வருடம் 1995 என்று நினைக்கிறேன். நான் அப்போது திருச்சி சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் கல்லூரி ஆண்டுவிழாவிற்கு வருகிற சிறப்பு விருந்தினரை வரவேற்கும் குழுவின் பொறுப்பாளராக என்னை நியமித்திருந்தார்கள். தொடர்வண்டி நிலையத்திலிருந்து அவரை கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்று அழைத்து வந்தார்கள். வந்திருப்பவர் ஒரு பேச்சாளர் என்றார்கள். பார்க்க ஆள் கருப்பாக அவ்வளவு வசீகரமாக இல்லாத தோற்றம். அடிக்கடி இருமிக் கொண்டதும்.. மாத்திரை மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததுமான அவரது நிலைமை கதாகாலட்சேபம் செய்ய வந்த வயதான பிரசங்கி போல இருந்தது.ஒரு கல்லூரி ஆண்டு விழாவிற்கு கதாகாலட்சேபம் செய்பவரை போல ஒருவரை அழைத்து வர வேண்டுமா என்று நிர்வாகிகள் மேல் எனக்கு சற்று கோபம் ஏற்பட்டது.

வந்திருந்தவரை அறைக்குள் ‌விட்டுவிட்டு எனது தினந்தோறும் பணியான மன்னார்குடியில் இருக்கின்ற எனது இல்லத்திற்கு தொலைபேசினேன். அப்போதெல்லாம் அலைபேசி இல்லாத காலங்கள். ஏதேனும் கூட்டம் குறைவாக இருக்கிற எஸ்டிடி பூத்துகளில் காத்திருந்து இடம் பிடித்து பேச வேண்டும். தொலைபேசியை எடுத்தது அப்பா. யார் வந்திருக்கிறது என்று அவர் கேட்டதற்கு யாரோ வலம்புரிஜானாம். கச்சேரி செய்பவர் போல் இருக்கிறார். அவரை அழைத்து வந்திருக்கிறார்கள் என்று மிகவும் சலிப்பான குரலில் அலட்சியமாக சொன்னேன்.

என் தந்தை அவர் சாதாரண மனிதரல்ல. பேரறிஞர். உன் வாழ்வில் அவருடைய பேச்சை நீ கேட்க இருப்பது ஒரு மகத்தான நிகழ்வு என்றெல்லாம் புகழ்ந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரைப் பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லையே என்று யோசித்தவாறு நான் அறை திரும்பினேன்.

நாங்கள் தங்கியிருந்த youth hostel ல் பக்கத்து அறையில்தான் அவர் தங்கியிருந்தார். இரவு தாமதமாக வந்தவர் அதன் பின்னரும் வெகுநேரம் படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் உறங்க தொடங்கிய பிறகும் அவர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதிகாலையில் எழுந்து நான் பார்த்தபோது.. அவர் படித்துக் கொண்டிருந்ததை அங்கே இருந்த ஜன்னல் வழியாக காண நேர்ந்தது.

ஒரு மனிதன் எதற்காக இப்படி வாசிக்கிறான்.. வாசிப்பின் மீதான அவனது மயக்கம் எப்போது தீரும் என்றெல்லாம் அலை அலையாய் எனக்குள் ஆயிரத்தெட்டு கேள்விகள். காலை 7 மணிக்கு எங்களை அழைத்து எல்லா நாளிதழ்களையும் வார இதழ்களையும் வாங்கி வரச் சொன்னார். பிறகு அவற்றை உன்னிப்பாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் படித்துக் கொண்டிருந்தார். எதைக் கொடுத்தாலும் தின்கிற உலகத்தில் எதைக் கொடுத்தாலும் படித்து விடுகிற பழக்கம் அவருக்கு இருந்தது.

காலையில் பகோடா கட்டிவந்த சின்னஞ்சிறு பேப்பர் துண்டையும் அவர் விடவில்லை. அதையும் படித்துப் பார்த்தார். இது ஒரு கட்டத்தில் என்னால் தாங்க முடியாமல் அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டேன்.

எதை எடுத்தாலும் படிக்கிறீர்களே.. அப்படி என்ன இருக்கிறது என்று கேட்ட என்னை சற்றே விசித்திரமாக பாத்தார். நாம் வாழ்க்கையில் வெகுநாட்களாக தேடிக்கொண்டிருக்கிற ஏதாவது ஏதோ ஒரு அபூர்வ தருணத்தில் சிக்குகிற ஒரு துண்டு காகிதத்தில் கூட கிடைத்து விடலாம் இல்லையா.. அதைத்தான் தேடித்தேடி படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.

பிறகு இரண்டு இட்லிகள் சாப்பிட்டுவிட்டு கல்லூரி விழாவிற்கு கிளம்பினார். ஒரு தேர்ந்த நாதஸ்வர வித்துவான் போல ஒரு பட்டு ஜிப்பா. தலையில் நடு வகிடெடுத்து எண்ணையால் அழுந்தி வாரப்பட்ட தலை.
அவரைப் பொறுத்தவரையில் அவர் பேசிய பல்லாயிரக்கணக்கான மேடைகளில் அதுவும் ஒரு மேடை அவ்வளவுதான். ஆனாலும் ஒரு போர் வீரனை போல.. ஒரு மகத்தான எதிரியை சந்திக்கின்ற ஆயத்தங்களோடு அவர் தயாரானார். ஒரு மணி நேரம் பேச்சுக்கு அவர் ஒரு இரவு முழுக்க தயாரானாரா என்கின்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.

மீண்டும் அவரிடத்தில் கேட்டேன். ஒரு மணி நேரம் பேசுவதற்கு இரவெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறீர்களே நான் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே.. உன் கல்லூரியில் பேசுவதற்காக நான் இரவெல்லாம் படித்து தயாராகவில்லை. என்னை தயார் படுத்திக் கொள்வதற்காக நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சி என் கடைசி நொடி வரைக்கும் நீடிக்கும் என்றே கருதுகிறேன் என்று எளிமையாக சொன்னார்.

அவர் அப்போது வைத்திருந்த புத்தகப்பை அவரது துணிப்பையை விட பெரிதாக இருந்தது. எந்த பயணத்திற்கு போனாலும் புத்தகங்களை உடன் அழைத்துச் செல்வதில் அவர் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக அவர் சொன்னார். சொல்லப்போனால் புத்தகங்கள் படிப்பதற்காகவே அவர் பயணிப்பதாகவும் அவர் சொன்னது எனக்கு விசித்திரமாக இருந்தது.

என் வாழ்க்கையில் அந்த நான் கண்ட மனிதரைப் பற்றி அந்த அற்புத நாளுக்குப் பிறகு தேடத் தொடங்கினேன்.

பேரறிஞர் வலம்புரி ஜான்.

தமிழ் அறிவுலகின் மகத்தான மாமனிதர். அவரது ஆற்றொழுக்கான தமிழ் அனைவரையும் வசீகரிக்கக் கூடியது. ஒரு மணிநேர அவரது பேச்சை கேட்கும் போது பல்லாயிரக்கணக்கான நூல்கள் நிறைந்திருக்கும் ஒரு நூலகத்தை ஒரு முறை சுற்றி வந்தது போல ஒரு நிறைவு ஏற்படும். கவிஞர்/ எழுத்தாளர்/ பத்திரிக்கையாளர்/ அரசியல்வாதி/ மாநிலங்களவை உறுப்பினர்/ வழக்கறிஞர் என பல்வேறு புகழ்பெற்ற அடையாளங்கள் அவருக்கு இருந்தாலும் .. தமிழ்மொழி கண்ட மாபெரும் பேச்சாளர் என்பதே அவரது பிரதான முகம்.

வாசிப்பின் ருசி அறிந்த மனிதர் அவர். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பொழுதுகளில் கூட அவர் படித்துக் கொண்டே இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பேரறிஞர் களுக்கு வழமையாக இருக்கக்கூடிய அனைத்து தீய பழக்கங்களும் அவருக்கும் இருந்தது. ஆனாலும் வாசிப்பை விடாத ஒரு வாழ்வினை கொண்டிருந்ததால்..உடல்நல கேட்டினையும் தாண்டி அவர் ஒரு மாபெரும் மேதை ஆக அவர் வாழ்ந்த காலத்தில் சுடர் விட்டுக் கொண்டிருந்தார்.

எங்கள் கல்லூரியின் விழாவிற்கு அவர் வந்தபோது அவரைப் பற்றி பெரிதளவு அறிந்திரந்தாத மாணவர் கூட்டத்தின் கூச்சல் குழப்பங்களுக்கிடையே அவர் மேடை ஏறினார். மைக்கைப் பிடித்து தான் தாமதம்.. அடுத்த ஒரு மணி நேரம் அவருடைய பேச்சு அந்த அவையைக் கட்டிப் போட்டது. சரளமான பேச்சு. பிறமொழி சொற்கள் கலவாத நுட்பத் திறமை. பல நூல்கள் பற்றி அறிஞர்கள் பற்றி மேற்கோள் காட்டுகிற உரையாக இருந்தாலும், அது கொண்டிருக்கின்ற எளிமை எங்கள் அனைவரையும் அசத்தி போட்டது.

இப்படி ஒரு மனிதனால் பேச முடியுமா.. கடல் போன்ற குறையாத வற்றாத தமிழை.. ஒரு பேச்சினூடே நுழைத்து பெரும் அருவி என கொட்டித் தீர்க்க முடியுமா .. என்றெல்லாம் நாங்கள் வியந்து போனோம்.

மேடை ஏறுவதற்கு முன்பாக கருத்த நிறத்தில் பார்ப்பதற்கே பொருட்படுத்தாத நிலையில் இருந்த அந்த மாமனிதன் அடுத்த ஒரு மணி நேரத்தில்..அங்கே கூடியிருந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு ஒரு கதாநாயகனாய்.. அறிவுச் சுடர் விடும் பேரழகனாய்.. மாறிப் போன கதை அது.

மதிப்பிற்குரிய வலம்புரிஜான் அவர்களுடைய மொழி ஆற்றலை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கின்ற குறை என் வாழ்வில் நான் சந்தித்த அனைத்து அறிஞர்களிடத்திலும் நான் கண்டிருக்கிறேன். அவர் வாழ்நாளில் பல்வேறு மேடைகளில் பேசி வந்த பேச்சுத்தமிழை தொகுத்து நூல்களாக மாற்றியிருந்தால் இந்த மொழி அடைந்த மாபெரும் செல்வமாக அது காலம் காலமாய் நிலைத்திருக்கும்.

ஆனால் காலம் அவ்வளவு கருணை குணங்கள் கொண்டது அல்ல. மேடைகளில் உலகை வென்ற அரசனுக்கு அரசனாய் வலம் வந்த வலம்புரிஜான் வழக்கம்போல அரசியலில் தோற்றுத்தான் போனார். அவருக்கு இருந்த தீய பழக்க வழக்கங்கள், கடுமையான அலைச்சல்கள், அரசியல் தந்த மன உளைச்சல்கள் என பல அழுத்தங்கள் அவரை சற்றே சிறுவயதிலேயே கொன்று தீர்த்தன.

உலகில் பிறந்த அனைத்து மொழிகளைவிட தமிழ் மொழி என்னும் நீடித்து வாழ்வதற்கு வலம்புரிஜான் போன்ற காலத்தினால் தோன்றிய மொழி கடவுளர்கள் இந்த மொழிக்கு கருணை செய்து கொண்டே இருப்பது தான் காரணம் என்பதை இப்போது நான் அறிகிறேன்.

பேரறிஞர் வலம்புரிஜான் அவர்களுடைய பல பேச்சுக்கள் யூடியூபில் காணக்கிடைப்பது ஆறுதலைத் தருகிறது. இந்த மொழியை நீங்கள் உயிராக நேசிக்க வேறு எதுவும் செய்ய வேண்டாம். மறைந்த மாமேதை வலம்புரி ஜான் அவர்களுடைய தமிழைக் கேளுங்கள்

https://youtu.be/kClKyBFkc9c