ஒரு கருவறையின் காத்திருப்பு..
—————————————————–

சமீபத்தில் இயக்குனர் கௌதமன் அவர்களின் தந்தையார் மறைவுக்கு திட்டக்குடிக்கு அண்ணன் சீமானோடு சென்றிருந்த போது அம்மாவை பார்த்தேன். இந்த முறை இன்னமும் தளர்ந்திருந்தார்.அண்ணனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் இறுக கைகளைப் பற்றிக் கொண்டார்.

கூட்டம் அதிகமாக இருந்தது நான் நகர்ந்து வந்து விட்டேன். சில நேரம் கழித்து வழக்கறிஞர் அங்கயற்கண்ணி எனது நண்பர் திருமலை அக்கா அமுதா நம்பி ஆகியோரோடு அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

என்னை பார்த்தவுடன் மீண்டும் வந்து என் கைகளை பற்றிக்கொண்டார். அவரது கண்களை நேரடியாக பார்ப்பது என்பது ஆறாத ரணம் ஒன்றை நேரடியாக காண்பது போன்றதான கொடுமை. அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஆழ்மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு. நாமெல்லாம் உண்டு களித்து உறங்கும் பொழுதுகளில் கூட வெறுமை வீடொன்றில் வாசலில் நிழலாடும் ஒரே ஒரு உருவத்திற்காக 28 வருடங்களாக அவர் காத்திருக்கிறார். அது ஒரு துயர்மிக்க நீண்ட காத்திருப்பு. பசுவதை குறித்து பாடம் எடுக்கும் இந்த நாட்டில் ஒரு தாய் 28 வருடங்களாக அனுபவித்து வரும் வதை குறித்து இந்த மானுடச் சமூகம் கண்டும் காணாமல் கடந்து போவது உலகின் மாபெரும் கொடுமை.

அந்த ஈர விழிகள் எப்போதும் உறங்கியதே இல்லை. வயதான அந்த தாய் தந்தையர் எழுதாத கடிதங்கள் இல்லை. போகாத போராட்டங்கள் இல்லை. கையில் ஒரு தட்டியோடு தமிழகத்தில் அவர்கள் நிற்காத வீதிகள் எங்கும் இல்லை.

இத்தனைக்கும் பிறகும் கூட உடல் நலிவுற்ற அவரும், அவரது கணவரும்.. தங்களைப் போலவே நீண்ட சிறை வாசத்தால் நோய்மையின் எல்லைகளை தொட்டு தவிக்கிற தங்கள் மகனை என்ன விலை கொடுத்தேனும் விடுதலை செய்யும் முயற்சியில் தளர்ந்தே இல்லை.

அவர்களுக்கென்று இந்த உலகில் எதிரிகள் யாரும் இல்லை. தங்கள் மகன் விடுதலைக்கு உயரும் ஒவ்வொரு கைகளும் அவர்களுக்கு உறவுகளே. தங்கள் மகன் விடுதலைக்கு உழைக்கும் ஒவ்வொரு முகத்திலும் அவர்கள் தங்கள் மகனை காணுகிறார்கள்.

வரப்போகின்ற ஒரு வசந்த நாளுக்காக.. 28 வருடங்களாக வாழ்க்கையை தொலைத்து விட்டு வாசலை நோக்கி அந்த ஈர விழிகள் காத்திருக்கின்றன. பிஞ்சுக் குழந்தை முதல் இளைஞனாக நின்ற பருவம் வரை அந்த வீட்டில் உலவிய அந்த வெண்ணிற கால்கள்.. மீண்டும் தங்கள் வீட்டு முற்றத்தில் தென்றலாக உலவாதா என்கின்ற உள்ளார்ந்த ஏக்கத்தில் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அந்த ஒரே ஒரு மகன் வெறும் மகன் அல்ல.. அவர்களது உலகம்.. அவர்களது வாழ்க்கை..

அவன் உண்மையிலேயே பேரறிவாளன்.மரண வலியிலும் மகிழம்பு புன்னகை களை உதிர்க்கும் பேரழகன்.

28 வருடங்களாக அந்த உலகம் அவர்களுக்கு தொலைந்து இருக்கிறது. நம்மைப் போல ஒரு நாளும் அவர்கள் இயல்பாக உண்டு உறங்கி மகிழ்ந்து வாழ்ந்ததில்லை.

செய்யாத குற்றத்திற்கு.. புரியாமல் அறியாமல் 28 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவிட்டனர் ஏழு தமிழர்கள். அவர்களைவிட இந்த 28 வருடங்களாக கொடும் தண்டனையை அவரது குடும்பத்தினர்கள் அனுபவித்து விட்டார்கள்.

இனிமேலும் அந்த தண்டனை நீடிப்பது எதனாலும் சகிக்க முடியாதது‌.

…….

அம்மா என் முன்னால் நின்று கொண்டு இருந்தார்கள்.”மணி செந்தில்.. இந்த முறையாவது உன் அண்ணன் வீட்டிற்கு வந்து விடுவானா.. ”

அந்தக் கேள்வியில் இருந்த வலிக்கு என்னிடம் மருந்து இல்லை. ஆனால் அந்தக் கேள்வியின் பதிலுக்கான வழி நம் ஒவ்வொருவரிடமிருக்கிறது.

தமிழர் ஒவ்வொருவரும் வீதிக்கு வர வேண்டும்.

7 தமிழர் விடுதலையை இந்த உலகமே தன் விழி உயர்த்தி கேட்கும் அளவிற்கு உரத்து கேட்க வேண்டும்.‌

இணையம் முழுக்க பரப்புவோம். இனி கரங்கள் இணைந்து இயங்குவோம்.

#28YearsEnoughGovernor