மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து மனித மனங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
ஏனெனில் வாழ்வதற்கான வேட்கையை உற்பத்தி செய்கிற மாபெரும் மூலதனமாக மனிதனின் மனமே திகழ்கிறது.மனிதமனம் கொண்டிருக்கும் அன்பு, வெறுப்பு, புரிதல், காதல், காமம் என பல்வேறு வகை உணர்ச்சிகள்தான் உலக வரலாற்றை உருவாக்குகிற சக்திகளாக தேடுகின்றன. ஒருவர் கொண்டிருக்கிற உளவியல் அமைப்பே அவர் எவ்வாறு உலகத்தை அணுகுகிறார் என்பதற்கான வழியாகவும், அவருக்கான உலகத்தை அவர் எவ்வாறு உருவாக்குகிறார் என்பதற்கான காரணமாகவும் விளங்குகின்றன.சமூக வாழ்க்கைக்கு ஆட்பட்டு இருக்கிற மனிதனின் உளவியல் ஏதோ ஒரு காரணத்தினால் உந்தப்படும் போது அல்லது இடறப்படும் போது அந்த நொடியில் துளிர்க்கிற உணர்ச்சி குவியல் அவனது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. Powers of subconscious mind – ஆழ்மனதின் அற்புத சக்திகள் (தமிழில் நாகலட்சுமி சண்முகம் மஞ்சுள் வெளியீடு) என்கிற ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை நான் படித்திருக்கிறேன். ஏறக்குறைய பைரன் எழுதிய தி சீக்ரெட் என்கிற நூலுக்கு இணையான புகழ்பெற்ற நூல் தான் அது. அதில் சொல்லப்படுபவர்களை பார்த்தால் உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கும். சிலவற்றை பரிசோதித்து கூட பார்த்திருக்கிறேன். மனம்போல வலிமை வாய்ந்தது எதுவுமில்லை என்பதையும் அதில் ஏற்படுகிற ஒவ்வொரு பாதிப்பும் தான் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கிற வழிகள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

உலகத்தையே வெல்லத்துடித்த அலெக்ஸாண்டரின் போர் வெறிக்கு என்ன காரணம் என அவரது ஆசிரியரும் அவரது தத்துவ ஆசிரியர் சாக்ரடீஸின் மாணவருமாகிய அரிஸ்டாட்டிலிடம் கேட்ட போது அவர் மிக எளிமையாக சொன்னார். சிறுவயதில் அவனது பெற்றோர்களிடமிருந்து அவனுக்கு கிடைத்த புறக்கணிப்பு. அதுவே அவனுக்கு ஆழமான காயமாக மாறிப்போய் இன்று உலகத்தை வெல்ல துடிக்கிற உந்துதலாக திகழ்கிறது என்றார் அவர்.எல்லா மனிதனுக்கும் ஆழமான காயங்கள் இருக்கிறது. சிலருக்கு வெளியே தெரிகிறது. பலருக்கு வெளியே தெரிவதில்லை. அவமானங்களும் புறக்கணிப்பும் இல்லாத மனித வாழ்க்கை ஏதுமில்லை.

எஸ் ராமகிருஷ்ணனின் துணையெழுத்தில் ஒரு வரியை நான் அடிக்கடி நினைவுகூர்ந்து கொள்வேன். நாம் ஒவ்வொரு முறை அவமானப்படும் போதும் நம் உடலில் ஏதேனும் ஒரு தழும்பு ஏற்படும் என்ன வைத்துக்கொண்டால்.. நம் உடல் முழுக்க அம்மைத் தழும்புகள் போல நிறைய காயங்கள் நிறைந்திருக்கும் தானே என்கின்ற அந்த வரி என்னுள் எப்போதும் ஒரு முள் போல உறுத்திக்கொண்டே இருக்கும். இந்திய பெருநிலத்தின் மிகப்பெரிய கதையாடல் களஞ்சியமான மகாபாரதத்தில் ஒரு காட்சி வருகிறது. திரௌபதி சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிற துரியோதனன் அந்த மாளிகையின் எழிலை பார்த்து வியந்தவாறு சற்று தடுமாறி கீழே விழுந்து விடுகிறான். அதை மாளிகையின் உப்பரிகையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திரௌபதி உன் தந்தையை போல உனக்கும் கண் தெரியவில்லையா என சொல்லி சிரித்து விடுகிறாள். அந்த சொல் அவனுக்குள் ஆறாக் காயமாக உறுத்திக்கொண்டே இருக்கிறது. எப்போதும் உறுத்துகிற அந்தக் காயத்திலிருந்து அவமானத்தின் குருதி வழிந்து கொண்டே இருக்கிறது. அதுதான் மகாபாரதம் என்கின்ற இதிகாசம் உருவாவதற்கான மூலப் புள்ளியாக திகழ்ந்தது.

திரவுபதியின் சிரிப்பு துரியோதனனின் ஈகோவை தீண்டியதன் விளைவு ஒரு இதிகாசமே பிறந்தது. எனக்கு மிகவும் வேண்டிய நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது மனைவியை எப்போதும் அவர்கள் இவர்கள் என மிகுந்த மரியாதையோடு அழைப்பார். எனக்கு மிகுந்த ஆச்சரியம். மனைவியை வாடி போடி என்றும் வா போ என்றும் ஒருமையில் அழைப்பவர்களைதான் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இவர் இவ்வளவு மரியாதையாக அழைக்கிறாரே என்று வியந்தவாறே அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டேன்.அவர் மிகவும் தன்மையான ஒரு குரலில் ஒரு முறை எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பெரும் பிரச்சனை ஏற்பட்டபோது என் மனைவி மரியாதை குறைவாக என்னை ஒருமையில் அழைத்து ஏச… அதற்கு எதிர்வினையாக அதன் பிறகு அவரை நான் மிகுந்த மரியாதையுடன் அழைக்க தொடங்கினேன் என்றார்.என்னை ஒருமையில் அழைக்கும் தகுதி வந்ததாக அவர் நினைத்து விட்டபிறகு நாம் அதை மதிக்க வேண்டியது தானே என்று கேட்ட அவரை நான் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன். ஒரு சிறிய அவமதிப்பு வாழ்க்கை முழுக்க தொடர்கிற ஒரு கரும் நிழலாக மாறிப்போனது உண்மையில் அபூர்வம் தான்.

பெரியாருக்கும் அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும், என பல அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில முரண் சம்பவங்கள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றையே மாற்றி எழுதி இருக்கின்றன என்பதை நாம் கண்டிருக்கிறோம்.வாழ்வில் ஏற்படும் ஒரு சிறு சம்பவம் ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடுகிற தீவிரம் கொண்டதாக சிலநேரங்களில் அமைந்து விடுகிறது.
தென்னாபிரிக்காவில் காந்தி அந்த தொடர்வண்டிப் பயணத்தில் ஒருவேளை கௌரவமாக நடத்தப்பட்டு இருந்தால் அவர் இந்தியாவின் தேசப்பிதா வாக ஆகி இருப்பாரா என்பது கேள்விக்குறி.அதுபோன்ற ஒரு சிந்தனையை சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படமும் எனக்குள் ஏற்படுத்தியது.
எப்போதும் இயல்பான மனித வாழ்க்கையை மிக நெருக்கமான வடிவத்தில் எளிமையான மொழியில் வலிமையாக சொல்லிவிடுகிற ஒரு ஊடகமாக மலையாளிகள் திரைப்படங்களை கையாளுகிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஐயப்பனும் கோஷியும் என்கிற மலையாள திரைப்படம். இந்த திரைப்படம் குறித்து எனது மைத்துனர் பாக்கியராசன் அவர்கள் நீண்ட நேரம் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

கொரனா கொடுத்த ஆகப்பெரும் தனிமை பொழுது ஒன்றில் அமேசான் மூலம் இத்திரைப்படத்தைப் பார்க்க தொடங்கினேன்.படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை நம்மை நகரவே செய்யக்கூடாது என்கிற திட்டமிட்ட திரைக்கதை வரைவு நம்மை மிரட்டி போடுகிறது. சச்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரித்திவிராஜ் பிஜீமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை மிக மிக எளிமையானது. ஒரு முன்னாள் ராணுவ வீரனின் பயணத்தில்
எதிர்பாராத விதமாக மோத வேண்டிய நிலைக்கு உள்ளாகுகிற உள்ளூர் Sub-inspector க்கும், அந்த மோதலை மாபெரும் அவமான குறைவாக எடுத்துக் கொண்டு மோதுகிற அந்த முன்னாள் ராணுவ வீரனுக்கும் இடையிலான மோதல்களே இத்திரைப்படம். ஒரு அடர்ந்த வனத்திற்குள் ஒரு மகிழுந்து நுழைகிற அந்த முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒரு நொடியும் கூட தவற விடக்கூடாத காட்சி அமைப்பு தான் இந்தத் திரைப்படத்தின் ஆகப் பெரும் பலம்.

குறிப்பாக அந்த ஓட்டுனர் கதாபாத்திரத்தில் வரும் அந்த பெரியவரும், காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் அந்த இளம் பெண்ணும், மாவோயிஸ்ட் இயக்கத்தில் தொடர்புடையதாக பேசப்படும் பிஜுமேனன் மனைவியாக நடிக்கிற அந்த கதாபாத்திரமும் மறக்க முடியாதவை.
இடுப்பில் குழந்தையோடு அந்த பிஜுமேனன் மனைவியாக மாவோயிஸ்ட் தொடர்புடையதாக காட்டப்படும் அந்த ஆதிவாசி பெண்ணாக நடிக்கின்ற அந்த பெண் கைது செய்யப்படும்போது நடக்கின்ற அந்த கம்பீர நடை இந்த சமூகம் கட்டமைத்து இருக்கிற எல்லா வித அதிகார உச்சங்களுக்கும் சவால் விடக்கூடிய பேரழகு கொண்டது. அதிகாரம் என்பது எப்படி நுட்பமான வேர்களைக் கொண்டு எளிய மனிதர்களை வதைக்கிறது என்பதையும் , ஒரு எளிய மனிதனின் ஆவேசம் எப்பேர்பட்ட அதிகார உச்சத்தையும் அசைத்து போடுகிற வலிமை கொண்டது என்பதையும் ஒரே திரைப்படத்தில் கூர்மையான இரு முனைகளாக கொண்டு திரைமொழி பின்னப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மகத்தானதாக மாற்றுகிறது. பிரித்விராஜ் சுகுமாரன் மிகத் திறமையான ஒரு நடிகர். தமிழில் பல திரைப்படங்களில் அவரை மிகக்கேவலமாக பயன்படுத்தி இருப்பார்கள். தமிழில் மிக சுமாரான கதாபாத்திரங்களில் நடிக்க துணிந்தது அவர் வாழ்வில் அவருக்கு அவரே செய்துகொண்ட கேடு என்றே கருதுகிறேன். அவர் பார்வதியோடு நடித்த “எண்ணு நின்டே மொய்தீன்” எனக்கு மிகவும் பிடித்த ஒரு மாபெரும் காதல் காவியம். அதேபோல அவர் நடித்த”செல்லுலாய்டு” மிக முக்கியமான ஒரு திரைப்படம். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அவர் இயக்கிய “லூசிஃபர்’ படத்தை பார்த்தபோது கூட எனக்கு சற்று ஏமாற்றம் தான். ஆனால் “ஐயப்பனும் கோஷியும்” திரைப்படத்தில் ஹவில்தார் என்கின்ற ஒரு முன்னாள் ராணுவ வீரனாக , ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தின் வாரிசாக மிகச்சிறப்பான நடிப்பினை அவர் வழங்கியிருக்கிறார். பிரித்திவிராஜின் கண்கள் மிகுந்த ஆழம் கொண்டவை. ஒவ்வொரு முறையும் குளோசப் காட்சிகளில் அந்தக் கண்கள் காட்டும் வித்தைகள் நம்மை மிரட்டுகின்றன. அவருக்கு நேரெதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிஜு மேனனும் சளைத்தவரல்ல. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு மகத்தான திரை அனுபவத்தை நமக்கு வழங்குகிறார்கள். குறிப்பாக பிஜீ மேனனின் அந்த இறுகிய முகம் அவர் வைக்கிற கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

இதேபோல்தான் பிரித்திவிராஜ் கோபப்படும் இடங்களில் கோபப்பட்டு, அவமானப்படும் இடங்களில் அதை சகிக்க முடியாமல் குறுகி… வாழ்க்கையை நினைத்து வருந்தும் இடங்களில் வருந்தி, என நுட்பமான உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தி நம்மை அசத்திப் போடுகிறார்.
படத்தின் ஒளிப்பதிவும், இசையும் நமக்கு காட்சி அனுபவத்தை பரவசமாக்குகின்ற ஆகப் பெரும் துணைகளாக விளங்குகின்றனவிளங்குகின்றன. குறிப்பாக படத்தின் இடையிடையே வருகிற அந்த ஆதிவாசி பாடல் நம் உள் மனதை ஏதோ செய்கிறது.நல்ல திரைப்படத்தின் கதையை ஒரு விமர்சனத்தின் மூலமாக சொல்லிவிட்டுப் போவது அந்த படைப்பாளிகளுக்கு செய்கிற நேர்மை குறைவாக நான் கருதுகிறேன். தேடிப்பிடித்து பார்க்க வேண்டிய படங்கள் என்கிற பட்டியலில் “ஐயப்பனும் கோஷியும்” என்கிற இந்தப் படத்திற்கும் அவசியம் ஒரு இடம் உண்டு. தனிமைப்பட்டு கிடக்கிற இந்த காலகட்டத்தில் இதுபோன்ற அனுபவங்கள் தான் நம்மை உயிர்ப்பாக வைத்திருக்கின்றன.

அவசியம் பாருங்கள்.