காயங்களால் ஆனவன்.

14232482_182494872175389_8100183791492522624_n

அங்கே..
அவரவர்
ஆன்ம
விருப்பத்தின்
ரகசிய கணக்குகள்
மீன்களாய் அலைகின்றன

என
சொற்களின்
குளத்தில்
குளித்தவன்
சொல்லி விட்டு
போனான்.

அனல் மேவிய
சொற்களும்..
நிச்சயமற்ற
காலக்
கணக்குகளின்
அமில மழையும்..
கனவுப் பூக்கள்
ஒளிர்கிற
என் ஏதேன்
தோட்டத்தை
அப்போதுதான்
அழித்து முடித்து
இருந்தன..

காரிருளாய்
மேனி முழுக்க
துயர இருட்டு
அப்பிய
பொழுதொன்றில்..

உதிரம் கசிந்த
விழிகளோடு..
நானும்..
அவரும்..
மட்டுமே அறிந்த
மொழி ஒன்றில்
சொன்னார்..
கடவுள்.

..ஆகவே..
மகனே..
நீ காயங்களால்
ஆனவன்.

385 total views, no views today

கணங்களின் கதை

 

14485021_188947611530115_2749357017552220995_n

கோப்பை ஏந்தியிருக்கும்
கரத்தின் சிறு நடுக்கத்தில்
சற்றே சிந்தும்
ஒரு துளி தேநீர்..

யாருடனோ
பேசுதலின் போது..
சொற்களின் ஊடே
கசியும் மெளனம்..

மழை நனைக்கும்
பொழுதில்
விழி மூடி
வானை நோக்கி
தலை உயர்த்தும்
கணங்கள்…

எங்கிருந்தோ
கரையும் பாடலில்
தலையணை
நனைய முகம்
சிவந்து கிடக்கும்
நடு நிசிப் பொழுது..

இப்படி..
இப்படி..

ஏதேனும் நொடிகள்
வாய்த்து விடுகின்றன..

சொல்ல
முடியாதவற்றை..
நமக்குள்ளே
சொல்லிக் கொள்ள..

உறைந்த உயிரை
நாமே கிள்ளிக் கொள்ள..

390 total views, no views today

.**** சுயபுராணம்


overcome-yourself-fyodor-dostoyevsky-daily-quotes-sayings-pictures

மீண்டும் மீண்டும்
என்னை பிரசவிக்கும்
எனது மொழி..

வற்றா வளத்தோடு
குன்றாப் பெருமை
மணக்கும் எனது
சொல்..

எப்போதும் காண்பவர்
முகத்தில் கண்ணீரையும்,
புன்னகையையும்
ஒரே நேரத்தில்
சிந்த வைக்கும் எனது
எழுத்து..

இத்தனை வருடங்களில்
இரவு பகலாக
விழித்து..
வாசித்து..
ரசித்து..
உழைத்து..
எனக்கு நானே
கனவுகளை உளியாக்கி
செதுக்கிக் கொண்ட
தன்னம்பிக்கை
சுடர் விடும்
ஒரு வாழ்க்கை..

என்றெல்லாம்
பேசிட என்னிடம்
ஏதேனும்
இருந்தாலும்…

துளித்துளியாய்
சேமித்து பெருமழையென
பொழிய எனக்குள்
ஒரு மழை இருக்கிறது..

விழி நீர் கசிய
உயிர் உருகி ஓடிட
கதைகள் சொல்ல
எனக்குள்
நிலவொளியில்
சேமித்த ஒரு
இரவு இருக்கிறது.

பரவசப்படுத்தும்
கவிதைகளோடு
காலார நடந்திட
எனக்குள் பனிப்பூக்கள்
நிரம்பிய பூங்காவோடு
ஒரு பொன் மாலைப்
பொழுது இருக்கிறது..

ரகசிய கனவுகள்
மினுக்கும்
நீல விழி தேவதை
மிதக்கும்
தங்க மீன்கள்
உலவுகிற
பாசி படர்ந்த
பெருங்குளமும்
எனக்குள் உண்டு.

தேவ கரங்கள் தொட்டுத்
துடைக்க உதிரமாய்
பெருகுகிற
தீராத்துயரமும்..

சாத்தானின் முற்றத்தில்
முடிவிலியாய்
கொண்டாடி மகிழ
வற்றா புன்னகைகளும்..

என்னிடம் இருப்பதாக
மதுப் போதையில்
உளறிய
கனவுலகவாசி
ஒருவன் கைக்குலுக்கிப்
போனான்.

அவனிடம் மறுமொழி
கூற என்னிடம்
சொற்கள் ஏதுமில்லை
அப்போது..

பக்கத்தில் தேநீர்
அருந்திய வண்ணம்
சிரித்துக் கொண்டே
கடவுள் சொன்னார்

அது தான் நீ இருக்கிறாயே..

389 total views, no views today

பயணம் என்கிற பெருவழி..

14523298_194382390986637_8173281201202185685_n
எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’
– கோணங்கி (விகடன் 16-09-2009)

என் வீட்டிற்கு முன்னால் கிளை கிளையாய் விரிந்திருக்கும் பாதைகளை காணுகின்றேன். இப்பாதைகளின் தொடக்கப்புள்ளி எது, இப்பாதைகள் எங்கே போய் முடியும் என்றெல்லாம் சிந்தனை முடிச்சுகளை மனம் பின்னிக் கொண்டே போகிறது. உண்மையில் பாதைகள் ஒரு முடிவிலி. அவைகளுக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. எல்லாப் பாதைகளும் ரோமை நோக்கியே என்ற கிரேக்க சொற்றொடர் உண்டு. பண்டைய காலத்தில் கிரேக்கத்தின் ஆதிக்கம் பரவி இருந்த போது இச்சொற்றொடர் பிறந்திருக்கலாம். அக்காலத்தில் பாதைகள் முழுக்க அலைந்து திரிந்த யாத்ரீகர்கள், ஊர்ச்சுற்றிகள் நிறைந்து இருந்தார்கள். பொதுவாக வாழ்தல் வேண்டி பிழைப்பு கருதி, சாமியாராக,வித்தைக் காட்டுபவராக, விசித்திர பொருட்கள் விற்பவராக, குறி சொல்பவராக, கால்நடைகள் மேய்ப்பவராக நாடு, நகரம், காடு,கழனி என சுற்றிக் கொண்டே இருந்த ஊர்ச்சுற்றிகள் உண்டு,. ஊர்ச்சுற்றுதல் என்பது வெறும் கேளிக்கைக்கானது மட்டுமில்ல. அது ஒரு ஆன்மீக அனுபவம் என்கிறது பெளத்தம். பெளத்தப் பிக்குகள் பல நாடுகளுக்கு புத்தரின் போதனைகளை எடுத்துக் கூற பயணப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் மதத்தினை பரப்ப பயணம் மட்டுமே ஒரே வழி. மதம் பரப்புதல் என்கிற நோக்கமும், பொருளீட்டுதல் என்கிற நோக்கமுமே பயணம் என்கிற பெருவழிக்கு பெரும்பாலும் காரணங்களாக அமைகின்றன. பயணம் என்பது பெரும் அனுபவங்களின் கூட்டுத் தொகையாக இருக்கிறது. பயணம் மூலமாக பெறும் அனுபவங்கள் மனித வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது. சேகுவேரா தன் நண்பன் அல்பெர்த்தோ கிரானடோவுடன் மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்கொண்ட பெரும் பயணமே அவனை ஒரு புரட்சியாளராக உருவாக்கியது. சேகுவேராவின் பயண அனுபவங்கள் ஆங்கிலத்தில் தமிழிலும் நூலாக கிடைக்கின்றன. சே குவேரா-புரட்சியாளனாக உருவானது எப்படி என்ற தலைப்பில் இந்த பயண அனுபவங்களை கிழக்கு பதிப்பகம் நூலாக வெளியிட்டு உள்ளது. ‘ ஒரு தகப்பனாக நான் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் அவனிடம் இருந்தன. கால ஓட்டத்தில் தான் அவைகளை நான் அறிந்தேன். பயணத்தின் மேல் அவன் கொண்டிருந்த தீராவேட்கையானது புதியவைகளை அறிய வேண்டும் என்கிற அவனுடைய பற்றுறுதியின் இன்னொரு அம்சமே என்பதை அப்போது நான் உணரவில்லை.’ மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் நூலுக்கு எழுதிய முன்னுரையில் தன் மகன் குறித்து சேகுவேராவின் தந்தை எர்னஸ்டோ சீனியர் தெரிவிக்கிறார். உண்மைதான். பயணங்கள் எப்போதும் புதியவனவற்றை தேடி அலைகிற ஆன்மாவின் குரலாக இருக்கிறது.

அப்பயணத்தின் ஊடே சேகுவேரா விடை பெறுதலின் பொருட்டு ஒரு கடற்கரையில் தன் காதலி சிச்சினாவை சந்திக்கிறார். பொங்கி அலையடித்துக் கொண்டிருந்த அக்கடல் போலவே சேகுவேராவின் மனமும் பயணம் தருகிற புதிய சாகசங்களுக்காக கொந்தளித்துக் கொண்டிருந்தது. தனது காதலியின் விரல்களைப் பற்றிக் கொண்ட சே தெரிவித்தார். “ விடைபெறும் தருணம் இது. பிரிவின் துயரமும், உவப்பின்மையும் என் சுவாசத்தோடு கலந்து விட்டது. பயணங்களின் ஊடே நிகழும் சாகசங்களை நோக்கி நான் செல்லப்பட்டு விட்டேன். நான் திரும்பும்வரை நீ காத்திருப்பாயா என்று கேட்டார். சிச்சினா தலையசைத்தாள். பயணம் தொடர்ந்தது.

சே குவேரா செய்த இப்பயணம் குறித்து மோட்டார் சைக்கிள் டைரீஸ் ( Motor Cycle Diares (2004) ) என்ற புகழ்ப் பெற்ற உலகத்திரைப்படம் காணக்கிடைக்கிறது. நிலவியல் காட்சிகளும், நுட்ப உணர்வுகளும் நிரம்பிய அத்திரைப்படத்தை காணுதல் என்பதே மகத்தான ஒரு அனுபவம். கொடும் மழையிலும், பல்வேறுவிதமான பருவ சூழல்களிலும் ஆஸ்துமாவால் பலவீனமான நுரையீரலோடு சேகுவேரா பயணித்த அந்த அனுபவக் காட்சிகள் திரையில் விரியும் போது பயணம் குறித்த நம் மதிப்பீடுகள் மாறத் தொடங்குகின்றன. இதன் பாதிப்பில் வெளிவந்த மலையாளத்திரைப்படம் தான் துல்கர் சல்மான் நடித்த நீல ஆகாசம் பச்சக்கடல், செவ்வண்ண பூமி(2013).

அதே போல புரட்சியாளர் மாவோ நடத்திய பெரும் பயணமே சீனப்புரட்சிக்கு அடிப்படையாக திகழ்ந்தது. ஏகாதிபத்திய கோமிண்டாங் படைகளின் தாக்குதல் இருந்து தப்பிக்க மாவோவின் தலைமையில் 2,30,000 செஞ்சட்டை படையினர் 1934 அக்டோபர் 16 முதல் 1935 அக்டோபர் 21 வரை சுமார் ஓராண்டு காலம் நெடும்பயணம் நடத்தி, சீன விவசாயிகளை, மக்களை புரட்சிக்காக அணியப்படுத்தினர்.கடுமையான பருவ கால சூழல்களுக்கு முகங்கொடுத்து 6000 மைல் தூரத்தை செஞ்சட்டைப் படை கடந்தது. கொந்தளிக்கும் ஆறுகள், குத்தீட்டி மலைகள், அதல பாதாளமான நிலவியல் அமைப்புகள் , உணவு, உறைவிடம் ஆகியவற்றை கண்டறிவதற்கான சூழல்கள் போதாமை, தொற்று நோய்களின் தாக்குதல் என பல்வேறு விதமான சங்கடங்களை கடந்து சீனப் புரட்சியை தன் படையினரோடு நிகழ்த்திக் காட்டினார் மாவோ.

இந்தியப் பெருநிலத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்ற தண்டி யாத்திரைப் பற்றி நமக்குத் தெரியும். 1930 மார்ச் 12 ஆம் தேதி குஜராத்தில் உள்ள தனது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து , 23 நாட்கள் 240 மைல்கள் நடந்து 1930 –ஏப்ரல் 6 ஆம் தேதி தண்டியை பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அடைந்த காந்தி தனது பயணத்தின் மூலமாகவே தன் போராட்ட உணர்வை பரவலாக்கினார். சாதாரண மனிதராக இருந்த காந்தியை மகாத்மா காந்தியாக்கியதற்கு மூல சம்பவமும் அந்த தென் அமெரிக்க ரயில் பயணம் தானே..

இப்படி உலகம் முழுக்க பயணங்களும், அது தரும் அனுபவங்களும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டவைகளாக இருக்கின்றன. ஒரு பயணம் என்பது ஏதேனும் காரணங்கள் கொண்டவையாக இருக்கலாம். இல்லையேல் பயணம் தருகிற அனுபவங்களும், மனநிலையுமே ஒரு பயணத்திற்கான காரணங்களாக அமையலாம்.

maxresdefault

 

தமிழ் இலக்கிய உலகில் பெரும் ஊர்ச்சுற்றிகளாக எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், கோணங்கியும் திகழ்ந்திருக்கிறார்கள். இருவரின் எழுத்துக்களின் ஊடே அப்பயணங்களின் அனுபவங்களும், நிலவியல் காட்சிகளும் நிரம்பி ததும்புகின்றன. ஒரு முறை எஸ்.ரா சொன்னார் “ பயணத்திற்கென எனக்கு காரணங்கள் தேவையில்லை. எவ்வித காரணங்களும் இல்லாமல் ஒரு ஊரில் இருந்து கிடைக்கிற பேருந்து, வாகனம் என ஏதாவது ஒன்றில் ஏறி இலக்கில்லாமல் ஏதோ ஒரு ஊரில் இறங்கி, அங்கு கிடைப்பதை உண்டு, அங்கு இருப்பதை கண்டு , அங்கேயே நாலைந்து நாட்கள் தங்கி விட்டு வருவதை நானும், கோணங்கியும் வெகுநாட்கள் வழக்கமாக கொண்டிருந்தோம். ”

உண்மையில் ஊர்ச்சுற்றுதல் கேளிக்கைக்கு எல்லாம் அப்பாற்பட்ட பெரும் அனுபவமே என்று ஊர்ச்சுற்றிகள் கண்கள் மிளிர சொல்கிறார்கள். அது ஒரு வகையான போதை. ஒரு வகையான ஆழ் மனக் கோரல். அனைத்திலிருந்தும் தப்பிகிற மனநிலை.
ஆஸ்கர் விருது வாங்கிய Forest Gump என்கிற உலகத்திரைப்படம் உண்டு. அதன் கதாநாயகி எப்போதும் Forest Gump என்று பெயருள்ள அக்கதாநாயகனை Run Forest, Run Forest (ஓடு பாரஸ்ட்..) என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். ஒரு கட்டத்தில் அம்மாவையும், காதலியையும் இழந்த கதாநாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், காரணமே இல்லாமல் ஓடத் தொடங்குவான். இரவு, பகல் பாராது ஓடிக் கொண்டே பல நாடுகளை கடப்பான். அவனது இலக்கற்ற ,முடிவற்ற இந்த ஓட்டம் தொலைகாட்சிகளில் காட்டப்படும். உலக சமாதானத்திற்காகதான் ஓடுகிறார் என பலரும் நினைத்து, அவன் பின்னால் பலரும் ஓடுவர். ஒரு கட்டத்தில் அக்கதாநாயகனுக்கு வீட்டு நினைவு வந்து விடும். உடனே வீட்டை நோக்கி திரும்ப ஓடத் தொடங்குவான். ஏனெனில் அக்கதாநாயகனுக்கு தன் சோகத்தில் இருந்தும், மன அழுத்ததில் இருந்தும் தப்பிக்கும் வழியாக அந்த ஓட்டத்தை, அப்பயணத்தை கருதுவான். அது ஒன்று மட்டுமே அவனை ஆற்றுப்படுத்தும் .

தமிழ்நிலத்தில் ஊர்ச்சுற்றிகளின் பங்கு மகத்தானது. பல்வேறு விதமான தத்துவங்களை, மத போதனைகளை ,மருத்துவத்தை ,பண்பாட்டுக் கூறுகளை பரப்பியதில் ஊர்ச்சுற்றிகள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். சமண முனிவர்களாக,பெளத்த பிக்குகளாக, புனித யாத்திரை செல்பவர்களாக விளங்கிய தமிழர்களின் ஊர்ச் சுற்றி உளவியல் அதிகார வேட்கையாக மாறிய காலத்தில் பெரும் படையெடுப்புகளை நிகழ்த்தி உலக நாடுகளை எல்லாம் வென்று இருக்கிறார்கள்.

பயண அனுபவங்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் காணக்கிடைக்கின்றன. பல நாடுகளுக்கு சென்று உலகம் சுற்றிய தமிழராக ஏ.கே செட்டியார் திகழ்ந்திருக்கிறார்கள். அதே போல மணியன் ,சாவி , தமிழ்வாணன், அகிலன் போன்ற பல எழுத்தாளர்களும் உலகைச்சுற்றி பார்த்து தனது அனுபவங்களை இலக்கிய பிரதிகளாக ஆக்கி இருக்கிறார்கள். காவேரி நதிக்கரை ஓரமாக எழுத்தாளர் தி.ஜானகிராமனும், அவரது நண்பர் சிட்டியும் மேற்கொண்ட பயணத்தை நடந்தாய் வாழி காவேரி (காலச்சுவடு வெளியீடு ) என்கிற படைப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

14523202_194382474319962_8228487827882526794_n

ஊர்ச்சுற்றிகளின் குண இயல்புகள், ஊர்ச்சுற்றிகள் எதிர்க்கொள்ளும் சவால்கள்,பயணத்திற்கு தேவையான பொருட்கள் போன்ற ஊர்ச்சுற்றி அம்சங்களைப் பற்றி புகழ்ப் பெற்ற எழுத்தாளர் இராகுல சாங்கிருத்யாயன் “ ஊர்ச்சுற்றி புராணம் “ என்கிற புகழ்ப்பெற்ற நூலை எழுதியுள்ளார் .

( ஊர் சுற்றிப் புராணம்
ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98
விலை ரூ 70 மொத்த பக்கங்கள் : 236)

எல்லா பாதைகளும் என் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்கிறது ஒரு ஜென் மொழி. எந்த பயணமொன்றின் முடிவும் ஒருவிதமான தனிமை உணர்வை தருவது இயல்பு. ஏனெனில் பயணம் என்பதே நான் தனியன் அல்ல என்பதை உணரத்தானே…

 

658 total views, 1 views today

சொல்லப்படுகிற சொற்களற்ற கதை.

14900327_208444706247072_1276150418681769516_n
காதிற்கு பின்னால்
வழியும்
ஒரு வியர்வைத்துளி
சொல்லக்கூடும்
இப்போது
என்ன நிகழும் என..

எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
நீயும் நானும்..

செல்லும் ரயிலில்
இருந்தவாறே..
மெளனித்து கிடக்கிற
என் ரயில் பெட்டி அசைகிறது
என நீ நினைப்பது
உனக்கான ஆறுதல்
என எனக்கு புரிகிறது..

நிகழ்தகவுகளாய்
வர்ணம்
மாறிய மனதின் மொழியை
ஒரு போதும் பேச முயற்சிக்காதே..

ஏனெனில் உண்மைகள்
பொய்களை விட
மோசமானவை.
கருணையற்றவை.

இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
நீ காத்திருப்பது
புரிகிறது.

பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உன் உதடுகள்
இன்னும் தயாராகவில்லை
போலும்..

ஈரப்படுத்திக் மெதுவாய்
கனைத்துக் கொள்கிறாய்..

நான் தயாராகத்தான்
இருக்கிறேன்.

விஷம் தோய்ந்த
ஈட்டி முன்னால்
இதயம் துடித்துக்
கொண்டே இருப்பது
கொஞ்சம் அசெளகரியம்தான்..

சீக்கிரம் குத்தி விடு.

ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நீயோ..நானோ..

அந்த பரிதவிப்பு
நம் இருவருக்குமே
இருப்பதுதான்..
எனக்கான இறுதி ஆறுதல்..

கலங்கும் விழிகளில்
தூரத்து கானலாய்
தெரிகிறது.

என்னையும் மீறி
கொப்புளிக்க
துடிக்கும்
நாமாக இருந்த
பொழுதுகளின்
நினைவுகள்..

தப்பித்தவறி
அவை சொற்களாக
மாறக்கூடும் என
அஞ்சாதே..
.
மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
அச்சொற்கள் உண்மையின்
கயிற்றினால் இறுக்கி
கட்டப்பட்டு விட்டன..

இனி..

நீ தாராளமாக
எதையும்
சொல்லலாம்.

நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிற இந்த
இமைக்காத பொழுதில்..

சில
பெருமூச்செறிதல்களோடும்..
ஆழ்நிலை தியான
கவனத்தோடு இயற்றப்பட்ட
சில நொடி மெளனத்தோடும்.

நீ சொல்ல வருகின்ற
காரணங்களுக்காக
அன்றி
வேறு எதற்காகவோ
கசிகிற கண்ணீர்த்
துளிகளோடும்..

நீ சொல்லத் தொடங்கு..

நானும் இதை முதன்
முறை கேட்பது போல்
கேட்கத் தொடங்குகிறேன்..

-மணி செந்தில்

 

 

382 total views, no views today

பர்கான் வானி- கனன்று ததும்புகிற காஷ்மீரிய விடுதலை உணர்வு..

ENCOUNTER-KUNZAR-PIX-5
 
என்னை அடக்கு.
என்னைக் கொல்.
என் மொழியை அழி.
என் நாவுகளை வெட்டு.
ஆனால் என் முன்னோர் வாழ்ந்து இறந்து,
மக்கிப் இன்று
மண்ணாகி இருக்கிற
என் தாய்நிலத்தை
என்ன செய்வாய்..??
என்ன செய்வாய்..??
 
எங்கே கொண்டு புதைப்பாய்..??
 
– மேகாலயா பூர்வக்குடிகளின் பாடல்
 
தேசிய இனங்களின் பெரும் சிறைக்கூடமாக இந்திய வல்லாதிக்கம் இருக்கிறது என்பதற்கு இந்த பெருநிலத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு சாட்சியம் பகர்ந்துக் கொண்டே இருக்கிறது.
 
நன்கு வளர்ச்சியடைந்த 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒடுக்கி, அவர்களின் இறையாண்மையை மறுத்து, நிலத்தை சுரண்டி, வளங்களை அபகரித்து , ஆட்சி, அரசியல், கலை, பண்பாடு என அந்த இனம் கொண்டிருக்கிற தனித்துவ விழிமியங்களை அழித்து, இந்த பெருநிலத்தை 200 பணக்காரர்கள் ஆளுவதற்கான ஒரு நாடாக கட்ட கோடிக்கணக்கான பல்வேறு தேசிய இனங்களின் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை தான்
இவர்கள்.. இந்திய ஒருமைப்பாடு, ஏக இந்தியா என்றெல்லாம் வர்ணப்பூச்சு பூசுகிறார்கள்.
 
இந்தியாவை பொறுத்தவரையில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மாதிரியான மக்கள் என்பதான மந்தைக் கூட்டத்தை உருவாக்கவே இந்திய வல்லாதிக்கம் முயல்கிறது. தனித்துவ பண்பாடு, மொழி, வழிபாட்டு முறைகள்,வாழ்வியல் அம்சங்கள் கொண்ட பிறிதொரு இனத்தின் தனித்துவ அம்சங்களை அழித்து விழுங்கி ஏப்பம் விட இந்திய வல்லாதிக்க பூதம் திட்டமிட்டு காய் நடத்துகிறது என்பதைதான் சமஸ்கிருத கட்டாயத் திணிப்பு , கல்விப் பாடத்திட்டங்களில் இந்துத்துவ அம்சங்களை திட்டமிட்டு திணித்தல், தேசிய இனங்களின் தனித்துவ குணாதிசியங்களான ஜல்லிகட்டு போன்றவைகளுக்கு தடை போன்றவை காட்டுகின்றன.
 
எனவே தான் தமிழ்த்தேசியர்கள் தாங்கள் இந்துக்கள் என்கிற பொது அடையாளத்தை மறுக்கிற முதன்மை சக்திகளாக திகழ்கிறார்கள். இதை பஞ்சாபிகளின் போராளி பேராசிரியர் ஜக்மோகனும் வீரத்தமிழர் முன்னணி தொடக்க விழாவில் பேசிய போது தெரிவித்தார். “ தமிழர்களே.. நாங்களும் உங்களைப் போலவே.. நாங்கள் இந்துக்கள் அல்லர், நாங்கள் பஞ்சாபிகள் “ என்றார்.
 
அதைப் போலவே எம் சகோதரன் காஷ்மீரிய விடுதலைப் போராளி யாசின் மாலிக் நாம் தமிழர் கட்சியின் அழைப்பினை ஏற்று கடலூருக்கு வந்திருந்த போது சொன்னதை இவ்விடத்தில் நினைவுப்படுத்துகிறேன். “ காஷ்மீரிய நிலம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமான நிலமல்ல. அங்கு வசிக்கும் பார்சிக்கள் , பண்டிட்க்கள், பழங்குடி மக்கள் என வேறுவகையான பண்பாட்டு கூறுகளை கொண்ட மக்களுக்கு சொந்தமானது. இன்னும் சுருக்கமாக சொன்னால் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது “.
ஆனால் இந்தியா காஷ்மீரிய விடுதலையை ஒரு மதம் சார்ந்ததாக, இஸ்லாமீய மார்க்கம் சார்ந்ததாக திட்டமிட்டு சித்தரித்துக் கொண்டு இருக்கிறது.
காஷ்மீர் என்கிற பேரழில் மிக்க அந்த நிலம் இந்திய வல்லாதிக்கத்தின் அதிகாரப் பசியால் இரத்தம் தோய்க்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இதுவரை அம்மக்கள் தங்களை இந்தியர்களாக பொருத்திக் கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.
இந்திய- பாகிஸ்தான் அதிகார அரசியல் போட்டியில் தாங்கள் பகடைக்காய்களாக உருட்டி விளையாடப்படுவதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்லர், இந்தியர்கள் அல்லர்., நாங்கள் காஷ்மீரிகள் என உரக்க முழங்கிப் போராடி வருகின்றனர். இந்திய அரசின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் தினம் தோறும் இழப்பினை சந்தித்து வருகின்றார்கள்.
 
தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக காஷ்மீரி சகோதரர்கள் வெகு நாட்களாக போராடி வருகிறார்கள். தங்கள் இறையாண்மையை காக்க உதிரம் சிந்தி, உயிரைக் கொடுத்து அவர்கள் நடத்துகிற தாய்நாட்டின் விடுதலைப் போராட்டம் இந்தியாவால் தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் திட்டமிட்ட பிரச்சாரம் மூலமாக வெளி உலகிற்கு காட்டப்பட்டு வருகிறது.
 
_97332cec-45a8-11e6-b0f4-7520104944f6
காஷ்மீரிகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத குரலோசை ஒடுக்கப்பட்டு வாழ்கிற தமிழ்த்தேசிய இனம் போன்ற பல தேசிய இன மக்களுக்கு எல்லாம் உரிமைக்குரலாக ஒலிக்கிறது. தன் தாயக மக்களுக்காக, தன் தாய்நிலத்தின் விடுதலைக்காக பர்கான் வானி என்கிற அச்சகோதரன் உயிரைச்சிந்தி ..உணர்வினைப் பரப்பி இருக்கிறான். இந்தியாவின் ஒட்டுக் கூலிக் குழுவான ராஸ்டிரிய ரைபிள்ஸ் மூலமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் பர்கான் வானியை தங்களது அடையாளமாக தூக்கி சுமக்கிறார்கள் காஷ்மீரிகள்.
 
அவனது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான காஷ்மீரி தேசிய இனமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்த அந்த இளைஞனின் வீரச்சாவுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.
13600273_132058630558408_8383952100426859512_n
இந்நேரத்தில்.. தனது தாய்மண்ணின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய பர்கான் வானியின் இளந்தோள்கள் தங்கள் களைப்பிலிருந்து நிரந்தமாக விடுப்பட்டிருக்கின்றன. தனது தாய்நிலத்தின் பனிப்படர்ந்த மலைகளை பார்த்து ரசித்த அந்த கண்கள் நிலைக்குத்தி நின்று இருக்கின்றன. சதா லட்சியக் கனவோடு உலவிய அவனது கால்கள் மரக்கட்டை போல மரத்து நீண்டு இருக்கின்றன.
அவனது விடுதலைக் கனலை சுமந்த சொற்கள் ஊமையாக்கப்பட்டு விட்டன. அவனைப் பற்றி மிஞ்சியிருக்கும் ஏதோ ஒரு நினைவுத்துளியைக் கூட வல்லாதிக்கத்தின் அதிகார நாவுகள் மிச்சம் வைக்காமல் உறிஞ்சி விடக் கூடும். அவன் பற்றி எதுவும் இல்லை என நிம்மதியில் கொன்ற கூட்டம் ஆழ உறைந்திருக்கையில்..
 
பனி படர்ந்த அந்த மலைச்சாரல்களில் அவன் சுவாசித்த காற்று மட்டும் அதே மூர்க்கத்துடன் உலவிக் கொண்டு இருக்கிறது..
 
அக்காற்றை சுவாசிக்கிற ஏதோ ஒரு காஷ்மீரி உரத்த குரலில் முழங்குவான்..
 
காஷ்மீர் எங்கள் நாடு. இந்தியர்களே வெளியேறுங்கள்.
 
– மணி செந்தில்

862 total views, 1 views today

தற்கொலைப் பற்றிய சில குறிப்புகள்..

 

suicide-hanging-e1442464610195

 

மரியாதையென்பதை காசு பணத்தால் அளவிடும் இந்த மானம்கெட்ட சமூகத்தில் தற்கொலை நியாயமாகவே படுகிறது…

என்ன வாழ்க்கைடா…

– என் தம்பி ஒருத்தன்..

ஆனால் தற்கொலை என்பது இன்னும் மரியாதை கெட்டது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை பார்த்து இருக்கிறாயா…. காயமும், வலியும் நிறைந்த அந்த விழிகள் எதனாலும் ஆறுதல் கொள்பவை அல்ல. ஒரு முறை தற்கொலை முயற்சி செய்து விட்டு வாழ நேருகிற துயரம் மரணத்தை விட கொடுமையானது. காயமானது. இன்னொரு செய்தி.. மற்றவர்களால் நமக்கு தர கோருகிற எதுவும் நமக்கு நேர்மை செய்யாது. ஈடு ஆகாது. மரியாதை என்பதும் அதற்கு விதிவிலக்கு அல்ல. உன் வாழ்க்கை . நீ வாழ். மற்றவர் மதிப்பதும், இகழ்வதும் அவரவர் பாடு. உன் வாழ்க்கையை உன் போக்கில் நீ வாழ யாரிடமும் அனுமதியோ, எதிர்பார்ப்போ கொள்ள தேவையில்லை. மதிப்பு என்பது நம் மீது நாம் கொள்வது. அது மற்றவர்களை சார்ந்திருக்க தொடங்கும் போதுதான் துயரம் சூழ தொடங்கிறது. எதுவும் மற்றவர்களை சார்ந்து பிறக்கவும் கூடாது. எழவும் கூடாது. நாம் தான் நமக்கு. வாழடா தம்பி. உன் போக்கில். அதுவே அழகானது. உண்மையானது. சொல்லப்போனால்… உனக்கு நீயே மதிப்பு செய்து கொள்வது.

உண்மையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவனின் அம்முயற்சிக்கு முந்தைய நிமிடங்கள் விசித்திரமானவை. தன்னுடைய முயற்சிக்கான தர்க்கங்களை ,நியாயங்களை தனக்குள்ளாக ஏற்படுத்துகிற அந்த நிமிடங்களை கடப்பதென்பது ஆள் அரவற்ற ..வெக்கையும், தனிமையும் நிரம்பிய கொடும் பாலையை கடப்பதற்கான உளவியல் சவால்களை கொண்டது. வாழ முடியாததற்கான சூழல்களின் இறுக்கத்தினை நமது மனது கடும் துயராக கொண்டிருக்கும் போதுதான்.. இனி வாழ்வது என்பது எல்லா துயரைக் காட்டிலும் மேலான துயராக நீடிக்கும் என்கிற எண்ணம் ஆழப் பதியும் போதுதான்.. நமக்கு நாமே செய்து கொள்கிற நேர்மையாக தற்கொலை எண்ணம் எழும்பும்.

ஒரு சுவையான தேநீர் அருந்தும் போது ஏற்படும் ஆசுவாசம் போன்ற உணர்வோடு தற்கொலை உணர்ச்சியை எதிர்கொண்ட சிலரை நான் அறிவேன். ஆனால் அந்த முயற்சியில் தோல்வியுற்று சராசரி வாழ்க்கைக்கு திரும்பும் போது …உள்ளுக்குள் கவிழும் குற்ற உணர்ச்சியும், ஏமாற்றமும், சற்றே எதிர்காலம் குறித்த அச்சமும் மிஞ்சிய நாட்களை காயப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அவரவருக்கான நியாயங்களை கொண்டிருந்தாலும்.. தற்கொலை என்பது ஒரு போதும் கொண்டிருக்கும் காயங்களுக்கான நியாயம் ஆகாது. அந்நேரச் சூழலின் பொருட்டு தப்பித்தலுக்கான வழிதான்…என்றாலும் கூட ..

உயிர் விட்ட பிறகு தப்பித்து என்ன தான் ஆகப்போகிறது.. தப்பிக்கிற உணர்ச்சியை அனுபவிக்க யார் இருப்பார்கள்..??

– மணி செந்தில்

867 total views, 1 views today

தமிழ்த் தேசிய சுவடுகள் -4 தமிழ்த்தேசிய இனமும், தேசிய இன உருவாக்கமும்,

Karl_Marx

தேசிய இனம் என்ற சொல்லுக்கு சமகாலத்தில் பல விரிவான விளக்கங்கள் கிடைக்கின்றன. ஒரு பொது மொழி, பொதுவான வாழ்க்கை முறை, ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, ஒருபொதுவான பொருளியல் அமைவு, தனிப்பண்பாட்டின் சிறப்பியல்புகள் இவைகளால் அந்த இனத்திற்குள்ளாக ஏற்படுகின்ற பொதுவான உளவியல் உருவாக்கம் ஆகியவற்றைப் பெற்று வரலாற்றின் போக்கில் இணைந்த பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து  அமைந்த ஒரு நிலையான சமுதாய மக்களே தேசிய இனமென வரையறுக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஜே.வி. ஸ்டாலின் ஒரு மொழி வழி அமைந்த  ஒரு தேசிய இனத்தை (Linguistic Nationality) நான்கு முதனிலை பண்புக் கூறுகளால் வரையறுக்கிறார். அவையாவன. 1. பொதுமொழி 2. தொடர்ச்சியான ஆட்சி எல்லை 3. பொதுவான பொருளாதார வாழ்க்கை அமைவு 4. பொது பண்பாட்டின் வாயிலாக எழும் தாம் ஓரினம் என்கிற உளவியல். தேசிய இன வரையறையில் முதன்மை அம்சமாக மொழியை கருதுவது மார்க்சிய அணுகுமுறை ஆகும்.

 

மனித இனம் தோன்றிய காலம் தொட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனின் சமூக வாழ்க்கை மொழி வாயிலாகவே நிகழ்ந்து இருக்கிறது. மொழியே மனித இனமொன்றின் முதன்மை அடையாளமாக திகழ்ந்து இருக்கிறது. மொழியற்ற மனித சமூகத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது. மொழியே மனித நாகரீக வளர்ச்சியின் போக்கினை தீர்மானித்தது. எனவே தேசிய இன வரையறையில் மொழியே முதன்மை கூறாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

 

ஒரு மக்கட் கூட்டம் தேசிய இனமாக உருவாக்கம் கொள்ளுதலில் அயலார் படையெடுப்பு, இயற்கை சீற்றங்கள் போன்ற புறவெளி காரணிகளும் உதவி செய்கின்றன. எடுத்துக்காட்டாக இந்தியா ஒரு தேசம் அல்ல. பல்வேறு தேசிய இனங்கள், 200க்கும் மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்துகிற மக்கள் கூட்டம் வாழுகிற மிகப்பரந்த கண்டம். இந்த நிலப்பரப்பை வெள்ளையர்கள் தாங்கள் ஆள்வதற்கு உகந்தவாறு ஒரு நாடாக மாற்றினார்கள்.  இந்திய நிலப்பரப்பு அதற்கு முன்னதாக ஒற்றையாட்சியின் கீழ் இருந்ததில்லை. பல்வேறு மன்னர்கள், குறுநில மன்னர்கள், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் என பிளவுப்பட்டு கிடந்த ஒரு நிலப்பரப்பின் மக்கள் அக்காலத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உண்டாக்கப்பட்ட செயற்கை தேசிய உணர்வின் மூலம் ஒன்று பட்டனர். அந்த செயற்கையான தேசிய உணர்வு வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறிய கணத்திலேயே நீர்த்துப் போய் விட்டது. மேலும் அந்த செயற்கை உணர்வு மேலும் நீட்சி கொள்வதற்கான அவசியமோ, தேவையோ அதற்கு பிறகு இல்லை. செயற்கை மயக்கம் வடிந்தவுடன் அவரவர் மொழி, நிலப்பரப்பு சார்ந்த இயல்பான தேசிய உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தர தொடங்கி விட்டனர்.  எனவே மொழி வழி சார்ந்த, நிலப்பரப்பினை சார்ந்த தேசிய இன உருவாக்கமே இயற்கையானது.

 

பட்டாளி வர்க்க இணைப்பால் உலகப்புரட்சியை ஏற்படுத்த கனவு கண்ட மாமேதை மார்க்ஸ் கூட பட்டாளிகளின் இணைப்பு தேசிய இன உணர்வின் அடிப்படையில் எழுவது என்பதே சாத்தியம் என்கிறார்.

 

தேசிய இன சிக்கல்களை மார்க்சிய அணுகுமுறை மூலம் தான் தீர்க்க வேண்டும் என்பதில் புரட்சியாளர் லெனின் தெளிவாக இருந்தார். அதற்கு அவர் மூன்று விதமான அளவுகோள்களை கொண்டிருந்தார். 1. வேறுபட்ட பல்வேறு தேசிய இனங்களைச்சார்ந்த உழைக்கும் மக்களிடையே புரிதல் அடிப்படையில் அமைகிற ஒற்றுமை அல்லது இணைவு 2. சமமான வாழ்வியல் மற்றும் பொருளியல் , அதிகாரங்களை கொண்டதுமான தேசிய இனங்களின் உழைக்கும் மக்களிடையே தோன்றும் சமத்துவம் 3. தனது இறையாண்மையை தானே முடிவு செய்து கொள்கிற தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை.

 

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து மார்க்ஸைப் போற்றுகிற, லெனினைக் கொண்டாடுகிற  மார்க்சிய கம்யூனிஸ்ட்களின் தத்துவ நிலைப்பாடு லெனின் கொண்டிருந்த கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கம்யூனிஸ்டுகளின் கருத்து என்ன என்கிற அண்ணன் சீமானின் கேள்விக்கு இறுதிவரை மார்க்சிய அறிஞர் அருணானால் பதில் சொல்ல இயலாமல் போனது இதனால் தான்.

 

1972-ல் தேசிய இன சிக்கல் குறித்து மார்.கம்யூனிஸ்ட் ஆராய்ந்து தீர்மானம் இயற்றிய போது அத்தீர்மான வாசகங்களில் “ 1947 இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் தேசிய இனச்சிக்கல் தீர்ந்து விட்டது “ என்ற சொற்றொடர் இடம் பெற்றது. இதுதான் கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இன விடுதலை சார்ந்து கொண்டிருக்கிற புரிதல்.

 

****

 

Mamallapuram_sculptures

இனி தமிழர் என்ற இனமானது எப்படி ஒரு தேசிய இனமாக உருக்கொள்கிறது என்பதை நாம் விரிவாக ஆராய்வோம். தேசிய இனம் என்ற சொல்லுக்கான அடிப்படைக் கூறுகளைப் பெற்று தகுதிவாய்ந்த தனித்த ஒரு தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் திகழ்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறான பொதுமொழி அடிப்படையில் நம் தாய்மொழியாம் தமிழ் தொன்மையான சிறப்பியல்பு வாய்ந்த தேசிய இனத்தின் தாய்மொழியாக விளங்குகிறது. தமிழ்மொழியின் தொன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் வியக்கத்தக்க முடிவுகளை அறிவித்து வருகின்றன. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ்மொழி என்று சிறப்பு பெற்ற நம் தாய்மொழி ஒரு தேசிய இனத்தின் பொதுமொழி அடிப்படையில் தகுதிவாய்ந்த செவ்வியல்மொழியாக திகழ்கிறது.வரலாற்றின் பக்கங்களில் நீண்டகாலமாக தமிழர் என்ற தேசிய இனத்திற்கு சற்றே ஏறக்குறைய தொடர்ச்சியான தனித்த நிலப்பரப்பு இருக்கிறது.  சங்கக்காலம் தொடங்கி நவீன காலம்வரை இருக்கின்ற இலக்கிய தரவுகள் கொண்டே தமிழ்த்தேசிய இனத்தின் தொடர்ச்சியான ஆட்சிப்பரப்பு குறித்து நாம் தெளிவு பெறலாம். உலகத்தின் முதன்முதலாக இனம் தமிழினம் என்றும், முதன் முதலாக தோன்றிய மாந்தர் தமிழர் என்றும், அவர் பேசிய மொழி தமிழ்மொழி என்றும் நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்த்தேசிய இனத்தின் மாபெரும் ஆய்வியல் அறிஞரான பாவாணர், தமிழர் முதன்முதலாக தோன்றியது இயற்கைசீற்றத்தால் அழிந்து கடலுக்கு அடியில் கிடக்கிற குமரிக்கண்டத்தில்தான் என தனது தரவுகள் மூலம் அறிவுலகத்திற்கு எடுத்துரைக்கிறார். எனவே, வரலாற்றின் போக்கில் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரு பொதுமொழி கொண்டு உருவான இனம் தமிழர் என்ற தேசிய இனம் என்பது உறுதியாகிறது. மேலும், தமிழர் தனது பொதுவான பொருளியல் வாழ்வியலை தனது தேசியத்தொழிலான விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கொண்டே உருவாக்கினர். மண் சார்ந்த விவசாயத் தொழிலே தமிழரின் தேசியத்தொழிலாக அறியப்பட்டிருக்கிறது. முப்போகமும் விளையக்கூடிய விளைநிலங்களும், ஒரு போகம் விளையக்கூடிய வானம் பார்த்த புன்செய் நிலங்களும்நிரம்பிய தமிழகம் விவசாயத்தை, அதுசார்ந்த பொருளியல் வாழ்வினை தனது உயிர்நாதமாகக் கொண்டு விளங்கியது .தமிழ்த்தேசிய இனத்திற்கென்று ஏறக்குறைய பொதுவான பண்பாட்டுக்கூறுகள் இருக்கின்றன. இன்னமும் மிஞ்சிக்கிடக்கின்ற ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழா, கபடி மற்றும் கரகாட்டம், வில்லுப்பாட்டு, குலதெய்வங்கள், உறவு முறைகள் போன்ற பல்வேறு பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டு ஒரு பண்பாட்டு செழுமைமிக்க தனித்த தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் விளங்குகிறது. தன்னை ஒரு தேசிய இனமாக உணர்வதற்கான பொதுவான உளவியல் போக்கினை தங்களது பண்பாட்டு விழுமியங்கள் மூலமாக தமிழர்கள் பெற்றிருக்கின்றனர். இந்தியத் துணைக்கண்டத்தில் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளில் தனித்த மொழி , பண்பாடு,வரலாறு, பண்பாட்டு விழுமியங்களோடு கூடிய 20க்கும் மேற்பட்ட தனித்த தேசிய இனங்கள் நிலைபெற்று வாழ்கின்றன. இந்தியப்பெருநிலத்தில் இருக்கின்ற தேசிய இனத்தில் மூத்தத்தேசிய இனமான, தனித்த பண்பாட்டு அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து வருகிற தனித்த தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் விளங்குகிறது. ஒரு சமூகம் தன்னைத் தேசிய இனமாக உணரும்போது அதன் மெய்யான தேசிய இன குணாதியங்களையும், முற்போக்கு மற்றும் பிற்போக்கு இடங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது. தேசிய இன உருவாக்கம் என்பது சில நாட்களுக்கு உள்ளாகவோ, சில வருடங்களிலோ அடையக்கூடியது அல்ல. தேசிய இன உருவாக்கத்தை, வளர்ச்சியை சார்ந்த  திறன்மிக்க தொடர் செயல்முறை என்கிறார் புரட்சியாளர் லெனின்.. அச்செயல்முறை தாம் ஒரு  தேசிய இனம் என்பதை உணர்ந்து தனது வாழ்வியல்,பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை அடைந்து, விடுதலை உணர்வினை சார்ந்து  அமைகின்ற எழுச்சி ஆகும்.

 

தமிழ்த்தேசிய இனமாக தன்னை ஒரு தனித்த தேசிய இனமாக அடையாளப்படுத்துதலில் மாபெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் தமிழர்களின் நிலப்பரப்பை பல்வேறு குறுநில மன்னர்கள் பிரித்து ஆண்டிருந்தாலும் தமிழர் என்ற உளவியல் உருவாக்கம் தமிழர் என்ற தேசிய இனத்திற்கு வரலாற்றின் போக்கிலேயே அமைந்திருந்தது. பிற்காலச் சோழர்கள், புகழ்பெற்ற பாண்டிய மன்னர்கள், வெற்றிபெற்ற சோழ மன்னர்கள் என்றெல்லாம் மன்னர்கள்வழி அமைந்த நிலப்பரப்பில் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தமிழர் என்கின்ற உளவியல் நெருக்கத்தினை உளவியல் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவும், வரலாற்றின் போக்கின் மூலமாகவும் பெற்றிருந்தார்கள். அதன்வாயிலாகவே, தமிழர் தேசிய நிலப்பரப்பிற்கு எதிராக அந்நிய படையெடுப்பு போன்றவை நிகழும்போது தமக்குள்ளாக இருக்கிற உளவியல் நெருக்கத்தை மூலதனமாகப் பயன்படுத்தி, தங்களது நிலப்பரப்புகளையும் தாண்டி தமிழர் என்ற ஒற்றுமையோடு அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று தமிழர்கள் போராடியிருக்கிறார்கள். ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னனுக்கு இங்குள்ள சோழ மன்னன் உதவியதாக வரலாறுகள் தெரிவிக்கிறது. இவ்வாறாக இப்பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கத் தொடங்கினார்களோ, வாழ்ந்தார்களோ தாயகத்தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்மன்னர்கள் உதவிசெய்யும் போக்கினை நாம் வரலாற்றின் பக்கங்களிலே காண்கிறோம். எனவே தேசிய இன உருவாக்கத்தில் அந்த குறிப்பிட்ட மனித சமூகம் கொண்டிருக்கிற உளவியல் தன்மை (Phusicaligical Sense ) மிக முக்கியமானது.

 

தாம் ஓரினம் என்கிற தேசிய இன உளவியல் தன்மைதான் ஈழ விடுதலைக்கு ஆதரவான மனநிலையை இம்மண்ணில் எழுப்புகிறது. தமிழ்த்தேசிய இனத்தின் இரண்டு பெரும் தாய்நிலங்களாக ஈழமும், தாய்த் தமிழகமும் திகழ்கின்றன. எனவே வரலாற்றின் வீதியில் தமிழர் என்கிற தேசிய இனம் ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டு தனித்த தேசிய இனமாக உருக்கொண்டு நிற்கிறது.

 

இனி தமிழ்த்தேசிய இனத்திற்கான அடிப்படை உரிமை.. தம் மண்ணை தானே ஆள்கிற உரிமை.

 

-தொடர்ந்து கற்போம்..கற்பிப்போம்…புரட்சி செய்வோம்.

 

வாசிப்போம்..அறிவை யாசிப்போம்

—————————————————–

சாதியும், தமிழ்த்தேசியமும் –பெ.மணியரசன் ,(பன்மை வெளியீடு, எண் 1,இராசா வணிக வளாகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர்)
விலை80/-

967 total views, 1 views today

சமீப மலையாளத் திரைப்படங்கள் -எளிமையின் அழகியல்.

Kali-Malayalam-Movie-Review-Rating-Public-Talk-Twitter-response-Critics-Reviewசமீப கால மலையாளத் திரைப்படங்களின் தரமும், திரைக்கதை அடவுகளும் நம்மைப் பொறாமைப்படுத்துகின்றன. ( நன்றி : துருவன் செல்வமணி, packiyarasan se) சமீப காலமாக வரிசையாக பல மலையாளப்படங்களை கண்டு வருதலில் நான் உணர்ந்தது மலையாளப்படங்கள் கொண்டுள்ள எளிமை.
 
இன்னமும் தன் பண்பாட்டு விழுமியங்களை தனது திரைமொழி மூலமாக ஆவணப்படுத்துகிற மலையாளிகளின் கவனம் பிரமிக்கத்தக்கது. புதியவர்களின் வருகையால் மலையாள திரையுலகம் புத்துணர்ச்சி அடைந்ததுள்ளது. துல்கர் சல்மான், நிவின் பாலி , பஹத் பாசில், சாவித்திரி என மலையாள திரையுலகம் கொண்டிருக்கும் இளைய நடிகர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
 
இங்கே தமிழ் படங்களில்..
 
துப்பாக்கிகளும், தாதாக்களும்,புளித்துப் போன அதே சத்தமும், பறக்கும் சுமோக்களும், வீசும் அரிவாள்களும், தெறிக்கும் ரத்தமும், அதே மதுக்கடைகளும், அதே குடிகார கதாநாயகர்களும், இக்காலத்திலும் பொறுக்கிகளையும், ரவுடிகளையும் விரும்பும் அதே லூசு கதாநாயகிகளும், பார்க்கிற நம்மை களைப்படைய செய்கின்றன. 10 நிமிடத்திற்கு ஒரு முறை கூட்டம் கூட்டமாய் ஆடுவதைதான் காதலிக்கிற உணர்வு என்றும், கத்தியால் குத்துபவன் தான் வீரன் என்றும் கற்பிக்கிற இவர்களால் தான் சுவாதிக்கள் பிணங்களாய் ரயில்வே மேடைகளில் கிடக்கிறார்கள்.
 
நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை அக்கம் பக்கம் பார்க்கும் போது புரிகிறது.
 
குறிப்பாக நான் விரும்பும் துல்கர் சல்மான். தமிழ்த்திரையுலகில் 90 களில் இருந்த கார்த்திக் போல பின்னுகிறார். சிறிய காட்சி என்றாலும் முக பாவனை, உடல்மொழி என அனைத்திலும் பட்டையை கிளப்புகிற துல்கரை யாராலும் விரும்பாமல் இருக்க இயலாது.
 
அவர் நடித்த சார்லி, பெங்களூர் டேஸ், 100 டேஸ் ஆப் லவ் , உஸ்தாத் ஹோட்டல், பச்சக் கடல் நீல ஆகாசம் செவ்வண்ண பூமி என பல படங்களை கண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் பார்த்த படம் களி.
 
பிரேமம் புகழ் சாய்பல்லவியும் ,துல்கர் சல்மானும் பின்னிருக்கிற அப்படத்தை வாய்ப்புள்ளோர் காண்க. எளிய சாதாரண திரைக்கதை.. அதை எவ்வளவு அழகாய் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய மலையாள சினிமாவின் ஒரு பானை சோற்று ஒரு சோறு பதமாக இருக்கிறது.
 
நாம் குடிப்பதையும், சோரம் போவதையும் முற்போக்காக காட்டிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தான் ..அவர்கள் மனிதனின் சின்னச்சின்ன குணாதிசியங்களையும்,பெருந்தன்மையையும், நில அழகியலையும் ,பண்பாட்டு சாரங்களையும் ஆவணப்படுத்திக் கொண்டே செல்கிறார்கள்.
 
இங்கே சினிமா அரசியலாகி வெகு நாட்கள் ஆகிறது. வெள்ளித்திரைகளில் தான் நமக்கு வருங்கால முதல்வர் கிடைக்கிறார்.
 
ஆனால் அங்கோ
 
சினிமா – எளிய வாழ்க்கையை அழகியலோடு பதிவு செய்யும் இன்னொரு இலக்கிய வடிவம்.
 
-மணி செந்தில்

284 total views, no views today