திராவிடத் தத்துவம் தனக்குத்தானே மதிப்பிழந்து,அம்பலப்பட்டு நிற்கிறது. நிகழ்கால அரசியலில் தத்துவ தலைமையில்லாமல் காவி அரசியலோடு கலந்து விட துடிக்கிறது. பெரியாரை கேடயமாகக் கொண்டு தனக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கொள்ள எத்தனிக்கிறது. இம்முயற்சி கேடயத்தையும் சேர்த்தே வீழ்த்தும் என்பது தெரிந்தும் பிரபாகரன் என்ன கடவுளா என கேள்வி கேட்டு திசை திருப்புகிறது. இதற்கு எதிர்வினையாக அப்படி என்றால் தெருவிற்கு தெரு சிலைகள் கொண்ட பெரியார் என்ன கடவுளா என்ற கேள்வி எழும்பும் என்பது தெரிந்தும்..பிரபாகரன் vs பெரியார் என்கிற விளையாட்டில் திராவிடத் தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

பாவம் அவர்கள். தர்க்க ரீதியான எந்த கேள்விக்கும் அவர்களது நடைமுறை முரண்களே பதிலாகிப் போனதால் சீமானை சீண்டிப்பார்க்கிறார்கள்.

அண்ணன் சீமான் ஈழம் சென்று விட்டு திரும்பி அடுத்த நான்கு வருடம் இதே பெ.தி.க மேடைகளில் தன் ஈழப் பயணம் குறித்து நிறைய செய்திகளை பகிர்ந்து இருக்கிறார். அப்போதெல்லாம் பக்கத்தில் இருந்து பல்லிளித்த இதே தலைவர்கள் இன்று பாய்ச்சலாய் பாய்வதன் காரணம் அணையப் போகிற திராவிடத் தீபத்தை எதை கொண்டாவது சுடர் விட வைக்கும் தந்திரமே.

திராவிடபிழைப்புவாதங்களை,
பித்தலாட்டங்களை,தமிழின துரோகங்களை இன்றைய இளைஞர்கள் இணையம் வழி கேள்வி எழுப்புகிறார்கள் ‌. எள்ளி நகையாடுகிறார்கள். இந்த எழுதலுக்கு காரணம் சீமான் என திராவிடத் தலைமைகள் நம்புகிறார்கள்.
அதனால் ஏற்பட்ட சினம் தான்
சீமான் மீது வன்மமாய் கவிழ்ந்துக் கிடக்கிறது.

ஈழத்திற்கு சென்று வந்து கொளத்தூர் மணி அவர்களிடம் சீமான் மூலமாக என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன என அருகிலிருந்து கவனித்தோர் எல்லாம் இன்னும்,இன்றும் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டு, அக்காலக்கட்டத்தில் பல செய்திகள் பெரியார் தி.க மேடைகளில் கொளத்தூர் மணி அவர்கள் முன்னிலையில் சீமான் அண்ணனால் பகிரப்பட்டன என்பதையும் மறைத்து இன்று கொளத்தூர் மணி திடீரென தோன்றி காந்தியை சுட்டுட்டாங்களா என்கிற ரீதியில் பேசுவதுதான் மிகையாக தோன்றுகிறது. சீமான் சொல்வதெல்லாம் மிகை என்றால்..அன்றே கொளத்தூர் மணி மறுத்து இருக்கலாம். தங்க ஊசி என்றாலும் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா..என்றளவிற்காவது எதிர்வினை ஆற்றி இருக்கலாம். அதற்கு பிறகு கூட சீமானோடு நெருக்கமாய் இருந்த காலக்கட்டங்கள் இருந்தன என்பதை மணி அண்ணன் மறந்திருக்கலாம். நாங்கள் மறக்கவில்லை. அப்போதெல்லாம் ஆற்றாத எதிர்வினை இப்போது எகிறி வந்து விழுகிறது என்று சொன்னால்..சொல்லப்பட்டவை எதுவும் மிகை அல்ல.. இப்போது கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றும் எதிர்வினைகளே மிகை.

இன்று படிக்காதவராய் மணி அவர்களால் அடையாளம் காட்டப்படும் சீமான் தான் அன்று தெருத்தெருவாக சென்று பெரியாரை பரப்ப பயன்படுத்தப்பட்ட ஆயுதம். இந்தப் படிக்காத சீமான் தான் அன்று கொளத்தூர் மணி கைது செய்யப்பட்ட போது துண்டேந்தி வசூல் செய்ய பயன்படுத்தப்பட்ட கருவி‌. இந்த படிக்காத சீமான் தான் அன்று பெரியாரைப் பற்றிப் பேசும்போது கொளத்தூர் மணியை உச்சி மோர வைத்த பரவசம். என்ன செய்வது.. சமீப காலமாக ஸ்டாலின் போன்ற மெத்த படித்த அறிவாளிகளோடு ஏற்பட்ட சகவாசம் சீமானை படிக்காதவராய் பார்க்கத் தோன்றுகிறது போலும். ஒத்துக் கொள்ள வேண்டியதுதான். ஸ்டாலின் மேதையாக,மீட்பராக,காப்பராக தோன்றும் விழிகளுக்கு சீமானை படிக்காதவராக தான் தோன்றும்.

அண்ணன் கொளத்தூர் மணி மீது நானெல்லாம் பெரு மதிப்புக் கொண்டவன். திமுக வெறுப்பினை அவர் மூலமாகவே அடைந்தவன். அவர் இன்று எளிதாக ஸ்டாலினைப் பார்த்து ,வீரமணியை சந்தித்து சமாதானமாகிக் கொள்கிறார். எங்களால் ஆக முடியவில்லை. அவ்வளவுதான்‌. அவரால் உண்டாக்கப்பட்டவர்கள் தான் நாங்கள். ஆனால் வரலாற்றின் போக்கு விசித்திரமானது. அவர் மீது நாங்கள் கொண்ட நேசிப்பே இன்று அவருக்கே ரணமாகி இருக்கிறது.

எம் இனத்தை வீழ்த்திய திராவிட கருத்தியலை சமரசமற்ற அரசியலால் வீழ்த்தி முடிப்போம் என முடிவு செய்தோம் . செய்கிறோம். அதே சமயத்தில் இந்துத்துவ காவி அரசியலுக்கு நேரடி எதிரியாக,சாதி முரண்களை கொண்டு காலங்காலமாய் எழுப்பப்படும் அரசியலுக்கு எதிராக …எம்மின படுகொலைகள் தந்த அனுபவங்களை உள்வாங்கி நிற்கிறோம்.

மற்றபடி..மதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்களின் சொற்களை எல்லாம் கூராய்வு செய்ய வேண்டியதில்லை. இருக்கும் இடத்திற்கு ஏற்றாற் போல அவரெல்லாம் பேச மாட்டார் என கருதினோம். பேசி விட்டார். சிறு புன்னகையோடு கடப்போம்.

அவர்கள் கற்பித்தார்கள்.
நாங்கள் நடக்கிறோம்..

அவர்கள் விட்டு விட்டார்கள்.
நாங்கள் தொடர்கிறோம்.