பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

தமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி….

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……

எந்த கல்லூரியில் படித்தீர்கள்?

இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை –யில் படித்தேன்…..பி.ஏ தமிழ் -79% எம்.ஏ தமிழ் 80.64% சதவீத மதிப்பெண்கள்….பி.எட் டில் 76% மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்….

தங்களின் தற்போதைய நிலை..?

வேலை தேடி வருகிறேன்..ஊரில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன்…

குடும்பத்தின் நிலை…?
வறுமை…மிக வறுமை.என்னை படிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு தம்பி கல்வியை நிறுத்தி விட்டனர்…இப்போது படித்த நானும்,படிக்காத அவனும் கூலி வேலை பார்த்து வருகிறோம்…..

எதற்காக தமிழ் படித்தீர்கள்…?

மொழி மீது உள்ள பற்று…+2வில் கணிப்பொறி துறைதான் படித்தேன்…தமிழாசிரியாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் படித்தேன்….

ஏன் தமிழ் படித்தோம் என்று நினைத்தது உண்டா…?

அந்த சூழ்நிலையில் தான் உள்ளேன்,…எப்போதும் நினைக்கிறேன்…

இந்த உலகம் தமிழ் படித்த பட்டதாரியை எப்படி பார்க்கிறது..?

சொல்ல வெட்கமாக உள்ளது….மிகவும் கேவலமாக பார்க்கிறார்கள்….தமிழ் படித்தால் தமிழ் நாட்டிலேயே வேலை இல்லை….மற்ற அறிவியல் படிப்புகளுக்கு உள்ள மதிப்பும்,வரவேற்பும் நம் தாய்மொழி தமிழ் படிப்பிற்கு இல்லை..இதில் தனியார் கல்வி நிறுவனங்கள் வேறு..எங்கள் வறுமையை பயன்படுத்தி மிக சொற்ப சம்பளத்தில் எங்களை வேலைக்கு அழைக்கிறார்கள்…எனக்கு தெரிந்த தமிழ் முதுநிலை பட்டதாரி , ஆராய்ச்சி மாணவர் ஒரு தனியார் கல்லூரியில் மிக சொற்பமான சம்பளத்தில் பியூனாக பணிபுரிகிறார்….அதற்கே ஆயிரெத்தெட்டு போட்டி….

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் பியூன் வேலைக்கு போவீர்களா..?
கண்டிப்பாக……நிச்சயம் செல்வேன்….என் கல்வி தகுதியை விட என் வறுமை மிகவும் உயர்ந்தது…

இனி யாருக்காக தமிழ் படிக்க சொல்லி சிபாரிசு செய்வீர்களா…?

கண்டிப்பாக மாட்டேன்…..

கற்றது தமிழ்..?

எங்கள் நிலையை அந்த திரைப்படம் மிக நெருக்கமாக படம் பிடித்து காட்டியுள்ளதாக உணர்கிறேன்….

உங்களைப் போன்று எத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள்..?

குறைந்தது 50,000 நபர்களாவது இப்படி இருப்பார்கள்…அறிவியல் முதுகலையும் ,பி.எட் டும் படித்தால் இடை நிலை ஆசிரியர் பணி கிடைத்து விடுகிறது…ஆனால் தமிழ் முதுகலை ,பி.எட் படித்தவனுக்கு இந்த விதி பொருந்தாது…

இந்த நிலைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்…?

அரசின் தவறான கல்விக் கொள்கை…..மற்றும் தாய்மொழி மீது எவ்வித அக்கறையும் ,அன்பும் இல்லாத சமூகமும், அதன் அமைப்பும் மற்றொரு காரணம்..

ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி என்ற தகுதியில் உலகமெங்கும் வாழும் …இணையத்தில் தமிழ்,தமிழுணர்வுக்கு ஆதரவாக,அக்கறையாக எழுதும் தமிழர்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்..?( எனக்கும் சேர்த்து…)

கணிப்பொறியில் இருந்து தட்டச்சு பலகையில் தமிழ் வளர்ப்பதாக நினைத்து கொண்டு…. பொழுது போக்கிற்காக தமிழ் உணர்வில் திளைப்பதாக நடிக்கிறீர்கள்…..

இங்கே தமிழ் படித்தவன் தட்டேந்துகிறான்….ஊர்க்காரன் கூட தமிழ் படித்தவனை கண்டு ஏளனமாக பார்த்து..ஒதுங்கி சென்று விடுகிறான்…..

உங்களுக்கு அடுத்த வேளை சாப்பாடும் ,வருமானமும் உள்ளது…நீங்கள் தமிழ் வளர்க்கலாம்…(?) …ஆனால் தமிழ் படித்தவன் இங்கு தெருவில் நிற்கிறான் ….இதனை மனதில் வைத்துக் கொண்டு தமிழ் வளருங்கள்….

உங்களின் நோக்கம் தமிழை வாழ வைப்பதா..? இல்லை தமிழனை,தமிழ் படித்தவனை வாழ வைப்பதா..?

என்னால் வாழ்க தமிழ் என்று சொல்ல முடியவில்லை…

நன்றி…

(பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கண்ணீரோடு விடை பெற்று செல்கிறார் தமிழ் பட்டதாரி தாமோதரன்…)

Previous

புத்திசாலி ஞாநிக்கு ஒரு கடிதம்…..

Next

நினைவின் சருகில்…

2 Comments

  1. மனம் வருத்தமாக உள்ளது இதனை படிக்கும் பொழுது….

    காலம் மாறும் நல்லது நடக்கும்….

    மயிலாடுதுறை சிவா…

  2. இன்று பல வேலைகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருந்தாலே போதும் என்று சொல்கிறார்களே…

    அவற்றிக்கெல்லாம் இந்த தமிழ் பட்டம் பெற்றவர் முயற்சி செய்யலாமே.

    முதலில் புலம்பலை நிறுத்துங்கள்…

    4 வருடங்கள் முழவதும் தமிழில்,தமிழர்களிடையே ஒரு மென்பொருள் நிறுவனத்தயே வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தில் சொல்கிறேன்..

    காலத்திற்க்கேற்ப உங்க தொழில்நுட்ப அறிவை வளர்த்து கொண்டால் தமிழ் நிச்சயம் சோறுபோடும்.

    அனைத்து தமிழ் ஊடகங்களில் இன்று தமிழ் படித்தோர்க்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிகிடக்கின்றன.

    ஏராளமான பதிப்பகங்களில் தமிழ் படித்தோர்க்கு இன்று வேலை கிடைக்கின்றது.

    வெறும் தமிழ் தட்டச்சு செய்து இன்று மாதம் 10000 வரை சம்பாதிப்போர் பலரை நான் சந்திருக்கிறேன்

    குறைந்த கணினி அறிவை வளர்த்துக்கொண்டு இணைய தொடர்பினால நல்ல உறவுகளை பெற்று உடனடி வேலை தேடும் முயற்சியை தொடங்கவும்.

Powered by WordPress & Theme by Anders Norén