_—–+-++++++++++++++++++++++++++++

“இரவு ஒரு பசித்த ஓநாய்.
நாடோடி போகுமிடமெல்லாம் அது அவனை தொடர்கிறது.
பிசாசுகளுக்காக எல்லைகளைத் திறந்து விடுகிறது.
வில்லோ மரக்காடு இன்னும் காற்றைத் தழுவுகிறது

இருமுறை சாவதற்கு நாம் என்ன குற்றம் செய்தோம்?
வாழ்க்கையில் ஒருமுறை செய்தோம்.
சாவில் மறுமுறை செத்தோம்.”

மஹ்மூத் தர்வீஷ்
தமிழில் எம்.ஏ.நுஃமான்.
+———-

நீண்ட நேரமாக அந்த கதவுகளுக்கு முன்னால் நான் காத்திருக்கிறேன். வெளியே பரபரப்பான ஒரு உலகம். யாருக்கும் எதைப்பற்றியும் பேசிக் கொள்ளவோ பகிர்ந்து கொள்ளவோ எதுவும் இல்லை. சொல்லப்போனால் அந்த இடம் ஒரு தனித்த தீவாக வெளி உலக வெளிச்சங்களில் இருந்து அன்னியப்பட்ட ஒரு இடமாக காட்சியளித்தது.

சொல்லப்போனால் அது இருள் சூழ்ந்த ஒரு வனம். விடியல் எப்போதும் நிகழாத ஒரு நிலம். நிலவு ஒருபோதும் வராத பாலை. கொடும் அதிகாரத்திற்கு இரையாகிப் போன நடைபிணங்கள் வாழ்கிற மாபெரும் சுடுகாடு.

அந்த இருண்மை வெளியில் தான் ஒரு விடுதலைச் சூரியன் விலங்கு பூட்டப்பட்டு 28 வருடங்களாக அடைபட்டுக் கிடக்கிறது.

.

கதவு திறக்கிறது. சிகப்பு குறுக்கு பட்டை அணிந்த ஒரு காக்கிச்சட்டை அலுவலர் என்னை உள்ளே செல்லலாம் என அனுமதிக்கிறார். அதற்கு முன் எனக்கு பலமுறை சோதனைகள். நான் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே இருக்கிற சிறை அலுவலர் முன்னால் காத்திருக்க வைக்கப் படுகிறேன். நான் ஒவ்வொரு முறை சந்திக்கும்போது இப்படி இரண்டு மணி நேரங்கள் காத்திருப்பது என்பது ஒரு வழமையான ஒன்று தான்.ஆனாலும் அந்த இரண்டு மணி நேரம் என்பது எனக்கென்னவோ இரண்டு யுகங்களாக காட்சியளிக்கும். உண்மையில் காத்திருப்பு என்பது உலகின் ஆதி மனித துயர்களில் ஒன்று. பசிக்காக, மழைக்காக ,வெயிலுக்காக ,
எல்லாம் வல்ல இயற்கையின் கருணைக்காக, நீருக்காக, நிலத்திற்காக, கசிந்துருகும் காதலுக்காக என மனிதன் ஏதோ ஒன்றுக்காக எப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறான். அப்படித்தான் அந்த சிறைக்குள்ளும் சிலர் காத்துக் கொண்டே இருக்கிறார்கள் 28 வருடங்களாக.

வருடங்கள் என்பன நாட்கணக்கில் கணக்கிடப்படுவது அல்ல. 28 வருடங்களை தாண்டியும் மிக நீண்ட துயர் பொழுதுகளை அவர்கள் அனுபவித்து விட்டார்கள். அவர்கள் ஏறாத மன்றங்கள் இல்லை. எந்த மன்றத்திலும் அவர்களின் நீதி எடுபடவில்லை. அவர்களது எல்லாவித பிரார்த்தனைகளையும் கேட்ட எவருக்கும் செவிகள் இல்லை.
.

இவ்வாறாக என் சிந்தனை பல்வேறு புள்ளிகளில் பறந்து திரிய ‌.. திடீரென ஒரு சிறு சத்தம் கேட்டது. ஒரு வெடிச்சிரிப்பு .
தம்பி என்ற ஒரு குரல். அண்ணன் பயஸ் வந்து விட்டார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்ட ஏழு தமிழர்களில் அண்ணன்கள் பயஸ் மற்றும் பேரறிவாளனோடு மட்டும் எனக்கு கொஞ்சம் நெருக்கம் அதிகம்.
குறிப்பாக அண்ணன் பயசின் வாழ்க்கை வரலாற்று நூலான விடுதலைக்கு விலங்கு எழுதும் பொழுதுகளில் நான் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டிய தேவை அவரோடு என்னை மிக நெருங்க வைத்தது. அவர் ஒரு மிகச்சிறந்த ஓவியர். மிகுந்த நம்பிக்கையாளர். ஆனாலும் இந்த நீண்ட சிறைவாசம் அவரது நம்பிக்கைகளை தகர்க்கத் தொடங்கியதை நான் சமீபகாலமாக உணர்ந்து வருகிறேன்.
.
சிறை திரைப்படங்களில் நீங்கள் பார்ப்பது போல அல்ல. சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியாக கொல்லத் தொடங்கும். அதுவும் 28 வருடங்களாக விடுதலை எப்போது என்பதை அறியாத புதிர் வாழ்க்கையில் வாழ்கின்ற அவர்களுக்கு சிறை ஒரு மாபெரும் கொடுமை. வேளைக்கு வேளை அட்டவணை உணவு. சீருடை வாழ்க்கை. எந்த அறிவியல் முன்னேற்றத்தையும் இயல்பான வாழ்க்கையையும் உணரமுடியாத தனிமை தீவின் துயர்ப் பொழுதுகள், நீண்டகாலமாக சிறையிலிருந்து வருவதால் ஏற்படும் மனச்சோர்வினால் உண்டான உடலியல் சிக்கல் .. அவர்களது வாழ்க்கை யாராலும் வாழ முடியாத வாழக்கூடாத மாபெரும் சித்திரவதை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆரம்ப காலகட்டங்களில் சிபிஐ அலுவலகமான மல்லிகையில் வைத்து அதிகம் சித்திரவதை செய்யப்பட்ட நபர் ராபர்ட் பயஸ். தலைகீழாக தொங்க வைத்து அடிப்பது, இரண்டு கால்களையும் எவ்வளவு விரிக்க முடியுமோ விரித்து நேர்கோட்டில் வைத்து முதுகிலேயே லத்தியால் அடிப்பது, என அவர் பட்ட சித்திரவதைகளை கேட்கக்கூட நம்மால் முடியாது. அந்த சித்திரவதைகள் நாம் வாழ்கின்ற நாகரீகமான வாழ்க்கை என்கின்ற இலக்கணங்களை கேள்விக்குறியாக்கி விடுகிறவை.

ஆனால் இத்தனை துயரங்களையும் தாண்டி அண்ணன் ராபர்ட் பயஸ் நம்பிக்கையோடு பார்ப்பவர்களிடமெல்லாம் உற்சாகத்தோடு பேசியும் பழகி வருகிற ஒரு அற்புதன். நான் துவண்டு போன காலங்களிலெல்லாம் என் தோள்களில் கையைப் போட்டு இறுக்கிப் பிடித்து நம்பிக்கையை என்னுள் நங்கூரமாய் விதைத்த நாயகன்.

தம்பி இடும்பாவனம் கார்த்திக் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் இருந்தபோது அவரோடு பழகியதை நொடிக்கு நொடி கண்கலங்க விவரித்துக் கொண்டே இருக்கிறான். வேலூர் சிறையில் அண்ணன் சீமான் இந்த ஐந்து பேரோடு சிறையிலிருந்த பொழுதுகளை இன்னும் மறக்க முடியாமல் நெடுஞ்சாலை பயணங்களில் எங்களோடு பகிர்ந்து கொண்டே இருக்கிறார். விடுதலைக்கு விலங்கு எழுதிய காலங்களில் நான் பயஸ் அண்ணனின் வாழ்க்கையை உள்வாங்கிய பொழுதுகளை இன்னும் என்னால் கடக்க முடியாமல் கண்ணீரோடு காத்திருக்கிறேன்.

இப்படி பழகிய எவராலும் மறக்கமுடியாத கடக்க முடியாத பேரன்பின் அற்புதன் தான் பயஸ் அண்ணா.

பயஸ் அண்ணா நல்ல வாசிப்பாளர். சமீபத்தில்கூட சிறைக்குப் போன ஒரு தம்பியிடம் வேள்பாரி வாங்கச்சொல்லி என்னிடம் தகவல் சொல்ல அனுப்பியிருக்கிறார். கடந்த முறை நான் பார்த்தபோது அவருக்கு வரலாற்று புதினங்களாக தேர்வு செய்து எடுத்துக்கொண்டு அளித்தேன். அவர் எனக்கு ஈழத்து விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதை தொகுப்பு ஒன்றினை பரிசாக அளித்தார்.
.

அவரைப் போன்ற மனிதர்கள் சிறைக்குள் சித்திரவதை படுவதென்பது எதனாலும் சகித்துக்கொள்ள முடியாத வலி. எத்தனையோ நீதிமன்றங்களை கடந்து, இறுதியில் ஒரு ஆளுநரின் கையெழுத்திற்காக காத்து கிடப்பது என்பது இந்த 28 வருடங்களின் துயரங்களைத் ஆண்டிலும் மாபெரும் பெருந்துயர். 28 வருடங்களாக ஒரு முழு இரவில் மூடாத அவரது இமைகள் ஒரு விடுதலை நாளில் நிம்மதியான ஒரு உறக்கத்திற்காக மூட வேண்டும். அவருக்காக என்னைப் போன்ற தம்பிகளின் இல்லங்கள்.. அவரை பெரியப்பா என்று சொந்தம் கொண்டாட என் மகன்களை போன்ற பல உள்ளங்கள் காத்துக்கிடக்கின்றன.
.
இன்று அவருக்கு பிறந்தநாள்.
அவருக்கு வாழ்த்துச் சொல்லவோ மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளவோ நமக்கெல்லாம் எந்த தகுதியும் கிடையாது. சொல்லப்போனால் நாம் எல்லாம் பட்ட கடனை அந்த சில மனிதர்கள் கொடும் சிறைவாசத்தால் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
.
ஒவ்வொரு சந்திப்பிலும் விடைபெற்றுக் கொள்ளும் போது விடுதலைப் பற்றிய சில செய்திகளை அவருடன் பகிர்ந்து கொள்வேன். அவரும் நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்வார். ஆனால் சமீப சில நாட்களாக அந்த நம்பிக்கை அவரிடமிருந்து நகர்ந்துகொண்டே போவதென்பது எனக்கெல்லாம் மாபெரும் வலியாக இருக்கிறது.

கடைசியாகப் பார்த்த சந்திப்பிலும்.. அடுத்த முறை வெளியே சந்திப்போம் என நான் சொல்லிய போது சட்டென அந்தக் கண்கள் கலங்கியதை கண்டேன்.

என்னை இறுக்கி அணைத்து போய் வா தம்பி என்றார்.

நானும் கலங்கியவாறே வெளியேறிவிட்டேன்.
.
இந்த நொடி வரை அவரது நம்பிக்கையை துளித்துளியாய்
தகர்த்து கொண்டிருப்பதற்காக
கண் கலங்கி தலைகுனிந்து அவர் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். அந்தக் குற்ற உணர்வு தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் வேண்டும். அந்த குற்ற உணர்வுதான் அவனை போராடத் தூண்டும்.
.
எழுவர் விடுதலை இனத்தின் விடுதலை.
.
அண்ணன் பயஸ் அவர்களுக்கு.. நீங்கள் விடுதலையானப் பொழுதொன்றில் இந்தப் பதிவை உங்களிடம் நான் நேரடியாக படித்துக் காட்டுவேன்.
அடுத்த வருடம் உங்கள் பிறந்த நாளை உங்களோடு நாங்கள் சூழ நிகழ்த்திக் காட்டுவோம். விடுதலை கனவோடு நகரும் இறுதி பிறந்த நாளாக இந்நாள் அமையட்டும் அண்ணா. வாழ்த்துகள்.

கனவு மெய்ப்படும் விடுதலை நாளுக்காக காத்திருக்கும் உங்கள் தம்பி..

மணி செந்தில்.