அய்யகோ….

தமிழக அரசு இந்த சொல்லை வைத்துக் கொண்டுதான் அல்லலுறும் ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சித் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது..

இந்த தீர்மானத்திற்கு இருக்கும் அரசியல் காரணங்கள் அற்பமானவை. இப்போது தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியும் ஈழ ஆதரவு தீயை அணைப்பதற்காக அல்லது வலு இழக்க செய்வதற்கான குளிர் நீராய் ,காங்கிரஸ் மீதான காதலுக்காக கலைஞர் தாக்கல் செய்துள்ளார். அய்யகோ என்ற சொல்லே ..உண்மையான துயரத்தை செயற்கை மிகுந்ததாக மாற்றும் நாடகப் பாணியிலான சொல்லாகத்தான் நம்மால் பார்க்க இயலுகிறது. கலைஞர் சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கும் அந்த தீர்மானத்தில் வழக்கத்திற்கு மாறான…காங்கிரஸின் கட்டுப்பாட்டினை தாண்டிய வாக்கியங்கள் எதுவுமே இல்லை. இறுதி வேண்டுகோளில் எந்த தேதி இறுதி என குறிப்பிடவே இல்லை. இறுதி என்றால் யாருக்கு இறுதி ? எதற்கு இறுதி?

மேலும் கலைஞர் இறுதி வேண்டுகோள் விடுத்திருக்கும் மத்திய அரசில் திமுக அமைச்சர்களும் தான் இடம் பெற்றுள்ளனர். எனவே டி. ஆர்.பாலு,ராசா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருக்கும் ஒரு அவையை நோக்கிதான் கலைஞர் இன்று இறுதி வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது. கலைஞர் வேண்டுகோள் விடுக்க வைக்கிற, கலைஞரை கதற வைக்கிற ஒரு அமைச்சரவையில் தான் திமுக அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். கலைஞரை இந்த அளவிற்கு அய்யகோ என்று கண்ணீர் மல்க இரங்க செய்யும் மத்திய அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றுள்ளதுதான் நமக்கு நெருடுகிறது. உண்மையில்..உள்ளுக்குள் ..நிகழும் அரசியல் தான் என்ன..? அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்…ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தை அழிப்பதற்காக நிகழ்கிறதே இந்த பாழாய் போன அரசியல் என்பதுதான் நமக்கு வேதனையை அளிக்கிறது.

மத்திய அரசை நோக்கி தீர்மானங்களாக அனுப்பி கொண்டிருக்கும் கலைஞரை மதிக்காத….விரும்பாத மத்திய அரசில் திமுக இன்னும் இடம் பெற்று விளங்குவது எதன் பொருட்டு…அப்படியென்றால் அய்யகோ தீர்மானங்கள் யாரை நோக்கி…

தமிழர்களின் பாதுகாப்பிற்காக அனுப்பப் பட்ட சிவசங்கரமேனனை இதுவரை அங்கு நடந்த பேச்சுக்கள் குறித்து தமிழக முதல்வரிடம் விவரிக்க அனுப்ப மறுக்கிறது.. இது வரை எப்போதுமில்லாத அளவிற்கு இலங்கையோடு இணக்கமாக உறவு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக அறிவிக்கிறார் இலங்கை தூதர்.. இதே மலையாளிகளை கொன்று குவித்தால் மேனன் வாயில் இருந்து இப்படிப்பட்ட கும்மாள வார்த்தைகள் வருமா…?

அரசியல் சதுரங்கத்தில் தொடர்ந்து வெட்டப் படும் சேனையாக தமிழனம் ஆகி வருவது குறித்து தமிழக அரசியல்வாதிகளுக்கு கவலைகள் ஏதுமில்லை. பதவியும் அதன் இருப்புமே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி என்று முதுமொழி ஒன்று உள்ளது. தமிழக மக்கள் தனது ஊர்களில் இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என்று திருமங்கல ஆசையில் வாழ கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் ஒரு விலை நிர்ணயித்து ஏலம் போட முடிவு செய்து விட்டனர் நம் தலைவர்கள். ஏலத்தொகை தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் விழித்துக் கொள்வதும், இன உணர்வு கொள்வதும் தான் தற்போதைய ஈழ யுத்தக் களத்திற்கு நிகரான சவால்களாக நமக்கு தோன்றுகிறது..இப்போது எழுந்திருக்கும் மாணவர் போராட்டங்கள், வழக்கறிஞர்கள் போராட்டங்கள் ஆகியவை இன்னும் பல தளங்களுக்கு பரவ வேண்டியதும் காலத்தின் அவசிய அவசரத் தேவையாக இருக்கிறது..

இந்நிலையில் கலைஞர் மனோகரா காலத்து மதி மயக்கும் பழைய திரைப்பட வசனங்களை தீர்மானங்களாக அனுப்பி கொண்டிருப்பதில் என்ன பயன்..? பயனில்லை என்றால் திமுக பொதுக்குழு வில் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவு நாசமாக போனப் பின் எடுக்கப் படுமாம்.

தான் பதவி இழந்தால் தனி ஈழம் கிடைக்கும் என்றால் இப்போதே பதவி துறக்க தயார் என்கிறார் கலைஞர். தலைவா ..நம்மால் நாற்பதில் ஒன்றை கூட இழக்க முடியாத மனநிலை இருக்கிறது. இதில் முதல்வர் பதவியை இழப்பேன் என அறிவிப்பது யாரை ஏய்க்க..

தமிழ்ப் பெரும் இனமே..தந்தை பெரியாரால் இன்று இணையம் அளவிற்கு வளர்ந்து ,தமிழணர்வோடு விளங்கும் இணையத் தமிழர்களே…உலகமெலாம் பரவிக் கிடக்கின்ற தமிழினமே… நாம் ஒன்று பட்டு , அரசியல்வாதிகளை ஒதுக்கி வைத்து விட்டு தீவிரமாக பணிப்புரிய வேண்டிய சூழல் வந்து விட்டது. உங்கள் பகுதிகளில் இருக்கும் தமிழ் உணர்வாளர்களோடு இணைந்து ,தமிழின விரோதிகளை உணர்ந்து, அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு மக்களை திரட்ட வேண்டிய மகத்தான பணி நமக்கு முன் இருக்கிறது.. எங்கெங்கு தமிழர் நலம் கெடின் – அங்கெங்கு தலையிட்டு கிளர்ச்சி செய்வோம்..

நாம் போராடினால் சிங்களக்காரன் போரை நிறுத்தி விடுவானா..? என்ற கேள்வியை நம்மிடையே வாழும் ஞாநிகள் கேட்கிறார்கள்.. சரி ..போராட வேண்டாம்..வீட்டிலேயே சோற்று துருத்திகளாக, நடமாடும் சுமைகளாக, ஊதிய பிஸ்கட் கவ்வும் ஏவல் நாய்களாக ,இன உணர்வில்லாத இனப்பெருக்க பன்றிகளாக வாழ்வதில் யாரும் தடை விதிக்க போவதில்லை. உன் சகோதர-சகோதரிக்கு கூட போராடாத நீ …எதிர்த்து குரல் கொடுக்காமல் மெளனசாமியாக வேடிக்கை பார்க்கும் நீ மனிதனாக தான் பிறந்தோமா என்பதை மறுபரிசீலனை செய்யலாம்.

ஈழம் அழிவதை நாம் பொறுத்துக் கொள்வது நம் இனத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஈழத் தமிழினம் அழிவதை நாம் எவ்வித சலனமும் இன்றி மெளனமாக வேடிக்கை பார்ப்பது சிங்கள பேரினவாதத்தை விட கொடுமையானது. அதை விட கொடுமையானது இந்த அய்யகோ..போன்ற வசனங்கள்