27657324_394780410946833_983619852173550470_n

வருஷம் 16 திரைப்படத்தில்..முதல் காட்சி. கார்த்திக் சிறைக்கு சென்று 16 வருடங்கள் கழித்து திரும்பி வருவார். அந்த 16 வருடத்தில்..அவர் குடும்பத்தில் இருந்த பலரும் இறந்து படமாக உறைந்து இருப்பார்கள். காலச் சக்கரத்தின் இரக்கமற்ற வேகத்தில் கூழாங்கற்களாய் மானுட வாழ்வு சிக்கி மண்ணோடு மண்ணாய் மக்குகின்ற உண்மையை தான்..அந்த செல்லூயிட் காவியமும் விவரிக்க முயலும். அப்படி தான் என் குடும்பமும் சிறுக சிறுக வருஷம் 16 காட்சியை பிரதிபலிக்கிறதோ என்கிற துயர் மிக்க பிரமையோடு இந்த தனிமை இரவு நகர்கிறது.

எங்களில் ஒருவனாய் பிறந்து வாழ்ந்து வந்த என் அண்ணன்களில் ஒருவனான அறிவும் இந்நொடியில் வெறும் சாம்பலாய் இந்நேரம் மிஞ்சியிருப்பான். எங்கள் தலைமுறையின் முதல் மரணம் இது. எங்கள் மீதும் மரணத்தின் நிழல் படிய தொடங்கி விட்டது என்பதைதான் அறிவு நினைவூட்டுகிறான். மரணத்தின் ருசி என்ன என்பதை புரியத் தொடங்கி இருப்பதை அறிவின் மரணம் மெளனமாக அறிவிக்கிறது.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்த நாங்கள் இறுகிப் பிணைக்கப்பட்ட சங்கிலிகளோடு கொண்ட பால்யத்தைக் கொண்டிருந்தோம். மறைந்த எம் ஆத்தா (தந்தையின் தாய்) அந்த அரூவ சங்கிலியின் அறுபடாத கண்ணியாக திகழ்ந்தார். எம் தந்தையர் பாகுபடற்ற பேரன் பின் பெருமழையில் எங்களை நனைத்த வண்ணம் இருந்தனர். எனக்கெல்லாம் என் தந்தை யாரென்று பிரத்யோக அறிந்துக்கொள்ளவே பல வருடங்கள் ஆனது நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் சுயநலமும்..‌பொறாமையும் உடை என அணிந்திருக்கும் இவ்வுலகு எங்களையும் நோயென பாதிக்க தொடங்கிய காலத்தில் ..என் ஆத்தா இறந்து போனார். தனித்தனியாக அறுத்தெறியப்பட்ட சரமாய் கால ஓட்டத்தில் நாங்கள் தனியரானோம். இருந்தும் எங்களுக்குள் சுரந்த வண்ணம் இருந்த அன்பின் கதகதப்பினை மறக்க முடியாமல் தவித்தோம். அவரவருக்கென தனித்த வாழ்வு,குடும்பம்..அதை சார்ந்த நலன்கள் என ஓட தொடங்கும் போது சுயநலச் சாத்தானின் கைகளுக்குள்ளாக நாங்களாகவே சிக்குண்டோம்.ஒட்டுமொத்த குடும்பத்தின் நலன்.. மகிழ்ச்சி என்பதை மறந்து தனி வாழ்விற்கான விழுமியங்களை தேட தொடங்கிய போது கசப்பின் சாயை எம்முள்ளும் படியத் தொடங்கியது.

அது ஒருவகையான விசித்திர விளையாட்டு. தோற்போம் என்று தெரிந்தே விளையாடும் அந்த பகடை ஆட்டத்தில் பலி கொடுக்க அவரவருக்கென அடுத்தவரின் கனவு தேவைப்பட்டது. நாம் வாழ்கிறோம் என்பதை மறந்து நான் வாழ வேண்டும் என நினைக்கத் தொடங்கும் நொடியில் அவரவருக்கென நியாயங்களும்..தர்க்கங்களும் உருவாக்கப்பட்டன. வேட்டைக் காடென எம் வாழ்வை நாங்களே மாற்றிக்கொண்ட பொல்லாங்கை எதனாலும் அடக்க முடியவில்லை.

அறிவு உழைத்தான்‌. எம் குடும்பத்தை நிமிர்த்த கனவு கண்டான். வீடு கட்டினான்.கடையை உருவாக்கினான். பிறகு அவனே தனித்துப் போனான். வேக வேகமாய் பிரிந்துப் போனான். நாங்களும் பிரிந்தோம். வேகவேகமாக ஏதேதோ தொழில் நடத்தி போராடினான். விரைவாக வாழ்வினை வாழ விரும்பிய அறிவின் வாழ்வும் எதிர் பாராமல் விரைவாகவே முடிந்தது. இன்று பிணமாய் படுத்திருந்த அறிவு புன்னகையை சதா சுமக்கும் மனதையும்..முகத்தினையும் கொண்ட வசீகரன். விளையாட்டு வீரன். ஆனாலும் ..அவனுக்கென அவனே உருவாக்கிக்கொண்ட உலகில் அந்த வசீகரத்தை தொலைத்து மெளனப் போர்வையில் புதைந்தான். ஊரெல்லாம் அயலாரை ஏற்றி பாதுகாப்பாக சுற்றி வந்த அறிவு உள்ளூரில் இரு சக்கர வாகனம் மோதி சாதாரணமாக இறந்தது எதிர்பாரன்மையையே தன் இயல்பாக கொண்டிருக்கும் மரணத்தின் குணாதிசயம் என்றாலும்.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த வாழ்வும்..உலகமும் நமக்கு நிரந்தரம் எனக் கருதி நாம் போடுகிற ஆட்டம் நினைக்காத தருணமொன்றில் முடிந்து விடுகிறது. முடியும் போது இன்னமும் அனைவரையும் நேசித்து,விட்டுக் கொடுத்து, மன்னித்து,மன்னிக்கப்பட்டு வாழ்ந்திருக்கலாமோ என நினைக்க தோணுகிறது.இந்த காட்சிப் பிழை வாழ்விற்குள் எந்த தைரியத்தில் போட்டி,பொறாமை கொண்டு அலைகிறோம்..??

சிந்திய பனித்துளி சூரிய சுடர் பட்டு சில நொடிகளில் ஆவியாவது போல சட்டென முடியும் வாழ்விற்காக நாம் எவற்றை எல்லாம் இழக்கிறோம் என எண்ணும் போது அச்சமாக இருக்கிறது . இருக்கும் காலங்களில் நேசித்து ..நேசிக்கப்பட்டு வாழும் வாழ்வினை ஏன் நாங்கள் தொலைத்தோம்…??

அப்படிதான் இன்று அறிவையும் இழந்து விட்டு .. நாங்கள் நிற்கிறோம்‌ . இப்போதுதான் வாத்தியார் அப்பா வீட்டு மாடியில்..நாங்கள் எல்லோரும் விளையாடியது போல நினைவு. அதற்குள் முடிந்து விட்டது.

வெறுப்பும்.. விரோதமும் ‌..வன்மமும் இல்லாத மனித வாழ்வொன்று சாத்தியமில்லை தான்..

ஆனால்..

அனைவரையும் மன்னித்து.. அனைவராலும் மன்னிக்கப்பட்ட ஒரு பெரு வாழ்வினை வாழ வேண்டும்.

இந்நொடியில் நான் மீண்டும் எனக்குள்ளாக சொல்லிக் கொள்வது இதை தான்.. நேசிப்பின் பெரும் சுழி என்னுள் உருவாகட்டும். நேசிப்பின் நதிக்கரையில் காலார எனது ஆன்மா உலவட்டும்.
போட்டி..பொறாமை..வன்மம் தொலைத்து இன்னொரு வாழ்வொன்று இங்கேயே எங்களுக்குள் முளைக்கட்டும்.

அறிவு..

நீ கிளம்பி விட்டாய் ஒரு தொலைதூர பயணத்திற்கு..வழக்கமான வேகத்துடன்.

போய் வா அறிவு.

நினைவலைகள் ததும்பும் நதி அருகில் கலங்கி நிற்கும் எங்களுக்கு சுவாசமாய் இருந்து ஆற்றுப்படுத்து.

 

( எனது பெரிய தந்தை மறைந்த ச.பாலகுரு அவர்களின் மகன். பா. அறிவழகன். பெருமாள் வடக்கு வீதி ,பந்தநல்லூர் ,மறைவு 07.02.2015)