நீ நடக்கும் பாதையில்
எனது சொற்கள்
மஞ்சள் நிறப்
பூக்களாய் உதிர்ந்து
கிடக்கின்றன.

உன்
மௌனம் ஒரு
வண்ணத்துப்
பூச்சியாய் மாறி
என் தோளின் மீது
அமர்ந்து விட்டு
செல்கிறது.

உன்னைக் காணும்
கணப்பொழுது
என்னுடைய
நிகழ்காலத்தை
வெள்ளை
பனிக்கட்டியாய்
உறைய வைக்கிறது.

உறைந்துவிட்ட
காலத்தை
உலர வைக்க
மீண்டும்
உன்னைத்தான்
தேடி வர
வேண்டியிருக்கிறது.

ஒருமுறை பார்த்துவிட்டு போ.

சலசலத்து ஓடும் வாழ்வின் நதி எதையும் கடத்தி விட்டு போகும் கரைத்துவிட்டு போக்கும் வல்லமை கொண்டது. அதன் குரூர வேக ஓட்டத்தில் அன்பினால் பூத்த எளிய கணங்கள் கரை ஒதுங்கி.. நனைந்த செம்பருத்திப்பூ வாய் சிவந்து கிடக்கின்றன.‌

என்னுள் மலர்ந்திருக்கும் உன் மீதான நேசத்தை எப்படி சொல்வேன்.. ஒரு வயலின் கொடு. வாசித்துக் காட்டுகிறேன். ஒரு தூரிகை கொடு.
வரைந்து காட்டுகிறேன். சில சொற்களைக் கொடு. முன்னும் பின்னுமாக கோர்த்து முற்றுப்பெறாத கவிதை ஒன்றை எழுதி காட்டுகிறேன்.

இல்லையேல் தகிக்கிற உனது நிராகரிப்பினை என் மீது சில வெற்றுப் பார்வைகள் மூலம் காட்டி விட்டுப் போ.
அதே நாளின் அந்தியில் என் கண்ணீரால் ஒரு பெரும் மழை என உன் ஜன்னலுக்கு வெளியே பெய்து விட்டுப் போகிறேன்.

ஏதோ சில பொழுதுகளை மறக்க தீராத் துயரத்தோடு சகிக்க முடியாத பாவனை வாழ்வொன்றை வாழ்ந்துதான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த முகமூடி வாழ்க்கையில்.. நாம் கண்டடைகிற மகிழ்ச்சி சோகம் பசி தூக்கம் என அனைத்துமே.. இறந்து போன காலம் ஒன்றின் இறக்கமுடியா வலி ஒன்றின்
தகிப்பே.

இந்த பாவனை வாழ்வில்.. ஏதோ ஒரு நொடியின் சலனத்தில் கேட்டு விடுகிற ஒரு இசை பாடல்.. ஆழமான ஒரு நினைவை.. காய்ந்திருக்கும் பாலையில் ஒற்றை மழைத்துளியால் நிகழும் ஒரு துளிர்ப்பைப் போல .. சட்டென்று ஒரு நினைவின் துளிர்ப்பை நிகழ்த்தி விட முடிகிறது.

இந்தப் பெரும் அபாயத்திற்கு மத்தியில் தான் நிகழ்தகவாய் இந்த அபத்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உதிர்ந்து திரியும் சொற்களை விட.. உதிராமல் உயிர் ஆழத்தில் சேகரித்து வைத்திருக்கும் நேச மௌனத்தை சுமந்து திரியும் இருவரைப் பற்றிதான் இத்திரைப்படம் பேசுகிறது.

அவர்களை நீங்கள் எங்கும் பார்க்கலாம் என்பதுதான் இந்த திரைப்படத்தின் பலம். சொல்லப்போனால் அவர்களை உங்களுக்குள்ளேயே பார்க்கலாம். சிறு சிறு தயக்கங்களால் தங்கள் இதயங்களை கீறிக் கொள்ளும் அவர்கள் நமக்குள்ளும் ஒளிந்திருக்கிறார்கள்.

ஒரு பறவையின் சிறகடிப்பு போல..பெரு வலையில் சிக்கிக் கொண்ட ஒற்றை மீனைப் போல ‌… பார்த்துவிட்டு பின்பு நெடுநேரம் உறுத்திக்கொண்டே இருக்கிறது இத்திரைப்படம்.இத்திரைப்படம் கண்ட பிறகு காணும் யாவரும் மௌனித்து எதையோ சிந்தித்தவாறே அமைதியாக அமர வைப்பதுதான் இந்தத் திரைக்கதையின் வலிமை.

முற்றுப்பெறாத கவிதை போல.. சின்ன அதிர்வினை மனதிற்குள் சுமத்தி விட்டு போகும் அந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி.. எதனாலும் விவரிக்க முடியா மௌனத்தின் பேரழகு.

இயல்பை மீறியதொரு அழகு எங்கும் இல்லை. செயற்கையான எந்த பூச்சுகளும் இல்லாத இயல்பின் மொழியில்.. பார்க்கப் பார்க்க .. ஆச்சரியப்பட வைக்கின்ற இத்திரைப்படத்தின் பெயர்.

போட்டோகிராப். (Photograph)

அமேசான் பிரைம் வீடியோ வில் காணக் கிடைக்கிறது. நவாசுதீன் சித்திக் என்கின்ற மாபெரும் கலைஞனின் அசலான நடிப்பில் உறைந்திருக்கும் மௌனங்களின் வலி மொழியை பேசுகிற இத்திரைப்படம்.. நுட்பமான உணர்வுகளை உணரும் பேறுபெற்றோர் காணவேண்டிய அற்புத அனுபவம்.

மற்றதை திரையில் காணுங்கள். அதுவே அந்த அற்புதத் திரைமொழிக்கு செய்யும் மரியாதை.

பரவசத்துடன் பரிந்துரைத்து சிலிர்க்க வைத்த என் சீடன் Dhuruvan Selvamani Somu க்கு நன்றி.