பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: டிசம்பர் 2016 Page 1 of 2

தேவனோடு ஒரு உரையாடல்..

talking-to-god-1
தேவா..
 
உன்
பாதச்சுவடுகளில்
என் கண்ணீரை
சிந்த சிறிது
இடம் கொடு.
 
யாரும்
அறியாமல்
மேகத் திரளுக்குள்
ஒளிந்திருக்கும்
நட்சத்திரம் போல..
நான் சுமக்கும்
அன்பை
ஆதி பாவம் என
என் ஆன்மா
அலறும் ஒசையை
நீயும்
அறிந்திருக்கிறாய் தானே..
 
சாத்தானின்
விடமேறிய
சொல் பதிந்த
கனிந்த பழத்தை
நானும் உண்டு
விட்டேன்..
 
அவன்
சொற்களால்
என்னை வீழ்த்தி
அவனுக்குள்
புதைத்துக் கொண்டான்..
 
அவனது வரி
வளைவுகளில்
எனதாசைகள்
கிறங்கி கிடக்கின்றன..
 
அவனது வார்த்தை
குளம்பொலிகளோடு
எனக்கான
இராஜ வீதியை
உண்டாக்கினான்…
 
தன் எழுத்துக்களில்
பட்டாம்பூச்சியின்
சிறகுகளை
ஒளித்து வைத்து
கவிதை வீதிகளில்
என் கரம் பற்றி
ஏதேன் தோட்டத்திற்கு
அழைத்து செல்கிறான்
அவன்..
 
அய்யோ..
நான் என்ன செய்வேன்..?
 
கனலேறிய
உடலெங்கும்
நினைவாடை
போர்த்தி
என்னை கனவு
சுமக்க வைக்கும்
அவன் சொற்களை
எங்கே ஒளித்து வைப்பேன்…?
 
நுட்ப இசைத்துளி
போல
சதா சொட்டிக்
கொண்டிருக்கும்
அவனது மொழியை
உள்ளங்கையில்
ஏந்தி பருகையில்
என் ஆன்மா
மலர்ந்து
கிளர்ச்சிக் கொள்வதை
நான் எப்படி மறைப்பேன்..?
 
பாவம் என
அறிந்தே
அதற்கான
அனுமதியை
உன்னிடமே
கேட்கத் தூண்டும்
நினைவின் சூட்டை
எதை கொண்டு தணிப்பேன்..?
 
இறையே..
என் மீது
இரக்கம் கொள்.
 
வலி சுரக்கும்
நிலா இரவுகளின்
தனிமையில்
இருந்து
ஒளி மிகுந்த உன்
கருணையினால்
என்னை மீட்டெடு.
 
அழுக்காறு சுமந்த
ஆன்மாவை
உன் தேவ கரங்களால்
தீண்டு..
 
இரு கரம்
கொண்டு பொத்தியும்
செவி முழுக்க
நிரம்பி வழியும்
அவனது
மெளனத்தின்
சப்தத்தை
எப்படியாவது
சாந்தப்படுத்து..
 
……………………………………
 
தாரை தாரையாக
பெருகிய கண்ணீர்
தேவனின் சொரூப
நிழலை தொட்டது..
 
சாந்தம் கொண்டான்
தேவ குமாரன்..
 
உதிரம் சிந்த
சிரம் உயர்த்திருந்த
அவனது உடலம்
மெதுவாக அசைந்தது..
 
அசைவற்ற விழிகள்
ஒளிக் கொண்டன..
 
உலர்ந்திருந்த அவனது
உதடுகளிலிருந்து
தேவ மொழி
சொல்லத் தொடங்கினான்..
 
…………………………………………………
 
அது ஆதி பாவம்
அல்ல மகளே..
 
மாசற்ற அன்பு
பெருகும்
இறை குணம்.
 
அது மட்டுமல்ல..
 
சாத்தான்கள் தான்
கடவுளை நினைக்க
வைக்கிறார்கள்.
 
ஏனெனில்
சாத்தானும்
கடவுளின்
இன்னொரு
நிழலே..
 
உன்னால்
ஆதி பாவம்
என உணரப்படுகிற
அது
இல்லாது..
 
நான் ஏது….?
 
ஏனெனில்
நான் அன்பின்
மொழியிலானவன்.
 
அன்பு கொள்
மகளே..
 
தீண்டப்படாமல்
இருக்க
கடவுள் ஏன்
கனியை
படைக்க வேண்டும்..?
 
ஆதி பாவம் என
எதுவுமில்லை.
 
புசிக்கப்படவே கனி.
நேசிக்கப்படவே இதயம்.
 
முதன்முறையாக
தேவ குமாரன்
புன்னகைத்தது
போல இருந்தது..
 
ஏஞ்சலாவிற்கு.
 
 
 
(விரைவில் வர இருக்கும் ஏஞ்சலாவின் கடிதம் என்கிற என் நூலில் இருந்து..).

புரிதலில் பிறக்கட்டும் புதிய அரசியல்..

8057ef23-89a7-49f6-9544-c6778411eec9

நாம் தமிழர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு வெகுசன அரசியல் கட்சியாகதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில் இங்கே தமிழ்த்தேசியம் பேச கூடிய அமைப்புகள் உண்டு. இயக்கங்கள் உண்டு. ஆனால் ஒரு பெரும் திரள் தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்த அரசியல் கட்டமைப்பு நாம் தமிழர் வருகைக்கு முன்னால் நிகழவில்லை.
 
ஒரு பேரழிவு கற்பித்த பாடங்களுக்கு பிறகு உயிரிழந்த உடலங்களுக்கு மத்தியில் கருக் கொண்டு உருவான சிந்தனை வெளியில் தான் நாம் தமிழர் பிறந்தது. தனக்கு கிடைக்கக் கூடிய அனைத்து விதமான சாத்தியங்களையும் பயன்படுத்தி எளிய மனிதர்களுக்கான வலிமையான அரசியல் அமைப்பாக உருவாக இலட்சிய நோக்கமுடைய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உழைத்து வருகிறார்கள்.
 
சீமான் என்கிற அதிமனிதன் வீதிவீதியாய் அலைந்து.. வியர்வை உதிரமாய் சிந்த ..உழைத்து உருவாக்கும் வெகுசன பேரமைப்பு வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெரும் பாய்ச்சல்.
 
முகநூலில் இடும் சில வரி விமர்சனங்களால் ஒரு அமைப்பை உருவாக்கவோ, சிதைக்கவோ முடியாது. இணைய வெளி தாண்டி நாம் வெற்றிக் கொள்ள பல கோடி இதயங்கள் இருக்கின்றன. கணிணித் திரைக்கு வெளியே உலகம் இருக்கிறது. முகநூல் என்பது ஒரு ஊடகம். முகம் காட்ட தேவையில்லாது கருத்தை மட்டுமே பதிய முடிகிற வசதி இந்த ஊடகத்தின் பலம்.
ஆனால் முகநூலில் மட்டும் முக்கிக் கொண்டு இருப்பதுதான் சமூகப் பணி என்று நினைத்தால் அதை விட கோமாளித்தனம் எதுவும் இல்லை.
 
எனவே முகநூல் ஆர்குட் போல ஒரு நாள் அழிந்துப் போனாலும் நாம் தமிழர் இருக்கும். அது அன்று புதிதாக வரும் ஊடகத்தையும் கவர்ந்து இழுந்து வென்றவாறே தன் பயணத்தை தொடரும்.
 
ஒரு வெகுசன அரசியல் கட்சிக்கென்று பல்வேறு இயல்புகள் இருக்கின்றன. அரசியல் ரீதியாக அண்ணனும், வைகோவும் நேர் எதிரானவர்கள். ஆனால் செங்கொடி மரணத்தில், பல விழாக்களில், அக்கா நளினி அவர்களின் புத்தக வெளியீட்டில் இணைந்து நிற்க வேண்டி இருக்கிறது. வைகோ கூட நம் தம்பி விக்னேஷ் மரணத்திற்கு வந்து விட்டுப் போனார். அரசியல் ரீதியில் நமக்கு நேர் எதிரியான ஈவிகேஎஸ்.இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் மறைவிற்கு அண்ணன் சென்று வந்தார். அது கொள்கைகள் சார்ந்ததோ, அரசியல் நிலைகளை மாற்றிவிடக் கூடியதோ அல்ல. இது நாகரீக மரபும், மாண்பும் சார்ந்த வெகுசன அரசியலின் குணாம்சம்.
 
கருணாநிதி எம் இனம் அழிகையில் வேடிக்கைப் பார்த்தவர்தான். இக்கருத்தை அண்ணன் சீமானின் மருத்துவமனை சந்திப்பு மாற்றப்போவதில்லை. அன்று மக்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படுகையில் போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதா மரணத்திற்கு புலிகளின் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை ஜெயலலிதாவின் ஈழ எதிர்ப்பு கருத்துக்களை மாற்றப்போவதில்லை. அது ஒரு சம்பிரதாய சடங்கு. இது போன்ற சடங்குகளை அரசியலாக அணுகும் போது அது எதிரியாக இருந்தாலும்.. அவர் குறித்த சாதக புகழுரைகள் வழங்குவதும் இயல்பு.
 
ஒரு உடல் நலிவோ, ஒரு மரணமோ ஒருவரது குற்றங்களை மறைக்கப் போவதில்லை. ஆனாலும் உடல் நலிவுற்ற மனிதரை பார்க்கப் போவது கொள்கை வெளிகளுக்கு அப்பால் துலங்கும் மனித மாண்பு மிக்க நடவடிக்கை. மரண தண்டனை ஒழிப்பு குறித்து அண்ணன் சீமான் பேசுகையில் எம்மினத்தை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு கூட மரணதண்டனை கொடுப்பதை நான் எதிர்ப்பேன் என்றார். இந்த நாகரிகத்தையும் நாங்கள் எங்கள் தேசியத்தலைவரிடமிருந்தே கற்கிறோம்.
 
மிகச்சரியான பாதையில் துளியளவும் சமரசமின்றி அண்ணன் சீமான் பயணித்துக் கொண்டு இருக்கிறார். அரசியல் ரீதியான சந்திப்புகள் அவரது அரசியல் வாழ்வில் மறுக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரு அங்கம். அவர் அறிவார் பாதையை. அவரை அறிந்தோர் தொடர்வார் அவரது பயணத்தை. கருத்து என்ற பெயரில் அவரவர் எண்ணத்திற்கேற்ப முகநூலில் முழக்கமிடுபவர்…கொஞ்சம் முச்சந்திக்கும் வாருங்கள் . அங்குதான் மக்கள் இருக்கிறார்கள்.
 
நான் நேற்றே சொன்னதுதான்..
 
நம் மாலுமி சரியான திசையில் தான் செல்கிறார். அவரது பணியை அவர் செய்யட்டும்.
 
இந்த புரிதலில் இருந்துதான் நாம் நமக்கான அரசியலை அணுகவேண்டும் என நான் கருதுகிறேன்.

நாங்க இப்படித்தான்….

15589743_1841866926060445_62583702408759883_n
(நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் .அ.நல்லதுரை அவர்களின் பிறந்தநாளுக்காக எழுதியது .20-12-2016)
 
 
அண்ணனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த பெயர் பெற்ற அந்த மருத்துவமனைக்குள் நுழைவதற்கே சற்று அச்சமாக இருந்தது. அண்ணன் கம்பீரமான மனிதர். உரத்தக் குரல். யாரையும் அதிகாரம் செய்யும் தோரணை என்றெல்லாம் பழக்கமாகி இருந்த அவரை ஒரு மருத்துவமனையில் உள் நோயாளியாக சந்திப்பதென்பது என் வாழ்நாளில் ஒரு கடின நிலை. அண்ணி வாசலில் சற்றே கலங்கியும், சோர்ந்தவாறு நின்றிருந்தார்கள். வழக்கமாக என்னைப் பார்த்த உடன் புன்னகைக்கும் அதே நிலையை ஏற்படுத்த முயற்சித்து தோற்ற அண்ணி..மெல்லிய குரலில் உள்ளே போய் பாருங்கள் என்றார்..
 
வாசலில் நின்றிருந்த செவிலியர் உள்ளே செல்ல முயன்ற என்னிடம் யாரை பார்க்க வேண்டும் என்பதான விபரங்களை கேட்டுக் கொண்டு உள்ளே அனுப்பினார். ஒரு பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கே உரிய கெடுபிடிகள். ஆங்காங்கே மானிட்டர் பெட்டிகளின் முணுமுணுப்புகள். ஒரு ஐந்தாறு நோயாளிகள் ஆழ்ந்த அமைதியில் இருந்தார்கள். வலது பக்க மூலையில் அந்த நெடிய உருவம் படுத்திருந்தது. அண்ணனை அக்கோலத்தில் பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் அங்கே அழுதால் அண்ணனும் உளவியலாக பாதிக்கப்படுவார் என்ற அச்சம். எனவே கட்டுப்படுத்திக் கொண்டு அருகே சென்றேன். உடலெங்கும் ஆங்காங்கே குழாய்கள் பொருத்தப்பட்டு சற்று சோர்வாக உறங்கிக் கொண்டு இருந்தார், நான் அவர் அருகிலேயே நின்றிருந்தேன்.
 
எப்பேர்பட்ட மனிதர்..ஈழ ஆதரவு போராட்டத்தினை தஞ்சைத் தரணியில் தலைமையேற்று நடத்திய ஆளுமை. அனுதினமும் போராட்டக்களங்களில் முழங்கி முழங்கியே தன் உடல்நலனை இழந்தவர். தஞ்சை நகர வீதிகளில் எங்கு போராட்டம் நடக்கிறதோ..அங்கெல்லாம் இவரைக் காணலாம். எம்மைப் போன்ற அனுபவமற்ற..சற்றே உணர்ச்சிவசப்படுகிற நபர்களை கையாளுவதில் அவர் வித்தகர். தனிப்பட்ட முறையில் என் தந்தையின் மூத்த மகனாகவே அவரும் வரித்து, என் தந்தையும் நினைத்து வாழுகிற பேரன்பின் வடிவம். அண்ணி,முருகு,பாப்பா என்றெல்லாம் ஏதோதோ நினைத்து நான் கலங்கிக் கொண்டிருந்த வேளையில் தான் அவர் கண்விழித்தார்.
 
ஒரு சிறிய புன்னகை. அண்ணே.. என்ற உடன்..கேட்ட கேள்வி.. ஏண்டா தம்பி இங்கெல்லாம் சிரமப்பட்டு வர்ற..கட்சி வேலையெல்லாம் போகுதா.. நான் படுத்த உடனே நிறுத்திட்டீங்களா..
 
இதற்கெல்லாம் என்னிடம் எந்த பதிலும் இல்லை. படுத்த படுக்கையிலும் இந்த ஆள் வேறு எதையோ பேசிக் கொண்டு இருக்கிறானே என்று கொஞ்சம் கோபமும் வந்தது. அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. செவிலியர் என்னை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறைதான். இன்னும் 48 மணி நேரம் ஆனால் தான் சொல்ல முடியும். அதுக்குள்ள பேசிகிட்டு..போங்க சார் …என்று அந்த பெண் எரிச்சலாக சொன்ன பிறகுதான் நிலைமையின் தீவிரத்தை நான் அறிந்தேன்.
 
வெளியே வந்த நான் அண்ணியை தேடினேன். அண்ணனைப் பற்றி தெரிந்த பலருக்கும் அண்ணியை தெரியாது. அண்ணனின் ஆன்ம பலம் அண்ணி. அவரை ஒரு ஆளுமையாக உலவ வைப்பதில் அண்ணியின் பங்கும், பணியும், தியாகமும் அளவற்றது. என்னை நிமிர்ந்து பார்த்து அவர்கள் சொன்னது கவலைப் படாமல் போங்க..அண்ணன் சீக்கிரமே உங்க கூட வருவார்…
 
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த நான் மனவலி பொறுக்க முடியாமல் …எப்போதெல்லாம் எனக்கு மனம் துயர் கொள்கிறதோ தேடி செல்லும் இடமான புழல் சிறைக்கு சென்றேன். அங்குதான் எனக்கான மருத்துவர் அண்ணன் இராபர்ட் பயஸ் இருக்கிறார்.
 
அவரை பார்த்து அண்ணன் நல்லதுரை படுத்த படுக்கையாய் ஆயிட்டார் அண்ணே.. என்று கலங்கியவாறு சொன்னேன். சற்றே மெளனமான அவர்.. தனக்கே உரிய தீர்க்கமான குரலில்…
 
தம்பி..அண்ணனுக்கு ஒண்ணும் ஆகாது. அவ்வளவு எளிதா நம்மை விட்டு போகமாட்டார்.அந்த ஆன்மா ஈழத்திற்காக உழைத்தது. கொலை செய்யப்பட்ட மக்களுக்காக கதறியது. எங்களுக்காக இரங்கி, துடித்த அந்த ஆன்மா அவ்வளவு எளிதாக போகாது. அவர் உயிரை அந்த மருத்துவமனையை சுற்றி காற்றாய் உலவிக் கொண்டிருக்கிற 50000க்கும் மேற்பட்ட மாவீரர்களின் மூச்சுக்காற்று காப்பாற்றும். கவலைப்படாதே என்றார்.
 
உண்மையில் அதுதான் நடந்தது. அண்ணனும் அந்த கொடும்பொழுதில் இருந்து மீண்டு வந்தார். நம் இன மாவீரர்கள் மகத்தான தெய்வங்கள் என்பதற்கு சாட்சி அண்ணன் நல்லதுரை.
 
இதோ.இன்றைய நாளில் அண்ணன் நல்லதுரை பிறந்தநாள் காண்கிறார். இன்னும் ..இன்னும் ..இந்த இனம் செழிக்க..அதன் விடுதலைக்கு..அவர் உழைக்க அவர் பல பிறந்தநாள்களை காண்பார்.
 
வாழ்த்துகள் என்பது அவர் தான் நமக்கு சொல்ல வேண்டும். நான் என் அண்ணிக்கும் , அப்போது என் அண்ணன் உயிரை காக்க உழைத்த …அரசியல் ரீதியாக முரண்கள் இருந்தாலும்..இன்றளவும் நான் நன்றிக்கடன் பட்டுள்ள மன்னை மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களுக்கும் தான் நன்றி வாழ்த்துக்களை உரிதாக்குவேன்.
 
வேறென்ன…
 
ம்ம்ம்.. வழக்கம் போல எங்களை திட்டி, கத்தி
தலைமையா..நின்னு எங்களை அழைச்சிட்டு போங்க…
 
நாங்க இப்படித்தான்.. நீங்க திட்டணும் என்பதற்காகவே தவறு செய்கிற நாங்க இப்படித்தான்.
 
————————————–
 
உலகம் முழுக்க வாழ்ற நாம் தமிழர் குடும்பம் இன்று தன் மூத்த அண்ணனுக்காக கொண்டாடி மகிழ்கிறது.
 
-மணி செந்தில்

 ஜெயலலிதா- வாழ்வும்..மரணமும்

 

jayalalithaa_hero

 

 

‘மக்களால் நான்! மக்களுக்காகவே நான்’ என்று முழங்கிக்கொண்டிருந்த அந்த முழக்கம் இன்று முடங்கியிருக்கிறது. அண்ணா நாமம் வாழ்க,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க என ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் இன்று அடங்கி இருக்கிறது. 75 நாட்களாக மருத்துவமனையில் போராடிப் பார்த்த ஜெயலலிதா இறுதியில் இதய செயலிழப்பால் அடங்கிப் போனார்.

 

சற்றேறக்குறைய 30 வருடங்களுக்கு மேலான ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் உள்ளடக்கிய பெரும்புதிர்.சகலவிதமான கணக்குகளையும் மிஞ்சிப்பார்த்த காலதேவனின் பெருங்கணக்கு.

 

ஒரு சாதாரணத் திரைப்பட நடிகையாக இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ‘வெண்ணிற ஆடை (1965)’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கணத்தில் தனது வாழ்க்கை இவ்வாறு பயணப்படப் போகிறது என்று ஜெயலலிதாவே உணர்ந்திருக்க மாட்டார்.

அம்மா சந்தியாவின் பிடிவாதத்தால் திரைத்துறைக்கு நடிக்க வந்த ஜெயலலிதா..தன் தாயார் மறைவிற்கு பின்னர் நாட்டை ஆள தயாரானது சாதாரண கதை அல்ல. என்னளவில் இது எம்ஜிஆரால் நிகழ்ந்தது என்று ஒற்றை வரியால் கடக்க முடியாதது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை.

 

‘ஆயிரத்தில் ஒருவன்’ தொடங்கி ‘பட்டிக்காட்டு பொன்னையா’ வரையிலான 28 திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்.உடன் இணைந்து நடித்தபோது அவரது அரசியல் விருப்பங்கள் ஜெயலலிதாவின் ஆழ்மனதில்  தாக்கத்தினை ஏற்படுத்தியது என்றாலும், ஒரு ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பது ஜெயலலிதாவின் உளவியல் விருப்பமாகத் திகழ்ந்தது. ஒரு மாபெரும் கனவு நாயகியாகத் திரையில் ஜொலித்த நட்சத்திரம், அரசியலில் ஒரு ஆக்ரோஷப் பிம்பமாக வெளிப்பட்டது  ஆச்சர்யமான நிகழ்வுதான். பொதுவாக அரசியல் களத்தில் பெண்களின் பங்கு மிக மிகக் குறைவானதே! அதனையும் மீறி அரசியல் களத்தில் நுழைகிற பெண்கள் ஏதோ ஒரு ஆணைச் சார்ந்த பிம்பமாக உருவானார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறு. ஜெயலலிதாவுக்கு முன்னதான அரசியல் பெண் தலைவர்களாக விளங்கிய இந்திரா காந்தி, பெனாசீர் பூட்டோ, சிறீமாவோ பண்டாரநாயகா, சந்திரிகா குமாரதுங்கா போன்ற பல தலைவர்கள் தங்கள் குடும்பத்தில் நிலவிய அரசியல் உணர்வின் காரணமாகவே தலைவர்களாக வெளிப்பட்டார்கள். ஆனால், ஜெயலலிதாவை இந்தப் பட்டியலில் இணைக்க முடியாது. அவருக்கு முன்னதாக அரசியல் ஆர்வமுடைய அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லை.  திரைத்துறையில் ஜொலித்தாலும், அரசியலில் மின்னாத நட்சத்திரங்கள் ஜெயலலிதாவிற்கு முன்னரும் பின்னரும் உண்டு. எம்.ஜி.ஆருடன் இருந்த அவரது உறவு அவருக்கு அதுவரை தொடர்பில்லாத அரசியல் கள நுழைவிற்கு அடிப்படையாக விளங்கியது. உலக இலக்கியங்களை, நல்ல புத்தகங்களை தேடி வாசிக்கும் வாசிப்பாளரான ஜெயலலிதா வாசிப்பு பழக்கம் என்றால் கிலோ என்னவிலை என கேட்கும் திரை நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு ஆச்சர்யம்.1981 –ல் அதிமுகவிற்கு கொள்கைப் பரப்பு செயலாளராக பதவியேற்ற ஜெயலலிதா தொடக்கம் முதலாகவே அவரது கட்சியிலேயே கடும் எதிர்ப்புகளை சந்தித்தார்.

 

1987ல் நிகழ்ந்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுக முடங்கிப் போன நிலையில் இரண்டு அணிகளாகப் பிளவுற்று, அதிமுகவின் இருபெரும் துருவங்களாக ஜானகியும், ஜெயலலிதாவும் திகழ்ந்தார்கள். அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ‘இரட்டைப்புறா’ சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி தலைமையிலான அணி படுதோல்வியைச் சந்திக்கவே, அத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசானார். பிறகு, இரண்டாகப் பிளந்திருந்த அதிமுக ஒன்றானது; முடங்கியிருந்த ‘இரட்டை இலை’ ஜெயலலிதா வசமானது; ஜெயலலிதா நிரந்தரப்(!) பொதுச்செயலாளராக ஆனது என்பதெல்லாம் வரலாற்றின் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தது.

கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சரானார். ஜெயலலிதாவை ஒரு புதிய தலைமையாக ஏற்று வாக்களித்த அன்றைய தமிழக மக்களுக்கு அது மிகப்பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. துதிபாடும் ஆரசியல், எதேச்சதிகாரத்தன்மை, கட்டற்ற,ஊழல் மலிந்த ஆட்சிமுறை, நிர்வாகக் குளறுபடிகள், வளர்ப்புமகன் திருமணம் என்றெல்லாம் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை ஜெயலலிதா ஏற்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய நிர்வாகச்சீர்கேட்டினை அடைந்தது.1991-96 இடையிலான ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு மீறு ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அதற்கான விலையை அடுத்துவந்த சட்டமன்றத்தேர்தலில்(1996) பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா  அடைந்த தோல்வியின் மூலம் பெற்றார்..புதிதாக மூப்பனார் தலைமையில் தோன்றிய ‘தமிழ் மாநிலக் காங்கிரஸ்’ திமுகவுடன் கூட்டணியமைக்க, இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவு குரல்கொடுக்க தமிழகத்தின் அரசியல் நிலைமை தலைகீழாய் மாறிப்போனது. ‘இனி தமிழ்நாட்டை ஜெயலலிதா ஆண்டால் அந்தக் கடவுளே காப்பாற்ற முடியாது’ என்று அப்போது கூறிய ரஜினிகாந்த் பிறகு, ‘தைரியலட்சுமி’, ‘வீரப்புதல்வி’ என அவரைப் புகழ்ந்தது தனிக்கதை.

 

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மிகவும் விந்தையானது.யாரெல்லாம் ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்தார்களோ, அவர்களே பிற்காலத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடிகளாக மாறுவதும், அவரிடமே சரணாகதி அடைவதுமாக நிகழ்ந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக தமிழக அரசியல் வரலாற்றில் நிகழ்ந்து வந்தன.

அடுத்தாக 2002-ல் இருந்து 2006 வரை ஆட்சியை பிடித்த ஜெயலலிதா சென்ற ஆட்சிகாலத்தில் நிகழ்ந்த சறுக்கல்கள் மூலம் பாடம் கற்றதாக தெரியவில்லை.

 

அந்த ஆட்சிக்காலத்தில் சர்வாதிகாரி, காட்டுத்தர்பார் என்றெல்லாம் ஜெயலலிதாவையும், அவரது ஆட்சிமுறையையும் பொடாச் சட்டத்தின் கீழான தன் கைதின்போது கடுமையாக விமர்சித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோகூட, அடுத்துவந்தத் தேர்தலில் (2006)  ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததும், ‘தன்னையும், ஜெயலலிதாவையும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்’ என கூறியதும் அதன் நீட்சியாக நிகழ்ந்த விசித்திரங்கள்.

 

மதுபானக் கடைகளைத் தெருவுக்கு தெரு திறந்ததோடு, அதனை அரசு நிறுவனமாக்கி, படித்தப் பட்டதாரிகளை சாராயம் விற்கும் ஊழியர்களாக மாற்றியது, எஸ்மா சட்டத்தின் மூலமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, திமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட சாலை பணியாளர்களை டிஸ்மிஸ் செய்தது, முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டது,  ‘எங்கும் அம்மா’, எதிலும் அம்மா’ என அம்மா மயமாக மாற்றியது, அதிகாரத்துஷ்பிரயோகத்தை எதிர்த்த அரசியல் தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையிலான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் ஜெயலலிதாவின் ஆட்சிமுறை சிக்கித்தவித்தது. கடந்த 2011ல் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் அணுகுமுறையில் கொஞ்சம் மாறுதல் தெரியத் தொடங்கியது. அத்தேர்தலில் தமிழுணர்வாளர்கள் ஜெயலலிதாவை ஆதரித்தது அவருடைய சென்ற ஆட்சிக்காலத்து நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வைத்தது. ஆனால் 91-96 ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக  2014-ல் தனி நீதிமனற நீதிபதி குமாரசாமி அளித்த  தீர்ப்பு மீண்டும் ஜெயலலிதாவை சிறைக்குள் அடைத்தது. பிறகு அந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்து நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின் மூலம் விடுதலையானது தனிக்கதை. மீண்டும் 2016-ல் பதவியை பிடித்த ஜெயலலிதா திமுக என்கிற அரசியல் கட்சியின் வரலாற்றில் பெறாத தோல்விக் காட்சிகளை தொடர்ச்சியாக வழங்கி அதிர்ச்சி அளித்தார்.  ஏறக்குறைய முழுமையாக 3 முறையும்,அடுத்தடுத்து ஐந்து முறையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஜெயலலிதா தனது இறுதிக்காலக்கட்டத்தில் ஒருசில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தது ஆச்சர்யம் அளிக்கும் செய்தி. ஈழ இனப்படுகொலைக்கு எதிரானத் தீர்மானம், ராஜீவ் காந்தி கொலையில் சிக்குண்ட ஏழு அப்பாவித்தமிழர்களின் விடுதலையில் காட்டிய தீவிரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காட்டிய உறுதி, கச்சத்தீவை மீட்கக்கோரி நடத்திய சட்டப்போராட்டம், மீத்தேன் எரிகாற்றை எடுப்பதற்குக் காட்டிய எதிர்ப்பு, கெயில் குழாய் பதிப்பை அனுமதியாதது, தமிழகத்தில் இலங்கை இராணுவத்தில் பயிற்சியளிக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தது போன்ற நடவடிக்கைகளால் அனைத்து தரப்பினராலும் வரவேற்பைப் பெற்றது.அதேநேரத்தில், கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் சென்னை மக்களை மீட்கத் தீவிரம் காட்டாதது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, ‘வாக்காளப்பெருமக்களே’ என விளித்தது, நிவாரணப் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற அபத்தக் காட்சிகளும் ஜெயலலிதாவின் இறுதிக்காலக்கட்டத்தில் நடந்தது ‘பழைய’ஜெயலலிதாவை நினைவூட்டிச் சென்றது. உண்மையில், தமிழ்நாட்டு அரசியலானது கருணாநிதி, ஜெயலலிதா என இருவருக்கும் இடையேயான காழ்ப்புணர்ச்சிக்களமாக மாறியதில் தமிழக மக்கள் திண்டாடித்தான் போனார்கள். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு மேலான கருணாநிதி, ஜெயலலிதா என இரும்பெரும் தலைவர்களுக்கு அதிகாரத்தை மாற்றி மாற்றி அளித்து பரிசோதித்து பார்த்திருக்கிறார்கள். இதில் நகைச்சுவை என்னவென்றால், அந்தப் பரிசோதனையில் சிக்கி மாண்ட எலியாகவே தமிழக மக்கள் இருந்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்னமும், உதய சூரியன் சின்னமும் ஒருபோதும் தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை. இருந்தும், தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல தமிழக மக்கள் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்களித்து பொன்னான 50 ஆண்டுகளைத் தொலைத்தார்கள். ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்தாலும், ஜெயலலிதா என்ற தனிநபாரின் மரணம் ஒரு பெரும் சோக நிகழ்வு. பெண்ணடிமைச் சமூகத்தில் தோன்றி, எவ்விதமானப் பின்புலமில்லாது சாதியப்பலம், குடும்பப்பலம் போன்ற எந்த ஆதரவுமில்லாது தனித்துவமாக முளைத்து வளர்ந்து கிளைப்பரப்பிய ஜெயலலிதா தமிழக அரசியலில் மறக்க முடியாதவர். நெடுங்காலமாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு அனைத்துத்துறைகளிலும் வீழ்த்தப்பட்டிருக்கிற தமிழக மக்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிரான வெறுப்புணர்வு வடிவமாக ஜெயலலிதாவைக் கண்டு ஆதரித்து வாக்களித்து மகிழ்ந்தார்கள்.  பாம்பும், ஏணியும் பின்னிப் பிணைந்திருக்கிற பரமப்பதம் போன்ற ஆட்சிமுறையை நிகழ்த்திக் காட்டிய ஜெயலலிதா இன்று தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு காற்றோடு காற்றாகக் கரைந்திருக்கிறார்.

 

தனது ஆரம்பக்காலப் பேட்டியொன்றில், ‘என் தாயார் சந்தியா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன். அப்படி  வராதிருந்தால், சமூகசேவகியாக மாறியிருப்பேன்’என ஜெயலலிதா கூறியுள்ளதை இக்கணத்தில் நாம் நினைவு கூறலாம். ஜெயலலிதாவின் ஆழ்மனதில் தமிழக மக்களுக்கு நன்மைப் பயக்கக்கூடிய ஒரு ஆட்சிமுறையைத் தர வேண்டும் என்ற எண்ணம்கூட இருந்திருக்கக் கூடும். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் ஆட்சிமுறை ஒரு நிகழ மறுத்தக் கனவு.

கார்த்திகை தீப நினைவுகள்

8f34a6a2d9e9878404f13400d0c4d05a
அன்றைய நாட்கள் நிலாக்கால பொழுதுகளால் நிரம்பி வழிந்த கனவு நாட்கள். பதின் வயதிற்கே உரிய அச்சமின்மையும், பூக்களின் இதழ்களைக் கூட திறந்து பார்க்கும் ஆர்வமும், ஏதோ சொல்ல முடியாத நாணமும் ஆடைகளாய் உள்ளத்தில் போர்த்தியிருக்க.. உடலில் அணிந்திருக்கும் சட்டையை ஒழுங்காக அணியத்தெரியாத அல்லது அணிய கூடாது என்ற வைராக்கியத்துடன் ( ?) திரிந்த நாட்கள்.
 
எங்கள் ஊர் மன்னார்குடி. பெரிய ஊராகவும், சிறிய ஊராகவும் அறிமுகப்படுத்த முடியாத நடுத்தரமான அழகான ஊர். இன்றைய தினம் அது வேறு பெயர் வாங்கி இருக்கிறது என்பது வேறு விஷயம். அகலமான தெருக்கள். பெரிய வற்றாத தெப்பக்குளம். கூட்டம் இல்லாத பெரிய கோவில் . மக்கள் தொகை சற்றுக் குறைவான நடமாட்டம் என எங்கள் ஊரைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள எனக்கெல்லாம் ஒரு லட்சம் காரணங்கள் உண்டு. இந்த லட்சக் காரணங்களுக்கு மேல் லட்சத்து ஒரு காரணமும் எங்களிடம் இருந்தது.
 
பதின் வயதுகளில் நண்பர்கள் புடை சூழ சைக்கிளில் ஊரைச் சுற்றி சுற்றி தார் சாலையை தேய்க்கும் பணியை நாங்கள் முழு நேரப் பணியாக செய்துக் கொண்டிருந்தோம். நான் ,சிராஜ்தீன்,சிவராஜ், ஜோஸ்வா,கணபதி,மாரிமுத்து, சாம் சதீஸ்,சாலமன், என்று எங்களுடைய குழாமிற்கு மிகவும் பிடித்த நாட்களில் மிகவும் பிடித்த நாள் கார்த்திகை.
 
மண்ணை நனைய வைத்து செழிக்க வைக்கும் குளிரான மாதத்தில்.. ஒவ்வொரு இல்லமும் புத்தெழில் கொள்ளும் நாள் தான் கார்த்திகை திருநாள். மினுக்கும் சுடர்களோடு தீபமேற்ற சற்றே வேகமான நடையுடனும், நாணமும்,பூரிப்பும் பூசிக் கொள்ளும் முகத்தோடு,பட்டு பாவாடை சலசலக்க, வெள்ளிக் கொலுசொலிகளுடன் ,முணுமுணுப்பு அளவினை தாண்டாத மென்சிரிப்பு உரையாடல்களுடன்.. வலம் வருகிற தேவதைகளால் வீதிகள் திருவிழாக் கோலம் கொள்ளுகிற நாள்.
 
இளையராஜாவின் படைப்பூக்க நாட்களின் உச்சமும், ஏ.ஆர்.ரகுமானின் புதிய இசை பிறப்பும் ஒருங்கே இணைந்து எங்களது நாட்களை கனாக்காலமாக ஆக்கி வைத்து இருந்தன.
 
கனவு மினுக்கும் விழிகளோடு ஊரைச்சுற்றி வரும் எங்களுக்கு ஒவ்வொரு தெருவிலும் நண்பர்களும் உண்டு. எதிரிகளும் உண்டு. எதிரிகள் கொஞ்சக் காலத்தில் நண்பர்களாக, நண்பர்கள் எதிரிகள் ஆக எது நட்பு, எது பகை என எதுவும் வகை தொகை புரியாத வசந்த காலம் அது. அக்காலத்தில் தான் ..
 
அந்த கார்த்திகை நாளில்.. ஊரை சுற்றி விட்டு சற்றே தாமதமாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.
சைக்கிளை நிறுத்தி விட்டு எங்கள் வீட்டு வாசலுக்கு வந்த போது ஒரே ஒரு தீபம் அணையாமல் எரிந்த வண்ணம் இருந்தது.அதன் அருகே ஒரு தேவதை ஒன்று சதா எண்ணை ஊற்றிக் கொண்டே இருந்ததை கவனித்தவாறே..சற்றே புன்னகையுடன் சற்று நகர்ந்து வீட்டினுள் நுழைய முயற்சித்தேன்.
 
ஏய்..நில்லு..
 
என்ன..
 
எங்க சுத்திட்டு வர்ற…
 
இல்ல..பிரண்ட்ஸோட…
 
ஏன் உன்னைப் போலவே உன் பிரண்ட்ஸ்க்கும் வீடு இல்லையா…இப்படி சுத்திட்டு வரீற்ங்க
 
இதையெல்லாம் கேட்க நீ யார் என்ற கேள்வி தொண்டை வரைக்கும் வந்து அணைந்துப் போனது.கேட்டு விடலாம் தான். ஆனால் அதற்கும் நான் தான் பதில் சொல்லவேண்டும் என்பதுதான் அவளை நோக்கிய கேள்விகளுக்கெல்லாம் அவள் எனக்களித்த பதில்.
 
அந்த கேள்விக்களை எல்லாம் எதிர்க்கொள்ளலில் ஒரு பரவசம் இருக்கத்தான் செய்தது. அது ஒரு மாதிரியான கட்டளைக் குரல்.நான் சொல்வதைத்தான் நீ செய்ய வேண்டும் என்பது போன்றதான.. குரல்..
 
வீட்டினுள் இருந்து என் அம்மா வெளியே வந்தார்கள். ஏண்டா.. நாளும் கிழமையுமா வீட்ல தங்குறது இல்லையா…எங்கேடா போன..
 
இல்ல பிரண்ட்ஸோட..
 
ஏன் உன்னைப் போலவே உன் பிரண்ட்ஸ்க்கும் வீடு இல்லையா…இப்படி சுத்திட்டு வரீற்ங்க
 
ஒரே கேள்வி. இருவரிடமிருந்து.
 
சட்டென புன்னகையுடன் திரும்பிப் பார்த்தேன். அவள் போய் இருந்தாள்.
 
பின்னொரு நாளில் தான் நினைத்துக் கொண்டேன். நேசிக்கும் பெண்களில் எல்லாம் அம்மாவை தேடுவதைதான் காதல் என அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ….
 
 
-மணி செந்தில்

நினைவின் மொழிப் பெயர்க்க முடியா சொற்கள்

 

mgr-jayalalitha

இன்னும் எனக்கு நினைவிருக்கிறது..

கடும் கூட்டத்திற்கிடையே அந்தப் பெண் அந்த வாகனத்தில் இருந்து உதைத்து கீழே தள்ளப்பட்டார். கண்ணீரும், ஆவேசமும், உற்ற துணையை இழந்த துயரமும், அக்கணத்தில் பட்ட அவமானமும்.. அந்த நொடியை அப்பெண்ணின் ஆழ் மனதிற்குள் உறைய செய்திருக்கக் கூடும்.

இன்று போல் அந் நாட்கள் இல்லை. பல்வேறு செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளால் மின்னும் வரவேற்பு அறைகள் கொண்ட இல்லங்கள் அன்று இல்லை. ஒரே ஒரு தொலைக்காட்சி. தூர்தர்சன் மட்டுமே. கொடைக்கானலில் இருந்து உயரமான ஆண்டனா மூலம் பெறப்படுகிற அலைவரிசை கொண்டு இயங்குகிற ஏதோ ஒரு தொலைக்காட்சி. தெருவிற்கே ஒரு வீட்டில் மட்டுமே. சற்றே கருப்பு வெள்ளையில் தடுமாறும் சிக்னல்களோடு தெரிந்த டிசம்பர் 24 1987-ல் இறந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது நடந்த அந்நிகழ்வினை 80 களில் பால்யம் கொண்ட யாராலும் மறக்க முடியாது.

அன்று நடுத்தரப் பெண்ணாக இருந்த ஜெயலலிதாவை எம்ஜிஆரின் உடல் இருந்த வாகனத்தில் இருந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகி அவர்களின் உறவினர் தீபன் (பெயர்..?) உதைத்து கீழே தள்ளிய காட்சியை கண்டவர்கள் யாரும் அதன் பின்னால் நிகழ இருப்பவைகளை அன்றைய தினம் ஊகித்து இருக்க முடியாது.

ஒரு வித்தியாசமான உறவின் அலைவரிசை விகிதத்திற்குள் எம்ஜிஆரும் ,ஜெயலலிதாவும் அன்றைய நாட்களில் இருந்தார்கள்.அதை இருவர் திரைப்படத்தில் மணிரத்னம் மிக நுட்பமாக திரைமொழி படுத்தி இருப்பார். அக்காலப் பத்திரிக்கைகளில் ஜெ -க்கும், எம் ஜி ஆருக்கும் இடையே பகை, எம்ஜிஆரை கவிழ்க்க ஜெ சதி என்பதான செய்திகள் தொடர்ச்சியாக வந்துக் கொண்டே இருக்கும்.அதிமுகவில் அன்று நிலவிய அதிகார அரசியல் போட்டிகள் காரணமாக திட்டமிட்டு செய்யப்பட்ட லாபி பத்திரிக்கை செய்திகள் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருந்தன.

இவ்வாறான செய்திகள் வந்த போதும் கூட ஜெயலலிதா அதிமுகவின் வெளிச்சப்புள்ளியாகவே அன்று திகழ்ந்தார். ஜெயலலிதா இருக்கும் மேடையில் எம்ஜிஆர் சற்றே புன்னகை கலந்த பெருமிதத்துடனே காணப்பட்டார். குறிப்பாக எம்ஜிஆருக்கு செங்கோல் கொடுக்கும் அந்த புகைப்படம். இதழோரம் கசியும் மெல்லிய புன்னகையோடு எம்ஜிஆர் இருக்க..மலர்ந்த முகத்தோடு ஜெ காட்சியளிக்கும் அப்புகைப்படம் மிகப் பிரபலம்.

எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் எம்ஜிஆர் மனைவி ஜானகியை முன் மொழிந்தார்கள். ஆனால் மக்களோ எம்ஜிஆரின் வாரிசாக ஜெயலலிதாவை வழிமொழிந்தார்கள்.

ஏதோ ஒன்று ஜெயலலிதாவை எம்ஜிஆரோடு பிணைத்திருந்தது. யாருக்கு புரிந்ததோ,இல்லையோ அந்த அலைவரிசையை, வேதியியலை மக்கள் புரிந்து இருந்தார்கள்.அதனால் தான் மக்கள் எம்ஜிஆரின் மறு வடிவமாகவே ஜெ .வை கண்டார்கள். முட்பாதையை தன் அளப்பரிய மனத்திடத்தால் வென்ற ஜெவை ..ஒரு காலக்கட்டத்தில் எம்ஜிஆராகவே பார்க்க தொடங்கினர் மக்கள்.
———————————————————–

போயஸ் தோட்டத்தில் இருந்து தலைமைச்செயலகம் செல்லும் வழியில் இருக்கும் எம்ஜிஆர் சமாதியை பல பொழுதுகளில் ஜெ.கடந்திருப்பார்.மின்னும் விழிகளோடு அந்த இடத்தை கடக்கும் போது அவர் அடைந்திருக்கும் மனப் போராட்டங்களை யார் அறிவார்..?

எந்த டிசம்பர் மாதத்தில் …வாகனத்தை விட்டு உதைத்து கீழே தள்ளப்பட்டரோ, அதே டிசம்பர் மாதத்தில் அதேப் போன்ற வாகனமொன்றில் சகலவிதமான அரசு மரியாதைகளோடு எம்ஜிஆருக்கு அருகிலேயே நிரந்தமாக இருக்க ஜெ.பயணப்பட்டு விட்டார். எம்ஜிஆர் மனைவியான ஜானகிக்கு கூட கிடைக்காத அந்த நிரந்தர இடம்..ஜெ-க்கு.

எம்ஜிஆர்-ஜெயலலிதா என்ற அந்த இருவரில்.. இது யாருடைய விருப்பம்..??

…………………………………..

அவரை உதைத்து தள்ளிய காலம் ..அவரை போற்றி,புகழ்ந்து ,கண்ணீர் விட்டு கதறி முடித்திருக்கிறது.

பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகளை, திடுக்கிடும் திருப்பங்களை , விதியின் சதிராட்டங்களை, சோதனைகளை தன் வாழ்வில் கண்டு களைப்புற்ற அம்மையார் ஜெயலலிதா ..சதா கடலலைகள் போல கொந்தளித்துக் கொண்டிருந்த தன் வாழ்வினை அமைதிப் படுத்திக் கொண்டு விட்டார்.

ஒரு பெளர்ணமி இரவில் ..மெரீனா கடற்கரைக்கு செல்லும் யாரேனும் பார்க்கக்கூடும்.

தூரத்து இருட்டில் யாரோ இருவர் ..கடலலைகள் கால்களில் உரச.. மெல்லிய சொற்களோடு உரையாடிக் கொண்டே நடந்து செல்வதை .

இதயம் பேசும் மொழிகள் புரிந்தவர்களே…

அவர்களை மெல்லிய புன்சிரிப்போடு கடந்து செல்லுங்கள்.

தொந்தரவு செய்யாதீர்கள்.

——————————

மொழிப்பெயர்க்க முடியா
நினைவின் சொற்கள்
வானம் முழுக்க
வசீகர
நட்சத்திரங்களாக..

கண்கொண்டு
அதை வாசிக்க
முடிபவர்
பாக்கியவான்கள்.

ஏனெனில் இந்த
மண்ணுலகமும்..
ஏதோ ஒரு கனிவு
சுரக்கும் இதயமும்
அவர்களுக்கு
இங்கேயே சாத்தியம்.

1192 -ன் கதை –

15078653_325842307795990_7051506620319823028_n

 

இருள் சூழ்ந்து கிடந்த அந்த தெருவில் வெள்ளை உடையுடன் சில இளைஞர்களுடன் அவர் வேக வேகமாய் நடந்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று கைக்கூப்பி துண்டறிக்கை கொடுத்து விட்டு சென்ற அவருக்கு சில கதவுகள் மட்டும் தான் திறந்தன. பல கதவுகள் திறக்கப்படாமல் போகவே கதவு இடுக்கில் துண்டறிக்கையை வைத்து விட்டு அவர் நம்பிக்கையுடன் நகர்ந்தது ஏதோ அந்த நேரத்தில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மனித வாழ்வின் நம்பிக்கை அம்சங்களில் எப்போதும் தளர்வைக் கொண்டிருப்பவன் நான். ஆனால் அவரோ நம்பிக்கையின் உருவாக நடந்து சென்றது எனக்கு ஏதோ ஒரு பாடத்தை அவர் சொல்ல வருவது போன்ற உணர்ச்சி. நீண்ட தூரம் நடந்து வந்ததால் அவருக்கு முச்சிரைத்தது. ஏற்கனவே இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த அவரை காணும் போதெல்லாம் அருகிலிருந்த எங்களுக்கு கவலையாகத்தான் இருந்தது. ஏன் இந்த மனிதன் இப்படி நடக்கிறான்.. யாருக்காக நடக்கிறான். எந்த கனவினை நோக்கி அவன் இப்படி நடக்கிறான்..?

——————————————————

அண்ணன் நல்லதுரை.

கடந்த 7 வருடங்களாக அவருடன் தான் இருக்கிறேன். 2008 ஆம் ஆண்டு ஈழ ஆதரவு போராட்டங்களை வழக்கறிஞர் போராட்டமாக மாற்றிய மாபெரும் கிளர்ச்சியாளர் அவர். தஞ்சையில் இருந்துக் கொண்டு தமிழ்நாட்டையே வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நகர்த்துக் கொண்டு சென்றதில் அவருக்கு பெரும் பங்கு. அந்த காலத்தில் தான் நானும் அவரும் அண்ணன் தம்பிகளானோம் .பிறகு அண்ணன் சீமானோடு நான் நாம் தமிழரில் இணைந்து இயங்கத் தொடங்கிய காலத்தில் ..தஞ்சையில் நாம் தமிழரை உருவாக்க சீமான் அண்ணன் என்னிடம் சொன்ன போது என் நினைவிற்கு வந்தவர் அண்ணன் நல்லதுரை. நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்த அவரை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் அண்ணன் சீமானோடு உரையாட அழைத்த போது..நல்லதுரை அண்ணனிடம் இணைந்து இயங்குவதைக் காட்டிலும்.. சீமான் அண்ணனிடம் கேட்க அவரிடம் கேள்விகள் நிறைய இருந்தன. அண்ணன் சீமானும் , நல்லதுரை அண்ணனின் கேள்விகளை உற்சாகமாக எதிர்க்கொள்ளவே..ஆரம்பித்தது ஒரு அற்புதமான உரையாடல்.. முடிவில் நல்லதுரை நாம் தமிழரின் பிரிக்கமுடியா ஒரு அங்கமாக மாறிப்போனார்.

பிறகு பல்வேறு சூழல்கள். போராட்டங்கள், கூட்டங்கள் என நாம் தமிழர் இயக்கத்தினை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றுவதில் அண்ணன் நல்லதுரையின் பங்கு மகத்தானது. தஞ்சை டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக்க வந்த திட்டமான மீத்தேன் எரிகாற்று எடுக்கும் திட்டத்தினை முதன் முதலாக அறிந்து போராட்டக் குரல் எழுப்பிய முதல் நபர் அண்ணன் நல்லதுரைதான். அது போல முள்ளிவாய்க்கால் முற்றம் காக்க அய்யா நெடுமாறனோடு திருச்சி சிறையில் 1 வாரத்திற்கு மேலாக சிறை கண்டார். இப்படி போராட்டமே வாழ்க்கையாக கொண்ட ஒரு மாமனிதர், சிந்தனையாளர்தான் தஞ்சை தொகுதியின் எங்களது வேட்பாளர்.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல தேர்தல் இல்லை. அது முற்றிலும் பண ஓநாய்கள் விளையாடுகிற…ஒன்றையொன்று கடித்து புசிக்கிற வேட்டைக்களம். அதிகார வெறி பிடித்த ஓநாய்கள் வேட்டையாடுகிற போது சிந்துகிற கறித்துண்டுகளை கவ்விப் பிடிக்கிற நாய்களாக மக்களை மாற்றுகிற வேலையை ஜனநாயகத்தை வீழ்த்தி பணநாயகம் செய்துக் கொண்டு இருந்தது. எங்களிடம் உழைப்பு இருந்தது.வியர்வை இருந்தது. வயிற்றினை பொசுக்கும் பசி இருந்தது. அடிவயிற்றில் இருந்து ஓங்காரமாய் எழும் ஓராயிரம் கேள்விகள் இருந்தன..

ஆனால் அதிகாரத்தை புசிக்க எதையும் இழக்கத்துணிந்திருந்த அவர்களுக்கு முன்னால் இலட்சியத் தாகம் மின்னும் விழிகளோடு நாங்கள் நிற்கையில் ..உள்ளுக்குள் அவர்கள் மிரண்டுதான் போனார்கள். நாங்கள் பேசும் இடங்களில் எல்லாம் கரைவேட்டிகள் தெறித்து ஓடின. அடிமைகளே..துரோகிகளே என்றெல்லாம் எங்கள் குரல்கள் உயருகையில் .. பணம் கொடுத்து மக்களை பிணங்களாக்கி கொண்டிருந்தவர்களின் விரல்கள் நடுங்கத்தான் செய்தன.

ஆனாலும் நாங்கள் தோற்றுத்தான் போனோம்.

கருணாநிதி யோக்கியமானவர் என்றோ, ஜெயலலிதா ஆகச்சிறந்த ஆட்சியாளர் என்றோ மக்கள் ஏமாந்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்பினோம். ஆனாலும் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு அதிகக் காசு கொடுத்தவனுக்கு தங்களை விற்றுக் கொண்டார்கள்.

சாதி பின்னணி, மத அடையாளம்,நட்சத்திர பிரச்சாரம், மலையளவு குவிக்கப்பட்டு செலவழிக்கப்படும் பணம் என எதுவும் இல்லாமல் எளிய பிள்ளைகள் தெருவெங்கும் பிரபாகரன் படத்தை தூக்கிக் கொண்டும், நம்மாழ்வார் படத்தை தூக்கிக் கொண்டும் நடந்தார்கள். சராசரி 22 வயதுடைய தாகம் கொண்ட இளைஞர் கூட்டம் தஞ்சை தெருக்களில் அலைந்த போதுதான். ..எதிரே வெள்ளை சொகுசுக்கார்களில் பணப்பெட்டிகளோடு அவர்களது எதிராக நிற்பவர்கள் திரிந்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த கட்சிகளின் தொண்டர்களே மாபெரும் மகிழுந்துகளில் திரிய..அதே சாலையில் வியர்வை முகத்தோடு எங்கள் வேட்பாளர் நடந்துக் கொண்டிருந்தார். அது ஒரு மாதிரியான சமூக முரண். பணம் கொண்டவர்கள் மட்டுமே அதிகாரத்தை அடைய முடியும் என்பதற்கு எதிரான ஒரு கலகத்தை எளிய இளைஞர்களைக் கொண்டு நடத்துவதற்கான கனவும், உழைப்பும் மட்டுமே எங்களுக்கான தகுதி.

அமைச்சர்களும், மாபெரும் செல்வந்தர்களும் எங்களை அலட்சியப் பார்வையில் கடந்தார்கள். நாங்கள் விழிகளில் நெருப்பை சுமந்து ஏதோ ஒரு கனவில் அலைந்தோம். ஆனால் மக்களை ஏற்கனவே விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு.. நாங்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதையும் உணர்ந்திருந்தோம்.

இருந்தும் ஒரு நம்பிக்கை. மக்கள் காசுக்கு விலைக்கு போகாமல்..ஜனநாயக நெறிகள் மீது பற்றுறுதி கொண்டு நிற்பார்கள் என்ற நம்பிக்கை…, ஒரு பக்கம் ஓரமாய் எங்களுக்குள் சுரந்துக் கொண்டுதான் இருந்தது.

இறுதி மூன்று தினங்கள் சீமான் அண்ணனும் எங்களோடு இணைந்தார். மாட்டு வண்டியை மேடையாக்கி பேசிய அரசியல் தலைவர்..பணத்தை வைத்து மக்களை மாட்டு மந்தைகளாக விலை வாங்கியவர்களுக்கு சற்று உறுத்தலாக தான் தெரிந்தார்.

அவரும் நடந்தார். திரிந்தார். வியர்வை உப்பாய் உடலில் பூக்க..அடி வயிற்றுகுரலோடு அன்னைத்தமிழினத்தின் விடுதலைக்கான கத்தி தீர்த்தார்.

தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. 1192 மானத்தமிழர்கள் எங்களை அங்கீகரித்து இருக்கிறார்கள். இலட்சங்கள் வென்று இலட்சியங்கள் தோற்றது போன்ற ஒரு அவல நாடகம் நடந்தேறி முடிந்து விட்டது.

என்ன செய்வது என யோசிக்கும் போதுதான்..

எனக்கு கிட்டு என்கிற எங்கள் தம்பி நினைவுக்கு வந்தான்.

பிரச்சாரத்தில் இருந்த நாளொன்றில் பேசிக் கொண்டே சென்ற எனக்கு பசி அடிவயிற்றை கிள்ளவே.. அண்ணன் நல்லதுரையிடம் இன்னிக்கு முடிச்சிகிடலாமா அண்ணே என்றேன். அண்ணனும் ஆமா..தம்பிகள் ரொம்ப நேரமாக நடக்குறாங்க..என்றார்.

மெதுவாய் அவர் அருகிலிருந்த கிட்டுவிடம் தம்பி முடிச்சிப்போம்.. என்று சொல்லவே அண்ணே..இன்னும் இரண்டு தெரு இருக்கு…வாங்க நடப்போம்..என்று சொல்லிக் கொண்டே அவன் முன்னேறி நடந்துக் கொண்டே சென்றான்.

இதை பார்த்து சற்று அதிர்ந்து நான் அருகில் இருந்த குகன் குமாரை பார்க்கவே அவர் சிரித்துக் கொண்டார். அப்படி தான்னே அலையுறோம்.. என்ற அவரின் கரத்தை நான் மென்மையாக பற்றினேன்.

அண்ணன் நல்லதுரையும் எம்மொழியும் சொல்லாமல் கிட்டு பின்னால் நடந்துக் கொண்டே போய்க் கொண்டே இருந்தார்,

அவர்கள் சென்றுக் கொண்டே இருந்தார்கள்.

இருப்பார்கள்.

ஏனெனில்..பியானோக்கள் அவ்வாறானவை..

piano

 
தகிப்பிலாடும்
என் உள்ளத்தை
பியனோ என்றேன்.

நீ சிரித்தாய்.

நான் சொல்லத்
தொடங்கினேன்.

தேர்ந்த விரல்களின்
சில தொடுகைகளுக்காக
காத்திருக்கின்றன..

அவைகள்..

உயிர் உருக்கும்
உன்னத இசையை
பிறப்பிக்க.

உருவான நொடி
முதல் உள்ளுக்குள்
உன்னதங்களை
சுமப்பதென்பது
எளிதான காரியமல்ல.

சில
காலநழுவல்களில்
நேராமல் போய்விடுகிற
நொடிகளில்..

தாங்கிக் கொள்ள
முடியாமல்
உதிரமும்,
எச்சிலும்
கலந்து துப்பி
விட தோன்றுகிறது..

இருந்தும்..

சில நொடி
தொடுதலில்
துளிர்க்கிற
முளைப்பிற்காக..

அந்த முளைப்பில்
உயிர் மலரும்
கணத்திற்காக..

அந்த பியனோ
கட்டைகள்
காத்திருக்கின்றன..

யாருமற்ற
இரவொன்றில்
வெறித்து
ஒளிரும்
வீதி விளக்கொன்றின்
தனிமை போல

எப்போதும் அவை
தனித்திருக்கின்றன…

ஏதோ …
ஒரு புள்ளியில்
ஏதோ ஒரு மெல்லிய
அழுத்தத்தில்
மலர இருக்கிற
அந்த உன்னதத்
துளிக்காக

அவை தனித்திருக்கின்றன..

ஒரு நிலா நாளில்..
வெள்ளையும்
கருப்பும் மேவி
இருக்கிற உடலில்
சுழன்று லாவகமாக
நடனமிட இருக்கிற
விரல்களுக்குதான்
தெரியும்..

விரல் நுனிகள்
இதுவரை
திறக்கப்படாத
முடிவிலி
பாதை ஒன்றின்
சாவி என..

……………………

பெருமூச்செறிதலோடு
இறுதியில் நீ
ஒத்துக்கொண்டாய்..

அங்கே
இலக்குகள் அற்ற
விரல் அலைவுகள்
செவ்வியல்
இசையாய்
நிகழத் தொடங்கி
இருந்தது.

-மணி செந்தில்

தங்க மீன்களும் அழகனும்..

13925676_162271224197754_3264854279672705024_o

நிலா முழுகி
கிடந்த
கடலில்
நட்சத்திரங்கள்
துள்ளிக்கொண்டு
இருந்த அப்பொழுதில் தான்…

என் ஒற்றைப்படகில்
நான் தனித்திருந்தேன்..

மஞ்சள் வெளிச்சமும்,
இருண்மையும்
மாறி மாறி
பிரதிபலிக்கும்
இரவு பேருந்தின்
சன்னலோர முகத்தோடு
நீ லயித்திருந்த
பொழுதொன்று
ஆகாய அந்தர
வெளியில்
மிதந்துக்
கொண்டிருந்தது..

நிரம்பி ததும்பிய
அலைகளின் நுனியில்
நேற்றிரவு உன்
விழிகளில் மின்னிய
அதே சுடர்கள்..

காட்சி மயக்கத்தில்
தடுமாறி ஆழ் கடலில்
விழுந்த என் மேனி
எங்கும்பூத்து மலர்ந்தன
அல்லிகள்..

அப்படியே
என் இரு கரம் கொண்டு
வெது வெதுப்பான
கடலின் வயிற்றினை
திறக்க தொடங்கினேன்..

புற்றீசல் போல
தங்க மீன்கள்
வானவில் சிறகுகளோடு..

வானின் நீல வண்ண
படியேறி போன
ஒரு தங்க மீன்
தன் சிறகை அசைத்தவாறே
சொன்னது…

நீ அழகன் என..

நான் சிரித்துக் கொண்டேன்..

எப்போதும்
என் முகம் பார்க்கும்
கண்ணாடி நீயாக
இருந்தால்..

எப்போதும் எனை
பார்க்கும் விழிகள்
உனதாகி இருந்தால்..

நான்
அழகன்
தான்..

– மணி செந்தில்

 

 

மொழியை அருந்துபவன்..

 

3c69758c7da7fdb64651dff52fe2c007நமது உரையாடலின்
சொல் உதிர்தலில்
நமக்கான கவிதையை
நாம் தேடிய போதுதான்..

நீ உரையாடலை நிறுத்தி
மெளனமானாய்…

அடங்கா பசியை
அடர்த்தியாய்
சுமக்கும்
ஆடு ஒன்றாய்
எனை பார்த்து

ஆதி வனத்தின்
பசும் தழைகளாய்
எனை
மேய்ந்து விட்டு
போயேன்

என்று
உன் விழிகளால்
என்னிடம்
சொன்னாய்


இல்லை
இல்லை

மழைக்கால
சுடு தேநீரை
ஒரே மடக்கில்
குடித்து விடும்
வித்தை
நான் அறியேன்..

இது மீன் பிடிக்கும்
வேலை..

தூண்டிலுக்கும்
மீனுக்குமான
புரிதலில்..

ஏதோ

ஒரு தருணத்தில்
தூண்டில்
கனக்கும்..

மீன் சிக்கும்..

என்றேன் நான்..

உடனே
அவள்
என் தலை கோதி
சொன்னாள்..

நீதான் எனது
மொழியென….

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén