சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது எனது மிக நெருங்கிய நண்பரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அலைபேசியில் திடீரென அழைத்தார். சுரேஷ் காமாட்சியின் அழைப்பு எப்போதும் முக்கிய செய்திகளை உள்ளடக்கியதாக தான் இருக்கும். நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருப்பார். அரசியலும் சினிமாவும் என அவரோடு பேச பல செய்திகள் இருக்கின்றன. தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் தான் பிறந்த இனத்திற்கான அரசியலோடு இணைத்தே செய்வதில் அவர் தனித்துவமானவர். இப்போதும் ஒரு முக்கியமான காரணத்திற்காக தான் அழைத்திருந்தார்.

தல ஓய்வாய் இருக்கீங்களா எனக் கேட்டார். சொல்லுங்க தல வரேன்.என்றேன். அவர் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 11 அன்று வெளிவர இருக்கின்ற மிக மிக அவசரம் என்ற திரைப்படத்தை தனிப்பட்ட திரையிடலில் காண என்னை அழைத்தார்.

மிக மிக அவசரம் ஒரு வித்தியாசமான கதை. அது திரைக்கதை வடிவத்தில் இருக்கும்போதே நான் வரிக்குவரி படித்திருக்கிறேன். அப்போதே நண்பர் சுரேஷ் காமாட்சியிடம் இந்தத் திரைக்கதை கொடுக்கும் அதே உணர்ச்சியை நீங்கள் திரையில் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால்… ஒரு மிகச்சிறந்த படைப்பை தமிழ் திரை உலகிற்கு வழங்கிய பெருமை உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லி இருந்தேன். திரைக்கதையாக நான் அறிந்திருந்த ஒரு கதையை திரைப்படமாக காண இருக்கிற ஆர்வம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

இதுவரை தமிழ் திரை உலகில் பேசப்படாத ஒரு விஷயத்தை நண்பர் சுரேஷ் காமாட்சி இத்திரைப்படம் மூலம் பேச முனைந்திருப்பதன் மூலம் தான் எவ்வளவு துணிச்சலானவர் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பை அந்தக்கதை அவருக்கு வழங்கியிருந்தது.

காவல்துறை பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் மலையாள படமான மம்முட்டி நடித்த உண்டா குறித்து கூட நான் விரிவாக ஒரு பதிவிட்டிருந்தேன். மிகை சித்தரிப்புகளும், கதாநாயக பாவனைகளும் மிகுந்திருக்கும் காவல்துறை பற்றிய பல படங்கள் எனக்கு மிகுந்த சலிப்பை ஏற்கனவே ஏற்படுத்தியிருந்தன. காவல் துறையில் பணியாற்றுபவர்களை சூப்பர் மேனாக காட்டியதில் தமிழ் திரை உலகை அடித்துக்கொள்வதில் எவ்வுலகிலும் ஆளில்லை. காவல் துறையில் பணியாற்றுபவர்களும் நம்மைப் போன்ற சாதாரண எளிய மனிதர்கள் தானே என்கிற எண்ணத்தை தமிழ் திரை உலகின் பல இயக்குனர்கள் அழித்து முடித்து விட்டார்கள். ஆனால் சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம் காவல்துறை மீது நாம் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகளை மாற்றிப் போடுகிறது. அவ்வகையில் இது மிக முக்கியமான திரைப்படம் ‌.

இது ஒரு பெண் கான்ஸ்டபிளின் உயிர் வாதையை பற்றி பேசுகிற ஒரு மனிதநேய படைப்பு. பணியிடங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகும் பெண்களைப் பற்றிய திரைப்படங்களில் மிகமிக அவசரத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

நாம் நினைப்பது போல பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. ஒரு ஆணாய் இருந்துகொண்டு பெண்களின் சிரமங்களைப் புரிந்து கொள்ள ஆணுக்குள்ளும் ஒரு தாய்மை தேவைப்படுகிறது. பெண்களிடமிருந்து உழைப்பு, அன்பு, காதல், கருணை, உடல் என அனைத்தையும் சுரண்டிக் கொள்கிற ஒரு மோசமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் அவர்களுக்காக வாழ்ந்ததை விட நமக்காக, இந்த சமூகத்திற்காக.. வாழ்ந்தது மிக அதிகம். பெண் உடல் மீது பல்வேறு வன்முறைகளை ஆணாதிக்க சமூகம் பிரயோகித்துக்கொண்டே இருக்கிறது. அது குடும்ப அமைப்புகளாக இருக்கட்டும் அல்லது பணியிடம், கல்வி பயில சென்ற இடங்கள் ஆகியவைகளாக இருக்கட்டும்.. பெண்கள் மீதான ஆணாதிக்கம் எண்ணங்களாக, சொற்களாக, செயல்களாக, அசைவுகளாக, எழுத்துக்களாக, வெளிப்பாடுகளாக நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

நாம் நினைத்தால் வன்முறையை பயன்படுத்துவதற்கு.. சுரண்டுவதற்கு.. பயன்படுத்திக் கொள்வதற்கு மிக அருகிலேயே வாய்த்து விட்ட ஜீவன்களாக
பெண்கள் மாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக இவற்றை அணுகவேண்டும் என்பது உறுதியாகிறது.

ஒரு பெண்ணை அடிமைப்படுத்த குடும்பம், சமூகம், சாதி, மதம் என பல காரணிகள் திட்டமிட்டு இங்கே கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் தொடர்ந்து வருகிற வர்ணாசிரம அடுக்குகள் பெண்களை திட்டமிட்டு வீழ்த்தி வைத்திருக்கின்றன.

அதே போல வர்ணாசிரம அடுக்குகளை போன்றே காவல்துறையின் அதிகாரம் சார்ந்த அடுக்குகள் கொடூரமானவை. உயர் அதிகாரி நினைத்தால் தனக்கு கீழுள்ளவரை எப்படியும் வதை செய்யலாம் என்கின்ற உச்ச அதிகாரம் காவல்துறையில் மிகுதி ‌‌. அப்படி ஒரு வதைக்கு உள்ளான ஒரு பெண்ணின் சில மணி நேர வாழ்க்கை பயணம்தான் மிக மிக அவசரம்.

படம் தொடங்கிய முதல் எடுத்த எடுப்பிலேயே உச்ச வேகத்தில் கதை பயணிக்கத் தொடங்கியது. திரைக்கதையில் நான் கண்ட அதே வேகம் திரைப்படத்திலும் மிளிர்ந்தது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். படத்தின் நாயகியாக நடித்திருக்கிற அந்த இளம்பெண் மிக அற்புதமான பங்களிப்பினை செய்திருக்கிறார். அதேபோல படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நாம் ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்த பிரபலமான நடிகர்கள் தான். அண்ணன் சீமான் அவர்களுக்கு கதையின் முடிவினை தீர்மானிக்கிற முக்கிய கதாபாத்திரம். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனது உயிர் நண்பர் வெற்றிக்குமரன் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நாம் தமிழராய் கை உயர்த்தி போகிறார்.

இத்திரைப்படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கதையைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. திரையரங்கம் சென்று பாருங்கள். குறிப்பாக குடும்பத்தோடு தாய் ,சகோதரி, மனைவி என அவரவரும் குடும்பத்தில் இருக்கின்ற பெண்களோடு இத்திரைப்படத்தை காணுங்கள்.

திரைப்படத்தின் முடிவில் அவர்களது கண்களை கவனியுங்கள். உங்களது விழிகளையும் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு சேர கலங்கி இருக்கின்ற அந்த விழிகள் தான் நண்பர் சுரேஷ் காமாட்சி அடைய இருக்கிற மகத்தான வெற்றி.