என்னடா தேர்தல் முடிந்து விட்டதே.. நாம் தமிழர் குறிப்பிட்ட சதவீத ஓட்டை வாங்கிவிட்டதே.தனது எழுச்சியான வளர்ச்சியை பதிவு செய்துவிட்டதே.
ஆனாலும் இன்னும் வயிற்றெரிச்சல் கும்பல்களிடமிருந்து வன்ம இருமல் வரவில்லையே என்று நினைத்தேன்.

வரத் தொடங்கியிருக்கின்றன.அதிலும்
சிலதுகள் புலம்பியே ரத்த வாந்தி எடுக்க
தொடங்கி இருக்கின்றன.

வழக்கம்போல் அதே புலம்பல்தான்.

ஆனால் இம்முறை கூடுதலாக பொய் 2 டீஸ்பூன் அதிகம்.

சரி.. நாமும் வழக்கம்போல் இடது கையால் இக்னோர் செய்யலாம் என்று நினைத்தால் கக்கிய அவதூறுகள் சமூக வலைதளங்களில் கத்த தொடங்கியிருக்கின்றன.

எனவே தான் இந்த பதிவு.

…..‌

ஒவ்வொரு முறையும் சாதி கருத்தியலுக்கு எதிராக நாம் தமிழர் முழங்கிக் கொண்டே வருகிறது. பொதுத் தொகுதிகளில் ஆதித்தமிழரை நிறுத்துவது, தேர்தல் அரசியலில் சாதி பார்க்காமல் வேட்பாளரை களம் இறக்குவது என ஒவ்வொரு முறையும் சாதிக்கு எதிராக தனது தடத்தை அழுத்தமாக நாம் தமிழர் பதிவு செய்து வருகிறது.

ஆனால் மீண்டும் மீண்டும் நாம் தமிழர் குறித்து ஒரு திட்டமிட்ட அவதூறு பரப்பப்படுகிறது. அது என்னவென்றால்.. தமிழர் என்கிற இன வரையறை செய்ய சாதி கேட்கிறோம் என்கின்ற மிக இழிவான மலிவான பிரச்சாரம் எங்களை நோக்கி செய்யப்படுகிறது.

எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களது பேச்சுக்கள் இணையதளம் முழுக்க பரவிக் கிடக்கின்றன. சாதிக்கு எதிராக அவர் முழங்கிய முழக்கங்கள் காற்றோடு கலந்து ஒவ்வொரு தமிழர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் எங்களைப் பற்றி இப்படிப்பட்ட அவதூறு.

முதலில்…

நாங்கள் சாதி உணர்வுக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கவே நாம் தமிழர் என்று முழங்குகிறோம். நாம் தமிழர் என்கின்ற முழக்கமே சாதி உணர்விற்கு எதிரான கலகச் சொல் தான்.அதுவரை சாதியாகப் பிரிந்து நின்ற தமிழன் நாம் தமிழர் என்ற முழக்கத்தினால் தான் சாதியை கடந்து, மதத்தை மறந்து இன அரசியலின் மீது ஈர்க்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசியலை நோக்கி நகர்கிறான்.

சாதி உணர்வை சாகடித்துவிட்டு தான் 16 லட்சம் தமிழர்கள் நாம் தமிழராய் உணர்ந்து வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் சாதியை ஆதரிப்பவர்களாக இருந்தால்.. அந்தந்த சாதி கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள்.இல்லையேல் திராவிட கட்சிகள் சாதி பார்த்து நிறுத்தியிருந்த தங்கள் சாதி வேட்பாளர்களுக்கு வாக்களித்து இருப்பார்கள். இதையெல்லாம் கடந்து இனம் மொழி என நேசித்து நாம் தமிழருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

நாம் தமிழரை சேர்ந்த ஒவ்வொரு இளைஞனும் சாதி மறுப்பினை உளப் பூர்வமாக ஏற்றுக் கொண்டு களத்தில் நிற்கிறான். சாதிய விரும்புகிறவனாக இருந்தால் அவன் இணைய ஆயிரம் அமைப்புகள் இங்கே இருக்கின்றன.

இனத்திற்கான மாபெரும் போர் படையாய் நாம் தமிழர் வளர்வதை பொறுக்காத திராவிடக் கூட்டம் சாதி மறுப்பாளர்களான எங்களை தவறாக சித்தரிக்க முயன்று வருகின்றது..

சாதி குறித்து கேள்வி எழுப்பி முற்போக்காளர்கள்…தங்கள் அருகிலேயே நிற்கின்ற கருப்பு துண்டுகளையும், அவை ஆதரிக்கின்ற கருப்பு சிவப்பு துண்டுகளையும் சற்றே ஏறெடுத்து சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தி.. தமிழர்களை 50 வருடங்களாக சாதியாகப் பிரித்து வட்டச் செயலாளர் தொடங்கி பகுதி செயலாளர் நகரச் செயலாளர் ஒன்றிய செயலாளர் மாவட்டச் செயலாளர் என அனைத்துக் கட்சி பதவிகளிலும் சாதி பார்த்து இடம் கொடுத்து சாதியை காப்பாற்றுகின்ற இழிநிலை குறித்து எந்தவித கேள்வியும் எழுப்ப மாட்டார்கள்.

ஏனெனில் அவர்களுக்கும் தெரியும். திராவிடம் என்பதே சாதியை காப்பாற்றுகிற சாதியை போற்றுகிற மாபெரும் சூழ்ச்சி என..

ஒரு பக்கம் ஈழத்திற்கு ஆதரவாக போராடுவதாக காட்டிக்கொள்வார்கள். மறுபக்கம் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு தெருத்தெருவாய் அலைந்தவர்களோடு கைகோர்த்து நிற்பார்கள்.

இந்த லட்சணத்தில் எம்மினத்தின் உதிரம் படிந்த அந்த கைகளோடு நாங்களும் கைகோர்க்க வேண்டும் என கேட்பது தான் மாபெரும் கொடுமை.

உன் நண்பனைக் காட்டு.. உன்னை யாரென்று சொல்கிறேன் என்பார்கள். அவர்களது நண்பர்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களும் தொடர்ந்து அம்பலப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி வயநாடில் வந்து நிற்கலாம் வெல்லலாம். ஆனால் சட்டமன்றத் தொகுதியில் நிற்க சொல்லுங்களேன் பார்ப்போம். ராகுல் காந்தி மாபெரும் கட்சியின் தலைவராக இருக்கலாம். எம்பியாக வெல்லலாம். ஆனால் ஒரு போதும் கேரளா நாட்டின் முதலமைச்சராக ஆக முடியாது.

மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்

தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது தமிழரின் அடிப்படை அரசியல் உரிமை.

நாங்கள் கேட்பது எம் இனத்திற்கான இறையாண்மை.

எம் இனத்தின் வரையறை என்பது… தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர்கள்.

அதில் சாதிக்கும் மதத்திற்கும் இடமில்லை.

எங்களுக்கென்று ஒரு நிலம் இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்கிறது.அந்தப் பண்பாட்டு தொடர்ச்சியையும் செழுமைப் படுத்திக் கொள்கிற வரலாற்றுத் தெளிவு எம் இனத்திற்கு இயல்பாகவே இருக்கிறது.

எனவே தன் ஊக்கம் கொண்ட தமிழின இளையோர் தன் மண்ணிற்கான, தன் இனத்திற்கான அரசியலை ஒரு வெகுஜன அரசியலாக கட்டமைக்க நாம் தமிழர் என்ற அமைப்பினை உருவாக்கி வளர்த்து வருகிறார்கள்.

எங்களது அரசியல் தெளிவு/சாதிய மறுப்பு ஆகியவை திராவிட கட்சிகளுக்கு இயக்கங்களுக்கு உறுத்தலாகதான் இருக்கும்.

அதை ஆதரித்து கைப்பிடித்து நிற்பவர்களுக்கும் உறுத்தலாகத்தான் இருக்கும்.

அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

உன் முதுகிலேயே ஓராயிரம் அழுக்கு. நீ அடுத்தவர் மீது சாட்டுகிறாய் பொய் வழக்கு.

தொடர்ந்து உண்மையினை உரக்கச் சொல்லி.. சுயசாதி பெருமித உணர்ச்சி யை சாகடித்து புலிக்கொடி உயர்த்துவோம்.

விடியும் கிழக்கு.

மணி செந்தில்.