கால்கள் இழந்தும் கண்,கைகள் சிதைவடைந்தும்

சித்தம் குழம்பிப்போய்

சிரித்தும் அழுதுக் கொண்டும்

ஊனமாய் போய்விட்ட ஒரு பெரும் சமுதாயம்

கத்தி அழுதபடி

காரிருளில் அங்குமிங்கும்

வாழ்ந்த மண்ணை

வாயினிலும் தலையினிலும் அள்ளி எறிந்து

ஆவிகளாய் அலைந்தபடி.

ஒப்பாரி வைக்கின்ற ஓலத்தை

என் வாழ்வில் எப்படிதான் நான் மறப்பேன்.

என் சகியே..

                          -திரு.

எனக்கு முன்னால் அமர்ந்திருந்த சரவணன் தலைகவிழ்ந்து அமைதியாய் இருந்தார். என்ன.. என்று தளர்ந்த குரலில் கேட்டேன். நிமிர்ந்த சரவணனின் கண்கள் கலங்கி இருந்தன. கவிஞரை இரண்டு நாளா காணோம் ..என்றார்.

எங்கே போனாருன்னு தெரியல ..

எங்களால் கவிஞர் என அழைக்கப்பட்ட விழியன் என்னும் அந்த நண்பனின் முகம் ஒரு நொடி கண் முன் தோன்றி மறைந்தது இன்னும் பதட்டமாக இருந்தது.

ஏன்..ஏதாவது பிரச்சனையா ..

 இல்ல.. அவரு கொஞ்சம் நாளா தூங்கல..பத்திரிக்கையில வர்ற செய்திகள பாத்துட்டு நிறைய குடிக்க ஆரம்பிச்சிட்டாரு..திடீரென இப்ப காணோம்.

செய்தி சொல்லிக் கொண்டிருந்த சரவணனுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

நல்ல வேளை அவரால காணாம போக முடிஞ்சது.. இல்ல சரவணன்..என்ற என் பதிலை அவரும் எதிர்பார்த்திருப்பார் போல..

தலையை மீண்டும் கவிழ்ந்துக் கொண்டார்.உரையாடல்கள் எதுவும் அற்ற ,சொற்கள் தீர்ந்த மனிதர்கள் இருவரும் அந்த அறையில் ஏறக்குறைய உறைந்த நிலையில் அமர்ந்திருந்தோம்.

எங்களுக்குத் தெரியும். எங்களைப் போல பலரும் அப்படித்தான் அந்நேரத்தில் உறைந்திருந்தார்கள் என..

.

அந்த அலைபேசி இலக்கத்தை கண்டாலே மனதிற்குள் பதட்டம் வந்து சேர்ந்துக் கொள்கிறது. வெளிநாட்டு எண். பேசுபவர் அயல் மண்ணான அமெரிக்காவில் இருந்து புதிது புதிதாக ஈழ யுத்தச் செய்திகளை சொல்லும் எனது நண்பர் பாக்கியராசன். கடந்த சில நாட்களாக எதுவும் பேசவில்லை. இப்படி பேசாமல் அவர் எப்போதும் இருந்ததில்லை. இது புதிது. இப்படி பேசாமல் இருந்தது கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. ஏனென்றால் அப்போது எல்லாமும் முடிந்திருந்தது. நீண்ட தயக்கத்திற்கு பிறகு அழைப்பினை எடுத்தேன்.

சொல்லுங்க தல..

எதிர்முனையில் நீண்ட மெளனம்.

தல..

ம்ம்ம்..

என்னங்க..

ஒண்ணுமில்ல..

அமெரிக்காவில் இருந்து அலைபேசியில் அழைப்பவரிடத்தில் என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை என்கிற பதிலைப் பெறுவது சற்று விசித்திரமானது என்றாலும் எனக்கு ஆச்சர்யமானது இல்லை. கிளிநொச்சி வீழ்ந்த போது கூட இயக்கம் பெரிய திட்டம் வைத்துள்ளது என்கிற நம்பிக்கையை என்னுள் விதைத்தவர் அவர். தற்போது சொற்களற்ற மனிதராய்.. ஏறக்குறைய சலனமற்ற மெளனத்தைப் போர்த்திக் கொண்ட மனிதராய் உலர்ந்துப் போனார்.

தோத்துட்டோம் தல. என்று அவர் தழுத்தழுத்த குரலில் சொல்லி முடிப்பதற்கு முன்னரே நான் இங்கே அழுது விட்டேன். செத்துட்டோம் தல என்று சொல்லியவாறே அந்த அழைப்பை துண்டித்தார். இனி அவரிடம் பகிர எந்த செய்திகளும் இல்லை.

எங்களுக்குத் தெரியும். எங்களைப் போல பலரும் அப்படித்தான் அந்நேரத்தில் உறைந்திருந்தார்கள் என..

.

ஈழத் தாயகத்தை இழந்ததும், அந்த விடுதலைப்போரில் நாம் தோற்றதும் வெறும் சரித்திர நிகழ்வுகள் அல்ல. அத் தோல்வி ஒரு வரலாற்றுச் சம்பவமல்ல. அந்த இழப்பு தாயகத் தமிழகத்தில் வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஆழ்ந்த உளவியல் காயம். அத் தோல்வி மாறவே மாறாத குற்ற உணர்ச்சி. ஒரு வகையிலான வலியும், கழிவிரக்கமும் நிரம்பிய உளவியல். அந்நாட்களில் ஒரு முத்துக்குமார் எரிந்து இறந்துப் போனான். பல முத்துக்குமார்கள் இறக்கமுடியாமல் அனுதினமும் எரிந்துக் கொண்டிருந்தார்கள்.

.

எதிரே நடந்து வருபவர்களைக் கூட ஏறெடுத்துப் பார்க்க இயலா காயத்தினை..முகத்தில் ஏற்பட்ட வடுவாய் ஈழத்தின் அழிவு உணர்வுள்ள ஒவ்வொரு தமிழின இளைஞனின் இதயத்திலும் ஆழமாய் ஏற்படுத்தி சென்று இருக்கிறது. 2009 மே மாதத்தில் விடுதலைப்புலிகள் பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்த போது ..அந்த பின்னடைவை வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருந்த கூட வேலைப் பார்த்த ஒரு சிங்களனை கொல்லத்தோணுகிறது என சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிற என் தம்பி ஒருவன் வெறித்தனமாக என்னிடம் அலைபேசியில் கதறியது இன்னமும் காதில் ஒலிக்கிறது. ஆம்..உலகம் முழுக்க தமிழின இளைஞர்கள் புலிகளின் பின்னடைவை தங்களது தோல்வியாக கருதி தங்கள் ஆன்மாவை காயங்களால் நிறைத்துக் கொண்டார்கள்.
கண்கள் சிவந்து..கை கால்கள் நடுங்கி..எங்கே அழுது விடுவோமா என்றெல்லாம் அஞ்சி..இனி வாழ முடியுமா என்றெல்லாம் மயங்கி ..தன்னிலை மறந்து ஒரு நாட்டினை அழியக் கொடுத்தோமே என்கிற குற்ற உணர்வில் சவமாய் திரிந்த நாட்கள் அவை.  தலைவரின் உடம்புப் போல ஒன்றை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள் என்ற செய்தி வந்தவுடன் குலை நடுங்கி ..இது வரை கொண்ட நம்பிக்கைகள் நட்டாற்றில் போனது போல நா குழறி..உடல் வியர்த்து ..நினைவற்று கிடந்த அந்த கோர நாட்களின் துயர் நினைவுகளை இன்று நினைத்தாலும் உள்ளம் வலிக்கிறது.  அது ஒரு நம்ப முடியாத முடிவு. ஆம். நம்ப முடியாத முடிவு.

.

ஏனெனில் ஈழத்தின் போர் வரலாறு நம்பவே முடியாத விசித்திரங்களைக் கொண்டது. ஆசியாவின் பெரும் வல்லாதிக்க நாடான இந்தியாவின் அமைதிப்படையை தோற்கடித்து ஒரு மாபெரும் தேசத்தை விடுதலைப்புலிகள் உருவாக்கி இருந்தார்கள்.  பல சாகசங்களை, பல வெற்றிகளை நம்பவே முடியாத அளவிற்கு பெற்று எதிலும் இருந்து மீண்டு வருவார்கள் என்கிற பொது உளவியலை தாயகத் தமிழர்களிடையே ஏற்படுத்தி இருந்தார்கள்.  புலிகளின் கடந்த காலம் புகழ்ப்பெற்ற மீள் எழுச்சிகளால் நிரம்பியது.

.

விடுதலைப்புலிகள் வெறும் ஆயுதங்கள் மீது பற்றுக் கொண்டு முரட்டுத்தனமான போர்களால் தங்கள் விடுதலைப்பாதையை சமைத்துக் கொண்டவர்கள் அல்ல. ஒரு தேசிய இனத்தின் பன்னெடுங்கால கனவினை தனது தியாகங்களால் நினைவாக்க முயன்ற ஒரு யுகத்தின் தலைவர் தயாரித்த தனித்த வார்ப்புகள். பூர்வக்குடி ஒன்றின் விடுதலைப்போராட்டதினை உலக வல்லாத்திக்கமே ஒற்றைக்குடையின் கீழ் நின்று எதிர்த்தது அதுதான் முதல் முறை. ஏனெனில் எதனாலும் விலைக்கு வாங்க இயலா மலையாக விடுதலைப்புலிகள் திகழ்ந்தார்கள். சமகாலத்தில் அறிவும், உணர்வும், ஆற்றலும் சமவிகிதத்தில் கலந்த அற்புத கலவையாக அவர்கள் விளங்கினார்கள்.

. ‘

ஒரு கனவு நாட்டினை அவர்கள் உதிரமும், உயிரும் கொண்டு கட்டினார்கள். களவு இல்லாத, கற்பழிப்பு இல்லாத, ஒரு துளி லஞ்சம் இல்லாத, சாதியற்ற, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிந்த ஒரு சமநிலை நாட்டை புலிகள் படைத்தார்கள். பெரும் பெரும் அறிவார்ந்த தலைவர்களால் கூட சாத்தியமற்ற ஒரு கனவினை பொடியன்கள் என்று அழைக்கப்பட்ட அந்த வசீகரம் மிக்க வாலிபத் தோள்கள் கட்டி எழுப்பின.  சீர் மிகுத் தமிழ்மொழியில் அறிவிப்புப் பலகைகள், உயர்படிப்பு வரை தாய்மொழிக் கல்வி என உள்ளங்கை அளவு நாட்டில் தங்கத் தமிழ்மகள் இதுவரை இல்லாத இன்முகத்தோடு ஆட்சிச் செய்தாள்.

.

தொடர்ச்சியான சிங்கள பேரினவாத தாக்குதல்கள்.. உலகம் முழுக்கத் தடை, மின்சாரமோ, அடிப்படை வசதிகளோ இல்லாத வாழ்க்கை,  என சகலவிதமாத தடைகளுக்கு மத்தியில் தமிழினத் தலைவர் மேதகு.பிரபாகரன் இப்பூமிப் பந்தில் தமிழர்களுக்கான ஒரு நாட்டை கட்டி எழுப்பியே விட்டார். எத்தனை நீண்ட கால தவம்.. எத்தனை உயிரிழப்புகள்…எத்தனைப் போராட்டங்கள்.. எத்தனைப் போர்க்களங்கள்…???

 பாரதியும், பாரதிதாசனும், பெருஞ்சித்திரனாரும், பாவாணரும், புலவர்  கலியபெருமாளும், தமிழரசனும், இன்னும் பலரும் கண்ட கனவினை நம் கண் முன்னால் நிஜமாக்கி காட்டினார். தமிழரின் தொன்ம அறத்தோடும், மரபு வழி பிறந்த மறத்தோடும் கூடிய தன்மானத் தலைமையாக தலைவர் பிரபாகரன் விளங்கினார்.

.

எதற்கும் தலைவர் விலை போனதில்லை. தனித்தமிழ் ஈழம் என்கிற ஒற்றைப் புள்ளியிலிருந்து எந்த நொடியிலும் விலகியதில்லை. மாகாண முதலமைச்சர், துணை அதிபர் , வசதியான வாழ்க்கை, உச்சப்பட்ச பதவிகள், பணம் ,புகழ் என்றெல்லாம் பல்வேறு சலுகைகள் அவருக்கு முன்னால் மண்டியிட்டப் போதும் சமரசம் இல்லாத சரித்திரனாய் தலைவர் விளங்கினார். அவரும், அவரது படைகளும் நாம் நிஜ உலகில் பார்க்க இயலா அற்புதன்கள். யுத்தக் களத்தில் நின்ற போதும் பூக்களை மிதிக்காமல் சண்டையிட்டவர்கள். ஒரு  கையில் துவக்கு ஏந்திய போதிலும், மறுகையால் உலகை ஆரத்தழுவி நேசித்து கவிதைப் பாடிய காவிய மனசுக்காரர்கள். மனித நேயமும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட போராட்டக் காலமொன்றை அவர்கள் உருவாக்கினார்கள். திலீபனும், அங்கயற்கண்ணியும், மில்லரும், கிட்டுவும், குமரப்பாவும், புலேந்திரனும், பால்ராஜ்ஜீம், தமிழ்ச்செல்வனும் என பட்டியலிட்டால் எழுதிக் கொண்டும், புகழ்ந்துக் கொண்டும் போய்க் கொண்டே இருக்கலாம் என்ற அளவிற்கு வான்புகழ் கொண்டு வரிசையாய் தாய் மண்ணை முத்தமிட்டு தமிழ் அன்னைக்காக விண்ணையேறிய வானவில் போராளிகள் அவர்கள். ஆம் .‌நாம் கனவில் மட்டுமே காண முடிகிற அற்புதங்களை நிஜத்தில் செய்து விட்டு சென்றார்கள் அவர்கள்.

.

உண்மையில் நாம் இழந்தது ஈழம் என்கிற நம் தாய் மண்ணை மட்டுமா உறவுகளே..? அல்ல. அந்த மனிதர்களை.. கனிவு நிரம்பிய கண்களோடு, துணிவு நிரம்பிய நெஞ்சோடு உலவிய போர்க்களத்தில் பூத்த பூக்களை… அல்லவா நாம் இழந்திருக்கிறோம்..? இனி எக்காலத்தில் அவர்களை நாம் சந்திப்போம்..? திரைப்படங்களில் மட்டுமே சிந்திக்க முடிகிற அந்த கதாநாயகர்களை கண்டு எந்த நாளில்.. எவ்விடத்தில் …ஆரத்தழுவி அழப்போகிறோம்..??

காட்டுக்குள் இருந்தாலும் கம்பீரமாக விமானம் கட்டி பறந்து விண்ணை முத்தமிட்ட அந்த அறிவின் செறிவானவர்களை இனி எந்த செருக்களம் காணும்..?

.

இத்தனை இழப்பிற்கு பின்னரும் இன்னும் எதைக் கேட்டு ஈழத்து மண் தன் அடிமை விலங்கொடிக்க காத்திருக்கிறது..? .  நினைத்தாலே மனம் கனமாகி கண்கள் குளமாகின்றன. இனியொரு காலம் பிறக்கும். மீண்டும் பாலச்சந்திரன் பிறப்பான். மீண்டும் இசைப்பிரியா தன் குரலால் பாடுவாள். இன்னொரு முறை புதுவை அய்யா தனது புத்தொளிக் கவிதைகளால் புவிக்கு ஒளியூட்டுவார். இலட்சியம் மிக்க கண்களோடும், கலைந்த தலையோடும், வசீகரனாய் திலீபன் மீண்டும் யாழ்த் தெருக்களில் திரிவார்.  வெடி மருந்துத் தூள் படிந்திருக்கிற ஈழப் புல்வெளிகளில் மீண்டும் காந்தள் மலரும்..என்கிற நம்பிக்கை மனதின் ஏதோ மூலையில் மின்மினிப்பூச்சிப் போல சுடர்விட்டு அலைந்துக் கொண்டிருப்பதால் தான் பெருமூச்செறிதல்களோடு இந்த வாழ்வினை நம்மால் வாழ முடிகிறது.

.

ஒரு பத்தாண்டு கூட கடக்காத சூழலில் இதுவும் கடந்துப் போகும், இன்னமும் கடந்துப் போகும், இதற்கு மேலும் உடைந்துப் போகும் என்கிற எதிர்மறை மனநிலையோடு ஈழ விடுதலையை அணுக இயலாது. தேக்கி வைத்த கோபம்… தன் சொந்த சகோதரியின் பிறப்பு உறுப்பினை படம் எடுத்து சிங்களன் உலகத்தின் விழிகளுக்கு விருந்தாக்கி விட்டானே என்கிற அவமானம்.. தோல்வி தந்த வலி… தலைக்குனிவு.. சொந்த சகோதரனை பறிக் கொடுத்த வன்மம்..  நம் தாய் மண்ணின் மடியில் அன்னியன் கால்பதித்து திரிகிறானே என்கிற பழிவாங்கல் உணர்ச்சி.. சென்ற முறை இருந்த மறத்தோடு.. உலகத்தை தழுவிய பார்வைக் கொண்டு எழுகிற ராசதந்திர நகர்வு ..இன்னும் பல..இன்னும் பல கொண்டு நம் தாயக விடுதலையை..ஈழப்பெருந்தேச கனவினை சாத்தியப்படுத்த இந்த பூமிப்பந்தில் வாழ்கிற ஒவ்வொரு தமிழனும் ஆழ்மனதில் இருந்து உறுதியேற்கிற நாள் தான் இந்த இனப்படுகொலை நாள்.

இது இழப்பின் நாள் அல்ல. உயிர் மூச்சால் நம் உடன்பிறந்தவர்கள் காற்றில் கலந்து சுவாசமாய் நம்மை எழுப்புகிற நாள்.

எழுவோம். திருப்பி அடிப்போம். பகை முடிப்போம்.

இருள் விலக்கி விடுதலைச்சூரியனின் சுடர் பிடிப்போம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.

— மணி செந்தில்

.