பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: துளிகள் Page 2 of 3

துளி 13

வட சென்னை -இருள் பக்கங்களின் வெளிச்சத் தெறிப்புகள்
——————————————–

வாழ்வென்பது வரையப்பட்ட கோடுகளின் மீது ஒழுங்கமைவோடு கட்டமைக்கப்பட்ட ஓவியம் அல்ல என்பதைத்தான் காலம் காலமாக இலக்கியங்களும், கவிதைகளும், படைப்புகளும் கூறிவருகின்றன. மீறல்களால் நிறைந்த மானுடவாழ்க்கையின் இருள் பக்கங்களில் வெளிச்சத்தை பாய்ச்சி நிழலுக்கும் நிஜத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை அழித்து பார்க்கிற பெரிய முயற்சிதான் வெற்றிமாறனின் வட சென்னை.

இப்படியெல்லாம் எழுதுவார்களா என்று எழுத்தாளர் ஜி நாகராஜனின் குறத்தி முடுக்கு நாவலைப் படித்துவிட்டு அவரை கேட்ட கேள்விக்கு.. அவர் சிரித்தவாறே சொன்ன பதில்

” நான் எழுதியதை விட சமூகம் மோசமாகத்தான் இருக்கிறது.”

எப்போதும் அசலான மனிதர்களை இலக்கியங்களிலோ திரைப்படங்களிலோ நாம் சந்திப்பதில் உளவியலாக நமக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. ஏனெனில் உண்மை எப்போதும் பகட்டாக இருப்பதில்லை. அது நேரடியானது .எளிமையானது. சொல்லப்போனால் நாம் கட்டமைத்து வைத்திருக்கிற அனைத்திற்கும் எதிரானது.

வடசென்னை திரைப்படத்தில் நான் மிகவும் ரசித்தது அந்தப் படம் முழுக்க வருகிற எளிய மக்களின் கொச்சை மொழி வசனங்கள் தான். ஒரு திரைமொழியை கையாளுகிற படைப்பாளி அதை அணுக துடிக்கும் எவருக்கும் அப்படைப்பை எவ்வளவு அருகே நேர்மையாக கொண்டு செல்ல வேண்டுமோ அவ்வளவு நெருக்கத்தில் கொண்டு செல்வதே அந்த படைப்புக்கு அந்தப் படைப்பாளி செய்கிற மகத்தான நேர்மை என்றால் இயக்குனர் வெற்றிமாறன் மிகுந்த நேர்மையாளன்.

இது ஒரு திரைப்படம் ..திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு நாமெல்லாம் வந்து இருக்கிறோம் என்கிற உணர்வை அழித்துக் கொண்டே இருப்பதில் வெற்றிமாறன் வெற்றி அடைந்திருக்கிறார். நம் கண்முன்னால் நடக்கிற நம் சக மனிதர்களின் வாழ்க்கையை குறித்த நமது பார்வை நிலையாகவே வடசென்னையை நம்மால் தரிசிக்க முடிகிறது.

இப்படியெல்லாம் நடக்கிறதே.. இப்படியெல்லாம் பேசுகிறார்களே என்று யாரேனும் ஆதங்கப்பட்டால்.. ஜி நாகராஜன் போல நாமும் சொல்லுவோம் . நாம் அவ்வாறாகத் தான் இருக்கிறோம்.

எனக்குத் தெரிந்து தமிழ் திரையில் படத்தின் கதாநாயகி கதாநாயகனைப் பார்த்து மக்கு ….. என்று கொச்சை மொழியில் ஏசுவது இதுதான் முதல் முறை. பஞ்சணை களிலும் வானத்து மேகக் கூட்டங்களிலும் இதுவரை மிதந்துகொண்டிருந்த தமிழ் திரைப்படத்து கதாநாயகன், கதாநாயகி வடசென்னையின் வீதிகளில், தமிழகத் தெருக்களில் இப்போதுதான் இறங்கி நடக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இது நம்மொழி ,நம் பண்பாடு ,நமது நிறம், நமது நிலம், நமது உணவு ,நமது உடை ,நமது உணர்வு இது இவர்கள் வரைந்து வைத்திருக்கிற நாகரீக வரையறைக்குள் வராவிட்டாலும் நமக்கு கவலை இல்லை. ஏனெனில் நம்மை தீர்மானிக்க எவருமில்லை, நாம் தான் நம்மை தீர்மானிக்கிறோம் என்பதைத்தான் வடசென்னை அசலான மனிதர்களின் நிஜ வாழ்க்கையை செல்லுலாய்டு பதிவின் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

படம் முழுக்க ஏராளமான கதாபாத்திரங்கள். ஆனால் ஒன்று கூட தேவையற்றது என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. எடுத்துக்காட்டாக குறி சொல்லும் கிழவியாக வருகிற கதாபாத்திரம்.அப் பாத்திரம் சற்றே நுட்பமானது. பின் நடக்க இருப்பதை சொற்களால் குறியீட்டு கோடிட்டுக் காட்டுவது.

கதை நேர்கோட்டு வடிவமாக சொல்லப்படாமல் முன்னும் பின்னும் அலைபாய்ந்து புதிய முறை கதைசொல்லலில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரு இடத்தில் கூட குழப்பம் ஏற்படாமல் பிசிறு தட்டாமல் இருப்பது என்பது ஆகப்பெரும் மேதமை.

சிறு சிறு காட்சிகளிலும் அதன்பின் புறங்களிலும் காட்டப்பட்டிருக்கும் நுட்பமான விவரங்கள் பிரம்மிப்பை தருகின்றன. ஏறக்குறைய எண்பதுகளில் நடக்கிற கதை ஓட்டத்தில் அதன் பின்புலமாக விவரிக்கப்படுகின்ற 80 ,90 களின் மக்களின் உடை ,மொழி சிகை அலங்காரம், சுவற்றில் ஒட்டி இருக்கிற சுவரொட்டி, சுவரில் வரையப்பட்ட நிர்மா,பாண்ட்ஸ், சின்னத்தம்பி ஓவியங்கள், வீட்டில் இருக்கிற பொருட்கள் என ஒவ்வொன்றிலும் காட்டப்பட்டு இருக்கிற கவனம் இந்த திரைப்படத்தை மறக்கமுடியாத பெரும் அனுபவம் ஆக்குகிறது.

ஒரு காட்சியில் தூக்கிச் செல்லப்படும் டிவி அட்டைப்பெட்டியில் சாலிடர் டிவி,பிபிஎல், என எழுதப்பட்டு இருப்பதிலிருந்தும், வாஷிங் மிஷின் மாடலிருந்தும் … படைப்பில் செலுத்தப்பட்டு இருக்கிற படைப்பாளியின் மாபெரும் கவனத்தை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
தொடர்ச்சியாக எளிய மக்களின் மேல் அதிகாரம் செலுத்தி வருகிற வன்முறையின் அரசியலை வடசென்னையும் உரக்கப் பேசுகிறது. அதேசமயம் அசலான மனிதர்கள் மனதில் இருக்கிற வன்மம் ,காதல் ,ஆசை, துரோகம், கோபம் என அனைத்து உணர்வுகளையும் காட்சி மொழியில் நம் கண் முன்னே நிழலாட வைத்திருப்பதில் வடசென்னை இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் இருந்து தனித்துவமாக திகழ்கிறது.

அடுத்தடுத்த பாகங்கள் வெளியான இரண்டு உலகப் புகழ்பெற்ற தொடர்ச்சி திரைப்படங்களைப் பற்றி இச்சமயத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
மரியோ பூசோ இயக்கிய தி காட் பாதர் என்கின்ற திரைப்படம் மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கிறது. புகழ்பெற்ற இயக்குனர் சத்யஜித்ரே யின் அபு டிரையாலஜி( Apu’s Trialogy பதேர் பாஞ்சாலி /அபு சன்சார்/ அபுராஜிதா)ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியை பற்றி பேசுகிற ஒரே கதை மூன்று திரைப்படங்களாக வெளிவந்திருக்கிறது.

அடுத்தடுத்த பாகங்களுக்கான தேவையை அக்கதைகள் கோருகின்றன. சங்கிலி தொடர்ச்சியான கண்ணிகள் கதையின் அனைத்து புள்ளிகளிலும் நிறைந்து தயாராக இருப்பது இதுபோன்ற திரைப்படங்களை மாபெரும் அனுபவங்களாக மாற்றுகின்றன

இந்நிலையில் வடசென்னை யும் ஒரு பகுதி மக்களின் வாழ்வியலை அன்பு என்கின்ற ஒரு தனிமனிதனின் வாழ்வினை அடிப்படை அலகாகக் கொண்டு நம் கண்முன்னால் ஆவணப்படுத்துகிறது. அடுத்த இரண்டு பாகங்களும் வர இருக்கின்ற நிலையில் முதல் பாகம் பல்வேறு கேள்விகளோடு தொடர காத்திருப்பது மிக கச்சிதம்.

கதை என்பது முடிவற்ற ஒரு பெரும் பயணம். எந்தப் புள்ளியிலும் ஒரு கதை தொடரவும் முடியும் சாத்தியங்களை கொண்டிருக்கும்போது அது பேரிலக்கியமாகிறது. ஒரு கதைக்கு முடிவே இல்லை என்கிறார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன். எப்போதும் ஒரு கதை முடிவடைவதில்லை. நாமாக ஒரு புள்ளியில் முடித்துக் கொள்கிறோம் அவ்வளவே. வடசென்னை யும் அவ்வாறாகவே புனையப்பட்டிருக்கிறது.

இது ஒரு Docuflim வகைமையை சார்ந்ததா என்று சிந்திக்கும் அளவிற்கு படம் முழுக்க ஒரு காலகட்டத்தின் வாழ்வியலை தரவுகளோடு தகவல்களோடு அச்சு அசலாக படைக்கப்பட்டிருப்பது நம்மை பிரமிக்க வைக்கிறது. எனக்குத் தெரிந்து எண்பதுகளில் வெளிவந்த திரைப்படங்கள் கூட இத்தனை Details களோடு வெளிவந்து அந்த காலகட்டத்தை மிக நெருக்கமாக நேர்த்தியாக பதிவு செய்து இருக்கின்றனவா என தெரியவில்லை.

இந்த திரைப்படத்தின் கதை சிக்கல்கள் நிறைந்த ஒரு நூல்கண்டு போல அவிழுந்துகொண்டே போவதில் திரைக்கதையில் கையாளப்படுகிற பல உத்திகள் அற்புதமாக வெளிப்பட்டிருக்கின்றன.

ஒரு கதையை இவ்வாறாகத்தான் சொல்ல வேண்டுமா… என்ற விமர்சனங்களுக்கு பிரபல இயக்குனர் தார்க்கோவ்ஸ்கி சொல்லிய கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது.

“இசை கேட்கையில் ,நாவல் வாசிக்கையில் அல்லது நாடகம் பார்க்கையில் புரிந்துகொள்ள இயலாத பகுதிகளை அடிக்கடி எதிர் கொள்கிறோம் . கலைப் படைப்பு குறித்த இயல்பான உறவு நிலை அது .ஆனால் திரைப்படம் என்று வருகையில் முழுமையான தெளிவும் முழுமையான புரிந்து கொள்ளலையும் கோருகின்றனர். கலையில் பேதப்படுத்தலுக்கு எதிரானவன் நான். தெளிவு மிக முக்கியமான ஒன்று இல்லை. கலைஞனால் படைக்கப்பட்டுள்ள உலகம், அவனைச் சூழ்ந்துள்ள உலகத்தை போலவே அவ்வளவு சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது. ”

(உலகசினிமா எஸ்ரா/ தமிழில் ஹரன்)

சமீபகால தமிழ் திரைப்படங்களான மேற்கு தொடர்ச்சி மலை பரியேறும் பெருமாள் வடசென்னை போன்றவை மிகப்பெரிய நம்பிக்கைகளை அளிக்கின்றன. ஒரு காலத்தில் கதை சொல்லலில் காட்சிப் படுத்துதலில் மலையாள சினிமாவிற்கு இருந்த அந்த காவியத் தன்மையை சமீபகால தமிழ் திரைப்படங்கள் மிஞ்சிக் கொண்டிருக்கின்றன என்பது பெருமிதமாக இருக்கிறது.

குறிப்பாக வடசென்னை தமிழ் நிலத்தில் இதுவரை கண்டுகொள்ளப்படாத மக்கள் வாழ்வியலை நெருக்கமாக காட்சிப்படுத்தி இருப்பதற்கு இயக்குனர் வெற்றிமாறனை நான் இறுகத் தழுவி கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்ட தகுந்தவர்கள். குறிப்பாக இசை, கலை, ஒளிப்பதிவு மூன்றும் ஒன்றையொன்று விஞ்ச போட்டி போட்டு இருப்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

இந்த திரைப்படம் ஒரு நிலத்தில் வாழ்கின்ற குறிப்பிட்ட மக்களை அவமானப்படுத்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அவர்கள் மேன்மையானவர்கள். அத்தனை வறுமையிலும் அறம் வாய்ந்தவர்கள். நன்றிக்காக சிறை செல்பவர்கள். தன்னைப்போல பிறர் ஆகிவிடக்கூடாது என்று எண்ணுபவர்கள் . அநீதி, ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுபவர்கள். தாய் நிலத்தை உயிரென விரும்புவர்கள்.

அதை பல்வேறு குறியீட்டு காட்சிகளின் மூலமாக இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அன்புவின் மனைவி பத்மா குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதாக இருக்கட்டும்.. நீ படித்தவன் நீ ஒதுங்கிப் போ என்று அன்பு நண்பனை எச்சரிக்கும் காட்சியாக இருக்கட்டும், மக்களின் உரிமைக்காக வழக்குப் போடும் அந்த இஸ்லாமிய நண்பனாக இருக்கட்டும், படம் முழுக்க நேர்மறை காட்சிகளின் மூலம் அந்த வடசென்னை நிலத்தை ,மக்களை காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றி மாறன்.

மொத்தத்தில் தமிழ் சினிமாவின் பொற்காலத்தை மேற்கு தொடர்ச்சி மலையும், பரியேறும் பெருமாளும் முன்மொழிந்தன என்றால் வடசென்னை வழி மொழிந்திருக்கிறது.

மணி செந்தில்.

துளி- 12

வாயற்ற சொற்கள்
———————————

இதோ இதுவும்
ஒரு உரையாடல் தான்.

வாயற்ற சொற்களோடு
காதுகளில் அல்லாமல்
உங்கள்
இதயத்தின் ஆழத்தில்
நுழைகிற உண்மையின்
ஏற்பாடு.
———————-

உருவமற்ற
அருவ
அவதூற்று
பொய்களால்
தகர்க்க முடிகிற
சொற்களின்
சேர்க்கை அல்ல
அவன்.

பித்தமேறிய
பிதற்றல்களால்
மன
நோயாளிகளின்
தூற்றல்களால்
தூர்ந்து போகிற
கோடைக்கால
கிணறு அல்ல
அவன்.

உன்மத்த
உரையாடல்களால்
உருக்குலைக்க
இயலுகிற
சத்தற்ற
தர்க்கத்தின்
சறுக்கி விழும்
தத்துவம் அல்ல
அவன்.

அவன் ஒரு காலம்.

பிணங்களுக்கு
நடுவே பிரசவித்து
ரணங்களை
வரங்களாக ஏற்று
இருட்
பாதையொன்றின்
மேல் முளைத்திட்ட
வெளிச்சக் கீற்றின்
பூபாளம்.

————————
அவர்கள்
பொய்மையின்
வில்லெடுத்து
அவதூற்றின்
நாணேற்றும் போது..

அவன்
நம்பிக்கைகளின்
நாற்றங்கால்களில்
எதிர்காலம்
ஒன்றிற்காக
விதைகள்
விதைத்துக்
கொண்டிருந்தான்..

அவர்கள்
கோடிகள் குறித்தான
கதைகளில் வாய்க்கு
வந்த வார்த்தைகளை
எச்சிலாய் காற்றில்
ஒழுக விட்டுக்
கொண்டிருக்கும் பொழுதில்

ஒரு வானவில்
தேசத்திற்கான
வண்ணக் கனவொன்றை
சுமந்து இரவுகளில்
வாசித்து விழித்திருந்தான்.

எதன் பொருட்டும்
களங்கமேற்ற முடியா
அவனது இலட்சியம்
அவரவர் தாயின்
கற்பினை ஒத்த
புனிதத்தின்
சாயலுடையது.

யாரும்
உருவாக்கவோ
உடனிருந்து
ஆட்டி வைக்கவோ
முடிகிற மூடர்களின்
கூடங்களில் இருந்து
வந்தவனல்ல அவன்.

வெம்மை
வனமொன்றில்
பெரும் பசியோடு
திரிகிற
தீ விழி புலியொன்றின்
தனித்தியக்கம் அவன்.

நான் அவனை
அறிந்த வரையில்
உயிரின் மீது
உறுதி இட்டு
சொல்கிறேன்..

சீமான்
என்பது வெறும்
பெயரல்ல..

இந்த இனம் வாழ
விதையாக விழுந்த
தணலாக எரிந்த
மாவீரர்களின்
நம்பிக்கை மிகுந்த
பெரும் விம்மலோடு
பிறந்த
இறுதி
மூச்சுக்காற்று.

அவர்கள்
இறுதியாய் சிந்திய
குருதியின் உறுதி.

மணி செந்தில்.

துளி-11

நம் வாழ்நாள் ஏதோ ஒரு புள்ளியில் அர்த்தப்பட்டதாக உணர்ந்த தருணம் இன்று எனக்கு நிகழ்ந்தது.

எங்கள் பகுதியின் பழுத்த காங்கிரஸ்காரர் அவர். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். காங்கிரஸ் தலைவர்கள் இப்பகுதிக்கு வந்தால் அவர்களின் நேரடியாக சந்தித்து உரையாடும் அளவிற்கு செல்வாக்கு உடையவர்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நான் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் பணிபுரிந்தபோது என்னை நேரடியாக அழைத்து தன் கட்சியை எதிர்த்து நான் வேலை செய்யக் கூடாது என அன்பாக சொல்வது போல கடுமையாக மிரட்டியவர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று என் அலைபேசியில் அவர் என்னை அழைத்தார். அவரது உரையாடல் இப்படி தொடங்கியது..

உண்மையில் நீங்கள் ராஜீவ் காந்தியை
விடுதலைப் புலிகள் கொல்லவில்லை என்று சொல்கிறீர்களா.. என்று கேட்டார்.

விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என்று நிரூபிக்க வேண்டிய அரசு தரப்பு தனது வழக்கினை முழுமையாக நிரூபித்துவிட்டதா.. என்று கேள்வியை பதிலாக தந்தேன்.

இன்னும் என்ன நிரூபிக்க வேண்டும்..

என்ன நிருபித்தது..?

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். நாங்கள் தலைவரை இழந்து இருக்கிறோம் என்றார்.

அதனால் நாங்கள் ஒரு நாட்டையே இழந்து தவிக்கிறோம் என்றேன்.

யூட்யூபில் உங்கள் பேட்டி பார்த்தேன். நீங்கள் சொல்வதெல்லாம் சரியானதாக இருப்பது போல எனக்கு தோன்றியது. ஆனாலும் நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றார்.

சரியானதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். உங்கள் தலைவர் இறந்தபோது ஏன் அருகில் உங்கள் கட்சிக்காரர்கள் உங்கள் கட்சித் தலைவர்கள் யாருமே இல்லையென்பதை என்றாவது காங்கிரஸ்காரர்கள் யோசித்திருக்கிறீர்களா..? என்ற எனது கேள்விக்கு

இன்று வரை நான் அவ்வாறு யோசித்ததில்லை. ஆனால் உங்கள் பேட்டி பார்த்த பிறகு அவ்வாறு யோசிக்க தொடங்கினேன். அதனால் தான் உங்களுக்கு நான் அழைத்தேன் என்றார்.

அவரே தொடர்ந்து..

உண்மையில் அந்த ஏழு பேருக்கும் இந்த கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றால்… நாங்களெல்லாம் மிகப்பெரிய பாவம் செய்தவர்கள் ஆவோம். என்றார்.

அந்த பேரறிவாளனின் தாய் அற்புதத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என்னவோ போல இருக்கும். ஆனால் என் தலைவரை கொன்றவர்கள் தானே என்று என் மனதை இருக்கிக் கொண்டேன். ஆனால் தப்பு செய்து விட்டோமோ என்று இன்று என் மனது தவிக்கிறது என்றார்.

நீங்கள் மட்டும் இல்லை. ஒரு தேசிய இனமே தவறிழைத்து விட்டது. அவர்களை ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்காமல் ஒதுங்கி நின்றது. ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்றெண்ணி தமிழனின் மற்றொரு தாய்நாடு அழிய துணை நின்றது.

28 வருடங்களுக்குப் பிறகும் சிறையில் சிக்குண்டு ஒவ்வொரு நொடியும் வாழ்வதா சாவதா என்று தெரியாமல் திக்கற்று நிற்கிற அந்த அப்பாவி ஏழு தமிழர்களின் விடுதலைக்காக.. ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் போல கூடாமல்.. இன்னமும் எதற்காகவோ காத்துக் கொண்டிருப்பது காலக்கொடுமை.

மாட்டை மதித்த நமக்கு, மனிதர்களை … நம் உடன் பிறந்தவர்களை மதிக்க முடியாமல் போனதுதான் பெரும் சோகம். என்றேன்.

அவரும் பெருமூச்செறிந்து ..

உண்மைதான். நாளை ஒரு ஆள் அனுப்பி விடுகிறேன் உங்கள் விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை எனக்கு தர முடியுமா எனக் கேட்டார்.

கண்டிப்பாக.. உங்கள் ஒருவருக்காக தான் அந்த புத்தகத்தை நான் எழுதினேன் என்று இந்த நொடியில் நான் நினைத்துக் கொள்கிறேன் என்றேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர் சரி நான் வைச்சிடுறேன் என்று போனை வைத்து விட்டார்.

ஒரு ஊடகத்தில் சில நிமிடங்கள் வருகிற ஒரு சின்னஞ்சிறிய உரையாடல் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தம்பி துரைமுருகன் சாட்டை தொடங்கிய போது நன்றாகத்தானே பேசிக்கொண்டு இருக்கிறான் இவனுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை.. என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

இந்த நொடியில் அந்த நினைப்பிற்காக சாட்டை என்னை வருந்த வைத்து விட்டது.

என் வாழ்வில் நான் செய்த மாபெரும் பணியாக கருதுவது அண்ணன் ராபர்ட் பயஸ் வாழ்க்கை வரலாற்று நூல் விடுதலைக்கு விலங்கு எழுதியதுதான்.

அக்காலகட்டத்தில் அந்த நூலுக்கான எந்த அறிமுக கூட்டமும் நடைபெறவில்லை. தொடர்ச்சியாக தமிழர்களுக்கென்று எழுந்து கொண்டே இருந்த பல்வேறு சிக்கல்களால் அந்த நூல் பெருமளவு சென்று சேராமல் போய்விட்டது. எழுதிய என்னாலும் தொடர்ச்சியான என் அரசியல் பணிகளால் இந்நூல் குறித்து பரவலான உரையாடலை எழுப்ப முடியாமல் போய்விட்டது.

அண்ணன் இராபர்ட் பயஸ் அவர்களுக்கு இதில் பெரும் வருத்தம். காலம் கடந்தாலும் அந்த நூலுக்கான தேவை இன்னும் இருக்கிறது என்பதுதான் எங்களுக்கு குறிப்பாக எனக்கு இன்று கிடைத்த மாபெரும் ஆறுதல்.

அதை சாத்தியப்படுத்திய தம்பி துரை முருகனுக்கும் , சாட்டை குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி..

மணி செந்தில்.

https://youtu.be/t4qi1LfiVMw

துளி-10

 

வாழ்வின் சூட்சமமப் புள்ளிகளைப் பற்றியும், மனித உளவியலைப் பற்றியும் பதிவொன்றை எழுதி இருந்தேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=528687884222751&id=100012446325967

அதற்கு …மிகச்சரியான தொடரியை இசைத்து காட்டியிருக்கிறான் என் தம்பி துருவன் செல்வமணி. நுட்பமான அலைவரிசைக் கோர்வையில் இணைந்து புதிய வெளி ஒன்றினை தன் எழுத்துக்களால் அவன் உருவாக்கி இருக்கிறான்.

https://m.facebook.com/story.php?story_fbid=2012571248805016&id=100001564824346

என்னுடைய பதிவிற்கு இதுதான் மிகச்சரியான அங்கீகாரம் என நான் கருதுகிறேன் ‌. நான் ஏதோ ஒரு புள்ளியில் எதையோ ஒன்றை தொடப் போக… அதை என் சீடன் வேறு உயரத்திற்கு எடுத்துச் செல்கிறான். பரஸ்பரம் இதுபோன்ற உரையாடல்கள் தொடர்ச்சியாக நீள நான் விரும்புகிறேன். என்னைப் பற்றி என் எழுத்தைப் பற்றி சில சமயங்களில் நான் கவலைப் பட்டது உண்டு. ஆனால் இத்தருணத்தில் உண்மையிலேயே நான் கர்வம் அடைகிறேன். ஒரு அசலான படைப்பாளி தனது எந்த வாக்கியமும் பொருத்தப்பட்ட ஒரு முற்றுப்புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு முடிந்துவிடக்கூடாது என்றுதான் நினைப்பான்.நானும் அவ்வாறாக தான் நினைக்கிறேன். எனது எழுத்துக்களின் தொடர்ச்சியாய்… எனது வாழ்வின் நிழலாய்.. எனது முடிவுறாத பத்தியின் இன்னொரு நீட்சியாய்‌.. துருவன் எழுதிக் கொண்டு இருக்கிறான்.

என்றாவது உன் வாழ்வில் நீ சாதித்தது என்ன என்ற கேள்வி என்னை நோக்கி எவராவது எழுப்பும் பட்சத்தில்..

நான் ஒரு மலை முகட்டின் மீது நின்று கொண்டு.. அமைதியாய் ஒரு தேநீர் அருந்தியவாறே‌ மென்மையாய் ஒரு பதில் கூறுவேன்..

நீ என் துருவனை படித்ததில்லையா என்று.

அவன் என்னை விட நன்கு எழுதுகிறான்/வாசிக்கிறான் /வாழ்வினை அணுகுகிறான் என்பதில் தான் எனது வெற்றி அடங்கியிருக்கிறது.

அவ்வகையில் நான் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறேன் ‌.

வேறென்ன சொல்ல..
நிறைய மகிழ்ச்சியும் ,பெருமிதமும் நிறைந்த பொழுது.

தொடர்ந்து நான் பெருமிதம் அடைய எழுது.

எனக்காக/ எங்களுக்காக மீண்டும் வா. பேசு/ எழுது.

உனது இடம் எந்த மாற்றியாலும் நிரப்ப முடியாத பெரும் வெற்றிடம்.

கொட்டும் இடியும் துடிக்கும் மின்னலும் கூடி ஒரு யுகாந்திரத்தை புரட்டிப் போடுகின்ற அந்த ஓங்காரப் புயல் வீசிய அந்த இடத்தை..அதை மரத்தின் இலைகளை அசைத்துப் பார்க்கிற வெறும் காற்றினால் நிரப்ப முடியாது.

வா. நீ இசைத்துப் பார்க்க ஓரு காலத்தின் பியானோ கட்டைகள் காத்துக்
கொண்டிருக்கின்றன.

வா.

=============================================================================

துருவன் எழுதிய பதிவு


திருவாளர் மணிசெந்தில் அவர்களின் எழுத்துக்களில் பொதுமையை தாண்டிய ப்ரத்யேகங்கள் நிறைய உண்டு. வாசித்தலின் சுவாரஸ்யங்களில்; தனிமையில் மதுக்குப்பி தீர்வது போல நிதானித்து கிறங்கடிக்கும் தொனி அவருடையது. சரியாக சொல்ல எண்ணினாள் அவை ஞானப் பிசாசின் போதைத்துளிகள்.

இன்று அவரின் மானுட வாழ்வு குறித்த ஓர் பதிவினை வாசித்தேன். Woody Allen இன் ” If u ask any question; sex is an answer ” எனும் கூற்றுதான் நினைவில் வந்துபோனது.

//வாழ்வின் அர்த்தம் புரியும் போது நாம் வாழ முடியாதவர்களாக இறக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமமே. இன்னமும் சஸ்பென்ஸ் நீங்காத ஒரு முடிவிலி திரைப்படக்கதை போல நாமும் நமக்கு புரிந்த வரையில் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். அதுவும் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.//

மலைப்பாம்பொன்று ஊர்வது போல இந்த வரிகள் என் இருட்டில் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு படைப்பாளன் எண்ணங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளுமில்லை. அது அவனின் அறம் சார்ந்தது.. அல்லது அவன் விருப்பு வெறுப்புகளின் தொகுப்பாவது.

“உடம்பாவதேதடி உயிராவதேதடி” எனச் சித்தர்கள் தொடங்கி.. “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்” என ஜேகே தொட்டு..”மோகத்தில் கொஞ்சம் தாகத்தில் கொஞ்சம் இதுதானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேசம்”என நா.முத்துகுமார் கடந்து மணி செந்தில் வரை வாழ்விற்கென எத்தனையெத்தனையே வரையறைகள் காலம்தோறும் அடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இவையெல்லாமும் சரிதான் என்கின்ற விதத்தில் வாழ்க்கை ஒரு அளவில்லா பூதம் போல் எழுந்து நிற்கிறது. ஆனால் வாழ்க்கைக்கு ஓர் வரையறை தேவையென்பது மனிதர்களின் சுயநல எண்ணம்தானேயொழிய வேறெந்த சுவாரஸ்யங்களும் அதில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

வாழ்க்கையென்பது எந்த காலத்திலும் எந்த மனிதராலும் இன்னதென்று தீர்க்கமாக சொல்லும்படியாக இருந்ததில்லை, எல்லாமும் அவரவர் அனுமானங்களே. தவிர வாழ்வை புரிந்து கொள்ளவேண்டும் என்கின்ற தேவையொன்று இருப்பதாகவே எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கையென்பது வாழ்ந்து கழிப்பது அவ்வளவே.

ஜானி படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” பாடல் வரிகளை புரிந்து கொள்வது போலத்தான் வாழ்க்கையை புரிந்து கொள்வதும். நாம் எல்லோரும் என் வானிலே ஒரு அல்லது ஒரேயொரு வெண்ணிலா எனப்புரிந்து வைத்திருக்கும் அந்த பாடலின் வரிகள் உண்மையில் உணர்த்த நினைப்பது “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்பதைத்தான். இங்கே “ஒரே” என்பது “நிறைய” என்ற பொருளில் வரும். என் வானம் முழுக்க வெண்ணிலா என்பதுதான் அந்த “ஒரேரே” வெண்ணிலா.

பலர் பிறந்ததில் இருந்து கேட்டு வளர்ந்த அந்த பாடலை தவறாக புரிந்து கொண்டது போலத்தான் வாழ்க்கையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம். வாழ்க்கை ஒருபோதும் புரிந்துகொள்ளும் பதத்தில் இருப்பதில்லை அல்லது வாழ்விற்கு புரிந்துகொள்ளுதல் எனும் அடைவு இல்லை என்பதே என் கருத்து.

தவிர நம்முடைய சரியான பதில்கள் வாழ்க்கைக்கு ஒருபோதும் பொருந்தாது. ஏனெனில் வாழ்க்கையென்பது ஒரு தவறான கேள்வி.

-துருவன் செல்வமணி சோமு.

துளி -9

மனிதனின் மனம் பல நுட்பமான உணர்ச்சிகளின் நூலிழைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது . ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும் இந்த உணர்ச்சியலைகளின் பேத சுருதிகளில் சிக்கிக்கொண்டு தான் மானுட வாழ்வு அலைகழிகிறது. ஒருவனுக்கு முக்கியமானதாகத் தோன்றும் ஒன்று மற்றவனுக்கு அற்பமானதாக காட்சியளிக்கலாம். மற்றவனுக்கு அற்பமானதாக காட்சியளிக்கும் ஒன்று இன்னொருவனுக்கு உயிரை விட மேலானதாக தோன்றலாம். இந்த தோற்ற மயக்கங்களில் தான் மனிதன் காலம் காலமாக சிக்குண்டு கிடக்கிறான்.

மனித மனத்தை ஆராய்ந்து வெளிவந்து இருக்கிற நூல்களில் நான் முக்கியமாகக் கருதுவது சிக்மண்ட் பிராய்ட் எழுதிய கனவுகளின் விளக்கம் என்கிற நூலை தான். ஏனெனில் அதுவரை உளவியல் நூல்கள் கற்பித்த பல கற்பிதங்களை சிக்மன்ட் பிராய்டு தனது ஒரே புத்தகத்தின் மூலமாக மாற்றி எழுதினார். நான் அடிக்கடி வாசிக்கும் அந்தப் புத்தகத்தில் என்னை கவர்ந்த ஒரு வரி இருக்கிறது. மனித மனம் ஏதேனும் ஒன்றுக்கு காலம் காலமாக அடிமைப்பட்டே இருக்கிறது.
.
உண்மைதானே.. நாம் எல்லோரும் ஏதோ ஒன்றுக்கு அடிமைகள் தானே. ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு உணர்ச்சிக்கோ கொள்கைக்கோ, வாழ்வியல் முறைக்கோ, அடையாளத்திற்கோ, பண்பாட்டு விழுமியங்களுக்கோ , இந்த பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதேனும் ஒன்றுக்கு அடிமையாக தானே இருந்து வருகிறான். அன்றாடம் போதையில் தள்ளாடும் ஒருவனை அவன் குடிக்கு அடிமை, கஞ்சாவுக்கு அடிமை என்றெல்லாம் நம்மால் சொல்லிவிட முடிகிறது. ஆனால் உள்ளீடாக காணும்போது நாமும் ஏதேனும் ஒன்றுக்கு அடிமையாக தான் இருக்கிறோம். இதைத்தான் பௌத்தம் ஆசை என்று உருவகிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

அந்த அடிமை உணர்ச்சியே மனித வாழ்வின் ஆதாரசுருதியாக இருக்கிறது. அந்த தீவிர உணர்ச்சி தான் மனிதனை இயக்குகிறது. ஏதேனும் ஒன்றுக்கு அடிமைப்பட மனித மனம் விழைவதைதான் நம் வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.
.
நான் சட்டக் கல்லூரியில் படித்தபோது இறுதியாண்டில் நீதிமன்ற வளாகங்களுக்கு நேரடியாக சென்று பயிற்சி பெறுகிற முறைமை இருந்தது. அப்படி பயிற்சிக்காக திருச்சி நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த காலத்தில் புகழ்பெற்ற வழக்கு ஒன்று அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு ஊடகங்களால் புகழ்பெற்ற பிரேமானந்தா சாமியார்.

அந்த வழக்கை நடத்துவதற்காக டெல்லியிலிருந்து புகழப்பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள் வந்திருந்தார். சட்டக்கல்லூரி மாணவர்களை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் சென்ற எங்களது ஆசிரியர்கள் அந்த வழக்கு நடைபெறுகிற நீதிமன்றத்தில் எங்களை அமர வைத்து இருந்தார்கள். எங்களுடன் படித்த பல பெண்கள் பிரேமானந்தாவை காண மறுத்து வெளியே சென்று விட்டார்கள். ஏனெனில் ஊடகங்கள் அவரை அவ்வாறு மிகக்கொடுமையான வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள்.ஆனால் எனக்கெல்லாம் பிரேமானந்தாவை காண மிகுந்த ஆர்வம்.

ஒரு மஞ்சள் நிற வேட்டி மற்றும் அதே நிற துண்டோடு பிரேமானந்தா சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு காவல்துறையால் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். பல நாட்கள் அந்த வழக்கின் விசாரணை நடந்தது. ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின் போது பிரேமானந்தா அருகே சென்று அவருக்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலரிடம் என்னை சட்டக்கல்லூரி மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அனுமதி பெற்று பிரேமானந்தாவிடம் பழகத் தொடங்கினேன்.

உண்மையில் அவர் மிக எளிய மனிதர். பழகும் அனைவரிடமும் ராஜா என்று அன்புடன் அழைத்து உரையாடுபவர். ஊடகங்கள் விவரித்தது போல இல்லாமல் அவர் வேறு ஒரு வடிவத்தில் இருந்தது எனக்கு மாபெரும் வியப்பாக இருந்தது. உண்மையில் ஊடகங்கள் ஒரு மனிதனை தாங்களாகவே தயாரிக்கின்றன. அவைகள் சித்தரிக்கும் போக்கில்தான் நாம் அவர்களை உணர்ந்து கொள்கிறோம் என்கின்ற மகத்தான உண்மை புலப்பட்ட காலம் அது.


பிரேமானந்தாவிடம் அரசியல் ,ஆன்மீகம், மொழி, இனம் என பல கருத்துக்களில் நான் உரையாடத் தொடங்கினேன். உரையாடிய போது தான் தெரிந்தது அவர் நிறைய படித்திருக்கிறார் என. அவர் பேசுவதற்கு மிகவும் சுவாரஸ்யமான நபர். அவர் எதிர்கொண்டு இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்டு சங்கராச்சாரி போன்ற இந்து மத வைதீக சாமியார்களால் கட்டமைக்கப்பட்ட புனையப்பட்ட ஒன்றாக அவர் கருதினார். அவர் அடைந்திருந்த புகழும்,சொத்தும், பணமுமே இதற்கெல்லாம் காரணம் என்று அவர் கூறினார். அவர் ஒரு இலங்கைத் தமிழர். ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தினை அப்போது அவர் மானசீகமாக ஆதரித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மாபெரும் வீரன் என்று புகழ்ந்துரைத்தார். இந்துமத தீவிரவாதத்திற்கு எதிராக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களெல்லாம் ஒன்று கொலை செய்யப்படுவார்கள், இல்லையேல் தன்னைப்போல குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அந்த நேரத்தில் அவர் தெரிவித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் விபூதிப்பட்டை, ருத்ராட்சம் ஆகியவை அணிந்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு இந்து மத சாமியார் தானே என்று கேட்டதற்கு.. அவர் சட்டென சிரித்து நான் அணிந்திருக்கும் விபூதிப் பட்டைக்கும் இவர்கள் சொல்லும் இந்து மதத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றார். அப்படி என்றால் உங்கள் மீது சாட்டப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு.. இது ஒரு குற்றச்சாட்டு என்றால் இங்குள்ள எல்லா சாமியார்களும் என்னைப்போல கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வேண்டியவர்கள்தான் என்று கோபமாகக் கூறினார். உங்கள் மீதான கொலை குற்றச்சாட்டு என்று கேட்டதற்கு அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று மறுத்தார்.

இப்படியெல்லாம் நீண்ட எங்களது உரையாடல்‌ ஒருநாள் மனித மனம் பற்றி நிகழ்ந்தது. ஆசை தான் அனைத்திற்கும் காரணம் என்கிறாரே புத்தர் அதுபற்றி என்ன சாமி உங்கள் கருத்து என்று அவரிடம் கேட்டபோது… ஆசை இல்லாவிட்டால் மனிதன் ஏது .. மனிதனே இல்லாவிட்டால் உலகம் ஏது… மனிதனே உலகத்தை உருவாக்குகிறான். ஆசைதான் மனிதனின் உடலில் உதிரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆசையற்ற மனிதன் உதிரமற்ற உடல் என்றார். மனிதனின் பிறப்பு முதல் அவனது இறப்பு வரை அனைத்தும் ஆசையால் நிகழ்கிறது என்றார். தொடக்கத்தில் இயற்கைக்கு முன்னால் அடிமையாக இருந்த மனிதன் தான் பிறகு தனது மன உந்துதல் காரணமாக இயற்கையை வெல்லும் வழியை அறிந்தான். அந்த அடிமை உணர்ச்சியும் ,மன உந்துதலுமே நவீன காலத்தில் ஆசையாய் வடிவெடுத்து நிற்கின்றது என்றார்.

அப்படி என்றால் நீங்கள் அடைந்திருக்கும் எல்லா துயரத்திற்கும் நீங்கள் கொண்டிருக்கின்ற ஆசைகள் தான் காரணமா.. என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே ..”ராஜா என்னை மடக்கப் பார்க்கிற.. என் ஆசைகள் என் பிரச்சனைகளுக்கு காரணம் இல்லை ராஜா.. என்னை எதிர்த்தவர்களின் ஆசைகள்தான் என் பிரச்சனைகளுக்கு காரணம்” என்றார். பயிற்சி முடிந்த பிறகு அவரிடம் விடை பெற்றுக் கொள்ள ஒரு நாள் அவரை சந்தித்தபோது எனக்கு ருத்ராட்சம் ஒன்றினை நினைவு பரிசாக அளித்தார். அப்போது நான் “ஏன் சாமி வாயிலிருந்து ஒரு லிங்கத்தை எடுத்து கொடுக்க கூடாதா..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

“போங்க ராஜா ..கிண்டல் பண்ணாதீங்க. நல்லா இருங்க.. என்று வாழ்த்தி அனுப்பினார். அதற்கு பிறகு அவரை நான் எங்கும் சந்திக்கவில்லை‌‌.
தீவிர சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும் அவருக்கு அப்போதே இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையிலே அவர் காலமானார்.

அவர் சொன்ன அந்த ஒரே ஒரு வரி தான் எனக்கு வெகு நாட்கள் உறுத்திக் கொண்டிருந்தது. பிறரின் ஆசை தான் எனது துயரங்களுக்கு காரணம்..என்று அவர் அன்று சொன்னது.

அப்படி என்றால் அடுத்தவரின் உணர்ச்சி கூட நம்மை பாதிக்கிற ஒரு சிக்கலான கண்ணியில் நாம் மாய முடிச்சால் விலங்கிட்டு இருப்பதைத்தான் வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ..?

எதுவானால் என்ன..

நீங்களும் நானும் நினைப்பது போல வாழ்க்கை இல்லை என்பது மட்டும் உண்மை.

அதன் அர்த்தம் புரியும் போது நாம் வாழ முடியாதவர்களாக இறக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமமே. இன்னமும் சஸ்பென்ஸ் நீங்காத ஒரு முடிவிலி திரைப்படக்கதை போல நாமும் நமக்கு புரிந்த வரையில் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். அதுவும் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.

 

துளி – 8

கடந்த 8 வருடங்களாக நாம் தமிழர் என்கின்ற இந்த பெரும் பயணம் எண்ணற்ற அனுபவங்களை வாரி வழங்கியிருக்கிறது. நாம் தமிழராய் இணைகின்ற ஒவ்வொரு இளைஞனும் பொற்கால எதிர்காலம் ஒன்றை உருவாக்க லட்சிய தாகம் உடைய தனித்துவனாய் மாறுவதை நான் பெருமிதத்துடன் கவனித்து வருகிறேன்.

அதுவரை ஆங்கிலம் கலந்து பேசுகிற அவனது உதடுகள் வலுக்கட்டாயமாக தமிழில் பேச முயற்சிப்பதை கண்டு நான் வியந்திருக்கிறேன் ‌. பிரபாகரன் என்பது தனி மனிதனின் பெயர் அல்ல. அது ஒரு தத்துவம் வாழ்வியல் கோட்பாடு தனிமனித ஒழுங்கு என்றெல்லாம் அவரவருக்கு புரிந்த அளவில் அர்த்தப்படுத்திக் கொள்கிற கூட்டத்தில் அவனும் ஒருவனாக இணைவதை கண்டிருக்கிறேன். இனம் அழிந்த கதையை எப்போதும் மறக்காமல் சினத்தை கொள்கையாக தேக்கி உலவுகிற லட்சிய மனிதனாய் அவன் படிப்படியாக மாறுவதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

எதை செய்தாலும் அந்த இளமைக்கே உரிய கேலி கிண்டல்களுடன் கூடிய துள்ளல் தொனியோடு காற்றாய் திரியும் அவனது வாலிபம் கூடி செயல் செய்வதை ஒரு இயல்பாகக் கொண்டிருப்பதை கண்டு நான் ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை உறுதிமொழி எடுக்கும் போது , வீரவணக்கம் செலுத்தும் போதும் அடங்க முடியாத உணர்ச்சி அலைகளோடு அவன் போராடுவதை நான் நுட்பமாக அறிந்திருக்கிறேன்.

அணிந்திருக்கும் கருப்புச்சட்டை வேர்வைத் துளிகளால் பூத்து வெளுக்க‌.. உரத்த முழக்கத்தோடு வீதிகளிலேயே திரியும் அவன் பிற கட்சிகளின் மத்தியில் … அவர்கள் கண்டு வியக்கிற.. சொல்ல தயங்குகிற… உலவும் இளம் புலி.

அப்படித்தான் இன்றைய இரவும் இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் கையில் துண்டறிக்கைகள் நிரம்பிய பெரிய பைகள் .

சமீபகாலமாக அவர்களை நான் கவனித்து வருகிறேன். எதையாவது செய்து சமூகத்தின் மீது படிந்திருக்கிற கரைகளில்/குறைகளில் ஏதேனும் ஒரு புள்ளியில் மட்டுமாவது அழித்துவிட முடியாதா என்கிற ஏக்கத்தோடு திரியும் இளைஞர்கள் அவர்கள். அண்மையில் எங்கள் ஊரில் பனை விதைகள் நடும் முகாமை வெற்றிகரமாக அந்த இரு இளைஞர்களும் தான் செய்து முடித்தார்கள்.

இந்த இளம் வயதில் இப்படிப்பட்ட லட்சிய வேகம் கொண்ட இளைஞர்கள் ஒரு தத்துவத்தின் பால் இழுக்கப்பட்டு ஒன்றாக கூடி பெரும் அரசியலை இந்த மண்ணில் நிகழ்த்த முயற்சிப்பது கண்டு பல பெரும் கட்சிகள் அதிர்ச்சியுற்று இருக்கின்றன.

இளம் வயதில் பரிமாறிக் கொள்ள எத்தனையோ கனவுகளும் / காதல்களும் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் மீறி மண்ணை நேசிப்பது அரசியலை ஒரு புனிதக் கடமையாக எண்ணி நிறைவேற்ற முயல்வது என்பதெல்லாம் சமகால இளைஞர்கள் மத்தியில் காண்பது மாபெரும் நம்பிக்கையை தருகிறது.

இப்போதும் அந்த இளைஞர்கள் கரங்களில் ஆயிரக்கணக்கான துண்டறிக்கை. என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டேன்..
வருகின்ற தீப ஒளி திருநாளில் ஏற்படுகிற சுற்றுச்சூழல் கேட்டினை விளக்கி அச்சிடப்பட்டிருக்கின்ற துண்டறிக்கையை கும்பகோணம் பள்ளி மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கலாம் என்று இருக்கிறோம் என்றார்கள்.

 

 

அந்த இருவரும் என் வீட்டில் இருந்த எனது மகன்கள் பகவலனுக்கும்,சிபிக்கும் துண்டறிக்கைகள் வழங்கி பணியை தொடங்கினார்கள். பட்டாசு வெடிக்கக் கூடாதா என்று தயங்கிய பகலவனிடம் அதற்கான காரணங்கள் விரிவாக விளக்கப்பட்டது ‌. ஒரு மாதிரியான அரைகுறை புரிதலோடு பகலவன் ஒத்துக் கொண்டான். தனக்கும் 54 துண்டறிக்கைகள் வேண்டும் (50 பள்ளிக்கு 4 கராத்தே வகுப்பிற்கு..) எனக் கேட்டு வாங்கிக்கொண்டான். எனது மூத்த மகன் சிபி அவன் அவனது சீமான் பெரியப்பாவின் பேச்சை கேட்டதிலிருந்து தீபாவளியை கொண்டாடுவதில்லை ‌. திரைப்படம் பார்ப்பதோடு சரி.

வந்த வேலை முடிந்தது அண்ணா என்றார்கள். ஊர் முழுக்க துண்டறிக்கைகள் கொடுக்க வேண்டும் என்றார்கள். நானும் தொகை தருகிறேன் ..
அடித்துக் கொள்ளுங்கள் என்றேன்.

அந்த துண்டறிக்கையை நான் வாசித்த போது தான் நுட்பமான ஒன்றினை கண்டறிந்தேன். அந்த துண்டறிக்கையில் இந்த மாபெரும் பணியை செய்கின்ற அந்த இளைஞர்களின் பெயரோ.. புகைப்படமோ எதுவும் இல்லை. தொடர்பிற்கான அலைபேசி எண்ணாவது அதில் இடம் பெற்றிருக்க வேண்டும் என நான் அவர்களை கடிந்து கொண்டேன். அவர்கள் அதற்கு அவர்களைக் உரித்த மெல்லிய குரலில் நோக்கம் போய் சேர்ந்தால் போதும் அண்ணா என்கிறார்கள்.

என் பெயரை ஏன் போடவில்லை/ ஏன் சொல்லவில்லை/ என்னை ஏன் மதிக்க வில்லை ..என்றெல்லாம் அரசியல் அநாகரிகங்கள் மிகுந்த இம் மண்ணில்தான் அந்த இரு இளைஞர்களும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். இது நாம் தமிழருக்கே உரிய தனித்துவ தன்னல மறுப்பு. தன்னை முன்னிறுத்தாமல் தத்துவத்தை முன்னிறுத்துகிற பெருங்குணம்.

இவர்கள் தான் நாம் தமிழரின் பெருமைமிக்க அடையாளங்களாக ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும்.. எங்கெங்கெல்லாம் தமிழன் வாழ்கின்றானோ அந்தந்த பகுதிகளிலும்..
இந்த இளைஞர்களைப் போல் பல்லாயிரக்கணக்கான தன்னல மறுப்பு இளைஞர் கூட்டம் ஒன்று தானே உருவாகி நிற்கிறது.

அவர்களிடம் கேளுங்கள்.
நாம் தமிழர் என்ற முழக்கத்திற்கான விளக்கத்தை..

அவர்கள் செயலால் உங்களுக்கு புரிய வைப்பார்கள்.

புரட்சி வாழ்த்துக்கள் இளையவர்களே.

Vicky Tamilan ( குடந்தை மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்)
Muthu Arun.(குடந்தை சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர்)

உங்களுடன் நிற்பதுதான் எமக்கான
தகுதி.

வழக்கறிஞர் மணி செந்தில் ,
மாநில இளைஞர் பாசறை செயலாளர் ,
நாம் தமிழர் கட்சி.

துளி-7

அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் கார்த்திக்கும் கதாநாயகி ராதாவும் அவரவர் மத அடையாளங்களை அறுத்து தெரிவது போல ஒரு காட்சி வரும். இதேபோல சாதியை அறுத்தெறிய முடியுமா என்றால்..‌ முடியாது. ஏனெனில் சாதி வெறும் அடையாளங்களால் பின்னப் பட்டது அல்ல. இந்தியச் சமூகத்தின் ஒவ்வொரு இழையும் சாதிய உணர்வினாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக வருணாசிரம அடுக்குகளை இந்த சாதிய பெருமித உணர்வே மிக கவனமாக பாதுகாத்து வருகிறது.

உங்கள் முன்னால் அன்புடன் கைகுலுக்க வரும் கரங்கள் ஏதேனும் தனிப்பட்ட காரணத்தினால் தயங்கி இருக்கிறதா.. உங்கள் சாதி வெளிப்படையாகத் தெரியாத வெளியூரில் நீங்கள் மேற்படியா என்று விசாரிக்கப்பட்டு இருக்கிறீர்களா.. நீங்கள் படித்த பள்ளியிலோ கல்லூரியிலோ வேலை பார்க்கும் இடத்திலோ எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் ஏதேனும் ஒரு குழுவில் சேர்க்கப்பட்டு இருப்பதை நினைத்து கூசி இருக்கிறீர்களா… உங்களை எதிர்கொள்ளும் ஆசிரியரோ அல்லது மேலதிகாரியோ பக்கத்து வீட்டுக்காரரோ உங்களது சொந்த ஊர் பற்றி வணங்கும் குல சாமி பற்றி தெரிந்து கொள்ளும் அதீத ஆர்வத்தை என்றேனும் சந்தேகித்து இருக்கிறீர்களா.. உங்களது சுய சாதி அடையாளம் எப்போதும் உங்கள் முதுகுத்தண்டுவடத்தில் ஊருகிற அருவருப்பான மொசுக்கட்டை என உணர்கிறீர்களா..

உங்கள் பதில்கள் ஆம் எனில் நீங்கள் பரியேறும் பெருமாளை புரிந்துகொள்ள தகுதியானவர் என்று பொருள்.

…..

படத் துவக்கத்தில் வரும் கருப்பியின் கழுத்தில் கட்டப்பட்டு தண்டவாளத்தோடு இணைக்கப்பட்டுள்ள அத்துண்டு வெகு சாதாரணமானது அல்ல. அத்துண்டு சிலருக்கு தலையில் இருக்கிறது. அத்துண்டு சிலருக்கு தோளில் இருக்கிறது. அத்துண்டு சிலருக்கு இடுப்பில் இருக்கிறது. அந்த துண்டு உங்கள் உடலில் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்பதில்தான் சாதிய பெருமிதத்தின் கொடூரம் ஒளிந்திருக்கிறது.

படத்தின் முடிவில் 2 காலியான டீ கிளாஸ்கள் சமத்துவத்தின் குறியீடாய் காட்டப்படுகின்றன. அந்த இறுதிக் காட்சியில் கதாநாயகன் பரி பேசும் ஒரு உரையாடல் குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு எல்லாம் மனதில் பட்டதை நேரடியாக சொல்லி விட முடிகிறது. ஆனால் என் மனதில் உள்ளதை சொல்ல கூட நான் இவ்வளவு அடி உதை அவமானம் ரத்தம் ஆகியவை பட வேண்டியிருக்கிறது என்பதான அந்த வசனம்.

அப்படி என்றால் அந்த சமமான 2 தேநீர் கோப்பைகள் ஒருவித பாவனையா.. பாசாங்கா‌.. என்றால் .. ஆம் அது ஒரு பாவனை தான். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிற ஒரு கேட்டினை ஒரே ஒரு உரையாடல் மூலம் தகர்த்து விட முடியாது என்று பரியேறும் பெருமாளுக்கும் புரிந்திருக்கிறது . அதனால்தான் அவன் மெளனிக்கிறான்.

நான் படத்தைப் பற்றி அதிகம் பேசப்போவதில்லை. ஏனெனில் படம் அதிகமாகப் பேசி விட்டது. மனிதனாக தன்னை உணர்கிற ஒவ்வொருவரும் திரையரங்கிற்குச் சென்று இப்படத்தை அவசியம் காண வேண்டும். கோடிகளில் கொழுப்பெடுத்து மாபியாக்களின் கதையை படமாக எடுத்து உதிரக் கறைகளால் திரையை சிவக்கவைக்கிற வேலை அல்ல இது. நாம் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கிற அசலான மக்களின் வாழ்வியல்.

குறியீடுகளால் நிரம்பி வழிகிறது பரியேறும் பெருமாள். கருப்பி, தண்டவாளம்,கெளசல்யா,இளையராஜாக்கள்,அம்பேத்கரிய கல்லூரி முதல்வர் ,தேனீர் குவளைகள் என விரியும் குறியீட்டுக் காட்சிகளில் சாதி என்கிற சொல் எங்கும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதி எங்க சார் இருக்கு.. என மேலோட்டமாக பேசி போகிறவர்களை செவுளில் அறைந்து வாயை மூடி உட்கார வைத்து இருக்கும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் ஒரு திரைப்படம் மட்டுமல்ல. நம் சமூகத்தை நாமே பார்த்து வெட்கி தலைகுனிந்து கொள்கிற சுயபரிசோதனை.

சுயசாதி பெருமிதத்தை தன்னுள் ஒழிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இத்திரைப்படம் ஒரு ஆத்ம நியாயம்.
சாதி கட்டமைப்புகளில் இருந்து வெளியேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இத்திரைப்படம் ஒரு பெருவழி. துளியேனும் சாதி என்னும் அழுக்கு ஒட்டியிருக்கும் எவருக்கும் இத்திரைப்படம் ஒரு இதய சுத்திகரிப்பு.

நானெல்லாம் என் சாதியை சொல்ல மறுத்ததாலேயே தமிழன் இல்லை என்று பட்டம் கட்டப்பட்டு தெலுங்கனாக சௌராஷ்டிரா வாக அலைந்து திரிபவன்.
என்னைப் போல அண்ணன் சீமான் , பாக்கியராசன் போன்ற பலர் மலையாளிகளாக தெலுங்கராக பட்டம் கட்டப்பட்டு திரிபவர்கள் தான்.

சாதிதான் என்னை தமிழன் என்று அடையாளப்படுத்தும் எனில்.. நான் தமிழனே இல்லை என்று முன்னொரு நாள் நான் முகநூலில் பதிவிட்டதற்கு அண்ணன் சீமான் தான் சிரித்துக் கொண்டே சொன்னார்.

அப்படி சொல்லாதே. சாதி கேட்பவனை, சாதி சொல்பவனை தமிழன் இல்லை என்று சொல்லப் பழகு.

உண்மைதான். சுய சாதி மறுப்பாளர்களும், காலம் காலமாய் இந்த மண்ணில் சாதியத்தால் அடக்கி ஒடுக்கி ஆளப்பட்டு வந்திருக்கிற இம்மண்ணின் பூர்வகுடி மக்களும் ஒன்றாக கூடிநின்று..

நம்மை அடிமைப் படுத்தும் சாதியத்திற்கு எதிராக.. வர்ணாசிரம மதத்திற்கு எதிராக பெரும் கலகம் புரிய வேண்டி இருக்கிறது. இதைத் தாண்டி நிற்கின்ற முரண் புள்ளிகளை இதன் பொருட்டாவது நாம் தள்ளிவைத்துவிட்டு ஒன்றாகக் கூட வேண்டியிருக்கிறது. மேலும் தமிழர் என்ற சொல்லே சாதி மறுத்த, சாதியத்திற்கு எதிரான ஒரு அரசியல் சொல்லாக நாம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

சுய சாதிப் பெருமிதம் என்பது ஒரு வித மனநோய். அந்த மனநோய் கொண்டவர்களை ஒன்று குணப்படுத்த வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் அவர்களை நாம் எல்லாம் கூடி எதிர்க்க வேண்டும்.

உங்களுக்கு மனிதனாக வாழ..
மனிதனாக உணர.. இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒன்று பரியேறும் பெருமாள் ஆக இருப்பது. இல்லையேல் சாதி மறுத்த அவனது நண்பன் ஆனந்தாக இருப்பது.

மாரி செல்வராஜுக்கும்… அவரது படக்குழுவினருக்கும் என் கண்களில் இருந்து வழியும் நெகிழ்ச்சி துளிகளைக் கொண்டு என் மனமார்ந்த அன்பினை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படத்தை தயாரித்த இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு பூங்கொத்து களுடன் கூடிய கை குலுக்கல்கள்.

துளி-6

 

 

 

கேள்வி -ஒரு பேட்டியின் போது நீங்கள் தொடர்ச்சியாக 90 நிமிடங்கள் அமெரிக்க பழங்குடி இந்தியர்களைப் பற்றிய பேசிக் கொண்டிருந்தீர்கள். அது எதனால்??

பதில்- சம்பந்தமற்ற கேள்வியை அவர் கேட்டுக் கொண்டிருந்ததால் நான் எனக்கு விருப்பமான பதிலை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படித்தான் bbc பேட்டி ஒன்றில் சூப்பர்மேனாக நடிப்பதற்கு எப்படி உடையை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். நான் உடனே 1973 இல் இந்தியர்கள் எப்படி தாக்கப்பட்டார்கள் என்பது பற்றி விரிவாக சொன்னேன் . மறுநாள் பத்திரிகையில் இது கேலிக்கூத்தானது. ( எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உலக சினிமாவில் …. )

*************************

கொள்ளைக்கூட்ட பாஸ் என்றால் பெரிய சோபாவில் கண்ணாடி போட்டு அவர் அமர்ந்திருக்க… கவர்ச்சி உடை அணிந்து ஒரு பெண் நடனம் ஆட.. அவருக்குப் பின்னால் கோடு போட்ட பனியன் அணிந்த 4 தடியன்கள் நின்றுகொண்டிருக்க.. அவரே வில்லன் என்று அழைக்கப்படுவார் .

இதுவே காலம் காலமாக சினிமாவில் எழுதப்பட்டு வந்த விதி. இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல. ஹாலிவுட் சினிமாவிற்கும், அதையே பிரதிபலித்த உலக சினிமாக்களுக்கும் ஒருசேர எழுதப்பட்ட விதி.

ஆனால் 1972ல் வெளிவந்த ஒரு திரைப்படம் வழமையான சினிமா கோட்பாடுகளை மாற்றி எழுதியது. கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கும் ஒரு குடும்பம் இருந்தது. அவன் நேசித்துக் கொண்டாட அவனுக்கென ஒரு மனைவி இருந்தாள். அவன் வாழ்வில் அவன் கலங்க நெகிழ அவனுக்கென சில மிருதுவான பக்கங்கள் இருந்தன. இதையெல்லாம் தாண்டி அவன் மிக வலிமையானவன். அவனது வலிமையை காப்பாற்ற அரசியலும் அதிகாரமும் அவனுக்கு துணை நின்றன. எல்லாவிதமான முடிவுகளையும் மாற்றி எழுத அவனால் முடியும். சிற்சில சிறிய சொற்கள் தனக்குப் பின்னால் நிற்கின்ற தன் உதவியாளரிடம் வாய் முணுமுணுப்போடு சொல்கின்ற சில சொற்களோடு அவனது வில்லத்தனம் முடிந்துவிடுகிறது. இப்படித்தான் உண்மை வாழ்வில் கொள்ளைக்கூட்ட பாஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு கேங்ஸ்டர் இருக்கக்கூடும் இன்று நம்மை நாமே நம்ப வைத்த அந்த அற்புத நடிகனின் பெயர் மார்லன் பிராண்டோ. இந்தப் பத்தியின் தலைப்பிலே வரும் பரபரப்பான பதிலைச் சொன்ன மாறுபட்ட ஆளுமைதான் பிராண்டோ.

வில்லன் என்றால் காட்டு கத்து கத்திக்கொண்டும், கவர்ச்சி நடிகையோடு குத்தாட்டம் போட்டுக் கொண்டும் , எதிர்ப்படும் பெண்களையெல்லாம் கற்பழித்து கொண்டும், தென்படும் நபர்களையெல்லாம் கொன்று கொண்டும், சதா குடித்துக் கொண்டும்.. இருக்கின்ற மனநோயாளியா என்று நாம் சிந்திக்கும் புள்ளிகளிலிருந்து மார்லன் பிராண்டோ என்கிற உன்னத கலைஞனின் தாக்கம் புரியத் தொடங்குகிறது.

வில்லன் நம்மோடு வாழ்பவன். நம்மைச் சார்ந்தவன். சில குணாதிசய முரண்களால் நம்மோடு வேறுபட்டு நம் எதிரே நிற்பவன். அவனும் நம்மைப் போல இயல்பான சாதாரண மனிதன். ஆனாலும் வாழ்வியல் சூழலில் அவன் அவ்வாறாக ஆக்கப்பட்டு சமூகத்தின் முரண் புள்ளியாக நம் முன்னால் நிற்கிறான். அவன் வலிமையால் கதாநாயகனை வெல்ல நினைக்கிறான். சில சமயங்களில் அவனே கதாநாயகனாக மாறுகிறான்‌.

மார்லன் பிராண்டோ ஒரு ஆகச் சிறந்த கலைஞர். மானுடப் பற்றாளர். பூர்வகுடி மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் நசுக்குகிறது என்ற காரணத்தினால் தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை வாங்க மறுத்தவர்.

பிரபல நடிகர் ஜாக் நிக்கல்சன் சொல்வது போல மார்லன் பிராண்டோ இறந்தபிறகுதான் இனி ஒருவர் நடிகராகவே கருதப்படுவார். ஏனெனில் மார்லன் பிராண்டோ விற்கு இறப்பே கிடையாது.

அவர் நடித்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ். மூர்க்கமும் காமமும் நிறைந்த மனிதனாக அதில் பிராண்டோ வாழ்ந்திருப்பார்‌. அடுத்தது புகழ்ப் பெற்ற காட்பாதர். இந்தப் பத்தியின் துவக்கத்தில் இருந்து நாம் பேசி வந்தது. மரியோ புஜோ என்பவரின் நாவல் திரைப்படமாக்கப்பட்டது. அதில் வீடோ கொர்லேனே என்கின்ற நியூயார்க் நகரத்து நிழல் உலக, செல்வாக்கு மிக்க வயதான டானாக அவர் நடித்திருப்பார். சிறிய சிறிய அசைவுகளிலும் கூட ,கன்னக்கதுப்புகளில் கூட classic என்று சொல்லப்படக்கூடிய அற்புத நடிப்பை அவர் கொண்டிருப்பார். நடிப்பிற்கும், நிஜ வாழ்விற்கும் இடையே இருக்கிற மெல்லிய கோட்டினை முற்றிலும் அழித்து எறிந்தவர் மார்லன் பிராண்டோ.

அவருடைய அந்தக் கதாபாத்திரத்தை தழுவியும் அதே போலவும் அதன் பாதிப்பிலும் ஏராளமான திரைப்படங்கள் வந்து விட்ட சூழலில் தமிழ்த் திரையில் மார்லன் பிராண்டோ எத்தகைய பாதிப்புகளை கொண்டு வந்தார் என்பதை இயக்குனர் மணிரத்தினத்தை வைத்து நாம் சற்றே சிந்திப்போம்.

குறிப்பாக காட்பாதர் பாதிப்பு இயக்குனர் மணிரத்னத்திற்கு கடுமையாக உண்டு. அவருடைய ஆரம்ப காலகட்ட படமான பகல் நிலவு, அக்னி நட்சத்திரம் , தளபதி ஆகிய பல படங்களில் வில்லன்களின் உருவாக்கம் காட்பாதர் தாக்கத்தில் எழுந்ததே. அவருடைய புகழ்பெற்ற நாயகன் திரைப்படம் காட்பாதர் படத்தின் நேரடியான தாக்கத்தில் உருவான கதை.
தற்போது வெளிவந்து இருக்கிற மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானத்திலும் சேனாதிபதி என்கின்ற காட் பாதரின் குடும்பத்தைப் பற்றியே கதை எழுதியுள்ளார்.

மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ,உலகப் புகழ் வாய்ந்த இசை அமைப்பாளர் , புகழ் பெற்ற நடிகர்கள் என்றெல்லாம் கூட்டு அமையும்போது படத்தின் தொழிற்நுட்ப தரம் வியக்கவே அமையும் ‌. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல ‌. மற்றபடி என்னைப் பொறுத்தவரையில் இது வெகு சாதாரண ஒரு திரைப்படமே. நான்கு புகழ் வாய்ந்த நடிகர்களுக்கு காட்சிகளை மிகச் சரியாக பிரித்து வழங்கியதில் கவனம் காட்டிய இயக்குனர் சற்று கதையிலும் கவனம் காட்டி இருந்தால் பாராட்டி இருக்கலாம். அண்ணன் தம்பிகளுக்குள் அப்பன் சொத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்படுகிற பிரச்சனை பற்றி தமிழில் வந்திருக்கிற ஆயிரத்தி நூறாவது படம் இது. நால்வரில் அருண் விஜய் மட்டுமே தேறுகிறார். விஜய் சேதுபதி என்கின்ற உன்னத கலைஞனுக்கு மிகச்சாதாரண வேடம். தனி ஒருவனில் கலக்கிய அரவிந்த்சாமி இதில் வேறு விதமாக தோன்றுகிறார். சிம்பு தன் உடம்பை பராமரிக்காவிட்டால் இதுபோன்ற வாய்ப்புகளை இது போன்றே பயன்படுத்திக் கொள்ள முடியா நிலைமை ஏற்படும். குறிப்பாக தன் காதலியை சுட்டவனை துரத்திக்கொண்டு ஓடும் காட்சியில் மிகப் பரிதாபமாக பருத்த உடலை தூக்கிக்கொண்டு சிம்பு ஓடுவது பொருத்தமில்லாத காட்சி. மணிரத்னம் படம் என்றாலே யாரோ ஒருவர் மட்டும் உரக்க கத்தும் வசனக் காட்சிகள் இதிலும் உண்டு. பல திறமையான புதியவர்கள் திரைத்துறைக்கு வந்துவிட்டார்கள். மணிரத்தினம் தன்னை அப்டேட் செய்துகொள்ள முயற்சித்து தோற்ற திரைப்படம் தான் செக்கச் சிவந்த வானம்.

ஆளாளுக்கு சுட்டுக் கொல்வதில் திரை தான் சிவக்கிறது தவிர.. எனக்கென்னவோ கொட்டாவி தான் வந்தது.

இறுதியாக..மீண்டும் ஜாக் நிக்கல்சன் சொல்வதையே நான் வழிமொழிகிறேன். நம் மணிரத்தினற்காகவது மார்லன் பிராண்டோ சீக்கிரம் இறக்க வேண்டும். அப்போதாவது அவர் வேறு மாற்றி சிந்திக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும்.

துளி-5

உங்களுக்கு பாபுவை தெரியுமா..??

உங்களில் பலர் பாபுவை அறிந்திருப்பீர்கள். அறிந்தவர்களில் பலருக்கு அதுதான் பாபு என்று தெரியாது. பலர் பாபுவாகவே வாழ்ந்திருக்கலாம். பலருக்கு அவர்கள் வாழ்க்கையில் பாபு வாக இருக்க வேண்டிய காலம் நிகழ்ந்திருக்கலாம் ‌.

யார் இந்த பாபு..?? நீங்களும்.. நானும்தான். இதைத்தான் அந்த நாவலை படிக்கின்ற ஒவ்வொரு வாசகனும் உணர்கிறான். சில நூறு பக்கங்கள் விரிகின்ற அந்த நாவலை படிக்கின்ற ஒவ்வொருவரும் தன்னை இரகசியமாக கண்டுவிட்டு வெட்கமுறுவதுதான் அந்த நாவலின் இலக்கிய உச்சம்.
…….

இந்த வாழ்வும், அது சமைத்த விதிகளும் அலை கழிக்காத பெரும் மனிதன் யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா… வாய்ப்பில்லை. ஏனெனில் அவ்வாறு யாரும் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நினைத்து பார்க்க விரும்பாத காலம் என்ற ஒன்று இருக்கும்தானே.. அவன் அடைந்த துயரம் அவமானம், காயம், அனைத்தையும் பூட்டி ஓரமாக வைத்துவிட்டு நிகழில் பயணிப்பதாக அவன் காட்டும் பாவனைதான் அவனது வாழ்க்கையாக அறியப்படுகிறது. எது வாழ்வில் அதிகம் மகிழ்ச்சியைத் தருகிறதோ அதுவே வாழ்வில் அதிக துயரத்தை தரும் என்பது இயற்கையின் மாறா விதி. அந்தக் கொடும் விதியின் சாபத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.
……..

மீண்டும் பாபுவிற்கு வருவோம். பாபுவை நான் முதன்முதலில் எனது பதின் வயதுகளில் அறிந்தேன். அவனை அறிந்த உடனே கண்டு கொண்டேன். நான்தான் அவன் என. இதைத்தான் படித்தவர்கள் பலரும் சொன்னார்கள். அந்த மேஜிக்கை நம்முள் நிகழ்த்தியவர் மறைந்த எழுத்தாளுமை தி. ஜானகிராமன். அவர் எழுதிய மோகமுள் நாவலின் கதாநாயகனே பாபு. திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது ஆனால் இலக்கியப்பிரதி தந்த மன எழுச்சியை திரைப்படம் தர தவறிவிட்டது. இருந்தாலும் இளையராஜாவின் அருமையான பாடல்களும், இசையும் மோகமுள் என்ற இலக்கிய உன்னதத்தை இசையாகவும் உணரவைத்தது.

தமிழின் ஆகச்சிறந்த பத்து நாவல்களை பட்டியலிடும் எவரும் மறக்காமல் குறிப்பிடும் ஒரு நாவலாக மோகமுள் இன்றும் திகழ்கிறது. நான் அந்த நாவலை வெவ்வேறு காலகட்டங்களில் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வெவ்வேறு அனுபவங்களை அடைந்திருக்கிறேன். பதின் வயதுகளில் முதன்முதலாக படிக்கும்போது சில பக்கங்களை என்னால் கடக்கவே முடியவில்லை. என்னைவிட வயது மூத்த பெண்கள் சிலரைத் காணும்
போது எனக்கு யமுனா வாக தோன்றினார்கள். இதுபோன்ற வயது மயக்கங்கள் அனைத்தும் கரைந்த முப்பதுகளில் அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது உண்மையில் யமுனா என்றொரு பெண் வாழ்ந்திருக்கிறாள் என நம்பி கும்பகோணம் வீதிகளில் நான் அலைந்திருக்கிறேன். நீங்கள் சாதாரண கண்களில் பார்க்கும் கும்பகோணமும், மோகமுள் நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிற கும்பகோணமும் சற்றே நுட்பமான அளவில் மட்டுமே வேறானவை. ஏறக்குறைய புனைவின் சாத்தியங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கும்பகோணத்தை ஒரு காட்சி சித்திரமாக நம் விழிகளுக்கு முன்னால் தி.ஜா மோகமுள்ளில் நிறுவி இருப்பார்.

வளைவுகளும், குறுகிய சந்துகளும், நெருக்கடியான வீடுகளும், பாரம்பரிய மனிதர்களும் இருக்கின்ற புராதன நகர் கும்பகோணம். ஊருக்கு மத்தியில் ஓடும் எழில் நதி காவிரி. இன்னொரு புறத்தில் அந்த ஊரின் சிறு இதயம் போல மகாமகக் குளம். ஊரைச் சுற்றிலும் , ஊருக்குள்ளும் திரும்பிய இடமெல்லாம் கோவில்கள். அதனால் நிறைய வெளியூர் ஆட்கள். வார இறுதி நாட்களில் தோன்றுகின்ற நெருக்கடி, மராட்டிய, சௌராஷ்டிர மக்களின் இயல்பான கலப்பு, பார்ப்பனர்களின் பூர்விகம், பக்கத்திலேயே திருவையாறு , அதனால் இயல்பிலேயே கரைந்திருக்கும் சங்கீதம், பசும்பாலும் டிகாஷனும் ஏதோ ஒரு மாயவிகிதத்தில் ஒன்றாக கலந்து காவிரி நீரோடு இணைந்து உண்டாக்கும் தேவ சுகம் தரும் மயக்கும் டிகிரி காப்பி.. என்றெல்லாம் விவரித்துக்கொண்டே போகின்ற சிறப்புகளைக் கொண்ட கும்பகோணம் நகரமே மோகமுள்ளின் கதைக்களம்.

அதில் கல்லூரியில் படித்துக்கொண்டு சங்கீதம் பயிலவரும் பாபு விற்கும் உரிய வயதாகியும் மணமாகாமல் இருக்கின்ற யமுனா விற்கும் ஏற்படுகிற நட்பு உறவு காதல் காமம் என சகலத்தையும் விவரிக்கின்ற நாவல் மோகமுள்.

இந்த நாவலின் கதையை பலரும் அறிந்திருப்பீர்கள். இந்நாவலில் காட்டப்பட்டிருக்கின்ற கும்பகோணம் பேரழகு வாய்ந்தது. ஏறக்குறைய யமுனாவின் சாயலை ஒத்ததாகவே , சற்றே வயதான ஆனால் கவர்ச்சி குறையாத ஒரு முதிர்கன்னி போல கும்பகோணமும் காட்டப்படுவது தி.ஜாவின் மேதமை.

ஊர்களைப் பற்றி எழுதப்பட்ட பல நாவல்களை தமிழ் கண்டிருக்கிறது. தென் மாவட்டங்களின் கிராமங்களை பற்றி நுட்பமாக எழுதப்பட்ட நெடுங்குருதி,மதுரை நகரத்தைப் பற்றி எழுதப்பட்ட காவல் கோட்டம், கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளைப் பற்றி எழுதிய ஜெயமோகனின் எழுத்துக்கள், தஞ்சாவூரை பற்றி பல நூறு பக்கங்களில் எழுதி குவித்த தஞ்சை பிரகாஷின் எழுத்துக்கள், பழைய தென்னாற்காடு மாவட்ட கிராமங்களைப் பற்றி எழுதிய தங்கர்பச்சானின் எழுத்துக்கள், இன்னமும் தன் ஊரின் அடையாளமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற கி.ராஜநாரயணின் எழுத்துக்கள், என நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பட்டியல் முடிவில்லாதது.

அந்த வகையில் தி.ஜா எழுதிய கும்பகோணம் வசிஷ்டர் நிறுவிக் காட்டிய அஸ்தினாபுரத்தை காட்டிலும், கம்பன் எழுதிக் காட்டிய அயோத்தியை காட்டிலும் மிக அழகானது.

ஒரு முறை கும்பகோணம் வந்திருந்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனோடு அலைந்து திரிந்த போது மோகமுள் கதாபாத்திரங்கள் இருந்திருக்கக்கூடிய சாத்தியப்பட்ட பகுதிகளை என்னிடம் சுட்டிக்காட்டினார். ஏறக்குறைய நாவல் விவரிக்கும் தெரு பகுதி வீடு ஆகியவையும் எஸ்ரா காட்டிய பகுதிகளும் ஒரே மாதிரி இருந்தது மிக ஆச்சரியமாக தோன்றியது. நிஜமும் புனைவும் இடைவெளி இல்லாமல் போனதை நான் அப்போது உணர்ந்தேன். ஒரு படைப்பாளனால் நிஜத்திலேயே ஒரு ஊரையும் மனிதர்களையும் உருவாக்க முடியும் என்பதை நான் அறிந்தேன்.

குறிப்பாக நாவலில் வரும் தங்கம்மாள் என்ற கதாபாத்திரம் வாழ்ந்ததாக மோகமுள் சித்திரிக்கும் வீடு ஒன்றினை கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரிக்கு அருகில் காவிரிக் கரையோரம் எஸ்ரா என்னிடம் காட்டினார். பின்னொரு நாளில் அந்த வீட்டைப் பற்றி நான் விசாரித்த போது பல வருடங்களுக்கு முன்னால் அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை அறிந்தேன். அப்படி என்றால் அந்த இளம் பெண் தான் தங்கம்மாவா..

இந்த நாவலை எழுதிய தி.ஜா கூட கும்பகோணம் கல்லூரிக்கு அருகே காவிரி நதி ஓரம் அறை எடுத்து தங்கி இருந்ததாக கேள்விப்பட்டேன். அப்படி என்றால் தி.ஜா தான் அந்த பாபுவா..

இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் பாபுக்களும், தங்கமாக்களும், யமுனாக்களும் இன்றும் நம்மிடையே , நாமாக இருக்கிறார்கள். அதுதான் மோகமுள் நமக்குக் காட்டிய நமது அகஉலகத்து உண்மை.

துளி- 4

தலைவர் வருகிறார். ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் மக்களின் அழுகுரல்களால் அந்த வளாகமே முடங்கிக்கிடக்கிறது. எதற்கும் கலங்காத இரும்பை போல மனதை உடைய தலைவரும் சற்று பரிதவித்து தான் போயிருக்கிறார்.
தன் மகனை எதனாலும் இழக்கத்துணியாத ஒரு தாயின் பரிதவிப்பு அது. ஏதாவது பேசி அவனைக் கரைத்து கொல்லும் பசியிலிருந்து அவனை மீட்டு ஒரு பிடி சோற்றையாவது ஊட்டிவிட்டுத்தான் நகர வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதி வேக வேகமாக நடக்க வைத்து இருந்தது. ஆயினும் அந்த வளாகத்தின் நுழைவாயிலிலேயே தலைவர் தடுக்கப்பட்டார். ஒரு இயக்கம் கடவுள் எனக் கருதும் தன் தலைவரையே தடுக்கும் வரலாற்று நிகழ்வு அதுவரை நிகழ்ந்ததில்லை. தலைவர் விரல் நீட்டும் இடத்தில் வெடித்துச் சாகும் புலிக்கூட்டம் தலைவரை தடுத்து நிறுத்தியது அவருக்கே வியப்பாகத் தான் தோன்றியது. ஒரு விசித்திரமான நிபந்தனை அவர் முன்னால் வைக்கப்பட்டது ‌. போராட்டத்தை தடுக்க வந்தவரை போராட்டத்தை தடுக்கக் கூடாது என நிபந்தனை. தலைவர் தவித்து தான் போனார். இயக்க கட்டளை தலைவருக்கும் பொருந்தும் என உணர்ந்த அறம் வழி நின்று மறம் பாடி வென்று தாய்நிலம் மீட்க வந்த தேவ மீட்பர் அவர்.
வேறுவழியின்றி ஒத்துக்கொண்டு விக்கித்த மனதோடு தளர்ந்து நடந்துபோனார் தலைவர். அவர் முன்னால் மெலிந்த உடலம் ஒன்று விடுதலைப் பசிக்காக உயிரைத் தின்று கொண்டிருந்தது. குழிவிழுந்த கண்களோடு.. ஒடுங்கிய வயிற்றோடு.. சுவாசத்தில் மட்டும் உயிரோடு படுத்துக்கிடந்தான் திலீபன்.
எதற்கும் கரையாத தலைவர் கலங்கி விடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இதயத்தை இறுக்கி வைத்திருந்தாலும் ..கட்டி வைத்திருந்த முடிச்சுகள் ஒவ்வொன்றும் அவிழத் தொடங்கின. நெற்றியில் உள்ளங்கை வைத்து தடவிக் கொடுக்கிறார் தலைவர். உடலில் சூடு இன்னும் இருக்கிறது. போகாத உயிரோடு போராடிக் கொண்டிருக்கின்ற திலீபனை காண சகிக்காது கலங்கி அமர்ந்திருக்கிற தலைவரைப் பார்த்து ஒப்பாரி வைத்து கதறி தீர்க்கிறது தீந்தமிழர் கூட்டம்.

பார்த்தீபா என்று முணுமுணுக்கிறார் தலைவர்.

ஒடுங்கியிருந்த விழிகளுக்குள் அசைவு தென்படுகிறது. உலர்ந்து போன உதடுகள் மெலிதாக உராய்ந்து பார்க்கின்றன. அதைத் தாண்டி எதையும் அசைக்க திலீபனால் முடியவில்லை. அது மரணமில்லாப் பெருவாழ்வை நோக்கி நடந்த பெரும் பயணம் என்பதை தலைவர் உணர்ந்துகொண்டு பெருமூச்செறிந்தார்.

பார்த்தீபன் பசித்துக் கிடந்தான்.

வெறும் சோற்றிலும்,
ஒரு அவுன்ஸ் தண்ணீரிலும்,
அடங்கி விடக்கூடிய சாதாரண பசி
அல்ல அது..

சரித்திர வீதிகளில் சாபமாய் தொடர்கிற
துப்பாக்கி முனைகளுக்கும் எதேச்சதிகார குரல் நெறிவுகளுக்கும்..
எதிராக எழுந்த ஓங்கார பசி.

தலைமுறை தலைமுறையாய் தொடரும் ஒரு அடிமைப் பட்ட இனத்தின் விலங்கொடிக்க எழுந்த புலிகளின் பசி..

துயர் இருட்டு சூழ்ந்த காரிருள் வனமாய் இருண்டு கிடக்கிற ஒரு இனத்தில் சூரிய தீபமாய் பிறந்துவிட்ட சிலர் தேக்கி வைத்த விடுதலைப் பசி..

மின்னும் கண்களில் லட்சிய வேகம் தெறிக்க.. சுடர்விட்டு எரியும் இதயத்தில் சுதந்திரதாகம் தகிக்க… மண்ணை நேசித்தவர்கள் மனதிற்குள் சுமந்த மகத்தான பசி.‌.

காந்தி பசித்து கிடந்தார்‌.
அவர் உலகத்திற்கே உதாரணமாய் போனார்.

எங்கள் திலீபன் பசித்து இறந்தான்..
அவன் அந்த காந்திக்கே
உதாரணமாய் போனான்.

Page 2 of 3

Powered by WordPress & Theme by Anders Norén