எப்போதும் தவறான,விஷமத்தனமான உரையாடல்களை உருவாக்குவது திராவிட பற்றாளர்களுக்கு கைவந்த கலை. கடந்த 2008-09 காலத்தில் கூட ஈழம் அழிவின் விளிம்பில் நின்ற பொழுதுகளில் கூட விடுதலைப்புலிகள் சகோதர யுத்தம் நடத்தியவர்கள் என்றெல்லாம் ஒரு விவாதத்தை திட்டமிட்டு உருவாக்கியது திமுக.எப்போதும் கருணாநிதியின் அறிக்கைகளில் இந்த சகோதர யுத்த புராணம் சற்று தூக்கலாகவே இருக்கும். இப்போதும் கூட தலைவர் பிரபாகரனைப் பற்றி அவ்வப்போது திமுக இணையத்தள அணியினர் விஷமத்தனமாக விமர்சனங்கள் வைப்பதும், அதை திமுக தலைமை ரசிப்பதும் அனைவரும் அறிந்ததே.

அதே போல இப்போதும் காமராசர் எதிர் பெரியார் என்கிற அபாயகரமான விவாதத்தினை பெரியார் திடல் தொடங்கியுள்ளது. காமராசரை ஒட்டுமொத்த தமிழினமும் தனது பெருமைக்குரிய சின்னமாக, நேர்மையான ஆட்சிமுறை/ மக்கள் நலன் சார்ந்த அரசியல் இவைகளின் அடையாளமாக காண்கின்ற இவ்வேளையில் அவருக்கு எதிராக பெரியாரை முன் நிறுத்துவது காமராசரின் புகழுக்கு எவ்வித களங்கமுமில்லை. இந்த விவாதம் பெரியாருக்குதான் இழுக்கினை ஏற்படுத்தும்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழர் அரசியல் வேறு வடிவங்களில் மாறி இருக்கிறது. தமிழ்/தமிழர் என்கிற அடையாளங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. திராவிட இயக்கங்கள் ஒரு காலத்தில் எள்ளி நகையாடிய தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் தங்களது பெருமித நிலையை மறுபடியும் அடைந்திருக்கின்றன. சாட்சி : ஜல்லிக்கட்டு போராட்டம்.

மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே என பேசிய பெரியார் இன்று தமிழின இளையோர்களால் மறுவாசிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். இந்த போக்கு பெரியாரை கடவுளாக்கி, திராவிடத்தலைவர்களை ஆதீனமாக்கி, அவர்களது மகன்களை இளைய ஆதீனமாக்கி திராவிடக்கட்சிகளை மடமாக்கி வழிபடும் திராவிடப்பற்றாளர்களுக்கு மிகுந்த பதட்டத்தை உண்டாக்கி இருக்கிறது. அந்த பதட்டமே ஐயா திருச்சி வேலுச்சாமி சொல்வது போல ஆட்டைக் கடித்து ,மாட்டைக் கடித்து, இன்றும் மனிதனையும் கடிக்கத் தொடங்கி இருக்கிறது.

பெருந்தலைவர் காமராசர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. காமராசரின் இந்திய தேசிய உணர்வு கடந்த பல காலங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் காமராசர் மறு வாசிப்பிற்கு உள்ளாகிற, விமர்சனங்களுக்கு நேருகிற ஒரு ஆளுமையாக என்றுமே இருந்திருக்கிறார். ஆனால் பெரியாரை புனித முக்காடு அணிவித்து பெரியாரைப் பற்றி எவ்விதமான விவாதங்களும் எழாமல் கவனம் காப்பதும், மீறி எழுப்புபவர்கள் மீது அவதூற்று பிரச்சாரங்களால் எகிறி தாக்குவதும் திராவிட ஆதரவாளர்களின் இயல்பாக உள்ளது. தன் வாழ்நாளில் எத்தனையோ எதிர் பிரச்சாரங்களை நேரிடையாக எதிர் கொண்டு நின்றவர் பெரியார். ஆனால் அவரது வாரிசுகளாக அறிவித்து கொள்கிறவர்கள் சகிப்பற்றத் தன்மையின் சின்னங்களாக மாறி இருக்கிறார்கள்.

பெருந்தலைவர் காமராசர் போன்ற தமிழின அடையாளங்கள் மீது தகுதியற்ற விமர்சனங்களை வைத்தால் அது பெரியாருக்கு எதிராக திரும்பும் என்பது பெரியார் திடலுக்கு தெரியாதது அல்ல. அதையும் மீறி வைக்கிறார்கள் என்றால்.. பெரியாரைத் தாண்டியும் அவர்களுக்கு ஒரு அரசியல் உள் நோக்கம் இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

என்றுமே பெருந்தலைவர் காமராசர் பெரியாரின் புகழ் வெளிச்சத்தில் வெற்றிப் பெற்ற ஆளுமை அல்ல. சமகாலத்தில் இருவருமே புகழ்ப் பெற்ற தலைவர்கள். பெரியாரின் ஆலோசனைகளை காமராசர் கேட்டிருக்கக் கூடும். ஆனால் முடிவுகளை காமராசர் தன்னியல்பில் தான் எடுத்தார். ராஜாஜி போன்ற எதிர்முரணை தன் வரலாற்றில் மிக நெருக்கமாக வைத்துக் கொண்ட பெரியாரால் ராஜாஜியின் எதிரியான காமராசரை ஆதரிக்க மட்டுமே முடிந்தது. இந்த வித்தியாசமான முரண்புள்ளிகளை காமராசர் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தார். அதனால் தான் காமராசரது இறுதிக்காலத்தில் திமுகவோடும், இராஜாஜியோடும் மீண்டும் இணக்கமாகி இருந்த பெரியாரை காமராசர் வெகுவாக விமர்சிக்கவில்லை. எனவே காமராசர் மீது பெரியார் மிகுந்த ஆதிக்கத்தினை செலுத்தினார் என்பதும், பெரியாரின் ஆலோசனைகளை வைத்தே காமராசர் ஆட்சி நடத்தினார் என்பதும் வெகுவான மிகைப்புள்ளிகள்.

பெருந்தலைவர் காமராசரைப் பற்றி நிறைய தகவல்கள் நூல்கள் வாயிலாகவும், இணையத்தளங்கள் வாயிலாகவும் நமக்கு கிடைக்கின்றன. அவரது ஆட்சிக்காலமே தமிழகத்தின் மாபெரும் பொற்காலமாக திகழ்ந்திருக்கிறது. தன் செய்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு தங்கத்தலைவனுக்கு பாராட்டு விழா என்பதான அபத்த விளம்பரங்களை காமராசர் என்றுமே செய்துக் காட்டியதில்லை. சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?” என்று பெரியாரே வியந்துப் பாராட்டிய பெருமகனாக காமராசர் திகழ்ந்துள்ளார். பெரியார் தன் இயக்கத்திற்காக பெருச்சொத்தினை சேர்த்தவர். ஆனால் காமராசர் தன் கட்சியின் பெருஞ்சொத்தாக விளங்கியவர். திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலில் செய்த நலன்களை விட கேடுகளே அதிகம். அதில் மிக முக்கியமானது அரசியலில் இருந்த எளிமையை துடைத்து எறிந்தது. மக்களுக்காக உழைக்கிற அரசியலை ஒரு தொழிலாக மாற்றி, நிறுவனமாக மாற்றி கோடானுகோடி கொள்ளையடிக்கிற வணிகமாக மாற்றி ஆசியாவின் பெரும் பணக்காரர்களாக திராவிடத் தலைமைகள் மாறியது தமிழக அரசியலின் நேர்மை உணர்வை இல்லாதாக்கியது.

இவர்கள் விமர்சிக்கும் காமராசர் தான் இறக்கும் போது தன் தலையணைக்கு கீழே வைத்திருந்த சொற்ப பணத்தை (ரூ.160/-) தவிர வேறு எந்த சொத்தினையும் பொதுவாழ்க்கை மூலம் அடையாதவர். அவரின் குடும்பத்தினர்களோ, உறவினர்களோ அரசியலில் ஆதாயம் அடையாத அளவிற்கு சுய வாழ்க்கை சுத்தம் கொண்டவர். ஆனால் திராவிட அரசியல் வாதிகள்…????

பெரியாருக்கு எதிராக காமராசரை நிறுத்துவது அல்ல நமது நோக்கம். காமராசரை பெரியாருக்கு கீழே நிறுத்துவதை தடுப்பதே நமது நோக்கம். வரலாற்றினை தன் கொல்லைப்புற வாய்க்காலாக கருதி, அண்ணா அறிவாலயம் திசையில் மடைமாற்ற பிராயத்தனம் செய்யும் மதிமாறன் போன்றோரே பெரியாரின் கருத்தியலுக்கும், அவரது வாழ்க்கைக்கும் துரோகம் செய்கிறவர்களாக, பெரியாரை பலர் புறக்கணிக்கும் போக்கிற்கு காரணிகளாக திகழ்கிறார்கள்.

காமராசர் தான் கொண்ட இந்திய தேசிய உணர்வால் ஏமாற்றப்பட்டார். . ஆனால் அவரின் தியாகமும், சேவையும் ,இம்மண்ணுக்கேரிய ஒரு தூயத் தமிழனின் அப்பழுக்கற்ற சமூகப் பணி. அக்குணம் பாழ்படுத்தப்படாத ஒரு பச்சைத் தமிழனின் மரபியல் சார்ந்த பரம்பரைக்குணம். அதை குறை சொல்ல இம்மண்ணை கொள்ளையடித்தவர்களுக்கு, அடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, அடிக்கத் துடிப்பவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

நான் ஏற்கனவே சொன்னதுதான் . காமராசரை ஆதரிக்கவே பெரியாருக்கு உரிமை உண்டு. அதை புரிந்துக் கொண்டு அவர் ஆதரித்தார். எதிர்க்க இவர்களில் யாருக்கும் தகுதி இல்லை.

பெரியார் தன்னை கன்னடன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். இந்த மண்ணை ஆளும் உரிமை தனக்கில்லை என வெளிப்படையாக ஒத்துக் கொண்டவர். அது பச்சைத்தமிழன் காமராசருக்கே இருக்கிறது என அறிவித்தவர். பெரியாரின் வாரிசுகள் என அறிவித்துக் கொள்ளும் இவர்கள் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்கிற பெரியார் ஆதரித்த ஒரு முழக்கத்தை எதிர்ப்பதுதான் திராவிட அரசியல்வாதிகளின் பிழைப்புத்தனமாக இருக்கிறது.

பிழைத்து விட்டு போங்கள்.

ஆனால் எங்களுக்காக உழைத்த காமராசர் மீது பெரியாரை காட்டி கறைப்படுத்தாதீர்கள்.

அது உங்களையே வீழ்த்தும். ஏற்கனவே தடுமாறிக்கொண்டு இருக்கிற உங்களது கட்டுமரங்களும், கப்பல்களும், காமராசரை தமிழின அடையாளமாக உணர்ந்து எழுந்து வருகிற தமிழ்த்தேசிய உணர்வு என்கிற பேரலையால் முழ்கடிக்கப்படும்.

காமராசரைப் பற்றி அறிய:

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D

காமராசரைப் பற்றியும்,
இச்சர்ச்சைப்பற்றியும்
திருச்சி வேலுச்சாமி அவர்களின்
எதிர்வினை

https://www.youtube.com/watch?v=_olmNq7mcm4