வாழ்வின் மீதான சுவை மிக விசித்திரமானது. வாழ்வின் எந்த ஒரு கணத்திலும் அதன் சுவை தீர்ந்து போகலாம். சலிப்புற்ற அந்த கணத்தில் எதற்காக பிறந்தோம்‌ எதற்காக வாழ்ந்தோம் என்றெல்லாம் உள்ளுக்குள் கேள்விகள் எழலாம்.

பல தருணங்களில் நான் அவ்வாறு தான் உழன்று இருக்கிறேன். உறக்கமற்ற இரவுகளில் ஏதேனும் ஆழ்மனதில் நாம் எப்போதோ பெற்றுக்கொண்ட ஒரு முள் மெல்ல அசைந்து கீறத் தொடங்க.. கொடும் நரகம் என இரவுகள் நீளும். ஏன் இந்த கொடும் வாழ்க்கை.. என்ற கேள்வி எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா.. என்ற சங்கடம் உள்ளுக்குள் சலித்து எடுக்கும்.

அப்படித்தான் கடந்த காலத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியோடு நகர்ந்த பொழுதொன்றில் சென்னை மத்திய சிறையில் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களை சந்தித்தேன்‌. அவரை அதற்கு முன் பல முறை நான் சந்தித்து இருந்தாலும் அந்த சந்திப்பு சற்றே விசித்திரமானது. அந்த சந்திப்பிற்கு முன்னால் வாழ்வு குறித்த சில கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும், என் பிரச்சினைகளுக்கான தீர்வினை அவர் மூலமாக அடைய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

பல விஷயங்களை அவரிடம் பேசிவிட்டு உங்களிடம் எனக்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது அண்ணா என்று சொன்னேன். ஆள் மிகவும் மெலிந்து விட்டு இருக்கிறீர்கள்‌.. என்ன பிரச்சனை என்று கேட்டார். அவரிடம் அந்த நொடியில் அனைத்தையும் கொட்டி விட வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் வாழ்கிற அந்த கொடும் நெருக்கடி மிகுந்த துயர வாழ்விற்கும் முன்னால் அபத்தமும் பலவீனமும் நிறைந்த எனது துயரங்களை எப்படி கொட்டுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

உண்மையில் வாழ்வு என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதன் அர்த்தம் புரியவில்லை. எதற்காக வாழ்கிறேன் என்று கூட எனக்கு தெரியவில்லை ..உண்மையில் இந்த வாழ்வில் நான் அடைந்தது என்ன அண்ணா என்று கேட்டேன்.
அவர் என்னை சற்று உற்றுப் பார்த்தார். பிறகு அவருக்கே உரிய அந்த ஈழத்துத் தமிழில் ‌.. நாம் நினைப்பது போல் எல்லாம் அமைவதற்கு வாழ்வென்பது நாம் வரையும் ஓவியம் அல்ல. பல சமயங்களில் ஓவியம் கூட நாம் நினைப்பது போல வருவதில்லை. அமைந்ததை அமைதியாக எதிர்கொண்டு விடு. எல்லாம் சரியாகி விடும் என்றார்.

அண்ணன் ராபர்ட் பயஸ் மிகச்சிறந்த ஓவியர். விடுதலைக்கு விலங்கு நூலை எழுதியதற்காக அவர் கையால் வரைந்த புகழ்பெற்ற ஓவியம் ஒன்றை எனக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். இந்த பதிலைக் கூட ஓவியக் கோடுகளை முன்வைத்தே விவரித்து விட முயன்றார்.

இதை கவனித்துக் கொண்டிருந்த அருகிலிருந்த அண்ணன் பேரறிவாளன் “ஏமாற்றங்களை எதிர்கொண்டு பழகிக் கொள்ளுதல் என்பது ஒரு கலை. எனது தந்தையார் சிறுவயதிலிருந்து ஏமாற்றங்களை பழகிக்கொள்ள சொல்லுவார். அனைவரும் வெற்றி பெற்றால் வெற்றி என்ற ஒன்றே கிடையாது. எனவே ஏமாற்றங்களை பழகிக்கொள். ஏற்றுக்கொள். சரியாகிவிடும்” என்றார்.

அந்த அண்ணன்களின் முகத்தை நான் பார்த்தேன். எப்படிப்பட்டவர்கள் இவர்கள்… வாழ்வதற்கான எல்லா தகுதியும் இவர்களுக்கு இருந்தும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டவர்கள். நான்கு காம்பவுண்ட் சுவருக்குள் 28 வருடங்களாக ஒரு உலகை அமைத்துக்கொண்டு இரவும் பகலும் பேதம் அறியாத விசித்திரமான கால ஓட்டத்தில் தன்னை கரைத்து கொண்டிருப்பவர்கள். இப்போது கதவு திறக்கும்.., அப்போது கதவு திறக்கும் ..என்றெல்லாம் எதிர்பார்ப்பில் கசிந்து ஒழுகும் ஒவ்வொரு நொடிகளையும் கணக்கெடுத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் ‌.

ஒவ்வொரு முறையும் அவர்களை சந்திக்கும் போதும் சந்திப்பு நேரம் முடியும் அந்த கணத்தில் ஏதோ ஒரு சிறைத் துறை அலுவலர் வந்து சந்திப்பு நேரம் முடிந்துவிட்டதாக சாடை காட்டிவிட்டு செல்வார். அந்த கணத்தில் அண்ணன்களுக்கு முகம் இறுகும் துயரத்தை நானெல்லாம் கண்ணீர் மல்க அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். இறுகி அணைத்து விட்டு விடை பெற்று வரும்போது திரும்பி பார்க்கையில் அந்த கம்பிகளுக்கு பின்னால் அண்ணன்கள் நின்று கொண்டே இருப்பார்கள். அதை பார்க்கும்போது சட்டென நமது ஆன்மா உடைந்துவிடும்.

குறிப்பாக பயஸ் அண்ணன். விடைபெறும்போது இறுகி அணைக்கையில் நம் நெஞ்சம் விம்முவதை அவரே அறிந்து கொள்வார் ‌. கைகளை இறுக்க கோர்த்துக் கொள்வார். சரி போய் வா தம்பி. துணிவாய் இரு என்பார். ஈழத்தவர்கள் அப்படித்தான். எப்படிப்பட்ட துயர சூழ்நிலையிலும் கலங்காத மனம் தளராது இறுகிப் போய் இருப்பார்கள். நீண்டகால யுத்தம் சார்ந்த வாழ்க்கை அவர்களுக்கு அது போன்ற உளவியலை பரிசாக அளித்து இருக்கும்போல.

அன்றும் அப்படித்தான். எனக்குள் ஏற்பட்டிருந்த குழப்பங்களை பயஸ் அண்ணன் மூலம் தீர்த்துக்கொள்ள நான் சென்றிருந்தபோது.. அவர்கள் வாழ்க்கையை உணர்ந்து நான் எதுவும் கொட்ட முடியாமல் அமைதியாக திரும்ப தயாரானேன்.

அண்ணன் பயஸை நான் வழக்கம்போல விடைபெறுதலுக்காக இறுக்கி அணைக்க.. அண்ணன் ஒரு நிமிடம் என்னை விலக்கி.. என்னை நினைத்துக்கொள். எல்லா துயரமும் உன்னை விட்டு ஓடிவிடும் என்றார்.

நான் உடைந்து விட்டேன். சே.. எப்படிப்பட்ட வலிமிகுந்த வார்த்தைகள் அவை. அவர் அடைந்த துயரங்களுக்கு நாம் அடைந்த தெல்லாம் துயரம் என்ற சொல்லுக்குள் கூட வராதே என்று நினைத்துக்கொண்டேன்.

இப்போதும்கூட எனக்கு எப்போதெல்லாம் நெருக்கடிகள் வருகின்றனவோ அப்போதெல்லாம் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களைத்தான் நினைத்துக்கொள்கிறேன். அவரது வாழ்க்கை கதையான விடுதலைக்கு விலங்கு எழுதும்போது பல பக்கங்கள் அவரே எழுதிய குறிப்புகளை கொடுத்தார். அதில் அவர் அடிக்கடி குறிப்பிட்டிருப்பது.. தன் ஊருக்குத்தான் திரும்பவேண்டும் என்கின்ற விருப்பம். பலவிதமான சொற்களில் அதே விருப்பத்தை வெவ்வேறு விதமாக அவர் குறிப்பிட்டிருப்பார்.

ஊருக்கு திரும்பணும் தம்பி. என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டபோது.. திரும்பிப் போய் என்னவெல்லாம் செய்வீர்கள் என்று நான் கேட்டேன். அப்போது அவர் பேச்சு மொழியில் என்னிடம் விவரித்த உணர்ச்சிகள் தான்..
அனைவரும் குறிப்பிடும் விடுதலைக்கு விலங்கு நூலில் என்னால் எழுதப்பட்ட அந்தப் பத்தி.

“உங்களிடம் பகிர்ந்து கொள்ள
எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
ஒரு நாள் என் தாய் நிலத்திற்கு
நான் திரும்புவேன்..”

சமீபத்தில் அவரை சந்தித்தபோது இந்தக் குறிப்பிட்ட பத்திப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
எப்போதெல்லாம் ராபர்ட் பயஸ் என்ற பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் மணிசெந்தில் என்கின்ற என்னுடைய பெயரும் உச்சரிக்கப்படும் என்று அப்போது சொன்னேன்.

அவர் தலையசைத்து சிரித்துக்கொண்டார்.

முன்னொரு பொழுதில் அவரிடம் வாழ்வின் அர்த்தம் பற்றி எல்லாம் கேட்டது நினைவுக்கு வந்தது.

ஒருவேளை என் வாழ்வின் அர்த்தம் இதுவாகத்தான் இருக்குமோ..??