மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

தி வாக்.. (The walk )

Skydeck_The-Walk-Experience_Website-Image-e1441262518531

 

 

உலகம் எப்போதும் தனித்துவமானவர்களையே நினைவில் கொள்கிறது. சராசரிகளை சரித்திரம் தனது குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு சென்று கொண்டே இருக்கிறது. இலட்சிய உறுதியும், அசாத்திய பொறுமையும்,கடும் உழைப்பும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற தனித்துவமான ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மை கதையே .. தி வாக்.. (The walk )

அவன் பெயர் பிலிப்பி பெடிட். தெருக்களில் நாம் ஒரு காலத்தில் இயல்பாக பார்த்த அந்தரத்தில் கட்டப்பட்ட கம்பிகளில் நடக்கும் வித்தைக்காரன். அதை ஒரு கலையாக அவன் கற்கிறான். பல தடைகள். பல அவமானங்கள். கடும் முன்னேற்பாடுகள்..இவைகளுக்கு பிறகு அவனது கனவான நியூயார்க் நகரத்தில் இருக்கிற டுவின் டவருக்கு இடையே இருக்கிற தொலைவை கம்பி கட்டி அதன் மேல் நடப்பதை நிறைவேற்றுகிறான்.

கம்பி மேல் நடப்பதை விட.. அதற்கான முன் தயாரிப்புகளையே இப்படம் பெரிதும் பேசுகிறது. சட்டப்படி அனுமதி பெறாத நிலையில்.. அந்த சாகசம் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள் , பிலிப்பின் அசாத்திய உணர்ச்சி என….நம் விழிகளை மூட மறந்து போகிற காட்சிகளை உருவாக்கி வைத்திருப்பதுதான் இப்படம் உண்மையாக செய்யும் மேஜிக்.

ஒரு வெற்றிக்கு பின்னால் இருக்கும் வலி,வேதனை, காயங்கள் என்கிற எதிர்மறைகளுக்கு நிகராக கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, தன்னிலை துறத்தல் போன்ற பல நேர்மறைகளும் இருக்கின்றன என்பதை இப்படம் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

ஏதோ சில தடைகளால், தொந்தரவுகளால் நம் அல்லலுற்று ஆற்றாமை கொண்டு நிம்மதி இழக்கும் தருணங்களில்…இப்படிப்பட்ட திரைபடங்கள் நம் மனதிற்குள் ஊடுருவி நமக்கான பாதையை காட்டுகின்றன.

வலி மறந்து வழி பிறக்கிறது.

என் மனநிலை அறிந்து..சரியான படத்தை…அல்ல.. பாடத்தை பரிந்துரைத்த தம்பி லிங்கதுரைக்கு நன்றி.

http://www.imdb.com/title/tt3488710/

பொழுதுகள் கடந்த வெளி..

87244191_1280x720
கூந்தலை அள்ளி
அப்படியே என் முகத்தில்
படர்த்தினாய் …
 
இது நீள் இரவு என்றேன்..
 
இல்லை..இல்லை..
சூரியன் இருக்கிறதே
இது பகல்..
என்றாய் நீ..
.
அது உன் விழிகள்..
இது அதிகாலை
என்றேன்.
 
போடா
என்று புன்னகைத்தவாறே
இறுக அணைத்தாய்..
 
மீண்டும் சிரித்தவாறே
சொன்னேன்..
 
இது ஒரு பொன்மாலைப்
பொழுதென..

இளையராஜா – எம் தலைமுறை வாழ்க்கை.

3513-ilaiyaraja-issue317421980
தேவ தீண்டல்களால் உயிர் வாழ்பவனின்நன்றிக் குறிப்பு இது.
 
…..
 
புகழ்ப் பெற்ற டைட்டானிக் படத்தில் வரும் அந்த சில நிமிடக் காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. கப்பல் முழ்கி கொண்டிருக்கும் அந்த துயர வேளையில்..அந்த வயலின் இசை கலைஞர்கள் தங்கள் இசையை நிறுத்தாமல் வாசித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காட்சி உலகத்தையே உலுக்கிப் போட்டது. ஆனால் தமிழர்களோ ஒரு சிறிய புன்னகையோடு அந்த காட்சியை எளிதில் கடந்தார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு இசைக்கலைஞனை அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள்.
 
சகல விதமான மனித பாடுகளில் சிக்கித்தவிக்கும் அவர்களை ஏதோ ஒரு தேனீர் கடையில் உதிரும் இசையால், சட்டென கடக்கும் வீட்டின் சன்னல் ஒன்றில் இருந்து கேட்கும் இசையால்.. மனமும், குணமும் புத்தாடை அணிந்துக் கொள்ளும் திருவிழா பொழுதொன்றில்.. கண்கள் கலக்க ஏதுவாக கசியும் இசையால், பரபர என ஓடிக்கொண்டிருக்கும் புன்னகை தேக்கும் முகங்கள் திரியும் கல்யாண வீடுகளில் இருந்து ஒலிக்கும் இசையால் .. இன்னும் பல இடங்களில்..பல பொழுதுகளில்
 
24 மணி நேரமும்.. தன் இசை நுணுக்கங்களால் மீட்கும் மீட்பரை அவர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆக்கி வைத்திருந்தார்கள்…
 
தனது இசை வடிவ தீண்டல்களால்.. உள்ளுக்குள் உயிரை சுரக்க வைத்திருப்பவரை தம் சம காலத்து இசையாளனாய் அவர்கள் பெற்றிருந்தார்கள்..
………………………………….
 
அவமானங்களை சகித்துக் கொள்ளல் என்பது வாழ்வின் ஆக மகத்தான கலை. நம் முன்னால் வைக்கப்படும் எளிய சாப்பாட்டு தட்டின் ஒலி கூட இதயத்தை கீறி இருக்கிற அனுபவங்களை நாம் அனைவருமே பெற்றிருக்கிறோம். அனைத்தையும் இழந்து கையறு நிலையில் கழுத்தினை அறுத்துக் கொள்ள தூண்டும் மோசமான அனுபவங்களை நம் விழிகளில் இன்னமும் கண்ணீராய் தேக்கி இருக்கிறோம். போதும்டா எல்லாம் .. இது வாழ்க்கையடா மயிறு… என தோணும் தருணமொன்றில் நம் முன்னால் தோன்றும் குழந்தையின் புன்னகைப் போல
ஆற்றுப்படுத்திக் கொண்டே இருக்கிறது..
 
அவரது இசை .. துளித் துளியாய்… அமிர்தமாய்..
——————————————-
 
எளிய எம் பெண்களை தேவதைகளாக.. துருத்திய பல்லோடும், கருத்த மேனியோடும், தடுமாறிய வார்த்தைகளோடும், வரலாற்றின் வீதியில் தடம் மாறிய வாழ்க்கையோடும் தலைமுறை தலைமுறையாக பிறந்த எம் இனத்தின் ஆண்களை கதாநாயகர்களாக…
உளவியலாய் தனது இசைத் தீண்டல்களால் உருவாக்கி..
எம் மனதில் ஆழ்ந்திருக்கும் தாழ்வு மனப்பான்மையை தனது தேவ கரங்களால் நீக்கி…
 
இசை இசையாய் வழியும் தன் வண்ணத்தூரிகையின் மூலம் மானுட வாழ்வின் சகல விதமான அர்த்தங்களையும் வரைந்துக் கொண்டே செல்கிறார் அவர்.
 
————————————————–
புன்னகைக்கும், சிரிப்பிற்கும் உள்ள மெல்லிய வேறுபாட்டினை.. நாணம் மலரும் ஆண்களின் விழிகளை… தனிமையின் அர்த்தத்தை, மாலைப் பொழுதின் அழுத்தத்தை ..கண்ணீரின் கனத்தை என அனைத்தையும் புத்தியில் சிந்தித்து..கைகளால் எழுதிய இசைக்குறிப்புகளால் உணர வைத்தது மட்டுமா.. அவரது சாதனை..?
 
இல்லை..இல்லை..
 
இன்னமும் என்னைப் போன்றோர் துயர வாழ்வின் அழுத்தம் தாங்காமல் கழுத்தினை இறுக்கிக் கொள்ளாமலும்.. மனநிலை தடுமாறாமலும்.. பாதுகாத்து. இயல்பில் வாழ வைக்கிற அதிசயங்களை வெறும் இசைத் துணுக்குகள் என்று யாரும் அர்த்தப்படுத்த முடியாமல் பிரமித்து இருக்க வைத்திருப்பதே அவரது சாதனை..
——————————————–
 
வாழ்வென்ற கண்ணாடி மீது படரும் கசப்பு பனித்திரையை தனது நுட்ப இசை வருடல்களால் நீக்கும்
 
இசைஞானி இளையராஜா…
 
என்பது வெறும் பெயரல்ல..
 
எங்கள் தலைமுறை வாழ்க்கை.
 
அவர் பிறந்ததால் ..நாங்கள் உயிர் வாழ்கிறோம்.
 
இனிய வாழ்த்துக்கள்.. ஆழ்மன நன்றியோடும். காரணமேயன்றி கலங்கும் விழிகளோடும்..
 
-மணி செந்தில்

திராவிட நச்சுப்பாம்புகளின் விச பெருமூச்சுகளும்.. துரோக கதையாடல்களும்..

ithu_eppadi_irukku
சமீப காலமாக இணைய வெளிகளில் தி(ருக்குவளை குடும்ப) முன்னேற்றக்கழகத்தின் இணைய எழுத்தர்கள் செத்துப் போன பிணமாய் தங்கள் ஆட்சி அதிகார கனவு ஆகிவிட்டதே என்ற ஆற்றாமையில்.. தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து தரம் குறைந்த வசவுகளை.. முக்கிக் கொண்டும், முனகிக் கொண்டும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
 
தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் இருமுறைமைகளாக மட்டுமே பேச உரிமையிருக்கிறது என கருதுகிறவன் நான். ஒன்று அவரின் வீரம், ஈகை , அளப்பரிய உழைப்பு, அதன் வாயிலாக ஏற்பட்டிருக்கிற கம்பீரம் ஆகியவை குறித்தான பெருமித கதையாடல்கள். மற்றொன்று புலிகளின் ஆயுத மெளனித்தலுக்கு பிறகான தமிழீழ விடுதலையில் தமிழ் நாட்டின் பங்கு.
இந்த இரண்டு வகையான முறைமைகளை தாண்டி புலிகளை விமர்சிக்க, ஏச, தூற்ற , ஈழப் பெருநிலத்தின் இறையாண்மையை சீண்ட இங்கிருக்கும் எவருக்கும் எந்த வித உரிமையுமில்லை. அவர்களது தியாகவெளியில் பங்கேற்று தன்னுயிர் தந்த முத்துக்குமார் போன்ற தமிழ்நாட்டு சீலர்களைத் தவிர வேறு எந்த சில்லரைகளுக்கும் ஈழ விடுதலைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் வில்லங்கம் பேச, எழுத எவ்வித யோக்கியதையும் இல்லை.
 
இராசீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாக சிறைக் கொட்டடியில் சிக்குண்டு கிடக்கும் ஏழு தமிழர் விடுதலைப் பற்றி நமக்குத் தெரிந்த திமுக இணைய எழுத்தர் ஒருவர் தன்னாலான பதிவொன்றை உருக்கமாக எழுதி இருந்தார். என்னடா சாத்தான் வேதம் (?) தானே ஓதும்..இம்முறை சங்கீதம் இசைக்கிறதே என்று பார்த்தால் அதில் தலைவர் பிரபாகரனைப் பற்றி கீழ்த்தர வசவுகள்.
 
தலைவர் பிரபாகரன் துரோகியாம்..அவர்தான் ராசீவ் காந்தியை கொன்றாராம்.. சிறையில் இருக்கிற எழுவர் பற்றி எதுவும் பேசாமல் அது ஒரு துன்பியல் சம்பவம் என ஏசி அறையில் பேசி விட்டு போய் விட்டாராம்.
பாவம். திமுக தம்பிக்கு கோபாலபுரத்து கோயபல்ஸ்களின் கோல்மால் வரலாறு தெரிந்திருக்கும். தலைவரைப் பற்றி, அங்கு நடந்த தியாக வரலாறைப் பற்றி கோபாலபுரத்தின் முட்டுச்சந்திலும், சிஐடி காலனியின் சிக்னலிலும் முற்போக்கினை தேடும்
தம்பிக்கு எங்கே தெரியும்…?
 
தமிழின அகராதியில் துரோகம் என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் இல்லை. ஈழம், தமிழ்நாடு என்கிற இரு பெரு நிலங்களிலும் துரோகத்திற்கு பொதுவான ஒரே பெயர்தான். அது கருணா.
 
தியாகத்திற்கும், துரோகத்திற்கும் தொடர்பே இல்லாத வித்தியாசங்கள் உண்டு.
 
இராமச்சந்திரா மருத்துவமனையில்.. மல்லாக்கப் படுத்துக்கொண்டு முதுகுக்கு அறுவை சிகிச்சை செய்தது துரோகம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே சாப்பிடாமல் இருந்ததை சாகும் வரை உண்ணாவிரதம் என்று கதை கட்டியது துரோகம். காயம் பட்ட போராளிகளுக்காக சொட்டு சொட்டாய் சேர்த்த உதிரப் பொட்டலங்களை ஜாபர் சேட் ஷீ காலில் போட்டு மிதித்து அழித்தது துரோகம். இனத்தை அழித்த காங்கிரசின் காலை பதவிக்காக,பணத்திற்காக தழுவி கிடத்து சோனியா ..சோனியா சொக்கத் தங்கம் சோனியா என்று பாட்டு பாடியது துரோகம்.. 40 பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை வாங்கி தன் புட்டத்தின் பின் போட்டு விட்டு குடும்ப திட்டங்களுக்காக பேரம் பேசியது துரோகம். அய்யகோ…கொய்யகோ என்றெல்லாம் அழுகாச்சி தீர்மானங்களை பேருக்கு போட்டு விட்டு நேரு குடும்பத்திற்கு காவடி தூக்கியது துரோகம்.
நானே அடிமை ..இன்னொரு அடிமைக்கு எப்படி உதவுவது என்று உதவாக்கரை பேச்சு பேசி விட்டு ..அந்த அடிமைப்பதவிக்காக இந்த இறுதி மூச்சுவரை நாயாய்..பேயாய்..நரியாய் அலைவது துரோகம். இனத்தை அழித்த காங்கிரசோடு இனி ஒட்டும் இல்லை.உறவும் இல்லை .அவர்களுக்கு எங்கள் ஓட்டும் இல்லை என அறிவித்து விட்டு அடுத்த தேர்தலிலேயே காங்கிரசின் காலை கழுவிக் குடிப்பது துரோகம்.
செய்த துரோகங்களை அடுக்கடுக்காய் பட்டியலிட்டால் கோபாலபுரத்து சொத்துக் கணக்கு போல முடிவில்லாத கணக்குதான். ஆனால் அந்த தம்பி எளிமையாக சொல்கிறார் பிரபாகரன் துரோகி என்று.
 
இந்த சொல்லை சிறையில் இருக்கும் ஏழு தமிழரும் சொல்லட்டும். அற்புதம் அம்மா சொல்லட்டும். பெரியார் சிலைக்கு முன்னால், பெரியார் திடலில் வைத்து கைது செய்யப்பட்ட பேரறிவாளனை கைக்கழுவி விட நாங்கள் எல்லாம் திடலோ, கோபாலபுரத் திண்ணையோ அல்ல. பிரபாகரன் என்கிற தியாக நெருப்பினை ஆன்மாவில் சுமக்கிறவர்கள். இன்று ஏழு தமிழரின் விடுதலைக்காக திரண்டிருக்கிற அத்தனைத் தமிழர்களும் பிரபாகரனை தங்கள் தலைவராக மானசீகமாக ஏற்றுக் கொண்டவர்களே.. எங்களுக்கு எல்லாம் சென்னைக்கு ஒரு தலைமை..சிஐடி காலனிக்கு ஒரு தலைமை..மதுரைக்கு ஒரு தலைமை என்ற மானங்கெட்டத்தனங்கள் கிடையாது.
தான் பெற்ற பிள்ளைகளுக்கு பதவி கேட்டோ, உதவிக் கேட்டோ நின்றவர் எங்கள் தலைவர் அல்ல. எல்லாருக்கும் நேர்வது தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நேரட்டும் என்று களத்தில் நின்ற நேர்மையாளன். கட்சியில் குச்சி கட்டிய காலம் முதல் இருந்தவனை காலில் போட்டு மிதித்து விட்டு தன் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும், பேத்திக்கும் பதவி கேட்டு டெல்லிக்கு அலைய எம் தலைவர் அண்ணா அறிவாலயத்துக்காரர் அல்ல. ஏசி அறையில் தூசி தட்டி..பேசி முட்டி நிற்பதற்கு எங்கள் தலைவர் காகிதத்தில் வசனம் எழுதி.. காற்றை 2 ஜியாக விலை பேசும் வில்லன் இல்லை.
 
எங்கள் தலைவர் களத்தில் நின்றார்.
 
மக்களோடு.. மக்களாக.தன் உதிரம் சிந்தி தாய்மண்ணை உயிர்ப்பிக்க நம்பிக்கைக் கொண்டு களத்தில் நின்றார்.
 
பேசுங்கள். தமிழ்நாட்டு அரசியலில் ஆளா..இல்லை..? திட்டிக் கொள்ள, ஏசி..பேசி ஒப்பிட்டுக் கொள்ள ஆளா இல்லை…? சாக்கடையில் நெளியும் புழுக்களுக்கா பஞ்சம்..? கடலிலே தூக்கிப் போட்டாலும் கூட கடலையே களவாடும் கட்டுமரங்களுக்கா இங்கு பஞ்சம்..?
சாக்கடைகளை பற்றி சலிக்காமல் பேசுங்கள். அதில் எங்களுக்கு சல்லிக்காசு அளவு கூட எதிர்ப்பில்லை. ஆனால் புனிதங்களைப் பற்றி பேச நரித்தனத்தின் நாவுகளுக்கு உரிமை இல்லை.
இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலைவழக்கில் இன்னும் வெளிவராத மர்மங்கள் ஏராளம் உண்டு. அது இன்றவும் முடிவடையாத விசாரணை. அதில் சிக்கி இருக்கிற 7 தமிழர்களை காப்பாற்றவே இந்த உணர்வுப் பூர்வ ஒன்று கூடல். பேரணி.
 
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டவர்களை விடுவிக்க தலைவர்.பிரபாகரன் எதுவும் செய்யவில்லை என்று பேசுவதே அபத்தமானது. ஏதாவது செய்திருக்க முடியுமா..செய்திருப்பார்களா என்பதெல்லாம் நம் அறிவிற்கு அப்பாற்பட்டது. அதைப்பற்றி அந்த ஏழு பேரைத் தவிர மற்றவரெல்லாம் பேசுவது அநாகரீகமானது.
 
எனவே துரோகத்தனத்தை எல்லாம் பேச அடிப்படை தகுதிகளை திமுக இழந்து பன்னெடுங்காலமாகி விட்டது. ஈழ உறவுகளின் இரத்தக்கறை படிந்த அவர்களின் அரசியல் பாதை எதனாலும் புனிதமாகி விடாது.
திராவிடம் என்ற பெயரில் மண்ணின் பூர்வக்குடிகளின் வாழ்வை,பண்பாட்டு விழுமியங்களை, அரசியலை, பொருளாதார சூழலை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு …ஆசியாவின் மூன்றாவது பணக்கார குடும்பமாக மாறியது எம் தலைவர் குடும்பம் அல்ல.
 
ஒப்பிட்டு யோசிக்கவே மனது கூசுகிறது. புனிதத்தின் உச்சிக்கும், வாயில் இருந்து உமிழும் எச்சிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா..?
 
வந்தோமா…அரசியல் செய்தோமா..அடுத்தவன் காசை , அரசாங்க பணத்தை ஆட்டைய போட்டோமா என்கிற அரசியலைத் தாண்டி ..ஈழம் ,பிரபாகரன் என்கிற தியாகமும்,புனிதமும் நிறைந்த சுடர்மிகு இலட்சியங்களை அவர்கள் நினைக்க வேண்டியதில்லை.
நினைக்கவும் முடியாது. கூடாது.
 
எனவே எம் தலைவர் பிரபாகரனைப் பற்றி அவதூற்று கதையாடல்களை நிறுத்திக் கொண்டு..வழக்கம் போல பிழைப்புத்தனங்களை செய்து வர உங்களுக்கு தயாளு அம்மா ஸ்பெசல் சாய்பாபா அருள் அளிக்கட்டும்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில்  இருக்கும் ஒரு சுவரொட்டி போதும். சொல்லக்கூசும் இவர்களின் கதைகளைச் சொல்ல.
 
– மணி செந்தில்
 

வசவுகள் உணர்த்தும் செய்திகள்..

சமீப நாட்களாக கீற்று இணையத்தளத்தில் நாம் தமிழர் எதிர்ப்பு கட்டுரைகள் மீண்டும் அதிகமாக பிரசுரமாகி வருகின்றன. (நடுவில் ஏனோ..நிறுத்தி இருந்தார்கள்.)

பொய்யும்,புரட்டும்,தேர்தல் அச்சமும் (சொந்தக்காரர்கள் ஜெயிக்கணுமில்ல…) நிரம்பி வழியும் அக்கட்டுரைகள் பற்றி நமக்கு ஒரு பொருட்டே இல்லை என்றாலும் கூட…

மேற்கண்ட கட்டுரைகள் சில செய்திகளை சமூகத்திற்கு தெளிவாக வெளிக்காட்டுகின்றன..

அவையாவன..

தமிழ்த்தேசிய கருத்தியலின் ஏகமனதான பிரதிநிதியாய் நாம் தமிழர் அமைப்புதான் இருக்கிறது..

திராவிட கருத்தியலின் சிம்ம சொப்பனமாய் நாம் தமிழரே திகழ்கிறது.

தமிழ்த்தேசிய கருத்தியல் எதிர்ப்பு என்றாலே அது சீமான் எதிர்ப்பாகவே பதியப்படுகிறது.

சமீபநாட்களாக அர்த்தமற்று,வலுவற்று, இளைஞர்களை ஈர்ப்பை தொலைத்து…ஏறக்குறைய சமாதி நிலைக்கு சென்று விட்ட திராவிட கருத்தியல் நோக்கி வெளிச்சம் பட தேவை எழுந்திருக்கிறது.

ஆரிய எதிர்ப்பு,இந்துத்துவ எதிர்ப்பு,சாதீய மறுப்பின் பிராண்ட் அம்பாசிட்டர்களாக ஒரு காலத்தில் இருந்த திராவிட கருத்தியல் தற்போது அம்பலப்பட்டு, அப்பதவிகளை தங்களது வலிமையான தொடர் செயல்பாடுகளால் தமிழ்த்தேசிய கருத்தியல் மூலமாக பிரபாகரனின் தம்பிகள் நிறுவி நிற்பதுமான சூழலில் கீற்று போன்ற இணையதளங்கள் மூலமாக வசவொலி பொழிய கட்டாயம் எழுந்திருக்கிறது..

அரங்கங்களில் இருந்த தமிழ்த்தேசிய கருத்தியல் லட்சக்கணக்கான மக்கள் கூடும் வெகுசன ஈர்ப்பு கருத்தியலாக மாறி நிற்பதும், பெரியார் தன் உழைப்பால் வெகுசன கருத்தியலாக கட்டி வைத்திருந்த திராவிட கருத்தியலை ,கருணாநிதி,ஜெ,விசயகாந்த் (அண்ணன் வைகோ பெயர் இத்தருணத்தில் வேண்டாங்க.. அவரே அண்ணா அறிவாலயத்தில் தன் கட்சி கூட்டத்தை தேடும் நிலையில் இருப்பதால்.. நாமும் எதற்கு smile emoticon ) என நீளும் பட்டியலில் இருக்கிற திராவிட அரசியல் வாதிகள் தங்கள் சுயநலபிழைப்பு,பித்தலாட்ட அரசியல் காரணமாக மக்களிடம் அம்பலப்பட்டு நிற்பதும், இவர்களை தத்துவமாக தாங்கிப்பிடிக்க முடியாமல், அடையாளப்படுத்த முடியாமல் தவிக்கிற திராவிட சிறு இயக்கங்கள் தங்களை,தத்துவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் வருகிறது. சீமானின் சொற்கள் மக்கள் மனதில் ஏற்படுத்துகிற மாற்றத்தை.. பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது..அப்போதுதான் தங்களது ”இரத்த” உறவுகளது அரசியல் அங்கீகாரம் பலவீனப்படாமல் காக்கப்படும்..

இது போன்ற தேவைகளுக்காக,கட்டாயங்களுக்காக வசவு கட்டுரைகள், ஏசல் எழுத்துக்கள்,பூசல் பூச்சாண்டிகள் ஆகியவற்றை கீற்று பிரசவிக்கிறது.

புரிகிறது.

நாம் தமிழரை தனித்த வலுவான சக்தியாக மாற்ற..அடையாளப்படுத்த ஓயாமல், உறங்காமல் உழைக்கிற கீற்றுவின் சேவை (அச்சம்..?? ) கண்டு மனம் மகிழ்கிறது.

கீற்று இணையத்தளத்தில் ஒருகாலத்தில் எனது எழுத்துகள் பல வந்திருக்கின்றன.

அப்போது நான் எவ்வாறு மகிழ்ந்தேனோ..இப்போதும் அதே அளவு மகிழ்கிறேன்.

தனித்தலைகிற தழுவல்கள்…

11987113_10208016904569164_8236167518369065881_n

சொற்கள் குவிக்கப்பட்டிருந்த

அந்த நிலா முற்றத்தில்

நான் தனித்திருந்தேன்

எனக்கு ஆக பிடித்தவனுக்காக..

விழி இழந்தவனின்

விரல் நுனி போல

தேர்ந்த சொற்களின்

பதம் பார்த்து

நினைவின்

அடர்பாசி மாலை

ஒன்றினை சூட்ட

ஒளி உமிழும் கரங்களோடு

காத்திருந்தேன். .

அடுக்கடுக்காய் தடுக்கிற

நினைவின் மடிப்புகளில்

சதா கலைந்துக்

கொண்டே இருந்தேன்

ஒரு வித சங்கடத்தோடு..

என்னை கண்டு

வாரி அணைக்கிற

அவனது புன்னகையும்..

தோள் தழுவி பூரிக்கின்ற

அவனது ஈர விழி அசைவுகளும்..

பழகிய அடவுகளாய்

என் மெளனச் சருகின்

விலா முறிய

என்னை சுற்றி

நடனமிடும் போது…

நான் எனக்குள்ளாக

சொல்லிக் கொண்டேன்..

பாக்கியா…

சொற்களின் சேகரத்தில்..

காலங்களின் கலையா மடிப்புகளில்..

அடர் வனத்தில் தனித்தலையும்

காற்றின் மகரந்த வாசனைகளில்…

விடிப்பொழுதில்

நதிக்கரையில் ஈர மணலில்

படுத்திருக்கும்

நிலாக்கால வெண் சுடர்களில்..

இப்படி

எதிலும் மிஞ்சியிருக்கும்

உங்களுக்கென

தனித்திருக்கும்

எனது அன்பும் ,தழுவல்களும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இரவு முடிவிலியான கதை

starry_night_by_girl_on_the_moon-d351dj0
—————————————————–

இரவை போர்த்திக்
கொண்டு
அவள் படுத்திருந்த
அவ் வேளையில் தான்
கலைந்த அவளது
கேசத்தில்
நட்சத்திரங்கள்
பூத்திருந்தன…

சட்டென்று இரவை
பிடித்தெழுத்து
மீண்டும் ஒரு
விடியலுக்கு
நான் தயாரான
போது…

அவள் சிரித்தாள்.

நான் சற்றே மூர்க்கத்துடன்..

நீ போர்த்திக்கிடக்கிற
இரவை பிடித்து இழுத்தால்
என்ன செய்வாய்..?

என கேட்டேன்

மீண்டும்
சிரித்தப்படியே
அவள் சொன்னாள்..

நான் உன்னை போர்த்திக்
கொள்வேன் – என

ஆதி வன
மூங்கிலில்
யாரோ
காற்று ஊதி
இன்னுமொரு
இரவிற்கு
ஏற்பாடு செய்தார்கள்…

பிறகுதான்
நான்
உணர்ந்தேன்..

இரவும், அவளும்
முடிவிலி என…

வாசுவும் சரவணனும் ஒண்ணா பசரடிச்சவங்க- மதுக்குடி பிதற்றும் திரைமொழி அபத்தம்.

Vasuvum-Saravananum-Onna-Padichavanga-–-VSOP-2015-Tamil-Mp3-Songs-Download

 

 

கடந்த சில வருடங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி தயாரித்து   “வ-குவார்ட்டர்,கட்டிங்” என்ற திரைப்படம் வந்த போது அதன் தலைப்பு சார்ந்து, உள்ளடக்கம் சார்ந்து கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டன. மதுக்குடி ஒரு பொழுதுப் போக்கு என்கிற நிலை மாறி, மதுக்குடி ஒரு தீவிர நோயாக உருமாறிக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில் தான் மதுக்குடியை கொண்டாட்டத்தின் வடிவமாக, உணர்ச்சியின் வடிகாலாக , காட்டி நியாயப்படுத்தும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அத்திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப ( ஆங்கிலத்தில் வி.எஸ்.ஓ.பியாம்- மதுபான வகையொன்றின் பெயர். )

காதலிப்பது,குடிப்பது மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்யும் கதாநாயகன், அவன் வெறுப்பேற்ற, அவன் காதலுக்கு உதவ அவனைப் போன்ற ஒரு நண்பன், இவர்களை நேசிக்க எந்த தார்மீக காரணமும் இல்லை என்பது புரிந்தும் காதலிக்கும் இவர்களை போன்ற பொறுப்பற்ற கதாநாயகிகள் , இவர்களை சார்ந்த உப கதாபாத்திரங்கள் என வைத்துக்கொண்டு, கதை என்கிற முக்கிய கருப்பொருள் இல்லாமல், எவ்வித உண்மைத்தன்மை இல்லாமல்  திரையில் எது சொன்னாலும், எது காட்டினாலும் மக்கள் சிரித்து விடுவார்கள் என்கிற மகத்தான (?) நம்பிக்கைகளோடு தயாரிக்கப்படும் பல நூறு திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப. வழக்கமான இயக்குனர் ராஜேஷின் அதே கதை. அதே குடி.

 இது நடிகர் ஆர்யாவின் 25 வது திரைப்படம் என்ற அறிவிப்போடு படம் தொடங்குகிறது. தனது திரைவாழ்வின் முக்கியமான படமொன்றுக்கு ஆர்யா இது போன்ற கதையை தேர்வு செய்தது ஆச்சர்யமே. படம் முழுக்க பரவிக்கிடக்கும் மதுபானம் அருந்துகிற காட்சிகள் பார்வையாளர்களை முகம்சுளிக்க வைக்கிறது. மதுவிலக்கிற்கு ஆதரவான போராட்டக்குரல்கள் எழுந்திருக்கிற இக்காலக்கட்டத்தில் இத்திரைப்படம் வெளிவந்திருப்பது ஒரு நகைமுரண். தமிழகத்து இளைஞர்கள் என்றாலே எப்போதும் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு ஏதோ ஒரு பொண்ணை காதலிப்பதற்காக வீதிவீதியாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கின்ற கருத்தை வலியுறுத்துகிற பல படங்கள் வரிசையில் இத்திரைப்படமும் இடம்பெறுகிறது. படத்தில் பெரிதாக கதை ஒன்றுமில்லை. சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த வாசு என்கிற சந்தானமும், சரவணன் என்கிற ஆர்யாவும் மிகநெருங்கிய நண்பர்கள். சந்தானத்திற்கு திருமணம் ஏற்பாடாகிறது. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான பானுவிடம் தன் நண்பன் மீது கொண்ட அதீத அன்பாலும், அக்கறையாலும் ஒரு நேர்முகத்தேர்வு(?) நடத்துகிறார். ஆர்யாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மனம் வெறுத்துப்போன பானு தன் கணவன் சந்தானத்திடம், ‘உன் நண்பன் ஆர்யாவை கைவிட்டு வந்தால்தான் நமக்கு முதலிரவு’ என்று நிபந்தனை(?) வைக்கிறார். சந்தானமும் தனது நண்பன் ஆர்யாவும் தன்னைப்போலவே காதல் திருமணம் செய்துகொண்டால் நட்பு இயல்பாகவே ஒருகட்டத்தில் அறுந்து விடும் என்று கருதி, நண்பன் காதலிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறார். ஆர்யா, தமன்னாவை காதலிக்க அதுவும் பல்வேறு குழப்பங்களில் தடைபட்டுப்போக இறுதியில் வாசுவும், சரவணனும் ஒன்றாகவே இணைந்தார்களா? வாசுவுக்கு தனது மனைவியோடு முதலிரவு நடந்ததா? சரவணன் தனது காதலியோடு சேர்ந்தாரா? என்கின்ற கேள்விகளுக்கான விடைகளோடு திரைமொழி (?) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க பல நட்சத்திரங்கள் தோன்றி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.  கவுரவ வேடத்தில்,படத்தின் இறுதிக்காட்சியில் காவல்துறை அதிகாரியாக வரும் விசாலும் இதைத்தான் செய்கிறார். இப்படத்திற்கென பெரிதான இசையோ,ஒளிப்பதிவு மேதமையை காட்டும் காட்சிகளோ தேவை இல்லை என்பதை இயக்குனர் முடிவு செய்து விட்ட பிறகு ..இடையில் நாம் யார்..? படத்திற்கு கதையே வேண்டாமென முடிவு எடுத்தவராயிற்றே அவர்…

இன்றைய தமிழ் திரைப்படங்களின் திரைமொழி விவரிப்பு என்பது வெகுவாக மாறியிருக்கிறது. இளம் இயக்குனர்கள் பலர் முன் வந்து நம்பிக்கை அளிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் ஜிகர்தண்டா,காக்கா முட்டை, சூதுகவ்வும்  போன்ற பல்வேறு சோதனை முயற்சிகள் தமிழ்த்திரைப்படத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சமகாலத்தில் தமிழ்த்திரைப்பட உலகம் போலவே மலையாளத் திரைப்பட உலகமும், இந்தி திரைப்பட உலகமும் பல்வேறு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை வெளியிட்டு வருகின்றன. பொதுவாக வெகுசன திரைப்பட ரசிகனின் ரசனை என்பது சமீபகாலத்தில்  பெரும் மாற்றமடைந்திருக்கிறது. சமூகம் சார்ந்த, ரசனை சார்ந்த திரைப்படங்கள் கவனிக்கப்படும் இச்சூழலில் ‘வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ போன்ற திரைப்படங்கள் உண்மையாகவே திரைப்பட ரசனைக்கும், திரைக்கலைக்கும் ஏதாவது முன்னேற்றத்தை அளிக்கின்றனவா? என்பது குறித்து நாம் திவிரமாக சிந்தித்துதான் ஆக வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்ற, ரசிக்கின்ற ஊடகமாக திரைப்படம் இருக்கின்றது. திரையில் தோன்றும் கதாநாயகனை தனக்கு முன்மாதிரியாக கொண்டு வாழும் பல கோடி இளைஞர்களைக் கொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகம் விளங்குகிறது. எனவே, இயல்பாகவே தமிழ்த்திரையில் தோன்றுகின்ற கதாநாயகர்களுக்கு ஒரு சமூக பொறுப்புணர்ச்சி தேவையாக இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஏதோ குடித்துவிட்டு பெண்கள் பின் சுற்றுவதையே தமிழ் இளைஞர்கள் வேலையாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொதுக்கருத்தை இத்திரைப்படம் நிறுவ முயற்சித்திருப்பது உண்மையாகவே வருத்தமளிக்கிறது. குடிப்பது ஒரு குற்றமல்ல, அது சமூக இயல்பு என தனது திரைமொழியின் மூலம் இயக்குனர் நிறுவ விரும்புவது கண்டிப்பாக ஆபத்தானதே.  மேலும் பெண்கள் ஆண்களை காதலிக்கதான் படைக்கப்பட்டவர்கள் என்பது போல இன்றளவும் நினைத்துக்கொண்டும், அதை திரைப்படமாக தயாரித்துக்கொண்டும் இருப்பது பிற்போக்குத்தனமானவை. திரைப்படங்கள் மூலம் பல்வேறு சமூகக்கருத்துகளைப் பரப்பிய நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற புரட்சியாளர்கள் இருந்த திரைப்படத்துறையில் நாமும் இருக்கிறோம் என்ற உணர்வு ஆர்யாவுக்கும், இயக்குனர் ராஜேசுக்கும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். ஆனால், இதனையெல்லாம் கவலைகொள்ளாமல் சந்தானத்தின் இடைவிடாத நகைச்சுவைகளை முக்கியக் காரணியாகக் கொண்டு எந்த அடிப்படையும், வலுவும் இல்லாத கதையை வைத்துக்கொண்டு படம் முழுக்க மதுபானம் அருந்துகிற காட்சிகளை, அதுசார்ந்த உரையாடல்களைப் பொருத்திக்கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது உண்மையாகவே தமிழ்த்திரைப்பட ரசிகனின் மனோபாவத்தை பெரிதும் பாதிக்கிற நடவடிக்கையாக நாம் கருதலாம். திரைப்படம் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஊடகம்தானே? இதில் எதற்கு கருத்துக்கள்? என்று கேட்போர்க்கு, எது மகிழ்ச்சி…என்கிற சிந்தனை வயப்படுத்தும் வினாவை எழுப்ப கடமைப்பட்டவர்கள் நாம் என்பதை மறக்கக்கூடாது.

எனவே, திரைப்படம், எழுத்து, இலக்கியம், நுண்கலைகள் என கலைவடிங்களில் பங்குபெற்று உழைப்போர்க்கு கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்ச்சி தேவை என்பதைத்தான் ‘வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. திரையரங்க வாசலில் ஒரு சாதாரண பார்வையாளன் உதிர்த்த கருத்தொன்று எனக்கு இந்நேரம் நினைவுக்கு வருகிறது.’ வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்பதற்கு பதிலாக வாசுவும் சரவணனும், ஒண்ணா குடிச்சவங்க என்றே பெயர் வைத்திருக்கலாம்.

உண்மைதான்…

-மணி செந்தில்

இளையராஜாவின் பியானோ..

எப்போதும்
மின்னிக் கொண்டிருந்த
அந்த நதிக்கரையில்
நட்சத்திரங்கள்
தரை இறங்கி
கிறங்கிக் கிடந்தன..

துடித்துக்
கொண்டிருந்த
நீரைப் போர்த்திக்
கிடந்த நிலவு
கூழாங்கற்களை
தழுவிக் கொண்டது…

ஒரு கவிதை
தன்னைத் தானே
மடல் விரித்து
எழுதத் தொடங்கிய
அக்கணத்தில் தான்,,,

அந்த
பின்னிரவில்…

இளையராஜா
பியானோ
வாசிக்கத்
தொடங்கி
இருந்தார்….

 

சில நேரங்களில் பல கேள்விகள்- மணி செந்தில்..

1491548104seemaneputhur

தமிழ்த்தேசிய கருத்தியல் குறித்து இணைய வெளிகளில் ,கருத்துத்தளங்களில் பரவலாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ்த்தேசியர்கள் குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

எந்த அதிகாரத்தினால் தமிழ்த்தேசிய இனம் வீழ்ச்சியுற்றதோ அந்த அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கிற முழக்கத்தை முன் வைத்து நகரும் தமிழின இளைஞர்களை முதலமைச்சர் ஆக கனவு காண்கிறார்கள், முதலமைச்சுத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வசவுகள் பொழிகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முனையும் தமிழ்த்தேசியர்களை வலது சாரி தமிழ்த்தேசியவாதிகள் என்று வசைபாடும் பெரியவர்கள்… முதலமைச்சு திராவிடம், வலது சாரி திராவிடம் போன்றதான விமர்சனங்களை தப்பித்தவறி கூட முன் மொழிவதில்லை என்பது வெளிப்படை.
மக்கள் ஆதரவை திரட்டி, மற்ற திராவிடக் கட்சிகள் போல எங்களுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, தமிழ்த்தேசிய கருத்தியல் வெகு சன மக்களை கவர்கிற கருத்தியல் என நிருபிக்க போராடும் இளையோர்களை குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை நோக்கி தாறுமாறாக விமர்சன அம்புகள் எய்யப்படுவதன் உள்நோக்கத்தை நாம் ஆராய வேண்டும்.

அப்படி இவர்கள் வெறுக்கும் வகையில் நாங்கள் என்ன செய்து விட்டோம்….?

கருத்தரங்குகளில், அரங்கங்களுக்குள் நடக்கும் மாநாடுகளில் (?) ,வயதானவர்களில் ஜிப்பா பைகளில், நரைத்த முடிகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கருத்தியலை பல லட்சக்கணக்கான வெகு மக்களுக்கான கருத்தியலாக வெகுசனமயமாக்கியதும், பிழைப்புவாத போலி திராவிட அரசியல் கருத்தியலுக்கு மாற்றாக முன் நிறுத்தியதையும் தவிர நாங்கள் செய்த குற்றம் என்ன..?

யாருக்கு ஆதரவாக எங்கள் மீது வசவு அம்புகளை இவர்கள் எய்கிறார்கள்..?

தமிழ்த்தேசியவாதிகள் வெகுசன அரசியல் பாதைக்கோ, அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் பாதைக்கோ வந்து விடக்கூடாது என்பதில் திராவிட அரசியல் வாதிகளை விட கவனமாக இருப்பது ‘ கருத்தரங்க’ தமிழ்த்தேசியர்கள் தான்.

.. அற்பமான (?) இந்த தேர்தல் வெற்றியை கூட பெற முடியாத, மக்கள் ஆதரவு இல்லாத ,சொல்லப்போனால் வெகு சன மக்கள் நிராகரிக்கிற தேர்தல் புறக்கணிப்பு தமிழ்த்தேசியம் எப்போதும் திராவிட அரசியலுக்கு ஆதரவாகவே இருப்பது ஏன்…?

இந்திய கட்டமைப்பாகவே இருந்து விட்டு போகட்டும். தமிழர்கள் ஆண்டு விட்டுதான் போகட்டுமே.. தெலுங்கர்,கன்னடர் தமிழ்நாட்டை ஆளலாம்..தமிழன் ஆளக்கூடாதா… இது தமிழனை தவிர்த்த மற்றவர்களுக்கான உரிமையா..? குறைந்த பட்சம் இந்தியக்கட்டமைப்புக்குள்ளாகவே ஆள வக்கற்ற, அதிகாரமற்ற தமிழன்…எப்படி தனக்கென ஒரு நாடு அடைவான்…? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது..?

எதற்கெடுத்தாலும் பெரியார் என்கிற பாதுகாப்பு கேடயத்தை முன் நிறுத்தும் இவர்கள் பல முறை தனக்கு முதல்வர் வாய்ப்பு தனக்கு வந்தும் கூட..பெரியார் ”பச்சைத்தமிழன்” காமராசருக்கு தானே வாக்கு கேட்டார்… என்கிற உண்மையை மறைக்க துடிப்பது ஏன்..?

தேர்தலில் நிற்பது தவறென்றால்..வாக்கு கேட்பது சரியா…? ( தங்களுக்கு “வேண்டியவர்களுக்கு” மட்டும் வாக்கு கேட்பது தமிழ்த்தேசிய எல்லைக்கு அப்பால் என்றெல்லாம் மனசாட்சி கேட்டால் நாம் பொறுப்பல்ல..)

சரி.தேர்தலில் நிற்கவேண்டாம்.

கருணாநிதி,ஜெயலலிதாவே ஆண்டு விட்டு போகட்டும், அதற்கு பிற ஆள அவர்களது வாரிசுகள் இருக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்போம். தேர்தல் அரசியலில் நிற்காமல் மக்களை திரட்ட, மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலை நோக்கி ஈர்க்க , தமிழர்களை திரட்டி தமிழ்த்தேசம் சமைக்க… என்ன என்ன முயற்சிகள்.. எத்தனை ஆண்டு காலத்தில்…? விளக்குவார்களா இவர்கள்…???

தமிழர்கள் என்று சொன்னால் பிறப்பு அடிப்படையிலான குருதி தூய்மை..சரி. திராவிடர்களை நீங்கள் எதை கொண்டு வரையறை செய்தீர்கள் – ஏழை பணக்காரன் பார்த்தா..நல்லவன் கெட்டவன் பார்த்தா…? எதை கொண்டு திராவிடர்களை பிரிக்கிறீர்கள்.வரையறை செய்கிறீர்கள்…?

மக்களை வெல்லாமல், வெகு மக்களை திரட்டாமல்..மானுட எல்லைகளுக்கு (?) அப்பால் ஒரு தத்துவத்தை கட்டமைத்து, வாத பிரதிவாதங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே ஒரு தேசம் உருவாகி விட முடியுமா…அதற்கான மானுட உளவியல் விழைவை, தேவையை இம்மண்ணில் இதுவரை யாராவது ஏற்படுத்தி இருக்கிறார்களா…?

seeman_2417919f

எப்போதும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது மக்கள் ஆதரவை சார்ந்தது. மக்களை வெல்லாமல் எதையும் நாம் அடைய முடியாது. எப்போதும் பலவீனப்பட்ட சிறு சிறு குழுக்களின் தத்துவமாக தமிழ்த்தேசிய கருத்தியல் இருந்த காலக்கட்டம் முடிந்து விட்டது. இன்றைய தமிழின இளையோர் தமிழ்த்தேசிய கருத்தியலை வெகுசன ஆதரவு கருத்தியலாக விதைப்பதில் வென்று காட்டி இருக்கிறார்கள்.

கடந்த 2009 க்கு பிறகான தமிழின வரலாற்றிலும், தமிழின இளையோர் சிந்தனையோட்டத்திலும் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை புறம் தள்ளி , அவர்களை வலது சாரி, உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள், குருதித்தூய்மை பார்ப்பவர்கள் என்றெல்லாம் ஏசி முறியடிக்க விரும்புவது திராவிட பித்தலாட்ட அரசியலுக்கு அப்பட்டமாக துணை செய்யதானே..?

நமது மண்ணில் பிழைக்க வந்திருக்கிற வேற்று இனத்து உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பரசியல் குறித்தெல்லாம் சிந்திக்கிற இவர்கள்…இங்கிருந்து உலகம் முழுக்க பிழைக்கப் போன எம்மின மக்கள் குறித்து கரிசனம் கொண்டிருக்கிறார்களா… ? பெருமுதலாளிகளாக இம்மண்ணை சுரண்டி வாழும் நிறுவனங்களான ஜோஸ் ஆலுக்காஸ். ஜோய் ஆலுக்காஸ், முத்தூட் பைனான்ஸ், பல திரைப்பட நிறுவனங்கள்,குளிர்பான நிறுவனங்கள், உள்ளீட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விமர்சனம் சார்ந்த எங்களது வெறுப்பரசியல் இம்மண்ணில் பிழைக்க வந்துள்ள பிற இனத்து உழைக்கும் மக்கள் மீது என்றாவது பாய்ந்திருக்கிறதா…??

அதற்கான ஆதாரங்களை பெரியவர்கள் வெளியிடுவார்களா..?

தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைகாடாக விடமாட்டோம் என்கிற இம்மண்ணின் பூர்வீகக்குடிகளின் அடிவயிற்றுக் குரல்… ஏன் உங்களுக்கு சுருதி பேதமாக ஒலிக்கிறது…??

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அலைபோல எழுகின்றன.

ஏனென்றால் காலங்காலமாக காற்றில் கரைந்துப் போன கற்பூரமாய் இருந்த அக்குரல் இப்போது திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு எதிரான இடி முழக்கமாய் முழங்க தொடங்கிவிட்டது.. செத்துக் கொண்டிருக்கிற திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு தத்துவார்த்தமாக வலிமை சேர்க்கவே இப்படிப்பட்ட கூப்பாடுகள் என்பதை நாங்கள் அறிவோம்.

நாங்கள் உறுதியான குரலில் ,எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கிற எம்மின விடுதலை மீது பற்றுறுதி கொண்டு அறிவிக்கிறோம் . யாரும் வரலாம். வாழலாம். இம்மண்ணில். வந்தவர்களை வாழ வைப்போம்.. அது எம்மினத்தின் பண்பாட்டுப் பெருமை. ஆனால் எம் சொந்தவர்களை மட்டுமே ஆள வைப்போம். அது தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.
நாங்கள் முன் வைக்கிற முழக்கங்கள் உறுதியாக பிற இனத்தார் மீதான வெறுப்பரசியல் இல்லை. அவை எங்கள் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை.

பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களையும், இந்திய பெருநிலத்தில் தோன்றிய மகத்தான பெருமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களையும் நாங்கள் பெருமதிப்புடன் அணுகுவதில் ஒரு போதும் பிழை செய்வதில்லை. இருண்ட உலகிற்கு வெளிச்சம் காட்ட பிறந்த அந்த தீப்பந்தங்களின் ஆதி மூலம் குறித்து நாங்கள் ஆராய்வதில்லை. அவர்கள் மட்டுமல்ல மாமேதை மார்க்ஸ் தொடங்கி தத்துவங்கள் மூலம், நெறிகள் மூலம், வாழ்வியல் மூலம் வழிகாட்டிய மாபெரும் மனிதர்களை நாங்கள் ஒருபோதும் மதிக்காமல் கடந்ததில்லை. மாறாக அவர்கள் உலகம் தழுவிய அடிமைப்பட்டு கிடக்கிற இன மக்களுக்கான வழிகாட்டிகள் என்பதை நாங்கள் நெஞ்சார உணர்ந்துள்ளோம்.

அதே சமயத்தில் எம்மினத்தில் பிறந்த பேரறிஞர் அயோத்திதாசர் பண்டிதர் அவர்களையும், எம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களையும், பேராசான் ஜீவா அவர்களையும், இன்னும் பிற தமிழ்த்தேசிய கருத்தியல் தளம் சார்ந்து இயங்கிய எங்கள் பாட்டன்களையும் நாங்கள் எங்கள் குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவர்களை எங்கள் முன்னோடிகளாக, எங்கள் தலைவர்களாக போற்றுகிறோம்.

தவறான விமர்சனங்களை பரப்புவதன் மூலம் தமிழின இளைஞர்களின் அரசியல் பாதையை அழித்து..திராவிட பிழைப்பு வாத அரசியலுக்கு மறு உயிர் கொடுக்கிற முயற்சிகளை எங்களால் உணர முடிகிறது.

.இலட்சக்கணக்கான எம் உறவுகளும், எம்மினத்தின் மாவீரர்களும் பற்ற வைத்த பெருநெருப்பு பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த நெருப்பை உள்ளத்தில் சுமந்து…தங்களை வீழ்த்திய அனைத்தையும் எதிர்க்கிற, வெல்கிற வலிமையை தமிழின இளைஞர்கள் இன்று பெற்றுள்ளனர்.

அவ்வலிமையை கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் பாதையை தமிழர்களே தீர்மானிப்பார்கள்.

எங்களுக்கு முன்னதாக இக்களத்தில் பணி செய்தோர்,பயணம் செய்தோர்,பங்களிப்பு செய்தோர்களின் தியாகத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். எம்மீது கல்லெறிந்து போகிற பெரியவர்களின் பெயர் கூட சொல்லாமல் கண்ணியமாக நகர்ந்து போகிறோம். ஆனால் உங்களது தியாகமும், அறிவும் தமிழ்த்தேசிய இனத்திற்கு பயன்பட வேண்டுமே ஒழிய , கருணாநிதி,ஜெயலலிதா, போன்ற திராவிட அரசியல் பிழைப்புவாதிகளின் அரசியல் எதிர்காலத்தை சவால்களுக்கு உள்ளாக்கி இருக்கிற இந்த இளைய பிள்ளைகளின் மீதான வன்மமாக,எதிர்ப்பாக மாறி விடக்கூடாது என்கிற வேண்டுகோளையும் நாங்கள் இக்கணத்தில் விடுக்கிறோம்.

எப்போதும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வலிமையாக தமிழின இளையோர் கம்பீரமாக நிற்கிறோம். ஆதரவாய் இருக்க விரும்புவோர் அருகில் வாருங்கள். நன்மொழி கூறுங்கள்.

அவதூற்றி எதிரிகளை பலப்படுத்த விரும்புவோர் தாராளமாக எதிரிகளுடனேயே நில்லுங்கள்.

கருணாநிதி,ஜெயலலிதாவை ஆதரிப்பதும், அவர்களையே ஆள வைப்பதுதான் இடது சாரி தமிழ்த்தேசியம் என்றால்…(நன்றி:சுப.வீ) அக்கனவை அழித்து, எம்மண்ணை இம்மண்ணின் பூர்வக்குடிகளே ஆளட்டும் என முழங்கிற நாங்கள் வலதுசாரி தமிழ்த்தேசியர்களே..

சில வருடங்களுக்கு முன் ஈழ அரசியலில் கலையரசன், சோபா சக்தி போன்றோர் எம்மினத்தின் விடுதலைக்காக தன்னுயிர் தந்த மாவீரர்களான, எம்மின தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை வலது சாரிகள் என வசை மொழிகள் பொழிந்தது நினைவுக்கு வருகிறது…

அந்த வலதுசாரிகள் தான் இறுதிவரை மண்ணை காக்க போராடி உயிர் ஈந்தார்கள்.

இந்த வலதுசாரிகள் தான் இம்மண்ணை காக்க போராட மக்களுடன் களத்தில் நிற்கிறார்கள்..

காலம் உணர்த்தும். தவறான கணக்கு திருத்தும்.

.யார் வலது சாரி, இடது சாரி என…

..மணி செந்தில்

Page 35 of 53

Powered by WordPress & Theme by Anders Norén