18891713_305469093211299_1564591392787481116_o
நுரை ததும்பும்
அந்த ஒற்றைக்
கோப்பையின்
விளிம்பில்…

ஆலகாலமாய்
பூத்திருந்த
நஞ்சைக் கண்டு
சற்றே
சிரித்துக் கொண்டது..

சாத்தான்.

இதோ
வாழ்வெனும் அமிர்தம்.

காதலாகி
கசிந்துருகி..
மேனி துயர் கண்டு
மெலிந்து புண்பட..
ரணம் கண்டு
வதை பட்டு
சுகம் காண
வாழ்ந்து விட்டுப் போ
என்ற அலட்சியத்
தொனியில்
அறிவித்தவாறே..
பீடியை பற்ற
வைத்து இழுத்தான்
சாத்தான்.

புகைச் சுருள்
மேல் எழ
யாரோ ஒருவளின்
கூந்தல் நினைவு
எனக்கு வந்தது.

நட்சத்திரங்களில்
வசித்திருக்கிறாயா..
இல்லையெனில்
ஒரு இதயத்தை
வென்றெடு.

தோள்களில்
வானவில்
பூத்திருக்கிறதா…
இல்லையெனில்
சிறகடிக்கும்
விழிகளை தேடி
கண்டடை.

அதற்கு
இந்த அமிர்தத்தை
பருகு என்று பரவசம்
காட்டிய சாத்தானில்
கண்களில் பொய்யில்லை..

நடுங்கிய
கரத்தோடு
கோப்பையை
தழுவச் சென்ற
என் கரங்களை
கடவுள் சற்றே
பிடித்து இழுத்தார்.

வேண்டாம்..
இது உனக்கு பொருந்தாது..

கொந்தளிக்கும்
அலைகடலை
ஒரு கோப்பைக்குள்
அடக்கி வைத்து
அமிர்தம் என்கிறான்.

ஏமாறாதே..

எச்சரித்தார் இறைவன்.

இறைவனின் நிழலோடு
கரைந்து நழுவத்தொடங்கினேன்..

விசுவாசம் ஏற்ற
இறைவன் திரும்பி
நடக்க தொடங்கினார்.

சட்டென திரும்பி
ஒரே மடக்கில்
விழுங்கினேன்
கோப்பையில்
குடி இருந்ததை..

வாழ்வின்
வசீகரம்
சிறகுகளாய்
முளைத்த
தோள்களோடு..

பின் தொடர்ந்த
என்னில்
ஏற்கனவே அருந்தி
விட்டிருந்த நஞ்சு
மெல்லிய புன்னகையாய்
அதரத்தில் அமர்ந்திருந்தது..

காலியாய் இருந்த
கோப்பையை
உருட்டி விளையாடத்
தொடங்கி இருந்தான்
சாத்தான்..

இம்முறையும் ஏமாற்றப்பட்டான்
என விசனப்பட்டார் இறைவன்..

இனிமேல் தான் வாழப் போகிறான்
என குதூகலித்தான் சாத்தான்.