பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: என் கவிதைகள்.. Page 1 of 4

உன்னிடம் சில நொடிகள்.

சில நொடிகள்

கண்களை மூடி

தியானிக்கிறேன்..

உன்னை

பார்த்து விடுகிறேன்.

❤️

யாரிடமும் பேசாமல்

தலைகவிழ்ந்து

இமை சொருகி

மெளனிக்கிறேன்.

உன்னிடம்

பேசிக்

கொண்டிருக்கிறேன்.

❤️

யாரோ என்னிடம்

ஏதோ கேட்கிறார்கள்.

காதில் விழவில்லையா

என சாடை காட்டுகிறார்கள்.

அப்போதுதான் உனக்கு

பிடித்த நாயகன் பட

பின்னிசை எனக்குள்

அனிச்சையாக ஒலித்துக்

கொண்டு இருக்கிறது.

❤️

ஆள் தெரியாத

மழைச்சாலையில்

தனித்து பயணித்த

காரை ஒதுக்கி

கண்ணாடி ஏற்றி

சாய்ந்திருக்கிறேன்.

என் விழிகளுக்கு

முன்னால்

ஒரு பாதி

திறந்த கதவும்.

ஒரு மஞ்சள் சுடிதாரும்.

❤️

ஆளில்லா

பிற்பகல் கோவில்

பிரகாரத்தில் கண்மூடி

படுத்திருக்கிறேன்.

பழக்கத்தில்

அனிச்சையாய்

துழவும் என் விரல்களில்

ஒரு உதிரிப்பூ.

❤️

விடுமுறை கல்லூரி

ஒன்றில் யாருமில்லா

வகுப்பறைகளின்

திறந்திருக்கும்

ஜன்னல்கள் ஒவ்வொன்றாய்

மூடிக் கொண்டே வருகிறேன்.

ஏனோ உன்னை இறுதியாய்

பார்த்த போது

நீ தேவையில்லாமல்

கண் சிமிட்டிக்கொண்டு

இருந்தாய்…

கேள்வியற்ற ஒரு பதில்

கடைசியாய்

உனக்கு

அனுப்பிய

இறுதிச் செய்தி

ஒன்று

எவ்வித பதிலும்

இல்லாமல்

கை விடப்பட்ட

நாய் குட்டி போல

பனி இரவுகளில்

முனகிக்

கொண்டே திரிகிறது.

ஒளி வெளிரும்

அலைபேசி திரையில்

அனாதைப் போல

உனக்கு அனுப்பிய

என் இறுதிச் செய்தி

பதில் இல்லாமல்

பரிதவித்து கிடக்கிறது.

பதிலற்று திரிகிற

என் இறுதி செய்தி

மூங்கில் காட்டில்

அலைகிற

ஊதற் காற்று போல

உள்ளுக்குள் இரைகிறது.

ஒரு மகத்தான

பிரிவின்

இறுதி அத்தியாயத்தை

மௌனத்தின் தூரிகை

கொண்டு

நீ வரைய தொடங்கி

இருக்கலாம்.

இருப்பினும்..

பிரிவின் மொழி

ஏதாவது சொற்களாலோ

சைகையாலோ

குறைந்தபட்சம்

சில

கண்ணீர் துளிகளாலோ

அல்லது

ஒரே ஒரு கவிதையாலோ

நிகழ்த்தப்பட்டிருந்தால்

கூட

நான் ஆறுதல்

அடைந்திருப்பேன்.

அல்லது

சில வசவுகள்

நிராகரிப்பின் நியாயங்கள்

துரோக குற்றச்சாட்டுகள்

கழிவிரக்க விளக்கங்கள்

இப்படி ஏதேனும் ஒன்றில்

எனது இறுதி செய்தி

உன்னால்

சிலுவையில் அடிக்கப்பட்டு

இருக்க வேண்டும்.

அந்த சிலுவைப்பாடு

ஒருவேளை

என் உயிர்த்தெழுதலுக்கான

வழியாக

இருந்திருக்கக்கூடும்.

ஆனால்

எப்போதும்

வெறுமையை

தருகிற

மழைக்கால

மதியப்பொழுது போல

உன்னால்

பதில் அளிக்கப்படாத

எனது இறுதி செய்தி

உறைந்து விட்டது.

தவறி

எங்கேனும்

காண நேர்ந்தால்

ஏன் பதிலில்லை

என ஒருபோதும்

நான் உன்னிடம்

கேட்க மாட்டேன்.

அதற்கும்

பதிலில்லை

என்றால்..??

என்னை நானே

தேற்ற

இன்னொரு

கவிதையை

இப்படி நான்

எழுத முடியாது.

பறத்தல் பற்றிய குறிப்புகள்

உன்னை பறவை

என்று அழைப்பது

எனக்கு பிடித்தம்.

நினைத்த நொடியில்

வெட்ட வெளியில்

உன்னால்

எங்கும் பறந்து விட

முடிகிறது என்பதோடு

மட்டுமில்லாமல்

எப்போதும் எனக்கென

தனித்துவமாக

தயாரிக்கப்பட்ட

சொற்களால் வேய்ந்த

சிறகுகளை

என் தோளில் எளிதில்

பொருந்துகிறாய்.

நம் முன்

மேகங்கள் அலையாத

நிர்மூலமான

வெள்ளை வானம்

யாருமின்றி

வரையறை அன்றி

விரிந்து கிடக்கிறது.

கால இசை

தவறிய ஒரு கணத்தில்

திசைகளற்ற வெளியில்

இலக்கினை அழித்து

இலேசாகி பறக்கத்

தொடங்கிறோம்.

நம் அடிவயிறு

குளிரும்போது

பாசிகள் அடர்ந்த

வனக்குளத்தை நாம்

கடந்தோம்.

நம் பின்னந்தலை

வியர்க்கும் போது

மணல் காட்டில்

ஓங்கி உயர்ந்த

ஒற்றை பனையை

அப்போதுதான்

கடந்திருப்போம்.

நீலம் பாவித்த

கடலை கடக்கும்

போது என்

தலைக்கு மேலே

நீ கண் சொருகி

மிதந்து கொண்டு

இருந்தாய்.

சட்டென திசைமாறி

அந்தரத்திலிருந்து

கடல் நோக்கி

கவிழ்ந்து

சல்லென கிழிறிங்கி

நீலப் பரப்பினை

முத்த மிட்டு

நீ

மேலெழும்பிய

நொடியில் தான்

நான் உணர்ந்தேன்.

உன் கூர்

அலகினில்

சிக்கிய மீன்

நான் தான்

என்று.

புலியின் உறுமல்.

அங்கே..

மக்கள் கடலுக்கு

நடுவே புரட்சிப் பதாகை

படபடக்க கொள்கைப்

படகாய் அவன் மிதந்து

கொண்டிருக்கிறான்.

இங்கே..

இருட்டு கரையின்

ஓரத்தில் சில

இறுமல்கள்.

புலியின்

உறுமல்

வெடித்து முழங்கும்

ஒரு

கணத்தில்..

இறுமாப்பு

இறுமல்களும்,

முகவரியற்ற

செறுமல்களும்

இல்லாமல் போகும்

கொன்றை மரத்து கொலை வழக்கு

.

தூரமாக நீ செல்வதற்கு

முன்பாக

இறுதியாக

நின்று கொண்டிருந்த

கொன்றை மரத்திற்கு கீழே

இன்று வெற்று நிழலை தவிர

வேறு எதுவும் இல்லை.

அதைக் கடந்து விட்டேன்

அல்லது

கடந்து கொண்டிருக்கிறேன்

என நானே

கற்பித்துக் கொள்கிறேன்.

என் கழுத்து

திரும்பிப் பார்க்கும்

திசையில் அது இல்லாமல்

தொலைவில் மறைந்து விட்டது என

உறுதியாய் நம்புகிறேன்.

நம் பிரிவுக்கு

நீயே கற்பித்துக் கொண்ட

காரணங்கள்

காற்றின் உளி பட்டு

உடைந்து போன

வண்ணத்துப்பூச்சிகளின்

சிறகுகளாக

மிதந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும்

அந்த இடத்தைக்

கடக்கும் போது

மதிய நேரத்து

கோவில் குளம் போல

சலனம் அற்று இருக்க

முயற்சித்துக்

கொண்டே இருக்கிறேன்.

யாரும் அறியாத

ஓர் அந்தியில்

முகம் இறுகாமல்

முனகல் இல்லாமல்

விழியோர துளி

விழாமல்

அந்த கொன்றை மரத்தை

கடந்து விடுகிறேன்.

ஒரு உதிராத புன்னகை

உள்ளுக்குள்.

மறுநாள் காலை

அந்த கொன்றை மரத்தின்

கீழே விழுந்து கிடந்த

அந்த ஒற்றைப் பூ

நிச்சயம் உன்னுடையது அல்ல.

உனக்காகவும் இருக்கலாம்

என ஏனோ

என்னால் நினைக்க முடியவில்லை.

ஆக இப்படித்தான்

உலகத்தில்

சில பல

தற்கொலைகளும்/கொலைகளும்

இயல்பாக நடந்து

கொண்டிருக்கிறது

உறவுகளே..

அரூவ கத்தியோடு அலைபவன்.

உன் நினைவின் துளி
என்னை தீண்டி விடக் கூடாது
என்பதற்காக
யாரும் அறியா இருட்
மனக்குகையில்
மௌனத்தின் விலங்கிட்டு
என்னை நான்
சிறை வைத்திருக்கிறேன்.

❤️

பின்னிரவு ஒன்றில்
காயாத கனவுகளின்
கயிற்றினை
பிடித்துக் கொண்டு
நான் அடைந்திருக்கும்
ஆழ் குகைக்குள் இறங்கி
என்னை நான்
பார்க்கும் போது
இமைகள் உதிர்த்த
விழிகளைக் கொண்டவன்
வெற்றுக் காகிதங்களை
பார்த்துக் கொண்டிருப்பதை
நான் பார்த்தேன்

❤️

எதற்காக
அந்த வெற்றுக் காகிதங்கள்
என நான் கேட்கலாம்
என நினைத்தபோது
இன்னும்
எழுதப்படாத கவிதைகள்
இந்தத் தாளில் தான் உள்ளது
என பதில் வந்தது.

❤️

அனலேறிய
அந்தக் கண்ணில்
இருந்து
சொட்டு விழி நீர்
ததும்பி விழுந்த போது
தாள் எங்கும்
பசுமை ஏறி
உன் நினைவின்
சின்னஞ்சிறு
அல்லி மலர்கள்
பூக்கத் தொடங்கின.

❤️

மறக்க வேண்டியதை
மறக்க…
இருக்க வேண்டும்
என்று நினைத்தேன்.
இல்லை
இறக்க வேண்டும்
என
உணர்ந்த கணத்தில்
இரண்டும் ஒன்றுதான்
என்பது போல
என்
பின்னங்கழுத்தில்
ஆழமாக சொருகப்பட்ட
அரூவ மாயக்கத்தி ஒன்றோடு
நான் அலைந்து கொண்டிருப்பதை தான்
அவரவர் மொழியில்
என் வாழ்க்கை
என அறிந்து வைத்திருக்கிறார்கள்.

❤️

இவ்வாறாகவே நடந்தது அந்தக் கொலை.

????

உன்னை கொல்ல
நான்
ஆதி கால ஆயுதம்
ஒன்றை பரணில்
தேடிக்
கொண்டிருக்கும்
போது தான்,
அந்த துருப்பிடித்த கத்தியை
தேடி எடுத்தேன்.

அதன் முனை
அவ்வளவு கூர்மையாக இல்லை.
ஆனால் அதன் வளைவில் எப்போதோ குத்தப்பட்ட
குருதியின் கறை
அந்தக் கத்தியை
நான் தேர்ந்தெடுக்க போதுமான காரணத்தை தந்தது.

அதை உன்
தோல்களை கவ்வி நிற்கும்
விலா எலும்பில் குத்தலாமா,
கதகதப்பான
நடுநெஞ்சில் பாய்ச்சலாமா,
தசை ததும்பி நிற்கும் அடிவயிற்றில் சொருகலாமா, என்றெல்லாம் நினைக்கும் போது ..
மிடறு விழுங்குகிற உன் தொண்டைக் குழி எனக்கு நினைவுக்கு வந்தது.

அதன் மென்மை
இந்தக் கத்திக்கு
உகந்தது தான்‌.

ஆனால்..
எங்கே குத்தினாலும் சரி
நான் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்.

உன் குருதித் துளி என் மீது பட்டுவிடக் கூடாது.

உன்னை விட
உன் குருதியை
நான் அதிகம் வெறுக்கிறேன்.
அதோடு அந்த நொடியில் உறையும் உன் விழிகளையும்.

அந்த இரண்டும்
வாந்தி எடுக்க முடியாத
ஒரு குடிகாரனின் இரவு போன்றவை.

ரத்தம் கொப்பளிக்கும்
உன் சாவை
எப்போதும் கொந்தளித்துக் கொண்டே இருக்கும்
என் மனக்கடலில்
ஒரு படகாக மாற்றி
செலுத்தி விட வேண்டும்
என எண்ணிய அந்த பொழுதில்..
ஏதோ
திருப்தியற்றவனாய்
சாவின் துருவேறிய
அந்தப் பழங்கத்தியை
என் ஜன்னல் வழியே
தூக்கி எறிந்தேன்.

அந்த நொடியில்
நிராயுதபாணியாக
நின்று இருந்த‌
என்னிடம்
என்ன ஆயுதம் இருக்கிறது
என யோசிக்கும் போது தான்…

அதுவரை
கண்ணியம் காத்தோ..
பழகிய காலம் கருதியோ..
உள்ளுக்குள் எப்போதும் சுரக்கும் பேரன்பின்
வாடை உறுத்தியோ…
உன்னைப் பற்றி
பேச கட்டாயப்படுத்தப்பட்ட
எல்லா தருணங்களிலும் மௌனித்த நான்,

முதல்முறையாக
உன்னை பற்றி பேசத் தொடங்கினேன்.

இனி
இயல்பாகவே
நடந்து விடும்‌.
எனக்கான ஒரு கொலையும்,
உனக்கான ஒரு சாவும்.

????

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள்.

“வேண்டாம்.

புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை.

நினைவின் சுழல் கொண்டவை.

கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை.

மீளவே முடியாத

ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை.

வேண்டாம்..”

என அச்சத்துடன் மறுத்தேன்.

“இல்லை இல்லை..

தீரா மோகத்தின் வெப்பம் வீசும் விழிமயக்க புனைவு கதைகள்

அடங்கிய வசீகர புத்தகங்கள் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளுக்கு பின்னால்

கனவின் கதவு

ஒன்று இருப்பது போல ..

ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னாலும் ஒரு கனவின் மாயக்கதவு ஒன்று மறைந்து இருக்கிறது.

அதற்குள் சென்றால் ஆழ்மனதில் உறுத்தும் நம் ஆறாக் காயங்களை, சுகந்த நினைவின்

காற்று ஊதி ஊதியே குணப்படுத்தும் காதலின் தேவதை ஒருவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்துவிட்டு வரலாம் வா..” என்று அழைத்தாள்.

எனக்கு முன்னால் நட்சத்திரங்களை விண்ணை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் ஒன்றோடு ஒன்று பின்னிய நிறைவேறா கனவுகளின் கனலேறிய விசித்திர கிளைகள் கொண்ட ஒரு கொன்றை மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

பார்க்கவே அச்சம் ‌. மேலும் அசைந்து கொண்டிருக்கும் கிளைகள் என்னை இழுத்து அந்தக் கனல் மரத்திற்குள் வைத்து கழுவேற்றிக் கொல்லுமோ என்கிற தீவிர பய உணர்ச்சி.

நடுங்கியவாறே என்னை நோக்கி மிதந்து வந்த அந்த அலைபேசி இணைப்பை துண்டித்தேன்..

….

விழிகளை மூடி அமர்ந்திருந்த அந்த கணத்தில் தான்.. நொடி பிசகிய திடுக்கிடலில் விழித்து பார்த்த போது..

நானாக உருவாக்கிக் கொண்ட காரணங்கள் துருவேறி இறுகிக் கிடக்கும் அந்தக் காலப் பூட்டு

அதுவாகத் திறந்து, என் முன்

என் வாழ்வில் இனி எப்போதும்

வாழ முடியாத, வசந்த காலத்தின் வண்ணப் புகைப்படங்கள்

கண்ணீர் கோர்த்திருக்கும் என் விழிகளுக்கு முன்னால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

❤️

நியாயத்தின் கதை.

????

நியாயம்

என்ற

வினாவின் ஓசை

நடுநிசியில்

மூடப்படாத

குடிநீர் பைப்பு

போல

சரித்திரத்தின்

வீதிகளிலே

சொட்டி கொண்டே

இருக்கிறது.

எது நியாயம்

என்பதற்கு

அவரவருக்கு

ஒரு தர்க்கம்.

ஆளாளுக்கு

ஒரு கதை.

வரையறையற்ற

சுதந்திரத்துடன்

அவரவர்‌ விழிகளில்

படுகிற காட்சியாய்,

இலக்கற்ற ஓவியமாய்,

அலைந்துக் கொண்டே

இருக்கும் சீரற்ற

சிதறலாய் நியாயம்.

எந்த திசையில்

நியாயம் உறைகிறது

என்று எவருக்குமே

தெரியாது.

ஏனெனில்

நியாயம்

திசைகளை அழித்து

அவரவருக்கு

ஒரு திசையை

பிரசவிக்கிறது.

நியாயத்தை

பற்றி எழுதி எழுதி

எழுதுகோல்கள்

முனை உடைந்து

இருக்கின்றன.

அவரவருக்கான

நியாயத்தின்

பழுப்பேறிய

ஏடுகளின்

வாக்கியங்கள்

தங்களுக்கு தாங்களே

அவ்வப்போது

மாறிக் கொள்கின்றன.

அப்படி என்றால்

நியாயம் என்றால் என்ன

என்று புத்தனின் கடைசி

சீடன் சுமன் கேட்டான்.

தனக்குள் ஆழ்ந்திருந்த

புத்தன் தன் மௌனத்தை

கலைத்து சொன்னான்.

“அடுத்தவரின்

பார்வையை

உன் விழிகளில்

பார்த்தால்

அது தான் நியாயம்.”

காலம் ஒரு முறை

சிலிர்த்து அடங்கியது.

❤️

இதுதான் என் வாழ்வு.

அப்போது நான்

அப்படி

செய்திருக்க

கூடாது என்கிற

ஒன்றே ஒன்றை

வாழ்வின்

பல

சமயங்களில்

நீக்கி விட்டு

பார்த்தால்..

எதுவுமே இல்லை

வாழ்வில்.

????

Page 1 of 4

Powered by WordPress & Theme by Anders Norén