இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் லூமியர் சகோதரர்களால் கண்டறியப்பட்ட திரைப்படம் என்கின்ற அறிவியல் கண்டுபிடிப்பு வெகுவிரைவிலேயே தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது. 1931ல் தமிழில் முதல் பேசும் திரைப் படமான காளிதாஸ் வெளியானது. ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் திரை உலகத்திற்கும் , தமிழ் இலக்கிய உலகிற்கும் மிக நெருங்கிய தொடர்பு தொடக்க காலத்திலிருந்தே உண்டு. ஆனந்த விகடனின் ஆசிரியரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான எஸ் எஸ் வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற நாவல் 1936இல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அனேகமாக முதன்முதலாக ஒரு நாவல் திரைப்படமாக தயாரிக்கப்பட்ட வரலாறு சதி லீலாவதியில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம்.

அதன் பிறகு தமிழிலக்கிய எழுத்தாளர்களின் பல்வேறு கதைகள் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய திகம்பர சாமியார், கும்பகோணம் வக்கீல், உள்ளிட்ட கதைகளும், வை மு கோதைநாயகி அம்மாள் எழுதிய தியாகக் கொடி ,அனாதைப் பெண் உள்ளிட்ட கதைகளும் தொடக்க காலத்தில் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன ‌.

1952இல் ஆனந்த விகடனில் லட்சுமி என்ற புனை பெயரில் டாக்டர் திரிபுரசுந்தரி எழுதிய காஞ்சனையின் கனவு என்கின்ற தொடர்கதை காஞ்சனா என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதை லட்சுமி எழுதிய இருவர் உள்ளம், பெண்மனம் ஆகிய கதைகளும் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

1960 இல் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதிய பாவை விளக்கு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அகிலன் எழுதிய மற்றொரு நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரில் உச்ச நடிகர் எம் ஜி ஆர் நடித்து திரைப்படம் வெளிவந்தது.

திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட தொடங்கியவுடன் திரைப்படத் துறைக்கான முக்கிய கச்சாப் பொருளான கதைக்கான அவசியம் அதிகரித்தது. தமிழில் சிறுகதை வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய புதுமைப்பித்தன் திரைப்படத் துறையில் பணியாற்றி இருக்கிறார். 1946 வெளிவந்த அவ்வையார் திரைப்படத்திற்கு புதுமைப்பித்தன் வசனம் எழுதியுள்ளார். ராஜமுக்தி என்ற திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதும் காலத்தில்தான் புதுமைப்பித்தன் காச நோய் முற்றி இறந்து விடுகிறார். ராஜாஜி எழுதிய திக்கற்ற பார்வதி என்கின்ற கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி அடைந்தது. கல்கி எழுதிய பார்த்திபன் கனவு தியாகபூமி கள்வனின் காதலி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் ராவ்பகதூர் சிங்காரம், விளையாட்டுப்பிள்ளை, என தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் பலரின் கதைகளும் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

திராவிட இயக்க வளர்ச்சி தமிழ் திரைப்பட உலகத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகும். திராவிட இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவர்களான அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோர் தனது எழுத்துக்கள் மூலமாக திரைப்படத்துறையில் ஆதிக்கம் செலுத்தி அதன் மூலமாக அரசியல் செல்வாக்கையும் வளர்த்துக் கொண்டார்கள். அறிஞர் அண்ணா எழுதிய ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி ,வண்டிக்காரன் மகன், நல்லவன் வாழ்வான் உள்ளிட்ட பல கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்பட்டன. அதேபோல கலைஞர் கருணாநிதி எழுதிய வெள்ளிக்கிழமை, அணையா விளக்கு, பொன்னர் சங்கர் உள்ளிட்ட கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

எழுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட இடதுசாரிகளின் எழுச்சி திரைப்படத் துறையையும் விட்டுவைக்கவில்லை. பொதுவுடமை சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டு எழுதி வந்த ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), , சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), உன்னைப்போல் ஒருவன்(1965), யாருக்காக அழுதான்(1966) போன்ற நாவல்கள் திரைப்படங்கள் ஆயின.
புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலை இயக்குனர் மகேந்திரன் உதிரிப்பூக்கள் என்ற புகழ்பெற்ற திரைப்படமாக உருவாக்கினார். அதே மகேந்திரன் தான் பொன்னீலன் எழுதிய கதையை பூட்டாத பூட்டுக்கள் என்ற திரைப்படமாக உருவாக்கினார். எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நண்டு என்ற கதையும் இயக்குனர் மகேந்திரனால் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. மேலும் சிவசங்கரி எழுதிய 47 நாட்கள், ஒரு மனிதனின் கதை, தியாகு உள்ளிட்ட பல கதைகள் திரைப்படங்களாகின. நீல பத்மநாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விக்ரம்,ஒரே ரத்தம் (நாடோடித்தென்றல்), பிரியா, பிரிவோம் சந்திப்போம், இது எப்படி இருக்கு போன்ற பல கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

மிகச்சிறந்த தமிழின் நவீன இலக்கிய உலகின் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளையும் வசனங்களையும் மூலமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ச தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய்.. என்ற கதையை மூலமாக வைத்து வசந்தபாலன் வெயில் என்ற திரைப்படத்தையும்.. ச.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் என்ற நாவலில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து
அரவான் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாகும் உருவாகும் போதாமைகள் மிக அதிகம்.எழுத்து மொழி வடிவத்திலான இலக்கிய வகைமையை காட்சி மொழியில் பொருத்தும் போது நிகழும் அபாயங்கள் மிக அதிகம். அசுரனின் திரைக்கதை அந்த சவாலை மிக எளிதாக எதிர்கொள்கிறது.

தமிழ் இலக்கிய உலகில் எளிய மனிதர்களின் வாதைகளை, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் அபூர்வ தருணங்களை தன் எழுத்து மூலமாக 50 வருட காலமாக தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்து வருகிற மிக முக்கியமான எழுத்தாளர் பூமணி அவர்கள்.

அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் தான் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக வெளிவந்திருக்கிறது.

நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த சுமார் 160 பக்கங்களுக்கு மிகாத ஒரு குறுநாவலை திரைப்படமாக உருவாக்க முனைந்த இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கு உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து தான் ஆகவேண்டும்.

நூல்வடிவில் வெளிவந்த வெக்கை என்கின்ற குறு நாவலின் கதை மிக எளிமையானது. ஊர் பெரிய மனிதனான வடக்கூரானுக்கு அந்த எளிய குடும்பம் வைத்திருக்கிற துண்டு நிலம் சிமெண்ட் பேக்டரி கட்டுவதற்காக தேவைப்படுகிறது. வடக்கூரானின் வயலுக்கு மிக அருகே இருக்கிற சிறு துண்டு நிலத்தை கொடுக்க மறுக்கிற ஏழை சிவசாமி யின் குடும்பத்தின் மூத்த வாரிசை கொடூரமாக கொலைசெய்து அந்த சிறு குடும்பத்தின் எளிய வாழ்வை அழித்து முடிக்கிறது வடக்கூரானின் பண்ணையார்த் தனத்தின் பேராசை. குடும்பத்தின் மையப்புள்ளியாக இருந்த வனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த குடும்பம் தவிக்கிறது. நிம்மதியற்ற இரவுகள். உறக்கமற்ற பொழுதுகள். இரவு பகலாக பகைமை ஒரு ஆழ்ந்த பசியாக அந்த குடும்பத்தை வருத்துகிறது. அனைவரும் ஒரு தருணத்திற்காக காத்திருக்க.. அந்த சிறிய இளைஞன் முந்திக்கொண்டு தன் அண்ணனின் உயிர் பறித்த வடக்கூரானை கொலைசெய்து பழி தீர்க்கிறான்.

வழக்கமாக பூமணி நாவல்களில் காணப்படும் அதே உணர்ச்சிப் படிமங்கள் இந்த நாவலிலும் நாம் காணலாம். நெல்லை வட்டார வழக்குகள் மிகுந்திருக்கும் பூமணியின் எழுத்துக்கள் சமூக உணர்ச்சி கொண்டவை.

வெக்கை நாவலை பொறுத்தவரையில் ஆழ் நெஞ்சுக்குள் அறுக்கும் பகைமை எப்படி பழித் தீர்த்து பசியாற்றி கொள்கிறது என்பதைதான் பூமணி மிக நுட்பமாக எழுதி இருப்பார்.

எழுத்து வடிவில் வாசிப்பு அனுபவத்தில் நாம் கண்டடைந்து வியந்த பூமணியின் நுட்பத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக திரையில் பார்த்த போதும் கண்டடைந்தது தான் இப்படத்திற்கான வெற்றி.

நாவலை அப்படியே கதையாக்காமல் தந்தை கதாபாத்திரத்திற்கு கீழ்வெண்மணி மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டங்கள் ஆகிய சம்பவங்களை முன்வைத்து ஒரு பின்கதை வைத்திருப்பதும், எண்பதுகளில் நடைபெறுகிற கதையில் தென்படுகிற சாதிப் படிநிலையின் நுண்ணரசியல் காட்சிகள் அசுரன் திரைப்படத்தை அரசியல் அசுரனாக காட்டுகிறது.

இத் திரைப்படத்தின் முத்தாய்ப்பு அதன் இறுதி காட்சி. பகைமை. அதைத்தொடர்ந்த இருபக்கமும் நிகழ்ந்த கொலைகள் என தொடர்கின்ற போது.. ஒரே மொழி பேசுறோம்.. ஒரே நிலத்தில் வாழ்கிறோம்.. இனியும் இது தொடரக்கூடாது என இன ஓர்மை பேசுகிற அந்த இறுதிக் காட்சி தான் வெற்றிமாறன் அசுரன் திரைப்படம் மூலம் நிகழ்த்த விரும்பும் அரசியல்.

எப்போதும் சாதி நிலை முரண்களை குறித்த திரைப்படங்களில் இறுதியாக சொல்லப்பட்டிருக்கும் அதே செய்திதான் இத்திரைப்படத்திலும்அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தந்தை சிவசாமி மகன் சிதம்பரத்திடம் எதையும் பறித்துக் கொள்வார்கள். ஆனால் படித்த படிப்பை மட்டும் பறித்துக் கொள்ள முடியாது. எனவே நன்கு படி என்று கூறுவது இத்திரைப்படம் வலியுறுத்த விரும்பும் செய்தியாக இருந்தாலும்.. கல்வி‌ பயிலும் இடங்களிலும், கல்வி கற்ற பின் வேலை பார்க்கும் இடங்களிலும் காட்டப்படும் சாதிய ஏற்றத்தாழ்வு பார்வை இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் நம் முகத்தில் அறையும் உண்மை.

ஒரு எளிய குடும்பத்தை தாங்குகின்ற தந்தை எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பான் என்பதை நுட்பமாக அசுரன் விவரிக்கிறது. தனது இளைய மகன் அடிபட்டு விழும் போதெல்லாம் தாக்கவரும் கழுகுவிடமிருந்து தனது குஞ்சினை காப்பாற்ற போர்க்குணம் கொண்டு போராடும் தாய்க்கோழி போல உக்கிர பார்வையோடு தனுஷ் தோன்றும் போதெல்லாம்.. திரையரங்கம் அதிர்கிறது ‌.

வரலாற்றுத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியலை தாழ்த்தப்பட்டவர்களே தான் முன்னெடுக்க வேண்டும் எனவும்.. அவர்களின் கலையை, இலக்கியத்தை, திரைப்படத்தை அவர்கள்தான் சரியாக, நேர்மையாக இருக்க முடியும் எனவும் இருந்த அனைத்து சமன்பாடுகளையும் வெற்றிமாறன் தனது உச்சபட்ச கலை வெளிபாட்டால் கலைத்துப் போட்டு இருக்கிறார்.‌ சாதி ஏற்றத்தாழ்வு பார்த்து செருப்பு போடக்கூடாது என்றவனை செருப்பாலயே அடித்து கட்டிப் போடுகிற அந்த கம்பீரக் காட்சி சாதிக்கு எதிராக வெற்றிமாறன் உபயோகப்படுத்தி இருக்கிற மாபெரும் ஆயுதம். ஒரு தந்தையின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படமொன்றில் சாதி உணர்வுக்கான சாட்டையடி காட்சிகளை வெறும் பிரச்சாரமாக துருத்தாமல் பொருத்தமாக பொறுத்தி இருப்பதுதான் வெற்றிமாறனின் சாதனை.

தனுஷ் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் , சிவசாமியின் மகனாக நடித்து இருக்கிற அந்த இரண்டு இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வாழ்நாள் சாதனையாக அமைய எடுக்கிற ஒரு திரைப்படத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கின்ற உள்ளார்ந்த வேட்கையில் அவர்கள் நடித்திருப்பது நமக்குப் புரிகிறது.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக எடுக்கப்படும்போது பிழைகள் நேருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்கு மிகச்சரியான உதாரணம் தி ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல். வாசிக்கும்போது மாபெரும் வாசிப்பனுபவத்தை தருகிற அந்த நாவல் ஞான.ராஜசேகரன் இயக்கி திரைப்படமாக காணும்போது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இத்தனைக்கும் இளையராஜா அந்த திரைப்படத்தில் மிக அற்புதமான இசையை வழங்கியிருந்தார்.அதே போல எழுத்தாளர் காந்தர்வன் எழுதிய சாசனம் கதை இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் அரவிந்த்சாமி ,கவுதமி ரஞ்சிதா நடித்து திரைப்படமாக வெளியான போது எழுத்து வடிவம் கொடுத்த நிறைவை தரவில்லை.

அதுபோன்ற பிழைகள், விடுதல்கள் எதுவும் அசுரனுக்கு நேரவில்லை. கதை நடக்கும் களத்தையும், காலகட்டத்தையும் மிக கவனமாக சித்தரித்த விதம் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயனாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற தனுஷ் சிறுசிறு முகபாவங்களில் கூட கவனம் செலுத்தி திரைப்படத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இசை ஜீ.வி பிரகாஷ். இதுபோன்ற ஒரு காலகட்டத்தை விவரிக்கின்ற திரைப்படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிக சவாலான ஒன்று. அந்த சவாலை மிக அற்புதமாக கையாண்டிருக்கிற ஜீ.வி பிரகாஷுக்கு இத்திரைப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஒரு பூச்செண்டு.

இயக்குனர் வெற்றிமாறனின் நிரந்தர ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என்று வலுவான அணியினர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி மாபெரும் அசுரத்தனம் காட்டியிருக்கிறார்கள்.

ஊருக்குள் ஆயிரத்தெட்டு சாதிகள்.. தலைமுழுக ஒரே ஆறு.. என்பதான அண்ணன் அறிவுமதியின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
அதைத்தான் தனது அசுரன் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக வெற்றிமாறன் வெற்றிகரமாக கூறியுள்ளார்.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக மாறுவதோடு மட்டுமில்லாமல் ஒரு திரைப்படம் ஒரு இலக்கிய வடிவமாக மாற முயன்று இருப்பதுதான் அசுரன் நிகழ்த்தி இருக்கிற பாய்ச்சல்..