பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Day: நவம்பர் 2, 2013

அண்ணன் கொளத்தூர் மணி கைது…

 
இன்று (02-11-2013) அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் கைது நடவடிக்கை. சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தின் மீது திவிகவினர் பெட்ரோல் குண்டு வீசியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் இரவு 2 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் கைது வழக்கில் தொடர்பில்லாத எவரையும் தனது அதிகாரத்தின் மூலமாக இணைக்கலாம் பிணைக்கலாம் என்கிற தமிழக அரசின் அதிகார ஆணவத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. ஜெ தமிழின உணர்விற்கு எதிரியாக இருக்கிறார் என்கிற நிலையை விட தமிழின உணர்வோடு இயங்கும் தமிழர்கள் ஆகிய நாம் உதிரிகளாக இருக்கிறோம் என்பதுதான் சிந்திக்க வேண்டியது.. # எம் அண்ணனுக்கு மற்றொரு வழக்கு. சிறிய புன்னகையின் மூலம் இதையும் கடந்துச்செல்லும் அவரின் மன உறுதி எந்த அதிகார ஆணவத்திற்கு முன்னாலும் அடி பணியாது. புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா..

இசைப்பிரியா என்ற என் தங்கை…

கடந்த 1-11-2013 அன்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி சிங்கள பேரினவாத இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இழைத்த மற்றொரு கொடூரத்தை ஒளிபரப்பி உள்ளது. இசைப்பிரியா 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால்  போரில் தான் இறந்தார் என்கின்ற சிங்களனின் கட்டுக்கதை இப்போது அம்பலமாகி இருக்கிறது.http://www.youtube.com/watch?v=kjgX9FxR20g

எத்தனை முறை பார்த்தாலும் கண்ணில் உதிரம் வர வைக்கிற காட்சியாக தொலைக்காட்சிகளில் ஓடியும் ஒருவருக்கும் உறைக்கவில்லை என்றால் இது இனம் அல்ல பிணம். சொந்த தங்கையை அம்மணமாக அடித்து இழுத்துச்செல்கிறான் எதிரி. இங்கே பட்டாசு கொளுத்திக்கொண்டும், புத்தாடை அணிந்துக் கொண்டும், தல படம் பார்த்துக்கொண்டும், டாஸ்மாக்கில் குடித்துக் கொண்டும் கும்மாளமாக இருக்கிறான் தமிழன். இப்படிப்பட்ட தன்மானற்ற ,தரங்கெட்ட இனத்தில் தான் நாமும் பிறந்திருக்கிறோம் என எண்ணும் போது வெட்கி தலைக்குனிகிறேன்.

 
இசைப்பிரியாவின் படத்தை அப்படியே போடாதீர்கள்  என்கிறார்கள்..வேறு  என்ன செய்ய வேண்டும்…? படத்தை காட்டினால் இந்த இனம் என்கிற பிணத்திற்கு உயிர் வர வில்லையே.. மரணங்களை காட்டித்தான் மரத்துப் போனவனை உசுப்ப வேண்டி இருக்கிறது. துயரங்களை காட்டித்தான் தூங்கிக் கொண்டிருப்பவனின் உறக்கத்தை கலைக்க வேண்டி இருக்கிறது. இத்தனையும் காட்டிய பிறகும் கூட எவனுக்கு இங்கே என்ன நடந்து விட்டது ?. அது என் தங்கை இசைப்பிரியாவின் நிர்வாணம் அல்ல. நான் வெட்கப்பட்டு மறைக்க. மனித தன்மை அற்றுப் போன பேரினவாதமொன்றின் கொடூரம். ரத்தமும், சதையுமாக அம்பலப்படுத்திதான் எமக்கான நீதியை கோருகிறோம். இது வியாபாரமோ,விளம்பரமோ அல்ல. மூடிக் கிடக்கும் உலகத்தின் கண்களை திறப்பதற்கான வெளிச்சம். பதிவிடும் அனைவருமே கலங்கிய கண்களோடும் ,வலி நிறைந்த நெஞ்சோடும் தான் பதிவு இடுகிறோம். வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் தங்கையின் உடை விலகினால் கூட சரியா உட்கார் என்று அறிவுறுத்துகிற இனத்தின் மகள் தான் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். எதிர்த்து கேட்டு நம் சகோதரர்கள் மாவீரர்களாய் விண்ணுக்கு போனார்கள்.நாம் மண்ணில் மானங்கெட்டவர்களாய்..அவமானத்தின் …சாட்சிகளாய்…அடிமை தேசிய இனமாய் வாழ்கிறோம்..வாழ்கிறோம்
 
அனைவருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன். என்ன செய்யலாம் இதற்காக என்ற புத்தகம்.மதுரை பிரபாகரன் வெளியிட்டது. நூல் முழுக்க ரத்தமும், சதையுமான புகைப்படங்கள் தான்.. இது போன்ற பதிவுகளை வெளியிட வேறு எந்த காரணங்களும் இல்லை. இதெல்லாம் ஒரு வகையான நீதி கோரல் தான். நீதிமன்றத்தில் கூட தாக்கல் செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையில் திட்டிய வார்த்தைகளை கூட அப்படியே சென்சார் செய்யாமல் தான் குறிப்பிடுவார்கள். காரணம் சம்பந்தப்பட்ட குற்றம் மிகச்சரியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கம் தான். நம் தங்கை நிர்வாணமாக கிடப்பது வேதனைதான். நமக்கு இழிவுதான். என்ன செய்வது.. ஆனால் அந்த படத்தை காட்டியும் நமக்கான , நம் தங்கைக்கான நீதி வழங்கப்பட்டு விட்டதா…இல்லையே… என் தங்கையை நிர்வாணமாக பார்க்க விரும்பிய கண்களுக்கு வேண்டுமானால் அது நிர்வாணம். ஆனால் எனக்கு என் தாய் தான் அங்கே வீழ்ந்து கிடக்கிறாள் . இதை விட எப்படி சொல்ல இயலும் என எனக்கு புரியவில்லை. நாமெல்லாம் நினைப்பது போன்ற கண்ணியமான..நேர்மையான ஒரு  சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோமா என்று நான் உணரவில்லை .

பசும்பொன் –பரமக்குடி –நாம் தமிழரின் நோக்கம் கலந்த நிலைப்பாடு.

அய்யா பசும்பொன் முத்துராமலிங்கனார் சிலைக்கு இடது சாரிகள் மரியாதை செய்கிறார்கள். அவரின் சிலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். திமுக,அதிமுக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் நேரடியாகவே கலந்துக் கொள்கின்றன. வருடா வருடம் பசும்பொன்னுக்கு வைகோ போகிறார். விசி மதுரை விமானநிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கனார் பெயர் சூட்டி வலியுறுத்தி தீர்மானம் இயற்றிய கதையும் உண்டு. இறந்து மண்ணாய் கரைந்தவர்கள் கொண்டிருந்த பகைமையை அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தி வரும் அரசியல் யாரையும் மீட்க அல்ல. அனைவரையும் புதைகுழியில் போட்டு அழிக்க. 
 
செத்துப் போன பகையில் தான் அரசியல் பிழைப்பு இருக்கிறது என்று நம்புபவர்களுக்கும், முரண்கள் கலையாமல் குடிசைகளும், உயிர்களும் கொளுத்தப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வேண்டுமானால் பசும்பொன்னும், பரமக்குடியும் வெவ்வேறானதாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியா இரு சக்திகள். அவர்களை நாங்கள் புறக்கணிக்காமல் அணுகுவதன் அடிப்படையே அவர்கள் பின்னால் நிற்கும் கோடிக்கணக்கான மக்களை தமிழ்த்தேசியத்தின் பாற் ஈர்க்கும் அரசியல் சார்ந்தது.
 
 மக்கள் திரள் மிக்க தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்கள் காலங்காலமாக முரண் பட்டு நிற்பதை தணிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையும் எங்களுக்கு உண்டு . எனவே தான் அந்த பொறுப்புணர்வோடு நாங்கள் இதை அணுகுகிறோம். கடந்த முறைகளில் நாங்கள் அவ்விடங்களுக்கு சென்ற போது மக்கள் சீமானைப் பார்த்தவுடன் பிரபாகரன் வாழ்க என்று முழக்கமிட்டது போன்ற சம்பவங்களும் நடந்தன. சமூகம் அவர்களை நேசிக்கிறது. சாதிக்குழுக்களாய் பிரிந்துக் கிடக்கிற தமிழ் இனத்தின் இரு பெரும் சமூகத்தினரை புறக்கணித்து விட்டு அல்லது புறம் தள்ளி விட்டு ..தனியே நின்று எதனையும் வெல்ல முடியாது . மக்களிடையே கலந்துதான் பொதுக்கருத்தொன்றை சரியான கருத்துக்களாக மாற்ற வேண்டும். இணையத்தில் இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டும் இருப்பவர்கள் அவர்களது தட்டச்சுப் பலகையை வேண்டுமானால் தட்டிக் கொண்டு இருக்கலாம். இவர்களை தாண்டிதான் சமூகம் இருக்கிறது. சொல்லப்போனால் இந்த வருடம் பசும்பொன்னிற்கோ,பரமக்குடிக்கோ சீமான் செல்ல கூட இல்லை. ஆனால் அய்யா முத்துராமலிங்கனாரின் குருபூசை நிகழ்வுகளுக்கு வருடாவருடம் தவறாமல் செல்பவர்களை நாசூக்காக விட்டு விட்டு அய்யா இமானுவேல் சேகரன் குருபூசை நிகழ்வில் இதுவரை எட்டி பார்க்காதவர்களை கூட கண்டுக் கொள்ளாமல் விடுத்து , நாம் தமிழர் மீது மட்டும் பாய்ந்து பாய்ந்து தாக்குவதன் அரசியல் காழ்ப்புணர்ச்சியானது.
இதன் பின்னால் எந்த தத்துவார்த்த அரசியல் வெங்காயங்களும் இல்லை. தனிப்பட்ட எரிச்சலும், வன்மமும்தான் இருக்கின்றன. பழமை வாதங்களுக்கு நியாயம் கற்பிப்பதல்ல எமது பணி. ஆனால் சமூகம் இவ்வாறாகத்தான் இருக்கிறது. இதை ஒரு நொடிக்குள் மாற்ற நாங்கள் மந்திரவாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக பசும்பொன்னுக்கு செல்கிற யாரும் அய்யா இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்றதில்லை. எட்டிக்கூட பார்த்ததில்லை. ஆனால் நாங்கள் தான் இரு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்தோம். அது ஒரு விதமான நல்லிணக்க நடவடிக்கை. இது போன்ற நல்லிணக்கம் தான் அடிப்படையில் தேவைப்படும் மாற்றம். தமிழனுக்காக அரசியல் பேசப்படுவதும் , தமிழினத்திற்குள்ளாக இருக்கும் சாதிய முரண்கள் களையப்படுவதற்கு சாதகமான இது போன்ற விவாதப்பரப்புகள் ஏற்படுவதும் நாங்கள் மாற்றமாகவே பார்க்கிறோம். சாதியற்ற சமூகம் அடைய சாதியான மக்களைத்தானே  நாடவேண்டியிருக்கிறது..?

நாம் தமிழர் – விமர்சனங்களின் பின்னால் ..

 
 
எங்களை மதவாதிகளுக்கு பிடிக்காது..ஏனெனில் நாங்கள் இனவாதிகள்.
எங்களை சாதீயவாதிகள் சாடுகிறார்கள். ஏனெனில் தமிழர் என நாங்கள் கூடுவது அவர்களின் அரசியலை சாகடிக்க. ..முற்போக்காளர்கள் எங்களை வெறுக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் அவர்களுக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு அருகில் ..நாங்கள் நிற்கிறோம். இந்தியர்கள் எம்மை பிரிவினைவாதிகள் என்கிறார்கள். ஏனெனில் இந்நாடு இந்தியா, தமிழ்நாடு என பிரிந்தே கிடக்கிறது. என்கிறோம். ஏற்கனவே இருந்த தமிழ்த்தேசியர்கள் எம்மை தேர்தல் பாதையில் செல்லும் பிழைப்பாளர்கள் என பிழை பேசுகிறார்கள்.ஏனெனில் தமிழ்த்தேசியம் அவர்களால் வெல்லமுடியாத தேர்தலிலும் வெல்லும்..அதிகாரத்தை அள்ளும்.. என நிற்கிறோம். திராவிடவாதிகள் எங்களை எதிரி என்கிறார்கள்.ஏனெனில் எம் இனத்தின் எதிரிதான் திராவிடவாதிகளாக இருக்கிறார்கள் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கிறார்கள் என்கிறார்கள். விமர்சிக்கவே அவர்தான் கற்றுத்தந்தார் என்கிறோம்.ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறார்கள்.எம் இனத்திற்கு என்று ஒரு நாடு அடைவதை விட உன்னத அரசியல் உலகில் இல்லை என்கிறோம். விடுதலைப்புலிகளை மற்றவர்கள் ஆதரித்தார்கள். நாங்கள் தரித்தோம். பிரபாகரனை தலைவர் என்றார்கள். நாங்கள் எம் அண்ணன் என்றோம். காங்கிரசை மற்றவர்கள் எதிர்த்தார்கள். நாங்கள் எரித்தோம்…கருணாநிதி சொல்லிதான் கட்சி ஆரம்பித்தார்கள் என்றார்கள்.பின்னர் கட்சி ஆரம்பித்ததே கருணாநிதியை எதிர்க்கத்தான் என்றார்கள். ஜெயலலிதா ஆதரவில் இருக்கிறார்கள் என்றார்கள். ஜெ எதிரி கருணாநிதிக்கு கிடைக்கும் கூட்ட அனுமதி கூட எமக்கில்லை என்ற போது நழுவினார்கள். தாதுமணல் கொள்ளையை ஆதரிக்கிறார்கள் என்று கார்ட்டூன் வரைந்தார்கள். தாதுமணல் கொள்ளையை எதிர்த்து போராடும் ஒரே கட்சி நாங்கள் தானே என்று கேட்டால் கார்ட்டூன் வரையும் கரங்களுக்கு கண்கள் இல்லை என்கிறார்கள். இந்துத்துவாவின் ஆதரவாளர்கள் என அலறினார்கள் . மோடிக்கு பீடி பற்ற வைப்பவர்களை கேட்காமல் யாசின் மாலிக்கை தமிழ் மண்ணிற்கு அழைந்த வந்தவர்களை ஏன் அவதூறுகிறீர்கள் என்று கேட்டால் புத்தகம் போட்டவரில் இருந்து புண்(ஆகும் வரை )ணா (நா)க்கு விற்றவர் வரை மெளனித்தார்களே,,ஒழிய..உண்மையை உரைக்க ,பாராட்ட ஒருவரில்லை. அனைவரையும் ஒன்றாக பார்க்கிறார்கள் என உறுமுகிறார்கள். இனம் வென்றாக அனைவரை ஒன்றாக்க வேண்டும் என்கிறோம். முரண்களை களையாமல் இணையமுடியாது என இறுமுகிறார்கள். இணைந்தால் முரண் களையும் என முழங்குகிறோம். # விமர்சிக்கப்படுவதிலும்..உற்று நோக்கப்படுவதிவதிலும்..எதிர்க்கப்படுவதிலும் தான் உணர முடிகிறது எமது வலிமையையும்.. அவர்களது வலியையும். நாம் தமிழர்,

Powered by WordPress & Theme by Anders Norén