மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

பாக்யராசன் என்ற இனத்தின் நம்பிக்கை…

அரசியல்

குடி செய்வல் என்னும் ஒருவருக்கு தெய்வம்

மடிதற்று தான் முந்துறும் -குறள்

என் உயிர் நண்பரும் உலக தமிழர் பேரமைப்பின் இணைச் செயலாளருமான பாக்யராசன் சேதுராமலிங்கம் அவர்களை முதன்முதலில் நான் ஆர்குட் உலகில் ஒரு தமிழுணர்வாளராக அடையாளம் கண்டேன். அன்று முதல் அவர் அப்படியே இருக்கிறார். தன் சொந்த இனம் தன் கண்முன்னால் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்ட போது துயருற்ற விழிகளை துடைத்துக் கொண்டு இனி என்ன செய்யலாம் ..எப்படி மீள் எழலாம் என உளமார யோசித்த சிலரில் இவர் மிக முக்கியமானவர். கணினி திரைக்கு முன்னால் அமர்ந்து கொள்கை ,கோட்பாடுகளை முழங்கி விட்டு தனிப்பட்ட தன் வாழ்வில் தடுக்கி விழுந்து கிடப்போர்தான் இந்த இணைய உலகில் அதிகம். ஆனால் பாக்யராசன் கணினி திரையில் தன் எழுத்தாக பதிப்பதை தன் வாழ்க்கையாக களம் அமைத்து போராடி வருபவர். தன் இனத்தின் மேன்மைக்காக சமரசம் இல்லாமல் களமாடும் போராளியாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார் பாக்யா. அமெரிக்காவில் கணினி பணி, கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என கனவு கண்டு விமானம் ஏறி பறக்கும் இவ்வுலகில் இனம் வீழ்ந்த துயரம் பொறுக்காமல் வீறு கொண்டெழுந்து அல்லும் பகலும் தன் இன எழுச்சிக்காக களமாடி வருகிறார் பாக்யா.கடல் கடந்து வாழ்ந்தாலும் இனம் நினைந்து துடிக்கும் கணினித் தமிழர்களில் பாக்யராசன் ஒரு ஆளுமை. இணைய உலகில் எங்கெல்லாம் தமிழினம் கருத்தால் தாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நாம் பாக்யாவினை வீறு கொண்ட ஒரு வீரனாய் நாம் சந்திக்கலாம். துயருற்ற இந்த இனத்தினை எவ்வாறு இடறலாம் என குறுக்குப்புத்தி கொண்டு குதர்க்கம் பேசுவோரை கண்டு வெகுண்டெழுந்து பாய்ந்து வரும் தன் கருத்தால் கதற அடிக்கும் பாக்யராசனின் நண்பனாக, ரசிகனாக , பின்பற்றும் உறவாக வாழ்வதில் உண்மையில் நான் பெருமைப் படுகிறேன். இன்னும் பாக்யாவினைப் பற்றி விரிவாக எழுதலாம். ஆனால் அவருடைய பணி என் எழுத்துக்களை தாண்டிய பரப்பினை உடையது. விவரிக்க இயலா பரப்பினை உடைய பாக்யராசன் தொடர்ந்த தன் பணிகளால் துவண்டு கிடக்கும் தமிழினத்தினை தோள் கொடுத்து நிமிர்ந்த முயன்று வருகிறார். பாக்யராசனின் குடும்பமே இன நலம் காக்க, தன் நலம் மறந்து போராடி வருகிறது. இன்னும் இந்த இனம் இத்துப் போகவில்லை என பசுமையாய் அடையாளம் காட்ட பாக்யராசன் விரீய விருட்சமாய் விரிந்து வருகிறார். என்னைப் பொறுத்தவரை பாக்யா போன்றோர்தான் இந்த இனத்தின் நசுங்காத நம்பிக்கை. சுயநலம் மிகுந்த இந்த வாழ்வில் இனநலம் காக்க வெள்ளை உள்ளத்தோடு களம் காணும் பாக்யராசன் தமிழ் திரை உலகின் தற்போதைய இன துரோக பாதையை தடுத்து நிறுத்த முயன்று வருகிறார். குமுதம் ரிப்போட்டரின் பதிவு இதோ…. ப்.எம்.எஸ். என்கிற வெளிநாட்டு விநியோக உரிமையில் கிடைக்கும் வியாபாரத்தைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் இலங்கை செல்வதால் எழுந்துள்ள பிரச்னையால் உலகத் தமிழ் அமைப்புகளின் தடை,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் (IIFA) விழாவுக்கு தமிழ் அமைப்புகளுக்கும்,தமிழ்த் திரைப்படத்துறையினரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், நடிகைகள் நமீதா,ஜெனிலியா உள்ளிட்டோர் அந்த விழாவைப் புறக்கணித்தனர். இந்நிலையில், நடிகை அசின் சல்மான் கானுடன் ‘ரெடி’ இந்திப் படத்திற்காக கொழும்பு சென்றார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகளை யாரும் தடுக்கக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது.நடிகர் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இலங்கை சென்ற அசின் மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு எதிரான நட வடிக்கையில் இறங்கியுள்ளன.

நார்வே ஈழத்தமிழர் அவையின் ஊடகத்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்.

‘‘திரையுலகினர் தனிப்பட்ட முறையிலோ, தொழில் முறையிலோ மற்றும் வர்த்தக ரீதியாகவோ இலங்கைக்குச் செல்வதை யாரும் தடுக்க முடியாது என்ற நடிகர் சங்கத்தின் தீர்மானத்தால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வேதனை அடைந்துள்ளோம்.இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காகவும் தமிழினப்படுகொலை செய்ததற்காகவும் தண்டனை யைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் உலகெல்லாம் தமிழர்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்த நேரத்தில், இலங்கை அரசுக்கு நற்பெயர் பெற்றுத் தரும் முயற்சியில் யார் இறங்கினாலும் தமிழர்களின் பெரும் கோபத்திற்கு ஆளாவார்கள் என்று பணிவுடன் நினைவூட்டுகிறோம்.

மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு என்ற பெயரில் ஏற்கெனவே இந்திய அரசு உள்பட பல நாட்டு அரசுகளிடம் இலங்கை அரசு பெருமதிப்பிலான பணம் பெற்று வருகிறது. இழந்துவிட்ட நற்பெயரை மீட்பதற்காகவும், சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காகவும் இந்தியத் திரைப்படத்துறையினரை வஞ்சகமாக தன் வலையில் வீழ்த்த இலங்கை திட்டமிட்டு செயல்படுகிறது. இலங்கை அரசின் சதி முயற்சிக்கு தமிழ்த் திரையுலகம் ஒருபோதும் துணை நின்றுவிடக் கூடாது.அதே நேரத்தில்,தமிழர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களைப் புறக்கணிக்க தமிழர்கள் ஒரு போதும் தயங்கமாட்டார்கள் என்பதையும் நினை வூட்டுகிறோம்.

உலகத் தமிழர்களின் முயற்சிக்குத் துணை நிற்காவிட்டாலும் எதிராகச் செயல்பட வேண்டாம் என்று தமிழ்த் திரையுலகினரை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார், தமிழ்ச்செல்வன்.

மலேசியாவின் பினாங்கு அமைப்பின் தலைவர் சதீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசி யாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் உலகத் தமிழர் அமைப்பு ((WTO),அமெரிக்கத் தமிழர் அரசியலவை (USTPAC),வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (FetNa) உள்ளிட்ட தமிழ் அமைப்புகளும் தமிழ்த் திரைத்துறையினருக்கு எதிராக அவசர தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.சில தமிழ் அமைப்புகள் தமிழ்நாட்டிலிருந்து படங்களைத் தவிர்க்க தாங்களே தமிழ்ப்படங்களைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளன.இதுகுறித்த அறிவிப்பை மிக ரகசியமாக வைத்திருக்கும் இவர்கள், படத் தயாரிப்புக்கான ஆரம்ப கட்ட வேலைகளில் இறங்கியுள்ளனர்.

உலகத் தமிழர்அமைப்பு இணைச் செயலாளர் பாக்கியராஜன் சேதுராமலிங்கம் நம்மிடம், ‘‘‘அரபு அல்லாத பழங்குடி கறுப்பின மக்களை படுகொலை செய்த குற்றத்திற்காக சூடான் நாட்டின் அதிபரான ஓமர் அல் பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவித் திருக்கிறது. இந் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் தங்கள் நாட்டுக்கு அல் பஷீர் வந்தால் அவரைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம் என்றும், ஜூலை 12-ம் தேதி நெத்தியடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.அதேபோல் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்தான் ராஜபக்ஷே. அவருக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத்துறையினர் செயல் பட்டால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்’’ என்று கொதித்தார்.

உலகத் தமிழர்களின் புறக்கணிப்பால் தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்மையிலேயே பாதிப்பு வருமா என்று,திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘பெரிய நடிகர்கள், பெரிய பேனர்கள் படங்களின் வெளிநாட்டு (FMS -ஃபாரின்மலேசியா-சிங்கப்பூர்)உரிமத்தையும்நம்பித்தான் நாங்களிருக்கிறோம். ஆரம்பத்தில் மலேசியா,சிங்கப்பூரில் மட்டுமே தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன.இப்போது,உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியுள்ளதால் அங்கெல்லாம் தமிழ்ப்படங்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. கனடா, நார்வே, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒவ்வொரு படத்திலும் 10 முதல் 20 பிரிண்ட்கள் வரை விற்பனை ஆகிறது. ஒரு பிரிண்ட் குறைந்தபட்சம் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை விற்கப்படும். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நட்சத்தி ரங்களின் படங்கள் ரிலீஸுக்கு முன்பே வியாபாரமாகிவிடும்.மற்ற படங்களின் வெற்றியைப் பொறுத்து விலை ஏறும் அல்லது இறங்கும்.எனவே, எப்.எம்.எஸ்.உரிமையை நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம்’’ என்றனர். என் நண்பன் பாக்யராசனின் மின்னஞ்சல் முகவரி packmymails@gmail.com. அவரை வாழ்த்துங்கள். இனம் மீட்க துடியுங்கள்.

403 total views, 2 views today

1 thought on “பாக்யராசன் என்ற இனத்தின் நம்பிக்கை…

  • திரை உலகை சேர்ந்தவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல அவர்களின் சொகுசு வாழ்கை கூட மக்களின் வரிபனத்தில் அமைந்ததே உழைக்கும் மக்களின் வியர்வையில் சொகுசாய் சிம்மாசனம் போட்டு அம்மக்களையே சுரண்டி வரும் மோசடிகளே திரைத்துறையினர்(விதிவிலக்காய் சிலர் மட்டுமே) கொழுப்பேறிய அவர்களின் சதைகளுக்கு உரமாய் உரிஞ்சபடுவது நம் ஏழைகளின் உதிரமே! திரையில் நடிப்பில்,இயக்கத்தில் மட்டுமே சமூக விரோத படங்களை குடுத்து வந்த அவர்கள் இன்று திரையை தாண்டி வெகுஜன நிகழ்சிகளிலும் அதை தொடர்வது கண்டிக்க வேண்டியது தடுத்து நிறுத்த வேண்டிய ஒன்று அதை நம் தோழர்கள் முயற்சித்து வருகின்றனர்(குமுதம் பேட்டி) குறிப்பாக தோழர் பாக்கி அவர்களின் கருத்துக்கள் அரசியல்பூர்வமாகவும்,இனபகைவர்களுக்கு எதிரான போர்குரலாக்வும் ஒலித்தது வாழ்த்துக்கள் தோழர் தொடரட்டும் உங்கள் தமிழர் பனி உணர்வோடும்,வூக்கதொடும் எங்கள் ஒத்துழைப்பை என்றும் தருவோம் பெட்டியை அறிமுகம் செய்த அன்பு தோழி ப்ரியாவிற்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.இங்கு பதிவு செய்து தனது ஆதரவை தெரிவிக்கும் தோழர் மணி செந்தில் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

    “விழ விழ எழுவோம்”
    nanri thamizh http://www.poraaduvom.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *