ஒரு கதை என்பது பல சிறகுகளை உடைய ஒரு பறவையை போன்றது. அது எத்திசையும் ,எந்த உயரமும் பறக்க வல்லது.

ஒரு கதை என்பது பல கோடி கதவுகள் கொண்ட மாபெரும் அரண்மனை. ஒவ்வொரு கதவிற்கு பின்னாலும் வெவ்வேறு பயணங்களுக்கான சாத்தியங்கள் உண்டு.

ஒரு கதை என்பது மர்மங்களும்,சுவாரசியங்களும் நிரம்பிய ஒரு கடல். ஆழமும்,அகலமும் முழுதாய் யாராலும் அறிய முடியாது.

ஒரு கதை என்பது திசைகளற்ற பெருவழி. அதற்கு முடிவும் இல்லை . தொடக்கமும் இல்லை. நாமே ஒரு புள்ளியில் தொடங்குகிறோம். நாமே ஒரு புள்ளியோடு முடிக்கிறோம். ஆனால் கதையோ முடிவது இல்லை. ஏனெனில் அது தொடங்குவதும் இல்லை.

பல கோடி கதைகள் உருவாகி விட்டன. அதை சொல்வதற்கு தான் சொற்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மனிதனின் ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

இன்னும் சொல்லப்படாத கதைகளில் தான் உண்மை ஒளிந்து இருக்கிறது. சொல்லப்பட்ட கதைகள் பெருமளவு புனைவு தான்.

# இந்த இரவிலும் நீ கதை சொல்ல தொடங்கினாய் துருவா.. அவிழ..அவிழ அவிழ்ந்துக் கொண்டே போகும் முடிவிலி முடிச்சிகளின் கதை. நிலா சுடரில் கொந்தளித்துக் கொண்டிருக்கிற ஒரு ஆற்றொழுக்கு அருவி போல கதை நம் முன்னால் கொந்தளித்து ததும்பிக் கொண்டே இருக்கிறது. அதிலிருந்து ஒரு கோப்பை அள்ளி கண்கள் மின்ன என் முன்னால் நீட்டுகிறாய்.

என் முன்னால் நீ நீட்டிய அக் கதை கோப்பையில் ஒரு நீல மீன் ஒன்று நீந்திக் கொண்டிருந்ததை நீயே கவனிக்கவில்லை..

Paint credit : வான்கா.