யாருமே
அழைக்காமல்
அந்தப் பொல்லாத
இரவும்
துயர் காற்றின்
விரல் பிடித்து
அந்த வீட்டுக்குள்
நுழைந்தது.

அதுவரை
நிலா முற்றங்களில்
அன்பின் கதகதப்போடு
அந்த ஐவரும்
உறங்கிய இரவுகள்
முடிவுக்கு வந்தன.

அந்த வீட்டின்
ஒற்றை புன்னகையை
எங்கிருந்தோ வந்த
இருட்டின் கரங்கள்
இழுத்துச் சென்றன.

யார் யாரோ வந்தார்கள்.
ஏதேதோ சொன்னார்கள்.
காரணக் கதைகள்
ஆயிரம் சொன்னாலும்
மறைந்துபோன
புன்னகையை
அந்த வீட்டினில்
மலர வைக்க
யாராலும் முடியவில்லை.

அலைந்தலைந்து
பாதங்கள் சோர்ந்தன.
அழுது அழுது
கண்ணீரின் தடம்
கலையாமல்
கன்னங்கள்
தழும்புகள் ஆகின.

வாசல் பார்த்த விழிகள்
நிலைக்குத்தின.
அசையா அந்த
விழிகளின் நடுவே
ஒரு தலைமுறை
கடந்த துயரம்
உறைந்து கிடக்கிறது.

வீட்டிற்கு கதவுகள்
இருந்தன.
கொடும் மழை காற்றிலும்
அவை சாத்தப் படவே இல்லை.
மூடப்படாத கதவுகளுக்கு
வலது பக்க ஓரத்தில்
என்றும் வாடாத
செம்பருத்திப் பூ சூடிய
ஒரு அழைப்பு மணி இருந்தது.

அதைத் தாயன்பு என்றார்கள்.

அந்த வீட்டிற்கு
ஜன்னல்களும்
இருந்தன.
சாத்தப்படாத ஜன்னல்கள்
பெருமூச்சு இரவுகளில்
உயிர்க்காற்றின்
அலைச்சலால்
அடித்துக் கொண்டே
இருக்கின்றன.

எனவே அதை
காற்றின் வீடு
என்றார்கள்.

அந்த வீட்டையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்த
பித்தன் ஒருவன்
உக்கிரமாகி சொன்னான்..

அது காற்றின் வீடு
அல்ல..
காத்திருப்பின் கூடு
என.

அந்தப் பொல்லாத
இரவு
அதன்பிறகு
இன்னும்
விடியவே இல்லை.

மணி செந்தில்.