மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஜெயமோகனின் தோசை.

இலக்கியம்

பிரச்சனை என்னவென்றால்..

அந்தக் கதையை முழுதாகப் படித்து பாருங்கள். தினந்தோறும் இயல்பான வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டு பிரபல எழுத்தாளர் ஒருவர் தாக்கப்படுகிறார்.

இதில் மகிழவோ சிரிக்கவோ ஒன்றுமில்லை என்றாலும் கூட..

இதுதான் தமிழ் சமூக மனநிலையின் நிலை, தமிழ் சமூகமே சாடிஸ்ட்.. என்றெல்லாம் கொதிப்பதற்கும், குதிப்பதற்கும் இதில் ஒன்றுமில்லை.

ஆனால் சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கின்றன.

ஆசானுக்கும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் கூடி வாழும் சமூகத்தை கவனிக்க தவிர்த்துவிட்டு நீங்கள் மயிலாசனத்தில் சிம்மாசனம் சூடி அமர்ந்து இருந்தீர்களேயானால் நீங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும் அது பொது சமூகத்திற்கு தெரியாமல் விலக்கப்படுவீர்கள்.

நீங்களும் சாலைக்கு வர வேண்டும் ஆசானே… எவன் கூரை பற்றி எரிந்தால் என்ன.. இந்த நிலத்தில் மீத்தேனோ ஹைட்ரோ கார்பனோ எடுக்கப்பட்டால் என்ன.. நமக்குத் தொழில் எழுத்து. அந்த இருக்கையை விட்டு நான் எழ மாட்டேன் என்று இருந்தால்..நீங்கள் தாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போது.. உங்களுக்கு வேண்டியவர்களை தவிர உச்சுக் கொட்ட யாரும் இருக்க மாட்டார்கள்.

எழுத்தாளன் தனியானவன் அல்ல. இந்தப் பெரு உலகத்தின் அங்கம். மற்ற எல்லாரையும் விட இந்த சமூகத்தை சரியாக அவதானிப்பதற்கும் , தவறானவற்றை எதிர்த்து நிற்பதற்கு மான கூடுதல் பொறுப்பு நிலை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை எழுத்தாளர்கள் முதலில் நம்ப வேண்டும். நான் மகாபாரதம் எழுதுவேன். ஆனால் பக்கத்து தெருவில் நடக்கும் அநியாயத்தை எட்டி பார்க்கமாட்டேன் என்றால் சூழ்நிலை பிசகும் தருணமொன்றில் நம்மை எட்டிப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள் ‌.

தோசை காரனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வருகிறார்கள் என்றெல்லாம் ஆவேச படுகிறீர்கள். தன்னிடம் வருகின்ற எந்த மனிதனுக்கும் அவன் பாதிப்பிற்காக வழக்கறிஞர்கள் வரத்தான் செய்வார்கள். அது அவர்களது தொழில். அதே தோசை காரன் காயம்பட்டால் மருத்துவர்கள் மருத்துவம் செய்யத்தான் செய்வார்கள்.
அது அவர்களது பணி.
அவனுக்காக அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்று நீங்கள் பதறுவதில் எவ்வித நியாயமும் இல்லை ஆசானே…
அவரவர்களுக்கு வேண்டியவர்கள் அந்தந்த சமயங்களில் வரத்தான் செய்வார்கள்.

பாதிக்கப்பட்ட நேரத்தில் சொல்லிக் காட்டக் கூடாது தான்.. ஆனாலும் நீங்கள் பதறுவதால் சொல்ல வேண்டி இருக்கிறது.

நீங்கள் முன்வைக்கிற எதற்கும் மாற்றாக இருக்கிற எவரையும் உங்கள் வாழ் காலத்தில் நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கிறீர்கள். அவர்களை இழிவுபடுத்தி அவதூறு பேசி இருக்கிறீர்கள். தமிழர் மீது, தமிழ் நிலத்தின் மீது வேட்டையாடும் அனைத்து வல்லாதிக்க தேசியங்களின் மீதும் உங்களது கருணை உங்கள் எழுத்துக்கள் மூலம் சொட்டிக்கொண்டே இருக்கிறது. எதைப் பற்றியும் உங்களுக்கு கவலை இல்லை. ஒரு கௌரி லங்கேஷ் போலவோ, ஒரு கிரிஷ் கர்னாட் போலவோ உங்களை இருக்க சொல்லவில்லை. ஒரு சாதாரண மனிதனாக உங்களை சுற்றியுள்ளவற்றை உங்களது பெருமித முகமூடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்க்கச் சொல்கிறேன். அவ்வளவே.

எதையும் கவனிக்காமல் பார்க்காமல் தாங்கள் வந்தது தான் ஓவியம், சித்தரித்தது தான் எழுத்து என்று கிரீடம் சூட்டிக் கொண்டு இருந்தால்… நம் கருத்துகளுக்கு மாற்றாக எழுதும் எவனும் அயோக்கியனே என்று தனக்குத்தானே தராசு பூட்டி எடை பார்த்துக் கொண்டிருந்தால்… நாம் தனித்து தான் நிற்போம்.

எனவேதான் தோசை காரனுக்கு வருகின்ற நாலு பேர் கூட உங்களுக்கு வரவில்லை. உங்களை ஆதரித்து எழுதுகிற நண்பர்கள் கூட சென்ற காலங்களில் நீங்கள் எழுதியது குறித்து தாங்கள் பொருட்படுத்தவில்லை என்ற பெருந்தன்மை மனோபாவத்தை வெளிப்படுத்தவே ஆதரிக்கிறார்கள்.
அது போன்ற எழுத்துக்கள் ‘ஆயிரம் முரண்கள்’ இருந்தாலும் என்பது போன்ற பெருந்தன்மை பாவனைகள். அந்த அரிதார எழுத்துக்கள் சமூகத்தின் பொது வெளிப்பாடு அல்ல.

என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. எழுத்தாளர் என்பதாலோ தோசை மாவு விற்பவர் என்பதாலோ ‌ நடைபெற்று முடிந்த இருக்கின்ற சம்பவத்தின் மீதான கரிசனத்தை கோரி நிற்கக் கூடாது.

உண்மை விசாரணை நடைபெற்று தவறு செய்தவர் தண்டிக்கப்படட்டும்.

மற்றபடி ஆசான் ஜெயமோகன் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது ‌. அவர் யார் என்றே தெரியாமல் தோசை மாவு விற்பவர் அவரை அணுகியது என்பது பரவலாக்கப்படாத தமிழ் அறிவுலகம் (!) பற்றி சிந்திக்க வைப்பதால் அது கவலை அளிக்கிறது.

மணி செந்தில்.

105 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *