பிரிவொன்றின் வானம்
_________________________

உன்
மெளனப்பறவைக்கு
முன்னால்
என் பேரன்பின்
சொற்கள்
தானியங்களாய்
இறைந்து கிடந்தன.

நீயோ எதையும்
பொருட்படுத்தாது
பியோனோ
ஒவியத்தின்
உறைந்திருக்கும்
இசையானாய்..

நிராகரிப்பின்
சிறகுகளோடு
வலசை பயணப்பட
எத்தனிக்கும் உன்
பார்வை
ஏறக்குறைய கடலசைவில்
நின்றாடிய தனிமை
படகொன்றின் நிழலைப்
போர்த்தி இருந்தது.

ஏதேனும் ஒரு நொடி
உடைதலில்
ஏதேனும்
காரணங்கள் தட்டுப்படும்
என்கிற உனது
பரிதவிப்பை நான்
கண்ணாடி சன்னலுக்கு
வெளியே பெய்யும்
மழையை போல
அவதானித்திருந்தேன்.

நாமாகிப் போன
நம் குளத்தின்
அந்த அசைவற்ற
சலனத்தை கலைக்க
ஏதேனும் நினைவின்
கற்களை
வீசுவாய் என
நான் எதிர்பார்த்திருந்த
வேளையில்…

நீ மெளனமாக
தலை குனிந்தாய்..

நீ நிமிர்ந்த போது
உன் கண்கள்
கலங்கிருந்தன.

இனி ஒருபோதும்
உன்னை சந்தித்து
விடக்கூடாது என
அப்போதுதான்
முதன் முதலில்
நினைத்தேன்.