மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Liar’s Dice – கண்ணீரில் மிதக்கும் பிம்பம்.

❤️

ஒரு உயர்ந்த ரசனையின் பூரண வெளிப்பாடு எது என்று கேட்டால், அது கண்ணீராகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு படைப்புக்கு பார்வையாளன் தரக்கூடிய உயர்ந்த பரிசு எதுவென்றால், அவனது கண்களில் தன்னையும் அறியாமல் பெருகும் ஒரு துளிக் கண்ணீர்தான்.

திரையரங்கில் படம் பார்க்கும்போது, உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழியும். உடனே அக்கம்பக்கத்தில் திரும்பிப் பார்ப்பேன். என்னைப் போல யாராவது அழுகிறார்களா என்று.

சிலர் எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருப்பார்கள். சிலர் காட்சியின் உணர்ச்சிப் பெருக்கில் என்னைப் போலவே கலங்கிக் கொண்டிருப்பார்கள்.

தங்களுக்குள் எழும் உணர்ச்சிகளை அடைத்து வைத்துக்கொள்ள முடியாமல், இடம், பொருள், ஏவல் பாராமல் கண்ணீராக அவற்றை வெளிப்படுத்த முடிகிறவர்கள் மிகச் சிலரே. அவர்கள் ஒருவகையில் பாக்கியசாலிகள். ஏனெனில், கண்ணீர் என்பது மனம் சுமக்கும் பாரத்தை இறக்கி வைக்கும் இயற்கையான வழி.

எனக்குத் தெரிந்து ஷேக் தாவூத் என்ற இந்தியன் வங்கி மேலாளர் ஒருவர் இருந்தார்.

மாலை ஆறு மணிக்கு வங்கி வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, பெரும்பாலான நாட்களில் அவர் திரையரங்குகளை நோக்கிச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளாமல், தனியே ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார். நான் இளம் வழக்கறிஞராக இருந்த காலத்தில், இரவு வேலைகளை முடித்துத் திரும்பும்போது, ஏதோ ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் அவரை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

அப்படித்தான் ஒரு காலகட்டத்தில் தங்கர் பச்சானின் அழகி (2002) திரைப்படம் வெளியானது.

தமிழில் வெளியாகியிருக்கும் உணர்ச்சிமிகுந்த திரைப்படங்களில் அழகி திரைப்படத்திற்கு இன்றளவும் ஒரு தனித்துவமான இடம் உண்டு.

அந்தத் திரைப்படத்தில், இளம் வயதில் உயிருக்கு உயிராக நேசித்த பெண்ணை, வாழ்க்கையின் ஓட்டத்தில் எதிர்பாராதவிதமாக மிகவும் மோசமான சூழ்நிலையில் பார்த்திபன் சந்திக்க நேரிடுகிறது. நந்திதா தாஸ் தனது குழந்தையுடன் நடைபாதையில் கைவிடப்பட்டவராக வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவர்களுடன் பார்த்திபன் அமர்ந்து உணவு உண்ணும் அந்தக் காட்சி, திரையில் நிகழும் ஒரு சம்பவமாக மட்டும் இல்லாமல், வாழ்க்கையின் கொடூரமான முரணாக நம் முன்னால் விரிகிறது.

அந்த அற்புதமான காட்சியில் ஒரு சிறிய மௌனம்.

அதன்பிறகு, இளையராஜாவின் குரலில் “என் குற்றமா? உன் குற்றமா?” என்ற பாடல் தொடங்குகிறது.

கனத்த இளையராஜாவின் குரல், எவ்விதப் பக்கவாத்தியங்களின் துணையுமின்றி தனித்து ஒலிக்கத் தொடங்கும்போது, நம் இதயத்தை யாரோ ஒருவர் கத்தியால் அறுப்பது போன்ற வலி ஏற்படுகிறது.

என் கண்கள் கலங்கியபடி, இரண்டு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபோதுதான், அந்த வங்கி மேலாளர் ஷேக் தாவூத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

மறுநாள் வங்கியில் அவரைப் பார்த்தபோது, வழக்கம்போல மிகவும் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

நேற்று திரையரங்கில் நான் பார்த்த அந்தக் கண்ணீர் மனிதனுக்கும், இன்று வங்கியில் நான் பார்க்கும் இந்தக் கடமை மனிதனுக்கும் தான் எவ்வளவு பெரிய வித்தியாசம்!

அன்றைய முற்பகல் தேநீர் இடைவேளையில் அவரிடம் கேட்டேன்:

“இவ்வளவு மும்முரமாகப் பணியாற்றும் உயர்ந்த வங்கி அதிகாரியான நீங்கள், நேற்று திரையரங்கில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தீர்களே?”

அவர் ஒரு நொடியில் திடுக்கிட்டார்.

பிறகு அமைதியாகச் சொன்னார்:

«“இழந்தவனிடம் இருக்கிற ஒரே ஒன்று அவனுடைய கண்ணீர்தான். கண்ணீரைச் சிந்தாத இதயம் கல்லுக்கு ஒப்பானது. கண்ணீரைப் போல காயத்தை உணர்த்தி ஆற்றுகிற மருந்து ஏதுமில்லை.

கண்ணீர் என்பது துயரத்தின் அடையாளம் மட்டுமல்ல. அது மனிதன் இன்னும் மனிதனாகவே இருக்கிறான் என்பதற்கான அடையாளம்.

பிரிவின்போது கண்ணீர் வருகிறது. மரணத்தின் துயரத்தில் கண்ணீர் வருகிறது. இழப்பின் வலியில் கண்ணீர் வருகிறது. அதேபோல, ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்கும்போதோ, ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்கும்போதோ, நம் மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஏதோ ஒரு உணர்வை ஒரு காட்சி அல்லது ஒரு வரி திடீரெனத் தொட்டுவிட்டால், நம் கண்கள் ஈரமாகின்றன.

அப்படித்தான் எனக்கும் ஆகிவிடுகிறது. அழகி திரைப்படத்தின் நந்திதா தாஸ் மட்டும் கைவிடப்பட்டவர் அல்ல. நாம் பலரும் ஏதோ ஒரு விதத்தில், எவராலோ அல்லது எதனாலோ கைவிடப்பட்டவர்கள்தான். காலத்தின் விதியால் சபிக்கப்பட்டவர்கள்தான்.”»

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவரது கண்கள் மீண்டும் கலங்கின.

அந்தக் காட்சி இன்றளவும் என் நினைவில் இருக்கிறது.

அதிலிருந்து திரைப்படம் பார்க்கும்போது கண்கலங்குவதை நான் ஒருபோதும் கூச்சமாகக் கருதியதில்லை. மாறாக, நல்ல திரைப்படம் ஒன்றின் முன் என் மனம் உருகி, கண்களில் கண்ணீர் பெருகும்போதெல்லாம் அதை ஒரு வரமாகவே கருதுகிறேன்.

நிறைய நல்ல திரைப்படங்களைப் பார்த்து அழுதிருக்கிறேன்.

அப்படித்தான் இன்று, எனது அன்பு மகன் சிபி கௌதம் Cibi Gowtham பரிந்துரைத்த Liar’s Dice என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்.

சிபி ஒவ்வொரு திரைப்படத்தையும் ஆழமாகக் காண்பவன். ஒரு படைப்பாளியின் ஆன்மாவைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு, ஒரு படைப்பின் சாரத்தைச் சத்தோடு பருகுபவன். என்னைவிடவும் தேர்ந்த ரசனை கொண்டவன்.

நல்ல திரைப்படங்களையும் நல்ல புத்தகங்களையும் தேடித்தேடி அடைபவன். உயர்ந்த விஷயங்களை மட்டுமே பரிந்துரைப்பவன்.

அப்படித்தான் அவன் இந்தத் திரைப்படத்தையும் எனக்குப் பரிந்துரைத்தான்.

2013 ஆம் ஆண்டு வெளியான Liar’s Dice திரைப்படத்தை கீத்து மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார். இது அவரது முதல் முழுநீளத் திரைப்படம்.

நடிகையாக நளதமயந்தி திரைப்படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான கீத்து மோகன்தாஸ், பின்னர் இந்தியத் திரைப்பட உலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.

அவருடைய கலைப் பயணத்தின் தொடக்கத்திலேயே உருவான Liar’s Dice, அவரது படைப்பாற்றலின் ஆழத்தைப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த சான்றாக இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியும் ஆழமான அழகியலோடும், அதே நேரத்தில் உரையாட வைக்கும் உண்மைத்தன்மையோடும் படமாக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு பயணத் திரைப்படம்.

ஆனால், வெறுமனே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பயணத்தைப் பற்றிய திரைப்படம் அல்ல.

பயணத் திரைப்படங்கள் எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமானவை.

மலையாளத்தில் வெளியான சமீர் தாகிர் இயக்கிய “நீலாகாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி”. (2013) எனக்கு மிகவும் பிடித்த பயணத் திரைப்படங்களில் ஒன்று. அதைப் போலவே, ஆலியா பட் நடித்த இம்தியாஸ் அலி இயக்கிய “Highway (2014)” திரைப்படமும் என்னை மிகவும் கவர்ந்தது. சே குவேராவின் வாழ்க்கைப் பயணத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட வால்டர் சால்ஸ் இயக்கத்தில் வெளியான “The Motorcycle Diaries (2004)” திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்தமானது.

பயணத் திரைப்படங்களில் அழகான மலைகள், சாலைகள், ஆறுகள், நகரங்கள் எனப் பயணத்தின் வெளிப்புறக் காட்சிகள் மட்டும் இருப்பதில்லை.

அந்தப் பயணத்தின் ஊடாக அல்லாடும் மனித உணர்ச்சிகளின் வலி, வேதனை, நிராசை, காதல், கோபம், தனிமை, நம்பிக்கை என மனித மனத்தின் பல அடுக்குகளையும் நாம் கடந்து செல்கிறோம்.

Liar’s Dice அப்படிப்பட்ட ஒரு பயணம்.

இந்தத் திரைப்படத்தை இயக்கிய கீத்து மோகன்தாஸ் இதுவரை இயக்கியிருப்பது மூன்று திரைப்படங்கள்தான்.
ஆனால், எண்ணிக்கையைவிட அந்த மூன்று திரைப்படங்களுக்கிடையே அவர் கடந்து வந்திருக்கும் கலைப்பயணம்தான் முக்கியமானது.

முதல் திரைப்படமான Liar’s Dice — ஒரு சின்னஞ்சிறு மலைக்கிராமத்திலிருந்து பெருநகரத்தை நோக்கிப் பயணிக்கும் ஒரு பெண்ணின் வழியாக, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் இந்தியாவின் இன்னொரு முகத்தையும் நமக்குக் காட்டுகிறது.

அதன்பிறகு வந்த Moothon — காணாமல் போன தன் அண்ணனைத் தேடி ஒரு சிறுவன் மேற்கொள்ளும் பயணத்தின் வழியாக, மனிதர்களின் அடையாளம், உறவு, காதல், வன்முறை, பாலுணர்வு, தனிமை என இன்னும் ஆழமான மனித மனத்தின் இருண்ட பகுதிகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.

இப்போது, அந்த இரண்டு படைப்புகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான யாஷ் நடிக்கும் Toxic திரைப்படத்தின் மூலம், முற்றிலும் வேறொரு பரப்புக்குள் கீத்து மோகன்தாஸ் நுழைகிறார். Toxic 2026 ஆகஸ்ட் 26 அன்று வெளியாகிறது.

Liar’s Dice திரைப்படத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம் அதன் ஒளிப்பதிவு.
ஒளிப்பதிவை மேற்கொண்டவர் ராஜீவ் ரவி — இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். Dev.D, Gangs of Wasseypur போன்ற திரைப்படங்களில் தனது தனித்துவமான ஒளிப்பதிவு மொழியை உருவாக்கியவர். பின்னர் Annayum Rasoolum போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநராகவும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியவர். கீத்து மோகன்தாஸின் வாழ்க்கைத் துணையும் அவரே.
Liar’s Dice திரைப்படத்திற்கான அவரது ஒளிப்பதிவு வெறுமனே காட்சிகளைப் பதிவு செய்வதில்லை; அந்தக் காட்சிகளின் உணர்ச்சிகளையும் ஒளியாக மொழிபெயர்க்கிறது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்காக ராஜீவ் ரவி தேசிய விருதைப் பெற்றிருப்பது, அந்தக் கலைநேர்த்திக்கான ஒரு முக்கியமான அங்கீகாரம்.

இமாச்சலப் பிரதேசத்தின் பனிமூடிய மலைக் கிராமங்களின் தனிமை ,பனியால் மூடப்பட்ட மலைப்பாதைகள், வெறிச்சோடிய நிலப்பரப்புகள், நீண்ட சாலைகள் — இவை அனைத்தும் கமலா என்ற பெண்ணின் பயணத்திற்கு ஒரு வெளிப்புற அழகை மட்டும் தருவதில்லை; அவளுடைய உள்ளுக்குள் இருக்கும் தனிமைக்கும் அச்சத்திற்கும் ஒரு காட்சியுருவைத் தருகின்றன.
பின்னர் அந்தப் பயணம் டெல்லியை நோக்கி நகர்கிறது.
மலைகளின் மௌனம் மெதுவாக மறைகிறது.
அதற்குப் பதிலாக, பெருநகரத்தின் இரவு நேரப் பரபரப்பு நம்மைச் சூழ்கிறது.
மலைக்கிராமத்தின் அமைதிக்கும், டெல்லியின் இரவுநேர நெரிசலுக்கும் இடையே உள்ள அந்தக் காட்சிமாற்றம், ஒரு புவியியல் மாற்றமாக மட்டும் இல்லாமல், ஒரு மனிதனின் உலகம் எவ்வாறு மாறுகிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
பனியில் உறைந்திருந்த ஒரு உலகிலிருந்து, மனிதர்களால் நிரம்பி வழியும் நகரத்திற்குள் கமலா நுழைகிறாள்.
ஆனால் மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில்தான் அவளுடைய தனிமை இன்னும் அதிகமாகிறது.

இதுதான் ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவின் மகத்துவம்.

Iiar’s Dice கதை எளிமையானது தான்.

இமாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர மலைக்கிராமம் ஒன்றில் வாழும் கமலா என்ற இளம் பெண்ணின் கணவன் வேலைக்காகப் பெருநகரத்திற்குச் சென்றிருக்கிறான். பல மாதங்களாக அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

அவனைத் தேடி, தனது சிறுமகளையும் ஒரு ஆட்டுக்குட்டியையும் அழைத்துக்கொண்டு அவள் டெல்லியை நோக்கிப் புறப்படுகிறாள்.

அவளுக்குத் தெரியாத பாதைகள்.

அறிமுகமில்லாத மனிதர்கள்.

பாதுகாப்பற்ற சூழல்கள்.

எதிர்காலம் குறித்த எந்த உறுதியும் இல்லாத ஒரு பயணம்.

ஆனால் கணவனைத் தேட வேண்டும் என்ற ஒரே எண்ணம் அவளை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது.

இந்தப் பயணத்தில் அவளுக்குத் துணையாக வருகிறான் நவாஸுத்தீன் சித்திக் ஏற்றிருக்கும் மர்மமான மனிதனின் கதாபாத்திரம்.

அவன் ஒரு முன்னாள் ராணுவ வீரன்.

ஆனால் வழக்கமான திரைப்படங்களின் கதாநாயகனைப் போல அவன் உருவாக்கப்படவில்லை.

ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கக்கூடிய பலவீனங்களும், சந்தேகங்களும், குழப்பங்களும், சுயநலங்களும் கொண்ட மனிதனாகவே அவன் நமக்கு முன்னால் நிற்கிறான்.

அதுவே அந்தக் கதாபாத்திரத்தை உயிருள்ள மனிதனாக மாற்றுகிறது.

கதாநாயகியாக நடித்த கீதாஞ்சலி தாபாவும் மிக நுட்பமான, இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கணவனைத் தேடும் தவிப்பு, குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய அச்சம், தனிமை, அறிமுகமற்ற உலகத்தின் மீதான பயம் என அந்தப் பெண்ணின் ஒவ்வொரு உணர்வையும் அவர் மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

ஆனால் Liar’s Dice ஒரு பெண்ணின் கணவனைத் தேடும் கதையாக மட்டும் நின்றுவிடவில்லை.

அதன் பின்னால் இந்தியாவின் இன்னொரு முகம் இருக்கிறது.

இந்தியாவைப் போன்ற ஒரு வளரும் நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் பெரும் கட்டிடங்களை எழுப்பும் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள், எந்த அடையாளமும் இல்லாமல் உழைக்கிறார்கள்.

சில நேரங்களில் அவர்கள் கட்டியெழுப்பிய அதே கட்டுமானத் தளங்களிலேயே தங்கள் உயிரையும் இழக்கிறார்கள்.

பீகார், ஒடிசா, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சின்னஞ்சிறு கிராமங்களிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் இடைத்தரகர்கள் மூலம் திரட்டப்பட்டு, பெருநகரங்களின் கட்டுமானப் பணிகளுக்காக அழைத்து வரப்படுகிறார்கள்.

தங்களுடைய பூர்வீகக் கிராமங்களை விட்டு வெகு தொலைவில் வந்து பணியாற்றும் அவர்களில் பலருக்கு போதுமான தொழில்பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் கிடைப்பதில்லை.

எந்தக் கட்டிடத்தில் வேலை செய்கிறார்களோ, அந்தக் கட்டிடத்திலேயே அல்லது அதன் அருகிலுள்ள சிறிய இடங்களிலேயே, அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அவர்கள் தங்கிக் கொள்ள வேண்டிய நிலை.

இந்த அடித்தட்டு மனிதர்களின் அளவற்ற உழைப்பினால்தான் இந்தியாவின் பெருநகரங்கள் நாளுக்கு நாள் வானத்தைத் தொடும் கட்டிடங்களால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அந்தக் கட்டிடங்களின் உயரத்தைப் பார்க்கிற நாம், அவற்றை எழுப்பிய மனிதர்களின் வாழ்க்கையின் ஆழத்தைப் பார்ப்பதில்லை.

அவர்களுடைய பெயர்கள் நமக்குத் தெரியாது.

அவர்களுடைய முகங்கள் நமக்கு நினைவில் இருப்பதில்லை.

அவர்கள் காணாமல் போனால் தேடுவதற்குக்கூட யாரும் இல்லாமல் போய்விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு தொழிலாளிதான் காணாமல் போகிறான்.

அவனைத் தேடி அவனுடைய மனைவியும் குழந்தையும் புறப்படுகிறார்கள்.

அவர்களுடன் ஒரு ஆட்டுக்குட்டியும் பயணிக்கிறது.

அவர்களுக்கு வழிகாட்டியாக வருகிற மனிதனும் அவர்களுக்கு உறவினன் அல்ல; நண்பனும் அல்ல.

வெறும் பணத்திற்காக அவர்களுடன் பயணிக்கும் ஒரு மர்மமான மனிதன்.

இந்த மூன்று மனிதர்களின் பயணம், மெதுவாக நம்முடைய பயணமாக மாறிவிடுகிறது.

அவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பாதையும் நம்முடைய மனதிற்குள் ஒரு பாதையைத் திறக்கிறது.

படத்தின் உச்சக்காட்சியை அடையும் போது கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

படத்தைப் பார்த்து முடித்துவிட்டு, நான் படம் பார்த்த அறையின் விளக்குகளை அணைத்தேன்.

அப்படியே இருட்டில் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தேன்.

என் கண்கள் ஈரமாக இருந்தன.

என் மனதிற்குள் ஒரே ஒரு கேள்வி எழுந்தது:

ஏன் இந்தத் திரைப்படம் நம்மை இவ்வளவு கடுமையாகப் பாதிக்கிறது?

பதில் ஒன்றுதான்.

அந்தத் திரைப்படத்தில் ஆன்மா இருக்கிறது.

அந்த ஆன்மா அசலானது.

உண்மையானது.

வாழ்க்கையிலிருந்து பிறந்தது.

அந்த ஆன்மாவை அப்படியே கலையாக மாற்றித் தருகிற கீத்து மோகன்தாஸ் போன்ற மிகச் சிறந்த இயக்குநர்கள், தங்களுடைய படைப்பாற்றலின் உச்சங்களால் நம்முடைய உள்ளத்தைத் தொடர்ந்து தொட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அதனால்தான் ஒரு திரைப்படம் முடிந்த பிறகும் அது முடிந்துவிடுவதில்லை.

திரை இருண்டுவிடுகிறது.

விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

மனிதர்கள் அறையைவிட்டு வெளியேறுகிறார்கள்.

ஆனால் அந்தப் படைப்பின் ஆன்மா மட்டும் நம்முடன் பயணிக்கத் தொடங்குகிறது.

நம் நினைவுகளுக்குள் தங்குகிறது.

நம் தனிமையான இரவுகளில் நம்மிடம் பேசுகிறது.

சில நேரங்களில், நம்முடைய கண்களை ஈரமாக்குகிறது.

ஒரு நல்ல திரைப்படத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.

இல்லை.

ஒரு நல்ல திரைப்படம்தான் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நமக்குள் மறைந்திருக்கும் மனிதனை நமக்கே காட்டிக் கொண்டிருக்கிறது.

யூடியூபில் இலவசமாக காணக் கிடைக்கிறது. தவறாமல் பாருங்கள்.

❤️

மணி செந்தில்

18/06/2025 திருவாரூரில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணி செந்தில் உரை

அண்ணன் சீமான் அவர்களுக்கு..ஒரு கடிதம்.

அனுப்புதல்

மணி செந்தில்

வழக்கறிஞர்

கும்பகோணம்

பெறுதல்

மதிப்பிற்குரிய அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்,

தலைமை ஒருங்கிணைப்பாளர் ,

நாம் தமிழர் கட்சி.

அன்புள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு..

நேரடியாக பேச வாய்ப்பு இருந்தும் ஏன் முகநூலில் கடிதம் என உங்களுக்கு தோன்றலாம்.

எல்லாவற்றையும் முகநூலிலேயே தெரிவிப்பதற்கு முகநூல் என்ன பாவமன்னிப்பு கேட்கும் பாதிரியாரின் அறையா..??

அல்லது தங்களை தாங்களே நியாயவாதிகளாக ஒப்பனை செய்து கொண்டுக் காட்ட முகநூல் என்ன ஒப்பனைக் கண்ணாடியா..??

அல்லது தான் விரும்புவற்றையெல்லாம் ஒரு கதையாக மாற்றி எழுத முகநூல் வாய்ப்பளிக்கிறது என்ற காரணத்தினால் முகநூல் என்ன திரையரங்கா..??

முகநூலில் தான் கட்சியில் சேர்ந்தோமா… பிறகு எதற்கு முகநூலில் விலகல் கடிதம், அல்லது விளக்க கடிதம் ..??

பிறகு ஏன் முகநூலிலேயே எல்லாவற்றையும் வாந்தி எடுக்கிறீர்கள் என்ற பலருக்கும் எழும் கேள்விகளுக்கு எல்லாம் என்னிடத்திலும் பதில் இல்லை தான்.

முகநூல் என்பது குழப்பங்களின் குட்டை. அங்கு எதையாவது வீசி எறிந்தால் தான், நாமும் உயிர் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் தெரியும் என்பதற்காகத்தான் எல்லோரும் எதையாவது எழுதி இந்த குழப்பக் குட்டையில் எறிந்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கும் எங்களைப் போன்று எந்த வேலையும் இல்லாமல் நொடிக்கு நொடி அலைபேசித் திரையை உற்றுப் பார்த்து கருத்துக்கள், லைக்குகள் தெரிவித்து பகிரும் முகநூல் மூர்க்கர்கள் இங்குதானே இருக்கிறார்கள்..??

தவிர அலைபேசி திரையை தாண்டி வேறு உலகம் இல்லை என்று நினைக்கின்ற அறிவு ஜீவிகள் வேறு.. எனவே இக்கடிதம் இங்கு.

செய்தி என்னவெனில்..

தமிழ்த் தேசியப் பயணத்தில் உங்களோடு 15 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். இதுவரை எந்தவித சமரசமும் இல்லாமல் கொண்ட கொள்கையில் தடம் மாறாமல் இருந்ததால் .. எந்த ஒரு பதவிக்கும் நாம் தமிழர் கட்சி நகர்ந்தது இல்லை. பதவிக்கான அரசியல் செய்யாமல் மக்களுக்கான அரசியலில் நாம் இருந்தோம். இருக்கிறோம் .

உங்களைத் தேடி பதவிகளும், வாக்குறுதிகளும் தேடி வந்த போது ஒரு நொடி கூட சலனப்படாமல், எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் உங்களது அண்ணன் நமது தேசியத் தலைவர் படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே, பேச வந்தவர்களை மௌனிகளாக மாற்றி அனுப்பிய போது நான் அருகில் தான் இருந்தேன்.

உங்களை நம்பி வந்தவர்களை, எங்கும் அடகு வைக்காமல், அந்தக் கூட்டத்தைக் காட்டி கூட்டணிப் பேரம் பேசாமல், தலை நிமிர்ந்து நடக்க வைத்த அந்த நம்பிக்கை இதுவரை இந்த நிலம் பார்க்காதது.

தனிப்பட்ட முறையில் நான் அறிந்தவரை உங்களால் மற்றவர்களை காயப்படுத்த முடியாது. உங்களது அதிகபட்ச எதிர்வினை என்பது அமைதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாகி விடுவீர்கள். கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் குறித்து எப்போதும் அவதூறோ குற்றச்சாட்டுகளோ நீங்கள் சொல்வதில்லை. அவர்கள் சொன்னாலும் “அவர்களும் நம் தம்பிகள் தானே!” என்று சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவீர்கள். எங்களையும் நகர சொல்கிறீர்கள்.

தேர்தல் அரசியலில் உங்களைப் போன்ற ஒரு உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. கடுமையாக நீங்கள் உழைத்தீர்கள். ஒவ்வொரு தொகுதியாக பயணப்பட்டு கட்டமைப்பை ஏற்படுத்தினீர்கள். உங்கள் பின்னால் நிற்கின்ற எங்கள் அனைவரையும் ஒரே அலைவரிசையில் திரட்டினீர்கள். எல்லாப் போராட்டங்களிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள். மக்கள் எங்கெங்கெல்லாம் குறைகளுக்காக தெருவில் நின்றார்களோ அவர்களுடன் நீங்களும் நின்றீர்கள். உங்கள் குரல் கேட்காத தமிழக வீதிகள் இல்லை.

சிறுசிறு போராட்டங்கள். பிறகு மாபெரும் மக்கள் போராட்டங்கள். பிறகு வரிசையாக சூழலியல் மாநாடுகள். பிறகு வேட்பாளரை அறிவிக்கின்ற மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. அதன் பிறகு உங்களை உடலளவிலும் உள்ள அளவிலும் கடுமையாக வருத்திக்கொண்டு, கொளுத்தும் வெயிலில், ஒவ்வொரு தொகுதியாக பயணப்பட்டு தமிழ் நாடு எங்கும் சுற்றி வந்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அந்த “கொடுமையான” பயணம்.

எனவே உங்களது உழைப்பில் ஒரு குறையும் இல்லை. உங்கள் பயணத்தில் எந்த தடுமாற்றமும் இல்லை.

இருந்தாலும் நாமும் தோற்றோம். அநீதியாக உருவாக்கப்பட்ட ‘பேரலையில்’ நாம் சிக்கினோம். ஆனாலும் குறைகள் என்று உங்கள் மீது கட்டமைக்கப்படுகிற பொய்மைகளை அமைதியாக பார்த்துக் கொண்ட அமர முடியவில்லை.

ஒவ்வொரு தேர்தல் தோல்விக்கு பிறகும் , அதுவரை சொல்லாத குற்றங்களை, லென்ஸ் கண்ணாடி போட்டுத் தேடிய குறைகளை, காரணங்களுக்காக காரணங்களை சொல்லிவிட்டு, இக்கரையில் இருந்து அதோ தெரிகிறது பச்சை என அக்கரைக்கு ஓடுவதற்கு என்று எப்போதும் ஒரு கூட்டம் உண்டு.

இப்போதும் அப்படி சிலர் ஓடுகிறார்கள். திராவிடக் கட்சிகளை ஒப்பிடும்போது அப்படிப்பட்ட “பச்சை மனிதர்கள்” நம்மிடத்தில் குறைவுதான் என்றாலும் , ஓடும் போது கூட உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஓடும் அந்தப் பண்பாடுதான்(?) எனக்கு மிகுந்த பரவசத்தை அளிக்கிறது. வேறு வழி இல்லை.

“எனக்கு வாய்ப்பளித்தீர்கள், என் மீது அன்பு காட்டினீர்கள், தம்பியாக பயணம் தொடரும்” என்றெல்லாம் முன் கவனத்தோடு செதுக்கப்படும் இந்த வார்த்தை விளையாட்டுகளை நீங்கள் முகநூலில் இல்லாத காரணத்தினால் கவனித்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் எல்லோருக்கும் நீங்கள் வாய்ப்பு அளித்தீர்கள். இதயத்தில் இடம் அளித்தீர்கள். கொண்டாடினீர்கள். இதுவெல்லாம் அருகில் இருந்து அனுபவித்த எல்லோருக்கும் தெரியும்.

இவ்வளவு வாய்ப்பும், அன்பும் செல்லும் இடங்களில் கிடைக்குமா என்றெல்லாம் அவர்களுக்கு தெரியாது. ஆனாலும் முகநூலில் முக்காலி போட்டு எப்போதும் உட்கார்ந்து இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு.. “அடடா இவர்கள் போய் நீங்கி விட்டார்களே..!” என்ற எண்ணத்தை ஏற்படுத்த குறைந்தபட்சத் தந்திரம் தான் அது.!

“பார்த்தீர்களா இதை இவர் விலகி விட்டாராம்.. அவர் சென்று விட்டாராம்.. போகும்போது இதையெல்லாம் சொல்லிவிட்டு போயிருக்கிறாராம்…!” என்று தமிழ்த் தேசிய பஞ்சாயத்தார்கள் சிலரின் வெற்று வாய்க்கு கிடைக்கின்ற கைப்பிடி அவல் தான் அது..!

இன்று செய்தி சேனல்களில் இவர் நீங்கி விட்டார் என்று போடுகிற அந்த செய்தி அட்டை கூட நீங்கள் கொடுத்த முகவரி அட்டை தானே..??

இரண்டு நாள் செய்தி. மூன்று நாள் வலையொலி நேர்காணல்கள். நான்காவது நாளில் பத்தோடு ஒருவர்.

மாவீரர்களின் தியாகத்தால் உருவான அரசியல் அமைப்பிற்கு தன்னிகரற்ற ஒரு பண்புநிலை உண்டு. முகவரி தேடிக்கொண்டு வேறு இடத்தில் பிழைத்துக் கொள்ளலாம் என நகர்பவர்களை அது உயர விடாது. நிம்மதியாக உறங்க விடாது. கடைசி வரை திட்டிக்கொண்டே திரிய வேண்டியது தான்..!

♦️

மற்றபடி எல்லா காலத்திலும் உங்களைக் கைவிடாமல் இருக்கின்ற உங்களது தன்னம்பிக்கை எப்போதும் கம்பீரமாக மிளிர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இங்கே அடையாளப்பட்டு கொண்டு , முகவரி பெற்றவுடன் எங்கேயாவது சென்று எதையாவது அடைந்து விடலாம் என ஓடுபவர்களை நான் பரிதாபமாக பார்க்கிறேன். அவர்கள் காலத்தின் கதாநாயகனை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். அவன் வெற்றிக்காக காத்திருக்கவில்லை. கம்பீரமான வெற்றி அவனுக்காக காத்திருக்கிறது.

கடல் தவமாய் தவமிருந்து முத்துக்களை உருவாக்கும். ஆனால் முத்துக்கள் என்னவோ யார் கழுத்திலோ காலிலோ நகையாய் தொங்கும். ஆனால் கடலில் கரைந்து அதுவாக உருவாகும் மணல் கடலை விட்டு எங்கும் செல்லாது. எவன் காலில் மிதி பட்டாலும், அலையடித்து கரைந்தாலும், அது எங்கோ ஒரு கரையில் ஒதுங்கி கடலை நீங்காத கடற்கரையாகிக் கிடக்குமே ஒழிய வேறெங்கும் செல்லாது.

அப்படித்தான் அண்ணா.. எந்த காயம் பட்டாலும் வேறு எங்கும் செல்லாமல் உங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு லட்சக்கணக்கான தம்பி தங்கைகள் மிகப்பெரிய நம்பிக்கை வெளிச்சத்தோடு ஒரு மகத்தான வெற்றிக்காக காத்திருக்கிறோம்.

ஏதோ ஒரு வீதியில் சிவந்த கண்களோடு புலிக்கொடி ஏந்தி ஒரு இளைஞனோ அல்லது இளம் பெண்ணோ உங்கள் சொற்களுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்தப் பாதை அமைத்தது நீங்கள். எங்கோ அரங்கங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியத்தை வெகுஜன அரசியலாக மாற்றி இன்று மண்ணுக்கான தத்துவமாக மாற்றி இருக்கிறீர்கள். தேசியத்தலைவர் மேதகு அவர்களை வீட்டுக்கு வீடு கொண்டு போய் சேர்ந்திருக்கிறீர்கள். பிறமொழி கலவாமல் தூயத்தமிழ் மொழியில் பேசுவதும், தமிழுக்காக இயங்குவதும்தான் இனி இளைஞர்களுக்கான அரசியல் என உணர்த்தி வருகிறீர்கள். உங்கள் எதிரிகள் கூட உங்களை நகலெடுத்து மாநாடுகள் நடத்துவதற்கும், இரண்டு விழிகளில் ஒன்று என்று சொல்வதற்குமான சூழலை உருவாக்கியது நீங்கள். இதில் எப்படி பயணிக்க வேண்டும் என முடிவு செய்பவர்கள் நீங்கள். காலம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கிறது.யார் யார் இந்த பயணத்திற்கு தகுதியற்றவர்களோ அவர்களை காலமே அந்தப் பயணத்திலிருந்து நீக்கிவிடுகிறது. இந்தப் பின்னடைவிலிருந்து எப்படி மீள வேண்டும் என்பதையும் உங்கள் முன்பே உணர்ந்து வைத்திருப்பீர்கள். அதைத்தான் கடந்த காலம் எனக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறது.

எனவே.. கட்சியின் அடிப்படை உறுப்பினராக என்னை மேலும் உறுதி செய்து கொள்கிறேன்.

என் கடமைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காமல் உங்கள் கரங்களைப் பிடித்துக் கொண்டு களத்தில் இயங்க உறுதியேற்கிறேன்.

தமிழ்த்தாய் வாழ்க !

தலைவர் மேதகு வாழ்க !

மணி செந்தில் ,

நாம் தமிழர் கட்சி.

( கூடுதலாக ஒரு வேண்டுகோள். உனக்கு வேறு வேலை இல்லையா…?? எதற்கு இந்த கடிதம்..?? என அலைபேசியில் அழைத்துத் திட்ட வேண்டாம் என அமைதியோடு கேட்டுக்கொள்கிறேன். முகநூலில் கடிதம் எழுதாதவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை என்பதால்… 👍

நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்.

கல்லூரி வாழ்க்கை போல லேசானதும் கனமானதும் வேறில்லை. அதுவும் முதலாண்டில் அடியெடுத்து வைக்கும் போது ஒரு விதமான அச்சம், படபடப்பு, கனமானப் புத்தகங்கள் ,காதல், எதிர்காலம் என பல்வேறு விதமான கனவுகள் வனத்தின் இருட்டாகவும்,அதில் உலவும் மின்மினி பூச்சிகளின் வெளிச்சமுமாக, சூழ்ந்து நிற்கும். அதை மிகக் கொண்டாட்டமாக பலர் கடந்து இருந்தாலும், சிலர் அந்தக் காலகட்டத்தை நினைக்கக்கூட அச்சப்படுவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பன் இருந்தான். அவன் தன் கல்லூரி வாழ்க்கையில் ‌ ஒரு பெண்ணை உருக உருகக் காதலித்தான். கையை அறுத்துக் கொண்டான். கல்லூரி வகுப்பறையின் கண்ணாடியை உடைத்தான். அந்தப் பெண்ணிற்காக சீனியர் மாணவர்களை அடித்தான் . ஒரு புல்லட் வாங்கி அந்த புல்லட்டில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு ஊர் முழுக்க சுற்றி அலைந்தான். போகிற இடத்தில் எல்லாம் அந்த பெண்ணை நிமிர்ந்து பார்ப்பவர்களை எல்லாம் போட்டு அடிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் அவனை பார்த்து விரும்பிய அந்தப் பெண்ணே அவனை பார்த்து பயப்படுகிற சூழ்நிலை உண்டானது. பிறகு மூன்றாம் ஆண்டிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள். பிறகு இருவருக்குமே திருமணமாகி அவரவர் செட்டில் ஆகிவிட்டார்கள்.

அதற்குப் பிறகு .. நீண்ட காலம் கழித்து எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணை நான் வளர்ந்த ஒரு மகளோடு பார்க்க நேர்ந்தது. என்னை பார்த்தவுடன் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. ‘வா ஏதாவது ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து பேசுவோம்’.. என கூப்பிட்டாள்.

மாலை நேர மஞ்சள் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்தது அந்த காபி ஷாப். அவளது மகள் சற்று தூரத்தில் அமர்ந்து கொண்டு ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தை மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள்.

‘எப்படி போகுது வாழ்க்கை..?’ என கேட்டாள்..

‘ம்ம்.. காலம் ஓடிப்போச்சு. பிள்ளைங்க வளந்துட்டாங்க. ‘

“இதுதான் வாழ்க்கையா.. எல்லார்கிட்டயும் ஒரே பதில். காலம் ஓடிப்போச்சு..” என சலிப்புடன் கூறிய அவளை பார்த்து சிரித்துக் கொண்டேன்.

“அப்புறம்… உன்னுடைய அவனை மீண்டும் எங்கேயாவது பார்த்தாயா..?”

சட்டென அவளது கண்கள் கலங்கின.

“அதையெல்லாம் மறந்து நல்லா இருக்கேன் செந்தில். மீண்டும் ஞாபகப்படுத்தாதே. அது ஒரு பைத்தியக்காரத்தனம். என்னுடைய வேண்டுதல் என்ன தெரியுமா.. என் பெண்ணுக்கு அப்படி எல்லாம் நடக்கக்கூடாது என்பது மட்டும் தான்.. ” என்று சொன்ன அவளிடம் அதற்குப் பிறகு அதைப்பற்றி பேசவில்லை.

உண்மையில் வாழ்வில் மிக சிலருக்கு மட்டுமே காதல் நினைத்தாலே இனிக்கிறது. பலரும் பதட்டமாக, அவசர, அவசரமாக கடந்து விடும் சூடு நிறைந்த செங்கற்கள் பாவித்த கோவில் பிரகாரமாக காதல் நினைவுகள் மாறிவிடுகின்றன.

விவாகரத்து வழக்கிற்கு வரும் ஆண்களை விட பெண்கள் வழக்கின் தொடக்கக் காலத்தில் கண்கலங்கி அழுதுக் கொண்டே இருப்பார்கள். பிரியும்போது பெரும்பாலும் அழுவதை நிறுத்தி இருப்பார்கள். வாழ்வின் ஓட்டத்தில் அதுவும் ஒரு நிகழ்வு என்பது போல வேகமாக கடந்துப் போக கற்றுக் கொண்டிருப்பார்கள். நீதிமன்ற அனுபவங்கள் அவர்களுக்கு அந்த வெப்பத்தை தாங்கும் வலுவினை தந்து விடுகின்றன.

சமீபத்தில் Obsession (2026) என்ற படம் பார்த்தேன். என் மகன் Cibi Gowtham அவசியம் பார் என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றான்.

அதீதமாக காதலிக்கப்படும் போது காதல் கூட சாபமாக மாறி விடுகிறது என்பதைத்தான் தீவிரத் திரைமொழியில் அந்த படம் சொல்லி இருக்கிறது. படத்தின் கதாநாயகனுக்கு ஒரு விசித்திரமான கேட்ட வரங்களை தரக்கூடிய ஒரு குச்சி (One Wish Willow) போகிற போக்கில் ஒரு கடையில் கிடைக்கிறது. ஒருமுறை அந்த குச்சியை உடைத்தால் கேட்ட வரம் கிடைக்கும். மீண்டும் அதே குச்சியை அந்த வரத்தை முறிப்பதற்காக பயன்படுத்த முடியாது. அப்படி விசித்திரமான அந்த குச்சியை உடைத்து தான் விரும்பக்கூடிய, தன்னை அதுவரையில் விரும்பாத, சொல்லப்போனால் தம்பியாக நினைக்கின்ற ஒரு பெண்ணைப் பார்த்து, தன்னை விரும்ப வேண்டுமென வரம் கேட்கும் கதாநாயகன். அந்த நொடியில் இருந்து ஆட்டம் மாறிவிடுகிறது. எப்படி எல்லாம் அந்த பெண், அவனே சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு காதலிக்கிறாள் என்பது தான் மீதிப் படம். ஒரு மாதிரியாக குமட்டிக் கொண்டே இருந்தது எனக்கு.

இளையராஜா இசையையும், பாரதிராஜா/ மகேந்திரன்/ பாலு மகேந்திரா காதல் கதைகளையும் மென்மையாக கேட்டு பார்த்து ரசித்து சிலிர்த்த எனக்கு, இந்த Obsession உண்மையில் விஷப் பரிட்சை தான்.

காதல் ஒரு வகையான தேன் மாதிரிதான். அளவு அதிகமானால் திகட்டி விடுகிறது. அதுவே நிரம்பி வழிந்தால் வாழ முடியாத அளவிற்கு வாழ்க்கை நரகமாக மாறிவிடுகிறது‌ என்பதை கூச்சநாச்சம் இல்லாமல் அப்படியே வடிகட்டாமல் காட்டுகிறது Obsession.

பாலு மகேந்திராவின் “ஜூலி கணபதி” (2003) என்ற ஒரு படம் உண்டு. அதில் ” எனக்கு பிடித்த பாடல் உனக்கு பிடிக்குமே..” என்ற கவித்துவமான இளையராஜா பாடல் உண்டு. கமலின் குணா திரைப்படத்தின் ஏறக்குறைய பெண் மைய நகல். காதலை ஒரு மனநோய் போல காட்டி ஒரு திரில்லர் திரைப்படத்தை பாலுமகேந்திரா தர முயற்சித்து இருப்பார். 90களில் கன்னடத்தில் வெளிவந்த “ஓம்” திரைப்படமும் இதே வகை தான்.

எதுவுமே வலிந்து திணிக்கும் போது விஷம் ஆகி விடுகிறது என்பதுதான் வாழ்க்கையின் சூட்சமம். தமிழ்த் தேசியத் தத்துவப் பேராசான் ஐயா பெ. மணியரசன் அவர்களின் மனைவி அம்மா லட்சுமி அவர்களுக்கும் மணியரசன் ஐயா அவர்களுக்கும் இடையில் இருக்கின்ற உறவை கூர்ந்துக் கவனித்து இருக்கிறேன்.

ஒருமுறை உடல்நிலை சரியில்லாத போது ஐயாவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு, அருகில் இருந்த ஐயா.. “நான் தான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே..! “என கண்கள் மினுக்கச் சொன்னதில் தென்பட்ட ஆழ்ந்த அன்பு தன்னை காதல் என விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை.

உடல் நலமில்லாத என் தந்தையை என் அம்மா கவனித்துக் கொண்டே இருப்பதை இந்த நள்ளிரவிலும் பார்த்துக் கொண்டே அமர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நொடி கூட என் தந்தையை விட்டு என் அம்மா நகர்வது இல்லை. என் தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டதிலிருந்து என் அம்மா ஏறக்குறைய ஒரு ஐந்தாறு கிலோ எடை குறைந்ததை அருகில் இருந்து வேதனையோடு கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் அம்மாவிற்கு சலிப்பு இல்லை. பெரு மகிழ்ச்சியோடு கொஞ்சமும் முகம் சுழிப்பு இல்லாமல் அப்பாவை பார்த்துக் கொள்ளும் என் அம்மாவிடம் தென்படுவது என்ன என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதுவெல்லாம் காதல் என்றால், obsession நிறுவ முயல்வது என்ன..??

“ஞாபகார்த்தம்” என்ற எழுத்தாளர் கு அழகிரிசாமி எழுதிய புகழ்பெற்ற கதை ஒன்று உண்டு. காதலை சொல்ல முடியாமல் தவிக்கின்ற ஒரு இளைஞனுக்கும், அதை அழகாக வெளிப்படுத்துகிற ஒரு இளம் பெண்ணுக்குமான உறவை கவித்துவமாக விவரிக்கின்ற அந்த கதை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நமக்கு அதே உணர்வை ஏற்படுத்துகிற மாயம் கொண்டது.

Curry Barker இயக்கிய Obsession திரைப்படம் வசூல் சாதனை படைத்தது என்று செய்திகளைப் படிக்கும் போது, உண்மையில் எனக்கு இந்த சமூகத்தைப் பற்றி பயமாக இருந்தது. திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது பல காட்சிகளில் ரசிகர்கள் சிரித்தார்கள் என்று என் மகன் சிரித்துக் கொண்டே சொன்னது கூட எனக்கு அச்சமாக இருந்தது. எதுவுமே அதீதமாக நுகர்ந்துக் கொள்ளும் இந்த தலைமுறையின் அலைவரிசையில் நான் பொருந்தாமல் தவிப்பது, ஒருவகையில் வரம் என்று கருதுகிறேன்.

கு. அழகிரி சாமியின் “ஞாபகார்த்தம்” சிறு கதையை Obsession திரைப்படத்தை பார்த்த இந்த இரவில், மீண்டும் எடுத்துப் படித்தேன்.

அப்போதுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.

நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.

லிங்கம் – தனி மனித உணர்ச்சிகளின் போர்க்களம்.

லிங்கம் – எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் கதிர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ள “லிங்கம்” தமிழ் வலைத்தொடர் வரிசையில் தனித்துவ இடம் பிடித்திருக்கிறது.

“லிங்கம்” என்ற தனிமனிதனின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக விவரித்து இருந்தாலும் எண்பதுகளின் இறுதிக்காலக் கட்டத்தை நுட்பமாக ஆவண படுத்துவதில் லிங்கம் தனித்துவம் கொண்டிருக்கிறது.

“கடந்த காலம் என்பது செத்தப் பிணம் மாதிரி” என்று இந்த தொடரில் ஒரு வசனம் இருக்கிறது. ஆனால் மனித வாழ்க்கையின் விசித்திரம் என்னவெனில்.. அந்த செத்த பிணத்தை உயிருள்ளவர்கள் நாம் அனைவரும் உள்ளுக்குள்ளேயே சுமந்து கொண்டு ஏறக்குறைய வேதாளத்தை சுமக்கும் விக்கிரமாதித்தன் போல அலைந்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் தனிமனித உணர்ச்சிகளின் முரண்கள் வாயிலாக இயக்குனர் லட்சுமி சரவணக்குமாரின் திரை மொழி நம் கண் முன்னால் விவரிக்கிறது.

“இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் தனி மனிதர்கள் ( All are individuals ) . இங்கே முறையான வழி என்று எதுவும் இல்லை. அவரவர் வழி அவரவருக்கு .” என்கிறார் நீட்ஷே. அதுதான் லிங்கம் திரைமொழியின் அடிநாதம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கிறது. முனைப்பு இருக்கிறது. உணர்ச்சிகள் இருக்கின்றன. அவை இன்னொருவரோடு தொடர்பு படும்போது முரண்கள் உருவாகின்றன. அந்த முரண்கள் ஒரு மனிதனை எதுவரை கொண்டு செல்லும் என்பதை லட்சுமி சரவணக்குமார் ஒரு தேர்ந்த இயக்குனராக மாறி கதை சொல்லி இருக்கிறார்.

உண்மையில் இது அவருடைய முதல் படைப்பு என எங்கும் சொல்லிவிட முடியாத அளவிற்கு முதிர்ச்சியோடு ஒரு கதையை அணுகி இருப்பதில் லட்சுமி சரவணகுமார் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார். கதைக்களன், கதாபாத்திரங்கள், வசனங்கள், உடைகள், கதை நடக்கும் காலகட்டத்தை நுட்பமாக விவரிக்கும் கலை இயக்க தேர்ச்சி, என அனைத்திலும் கைதட்ட வைப்பதில் ஒரு இயக்குனராக கூட்டு உழைப்பின் விளைவை கோருபவராக லட்சுமி சரவணகுமாரின் அசாத்திய கவனம் நமக்கு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

“லிங்கம்” என்ற ஒரு சாதாரண கபடி விளையாடி கொண்டு ஒரு அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்ற இளைஞனின் வாழ்க்கை , எவ்வாறெல்லாம் திசை மாறி எங்கே சென்று முடிகிறது என்பதை உண்மை கதை மாந்தர்களை வைத்து திரை மொழி வடிவமைத்திருக்கும் இயக்குனர் லட்சுமி சரவணகுமார் அதற்கான கதாபாத்திரங்களை அதற்குரிய நடிகர்களை தேர்வு செய்வதில் ஒரு எழுத்தாளனுக்கே உரிய படைப்பாளுமை மிகப்பெரிய உதவி செய்திருக்கிறது.

எட்டு பகுதிகளாக முதல் சீசன் ரெடியாகி இருந்தாலும், ஒன்றைப் பார்த்தால் இறுதிவரை பார்க்க வைக்கிற சுவாரசிய கதை சொல்லலால் பார்வையாளர்களை வேறு எங்கும் செல்ல விடாமல் தக்க வைக்கின்ற சாமர்த்தியம் முதல் படைப்பிலேயே லட்சுமி சரவணகுமாருக்கு கைவந்தது உண்மையில் ஆச்சரியம்.

80 களின் இறுதிக் காலகட்டத்தில் தென் தமிழகத்தின் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்த அசலான மனிதர்களின் வாழ்வியல் பின்புலத்தை விவரிக்கிற மெனக்கிடல்‌ இந்தத் தொடரை மற்ற தமிழ்த் தொடர்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

பதைபதைப்பும் , மனித வாழ்க்கையின் எதிர்பாரான்மையும் , தன்முனைப்பும் வன்மமும் கலந்துக் கட்டிய மனிதர்களும் உலவுகிற இந்தக் கதைக்களத்தில் எல்லோராலும் தொடர்புக் கொள்ள முடிகிற வாழ்வின் அன்றாடப் பாடுகள் ஊடு பாவாய் நிறைந்து இருப்பது லிங்கத்தின் ஆகப்பெரும் பலம்.

வெறும் வன்முறையின் நிலக்களனாக திரைக்கதையை பயன்படுத்தாமல் மனித வாழ்வின் அலைகழிப்பு, காதல், பாசம் நட்பு நன்றி என தனிமனித உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்திருப்பது கதையை நெருக்கமாக உணர வைக்கிறது.

உண்மைக் கதையை சொல்வதில் மிகப்பெரிய தடை என்னவெனில், ஒரு படைப்பாளனுக்குரிய கலை அழகும், புனைவும் இடம் பெற முடியாத அளவிற்கு இருக்கும் நெருக்கடிகள். அவற்றை இயக்குனர் லட்சுமி சரவணகுமார் தன்னுடைய முதல் படைப்பிலேயே வென்று முத்திரை பதித்திருக்கிறார்.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அனைவரும் அவசியம் பாருங்கள்.

மாபெரும் அனுபவத்தை தருகிறான் லிங்கம்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

மகேந்திரன் என்ற முன்னாள் தோழருக்கு..

ஜீரணிக்க முடியாத ஒரு செய்தி. எனது அரசியல் ஆசான் தோழர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது.

ஆழ்ந்த வாசிப்பாளர், கொள்கைப் பற்றாளர் , தத்துவ நோக்கில் தடம் பிறழாமல் பயணித்தவர் என்ற பார்வையில் அவரை தரிசித்த எனது கண்களை நானே இன்று நொந்துக் கொண்டேன்.

எந்த தத்துவமும் கொள்கையும் அற்ற ஒரு கூட்டம் வெறும் ரசிக மனப்பான்மையை மூலதனமாக வைத்து தமிழக ஆட்சி பீடத்தை பிடித்தது என்பது நம் தலைமுறையில் நிகழ்ந்துவிட்ட, அண்ணன் சீமான் சொல்வது போல அரசியல் பேரிடர்.

உண்மையில் தத்துவங்களும் இசங்களும் பொய்யாக்கப்பட்டு , வெறும் கவர்ச்சி மேலோங்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தான எதிர்காலத்தை உருவாக்கும்.

இந்த விபரங்கள் எல்லாம் தோழருக்கு சொல்லி புரிய வேண்டியவை அல்ல. அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அவர் எடுத்த இந்த முடிவு அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய பிம்ப அழிப்பு. ஒரு வகையான தற்கொலை.

ஏன் இந்த தற்கொலை நடந்திருக்கிறது என யோசித்துப் பார்த்தால்.. உண்மையில் பல்வேறு காரணங்கள். இனி கொள்கை அரசியல் இந்த மண்ணில் எடுபடாது என அசலான கொள்கைகளை வாழ்க்கை முறையாக கொண்டவர்களே சிந்திக்க தொடங்கி விட்டார்கள் என பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது.

உதிரிக் கூட்டமாக மாறிவிட்ட தமிழ்ச் சமூகத்தில் இனி தத்துவங்களையோ கொள்கைகளையோ நம்பி பயணிக்க முடியாது என தோழர் மகேந்திரன் முடிவு எடுத்தது அவரையெல்லாம் முன்மாதிரியாக கொண்டு பயணிக்க துடிக்கிற எனக்கு எல்லாம் பெரும் அதிர்ச்சி.

மக்களுக்கு நல்லது செய்வது தானே கொள்கை.. எனப் போகிற போக்கில் அடித்து விடுவதற்கு அங்கே ஏற்கனவே ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஆழப் பயின்ற தோழர் சி மகேந்திரன் அந்தக் கூட்டத்தின் நடுவே என்ன செய்யப் போகிறார் என்று நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.

என்னுடைய முகம் மட்டும் தான் என்னுடைய மூலதனம் என்று வெளிப்படையாகவே கவர்ச்சியை சொல்லி அரசியலில் நிற்கிற

விஜய்க்கு எதிர் முனையில் தான் தோழர் எல்லாம் நின்று இருக்க வேண்டும்.

ஆனால் காலம் கருணையற்ற கொலைகாரன் அல்லவா..

இறுதியாக எங்கள் தோழரையும் அந்தக் காலம் கொன்றுவிட்டது.

ஒரு வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது எனக்கு கடுமையான வருத்தம். இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் ஜனநாயகம் அற்ற , குழு அரசியலை சார்ந்த உட்கட்சி அரசியலால் வெளியேற்றியதன் விளைவு, கொள்கையை பார்க்காமல் போகிற போக்கில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டதன் பலன்.. தோழர் சி மகேந்திரன் போன்றவர்கள் இடம் மாற தொடங்கி இருக்கிறார்கள்.

எனக்கு அதிமுக விஜயபாஸ்கர் போன்றவர்கள் இடம் மாறுவது குறித்து எந்த விதமான அதிர்ச்சி மதிப்பீடும் இல்லை. ஆனால் தோழர் சி மகேந்திரன்

மாறியது உண்மையில் எனது தலைசிறந்த ஆசிரியரை எவ்விதமான அறமும் இல்லாத இந்த கும்பல் மனப்பான்மை சமூகத்தின் முன்பாக வைத்து பலி கொடுத்து விட்டது போல உணர்ச்சி.

இப்படி எல்லாம் கீழே உருண்டு பிரண்டு தத்துவமற்ற நிலையில் தன்னை தள்ளிக் கொண்டு ஒருவகையில் தற்கொலை செய்து கொண்டு எதற்காக இந்தக் கேடுகெட்ட அரசியலில் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் மனது யோசிக்க தோன்றுகிறது.

தோழர் நல்லகண்ணு அவர்களின் மனதிற்கு மிக நெருக்கமான அவரது மாணவரான தோழர் சி மகேந்திரன் இன்று இடம் மாறி இருக்கும் காட்சி.. நல்ல வேளை, மாமனிதர் நல்லகண்ணு உயிருடன் இல்லை என்பதை நமக்கு ஆறுதலாக தெரிவிக்கிறது.

ஆழ்ந்த இரங்கல் தோழர்.

வாழ்வின் அசலான நகல்.

வாழ்வைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமா..

மனதில் உள்ள எல்லாவிதமான வெறுப்பு உணர்ச்சிகளும் அழிந்து இந்த வாழ்க்கையை அசலாக எதிர் கொள்ள வேண்டுமா…??

முன் முடிவுகள் ஏதும் பயன் தராத, வாழ்வின்

எதிர்பாரான்மை பற்றி விளங்கிக் கொள்ள வேண்டுமா..??

ஒரு அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

காத்திருப்போர் மத்தியில் ஒரு நாள் தங்கி இருங்கள்.

சுற்றி இருக்கிற நோயாளிகள், நோயாளிகளை அழைத்து வந்தவர்கள் என எல்லோரையும் கவனியுங்கள்.

மேற்சொன்னவை அனைத்திற்கும் பதில் கிடைத்துவிடும்.

சமீப காலமாக மருத்துவமனைகளிலேயே திரிந்துக் கொண்டிருப்பதால்,‌ புரிந்துக் கொண்டிருப்பவை ஏராளம்.

“என்றும் சுஜாதா” என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. எழுத்தாளுமை எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகளில் இருந்து சுவாரசியமாக சேகரிக்கப்பட்ட தொகுப்பு இது. ரசித்து படிக்கும் வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.

அதில் ஒரு கட்டுரை இருக்கிறது. நோயுற்ற தன் தந்தைக்காக மருத்துவமனையில் தங்கியிருக்கும் அனுபவத்தை சுஜாதா எழுதி இருக்கும் விதம் உண்மையில் கலங்கடிக்கிறது.

மருத்துவமனைகள் ஒரு தனித்த உலகம். இரவிலும் அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கிற மனிதர்கள் நிரம்பிய உலகம். ஒருவர் இரவு முழுக்க அமர்ந்து கண்கலங்கி அழுது கொண்டிருக்கும் போது, அருகிலேயே இன்னொருவர் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கின்ற முரண்கள் நிரம்பிய உலகம். ஒரு வகையில் மருத்துவமனைகள் தான் உலகின் அசலான நகல்.

எல்லோரும் தனி மனிதர்கள் என்பதை மருத்துவமனைகள்தான் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் மறைந்த இயக்குனர் இமயம் அப்பா பாரதிராஜா இறுதி காலத்தில் வீட்டிலேயே ஒரு சிறு மருத்துவமனை அமைத்துக் கொண்டு செவிலியர் உதவியோடு நாட்களை நகர்த்தியதாக வரும் தகவல்கள், காசு பணம் மட்டும் இருந்தால் வாழ்க்கை முழுமை அடையாது என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.

மருத்துவமனைகளில் ஏராளமான முதியோர்களை பார்க்கிறேன். அவர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்ளும் மகன்களையும் மகள்களையும் வயதான அவர்களது வாழ்க்கை துணைவியர்களையும் பார்க்கும் போது உண்மையில் அவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என தோன்றுகிறது.

நேற்று மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது ஒரு விசித்திரமான காட்சியை பார்த்தேன். வயதான தந்தையோடு அவசர அவசரமாக ஐ சி யூ க்குள் நுழைந்தார் ஒருவர். அவர் உடை , அவர் பயன்படுத்தும் சொற்கள் அலை பேசி ஆகியவை ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் வேலை செய்வதை காட்டின.

சென்ற வேகத்தில் தந்தையை ஐ சி யூ வில் சேர்த்துவிட்டு வெளியேறி வந்தார். அங்கே காத்திருந்த செவிலியரிடம் தனக்கு திருச்சியில் விமானத்திற்கு நேரமாகி விட்டதாகவும், நாளை அதிகாலை அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், விடுமுறை கிடைக்கவில்லை எனவும், அதனால் தன் தந்தையை இரண்டு நாட்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும்,அதற்கு எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை எனவும் , இரண்டு நாட்கள் கழித்து தனது தங்கை ( அவரும்..) அமெரிக்காவில் இருந்து வந்து விடுவார் எனவும், அதற்குப் பிறகு அவர் பார்த்துக் கொள்வார் எனவும், ஏதோதோ பேசிக் கொண்டிருந்தபோது.. அவர் தந்தைக்கு உள்ளே ஏதோ சீரியஸ் ஆகிவிட்டது.

உள்ளே செவிலியர்களும் மருத்துவர்களும் ஓடுகிறார்கள். இந்த மனிதர் வாசலில் நின்று கொண்டு யாருக்கோ அலைபேசியில் அழைத்து கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக அவரது தங்கையாக இருக்கலாம். ( நிறைய f**ck, shit..). ஏதோ மாட்டக் கூடாத இடத்தில் சிக்கிக் கொண்டது போல தவித்துக் கொண்டிருந்த அந்த ஆளை பார்க்க ஏனோ பிடிக்கவில்லை.

அப்போதுதான் சுஜாதா எழுதிய “அப்பாவின் மருத்துவமனை” இரவு கட்டுரை நினைவுக்கு வந்தது.

புனித குர்ஆனில் இறை மொழி ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது.

“குழந்தைகளாக நீங்கள் பிறந்த போது உங்களது பெற்றோர் உங்களை எப்படி பேரன்போடு கவனித்து பராமரித்து பார்த்துக் கொண்டார்களோ , அதையே வயதான காலத்தில் அவர்களுக்கு நீங்கள் திருப்பி செய்வீர்களாக !”

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹீமாயூன் கபீர் நமக்கெல்லாம் மேடையிலே வேகமாக பேசக்கூடிய ஒரு பேச்சாளராக தெரியும். ஆனால் வீட்டில் அவரைப் போன்ற மகனை பார்க்க முடியாது. அவருடன் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்தாலும் அவருடைய தாய் தந்தையரை அவர் இறுதி வரை வைத்து பராமரித்ததை நானெல்லாம் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். ஆட்களைக்கூட வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார். தனது மகன்களை வைத்தே தன் தாயை அவர் கவனித்துக் கொண்டார். குறிப்பாக அவருடைய மூத்த மகன் இஜா தன்னுடைய பாட்டியை குளிக்க வைத்து அவருக்கு பவுடர் போட்டு உடைகள் அணிவித்து பத்திரமாக பார்த்துக் கொண்டதை நானே சட்ட பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை அண்ணன் ஹீமாயூனிடம் வெளிப்படையாகவே கேட்டேன். உங்கள் தகுதிக்கு ஒரு ஆள் வைத்து அம்மாவை பார்த்துக் கொள்ளலாமே எனக் கேட்டபோது..

அவர் கனிந்தக் குரலில் சொன்னார்.

” யாரோ ஒருவரை பணத்திற்காக வேலைக்கு வைத்து விட்டு… அதெல்லாம் அம்மாவுக்கு சரியா வருமாடா தம்பி..??

நாங்கள் எதற்கு இருக்கிறோம்.?? அதைவிட உலகத்தில் முக்கியமான வேலை என்ன இருக்கிறது..?? என்று கேட்டார்.

நியாயம் தான்.

ஆனால் நான் மருத்துவமனையில் பார்த்த அமெரிக்கா காரன்தானே .. நம் ஊரில் பெரும்பான்மை..??

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு அவரது இறுதிக் காலத்தில் ஆறுதலாக உடனிருந்து, கங்கை அமரன் “சிறு பொன்மணி அசையும் விழி..” என்ற பாடலை ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்திலிருந்து பாடிக் காட்டிய அந்தக் காணொளியை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

அந்தப் பாடலை பாரதிராஜா ஒரு நூலேணி போல பயன்படுத்தி கடந்த காலத்தில் நுழைய முயற்சிக்கிறார்.

எவ்வளவு கவித்துவமான காட்சி அது ??

நோய்களும் முதுமையும் உலகைப் புரிந்து கொள்வதற்கான சாவிகள் என்கிறார் ரூமி.

ஏனெனில் அவைகள் தனிமைகளை அழைத்து வந்துவிடுகின்றன.

தனித்திருக்கும் போது தான் நாம் நம்மையே உணர்கிறோம்.

யாராலும் மீட்க முடியாத, கைவிடப்பட்ட சூழ்நிலைகளும் ஒரு வகையில் தேவையாகத்தான் இருக்கின்றன.

அதிலிருந்து தான் நாம் மீண்டும் பிறக்க வேண்டி இருக்கிறது.

பாரதிராஜா- காலத்தை உறைய வைத்த கலைஞன்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இறந்துவிட்டார் என்கின்ற செய்தி எனக்கு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. ஏனெனில் சென்ற வருடம் மார்ச் மாதம் அவருடைய ஒரே மகன் மனோஜ் எதிர்பாராத விதமாக இறந்தபோதே அவர் அன்றே மனதளவில் இறந்து விட்டார். அவரைப் போன்ற மனிதர்கள் உயிரைத் தாண்டிலும் உணர்ச்சிகளை மதிப்பவர்கள்.

Cinema Paradiso என்ற புகழ்பெற்ற திரைப்படத்தில்.. இடிக்கப் போகும் ஒரு திரையரங்கில் அமர்ந்து கொண்டு கடைசியாக ஒரு திரைப்படம் பார்த்த ஒரு ரசிகன் போல இன்று செய்தி வந்தவுடன் அவருடைய கிளாசிக் திரைப்படங்களின் சில மறக்க முடியாத காட்சிகளை மீண்டும் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாரதிராஜா என்கின்ற பெரும் கலைஞன் நம்மிடையே தோன்றி வாழ்ந்து மறைவதெல்லாம் ஒருவகை கொடுப்பினை தான். அவரைப்போல உணர்வுத் தளத்தில் திரைமொழியை கையாளுபவர் தோன்றுவது எப்போதாவது ஒருமுறைதான். எங்கள் தலைமுறையில் நாங்கள் பாரதிராஜா இயக்கத்தில் வைரமுத்து வரிகளில் இளையராஜா இசையில் பாடல்களை கேட்டு பார்த்து மகிழ்ந்தோம் என்பதெல்லாம் உண்மையிலேயே வரம் தான்.

சினிமா ஸ்டுடியோக்களில் அடைந்து கிடந்த தமிழ் சினிமாவை விடுதலை செய்து வெளியே அழைத்துச் சென்று வயல்வெளிகளிலும் ஆற்றங்கரைகளிலும் கிராமத்து தெருக்களிலும் புழுதி காடுகளிலும் உலவ வைத்தவர் பாரதிராஜா.

30க்கும் மேற்பட்ட அவரது திரைப்படங்களில் காதலை அவர் கையாண்ட விதம் போல தமிழ்நாட்டின் வேறு எந்த இயக்குனரும் இதுவரை கையாண்டதில்லை. பதின் பருவத்து காதலுக்கு ஒரு அலைகள் ஓய்வதில்லை., நடுத்தர வயது காதலுக்கு ஒரு கடலோரக் கவிதைகள், முதிர்வயது காதலுக்கு ஒரு முதல் மரியாதை என அவர் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு காதல் கதையை சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவரது முதல் படமான 16 வயதினிலே காதல் என்பது வெறும் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல, மனதை சார்ந்தது என்பதை காவியத் தனமாக எடுத்துக் கூறியது. அவரது காதல் ஓவியங்கள்- நிறைவேறாத காதலின் தவிப்பை பற்றியது. அவரது கல்லுக்குள் ஈரம் – ஒரு தலைக் காதலின் அவஸ்தையை பற்றியது. அவரது மண்வாசனை- உறவுமுறைகளுக்குள் சிறுவயதில் இருந்து எழுகின்ற காதலைப் பற்றியது.

குறிப்பாக அவரது இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் கடலோரக் கவிதைகள். அந்த முட்டம் கடற்கரையும், ஓங்கி உயர்ந்து விண்ணை தொடுகின்ற அந்த தேவாலயமும் இன்றளவும் நம் மனதில் அலையடிக்க வைப்பவை.

குறிப்பாக.. அதில் வருகின்ற வசனங்கள்.

“கல்யாணம்னு சொல்றீங்களே.. பெண்ணுக்கிட்ட இத பத்தி சொன்னீங்களா..??

பெண்ணின் தகப்பனார்:

நாம என்ன அவளை கிணத்துலயா பிடிச்சு தள்ளிட போறோம் ??

அதுக்கு அவளை கிணத்திலேயே தள்ளி இருக்கலாம்.”

இப்படி படம் முழுக்க ரசனை மிக்க காட்சியமைப்புகள்.

அதேபோல முதல் மரியாதை. இந்தப் படத்தைப் பற்றி தனி புத்தகமே எழுதிவிடலாம். அவ்வளவு இருக்கிறது. இன்றளவும் தமிழின் ஆகச்சிறந்த காவியங்களில் முதல் மரியாதைக்கு முக்கியமான இடம் இருந்து கொண்டே இருக்கிறது.

தன் படங்கள் முழுக்க அசத்தலான எடிட்டிங் காட்சி அமைப்புகளோடு, குறியீடுகளோடு திரை மொழியை உருவாக்குவதில் வல்லவர் பாரதிராஜா. முதல் மரியாதை திரைப்படத்தில் இந்த யுத்தியை இளையராஜாவின் இசை உதவியோடு பரவலாக பயன்படுத்தி இருப்பார்.

அவருடைய வேதம் புதிது மிக முக்கியமான ஒரு திரைப்படம். அது எந்த அளவுக்கு முக்கியமானது என்றால்..வேதம் புதிது போன்ற ஒரு திரைப்படத்தை இன்று நினைத்தாலும் எடுக்க முடியாது என்கிற அளவுக்கு துணிச்சல் மிகுந்த கதை அமைப்பு. சுயசாதி மறுப்பும், மனித நேயமும் இணைகிற அந்த காவியக் கணங்களை நம் கண் முன்னே தரிசனமாக்கி உலவ விட்டிருப்பார். வேதம் புதிது “சரிதா கதாபாத்திரம்” அதிகம் பேசப்படாத அற்புதம்.

அரசியல் அடிமைத்தனத்திற்கு சாட்டையடி கொடுக்கும் என் உயிர் தோழன் அப்போது அதிகாரத்தில் உச்சத்தில் இருந்த திராவிடக் கட்சிகளுக்கு மிகப்பெரிய விமர்சன திரைப்படமாக அமைந்தது.

இன்றைக்கும் எண்பதுகளின் கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு அவரது திரைப்படங்களே ஆவணங்கள். ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் என்னென்ன சடங்குகள் என்னென்ன முறைப்படி நடக்க வேண்டும் என்பதை மண்வாசனை திரைப்படத்தில் அணு அணுவாய் காட்சி அமைப்பில் செதுக்கியிருப்பார்.

கடந்து போன ஒரு காலத்தில் நினைவுகளாக தேங்கிவிட்ட இது போன்ற பண்பாட்டு விழுமியங்கள் பாரதிராஜா திரைப்படங்களில் மட்டுமே ஆவணங்களாய் பாதுகாக்கப்பட்டு பத்திரமாக்கப்பட்டிருக்கின்றன.

திரைக்கதை அமைப்பில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் உணர்ச்சிமிக்க மனிதராக பாரதிராஜா திகழ்ந்தார். காவிரி பிரச்சனை உச்சத்தில் இருந்த போது காவிரி நீர் தர மறுக்கின்ற கர்நாடகத்துக்கு தமிழ்நாட்டின் மின்சாரம் அளிக்கக்கூடாது என நெய்வேலிக்கு சென்று போராடியவர். ஈழத்தின் இறுதி நாட்களில் தமிழ் ஈழ ஆதரவு இயக்குனர்களை அழைத்துக் கொண்டு வீதி வீதியாக காங்கிரசுக்கு எதிராக பரப்புரை செய்தார். அவர் அந்தக் காலத்தில் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் வழங்கிய ஆகப்பெரும் கொடை.. அண்ணன் செந்தமிழன் சீமான்.

பாரதிராஜா திரைப்படங்களைப் பற்றி ஒரு கதாகாலட்சேபம் போல பாரதிராஜாவிடமே சொல்லிக் காட்டும் ஒரு வாய்ப்பினை திரைப்பட தயாரிப்பாளர் ஆருயிர் நண்பர் சுரேஷ் காமாட்சி ஒருமுறை எனக்கு அவரது பிறந்தநாளில் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது படங்களில் உள்ள முக்கியமான காட்சிகளை அவரிடமே விரிவாக எடுத்துச் சொல்கின்ற ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கேட்டுக் கொண்டிருந்தவர்.. ஒரு கட்டத்தில் “இந்த காட்சிகளை எல்லாம் எடுக்கும் போது, நீ பேசுவது போல எல்லோரும் பேசுவார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எடுக்கவில்லை. அப்படியே இயல்பாக எடுத்ததுதான்.” என்று தன்னடக்கத்தோடு சொன்னார். அதற்குப் பிறகு அண்ணன் சீமான் பிறந்த நாளில் நேரடியாக சந்தித்தபோது கட்டி அணைத்துக் கொண்டார். அப்போதுதான் அவர் காதில் ஒரு கேள்வி கேட்டேன். காதலை உருக உருக இப்படி எடுத்து வைத்திருக்கிறீர்களே.. உங்கள் காதலியின் பெயர் என்ன..??

கேள்வி தவறு என்றார்.

“காதலிகள்” என்று சொல்லி சத்தமாய் சிரித்தார்.

அந்த காலகட்டத்தில் நண்பர் சுரேஷ் காமாட்சி எங்களை எல்லாம் வைத்து இயக்குனர் இமயத்திற்கு ஒரு விழா எடுக்க ஏற்பாடு செய்தார். ஒரு மேடை.

நடுவில் ஒரே ஒரு சிம்மாசனம். அதில் இயக்குனர் இமயம் மட்டுமே அமர்ந்திருப்பார்.

அவருக்கு எதிரே ஒரு சிறிய மேடை. நாங்கள் அதில் பேச வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு இருந்தோம்.

அதற்குப் பிறகு மோசமான அவரது உடல் நிலையும் காலச் சூழலும் ஒத்துழைக்கவில்லை.

எந்த நொடியிலும் பாரதிராஜாவை அவரது செல்லுலாய்ட் காவியங்கள் மூலமாக நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம் என்பது மட்டுமே அந்தப் பெருங்கலைஞன் நமக்கு செய்து விட்டுப் போயிருக்கிற கடைசி கருணை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்து இந்திய வரைபடத்தில் எட்டிப் பார்த்தாலும் கிட்டி விடாத அல்லிநகரம் என்ற ஒரு சிற்றூரில் இருந்து சின்னசாமி என்ற இளைஞன் கருத்த உடலோடு கனவு விழிகளோடு சென்னையில் காலடி எடுத்து வைத்த போது.. கண்டிப்பாக எந்த அதிசயங்களும் நிகழவில்லை.

ஆனால் அந்த மனிதன் பாரதிராஜாவாக வாழ்ந்து முடிந்த போது.. அதிசயமாய் வாழ்ந்து விட்டு முடிந்திருக்கிறார்.

தெற்கத்தி கரிசல்காட்டு காடுகளும், முட்டம் கடற்கரை பேரலைகளும், இன்றைய நாளில் சிலிர்த்து அடங்கியிருக்கும்.

கனவுலகிலேயே தேங்கிவிட்ட வெள்ளை தேவதைகள் இன்றைய தினம் கருப்பு ஆடை அணிந்திருப்பார்கள்.

ஆனால் பாரதிராஜாவோ.. ஆகாயத்தின் மறுபக்கத்திற்கும் சென்று.. ஏதோ ஒரு தேவதூதனிடம் காதல் கதை ஒன்றை உணர்வு பூர்வமாக சொல்லிக் கொண்டிருப்பார்.

காலத்தை ஒரே இடத்தில் உறைய வைத்த அந்தக் கம்பீர பெருங்கலைஞனுக்கு..

எனது கண்ணீர் வணக்கம்.

இசைக்கு பிறந்த நாள்!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் “தனிப்பட்டவை” என்ற ஒரு வகைமை இருக்கும்.ஆங்கிலத்தில் அதை Private, Personal போன்ற சில சொற்களில் அழைக்கிறார்கள்.

அப்படி மனிதனுக்குள்ள தனிப்பட்டவையாக இருக்கும் பலவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாது. அவைகள் அவனோடு தோன்றி அவனோடு வாழ்ந்து அவனோடு முடிபவை.

இதில் இளையராஜா விதிவிலக்கு.

ஏறக்குறைய தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு இளையராஜா அவர்களுக்கே உரிய அந்தரங்கமான Personal தான். என்ன ஒன்று என்றால்.. இது பற்றி அவர்களால் பலரோடும் பகிர்ந்துக் கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு இளையராஜா. எண்பதுகளில் பிறந்த பலருக்கும் இளையராஜா தான் தாலாட்டு. பதின் வயதுகளில் கிடைத்த முதல் முத்தத்தில் இளையராஜா தான் முதல் காதல். முதல் காமம். ஊர் திருவிழாக்களில் இளையராஜா ஒலிக்க தொடங்கியவுடன் திருவிழாக்கள் வந்துவிட்டன. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு இரவில் வலியால் கசிந்து கொண்டிருந்த விழிகளுக்கு.. இளையராஜா பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

வேலை கிடைக்காமல் முகவரி தெரியாத ஊரில் எங்கோ கிடைத்த ஒரு இடத்தில் பசியோடு தனியே படுத்துக் கொண்டிருந்தபோது, இளையராஜா குரல் மூலம் தான் அவரவர் சொந்த ஊரின் சுவாசத்தை பருகிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு இளையராஜா எப்படி என்றால்.. உங்களைப் போல எல்லாமும் தான்.

எல்லோருக்கும் சொல்லிக் கொள்வதற்கும், சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே நெகிழ்ந்து கொள்வதற்கும், யாருக்கும் தெரியாமல் விழிகளில் வடிகிற ஒரு துளி கண்ணீரை சிறிய வலியோடும், நிறைய நினைவுகளோடும் உணர்ந்து நினைக்கின்ற ஒரு காலம் இருக்கும் இல்லையா…

அந்தக் காலத்தின் இசையமைப்பாளர் இளையராஜா தான்.

இளையராஜா சிம்பொனி இசைத்து சாதனை படைத்து விட்டதாக சொல்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு எளிய மனிதனின் வாழ்க்கையிலும் அவனது நிராதரவு பொழுதுகளில்… அவரது வயலின்களும், அருண் மொழியின் ஒற்றைப் புல்லாங்குழலும்.. கொடுக்கின்ற ஆறுதல்.. சிம்பொனி இசையெல்லாம்

அதற்கு முன்னால் கொஞ்சம் சின்னது தான்.

இளையராஜாவை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு.. சற்றே சிந்தித்து, உள்ளுக்குள்ளேயே உருகி, இப்படி ஒரு கேள்வியா என நினைத்து பதில் சொல்ல சில மணித்துளிகள் எடுத்துக் கொள்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை..,

இளையராஜா என்பது வெறும் பெயர் அல்ல.

அவர் நமது வாழ்க்கை.

தீவிர எதிர் முனைகளான அளவற்ற அறமும், தீரா வன்மமும் இரண்டும் எதிர்பாராத வகையில் கலந்து நிற்கிற நமது இயல்பான வாழ்க்கையில்.. அவர் மட்டும் தான் தேங்கிவிட்ட கடவுளின் அமுதம்.

கடவுள் உலகத்தை படைத்தார் என்பது உண்மையோ பொய்யோ தெரியாது.

ஆனால் எங்கள் உலகத்தை படைத்தது இளையராஜா தான்.

எங்கள் தலைமுறையின் மகத்தான மாமேதைக்கு.. திசை உணர்த்திய இசைக் கடவுளுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தோற்றவர்களின் வரலாறு..!

.

நாங்கள்

தோற்றவர்கள் தான்.

ஆனாலும்..

அனல் வீசும்

பொழுதுகளில்

நாங்கள் சளைக்காமல்

சண்டையிட்டவர்கள்.

ஆன்மாவின்

குருதியோடு

கலந்துவிட்ட

லட்சியத்திற்காக

ஒரு வாழ்வினையே

விலையாக கொடுத்து

எதிர்காலக் கனவிற்காக

தளராமல் நின்றவர்கள்.

எங்களது மூத்தோர்

தங்கள் மரணத்தின்

இறுதிப் பொழுதில்

உதிர்த்த

கடைசிச் சொல்லுக்காக

எதையும் இழக்கத் துணிந்த

எங்களது தோல்வியின்

வரலாறு ,

எந்த விலையும்

கொடுக்கப்படாமல்

மலிவாக கிடைத்த

உங்கள் வெற்றியின்

பெருமிதப் பாடலை விட

கம்பீரமானது.

அதோ..

யார் யாரோ

ஓடி வருகிறார்கள்.

புற்றீசல் போல.

மினுக்கும் வெற்றியின்

கதகதப்பான குடைக்குள்

ஒளிந்துக் கொள்ள.

வெற்றிகளின் கதை

அப்படித்தான்.

ஈர்க்கும்.மினுக்கும்.

பாம்பின் நாவாய்

அலையும்

அதிகாரத்தின்

சுவைக் காட்டி

மயக்கும்.

ஆனால்

தோற்றவர்களின்

வரலாறு

அப்படியல்ல.

வலிகளோடு

பிறக்கும்

ஒரு பெருமூச்சுக்குப் பிறகு,

நாங்கள் குருதித் தோய்ந்த

ஆயுதங்களை

மீண்டும் இறுகப்பற்றுகிறோம்.

இதோ..

ஒரு யுகத்தின் கனவை

சுமந்துக் கொண்டு

இதோ..

நாங்கள் காயங்களோடு

தயாராக இருக்கிறோம்.

அடுத்த போராட்டத்திற்காக.

Page 1 of 61

Powered by WordPress & Theme by Anders Norén