மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த உலக மகா பேரழிவுகளில் ஒன்றான விஷவாயு தாக்குதலில் சிக்கி தொழிலாளிகள், அப்பாவி பொதுமக்கள் என 20,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல் ,மனம் பாதிக்கப்பட்டு போனதும் உலக வல்லாதிக்க நாடுகளின் கைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும் இந்தியா சிக்கி எவ்வாறு சீரழிந்து கிடக்கிறது என்பதனை அப்பட்டமாக காட்டுகிறது. 26 ஆண்டுகளாய் நடந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விஷவாயு கக்கிய யூனியன் கார்பைடு ஆலையின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு எவ்வித தண்டனையும் இல்லை. கடந்த 1984 ஆம் வருடம் போபால் விஷவாயு பேரழிவிற்கு பிறகு சம்பவ இடங்களை பார்வையிட வந்த வாரன் ஆண்டர்சனை கைது செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே(?) சிறை வைக்கப்பட்டார். சிறைச்சாலைகளும், கைதுகளும் இல்லாத நாடு இது பாருங்கள் . அதனால் தான் ஆண்டர்சன் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். எதன் காரணத்திற்காக ஆண்டர்சன் பொதுச் சிறைக்குள் வைக்கப்படாமல் வீட்டுச்சிறைக்குள் வைக்கப்பட்டார் என்பதற்கு யாரிடமும் எவ்வித விளக்கமும் இல்லை. அக்காலக்கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்த காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அர்ஜீன் சிங் தன் அரசு விமானத்தில் உயரிய பாதுகாப்புகளோடு டெல்லிக்கு அனுப்பி வைத்தார். டெல்லியில் 20,000/- பேரைக் கொன்ற ஆலையின் தலைவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயரிய தலைவரான ஜனாதிபதியின் மாளிகையில் ஒரு நாள் விருந்தினராக தங்கி கூத்தடித்து விட்டு மறு நாள் அப்போதைய மத்திய அமைச்சர் நரசிம்மராவ் வழியனுப்ப உல்லாசப் பயணம் முடித்த திருப்தியில் அமெரிக்காவிற்கு பயணமானார் ஆண்டர்சன். இது குறித்து காங்கிரஸ் கட்சியினைக் கேட்டால் ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி பறக்க விட்டது நாட்டு நலனை முன் நிறுத்தி தான் என சிரிக்காமல் விளக்கம் அளித்தது.

நாட்டு நலனை முன் நிறுத்தி காங்கிரஸ் கட்சி செய்து வருகிற செயல்களை பாருங்கள். இலங்கைக்கு ஆயுதம் வழங்கி தமிழனை கொன்றது ராஜ தந்திரம் என்றால்…போபால் மக்களை கொன்றது நாட்டு நலன். ஆண்டர்சன் தப்பித்து போனது கடந்த 2005 ஆம் ஆண்டு வரை எவருக்கும் தெரியாது. 20 ஆண்டுகள் கழிந்த விட்ட அரசின் ஆவணங்கள் ரகசியம் அப்புறப்படுத்தப்பட்ட ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட பிறகே உண்மைகள் ஊருக்கு தெரிந்தன. இந்த லட்சணத்தில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியிடம் அப்போது இருந்த அமெரிக்க துணை தூதர் கார்டன் ஸ்டீரிப் மூலம் பேசி தப்பித்து போக உறுதிகள் வாங்கிக் கொண்டே ஆண்டர்சன் இந்தியா வந்ததாக தகவல் கூறுகின்றன. இதை விட வெட்க கேடு வேறு என்ன இருக்க இயலும்.? ஆண்டர்சனை இந்தியாவிற்கு கொண்டு வர கடும் முயற்சிகள் செய்வதாக சொல்லும் காங்கிரஸ் அரசுதான் அன்று ஆண்டர்சனை பாதுகாப்பாக அனுப்பி தப்பிக்க விட்டது. பொய் சொல்லுங்கள். ஆனால் பொய்யிலேயே வாழாதீர்கள் .

குற்றவாளிகளின் தோழனாக இந்தியா தன்னை எப்போதும் காட்டிக் கொண்டே வருகிறது. உலக மகா குற்றவாளியான ராஜபக்சே, வாரன் ஆண்டர்சன், டக்ளஸ் தேவனாந்தா, போர்பர்ஸ் ஊழலில் சிக்குண்ட இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி என இந்தியாவின் குற்றவாளிகளின் பாசம் பரந்தது.

போபால் விஷ வாயு தாக்குதல் திடீரென ஏற்பட்ட விபத்தல்ல.1975 ஆம் ஆண்டில் யூனியன் கார்பைடு தொழிற்சாலை முன் மாதிரி உற்பத்திகளை செய்த போதே விஷவாயு தாக்குதலுக்கு காரணமான மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுத்திரவத்தினை இங்கு உற்பத்தி செய்யக்கூட்டாது என போபால் மாவட்ட தொழிற்சாலை ஆய்வாளர் ஆணை பிறப்பித்தார். அரசியல்வாதிகளின் நெருங்கிய நட்பைப் பெற்ற முதலாளிகளை பகைத்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு என்ன நடக்கும்..? நீங்கள் ஊகித்தது சரி. அது தான் நடந்தது. தொழிற்சாலை ஆய்வாளர் மாற்றப்பட்டார். 1979 ஆம் ஆண்டு முதல் மீத்தைல் ஐசோ சயனைடு உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே ஏகோபித்த அரசு ஆதரவோடு துவக்கப்பட்டது. பணத்திற்காக மனிதனை உண்ணும் வேலைக்கு அரசின் ஆதரவு கேட்காமலேயே வழங்கப்பட்டது. ஏனென்றால் தொழிற்சாலையின் முதலாளி ஆண்டர்சன் அமெரிக்காவினை சேர்ந்தவர். அமெரிக்கா கக்கூஸ் போனால் இந்தியா கால் அலம்பி விட வேண்டும் என்பது தான் எழுதப்படாத விதி.

1981 –ன் துவக்கத்தில் மீத்தைல் ஐசோ சயனைடின் கலத்தில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர் மரணமுற்றார். பிறகு ஒன்றிரண்டு மாதத்திற்குள்ளாகவே அங்கு பணிபுரிந்த வேதியியல் பொறியாளர் ஒருவருக்கு நச்சுவாயு பாதிப்பினால் கடுமையான காயங்கள். நச்சு வாயு கசிவினால் தொடர்ச்சியாக பணியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.இப்படி தொடர்ச்சியாக நச்சு வாயு கசிவுகள் ஏற்பட்டும் முதலாளி ஆண்டர்சன் இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையே இருந்த அபரிதமான செல்வாக்கினால் விஷ தொழிற்சாலை மிகச் சிறப்பாக ,எவ்வித தடையும் இல்லாமல் நடைப் பெற்று வந்தது. குறைந்தப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட ஆண்டர்சன் தன் தொழிற்சாலையில் செய்யாததன் விளைவு போபால் தலைமுறை தலைமுறைகளாக சுடுகாடாய் மாறிப் போனது. திட்டமிட்டே இந்தியாவின் வறுமை மக்களை தன் பரிசோதனைக்கு பயன்படுத்தி பார்த்து விட்டு இப்போது வேடிக்கை பார்க்கும் அமெரிக்காவிற்கு அடிக்கடி போய் விருந்துண்டு வருகிறார் நம் மன்மோகன். சரி , சாப்பிட்டு ஏப்பம் விடும் நேரத்திலாவது ஆண்டர்சனைப் பற்றி ஓபாமாவிடம் ஏதாவது கூறி நடவடிக்கைகள் ஏதேனும் எடுப்பார் என்று எதிர்பார்த்து உட்கார்ந்தோமானால் நம் வாயில் நாமே மண்ணை அள்ளிப் போட்டு கொண்டதற்கு சமம். தன் சொந்த நாட்டு அப்பாவி மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசு ஈழத்தமிழர்களை காப்பாற்ற கொலைகாரன் ராஜபக்சேவிடம் பணம் கொடுத்தனுப்புகிறது. இந்த சிக்னலை மிகச்சரியாக புரிந்துக் கொண்ட ராஜபக்சே கொடுத்த பணத்தினை அவனது தேர்தல் செலவிற்கு பயன்படுத்தி விட்டு தேர்தல் வந்தது, ஊர்வலம் வந்தது என சாக்கு சொல்கிறான் நலம் விசாரிக்கப் போன நம் நாட்டு எம்பிகளிடம்.

போபால் விஷவாயு வழக்கு 26 வருடங்கள் நடைப்பெற்று தண்டனைக்குள்ளான யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் கேசவ மகேந்திரா உள்ளிட்ட 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளது போபால் நீதிமன்றம்.( 20,000 மக்களை கொன்றவர்களுக்கு ஜாமீன். மக்கள் செத்ததை பத்தி கேட்டா ஜாமீன் மறுப்பு. இது தான் சட்டமாய்யா ?-ன்னு என் கிட்ட கேக்காதீங்க. நாங்க சட்டத்தினை பாதுகாக்குற வழக்கறிஞர்கள் )

சரி . ஊழல் அரசியல்வாதிகளின் பணத்தாசைக்கும், வல்லாதிக்க முதலாளிகளின் பேராசைக்கும் பலியாகிப் போன மக்களுக்கு என்னங்க வழி..? இதுக்கு இன்னும் பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தி, ஆலோசனைகள் செய்து , ஏதோ கொடுக்கலாம் என்று அரசு யோசித்த யோசனையை பரிசீலித்து ..எப்படி மக்கள் செத்து 26 வருடங்கள் கழித்து குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தோமோ…அதே போல மிக விரைவாக மக்கள் வாயில் அள்ளிப் போட இருக்கிறது மண் என முடிவு செய்துவிட்டனர் அரசியல் வாதிகள்.

போபால் அழிவினைக் காட்டிலும் தங்களது பேராசைகளுக்காக அப்பாவி மக்களை கொன்றவர்களை அரசும் ,நீதிமன்றமும் கையாளும் விதம் அதைவிட அழிவினை அளிக்கும் கொடுமைகள். தேர்தல் செலவுக்கு கோடானு கோடி ஒதுக்கும் அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க தினந்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் அமைச்சரவை கூட்டங்கள். வேதனை.