மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

துளி 13

துளிகள்

வட சென்னை -இருள் பக்கங்களின் வெளிச்சத் தெறிப்புகள்
——————————————–

வாழ்வென்பது வரையப்பட்ட கோடுகளின் மீது ஒழுங்கமைவோடு கட்டமைக்கப்பட்ட ஓவியம் அல்ல என்பதைத்தான் காலம் காலமாக இலக்கியங்களும், கவிதைகளும், படைப்புகளும் கூறிவருகின்றன. மீறல்களால் நிறைந்த மானுடவாழ்க்கையின் இருள் பக்கங்களில் வெளிச்சத்தை பாய்ச்சி நிழலுக்கும் நிஜத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை அழித்து பார்க்கிற பெரிய முயற்சிதான் வெற்றிமாறனின் வட சென்னை.

இப்படியெல்லாம் எழுதுவார்களா என்று எழுத்தாளர் ஜி நாகராஜனின் குறத்தி முடுக்கு நாவலைப் படித்துவிட்டு அவரை கேட்ட கேள்விக்கு.. அவர் சிரித்தவாறே சொன்ன பதில்

” நான் எழுதியதை விட சமூகம் மோசமாகத்தான் இருக்கிறது.”

எப்போதும் அசலான மனிதர்களை இலக்கியங்களிலோ திரைப்படங்களிலோ நாம் சந்திப்பதில் உளவியலாக நமக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. ஏனெனில் உண்மை எப்போதும் பகட்டாக இருப்பதில்லை. அது நேரடியானது .எளிமையானது. சொல்லப்போனால் நாம் கட்டமைத்து வைத்திருக்கிற அனைத்திற்கும் எதிரானது.

வடசென்னை திரைப்படத்தில் நான் மிகவும் ரசித்தது அந்தப் படம் முழுக்க வருகிற எளிய மக்களின் கொச்சை மொழி வசனங்கள் தான். ஒரு திரைமொழியை கையாளுகிற படைப்பாளி அதை அணுக துடிக்கும் எவருக்கும் அப்படைப்பை எவ்வளவு அருகே நேர்மையாக கொண்டு செல்ல வேண்டுமோ அவ்வளவு நெருக்கத்தில் கொண்டு செல்வதே அந்த படைப்புக்கு அந்தப் படைப்பாளி செய்கிற மகத்தான நேர்மை என்றால் இயக்குனர் வெற்றிமாறன் மிகுந்த நேர்மையாளன்.

இது ஒரு திரைப்படம் ..திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு நாமெல்லாம் வந்து இருக்கிறோம் என்கிற உணர்வை அழித்துக் கொண்டே இருப்பதில் வெற்றிமாறன் வெற்றி அடைந்திருக்கிறார். நம் கண்முன்னால் நடக்கிற நம் சக மனிதர்களின் வாழ்க்கையை குறித்த நமது பார்வை நிலையாகவே வடசென்னையை நம்மால் தரிசிக்க முடிகிறது.

இப்படியெல்லாம் நடக்கிறதே.. இப்படியெல்லாம் பேசுகிறார்களே என்று யாரேனும் ஆதங்கப்பட்டால்.. ஜி நாகராஜன் போல நாமும் சொல்லுவோம் . நாம் அவ்வாறாகத் தான் இருக்கிறோம்.

எனக்குத் தெரிந்து தமிழ் திரையில் படத்தின் கதாநாயகி கதாநாயகனைப் பார்த்து மக்கு ….. என்று கொச்சை மொழியில் ஏசுவது இதுதான் முதல் முறை. பஞ்சணை களிலும் வானத்து மேகக் கூட்டங்களிலும் இதுவரை மிதந்துகொண்டிருந்த தமிழ் திரைப்படத்து கதாநாயகன், கதாநாயகி வடசென்னையின் வீதிகளில், தமிழகத் தெருக்களில் இப்போதுதான் இறங்கி நடக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இது நம்மொழி ,நம் பண்பாடு ,நமது நிறம், நமது நிலம், நமது உணவு ,நமது உடை ,நமது உணர்வு இது இவர்கள் வரைந்து வைத்திருக்கிற நாகரீக வரையறைக்குள் வராவிட்டாலும் நமக்கு கவலை இல்லை. ஏனெனில் நம்மை தீர்மானிக்க எவருமில்லை, நாம் தான் நம்மை தீர்மானிக்கிறோம் என்பதைத்தான் வடசென்னை அசலான மனிதர்களின் நிஜ வாழ்க்கையை செல்லுலாய்டு பதிவின் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

படம் முழுக்க ஏராளமான கதாபாத்திரங்கள். ஆனால் ஒன்று கூட தேவையற்றது என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. எடுத்துக்காட்டாக குறி சொல்லும் கிழவியாக வருகிற கதாபாத்திரம்.அப் பாத்திரம் சற்றே நுட்பமானது. பின் நடக்க இருப்பதை சொற்களால் குறியீட்டு கோடிட்டுக் காட்டுவது.

கதை நேர்கோட்டு வடிவமாக சொல்லப்படாமல் முன்னும் பின்னும் அலைபாய்ந்து புதிய முறை கதைசொல்லலில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரு இடத்தில் கூட குழப்பம் ஏற்படாமல் பிசிறு தட்டாமல் இருப்பது என்பது ஆகப்பெரும் மேதமை.

சிறு சிறு காட்சிகளிலும் அதன்பின் புறங்களிலும் காட்டப்பட்டிருக்கும் நுட்பமான விவரங்கள் பிரம்மிப்பை தருகின்றன. ஏறக்குறைய எண்பதுகளில் நடக்கிற கதை ஓட்டத்தில் அதன் பின்புலமாக விவரிக்கப்படுகின்ற 80 ,90 களின் மக்களின் உடை ,மொழி சிகை அலங்காரம், சுவற்றில் ஒட்டி இருக்கிற சுவரொட்டி, சுவரில் வரையப்பட்ட நிர்மா,பாண்ட்ஸ், சின்னத்தம்பி ஓவியங்கள், வீட்டில் இருக்கிற பொருட்கள் என ஒவ்வொன்றிலும் காட்டப்பட்டு இருக்கிற கவனம் இந்த திரைப்படத்தை மறக்கமுடியாத பெரும் அனுபவம் ஆக்குகிறது.

ஒரு காட்சியில் தூக்கிச் செல்லப்படும் டிவி அட்டைப்பெட்டியில் சாலிடர் டிவி,பிபிஎல், என எழுதப்பட்டு இருப்பதிலிருந்தும், வாஷிங் மிஷின் மாடலிருந்தும் … படைப்பில் செலுத்தப்பட்டு இருக்கிற படைப்பாளியின் மாபெரும் கவனத்தை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
தொடர்ச்சியாக எளிய மக்களின் மேல் அதிகாரம் செலுத்தி வருகிற வன்முறையின் அரசியலை வடசென்னையும் உரக்கப் பேசுகிறது. அதேசமயம் அசலான மனிதர்கள் மனதில் இருக்கிற வன்மம் ,காதல் ,ஆசை, துரோகம், கோபம் என அனைத்து உணர்வுகளையும் காட்சி மொழியில் நம் கண் முன்னே நிழலாட வைத்திருப்பதில் வடசென்னை இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் இருந்து தனித்துவமாக திகழ்கிறது.

அடுத்தடுத்த பாகங்கள் வெளியான இரண்டு உலகப் புகழ்பெற்ற தொடர்ச்சி திரைப்படங்களைப் பற்றி இச்சமயத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
மரியோ பூசோ இயக்கிய தி காட் பாதர் என்கின்ற திரைப்படம் மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கிறது. புகழ்பெற்ற இயக்குனர் சத்யஜித்ரே யின் அபு டிரையாலஜி( Apu’s Trialogy பதேர் பாஞ்சாலி /அபு சன்சார்/ அபுராஜிதா)ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியை பற்றி பேசுகிற ஒரே கதை மூன்று திரைப்படங்களாக வெளிவந்திருக்கிறது.

அடுத்தடுத்த பாகங்களுக்கான தேவையை அக்கதைகள் கோருகின்றன. சங்கிலி தொடர்ச்சியான கண்ணிகள் கதையின் அனைத்து புள்ளிகளிலும் நிறைந்து தயாராக இருப்பது இதுபோன்ற திரைப்படங்களை மாபெரும் அனுபவங்களாக மாற்றுகின்றன

இந்நிலையில் வடசென்னை யும் ஒரு பகுதி மக்களின் வாழ்வியலை அன்பு என்கின்ற ஒரு தனிமனிதனின் வாழ்வினை அடிப்படை அலகாகக் கொண்டு நம் கண்முன்னால் ஆவணப்படுத்துகிறது. அடுத்த இரண்டு பாகங்களும் வர இருக்கின்ற நிலையில் முதல் பாகம் பல்வேறு கேள்விகளோடு தொடர காத்திருப்பது மிக கச்சிதம்.

கதை என்பது முடிவற்ற ஒரு பெரும் பயணம். எந்தப் புள்ளியிலும் ஒரு கதை தொடரவும் முடியும் சாத்தியங்களை கொண்டிருக்கும்போது அது பேரிலக்கியமாகிறது. ஒரு கதைக்கு முடிவே இல்லை என்கிறார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன். எப்போதும் ஒரு கதை முடிவடைவதில்லை. நாமாக ஒரு புள்ளியில் முடித்துக் கொள்கிறோம் அவ்வளவே. வடசென்னை யும் அவ்வாறாகவே புனையப்பட்டிருக்கிறது.

இது ஒரு Docuflim வகைமையை சார்ந்ததா என்று சிந்திக்கும் அளவிற்கு படம் முழுக்க ஒரு காலகட்டத்தின் வாழ்வியலை தரவுகளோடு தகவல்களோடு அச்சு அசலாக படைக்கப்பட்டிருப்பது நம்மை பிரமிக்க வைக்கிறது. எனக்குத் தெரிந்து எண்பதுகளில் வெளிவந்த திரைப்படங்கள் கூட இத்தனை Details களோடு வெளிவந்து அந்த காலகட்டத்தை மிக நெருக்கமாக நேர்த்தியாக பதிவு செய்து இருக்கின்றனவா என தெரியவில்லை.

இந்த திரைப்படத்தின் கதை சிக்கல்கள் நிறைந்த ஒரு நூல்கண்டு போல அவிழுந்துகொண்டே போவதில் திரைக்கதையில் கையாளப்படுகிற பல உத்திகள் அற்புதமாக வெளிப்பட்டிருக்கின்றன.

ஒரு கதையை இவ்வாறாகத்தான் சொல்ல வேண்டுமா… என்ற விமர்சனங்களுக்கு பிரபல இயக்குனர் தார்க்கோவ்ஸ்கி சொல்லிய கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது.

“இசை கேட்கையில் ,நாவல் வாசிக்கையில் அல்லது நாடகம் பார்க்கையில் புரிந்துகொள்ள இயலாத பகுதிகளை அடிக்கடி எதிர் கொள்கிறோம் . கலைப் படைப்பு குறித்த இயல்பான உறவு நிலை அது .ஆனால் திரைப்படம் என்று வருகையில் முழுமையான தெளிவும் முழுமையான புரிந்து கொள்ளலையும் கோருகின்றனர். கலையில் பேதப்படுத்தலுக்கு எதிரானவன் நான். தெளிவு மிக முக்கியமான ஒன்று இல்லை. கலைஞனால் படைக்கப்பட்டுள்ள உலகம், அவனைச் சூழ்ந்துள்ள உலகத்தை போலவே அவ்வளவு சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது. ”

(உலகசினிமா எஸ்ரா/ தமிழில் ஹரன்)

சமீபகால தமிழ் திரைப்படங்களான மேற்கு தொடர்ச்சி மலை பரியேறும் பெருமாள் வடசென்னை போன்றவை மிகப்பெரிய நம்பிக்கைகளை அளிக்கின்றன. ஒரு காலத்தில் கதை சொல்லலில் காட்சிப் படுத்துதலில் மலையாள சினிமாவிற்கு இருந்த அந்த காவியத் தன்மையை சமீபகால தமிழ் திரைப்படங்கள் மிஞ்சிக் கொண்டிருக்கின்றன என்பது பெருமிதமாக இருக்கிறது.

குறிப்பாக வடசென்னை தமிழ் நிலத்தில் இதுவரை கண்டுகொள்ளப்படாத மக்கள் வாழ்வியலை நெருக்கமாக காட்சிப்படுத்தி இருப்பதற்கு இயக்குனர் வெற்றிமாறனை நான் இறுகத் தழுவி கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்ட தகுந்தவர்கள். குறிப்பாக இசை, கலை, ஒளிப்பதிவு மூன்றும் ஒன்றையொன்று விஞ்ச போட்டி போட்டு இருப்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

இந்த திரைப்படம் ஒரு நிலத்தில் வாழ்கின்ற குறிப்பிட்ட மக்களை அவமானப்படுத்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அவர்கள் மேன்மையானவர்கள். அத்தனை வறுமையிலும் அறம் வாய்ந்தவர்கள். நன்றிக்காக சிறை செல்பவர்கள். தன்னைப்போல பிறர் ஆகிவிடக்கூடாது என்று எண்ணுபவர்கள் . அநீதி, ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுபவர்கள். தாய் நிலத்தை உயிரென விரும்புவர்கள்.

அதை பல்வேறு குறியீட்டு காட்சிகளின் மூலமாக இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அன்புவின் மனைவி பத்மா குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதாக இருக்கட்டும்.. நீ படித்தவன் நீ ஒதுங்கிப் போ என்று அன்பு நண்பனை எச்சரிக்கும் காட்சியாக இருக்கட்டும், மக்களின் உரிமைக்காக வழக்குப் போடும் அந்த இஸ்லாமிய நண்பனாக இருக்கட்டும், படம் முழுக்க நேர்மறை காட்சிகளின் மூலம் அந்த வடசென்னை நிலத்தை ,மக்களை காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றி மாறன்.

மொத்தத்தில் தமிழ் சினிமாவின் பொற்காலத்தை மேற்கு தொடர்ச்சி மலையும், பரியேறும் பெருமாளும் முன்மொழிந்தன என்றால் வடசென்னை வழி மொழிந்திருக்கிறது.

மணி செந்தில்.

185 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *