மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஒரு வரலாற்றின் கதை.. ——————————–

அரசியல்

 

அவன் முன்னால் கால்கடுக்க நின்றவாறு
அவனின் சொற்களுக்கு ஏற்றவாறு.. சிந்தித்தும் சிரித்தும் கோபப்பட்டும் கொந்தளித்தும் ஆர்ப்பரிக்கும் அந்த இளைஞர் கூட்டம் அரியணையில் அமர்ந்து அரசாண்ட ராஜவம்சத்தினர் அல்லர்.

மிக எளியவர்கள்.

அவர்களின் தந்தையர்
செய்திருந்த
வரலாற்றுப் பிழைகளுக்காக..
அவர்கள் அங்கே கூடியிருந்தார்கள்.

அவர்களின் தந்தையரும்
அவர்களைப் போலவே
எளியவர்கள்தாம்.

தவறான எஜமானர்கள் மீது
கொண்டிருந்த
அளவற்ற விசுவாசத்தால்
அவர்களுக்கு அவர்களாகவே
விதித்துக் கொண்ட
கொடும் விதியின் கரம் பற்றி
வாழ்ந்தவர்கள்.

ஒரு பொன்னான
ஐம்பது ஆண்டு காலத்தை
எங்கிருந்தோ வந்தவர்களின்
பளபளக்கும் சொல்லாட்சியிலும்
மினுமினுக்கும் வெள்ளைத் தோலிலும்
கவரப்பட்டு பறிகொடுத்தவர்கள்.

கரை படிந்த தங்களது வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல்..
கரைவேட்டி இடுப்பில் நின்றது குறித்து
கர்வப்பட்டவர்கள்.

வாழ்ந்து கெட்ட ஜமீன்தார்களாக
சாராயக் கடையில் சரிந்து கிடந்தவர்கள்.

….

அவர்களின் மகன்கள் தான் அவன் முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அவன் பேசிக் கொண்டிருக்கிறான்.

வியர்வை படிந்த அவனது முதுகுப்புற சட்டை அவ்வப்போது அங்கே உலவிக் கொண்டிருந்த கோப பெருமூச்சுகளால்
உலர்ந்துக் கொண்டிருந்தது.

அவன் இம்மண்ணின் நிறத்தவன்.

விரல்களை இறுக்கி மூடி.. உயரும் அவரது கரங்களில்.. காலங்காலமாய் அழித்தொழிக்கப்பட்ட அவனது முன்னோர்களின் கனவுகள்
நட்சத்திரங்களாய் மின்னின..

இதுவரை அடுக்குமொழி ஆடம்பர வார்த்தைகளாலும்.. வரலாற்றை தன் திசைக்கு ஏற்றவாறு மாற்றி எழுதிய விரல்களாலும் அலுத்துப் போயிருந்த
ஒரு தலைமுறை..
வாழ நேர்ந்திட்ட அவல வாழ்வின் சினமேறிய அவனது சொற்களால் சிலிர்த்துப்போனது.

காற்றின் ரதமேறி கம்பீரமாய் மிதந்து வந்த அவனது சொற்களின் கருப்பை சுமந்த வெப்பத்தால்
அங்கே கூடியிருந்தவர்களின்
ஆன்மா தகிக்கத் தொடங்கியது.

முதலில் இது உணர்ச்சிகளின் கூடாரம் என உதாசீனப்படுத்தியவர்கள் பிறகு அஞ்சத் தொடங்கினார்கள்.

அவதூற்று ஆயுதங்கள் கொண்டு நிமிரத் தொடங்கிய பூர்வக்குடிகளின் தலைகளை தடுக்கப்பார்த்தார்கள்.

எகத்தாளமாக எழுதிப் பார்த்தார்கள். வார்த்தை வளைவுகளால் கலையா அவன் மன உறுதியை கலைக்கப் பார்த்தார்கள்.

மொத்தத்தில்..சலிப்பும் சங்கடமும் நிரம்பிய தங்கள் இரு கரங்களால்.. ஒரு வானத்தை மறைக்கப் பார்த்தார்கள்.

ஆனாலும்..
சினம் மறந்த இனத்தின் ஆதித் திமிர் பிடித்து பிறந்த அந்த அசுரர் குலத்து
மகன் இறுதியில் எழுதத் தொடங்கினான்.

முடிவில்..
ஒரு வரலாறு இவ்வாறாகத்தான்
பிறந்தது.

மணி செந்தில்.

ஒவ்வொரு வாரமும் குமுதம் ரிப்போர்ட்டரில் அண்ணன் சீமான் எழுதும் அரசியல் தொடர்
அடங்காப் பெருநெருப்பு.

வாசிக்கத் தவறாதீர்கள்.

275 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *