பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஆகஸ்ட் 2019 Page 1 of 2

எதுவுமே இல்லை.

 

திரும்பிப் பார்த்தால்
எதுவும் இல்லை.

நினைவில் கொள்ளவும்..
நினைவில் வைத்துக் கொல்லவும்..
ஏதேனும் ஞாபகங்களின்
நிழல் துரத்தி வரவில்லை.

மகுடங்களின் போதைகளும்
சாபங்களின் சாயைகளும்
நீக்கிப் பார்த்தால்
வாழ்வென்ற சாலை
வெறிச்சோடித்தான்
கிடக்கிறது.

ஒரு துளி
விஷத்தால்
உயிர்பித்ததும்..
ஒரு துளி
கண்ணீரால்
மரணித்ததும்..
தாண்டி
யோசித்துப்
பார்க்க
எதுவுமில்லை.

காதலிகளால்
கவிதைகள்
என்றானதும்.‌..
கவிதைகளால்
காதலிகள்
உண்டானதும்..
தவிர
இங்கே
கிறுக்கிக் கொள்ளவும்
கிறுக்குக் கொள்ளவும்
எதுவுமில்லை.

சத்தியமாக
சொல்வதெனில்
இந்த காலி
கோப்பைக்கு
முன்னால்
நானும் காலியாகத்தான்
இருக்கிறேன்.

உண்மைதான்..
இக்கணத்தில்
என்னில்
நிரப்பிக் கொள்ளவும்
நிறைந்து நிற்கவும்
எதுவுமே
இல்லை.

உண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.

 

அவரை உங்களுக்கு தெரியுமா ‌…??

அவரை இதுவரை நான் பார்த்ததில்லை.

ஒரு நாள் அலைபேசியில் பேசினார். கட்சியில் இணைய வேண்டும் என்று சொன்னார். சரி . இணைந்து கொள்ளலாம். உங்களை நேரில் சந்திக்க வேண்டுமே என்றேன். இல்லை இல்லை.. எனக்கு வேலை இருக்கிறது.. நான் அதிகம் நேரில் வர முடியாது என்றார்.

சரி .உங்கள் அலைபேசி எண், புகைப்படம், உங்கள் முகவரி ஆகியவற்றை தாருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுப்பினர் அட்டை தருகிறோம் என்றேன்.

அனைத்தையும் அவர் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைத்தார். எனக்கும் முகநூலில் நட்பு கோரிக்கை அனுப்பினார். சரி. நம் கட்சியை சேர்ந்தவர் ஆயிற்றே‌.. இணைத்துக் கொள்வோம் என இணைத்துக் கொண்டேன். அதிலிருந்து என் முகநூல் பக்கங்கள் எல்லாம் அவரே நிறைய தொடங்கினார். நிறைய கட்சி பதிவுகள். அண்ணன் சீமான் புகைப்படங்கள். தலைவரைப் பற்றி நெகிழவைக்கும் பதிவுகள்.. பல கட்சி உறவுகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவுகள் என்றெல்லாம் அவர் மிக பிஸியாக இருந்தார்.

கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்தோம். அவர் அலுவலக வேலையாக வெளியூரில் இருப்பதாக சொன்னார். கட்சி போராட்டங்களில் தம்பிகள் கைதாகி இருக்கிறார்கள். கொஞ்சம் நேரில் வாருங்கள். அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்வோம் என்று அழைத்தோம். முக்கியமான பணியில் இருப்பதாக சொன்னார்.
கட்சி கட்டமைப்பு கூட்டத்திற்கு அழைத்தோம். அவர் வேலையாக இருப்பதாக சொன்னார். இருந்தும் முக்கிய பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்.
கொடியேற்ற நிகழ்வுக்கு அழைத்தோம். அவர் கொஞ்சம் பிஸியாக இருப்பதாக சொன்னார். இங்கே அருகில் இருக்கும் தஞ்சையில் நடக்கும் மாவீரர்தின கூட்டத்திற்கு அழைத்தோம். மழை வருவது போல இருக்கிறது. மழை தனக்கு ஒத்துக்கொள்ளாது என்று சொல்லிவிட்டார்.

ஆனால் முகநூல் வழியாக யாரோ கூட்டத்தை நேரலை செய்ய.. அதைப் பார்த்துவிட்டு.. மேடையை வேறு மாதிரி போட்டு இருக்கலாம்.. என்று விமர்சித்து ஒரு பதிவு போட்டார்.

இதன் நடுவில் கட்சி உறவுகள் பல பேருக்கு அவர் தோழமை யாகவும் மாறிப்போனார். முகம் தெரியாத முகநூல் பதிவாளர்களிடம் ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருங்கி நட்பு பாராட்டினார். யார் யாரையோ திட்டினார். அவ்வப்போது நடுநடுவே அண்ணன் சீமான் பற்றி இரண்டு இரண்டு பதிவுகள்.

கட்சியைப் பற்றி யாரேனும் விமர்சித்து பதிவு போட்டால் முதல் ஆளாக என்ன நடந்தது என்று இவராக போய் கேட்பார். விமர்சித்து பதிவு போட்டவர் ஏதேனும் குறைகள் சொல்ல.. ஆமாம்.. ஆமாம்.. அப்படித்தான். இங்கு எல்லாம் தவறுதான் என்று பதில் சொல்வார். விமர்சித்தவருக்கு இவர் யார் என்று தெரியாது. இவருக்கும் அவரை யார் என்று புரியாது. ஆனால் அந்தப் பதிவை படித்து பார்ப்பவர்களுக்கு முகம் காட்டாத நமது ஆளும் (?) கட்சியில் முக்கியமான ஆள் என்று நினைக்கும் அளவிற்கு கேள்விகளும் பதிலும் அமைந்திருக்கும்.

ஒரு நாள் அவராகவே எங்களுக்கு அழைத்தார். கட்சி பதாகையில் தனது புகைப்படம் இல்லை என்று கோபப்பட்டார். யார் பதாகை வைத்தார்களோ அவர்கள் படம் மட்டும்தான் இருக்கிறது.. இது எவ்வளவு பெரிய அநீதி என்றெல்லாம் பொங்கினார். கொஞ்சம் நேரில் வாருங்கள். பேசுவோம் என்றேன். தற்போது வெளியூரில் இருப்பதால் பிறகு வருகிறேன் என்று கோபத்தோடு சொல்லிவிட்டு அலைபேசியை பேசி வைத்து விட்டார்.

மீண்டும் ஒரு நாள் எடுத்தார். கட்சிப் பொறுப்பாளர்கள் தங்கள் சாதிப் பெயரை பின்னால் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் யார் எனத் தெரியும் என்றார். நேரில் வாருங்கள் .விவாதிப்போம் .என்றேன் . சென்னையில் இருந்து வந்தவுடன் குலம், குடி, இனக்குழு இவற்றைப் பற்றி எல்லாம் உங்களோடு பேசுகிறேன் என்றார். சரி வாருங்கள் என்றேன் .

அன்று இரவே என்னை தமிழர் இல்லை என்று முகநூலில் கடும் கோபத்தோடு பதிவு போட்டு அதற்கு ஆதாரங்கள் (?) கிடைத்திருப்பதாக எழுதினார்.

இதன் நடுவே கதிராமங்கலம் போராட்டத்திற்காக அழைத்தேன். நீங்கள் பெரியாரிய வாதியா என்று கேள்வி கேட்டார். அதைப் பிறகு பேசிக் கொள்ளலாம். அவசியம் நாளை நடக்க இருக்கும் போராட்டத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தேன். அவசியம் அடுத்த வாரத்தில் நேரில் வருகிறேன் எனச் சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்து விட்டார்.

ஒருநாள் அண்ணன் சீமான் எங்கள் ஊருக்கு வந்தார். அண்ணன் சீமான் வருகிறார். வந்து பாருங்கள் என்று இவருக்கு அழைப்பு விடுத்தோம். இவரும் அண்ணன் சீமானோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். சரி நேரில் வாருங்கள். உங்களை இதுவரையில் பார்த்ததில்லை. நாங்களும் அறிமுகமாகி கொண்டு அண்ணன் சீமானோடு உங்களை அறிமுகம் செய்வதாக சொன்னோம். அப்போதும் வரவில்லை. பிறகு கேட்டதற்கு தனக்கு உடல்நிலை சரியில்லை.. அதனால் வர முடியவில்லை என்றார்.

அண்ணன் சீமான் கூட்டத்திற்கு செல்லும் அவசரத்தில் சில தம்பிகளோடு புகைப்படங்கள் எடுக்க முடியாத சூழல். அந்த தம்பிகளும் நிலைமையை புரிந்து கொண்டு அமைதியாக இருக்க.. இதனை எப்படியோ கேள்விப்பட்ட இவர் கட்சியில் சர்வாதிகாரம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டார்.

அந்த பதிவில் யார் யாரோ வந்து பேசினார்கள். எல்லோரையும் பெரியப்பா சித்தப்பா அண்ணா மாமன் மச்சான் பங்காளி அத்தாச்சி என்றெல்லாம் இவர் உறவுப் பெயர் வைத்து உரிமையோடு அழைத்துக் கொண்டிருந்தார். மேலும் அந்த பதிவில் இவரே கேள்வி கேட்டு, பதில் சொல்லி.. கட்சிப் பொறுப்பாளர்களை எல்லாம் ஏக வசனத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

அதிலிருந்து கட்சியைப் பற்றி ஏக வசனத்தில் திட்டி பல்வேறு பதிவுகள்.
பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் பணிகளுக்காக அவரை அழைத்தோம். தனக்கு காலில் சுளுக்கு எனவும்.. சுளுக்கு சரியான பிறகு பிரச்சாரத்திற்கு வருவதாகவும் சொன்னார்.

நம் கட்சி வாங்கிய ஓட்டுக்களை பார்த்துவிட்டு.. திட்டமிட்டு‌ உழைத்திருந்தால் இன்னும் ஓட்டு வாங்கி இருக்கலாம் என்றெல்லாம் அறிவுரை கூறி ஒரு பெரிய பதிவு போட்டார். அவர் போட்டுக்கொடுத்த எந்தத் திட்டத்தையும்(?) பொறுப்பாளர்கள் மதிக்கவில்லை என்று சாடினார்.

அவரது பதிவுகளை எல்லாம் எதிர்க்கட்சியினர் மாற்றுக் கட்சியினர் நம்மீது வேறுபாடு கொண்டோர் என அனைவரும் பரப்ப… பதிவு மேல் பதிவாக போட்டு பரபரப்பானார். இதன் நடுவே வேலூர் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யப் போகிறோம் வாருங்கள் என்று அழைத்தோம். அடுத்த முறை(?) கண்டிப்பாக வருகிறேன் என்று சொன்னார்.

ஒருநாள் வெளியூரிலிருந்து நமது கட்சி தம்பி ஒருவர் எங்களுக்கு அழைத்தார். நமது முகநூல் போராளி தன்னிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு திருப்பித் தரவில்லை வாங்கி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்

எங்களுக்கெல்லாம் ஒரே ஆர்வம்.அவரை நேரில் பார்த்து இருக்கிறீர்களா என்று அந்த வெளியூர் தம்பியிடம் கேட்டோம். இல்லை முகநூல் வழியாக தான் பழக்கம். இன்டர் நெட் பேங்க் மூலமாகத்தான் பணம் அனுப்பினேன் என்றார்.

அது குறித்து அவரிடம் கேட்க அலைபேசியில் தொடர்பு கொண்டபோது மிகவும் கோபப்பட்டு பேசினார். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றார். உள்கட்சி கட்டமைப்பு போதாது என்றார். குழு அரசியல் இருக்கிறது என்றார். சரி அந்த தம்பியின் பணம். .. என தயங்கியவாறே கேட்டதற்கு.. சட்டென அலைபேசி துண்டித்துவிட்டார்.

மறுநாள் கட்சியின் உள்கட்டமைப்பு இல்லை ஜனநாயகம் இல்லை.. பாவிகளா நீங்களெல்லாம் நன்றாக இருப்பீர்களா என்றெல்லாம் சாபம் விட்டு பதிவு போட்டுவிட்டு கட்சியில் இருந்து விலகப்போவதாக முகநூலில் அறிவித்தார். யார் யாரோ அப்பதிவில் வந்து நீங்கள் கட்சியை விட்டு விலகினால் கட்சியை யார் காப்பாற்றுவது என்றெல்லாம் கதறினார்கள். கட்சிக்கு கடுமையாக உழைத்த தங்களுக்கே இந்த நிலையா என ஆளாளுக்கு கதற.. முகநூலே அன்று கண்ணீரால் மிதந்தது.

கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு தம்பி என்னிடத்தில் அமைதியாய் கேட்டான்.

யார் அண்ணா அவர்…??

அவன் கேள்விக்கு என்னிடத்திலும் பதில் இல்லை.

தெரியவில்லை என்றேன் அமைதியாக.

தம்பி விசித்திரமாக பார்த்தான்.

உண்மையில் எனக்கும் அவர் யார் என்று தெரியாது.

உங்களுக்கு யாராவது அவரைப் பற்றி தெரியுமா..???

காணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.

 

வாழ்வென்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப வரைந்து கொள்ளும் ஓவியமா அல்லது எதிர்பாரா மின்மையையே சூட்சமமாக கொண்டு எதனாலோ கிறுக்கப்படும் கிறுக்கல் தான் வாழ்க்கையா.. என்று நினைக்கும்போது இரண்டும் தான் என நினைக்கத் தோன்றுகிறது.

இந்த வாழ்வு என்பது நிரந்தரம்.. ஒரு பாதுகாக்கப்பட்ட பெட்டியில் நாமும் நமது குடும்பத்தினரும் பத்திரமாக இருக்கிறோம் என்றெல்லாம் பலர் நினைத்துக் கொண்டிருப்பதால் தான்.. சின்னஞ்சிறு விதியின் பிசகில் கூட மானிட வாழ்வு பலருக்கு நரகமாகி விடுகிறது.

ஆனாலும் மாற்றி எழுதப்பட்ட ஒரு வாழ்வின் சோக அத்தியாயத்தை இயல்பாக எதிர் கொண்டவர்களும் இவ்வுலகத்தில் இருக்கிறார்கள். நோய்மையின் காரணத்தால் வீழ்ச்சியுற்ற அவல வாழ்வின் கதையை நாம் ஏராளமான திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதுவும் புற்றுநோயைப் பற்றி தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ஆராய்ச்சியே நடந்திருக்கிறது என்கிற அளவிற்கு நிறைய புற்றுநோய் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன.

அதில் ஒரு பிரபலமான திரைப்படம் வாழ்வே மாயம். படத்தின் இறுதிக் காட்சிகள் இருமி இருமி ரத்த வாந்தி எடுத்து கமல் படிப்படியாக இறக்கும்போது… மிடறு விழுங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போகுதம்மா என்று கமல் பாடும்போது புற்றுநோய் எதிரிக்கு கூட வந்து விடக்கூடாது என்று அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால் இன்றைய வாழ்க்கை அப்படி இல்லை.குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வருவது என்பது மிக சாதாரண ஒன்றாக மாறிவிட்ட உலகில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். எனது குடும்பத்தில் எனது பெரியப்பா ஆசிரியர் ச. இராசதுரை அவர்களுக்கு புற்றுநோய் வந்ததை என் கண்ணால் கண்டேன். எனது தாத்தாவிற்கும் புற்று நோய்த் தொற்று இருந்ததாகச் சொல்கிறார்கள். எனவே புற்றுநோய் அபாயம் எங்கள் குடும்பத்தின் மீது ஒரு கரும் நிழலாக சுழன்று கொண்டிருக்கிறது.

என் வீட்டின் எதிரே இருக்கின்ற பெட்டி கடை வைத்திருக்கிற பெரியவருக்கு புற்றுநோய். வயிற்றில் ஏதோ கட்டி என்று சொன்னார்கள். அது புற்று நோயாக இருக்கக்கூடும் என பயாப்சி எடுக்க சொன்னார்கள். ஆனால் பெரியவர் மறுத்துவிட்டார். அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.வலிக்கு மட்டும் மாத்திரை கொடுங்கள் என்று வாங்கி விட்டு வந்து விட்டார். தினந்தோறும் அந்தப் பெரியவர் கடையைத் திறந்து வியாபாரம் செய்து சாதாரணமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வருகிறார். அவரிடம் இது குறித்து கேட்டபோது.. அதை ஏன் சார் நோண்டுவானேன்.. அது இருந்து விட்டு போகட்டும்.. இல்லை என்றால் மட்டும் நான் நூறு வயது வாழ்ந்துவிட போகிறேனா.. போங்க சார்.. என்று சிரித்துவிட்டு அவர் கடந்து விடுகிறார்.

உண்மைதான். அச்சமும், எதிர்கால இருப்பு பற்றிய எண்ணங்களுமே உண்மையான நோய் என உணரமுடிகிறது. ஒரு நோய்மையை நேருக்கு நேராக எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு அதை வெல்லும் எத்தனையோ நபர்கள் சாதாரண வாழ்வில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இதயத்தை திருடாதே திரைப்படத்தில் கதாநாயகிக்கு இதயத்தில் பழுது. அவளுக்கு ஏற்பட்டிருக்கிற நோயை குறித்து கதாநாயகன் கலங்கி நிற்கும் போது.. எதற்கு நீ கவலைப்படுகிறாய்.. இதோ என் தங்கை அவள் சாகப் போகிறாள்.. என் பாட்டி சாகப் போகிறாள் என் அம்மா சாகப் போகிறாள்.. இதோ விளையாடிக் கொண்டிருக்கும் என் குட்டி தங்கை சாகப் போகிறாள்.. நானும் சாகப்போகிறேன் அவ்வளவுதான் என மிக எளிமையாக கூறும் ஒரு வசனம் ஒன்று உண்டு.

அப்படி மரணம் விளைவிக்கக்கூடிய நோய்மையை அதன் போக்கில் எதிர்கொண்டு வலி மிகுந்த வாழ்வின் அவலத்தை கூட இயல்பாக சந்திக்க முனைகிற இருவரைப் பற்றிய ஒரு அசத்தலான காதல் கதைதான் இக்ஃலு.

இன்றைய நவீன வாழ்வில் இணையம் வழி பொழுதுபோக்குகள் மிகுந்திருக்கின்றன ‌. இணையம் வழி திரைப்படங்களும் தமிழிலும் வெளிவரத் தொடங்கிவிட்டன. திரையரங்குகளில் காண இயலாத இணையம் வழி மட்டுமே காண முடிகிற ஒரு திரைப்படம் தான் இது.

முதலில் இத்திரைப்படத்தைப் பற்றி என்னிடம் சொன்ன என் மைத்துனர் பாக்கியராசன் கட்டாயம் பாருங்க தல என்று அவசர படுத்தினார். இது ஒரு வெப் மூவி என்பதால் நாடகத்தனமாக இருக்குமோ என்று எனக்கு ஒரு அச்சம். ஏற்கனவே நெட் பிளிக்ஸில் lust stories போன்ற படங்களைப் பார்த்து இருந்தாலும்.. தமிழில் இது போன்ற முயற்சிகள் புதிதானவை என்பதால் அணுக எனக்கு ஒரு தயக்கம். பிறகு அன்று மாலையே நாம் தமிழர் மாணவர் பாசறையின் குடந்தை செயலாளர் தம்பி விக்கி தமிழனும் இத்திரைப்படத்தைப் பற்றி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா என்று என்னை ஆர்வப் படுத்தினான். இத்திரைப்படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான என் தம்பி அருண் “உன் தம்பி ஒரு படத் தயாரிப்பில் ஈடுபட்டு அந்த படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை அண்ணனாகிய நீ பார்க்கவில்லை” என்றாலெல்லாம் என்னை நோக்கி ஏற்கனவே குற்றம் சாட்டி என்னை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி இருந்தான்.

அதற்காகவே வந்த சேர்ந்தது ஒரு அடர் மழை பெய்த மாலை.

மிக சாதாரணமாக எடை போட்டு நான் பார்க்கத் தொடங்கிய அத் திரைப்படம் முடியும்போது என்னை விழுங்கி இருந்தது. உண்மையில் பிரமித்துப் போனேன். A Feel Good திரைப்படம்.

ஒரு திரையரங்கில் நாம் சாதாரணமாகக் காண நேரிடும் ஒரு திரைப்படத்திற்கு தேவைப்படுகின்ற உழைப்பு பொருளாதாரம் நேர்த்தி என அனைத்தும் இவ்வகை திரைப்படங்களுக்கும் தேவைப்படுகின்றன என்பதை இக்‌ஃலு வை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

நேர்த்தியான கதை. சுவாரசியமான வசனங்கள். நோயைப் பற்றிய திரைப்படமாக இருந்தாலும் கொஞ்சம் கூட அவலச் சுவை தட்டாத திரைமொழி. கதாபாத்திரங்களுக்கு மிகுந்த நேர்மை செய்திருக்கிற நடிகர்கள். சின்ன சின்ன விஷயங்களிலும் செலுத்தி இருக்கிற நுட்பமான கவனம் என அனைத்தும் சேர்ந்து இத்திரைப்படத்தை காண்பதற்கு தகுந்த ஒரு மாபெரும் அனுபவமாக மாற்றி விடுகின்றன.

குழந்தை கதாபாத்திரம் முதல் வயதானவர்கள் வரை யாரும் இயல்பை மீறி நடிக்காதது மிகுந்த ஆறுதல். கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு.

கதையை காட்சி காட்சியாக இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை. ஒரு நாள் ஒரு பொழுதில் நேரத்தை ஒதுக்கி இத்திரைப்படத்தை அவசியம் காணுங்கள். இந்த வாழ்வின் மீதான உங்கள் கண்ணோட்டத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உங்களை கண் கலங்க வைக்கவும், புன்னகைக்க வைக்கவும் உகந்த ஒரு மனநிலையை இக்ஃலு உங்களில் ஏற்படுத்தும் என்பது உறுதி. படத்தின் இறுதிக் காட்சி ஒரு நிமிடம் உங்களை உலுக்கி திகைக்க வைத்து உறையவைக்கும் அனுபவத்தை உடையது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் பரத்திடம் இத்திரைப்படம் கண்ட இரவில் பிரமிப்பு நீங்காமல் பேசினேன். பார்வையாளர்களை தன் வசப்படுத்தும் ஒரு கதை சொல்லும் முறை உங்களுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது. மாபெரும் படைப்பாளிகள் கூட ஏங்குகின்ற மேஜிக் உங்களுக்கு முதல் படத்திலேயே வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள் என்றேன்.

நன்றி சார் என்றார் எளிமையாக.

அந்த இளைஞனை கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். சமீபகால திரை உலக நம்பிக்கை இக்ஃலு திரைப்பட இயக்குனர் பரத் நான் மிகைப்படுத்தாமல் முன்மொழிகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

ஒரு நல்ல திரைப்படத்தை லாப நோக்கமின்றி செறிவுடன் தயாரித்திருக்கிற drumstick production குழுவினருக்கும்.. அக்குழுவில் இடம் பெற்றிருக்கிற எனது ஆருயிர் இளவல் அருணிற்கும் எனது வாழ்த்துக்கள்.

இத்திரைப்படம் zee5 ஆப் பில் காணக் கிடைக்கிறது. நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர் ஆக இருந்தால்.. ஏர்டெல் டிவி என்கிற ஆப் பிலும் காணக் கிடைக்கிறது. அவசியம் பாருங்கள்.

நிறைய இது போன்ற முயற்சிகளை செய்யுங்க அருண் சார்..

 

.

அண்ணன் உதயகுமாருக்கு..

பாசமிக்க. அண்ணனுக்கு.நேசத்துடன்

சில வார்த்தைகள்..

கடந்த சில நாட்களாக மதிப்பிற்குரிய அண்ணன் எஸ்.பி உதயகுமாருக்கு.. நமது மீது ஏதோ கோபம். சரி நமது அண்ணன் தானே போகட்டும் என்று கடந்து போக பார்த்தால்..

இன்று நம்மை பாசிசம்.. கம்போடியாயிசம் என்றெல்லாம் திட்டி இருக்கிறார். அட இது என்ன திராவிட வாசனை என்று யோசிக்கும்போது..
சரி கனிமொழிக்கு ஓட்டு கேட்டவர் ஆச்சே.. சகவாச தோஷம் போல.. என்று நினைத்து விட்டு விடலாம் என்று பார்த்தால்..

ஏன் நாம் தமிழர் மீது அவ்வளவு காண்டு.. சவுண்ட் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே … என்று யோசித்துப் பார்த்தால்..

அண்ணனின் வரலாறு அப்படி.

இதே நம் அண்ணன் தான் இன்று காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு ஆதரவாக செயல்படும் இந்துத்துவ ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொண்டு தொப்பி போட்டுக் கொண்டு எல்லாம் திரிந்தார். தொப்பி பொருந்தவில்லை. பிறகு வெளியே வந்து பச்சைத் தமிழ் தேசியம் என்ற புத்தகத்தை எழுதினார். அதே பெயரில் புதுக் கட்சி எல்லாம் தொடங்கினார். பிறகு அண்ணன் சட்டமன்ற தேர்தலில் தனியே தனித்து நின்றார். சில நாட்கள் முகவரியை தேடும் அளவிற்கு முடங்கிப் போனார். பிறகு திடீரென வந்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிறகு தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை ஆதரித்து வாக்குகள் கேட்டார்.

ஆனால் இவை எதையுமே நாம் கேள்வி கேட்டதில்லை. அண்ணன் சீமானோ,நாம் தமிழர் கட்சியினரோ இது குறித்து எதுவும் எழுதியதில்லை ‌. விமர்சிக்க வில்லை. அது அவரது விருப்பம். அவர் தலை. அவர் தொப்பி.தொப்பி தன் தலையில் சரியாக பொருந்துகிறதா இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். அது பற்றி நாம் கேள்வி கேட்க என்ன இருக்கிறது..??

அதேபோல நாங்கள் எங்கே நிற்க வேண்டும் என்பது நாங்கள் முடிவு செய்ய வேண்டும். என்றாவது நாங்கள் அண்ணன் உதயகுமாரோடு நிற்க போகிறோம் என்று அறிவித்திருக்கிறோமா.. எந்த கட்சியாவது அழைத்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள், கூட்டணி வையுங்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறோமா..

தனித்து நிற்பது என்பது எங்கள் அமைப்பின் தொடக்கத்திலேயே நாங்கள் இறுதியாக உறுதியாக எடுத்த முடிவு. ஏனெனில் எங்களுக்கு முன்னவர்களாக இருந்தவர்களின் வரலாற்றுப் பிழைகளை பார்த்து வலி தாங்கமுடியாமல் பிறந்தவர்கள் நாங்கள்.
மீண்டும் அதே பிழையை இனி ஒரு போதும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்ற புலிக் கூட்டம் இது.

சரி. அதனால் அண்ணன் உதயகுமாருக்கு என்ன பிரச்சனை என்று பார்த்தால்… அவர் செய்யப் போகின்ற அரசியல் முயற்சிகளுக்கு நம்மை அழைக்க மாட்டாராம்.

மிகவும் நன்றி. அதற்கு ஏன் திட்டுகின்றீர்கள்.

முதலில் அண்ணன் அணு உலை போராட்டம் மூலமாகத்தான் அறிமுகம். அணுவுலை போராட்டம் தாண்டி அண்ணன் உதயகுமார் உக்கிரமாக பங்கேற்ற இதர போராட்டங்களின் விவரங்கள் ‌.. ஏதேனும் இருந்தால் எவரேனும் சொல்லுங்கள். 10 பேரில் அண்ணனும் ஒருவராக இருந்து போராடுகின்ற சம்பிரதாய போராட்டங்களை இந்தப் பட்டியலில் கொண்டு வந்து சங்கடப் படுத்தாதீர்கள்.

ஆனால் சீமான் அண்ணன் அப்படி அல்ல.
அணு உலை தொடங்கி ஹைட்ரோகார்பன் வரையிலான போராட்டங்களில் பங்கேற்று தமிழ்நாடு முழுக்க வழக்குகள் வாங்கி நீதிமன்ற படிகள் ஏறி கொண்டிருப்பவர். ஒவ்வொரு போராட்டத்தையும் தனித்து நடத்தியிருக்கிறார். தேவைப்படும் பட்சத்தில் பிற அமைப்புகளின் மேடைகளில் ஏறி முழங்கியிருக்கிறார்.

சாதாரண உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்தில் இருந்து.. பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய மேடைகளில் ஒரு இளம் பேச்சாளனாக வளர்ந்து.. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று.. ஈழப்போராட்டத்தின் உச்சத்தில் ஐந்து முறை நெடுநாள் சிறைபட்டு..அதில் 3 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைபட்டு.. தானே ஒரு அமைப்பினை உருவாக்கி.. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு.. 1.1 சதவீத வாக்குகள் பெற்று.. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அது ஏறக்குறைய 4 சதவீதமாக உயர்ந்து இன்று 16 1/2 லட்சம் வாக்காளர்களை ஈர்க்கின்ற ஒரு தலைவராக வளர்வது என்பது அண்ணன் உதயகுமார் போன்றவர்களுக்கெல்லாம் நம்பிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

என்னவோ அண்ணனுக்கு எங்களது வளர்ச்சி சங்கடமாக இருக்கிறது. திமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்க தயாராகிவிட்ட அவரது கண்களுக்கு நாங்கள் சரியாக தெரிந்தால் தான் ஆபத்து.

அத்தோடு இல்லாமல் பாசிசம், நாசிசம் என திராவிடத்தின்‌ அதே பழைய பஞ்சாங்க கதையை அண்ணன் உதயகுமாரும் பேசுவது காலக் கொடுமையாக இருக்கிறது.

எப்போதும் அண்ணன் சீமான் உதயகுமார் போன்றவர்களை.. அவர்களது அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களைப் பற்றி பேசுவதே இல்லை. நாங்கள் யாராவது பேசினால்.. உனக்கு வேறு வேலை இல்லையா என ஏசுவார்.

உண்மையில் அண்ணன் உதயகுமாருக்கு தான் வேறு வேலை இல்லை போலும். முகநூலில் பதிவுகள் போட்டு கொண்டு..சீமான் சரியில்லை அவர் சரி இல்லை, இவர் சரியில்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.

எங்கள் முதுகை அவர் தேவையில்லாமல் சுரண்டுவது எங்களுக்குப் புரிகிறது. அது ஒருவகையில் எங்களுக்கு சுகமாக இருந்தாலும்.. அண்ணனின் விரல்கள் இதற்காகவா பயன்பட வேண்டும் .. என்று மனம் வருந்துகிறது.

உங்களால் முடிந்ததை செய்யுங்கள் அண்ணே..

சுழித்துக் கொண்டோடும் காலநதியில் நீந்த முடியாமல் திணறுபவை கரை ஒதுங்க தான் செய்யும். வல்லமை மிக்கவை நீந்திக் கடக்க தான் செய்யும்.

கரை ஒதுங்கிக் கிடக்கும் நீங்கள்.. கத்தி கூப்பாடு போடுவதால் எங்களது நீந்தும் வேகம் குறைய போவதில்லை.

பிறகு ஏன் தேவையற்ற கூச்சல்..??

மணி செந்தில்.

காக்கப்படட்டும் காஷ்மீரம்..

கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் காஷ்மீர் ஸ்ரீநகருக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த வாஜ்பாய் அப்போது ஒரு கவிதையை எழுதினார்.

வசந்தம் விரைவில் திரும்பும்.
அழகிய பள்ளத்தாக்கில்
மீண்டும் மலர்கள் மலரும்.
நைட்டிங்கேல் பறவைகள் திரும்பும்..
மீண்டும் இசைத்துக் கொண்டே..

(Spring bill return to the beautiful valley Soon. The flowers will bloom again and the nightingales will return, chirping..)

ஆனால் கடந்த 5 8 2019 அன்று பாராளுமன்றத்தில் பாஜகவின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் அறிவிப்பு எப்போதும் காஷ்மீரில் அமைதி திரும்பாது என்பதை உறுதி செய்திருக்கிறது.

வரலாற்றின் ரீதியாக காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் துரோகங்களை சந்தித்து வருகிறார்கள். காஷ்மீர் இந்துக்கள் முஸ்லிம்கள் புத்த மதத்தவர் என மூன்று மதங்களை சேர்ந்த ஒரு தேசிய இன மக்கள் வாழ்கின்ற நிலம். இதன் மொத்தப் பரப்பளவு 2,22,870 சதுர கிலோமீட்டர்கள். இதில் பாகிஸ்தான் வசம் உள்ள ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிற நிலத்தின் பரப்பு 78114 சதுர கிலோமீட்டர்கள். மீதம் உள்ள நிலம் இந்தியாவின் ஆளுகைக்கு கீழே இருக்கிறது. காஷ்மீரில் ஏறக்குறைய 70 சதவீதத்தினர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் இந்து மற்றும் புத்த மதத்தை தழுவி வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி.. இந்துக்களாக இருந்தாலும் சரி.. தாங்கள் காஷ்மீரிகள் என தனித்த தேசியமாக அழைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்திய விடுதலையின் போது காஷ்மீர் இந்து மதத்தை சேர்ந்த ஹரி சிங் டோக்ரா என்கின்ற மன்னரால் ஆளப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் இந்தியா இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டபோது காஷ்மீர் எந்தப் பக்கமும் நினையாமல் தனித்து தன் தனித்துவத்தை காப்பாற்றிக் கொண்டு தனி நாடாக விளங்கியது.

அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர் ஹரி சிங் தான் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையப் போவதில்லை என அறிவித்து இருந்தார். ஆனால் இந்தியாவோ காஷ்மீரை எப்படியாவது தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டுமென தொடர்ச்சியான பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு காஷ்மீர் மாநிலத்தில் பிறந்தவர். தான் பிறந்த மாநிலமான காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதையோ தனி நாடாக இயங்குவதை யோ அவர் விரும்பவில்லை.

அக்காலகட்டத்தில் காஷ்மீர் நிலத்தின் மாபெரும் மக்கள் தலைவராக விளங்கிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா மன்னராட்சி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி கொண்டிருந்தார். அவரும் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைவதை விரும்பாமல் சுதந்திர நாடாக இருப்பதையே தனது முழக்கமாக முன்வைத்து போராடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் காஷ்மீர் மீதான படையெடுப்பைத் தொடங்கியபோது அந்நிலத்தை ஆண்டுகொண்டிருந்த இந்து மன்னர் ஹரி சிங் இந்தியாவிடம் உதவி கேட்டார். அப்போது இந்திய அரசு மன்னர் ஹரி சிங் உடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தை ஷேக் அப்துல்லாவும் ஏற்றுக்கொள்ள.. இடைக்கால அரசு அமைக்க ஷேக் அப்துல்லாவை இந்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி பாதுகாப்பு தகவல் தொடர்பு அயல் நாட்டு தூதரக உறவு ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே இந்திய மத்திய அரசு வைத்துக் கொள்ளவும் ஏனைய அதிகாரத்தை காஷ்மீர் அரசு வைத்துக் கொள்ளவும் போர்ச்சூழல் நீங்கிய பின்னர் காஷ்மீரத்து மக்கள் விருப்பப்படி இறுதி முடிவெடுக்க ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படவும் ஷரத்துகள் எழுதப்பட்டு அமலுக்கு வந்தன.

இந்திய அரசு இந்த நொடி வரை காஷ்மீரத்து மக்களின் விருப்பப்படி இறுதி முடிவு எடுக்காமல் காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமித்து இந்தியாவின் ஒரு சிறப்பு மாநிலமாக வைத்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் இந்த வரலாற்று துரோகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் ஷேக் அப்துல்லா நேரு இடையிலான நட்பை பயன்படுத்தி இந்திய அரசு காஷ்மீரை எப்படியாவது வளைத்துக் கொள்ள பல முயற்சிகள் எடுத்தது. அதற்கு சம்மதிக்காத ஷேக் அப்துல்லாவின் அமைச்சரவையில் பல குழப்பங்களை தனது உளவுத்துறை மூலம் ஏற்படுத்திய இந்திய அரசு இறுதியில் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் நாள் ஷேக் அப்துல்லாவையே கைது செய்தது.

சிறிது சிறிதாக காஷ்மீர் அரசின் அதிகாரங்களை இந்திய அரசு பறிக்க தொடங்கியது. காஷ்மீர் மாநிலத்திற்கு என தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை ஏற்படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1963 ஆவுது வருடம் இந்திய அரசியலமைப்பின் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 16 ஆவது திருத்தத்தின் படி காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது.

இவை அனைத்தும் மன்னர் ஹரி சிங் கோடு இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்த ஷரத்துகள் எதிரானவை மட்டுமல்ல அந்த ஒப்பந்தத்தையே இல்லாமல் செய்வதற்கான தன்மைகளைக் கொண்டவை.

1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது இரண்டு அரசுகளும் காஷ்மீர் மக்களின் கருத்துக்களை கேட்காமல் சிம்லாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு எல்லைக் கோடு வரைந்து கொண்டன. காஷ்மீர் பிரச்சனை பொறுத்து மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் பேசித் தீர்த்துக் கொள்வது எனவும் முடிவு செய்து கொண்டன.

கடந்த 1975 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தொடர்ச்சியாக போராடி வந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா ஏற்றுக்கொண்டார். ஆனாலும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி வழங்கக்கூடிய அரசியல் சட்டப் பிரிவு 370 தொடர்ந்து அமலில் இருக்கும் என்று இந்திய அரசு உறுதி அளித்தது.

இந்திய அரசின் தொடர்ச்சியான அதிகார அழுத்தங்களாலும், இந்தியா பாகிஸ்தான் என்ற இது வல்லாதிக்க நாடுகளின் அரசியல் விளையாட்டுகளாலும் படிப்படியாக உரிமைகளை இழந்த காஷ்மீர் நிலத்து மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக முறையிலும் ஆயுதங்கள் தாங்கிய முறையிலும் போராடிவருகிறார்கள். பாகிஸ்தான் இந்தியாவின் ஆளுகைக்குள் இருக்கின்ற ஜம்மு காஷ்மீரில் நடக்கின்ற தீவிரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது. அதேபோல இந்தியா பாகிஸ்தான் ஆளுகைக்குள் இருக்கின்ற ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகின்ற பகுதிகளில் நடக்கின்ற தாக்குதல்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது .

எதுவாயினும் இந்த வல்லாதிக்க அரசுகளின் சிக்கிக்கொண்டு தங்களது இறையாண்மை மற்றும் உரிமைகளை இழந்து காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியாக போராடி கொண்டு வருகிறார்கள். பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் மூலமாக காஷ்மீர் நிலத்தை தொடர்ச்சியாக பதட்டம் தணியாத பகுதியாக இந்திய அரசு பராமரித்து வருகிறது. எந்த நொடியிலும் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் சுட்டுக் கொல்லப்படலாம் என்கின்ற துயர நிலையில் மிகுந்த அச்ச சூழ்நிலைகளுக்கு மத்தியில் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தனக்கு கிடைத்த மாபெரும் பெரும்பான்மையை சாதகமாக வைத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி பல ஜனநாயக விரோத சட்டங்களை எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றி வருகிறது. இந்துத்துவ கோட்பாட்டின் நீண்டகால வேட்கையான காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமித்தல் என்கின்ற விருப்பத்தை தனக்கு கிடைத்திருக்கும் மாபெரும் பெருமையை வைத்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறது.

அதன் அடிப்படையில்தான் கடந்த 5 8 2019 அன்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கக்கூடிய பிரிவு 370 யை நீக்குவதற்கு அரசு பரிந்துரை செய்யும் என அறிவித்து இருக்கிறார்.

இதன்படி காஷ்மீர் அரசு இந்தியாவின் சிறப்பு மாநிலம் என்கின்ற அந்தஸ்தை இழக்கும். மக்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச உரிமைகளைக் கூட இழந்து காஷ்மீர் தேசிய இனத்திற்கான இருக்கின்ற இறையாண்மை உரிமையைக்கூட காஷ்மீர் மக்கள் இழப்பார்கள். மக்களின் விருப்பம் என்கின்ற ஜனநாயக விழுமியம் அழித்தொழிக்கப்பட்டு இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒரு மாநிலமாக காஷ்மீர் மாற்றப்படும்.

இதற்கான தயாரிப்பினை பாரதிய ஜனதா கட்சி ஜூலை இறுதி வாரத்தில் இருந்து செய்யத் தொடங்கிவிட்டது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் பாருக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இணையம் தகவல் தொடர்பு அலைபேசி தொடர்பு என அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் ஒரு அறிவிக்கப்படாத பெரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்தாலும் காஷ்மீர் நிலத்தில் இன்று ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழ்நிலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமே பொறுப்பாளிகள் ஆவார்கள்.

அன்று நைட்டிங்கேல் பறவைகள் இசையோடு திரும்பும் என கவிதை எழுதிய வாஜ்பாயின் பாரதிய ஜனதா அரசு தான் இன்று மனிதர்கள் கூட வாழ முடியாத நிலமாக காஷ்மீரை மாற்றி விட்டது என்பதுதான் துயர்நிலை.

தேர்தலில் கிடைத்திருக்கிற பெரும்பான்மையை வைத்துக்கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற மாபெரும் அதிகார வல்லாதிக்க உணர்வினை தான் பாரதிய ஜனதா கட்சியின் அரசு கொண்டிருக்கிறது என்பதைத்தான் காஷ்மீரத்து இன்றைய நிலைமை காட்டுகிறது.

இச்சமயத்தில் நமக்கு நமது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ.

எந்த வல்லாதிக்கமும் ஜனநாயக வேட்கை உடைய மக்கள் திரளால் எழுதப்படும் என்பதைத்தான் வரலாற்றின் பக்கங்கள் தொடர்ச்சியாக நமக்கு காட்டி வருகின்றன.

காஷ்மீர் நிலத்து மக்களின் துயர் நீங்க தமிழ் தேசிய இன மக்களாகிய நாமும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.

காஷ்மீர் காக்கப்படட்டும்.

மணி செந்தில்

சூனா. பானா வின் பஞ்சாயத்து..

 

சமீபத்தில் காவிரி தொலைக்காட்சியில் பேட்டியாளர் மதன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதது குறித்து சுபவீ இன்று விளக்கம் என்ற பெயரில் வழக்கம் போல் வழ வழா கொழ கொழா பதிவு ஒன்றினை இட்டிருக்கிறார் . வழுக்கி விழந்ததை கூட இப்படி எண்ணை தடவி காட்டுவதற்கு சுப‌.வீயால் தான் முடியும்.

அது போகட்டும். பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுபவீ தடுமாறியது அவரது அரசியல் தோல்வி.
அத்திவரதரை பார்க்க ஏன் திமுக தலைவர்களின் குடும்பங்கள் படையெடுத்தார்கள் என்கிற கேள்விக்கும், தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் திமுக ஆதரித்த பித்தலாட்டத்தை குறித்த கேள்விக்கும் சுப வீயால் பதில் சொல்ல முடியவில்லை.

அங்கே பதில் சொல்லாமல் விழித்து விட்டு.. சமாளிபிகேஷன் செய்து ஒரு பதிவை போட்டிருப்பது என்பது ஆகப்பெரும் காமெடி.

தான் தொழுது கொண்டிருக்கிற… தனக்கு கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிற திமுகவின் தலைமை கொஞ்சம் கூட வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கெல்லாம்.. சம்பந்தமே இல்லாமல்.. பெரியார் ,அந்தக்காலம் இந்தக்காலம், என்றெல்லாம் உளறிக்கொட்டி விட்டு.. அதை சமாளிப்பதற்காக.. நான் தோற்றுத்தான் போய்விட்டேன்.. நாம் தமிழர் கட்சியினர் என்னை கிண்டல் செய்கிறார்கள்.. பாளையங்கோட்டையில் ஒருவர் திட்டினார்.. புதுக்கோட்டையில் ஒருவர் தும்மினார் என்றெல்லாம் காமெடி செய்திருப்பது உண்மையில் சுபவீ யைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இதற்கும் அண்ணன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை.

சுபவீ இறந்து போக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோமாம். சுபவீ இறந்துவிட்டார் என்று சொன்னது.. நாங்கள் பார்த்து வியந்த கொள்கைவாதி சுபவீ பிழைப்புக்காக தடம்மாறி புரண்டதை அவரது தற்கொலை என்ற அர்த்தத்தில் இறந்து விட்டார் என்று சொல்கிறோம். அது ஒரு கொள்கை சாவு. லட்சியமும் கொள்கையும் இல்லாத பிழைப்புத் தனத்தையே வாழ்க்கையாக கொண்ட மனிதன் பிணத்திற்கு சமம்.

மற்றபடி திமுக அதிமுக தலைமைகளோடு மோதிக் கொண்டிருக்கிற நாங்கள்.. இந்த லகுட பாண்டிகளின் லாவணியை கேட்பதில்லை.

வடிவேலு ஒரு படத்தில் ஆட்டினை திருடிவிட்டு பஞ்சாயத்தை கலைக்க படாத பாடு படுவது போல..

திமுக செய்கிற பிழைப்புத் தனங்களுக்கு முட்டு கொடுப்பதற்காக பேட்டியாளர் மதன் கேட்கின்ற கேள்விகளுக்கு சுபவீ படாதபாடு பட்டு உருண்டு புரண்டது.. காண சகிக்காத நாம் விரும்பிய ஒரு காலத்து தத்துவ வாதியின் தோல்விக் காட்சி.

மற்றபடி வடிவேல் சொல்வது போலத்தான்..

சூனா பானா இதை இப்படியே மெயிண்டன் பண்ணு. சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது..

மணி செந்தில்.

அது காதலில்லை..


எனவே
அது காதலில்லை
என்பதை அறிக..

வலி மிகுந்து
தோளில்
முகம் புதைத்து
விசும்பியதை.‌.

இறுக விரல் பிணைத்து
நெடுநீள பயணத்தில்
கதைகள் பேசியதை..

நள்ளிரவு உரையாடல்களில்
தென்படும் மெளனத்தை
நேசத்தின் மொழி கொண்டு
மொழிபெயர்த்ததை…

நடுநிசி கடலோர
காற்றில் அலைபேசி
இசையோடு கால்கள்
நனைத்து கிடந்ததை..

மொத்தமாக
சில நாட்கள் தொலைந்து
நம்மை நாமே
அறிந்துக் கொள்ள
முகவரியற்ற ஊரில்
அலைந்து திரிந்ததை…

குறுஞ்செய்திகளில்
இதயம் மிதக்க வைத்து
பிடித்த பாடலின்
இணைய முகவரியை
தேடி தேடி கண்டடைந்து
பரவசம் கொண்டு
பறந்து அலைந்ததை…

இறுதியாக சிக்கனமான
சொற்களால்..
வடிகட்டி சொன்னாய்..

இதையெல்லாம்
காதல்
என வரைந்து விடாதே..
என..

நானும் எனக்குள்ளே
மெலிதாய்
சொல்லிக்கொள்கிறேன்..

எனவே அது
காதலில்லை
என்பதை அறிக.

மணி செந்தில்.

(கவிஞர் Riska Mukthar எழுதிய கவிதையொன்றின் இன்னொரு வடிவம்.)

இசைக்கப்படாத சொற்கள்

இந்த யாசிப்பில்
எனக்கு எவ்வித
கூச்சமுமில்லை.

மண்டியிட்டு
தாழவும்
மருகி உருகவும்
காலடி தொழவும்
தயாராகவே
உன் முன்னால்
நிற்கிறேன்.

தயவு செய்து
போய்விடு.

இரக்கமற்ற
உன் சமாதானங்களை
நனைந்த காலணிக்குள்
நெளியும் தவளை
என உணர்கிறேன்.

காரணமற்று
கலங்கும் உன்
கண்கள்
வியர்வைப்
பொழுதுகளின்
சுடுதேநீர் போன்றவை.

பேச்சற்று நீ
இசைக்கும் மெளனம்
பாலையில்
தனித்து பதியும்
தடங்களை ஒத்தவை.

பிரிவின் மொழி
பூசி உதிரும்
வெற்றுச்
சருகுகளால்
நிரம்பி இருக்கின்றன
உன் சொற்களின்
தாழ்வாரம்.

புழுதி படர்ந்த
வீணை ஒன்றின்
அறுந்த தந்திகளை
போன்றது நம்
நினைவுகள்
என்றேன்.

கலங்கிய கண்களுடன்
நிமிர்ந்துப் பார்த்தாய்.

அந்த அறுந்த
இசை
நரம்புகளில் தான்
இன்னும்
வாசிக்கப்படாத
ராகங்கள்
உறைந்திருக்கின்றன
என்று தளர்வுடன்
சொன்னாய்.

அயர்ந்தேன்.

உன்னை
பிரிவதை விட
நேசிப்பது
இன்னும்
வலியை
தருமென்பதை
உணர்ந்த தருணம்
அது.

நீ மெலிதாய்
தோளில் சாய்ந்தாய்.

வியர்த்த
உள்ளங்கைகளை
மீண்டும்
இறுக மூடிக்கொண்டேன்.

பின்னால் இருந்த
பாதாளம் ஒருமுறை
நடுங்கி அடங்கியது.

மணி செந்தில்.

உதயநிதி போதும். நம்மாழ்வார் எதற்கு..??

நாம் தமிழர் கட்சியில் இன்று பயணிப்பவர்களில் நான் உட்பட 99% திமுக குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான். திமுகவை கருப்பு-சிவப்பு கொடியை கலைஞர் கருணாநிதி அவர்களை முரசொலி நாளிதழை தங்கள் உயிராக நினைத்து நேசித்தவர்கள் தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம்.

திமுகவின் முதல் இணையதள தலைமுறையின் முக்கிய மானவர்களில் நானும் ஒருவன் ‌. ஆர்குட் காலத்திலேயே திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து எழுதியவர்களை பக்கம் பக்கமாக எழுதி விரட்டி அடித்தவர்களில் நானும் ஒருவன். அதனால் திமுக தலைவர் கருணாநிதி அவர்களாலும், திக தலைவர் வீரமணி அவர்களாலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றவன் நான். தம்பி டான் அசோக் போன்றவர்களுக்கு இந்த விவரங்கள் எல்லாம் நன்கு தெரியும்.

ஆனால் எதற்காக நாங்கள் திமுகவை விட்டு விலகினோம் என்பது தான் உங்கள் சிந்தனைக்கு உரியது. என் இனம் அழிந்த போது தனது பதவி முக்கியம், தன் மகள் மீதான வழக்கின் முடிவு முக்கியம் என அமைதி காத்து நின்ற திமுக தலைவரின் கள்ள மௌனம் எங்களுக்கு துரோகமாக பட்டது. அவரை மிகவும் நேசித்து நம்பி நின்ற எங்களால் அந்த துரோகத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

சொல்லப்போனால் திமுக தலைமை மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் உண்மையான நேசிப்பும் தான் இன அழிவுக்கு பின்னர் கடுமையான வெறுப்பாக மாறிப்போனது.

அதேபோலத்தான் நம்மாழ்வார் அவர்களும்.. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதன்முதலாக கையெழுத்துப் போட்டு தமிழ் நாட்டிற்குள் அனுமதித்தவர் அப்போதைய துணை முதல்வராக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள்.

பிறகு அவரே தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டதாக தெரிவித்தார். இன்று தஞ்சை மண் பாலைவனமாக மாறக் கூடிய அபாயத்தை அன்றே உணர்த்தி மக்களைத் திரட்டி போராடியவர் நம்மாழ்வார்.

அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்வதில் திமுகவினர் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. நம்மாழ்வார் இறந்தபோது திமுக இயற்றிய இரங்கல் தீர்மானத்தை இரங்கல் அறிக்கையை தற்போது வெளியிட முடியுமா..

அப்படி ஏதாவது ஒன்று இருக்கிறதா.. உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் கேட்கின்றேன். நம்மாழ்வார் எதிர்த்த மீத்தேன் திட்டத்தை முதன்முதலில் தமிழகத்திற்கு கொண்டு வந்தது அப்போதைய திமுக அரசு.

இப்போது நம்மாழ்வார் உங்கள் கட்சியை சேர்ந்தவர் என்று பெருமை பட்டுக்கொண்டு நம்மாழ்வாரையும் இணைத்தே இழிவு படுத்துகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

நம்மாழ்வார் குறித்து மிக இழிவாக இணையதள திமுகவினர் எழுதிய பல்வேறு பதிவுகள் அனைவருக்கும் தெரிந்தது தான்.

இப்போது திடீரென நம்மாழ்வார் பாசம் வந்திருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது.

பாவம் நம்மாழ்வார். இந்த மண்ணிற்காக இனத்திற்காக உண்மையாக உழைத்த பெருமகன்.

தன் வாரிசுகளுக்கு பதவியையோ சொத்தையோ சேகரித்து வைக்காமல்.. மறைந்த நேர்மையாளர்.

திமுகவினர் அவரை விட்டு விடலாம்.

திமுகவிற்கு உதயநிதி போதும். நம்மாழ்வார் எதற்கு..??

மணி செந்தில்.

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén