப்பின் தூரிகையால் ஏற்கனவே அழித்து விட்டேன் ..எனக்கு பனித்துளிகளை தருவாயா என்று இறைஞ்சியவளை பனித்துளி விற்பவன் விரக்தியாக பார்த்தான்..

அவனே மீண்டும் சொன்னான்.

வெறும் முத்தம் எச்சில் ஈரம் மட்டுமே..உள்ளே சுரக்கும் நினைவுகளின் அடர்த்திதான் முத்தத்தை உணர்ச்சியின் வடிவமாக்குகிறது. உணர்ச்சியற்ற முத்தம் என்பது கழுத்தில் சொருகப்பட்ட கத்திப் போல கொடும் துயர் கொண்டது. உணர்ச்சியற்ற வெறும் இதழ்களின் ஈரத்தை வைத்துக் கொண்டு என்னை விஷத்தை முழுங்க சொல்கிறாயா என எரிந்து விழுந்தான்.

என்னிடத்தில் நினைவுகள் இருக்கின்றன. அதில் படர்ந்திருக்கும் கசப்பின் நெருப்பு என் முத்தங்களை எரித்து விட்டன ..முத்தங்கள் இல்லாத நினைவுகள் மதிப்பற்றவையா.. எனக்கு பனித்துளிகள் இல்லையா என்று புலம்பியவனை பார்த்து பனித்துளி வியாபாரி அமைதியாக சொன்னான்.

முத்தங்கள் இல்லாத நினைவுகள் இதழ்கள் எரிந்த முகம்.
இதழ்களற்ற முகம் சுமக்கும் நினைவுகள் எப்போதும் பனித்துளிகளை சுமக்காது என்றான்.

நேரம் ஆக ஆக சிரித்துக் கொண்டிருந்த பனித்துளிகள் வாடத்தொடங்கின. பனித்துளி விற்பவன் பதட்டமடைய தொடங்கினான்.

கூடியிருந்த கூட்டம் மெதுவாக கலையத்தொடங்கியது.

இந்த உலகில் நினைவுகளை சுமந்து..கனவுகளின் ஈரத்தோடு முத்தமிடுபவர் யாருமில்லையா… முத்தமிடும் போது நினைவுகளை விலக்கியும், நினைவின் நதியில் தொலையும் போது முத்தத்தை அழித்தும் தான் இவர்கள் வாழ்கிறார்கள்.

என்று மனம் வெறுத்து பனித்துளிக்குடுவைகளை அருகே சலசலத்து ஓடிக் கொண்டிருந்த நிலவாற்றில் வீசியெறிந்து விட்டு அந்த கிராமத்தை விட்டு அகன்றான் பனித்துளி விற்பவன்.

அன்றைய பெளர்ணமி இரவில் ஆற்று நீரை அள்ளிப் பருகிய எவரும்..நினைவுகள் கொப்பளிக்க..எதையோ முணுமுணுத்தவாறே நதிக்கரையில் இறந்துக் கிடந்தனர்.

தப்பிப் பிழைத்து எழுந்த சிலர் கண்கள் வெறிக்க நடைப்பிணங்களாக திரிந்தனர்.

நம்மைப் போன்று.

917 total views, 3 views today

தற்கொலைப் பற்றிய சில குறிப்புகள்..

 

suicide-hanging-e1442464610195

 

மரியாதையென்பதை காசு பணத்தால் அளவிடும் இந்த மானம்கெட்ட சமூகத்தில் தற்கொலை நியாயமாகவே படுகிறது…

என்ன வாழ்க்கைடா…

– என் தம்பி ஒருத்தன்..

ஆனால் தற்கொலை என்பது இன்னும் மரியாதை கெட்டது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை பார்த்து இருக்கிறாயா…. காயமும், வலியும் நிறைந்த அந்த விழிகள் எதனாலும் ஆறுதல் கொள்பவை அல்ல. ஒரு முறை தற்கொலை முயற்சி செய்து விட்டு வாழ நேருகிற துயரம் மரணத்தை விட கொடுமையானது. காயமானது. இன்னொரு செய்தி.. மற்றவர்களால் நமக்கு தர கோருகிற எதுவும் நமக்கு நேர்மை செய்யாது. ஈடு ஆகாது. மரியாதை என்பதும் அதற்கு விதிவிலக்கு அல்ல. உன் வாழ்க்கை . நீ வாழ். மற்றவர் மதிப்பதும், இகழ்வதும் அவரவர் பாடு. உன் வாழ்க்கையை உன் போக்கில் நீ வாழ யாரிடமும் அனுமதியோ, எதிர்பார்ப்போ கொள்ள தேவையில்லை. மதிப்பு என்பது நம் மீது நாம் கொள்வது. அது மற்றவர்களை சார்ந்திருக்க தொடங்கும் போதுதான் துயரம் சூழ தொடங்கிறது. எதுவும் மற்றவர்களை சார்ந்து பிறக்கவும் கூடாது. எழவும் கூடாது. நாம் தான் நமக்கு. வாழடா தம்பி. உன் போக்கில். அதுவே அழகானது. உண்மையானது. சொல்லப்போனால்… உனக்கு நீயே மதிப்பு செய்து கொள்வது.

உண்மையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவனின் அம்முயற்சிக்கு முந்தைய நிமிடங்கள் விசித்திரமானவை. தன்னுடைய முயற்சிக்கான தர்க்கங்களை ,நியாயங்களை தனக்குள்ளாக ஏற்படுத்துகிற அந்த நிமிடங்களை கடப்பதென்பது ஆள் அரவற்ற ..வெக்கையும், தனிமையும் நிரம்பிய கொடும் பாலையை கடப்பதற்கான உளவியல் சவால்களை கொண்டது. வாழ முடியாததற்கான சூழல்களின் இறுக்கத்தினை நமது மனது கடும் துயராக கொண்டிருக்கும் போதுதான்.. இனி வாழ்வது என்பது எல்லா துயரைக் காட்டிலும் மேலான துயராக நீடிக்கும் என்கிற எண்ணம் ஆழப் பதியும் போதுதான்.. நமக்கு நாமே செய்து கொள்கிற நேர்மையாக தற்கொலை எண்ணம் எழும்பும்.

ஒரு சுவையான தேநீர் அருந்தும் போது ஏற்படும் ஆசுவாசம் போன்ற உணர்வோடு தற்கொலை உணர்ச்சியை எதிர்கொண்ட சிலரை நான் அறிவேன். ஆனால் அந்த முயற்சியில் தோல்வியுற்று சராசரி வாழ்க்கைக்கு திரும்பும் போது …உள்ளுக்குள் கவிழும் குற்ற உணர்ச்சியும், ஏமாற்றமும், சற்றே எதிர்காலம் குறித்த அச்சமும் மிஞ்சிய நாட்களை காயப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அவரவருக்கான நியாயங்களை கொண்டிருந்தாலும்.. தற்கொலை என்பது ஒரு போதும் கொண்டிருக்கும் காயங்களுக்கான நியாயம் ஆகாது. அந்நேரச் சூழலின் பொருட்டு தப்பித்தலுக்கான வழிதான்…என்றாலும் கூட ..

உயிர் விட்ட பிறகு தப்பித்து என்ன தான் ஆகப்போகிறது.. தப்பிக்கிற உணர்ச்சியை அனுபவிக்க யார் இருப்பார்கள்..??

– மணி செந்தில்

1,232 total views, 3 views today

எஸ்.ராமகிருஷ்ணனும் -தங்கம்மா வீடும்..

thijanakiraman
புத்தக வாசிப்பு போல உலகில் இன்பமானது ஏதுமில்லை. அதுவும் தேர்ந்த எழுத்தாளன் கரத்தில் ரசனை மிக்க வாசகன் சிக்கிக் கொள்ளுதல் போன்றதோர் மகிழ்ச்சிக்கரமான தருணம் ஏதுமில்லை. என்னையெல்ல்லாம் அடித்து துவைத்து காயப்போட்ட பல புத்தகங்கள் உண்டு. வாசித்தல் என்பது ஒரு வசீகரமான மாயச்சுழி. அச்சுழியில் சிக்கிக் கொண்டு மீளவே முடியாத பல அடிமை வாசகர்களில் அடியேனும் ஒருவன்.
 
தமிழ் இலக்கிய உலகில் தி.ஜா என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் படித்து விட்டு அக்கதையில் வரும் யமுனாவை தேடி கும்பகோணம் வீதிகளில் நான் அலைந்திருக்கிறேன். அக்கதையில் தி.ஜா தன் எழுத்துக்கள் வாயிலாகவே யமுனாவை கண்,காது,மூக்கு, நிறம், மொழி என ஸ்தூலமாக உருவாக்கி விடுவார். இக்கதை திரைப்படமாக வந்த போது அதில் யமுனாவாக வந்த பெண்ணைப் பார்த்து சற்று ஏமாந்துப் போனேன் நான்.
Moohamul
 
பதின் வயதுகளில் காதலிக்கிறமோ இல்லையோ மோகமுள் வாசித்து இருக்க வேண்டும் என நம்புகிறவன் நான். தி.ஜாவின் எழுத்துக்கள் மிகவும் வசீகரம் ஆனவை. அவரது கதாநாயகிகளை அவர் நம் முன்னால் உருவாக்கி உலவ விடுவது இருக்கிறதே.. அது ஜகஜால வித்தை. அம்மா வந்தாள் நாவலில் வரும் அலங்காரம் அம்மாளையும், இந்துவையும் உருவப்படியாகவே நான் அறிந்திருக்கிறேன். அம்மா வந்தாள் நாவலைப் படித்த தனிமை இரவில் … எனது முதுகிற்கு பின்னால் இந்துவின் விசும்பல் கேட்டுக் கொண்டே இருந்தது போன்ற உணர்வு. அதே போல மோகமுள்ளில் வரும் யமுனாவின் கம்பீரத்தை நான் பார்க்கிற எல்லா முதிர்ப் பெண்களிடமும் தேடி இருக்கிறேன். நீதானா அந்த யமுனா..???
 
அதே போல எங்கள் ஊரைச் சேர்ந்த தஞ்சை ப்ரகாஷ்,எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு,கு.பா.ரா, இவர்கள் அனைவருமே வாழ்வை வாழ்வாங்கு ரசித்தவர்கள். கும்பகோணம் டிகிரி காப்பியை துளித்துளியாக ரசித்து அருந்தி..காவிரியின் காற்றை நெஞ்சம் முழுக்க சுவாசித்து, குடந்தைக்கே உரிய இதமான பருவச் சூழலில் வாழ்ந்து.. அணு அணுவாக எம் மண்ணையும், மக்களையும் ஆவணப்படுத்தியவர்கள் அவர்கள்.. தஞ்சை மண்ணை, குடந்தைத் தெருக்களை போற்றியவர்கள். தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்கியவர்கள். ஒருமுறை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனோடு கும்பகோணம் வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்த போது.. நீங்கள் மோகமுள்ளில் வரும் தங்கம்மா வசித்து வந்த வீட்டை பார்த்திருக்கிறீர்களா..? என கேட்டார். விளையாட்டிற்காக தான் கேட்கிறார் என எண்ணி என்ன..சார் …கேட்கிறீங்க…? ..என்றேன். உண்மையாகதான் செந்தில் தங்கம்மா வீட்டை பார்த்திருக்கிறீர்களா.. நான் அழைத்து போகிறேன் என்றார்.
IMG_0850
உண்மையில் அது ஒரு விசித்திர தருணம். எங்கள் உரையாடலை யாராவது கேட்டால் மனம் பிழன்ற இரு நோயாளிகள் பேசிக் கொள்கிறார்கள் என நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு. இருக்காதே பின்னே..,ஒரு புனைவில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் வீட்டை காண்பிக்கிறேன் என்கிறாரே.. அப்படியென்றால் மோகமுள் உண்மைக் கதையா என்ற குழப்பம் எனக்கு. இதையெல்லாம் பொருட்படுத்தாத எஸ்.ராவோ.. வாங்க தங்கம்மா வீட்டை பார்க்க போகலாம் என்று கிளம்பி விட்டார். எனக்கென்ன பயம் என்றால்… யாராவது முதியவரை காட்டி இவர்தான் மோகமுள் பாபு என்று எஸ்.ரா அறிமுகம் செய்து விடுவாரோ என்றுதான்.
 
அது ஒரு மாலைநேரம். காவிரி அந்நேரத்தில் உண்மையாகவே நிரம்பி தளும்பி ஓடிக் கொண்டிருந்தது. எங்களது வாகனம் கும்பகோணம் பாலக்கரையில் இருந்து நீதிமன்றம் செல்லும் காவிரிக்கரையோர சாலையில் அமைதியாக சென்றுக் கொண்டு இருந்தது. நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வேறு ஏதாவது சொல்லி விடுவாரோ என்று அச்சம் எனக்கு, சற்று தூரத்தில் வண்டியை நிறுத்தச் சொன்ன எஸ்.ரா அமைதியாக நடக்கத் தொடங்கினார். காவிரிக்கரை படிக்கட்டுகளில் சற்று இறங்கி நிரம்பி ஓடும் காவிரி நதியின் எழிலை அமைதியாக கவனித்துக் கொண்டே நின்றார். பின்னர் வாங்க போகலாம் என்றவாறே நடக்கத் தொடங்கினார். சற்றுத் தூரத்தில் உள்ள சற்று பழுதடைந்த வீட்டைக் காட்டி இங்கே தான் தங்கம்மா இருந்திருக்க வேண்டும். இந்த மாடியில் தான் பாபு தங்கியிருக்க வேண்டும் என்றார். நான் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன்.
 
மோகமுள் கும்பகோணம் தெருக்களைப் பற்றிய அழகிய சித்திரத்தை உருவாக்கியுள்ள நாவல் என்று எனக்குத் ஏற்கனவே தெரியும். எஸ்.ரா சொன்ன அத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள நாவலை மீண்டும் வாசித்தேன். கிட்டத்தட்ட 600 பக்கங்களுக்கு மேலான நாவல் அது. குறிப்பிட்ட தங்கம்மா,பாபு வருகிற அப்பக்கங்களை ஆழமாக படித்த போது. தி.ஜா விவரித்த விவரணைகளும், தெரு குறிப்புகளும், எஸ்.ரா அடையாளம் காட்டிய வீட்டிற்கு மிகச்சரியாக பொருந்தியது. நான் அதிர்ச்சியில் வியர்த்து விட்டேன்/.
 
பின்னர் எஸ்.ரா விடம் பேசிக் கொண்டிருந்த போது..சார் நீங்க சொன்னது சரிதான் சார்… அதுதான் தங்கம்மா வீடு என்றேன். அவர் மெலிதாக சிரித்துக் கொண்டார். அதிலிருந்து நான் அந்த வீட்டை கடந்து நீதிமன்றம் செல்லும் போதெல்லாம் என் முதுகுதண்டு சிலிர்க்கும். தங்கம்மா நின்று என்னை பார்த்துக்கொண்டிருப்பது போல தோற்றம். பாபு மாடியில் இருந்து பாடுவது போன்ற மெல்லிய மயக்கம்.
 
உண்மையில் ஒரு எழுத்தாளன் அவ்வளவு வலிமையானவனா..புனைவிற்கும், நிஜத்திற்கும் நடுவே இருக்கும் கோட்டை அழிப்பவனா என்றெல்லாம் எஸ்.ராவிடம் கேட்க வேண்டும் போல தோன்றியது.
 
அவரிடம் நான் கேட்க நினைத்து…கேட்டால் அதையும் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் நான் மறைத்த கேள்வி ஒன்று இருக்கிறது.
 
சார்..யமுனா வீடு எங்கிருக்கிறது..?
 
-மணி செந்தில்

1,179 total views, 3 views today

ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன்

images (1)

ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன் -மணி செந்தில்
——————————————————————————————

ஜெயகாந்தனுக்கு ஏன் நீங்கள் ஒரு பதிவு எழுதவில்லை..என்று கேட்டே விட்டான் என் தம்பி துருவன் செல்வமணி.

இறந்து விட்டார் என்பதற்காக அவரை ஆஹா-ஓஹோ என புகழ்ந்து பதிவிடும் போக்கு இணையத்தளம் வந்த பிறகு அதிகமாகி விட்டது என நான் கருதுகிறேன்.ஜெயகாந்தன் ஒரு வேளை மீண்டும் பிழைத்தாரென்றால்….”நான் செத்தால் இப்படியெல்லாம் எழுதுவீர்கள் என்றால்…நான் சாகவே மாட்டேன்” என சொல்லி விடுவார் போல…
வெறுப்பின் குணாம்திசியங்களோடு,கறாராய் வாழ்ந்த அம்மனிதனுக்கு திகட்ட திகட்ட இரங்கல் உரைகள்.

நான் ஜெயகாந்தன் தமிழ்ச்சிறுகதை உலகினை ஆட்சி செய்த போது வாசிக்க தொடங்கவில்லை. என் அம்மா பைண்டிங் செய்யப்பட்ட ஜெயகாந்தன் நாவல்களை அடிக்கடி வாசித்துக் கொண்டிருப்பதை கண்ட போதுதான் அக்காலத்திய பெண்களின் புரட்சிக்காரனாய் அவர் திகழ்ந்திருந்ததை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது..அவரது அக்கினி பிரவேசம் சிறுகதையை என் அம்மா சிலாகித்து பேசும் போது எனக்கென்னவோ அதில் கொண்டாட ஏதுமில்லை என்றுதான் தோணிற்று. அதன் பின்னால் அவரை நான் வாசித்த போது புதுமைப்பித்தன்,திஜா,எம்.வி.வி,கரிச்சான்குஞ்சு,தஞ்சை ப்ரகாஷ் போன்ற என் அபிமான அக்காலத்து எழுத்தாளர்கள் அளவிற்கு ஜெயகாந்தன் என்னை ஈர்க்கவில்லை. மேலும் தமிழ்மொழி குறித்தும், காஞ்சி மடம் குறித்தும்,பெரியார் குறித்தும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள்,செயல்பாடுகள் ஆகியவை எனக்கு எதிரானவையாக இருந்தன, ஜெயகாந்தன் எழுத்துக்களில் புலப்படும் அதிகப்படியான உரையாடல்கள் அக்காலத்திற்கு உகந்தவையாக,புதுமையாக இருந்தாலும்..எனக்கு சற்று மிகையாக தான் தெரிந்தன..ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் அவரைப்போலவே நெகிழ்வற்ற பாத்திரங்களாக விளங்கின. மரபுகள் மீதான கலகமாய் ஜெயகாந்தனை நாம் கொண்டாட முடியாது.. ஏனெனில் அவருடைய வெளிப்படையான பார்ப்பன,இந்துத்துவ ஆதரவு அதற்கு எதிராக இருக்கிறது. சினிமா உலகிற்கு ரஜினிகாந்த் போல இலக்கிய உலகிற்கு ஜெயகாந்தன் திகழ்ந்திருக்கிறார் போல…என்ன செய்வது..எனக்கு நடிப்பில் கார்த்திக் (முத்துராமன்) தான் பிடிக்கும்.

ஜெயகாந்தனின் திரைப்படங்களில் நான் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ,சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற படங்களும் மெலோ டிராமா வகையை சார்ந்தவையே… அப்படங்களில் நடித்த நடிகை லெட்சுமி படங்களை விட என்னை ஈர்த்தார்.

இப்போது நானும் இணையத்தளங்களில் கொட்டிக்கிடக்கும் ஜெயகாந்தன் பற்றிய வாழ்க்கை விவரணைக் குறிப்புகளில் இருந்தும், அவரது பல கட்டுரைகளில் இருந்தும் ஜெயகாந்தன் பற்றிய ஒரு புகழ் கட்டுரையை தேற்றி விடலாம் தான். ஆனால் அது ஜெயகாந்தன் உருவாக்க முனைந்த பிம்பத்திற்கு எதிரானது…இந்து நாளிதழில் நேற்றைய சமஸ் கட்டுரை கூட எனக்கு மிகவும் அந்நியமாக,சடங்காக தெரிந்தது அவ்வாறுதான்.. ஒரு வேளை.. ஜெயகாந்தனைப் பற்றி ஆவணப்படம் எடுத்த..அவருடன் நெருங்கிப் பழகிய ரவி சுப்ரமணியன் சமரசமற்ற ஒரு பதிவு எழுதினால் ஏறக்குறைய ஜெயகாந்தன் என்கிற மனிதனுக்கு நேர்மையாக இருக்கும்.

உன்னை பிடிக்காது என்பதை ஜெயகாந்தனிடம் நேரடியாக சொல்வதே..வெளிப்படையாக வாழ்ந்த அந்த எழுத்தாளனுக்கு நான் செலுத்துகிற உண்மையான அஞ்சலி..

அதைத்தான் அவரும் விரும்புவார்.

மற்ற படி ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன். நான் வெறுக்க ,நிராகரிக்க ஜெயகாந்தன் இருந்தார் .இப்போது இல்லை. அந்த காரணங்களுக்காக வருந்துகிறேன்.

1,223 total views, 3 views today

மண்ட்டோ படைப்புகள் – உண்மையின் கோர முகம்.

“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது”

-சாதத் ஹசன் மண்ட்டோ.

மண்ட்டோ என்ற இப் பெயரினை நான் முதன் முதலாக கேள்விப்பட்ட இடம் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. எழுத்தாளரும், என் நண்பருமான அம்மாசத்திரம் சரவணன் திருமண நிகழ்வின் போதுதான் இப்பெயரினை நான் முதலில் கேட்டேன் . திருமணத்தின் முதல் நாளின் மாலையில் சரவணன் தனது சிறுகதை தொகுப்பினை வெளியிடும் நிகழ்வினை வைத்திருந்தார். சரவணன் தமிழ்நாட்டின் நவீன எழுத்தாளர்களின் நெருங்கிய நண்பராக இருப்பவர். அதனால் அவரின் திருமண நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான நவீன எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள் . அந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள எஸ் .ராமகிருஷ்ணன், அ.மார்கஸ், கோணங்கி, பொதியவெற்பன் போன்ற பல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். மாலையில் நடந்த அந்த சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் அ.மார்க்ஸ் இனி தமிழக எழுத்தாளர்கள் மண்ட்டோவினை பின்பற்ற வேண்டும் எனவும்,புதுமைப்பித்தனையே பிடித்து தொழுது கொண்டிருக்க கூடாது, திருமணம் போன்ற நிறுவனங்கள் தகர்க்கப்பட வேண்டும் எனவும், அப்பா, அம்மா, மனைவி போன்ற குடும்ப உறவுகளில் எவ்வித புனிதமும் இல்லை எனவும் வயதான பெற்றோரை கவனிக்க வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கான விருப்பம் எனவும் பேசினார்.திருமணத்திற்கு வந்திருந்த பெண்கள் இதையெல்லாம் கேட்டு நெளிந்துக் கொண்டிருந்தனர். புதுமைப்பித்தனின் வெறியரான பொதிய வெற்பனுக்கு இது தாங்கவில்லை. துள்ளி துடிக்க எழுந்து பதில் சொல்ல முயன்றார். ஆனால் அ.மாவிற்கு முன்பே பேசியிருந்த பொதியினால் மீண்டும் ஒரு முறை பேச வாய்ப்பில்லை. அடுத்ததாக பேச வந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன்.

எஸ்.ராமகிருஷ்ணன் ஆகச்சிறந்த பேச்சாளரில்லை. ஆனால் நாம் அறிந்திராத தகவல்களையும்,சுவாரசியங்களையும் கலந்து அடித்து பிரித்து மேய்வதில் வல்லவர். ஒரு அவையை எப்படி தன்னகப்படுத்துவது என்ற வித்தை புரிந்தவர் எஸ்.ரா. அதனால் மிக எளிதாக குடும்ப உறவுகளின் மேன்மையை பற்றி பேசி பெண்களிடம் கைத் தட்டல் அள்ளிக் கொண்டு போனார் எஸ்.ரா.பிறகு மண்ட்டோவினையும்..புதுமைப்பித்தனையும் ஒப்பிட்டு அவர் பேசினார். புதுமைப்பித்தனின் வாழ்வியலும், சமூகச் சூழலும் நமக்கு நெருக்கமானவை என்றும் மண்ட்டோ போல எதனையும் சிதைக்க நம் பண்பாட்டு விழுமியங்களில் இடமில்லை எனவும், நம் உறவுகளில் நிலவும் சகிப்பும், பகிர்வுமே நம்மை நிம்மதியாக வாழ வைக்கிறது எனவும் பேசி அந்த அரங்கினில் புதுமைப்பித்தனை உச்சியில் வைத்து பொதியவெற்பனை துள்ளிக் குதிக்க வைத்தார் எஸ்.ரா.

விழா முடிந்து எஸ்.ராவுடன் நான் காரில் வருகையில் மண்ட்டோ அந்தளவு நமக்கு அந்நியப்பட்டவரா என்று கேட்டேன். அதற்கு மண்ட்டோவினை படியுங்கள் . அதனை வெறுப்பதும், நேசிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் மண்ட்டோவினை படிக்காமல் இருக்காதீர்கள் என்றார்.

அந்த நாளில் தான் மண்ட்டோ என்னுள் நுழைந்தார். நான் ஒரு முறை திருமணத்திற்காக கோவைக்கு சென்ற போது சென்னையில் இருந்து வரும் என் நண்பன் ஒட்டக்கூத்தனை மண்ட்டோ படைப்புகள் நூலினை வாங்கி வரச்சொல்லியிருந்தேன். நான் வருவதற்கு முதல் நாள் வந்திருந்த அவனிடம் மண்ட்டோ படைப்புகள் இருந்ததை எழுத்தாளர் பாமரன் பார்த்து விட்டார். அந்த புத்தகமும் எனக்கு கிடைக்காமல் போயிற்று. கடைசியாக சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் மண்ட்டோ படைப்புகள் எனது வசமானது.

மண்ட்டோ என்ற சாதத் ஹசன் மண்ட்டோ 1912 –ல் லூதியானாவில் இருக்கும் சம்ப்ராலாவில் பிறந்தார். இந்திய –பாகிஸ்தான் பிரிவினையில் மண்ட்டோ பாகிஸ்தானை தேர்ந்தெடுத்தார். தனது 43 ஆம் வயதில் 1955-ல் லாகூரில் காலமானார். மண்ட்டோவின் படைப்புகள் பெரும்பாலும் பிரிவினைத் துயரங்களை பேசுகின்றன. மேலும் விளிம்பு நிலை மக்கள்,விலை மாதர்கள் தான் அவரது கதைகளின் கதை மாந்தர்கள். ஓவ்வொரு படைப்பும் அதிர்ச்சிகளின் வெடிப்பில் முடிந்தது. எளிய வாசகர்கள் மண்ட்டோவினை அணுக அஞ்சுவதும் இதனால் தான். தான் வாழும் காலத்தில் தன் படைப்புகளால் அனைத்து விதமான எதிர்ப்புகளையும் மண்ட்டோ சந்தித்தார். அவரது எழுத்துக்கள் ஆபாசமானவை என்றும், அதிர்ச்சி மதிப்பீடுகளை தருவதற்காகவே புனைவினை மேற்கொள்கிறார் எனவும் விமர்சிக்கப் பட்டன. ஆனால் மண்ட்டோவினை நாம் அவ்வாறெல்லாம் மிக எளிமையாக ஒதுக்கித் தள்ளி கடந்து விட முடியாது. அவரது எழுத்துக்கள் மிகவும் ஆபாசம் என்றால்..அவர் மிக எளிமையாக சொல்கிறார்…ஆம் . உண்மைதான் மிக ஆபாசமானது என்று. இதுதான் மண்ட்டோ.

சிக்கனமான சொற்களின் ஊடாகவே ஒரு படைப்பிற்கான அனைத்து வழிகளையும் திறந்து வைத்தவர் மண்ட்டோ.மண்ட்டோவின் எழுத்துக்கள் உண்மைக்கு அருகில் நிற்பவை அல்ல. மாறாக உண்மையாகவே நிற்பவை. இதுதான் பிற்போக்குவாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பிரச்சனையாக இருந்தது. மண்ட்டோ தனது எழுத்துக்களால் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டார். சமூகத்தின் உயரிய சின்னமான மதத்தினை அவர் தன் எழுத்துக்கள் ஊடாக மிகவும் எள்ளலான முறையில் கேள்விக்கு உட்படுத்தியது மதவாதிகளை எரிச்சல் ஊட்டியது.

ஓய்வு நேரம் எனப் பெயரிடப்பட்ட அவரது சொற்றோவியம் ஒன்று.

“ ஏய்..

அவன் இன்னும் சாகவில்லை..

அவனிடம் இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது”

“என்னால் முடியவில்லை.

எனக்கு அசதியாக இருக்கிறது”

இந்த சொற்றோவியத்தினை ஆழ்ந்து வாசித்துப் பாருங்கள். இந்தியா –பாகிஸ்தான் பிரிவினைக் காலத்திய ரத்த வாடையினை உணர்வீர்கள்.

துணிச்சலான செயல் எனப் பெயரிடப்பட்ட மற்றுமொரு சொற்றோவியம் ஒன்று.

“ அந்த சுற்று வட்டாரத்தில் எல்லாமே தீ வைக்கப்பட்டு எரிந்துப் போனது. –ஒரே ஒரு கடை தப்பித்தது.

அந்த கடையின் அறிவிப்புப் பலகையில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது .

“கட்டிடங்கள் கட்டுவதற்கான எல்லாப் பொருட்களும் இங்கு விற்கப்படும்”

பிரிவினைக் கால கலகப் பூமியை அப்படியே நகலெடுத்து உண்மையாக யாரால் இப்படி எழுத முடியும் என்று யோசித்துப் பார்த்தால் மண்ட்டோ மட்டுமே தேறுகிறார்.

நினைவோடைப் பகுதியில் முகமது அலி ஜின்னாவினைப் பற்றி மண்ட்டோ எழுதியுள்ள பத்தி மிகவும் தனித்துவமானது. ஒரு படைப்பாளன் ஒரு ஆளுமையை அருகிலிருந்து உள்வாங்கி, அதை அப்படியே தன் படைப்பில் உருவாக்கி வாசகர் முன் உயிரூட்டி காட்டுவது என்பது எளிதான ஒன்றல்ல. ஆனால் மண்ட்டோவின் எழுத்துக்கள் மிக எளிதாக அதை சாதித்தன. மேலும் நர்கீஸ் பற்றியும் , நூர்ஜகான் பற்றியும், அசோக்குமார் பற்றியும் மிக நெருக்கமான விவரணைகள் நமக்கு மண்ட்டோவின் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன.

மண்ட்டோவின் எழுத்துக்கள் அடங்காமல் ஒடும் காட்டாறாய் ஒடுகிறது. நாமும் அவற்றினை கடக்க மிகவும் சிரமப் படுகிறோம். நம் பண்பாட்டு வெளிச்சத்தில் இருள் அள்ளி பூச முயலும் மண்ட்டோவின் எழுத்துக்கள் சற்று காத்திரமானவையே. ஆனால் உண்மைக்கு மிக அருகிலானவை என்ற முறைமையில்..ஒரு தேர்ந்த வாசகன் மண்ட்டோவின் ரசிகனாகிறான்.

மண்ட்டோவின் படைப்புகள் ஒரு தொகுதியாக தமிழில் கிடைக்கிறது. 20 க்கும் மேலான கதைகளும், அருமையான சொற்றோவியங்களும், ஆளுமைகள் குறித்த நினைவோடைகளும் , அவரது கடிதங்களும் என தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழில் மொழிப் பெயர்த்திருக்கும் ராமாநுஜம் அவர்களுக்கு நன்றிகள்.

( மண்ட்டோ படைப்புகள் : தமிழில் – ராமாநுஜம் – வெளியீடு – புலம்- பக்கங்கள் 615 விலை: ரூ.375/-)

1,361 total views, 3 views today

இலக்கியப் புடுங்கிகள்…

புடுங்கி என்ற சொல் நமது சாதாரண வாழ்வில் கோபத்தின் தொனியாய் வெளிப்படும் ஒரு சொல். அந்த சொல் அலட்சியத்தினையும்,கர்வத்தினையும் பிரபதிலிக்கும் நபர்கள் மீது பிரயோகிக்கப் பயன்படும் ஒரு சொல்..கீழ் வரும் ஆசாமிகளைப் பற்றி எழுத நினைக்கும் போது இந்த சொல்தான் சாலப் பொருத்தமாய் நின்றது. தன்னைத் தானே சிம்மாசனத்தின் மீது அமர வைத்துக் கொண்டு ,அரங்க கூட்ட அரசியல் செய்துக் கொண்டு..இவர்களாகவே இசக் குழுக்கள் அமைத்துக் கொண்டு ..எந்த அவலத்தின் மீதும் …துயரத்தின் மீது கரிசனப் பார்வை கூட செலுத்தாமல்..சுயநல இலக்கியம் படைப்பதாக சொல்லும் சில புடுங்கிகளைப் பற்றி நாம் இந்த நேரத்தில் யோசிப்போம். பிடுங்கி என்றுதான் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் புடுங்கி என்ற சொல்லில் தொனிக்கும் கோபம் தான் என்னளவில் சரியாகப் பட்டது.ஈழம் நமக்குள் ரணமாய்,வலியாய்,துயரயாய் இருக்கும் இந்த சூழலில் …இனி என்ன செய்வது என வலியின் ஊடே தொக்கி நிற்கும் வினாக்களுக்கு விடை தெரியாமல் நாம் விக்கித்து நிற்கும் போது…வழக்கம் போல எதிர்வினை என்ற பெயரில் ஏதாவது வினை வைக்கவும், எகத்தாளம் செய்யவும் இலக்கிய அறங்காவலர்கள் சிலர் முளைத்து இருக்கின்றனர்.

ஈழ மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம்..வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன அழிவாய் நம் கண் முன்னால் விரிந்து..நம் இன மக்களை நம்மால் காப்பாற்ற இயல வில்லையே என்ற குற்ற உணர்ச்சியாய் நமக்குள் உறுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை மக்களின் அழிவைப் பற்றியோ..துயரைப் பற்றியோ.. வாய் திறக்காத இவர்கள்…யுத்தம் மக்களின் அழிவாய் ஒரு வலுக்கட்டாய முடிவிற்கு வந்திருக்கும் போது..இந்த இலக்கிய புடுங்கிகள் வழமை போலவே பிணத்தை அறுக்கும் வேலை பார்க்க வந்து விட்டனர். இந்த சமயத்தில் இன உணர்வால் போராடி முயன்றுக் கொண்டிருக்கிற …மிகச் சில எழுத்தாள ஆளுமைகள் இதற்கு வியப்பான..விதிவிலக்குகள்..

இந்த இலக்கிய இமயங்கள் இப்போது எழுத துவங்குவதற்கு பின்னால் உள்ள அரசியல் மிகவும் கவனிக்கத் தக்கது. இவர்கள் அங்கே மிஞ்சியிருக்கும் மக்களுக்காகவோ…உரிமைகளுக்காகவோ நாளைய தீர்வுகளுக்காவோ எழுதத் தலைப்பட வில்லை.மாறாக இங்கே இனப்பற்றின் விளைவாய்..உள்ளூணர்வின் உந்துதலால் வீதிக்கு வந்து மிகச் சில சக எழுத்தாளன் போராடும் போது…அந்த போராட்டம் பொய்த்து விட்டது எனவும்..தான் தான் தீர்க்கதரிசி எனவும் முரசுக் கொட்டவே இப்போது இறுமாப்புடன் எழுத துவங்கி உள்ளனர் இவர்கள்.

இலக்கியம்..இலக்கியத்திற்காகவே..தமக்காகவே….பிழைப்பிற்காகவே..சோத்திற்காகவே…சாதிக்காகவே என்றெல்லாம் கொள்கை (?) இவர்களாகவே கட்டிக் கொண்டு..ஊருக்கு நான்கு பேர் மட்டுமே வாசிக்கும் இதழில் பக்கம் பக்கமாய் சக எழுத்தாளனை வைது தீர்க்கும் பணியை..தன் வாழ்நாளின் ப(பி)ணியாய் செய்து வரும் இந்த இலக்கிய சிங்கங்கள் ..புத்தக விழாக்களுக்காகவும்..நூலக ஆணைகளுக்காகவும் யாரும் படித்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக 400, 500 பக்கங்களில் புத்தகம் போட்டு ஒருவரை ஒருவர் மாற்றி திட்டிக் கொண்டிருக்கின்றனர்.பின் நவீனத்துவ,முன் நவீனத்துவ..பக்க நவீனத்துவ..துக்க நவீனத்துவ.. என நான்கு திசைத்துவ எழுத்தாளர்களாய்..நாட்டில் நடக்கும் எது பற்றியும் அக்கறை காட்டாது.. மூடப்பட்ட சுவர்களுக்குள் நடக்கும் கூட்டத்தில்..அடித்த போதையில்.. அகப்பட்டவனை அடித்து துவைக்கும் இவர்களுக்கு எது பற்றியும் கவலை இல்லை. ஆனால் அனைத்தும் முடிந்த பின்னர்..தவித்த வாய்களுக்கு… தண்ணீர் அளிக்க கூட சிந்திக்காத இவர்கள்…தாகத்தினால் இறந்த ஒரு தலைமுறையின் பிணங்களை சவக்குழியில் இருந்து தோண்டி எடுத்து சவத்தின் மீது நெளியும் புழுக்களின் ஊடே அலையும் புழுவாய் …ஏன்..எதற்கு..எப்படி என ஆராய்ச்சி செய்வது போல பாசாங்கு கட்டுரை எழுத வந்து விட்டனர்.

இனம் அழிந்து போகும் தருணங்களில் இறுக வாய் மூடி மெளனத்திருந்த இவர்களது நா…ரத்த சுவையின் ஊடே ஊறும் ஊடக வெளிச்சத்தினை நக்கிப் பார்க்க அலைகின்றது.மலை முகடுகளில் ஒளிந்துக் கொண்டு ,எங்கேயாவது மாமிசம் விழுமா..பறந்து திரிந்து பறிக்கலாம் என அலையும் பிணக் கழுகுகள்… மலை மலையாய் செத்துக் கிடக்கும் மனித சவங்களின் மீது அலையத் துவங்கி இருக்கின்றன.. இனி இவர்கள் பக்கம் பக்கமாய் எழுதவும்..வழுக்கவும்.. இவர்களுக்கு ஈழம் ஒரு பிழைப்புக் காரணியாய் நின்று போகும். போர் புரிந்து இறந்த மாவீரர்களின் தடங்களை இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் காசு கொடுக்கும் இன அழிப்பு எஜமானிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு …காட்டிக் கொடுக்கும் கள்ள கட்டுரைகள் எழுதுவார்கள்..இது வரை இல்லாத அளவிற்கு போட்டிக் குழு,போர்ப் பரப்பில் நின்ற சாதீய பார்வை என்றெல்லாம் பேனா மை இருக்கும் வரை ..கத்தை கத்தையாக காகிதங்களில் கசக்கி பிழிவார்கள்.. அலாவுதீனின் அற்புத பூதம் போல..இது வரை எங்கிருந்தார்களோ.. தெரியவில்லை. ஜீபூம்பா என்ற அழைப்பில்லாமலேயே பாய்ந்து வந்து பதறுகின்றனர் இந்த பாசாங்குக் காரார்கள்.

உலகமெல்லாம் பரந்து வாழும் எம் இன மக்களின் வியர்வைத் துளிகளினால் விளைந்த பணத்தை நோக்கி…புத்தகம் புத்தகமாக எழுதித் தள்ளும் இந்த கொள்ளைக்கார கும்பல்..அவர்களின் துயர் துடைக்க..தோள் கொடுக்காமல்..சவக் காட்டிலும் அரசியல் சதிராட்டம் நடத்தி..பிழைப்பு நடத்த வந்திருக்கிறார்கள். இனம் அழியும் போது எந்த இலக்கிய சங்கமும் வாய் திறக்கவில்லை. மாறாக இலக்கிய அபத்தங்களுக்கு ஆங்காங்கே கூட்டம் நடத்தி ,குழு சண்டை..குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. முற்போக்காளர்களுக்கும் ஒரு பிரச்சனை… இதில் வாய் திறக்கலாமா..வாய் திறந்தால் கட்சியின் ஈ உள்ளே போய் விடுமே… கட்டுப்பாட்டு நாற்றம் வெளியேறி விடுமே என்ற பயம்.

இனம் ..மொழி என்ற ஒன்று இருந்தால்தானே..நம்மால் எழுதி கிழிக்க முடியும் என்ற உண்மை உறுத்தினாலும் தீர்க்கதரிசி பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில் ஏதாவது உளற வேண்டும் என்பதற்காக கக்க வேண்டியதை காலம் கடந்தாலும் கக்கி விட வேண்டும் இவர்களுக்கு…

ஒரு பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது உளறி கொட்டுவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது.அது என்னவென்றால்..உளறி கொட்டியதற்கு மாற்றாக ஏதாவது நடந்து விட்டால் தீர்க்கதரிசி பட்டம் போய் விடுமே என்ற பயம்.அது தான் இட்லி ஆறிய பிறகென்ன..ஊசிப் போன பிறகு கூட இவர்கள் சாப்பிட துணிவது…பிரச்சனை மையம் கொண்டிருக்கும் போது ஏதாவது பேசுவது இவர்களை பிரச்சனையில் சிக்க வைக்கவிடும் என்ற பயம் இவர்களின் இதயத்தினை கூட இறுக வைத்துவிடும்.

எல்லாம் முடிந்த பிறகு ….யாரும் கேட்க வர மாட்டார்கள் என்ற துணிவில்..தேனீக்கள் அற்ற வறண்ட தேன் கூட்டில் ..நக்கிப் பார்க்கும் திட்டத்தோடு இவர்கள் எழுத துவங்கி உள்ளார்கள். இனிமேலும் எழுதுவார்கள்..
வெகு ஜன பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் பக்கங்கள் கிடைத்து விட்டது என்பதற்காக வருடக் கணக்கில் பொதுத் தளத்தில் விஷத்தை மட்டும் தொடர்ந்து கக்கி வருகிறார் ஞாநி என்று தன்னை தானே அழைத்து கொள்கிற ஜிப்பா ஆசாமி. இவருக்கு என்ன வேலை என்ன வென்றால்..ஊர் முழுக்க தந்தி அனுப்பவும்,மனு போடவும் கற்றுக் கொடுக்கிற அதாரிட்டியாக அலப்பரையை கொடுப்பது.. ஏதாவது சொல்லும் போது..அன்றே சொன்னனே பார்த்தாயா என்று தீர்க்கதரிசி கிரீடத்தை தானே சூட்டிக் கொள்வது.இந்த வாரத்து குமுதம் இதழில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரனை ஈழ மாநில முதலமைச்சராய் ஆக இவர் ஆசைப்படுகிறார். உணர்வும் ,உண்மையும்,கொள்கையும், இனப்பற்றும் நிரம்பிய தலைவர் அவர்களை இவர் பதவிக்காக அலையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல நினைத்து விட்டார் போலும்.பிரபாகரன் இருக்கிறாரோ,இல்லையோ என்று ஆங்காங்கு விருப்பங்களின் இடைச் செருகல்கள் வேறு.
சிங்கத்தினை சீண்டி பார்க்கும் சிறு நரிக் கூட்டமே..உங்களுக்காகவது எம் தலைவர் வருவார்..வந்தே தீருவார்.

உலக வரலாற்றில் எழுத்தாளர்களின் மனமும்,எழுத்தும் சாதித்தவை மிக அதிகம்.எப்போது எல்லாம் மக்கள் இன்னலுற்று ..அவதியுற்று நிர்கதியாய் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் படைப்பு மனம்தான் போர் முரசு கொட்டி நிற்கும்..என் கண்ணால் மக்ஸீம் கார்க்கி, பாப்லோ நெரூதா,பாரதி, பாரதிதாசன்,காசி ஆனந்தன், இன்குலாப்,அறிவுமதி, என பட்டியல் நீள்கிறது.ஆனால் நம் படைப்புவாதிகளோ எதற்கும் உதவாமல்..அறைக் கூட்டம் நடத்தி அடித்துக் கொள்ள மட்டுமே எழுதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு உள்ள சமூக பொறுப்புணர்ச்சி கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது..?.கேட்டால் படைப்பு மனம் சிதைந்து விடுமாம். பாவிகளே…சமூகம் என்ற ஒன்றும்..உரிமை என்ற ஒன்றும் இருந்தால் தான் படைப்பு… வெங்காயம் இதெல்லாம்..
எங்கேயோ இருக்கும் பிஜீத் தீவில் சமூகம் படும் அவலம் கண்டு கண்கலங்கி..எழுதினானே பாரதி..அவனும் படைப்பாளிதானே..

குடிப்பதையும் பற்றியும்..இல்லாத இதிகாசங்கள் பற்றியும் புனைவு மொழியில் வரிந்துக் கட்டிய இவர்களால் ஏன் ஈழம் என்று வரும் போது கைகளை இறுக்க மூடிக்கொண்டு விடுகிறார்கள்.தமிழ் சமூக வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த இன அழிவின் போது சிறு சலனத்தை கூட காட்டாத இவர்கள்..இனி எதற்கு யாருக்கு எழுதப் போகிறார்கள் ?

அய்யா…இலக்கிய இசங்களை கரைத்து குடித்து..வேதாந்த ஆராய்ச்சியில் முழ்கி திளைத்து…இதிகாச மீள் புனைவில் மீண்டெழுந்து.. குடிப்பதையும்.. குடிச்சாலைகளையும்… ஊற்றெடுக்கும் காமத்தினையும்…வரிசை கட்டி எழுதி வரும் கணவான்களே…

ஈழத்தினையும்..மக்களையும் விட்டு விடுங்கள்…

அவர்களுக்கான விதியை அவர்களே சமைப்பார்கள்.

காரண…காரிய ஆதி மூல ஆராய்ச்சிகளை கடலுக்கு இந்த பக்கம் மட்டுமே.. வைத்துக்கொண்டு… ஏற்கனவே பணத்திற்காகவும்.. சாராயத்திற்காகவும்… தங்களை தாமே விற்றுக் கொண்டு விட்ட இந்த கூட்டத்திடம் உங்கள் பம்மாத்து வேலைகளை தொடருங்கள்.

எவனும் இங்கே எதற்கும் கேட்கப் போவதில்லை. தின்னது செரிக்கவும்.. பட்டங்களை பறிக்கவும்.. எழுதுங்கள். கலகம் என்ற பெயரில் அடித்துக் கொள்ளவும்..இலக்கியம் என்ற பெயரில் குடித்துக் கொள்ளவும் எழுதுங்கள்…உங்களுக்கு பிறகான சமூகத்தினை பற்றி உங்களுக்கு கவலை இல்லை.

நீங்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் ..எழுத்தாக எண்ணி பதிப்பிக்க ISDN பதிப்பகங்களும் அவற்றின் பத்திரிக்கைகளும் உள்ளன..மேலும் விளம்பரம் கொடுத்து போஷிக்க ஜவுளிக் கடையும், அல்வா கடையும் இருக்கவே இருக்கின்றன..இது போதாதா..கூட்டம் நடத்தவும்..கும்மி அடிக்கவும்…?

உள் மன இருட்டுதான் உங்களுக்கு வசதியாக இருக்கிறது.

ஆனால் எதற்கும் உண்டு விடியல்.

விடியலின் கதிர்களில் எரிந்து போக இருப்பது.

நீங்களும்..உங்களும் எழுத்துக்களும் தான்.

வணக்கம் .இலக்கியப்புடுங்கிகளே..

சீக்கிரம் கடந்து போங்கள்.

இல்லையேல் கடத்தப் படுவீர்கள்.

.மணி.செந்தில்…
www.manisenthil.com

1,349 total views, 4 views today

ஜெயமோகனின் தேர்வு -பகிர்வும்,பதிலும்…

http://jeyamohan.in/?p=488

எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட ‘தேர்வு’என்ற கட்டுரைக்கு
என் பகிர்வும் ,அதற்கான ஜெயமோகனின் பதிலும்….

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…

வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…
மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்…

உண்மைதான். எதற்கும் பதட்டப் பட்டு திரிவதன் விளைவு குழந்தைகளின் மீது சிறு அக்கறைக் கூட பாராட்ட முடியாத அவலத்திற்கு நாம் உள்ளாகி இருக்கிறோம்..

தங்கள் பதிவில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் கூடங்கள் குறித்த தங்கள் அவதானிப்பில் நான் முரண்பாடு கொள்கிறேன்..கல்வி என்பது எங்கோ மாய உலகில் மறைந்து கிடக்கும் அதிசயமாய் மறைத்து வைக்கப் பட்டிருந்த காலத்தில் …ஊரின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த சேரிகளில் வெண்ணிற ஆடைகளோடு நுழைந்து கல்வி அளித்து, சுகாதாரம் போதித்து, மருத்துவம் தந்தது பாதிரிமார்கள்தான்.அவர்களுடைய நோக்கம் தங்கள் மதத்தை பரப்ப சேவையை கருவியாக பயன்படுத்துவதாக இருக்கலாம்..அதனாலென்ன…எந்த மதம் இறந்தால் என்ன..? எந்த மதம் பிறந்தாலென்ன..?

சூத்திரன் நாவிற்குள் பைபிளால் சரஸ்வதி அமர்ந்ததுதான் அதில் நடந்த நன்மை..

மற்ற படி அஜிதன் எதிர்கொண்ட சிக்கலான வாழ்வியல் முரண்கள் -எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது..எந்த ஆசிரியரும் மாணவனை மனிதனாகக் கூட நினைப்பதில்லை..அவர்களுக்கு தங்கள் பணி குறித்து இருக்க வேண்டிய நியாயமான அக்கறை இல்லை..அடித்தால்…அவமதித்தால் தரையில் கிடப்பதைக் கூட மாணவன் தலையில் ஏற்றி வைத்துக் கொள்வான் என்று நினைத்துக் கொள்வார்கள் போல..

தங்களுடைய பதிவு எனக்கு சமீபத்தில் வெளிவந்த அமீர்கானின் தாரே ஜமீன் தார் என்ற திரைப் படத்தை நினைவுப் படுத்தியது…

நம் நாட்டு குழந்தைகளுக்கான கல்வி முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும் என்பதான தங்களுடைய அக்கறையில் நானும் பங்கேற்கிறேன்….

எனது 4 வயது மகனை என் மனைவி பள்ளிக்கு அனுப்பும் போது போர்க் களத்திற்கு செல்லும் மான் போல தயார்ப் படுத்தி அனுப்பவது எனக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும் செயலாகவே தெரிகிறது.ஏனென்றால் அவன் டாக்டராகணுமாம்…சொல்லி சொல்லி வளர்க்கிறாள் என் மனைவி.
என் குழந்தை ஒரு டாக்டராகவோ, ஒரு பொறியாளராகவோ ஆக்க எனக்கு துளி கூட விருப்பமில்லை என என் மனைவியுடன் சண்டை போட்டு இருக்கிறேன்..

பிறகு என்னதாண்டா அவனை செய்ய போற..? என்று கோபமாய் கேட்ட என் தந்தையை பார்த்து அவனுக்கு சினிமா பிடித்திருக்கிறது..அதனால அவன நடிகனாக்கப் போறேன் என்று வெறுப்பாய் பேசி விட்டு வந்திருக்கிறேன்…

என்ன உலகம் இது…

ஒழுங்கமைவுகள் என்பதன் பேரில் குழந்தைகள் மீது அறிவிக்கப் படாத ஒரு யுத்தத்தையே ஏற்படுத்தி இருக்கிறது இந்த கல்வியும் சமூகமும்…

இங்கு எந்த குழந்தைக்கும் ஓடி ஆட அனுமதி இல்லை…காலில் இறுக்கிக் கட்டிய காலணிகளோடு…கழுத்தில் இறுக்கும் டைகளோடு..பொங்கி வழியும் புத்தகங்களோடு ..வானுயர்ந்த மதில்களை உடைய கல்விக் கூடம் என்ற சிறையில் அடைக்க அவர்களை அழைத்து போக போலீஸ் வேன் போல ஒரு வேன்…

எல்லாக் குழந்தைகளின் உதடுகளிலும் புன்னகை இறந்து கிடக்கிறது…

ஏதாவது செய்து …இந்த குழந்தைகளின் மகிழ்வை,பால்யத்தை மீட்டே ஆக வேண்டும்….

என் துயரத்திற்கான ஆறுதல்- அஜிதனின் வெற்றியும், மதிப்பெண்ணும்…

அந்த வகையில் எளிமையாய் படித்து, வலிமையாய் தேர்ந்த அஜிதனுக்கு என் வாழ்த்துக்களும் …பாரட்டுகளும்….

தங்கள் ..
மணி.செந்தில்குமார்,
வழக்கறிஞர்.
கும்பகோணம்.

இந்த கடிதத்திற்கு திரு.ஜெயமோகனின் பதில்:

அன்புள்ள மணி செந்தில் அவர்களுக்கு,
நாம் நம் குழந்தைகளை ‘வளர்க்க’ முடியாது. அவர்களுடன் சிலவற்றை பகிர்துகொள்ள மட்டுமே முடியும். நாம் அவர்களை பொருட்படுத்தி , அவர்களின் உற்சாகமானதும் நம்பிக்கை நிறைந்ததுமான உலகை சிதைக்காமல் அதே உற்சாகத்துடன் ஈடுபட்டுச் சொலும் எதையும் வர்கள் கேட்பார்கள் என்றுதான் நான் எண்ணிகிறேன். இன்னொருவரின் கனவை வாழும்படி ஒருவரை நிர்பந்திப்பது கொடுமையானது.
தங்கள் கடிதம் கண்டேன். ஒரே வகையான அனுபவங்கள் வழியாக கடந்து சென்றுகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இப்போது கடிதங்கள் வழியாக உருவாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதில் எப்படி நுண் உணர்வுகளை அவித்து விட்டு போட்டி உலகின் சவால்களை எதிர்கொள்வதெ என்பதே அது. ஒரு சமன்பாட்டைக் கண்டுகொள்கிறவர்களே ஏதாவது சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள். போட்டி உலகை மாற்றுவதென்பது உடனடியாக நம் கையில் இல்லை. ஆனால் இந்த சமரசம் வலியும் வதையும் கூடியதாக இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியமானதக இருக்கிறது. அதற்கு அடிபப்டையில் இலக்குக்காக எதையும் செய்யும் நோக்கை சற்றே விலக்கி அன்பின் அடிப்படையில் நம் குழந்தைகலுடன் உரையாட முனைந்தாலே போதும் . நான் எந்த கொள்கைகளையும் இது சார்ந்து முன்வைக்க மாட்டேன், குழந்தைகளுடன் உரையாடுங்கள் என்பதைத் தவிர

ஜெயமோகன்

தோழர்களே….
குழந்தைகளின் கல்வியும் ,அதனைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிக்கலாகி வருகின்றன..
நம் நாட்டு கல்வி அமைப்பையும், அதனைச் சார்ந்த நிறுவனக் கோட்பாடுகளையும் நாம் மறுபரீசிலனை செய்து தீர வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்…

1,174 total views, 3 views today