18300938_294063457685196_4340868929837052457_n

அவரை நான் முதன் முதலில் சந்தித்தப் போது வெக்கை நிறைந்த பாலையின் நடுவே நின்ற கள்ளிப் போல கடுகடுவென முள்ளாய் தெரிந்தார்.
அடுக்கடுக்காய் தெறித்து விழுந்த வார்த்தைகள், வேகமான நடை, உணர்ச்சிப் பிரவாகமான மொழி என எல்லாமே சற்றே தூக்கலாக தெரிந்ததால் நான் கொஞ்சம் அசெளகரியமாகதான் உணர்ந்தேன்.

மின்னல் தெறித்து விழுந்த ஒரு நொடியில் அவர் என்னைக் கவனித்து விட்டார். அய்யாவின் மகனா…என்ற கணத்தில் தம்பி என தாவி அணைத்தார். சட்டென அக்கைகளுக்குள் சிக்கிக்கொண்ட நான் அதன் பிறகு மீளவே இல்லை.

பல பொழுதுகள்..நிறைய சொற்கள்…அனுபவங்கள்…பயணங்கள் என லயிப்பு நிரம்பிய மதுக்கோப்பையாய் அவர் எனக்குள் இறங்கிக் கொண்டே இருந்தார். சின்னஞ்சிறு சொற்களிலும், சில வரி பத்திகளிலும் விவரிக்க முடியா வாஞ்சை மிக்க உறவு வெளியொன்றில் இருவருமே அகப்பட்டு போனோம். சில சிக்கலான பொழுதுகளில் மென்மையாய் நல்ல மாற்றங்களை என்னுள் ஏற்படுத்தி அமைதியாய் என்னை கவனித்தார். மேடைகளில் ஏற்றினார். நிறைய பேச வைத்தார். அதற்காக என்னை தயாரித்தார்.

மாணவர்கள் மத்தியில் அவர் ஒரு கதாநாயகன். பேரை சொன்னால் போதும் …கைத்தட்டல்கள் வானைப்பிளக்கிற அளவிற்கு ஒலிக்க வைக்கத்தெரிந்த இதயம் கவர்ந்த வசீகரன். அண்ணன் சீமானை அச்சு அசலாக நகலெடுக்க தெரிந்த அழகன்.

அவரிடம் என்ன தான் நான் பேசவில்லை…அம்பேத்கரியம், பெளத்தம், இஸ்லாம், இளையராஜா, சூஃபி ஞானம்,மெளனராகம் கார்த்திக் ,என விரிந்துக் கொண்டே போகிற விசித்திர விண்ணகம் அவர்.

என் மகிழுந்து கல்லூரிக்குள் நுழையும் போதெல்லாம் அதன் கதவை திறந்து விடும் அவரின் எளிமை பொங்கும் அன்பை கணிக்கத்தவறிய தம்பி ஒருவன் சொன்னான்..

”என்ன அண்ணே… இவர் தான் 8 கல்லூரி உரிமையாளரா…. அப்படி நடந்துக்க மாட்டறாரே…”

இல்லடா இவர் அதுக்கும் மேலானவர் என்றேன் .

எப்படி..

அங்கே பயிலுகிற… பணிபுரிகிற… அவருடன் பழகுகிற.. நாம் தமிழராய் அவருடன் பயணிக்கிற பல்லாயிரம் இதயங்களின் உரிமையாளர்.

அதனால் தான் அவர் அப்படி இருக்கிறார் என..

ஒவ்வொரு முறையும் அவர் தோள் பிடித்துதான் நான் படியேறுகிறேன். அவரும் சொல்கிறார். இதை சீக்கிரம் சரி செய்யணும் டா…உனக்கு டீரிட்மெண்ட் எடுத்து காலிபர் போட்டு நடக்க வைக்கிறது என் வேலைடா …என கம்மிய குரலில் சொல்லும் அவரது கவலை எனக்கு புரிகிறது.

எனக்கென்னவோ அதெல்லாம் வேண்டாம் எனத் தோன்றுகிறது.

உங்கள் தோள் பிடித்து நடக்க …நான் இப்படியே இருந்து விடுகிறேனே..அண்ணா..

ஆகச்சிறந்த அன்பானவனுக்கு…
அண்ணன் ஹீமாயூனுக்கு…

அன்பு நிறைந்த முத்தங்களுடன்..இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

https://www.youtube.com/watch?v=Wh_v9SZSTJA

 —