பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: மார்ச் 2018

இருட்பாதையின் திசை வழி..

பொய்கள்
பாசியென
படர்ந்திருந்த
குளமொன்றில்
அரூவ மீனாய்
நீந்திக்கொண்டிருந்த
உன்னை நோக்கி
எறியப்பட்ட தூண்டில்
வாயில்தான்
என் கனவொன்று
இரையாய் சிக்கித்
தவித்துக்
கொண்டு இருந்தது.

எதிர்பாராமின்மையை
சூட்சம விதிகளாய்
கொண்டிருக்கும் அந்த
மாய விளையாட்டில்
அவரவர் பசிகளுக்கேற்ப
சொற்களின் பகடையாட்டம்
நடந்தன….

உக்கிரப் பொழுதில்
தாங்காமல் நிகழ்ந்த
பெரு வெடிப்பு .
கணத்தில் சிதறிய
என் சிலுவைப் பாடுகளின்
கதறல் ஒலிகள்
உன்னால் சில்லறைகளின்
சிந்திய ஓசை என
அலட்சியப் படுத்தப்பட்ட
நொடியில்..

திரும்பவே இயலா
திசையில்..
நான் வெகுதூரம்
போய் இருந்தேன்..

எப்போதாவது
உன் நம்பிக்கைகளும்..
கணக்குகளும் பொய்த்துப்
போன இருட் பாதையில்
தேடிப்பார்.

நான் ஏற்கனவே
தவற விட்டிருந்த..
எனது சில
விழிநீர்த்
துளிகளும்..
இந்த கவிதை
வரிகளும்..

உனக்கு விளக்காகலாம்..

கடவுள் வாசித்த பைபிள்..

 

 

 

இயற்கையின் படைப்பில் மகத்தானது பெண்தான்.அவளைப் போல எதுவும் உலகில் வலிமையானது இல்லை. பெண்களின் உழைப்பினால்..தியாகத்தினால் பரிபூரணம் அடைகிறது உலகு. மானுட வாழ்வின் மகத்தான விழுமியம் பெண்தான்.

இரவுப் பகலாக பெண்கள் உழைக்கிறார்கள். வாழ்வதற்காக போராடுகிறார்கள். ஆண்கள் அலட்சியப்படுத்தும் ஒவ்வொன்றையும் பெண்கள் கவனம் கொள்கிறார்கள். படைக்கிறார்கள். மன்னிக்கிறார்கள்.மாசற்ற அன்பிற்காக வாழ்வின் இறுதி நொடி வரை ஏங்கி மாள்கிறார்கள்.

சக மனிதனின் சலனப்பார்வை ஒன்று கூட சங்கடப்படுத்துகிற அவர்களது வாழ்வை ஒரு ஆணாக இருந்து நம்மால் சிந்திக்கக் கூட முடியாது.

அவர்கள் மர்மமானவர்கள் அல்ல. மறைவானவர்கள். அதே சமயம் கம்பீரமானவர்கள். மறுக்கப்படும் மதிப்பிற்காக.. சக உரிமைகளுக்காக வரலாற்றின் வீதிகள் முழுக்க காத்திருப்பவர்கள்..

என் உலகம் சிறுவயதில் இருந்து பெண்கள் சூழ் உலகு. நான் ஒவ்வொரு முறையும் வீழும் போதும் பெண்கள் தான் என்னை தூக்கி நிறுத்தி அவையத்து முந்தி இருக்க அனுப்பி இருக்கிறார்கள்.

ஒரு கனிவான பார்வை ஒன்றின் மூலமாகவே கலைந்த ஒரு ஆணை ஒரு பெண்ணால் காப்பாற்ற முடிகிறது. சிக்கலான கோடுகளை ஒரு வெற்றுத்தாளில் கிறுக்குவது போல வாழ்வினை தன் போக்கிற்கு கிறுக்கித்தள்ளும் ஆணின் ஒழுங்கின்மையை ஓவியமாக்குவது பெண் தான்.

மார்க்ஸ்.. ஜென்னி, லெனின்.. நதேழ்தா, சே குவெரா …அலெய்டா, பிரபாகரன்.. மதிவதனி, பாரதி.. செல்லம்மா, என நீளும் .அப்பட்டியல் ஒரு உண்மையை உலகிற்கு உரத்து அறிவிக்கிறது..

பெண்ணால் தான் ஆண்.

என் சிறு வயது வாழ்வில் சென்னை அடையாறு ஆந்திர மகிள சபாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் பயின்ற போது வயது முதிர்ந்த மேட்டர்ன் அம்மா என்று அழைக்கப்பட்ட ஒரு ஆங்கிலோ இண்டியன் மதர் தான் என் பராமரிப்பாளர்.

எப்போதும் வெள்ளுடை தரித்து ..சிலுவை தரித்து வலம் வரும் அந்த கனிவு கண்ட முகம் தான் நான் கண்ட முதற் கடவுள்.

சுருக்கங்கள் நிரம்பிய அவரது முகம் அங்கே பயின்ற எங்கள் ஒவ்வொருக்கும் பிரத்யோக புன்னகையை அள்ளி இறைக்கும்.பால்யத்தில் நேரக்கூடா எம் தனிமையை அவரது விழிகள் தான் நேர் செய்யும்.

ஒரு பனி இரவில்.. மெழுகுவர்த்தி ஒளியில் பைபிள் படித்துக் கொண்டிருந்த அவரை தூக்கக் கலக்கத்தில் மங்கலாய் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. ஒரு ஓவியம் போல உறைந்து பைபிளின் வாசிப்பில் இருந்த அவர்.. தன்னியல்பாய் கொண்டிருந்த உள்ளுணர்வின் மூலமாய் நான் விழித்துக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொண்டு விட்டார். மெதுவாய் எழுந்து வந்து என்னருகே வந்த அவர்… ஆதரவாய் என் தலையை கோதினார். தாயை பிரிந்த என் வேதனையை சிற்சில கோதல்களிலும், அன்பான வருடல்களிலும் நேர் செய்தார். இன்றளவும் நான் உணரும் மேரி மாதா அவர்தான். அந்த கடவுளின் கருணையால் அந்த இரவில் நான் பேரன்பு கதகதப்போடு உறங்கினேன்.

மறுநாள் காலை நான் விழித்த போது மேட்டர்ன் அம்மா அதே உடையோடு மலர்கள் சூழ ஒரு கண்ணாடிப் பெட்டியில் படுத்திருந்தார்.. மரணச்சுவை அறியாத வயது. ஏதோ மேட்டர்ன் அம்மா தூங்குகிறார்கள் எனக் கருதினேன். பிறகு மாலையில் தான் யாரோ சொன்னார்கள் மேட்டர்ன் அம்மா இனி வர மாட்டார்கள் என.

நீண்ட காலம் அவரது விரல்கள் புரட்டிய வண்ணம் இருந்த அந்த பைபிள் தனியே அதே மேசையில்.. தனிமை ராகம் இசைத்தவாறு உறைந்திருந்தது. ஆம்… கடவுளே வாசித்த பைபிள் அல்லவா அது.. ??

நினைத்தாலே ஊறும்
இந்த கனிவை.. இன்றளவும் நெகிழ்வுடன் என் விழிகளில் சுரக்கும் கண்ணீரை… அளிக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடிந்திருக்கிறது.

இன்றளவும் பெண்களே கண்ணீரை அளிக்கிறார்கள். அவர்களே ஈரம் கனக்கும் விழிகளை துடைத்து ஆற்றுப்படுத்தும் விரல்களாக இருக்கிறார்கள்.

என்னை நேசித்த, நேசிக்கிற, உருவாக்கிய, உருவாக்குகிற..

என் வாழ்வின் சகல விதமாகவும் நிறைந்திருக்கிற.. அவர்களுக்கு..

உழைப்பால்.. காதலால்..தாய்மையால்..
இன்னும் பிற பலவற்றால்..இந்த உலகை இன்னமும் வாழ தகுதியாக்க போராடும்…அவர்களுக்கு..

இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.

நிழலற்ற கோபுரம்

 

 

அந்த கோபுரம்
அவ்வளவு
எளிமையானதல்ல..

விழி வழியே
அளந்து விட
விண்ணை
உரசும்
அதன் உயரம்
அனுமதித்ததில்லை..

மேனி முழுக்க
சிற்ப எழில்
பூசி நிற்கும்
திமிர்
பல உளிகளின்
வலி தாங்கி
உருவான வசீகரம்.

நிலாவை உடலில்
போர்த்தி
சுடர்விட்ட ஒரு
இரவில் தான்..
அந்த கோபுரத்தை
கண்டவர்கள்..
அது வெறும்
கற்களால் ஆனது
அல்ல..
கண்கள் முழுக்க
சுமந்த கனவின்
கனல் என
கண்டார்கள்..

வானெங்கும்
சிறகு விரித்து
இறகு கவிதை
எழுதும் பறவை
கவிஞர்களுக்கு
அந்த கோபுரம் தான்
இராஜ மாளிகை..

கால வீதியில்
கணக்கில் ஒன்றாய்
சட்டென
கடந்துப் போக
அந்த கோபுரம்
ஒற்றையடிப்பாதை
அல்ல..
பூரித்து நிற்கும் கடல்.

குப்பைகள்
காற்றில் மிதந்து
கலசத்தை உரசிய
போதும்..
ஆழ்ந்திருக்கும்
அதன் மெளனம்
சொற்கள் அற்று அல்ல..
உரசுபவை வெறும்
குப்பைகள் எனக் கற்று..

வார்த்தைகளை வார்த்து..
வாக்கியங்களை கோர்த்து..
இழி சொற்சங்கிலிகளால்..
அந்த கோபுரத்தை
சரித்து விடலாம் என
நினைப்பவர்களுக்கு..

தங்கப் பக்கங்களில்
எழுதப்படும் ஒரு
யுகத்தின் வரலாறு
கம்பீரமாக அறிவித்துக்
கொண்டே இருக்கிறது..

அந்த கோபுரம்
அவ்வளவு
எளிமையானதல்ல..

Powered by WordPress & Theme by Anders Norén