கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் காஷ்மீர் ஸ்ரீநகருக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த வாஜ்பாய் அப்போது ஒரு கவிதையை எழுதினார்.

வசந்தம் விரைவில் திரும்பும்.
அழகிய பள்ளத்தாக்கில்
மீண்டும் மலர்கள் மலரும்.
நைட்டிங்கேல் பறவைகள் திரும்பும்..
மீண்டும் இசைத்துக் கொண்டே..

(Spring bill return to the beautiful valley Soon. The flowers will bloom again and the nightingales will return, chirping..)

ஆனால் கடந்த 5 8 2019 அன்று பாராளுமன்றத்தில் பாஜகவின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் அறிவிப்பு எப்போதும் காஷ்மீரில் அமைதி திரும்பாது என்பதை உறுதி செய்திருக்கிறது.

வரலாற்றின் ரீதியாக காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் துரோகங்களை சந்தித்து வருகிறார்கள். காஷ்மீர் இந்துக்கள் முஸ்லிம்கள் புத்த மதத்தவர் என மூன்று மதங்களை சேர்ந்த ஒரு தேசிய இன மக்கள் வாழ்கின்ற நிலம். இதன் மொத்தப் பரப்பளவு 2,22,870 சதுர கிலோமீட்டர்கள். இதில் பாகிஸ்தான் வசம் உள்ள ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிற நிலத்தின் பரப்பு 78114 சதுர கிலோமீட்டர்கள். மீதம் உள்ள நிலம் இந்தியாவின் ஆளுகைக்கு கீழே இருக்கிறது. காஷ்மீரில் ஏறக்குறைய 70 சதவீதத்தினர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் இந்து மற்றும் புத்த மதத்தை தழுவி வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி.. இந்துக்களாக இருந்தாலும் சரி.. தாங்கள் காஷ்மீரிகள் என தனித்த தேசியமாக அழைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்திய விடுதலையின் போது காஷ்மீர் இந்து மதத்தை சேர்ந்த ஹரி சிங் டோக்ரா என்கின்ற மன்னரால் ஆளப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் இந்தியா இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டபோது காஷ்மீர் எந்தப் பக்கமும் நினையாமல் தனித்து தன் தனித்துவத்தை காப்பாற்றிக் கொண்டு தனி நாடாக விளங்கியது.

அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர் ஹரி சிங் தான் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையப் போவதில்லை என அறிவித்து இருந்தார். ஆனால் இந்தியாவோ காஷ்மீரை எப்படியாவது தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டுமென தொடர்ச்சியான பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு காஷ்மீர் மாநிலத்தில் பிறந்தவர். தான் பிறந்த மாநிலமான காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதையோ தனி நாடாக இயங்குவதை யோ அவர் விரும்பவில்லை.

அக்காலகட்டத்தில் காஷ்மீர் நிலத்தின் மாபெரும் மக்கள் தலைவராக விளங்கிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா மன்னராட்சி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி கொண்டிருந்தார். அவரும் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைவதை விரும்பாமல் சுதந்திர நாடாக இருப்பதையே தனது முழக்கமாக முன்வைத்து போராடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் காஷ்மீர் மீதான படையெடுப்பைத் தொடங்கியபோது அந்நிலத்தை ஆண்டுகொண்டிருந்த இந்து மன்னர் ஹரி சிங் இந்தியாவிடம் உதவி கேட்டார். அப்போது இந்திய அரசு மன்னர் ஹரி சிங் உடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தை ஷேக் அப்துல்லாவும் ஏற்றுக்கொள்ள.. இடைக்கால அரசு அமைக்க ஷேக் அப்துல்லாவை இந்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி பாதுகாப்பு தகவல் தொடர்பு அயல் நாட்டு தூதரக உறவு ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே இந்திய மத்திய அரசு வைத்துக் கொள்ளவும் ஏனைய அதிகாரத்தை காஷ்மீர் அரசு வைத்துக் கொள்ளவும் போர்ச்சூழல் நீங்கிய பின்னர் காஷ்மீரத்து மக்கள் விருப்பப்படி இறுதி முடிவெடுக்க ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படவும் ஷரத்துகள் எழுதப்பட்டு அமலுக்கு வந்தன.

இந்திய அரசு இந்த நொடி வரை காஷ்மீரத்து மக்களின் விருப்பப்படி இறுதி முடிவு எடுக்காமல் காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமித்து இந்தியாவின் ஒரு சிறப்பு மாநிலமாக வைத்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் இந்த வரலாற்று துரோகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் ஷேக் அப்துல்லா நேரு இடையிலான நட்பை பயன்படுத்தி இந்திய அரசு காஷ்மீரை எப்படியாவது வளைத்துக் கொள்ள பல முயற்சிகள் எடுத்தது. அதற்கு சம்மதிக்காத ஷேக் அப்துல்லாவின் அமைச்சரவையில் பல குழப்பங்களை தனது உளவுத்துறை மூலம் ஏற்படுத்திய இந்திய அரசு இறுதியில் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் நாள் ஷேக் அப்துல்லாவையே கைது செய்தது.

சிறிது சிறிதாக காஷ்மீர் அரசின் அதிகாரங்களை இந்திய அரசு பறிக்க தொடங்கியது. காஷ்மீர் மாநிலத்திற்கு என தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை ஏற்படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1963 ஆவுது வருடம் இந்திய அரசியலமைப்பின் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 16 ஆவது திருத்தத்தின் படி காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது.

இவை அனைத்தும் மன்னர் ஹரி சிங் கோடு இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்த ஷரத்துகள் எதிரானவை மட்டுமல்ல அந்த ஒப்பந்தத்தையே இல்லாமல் செய்வதற்கான தன்மைகளைக் கொண்டவை.

1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது இரண்டு அரசுகளும் காஷ்மீர் மக்களின் கருத்துக்களை கேட்காமல் சிம்லாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு எல்லைக் கோடு வரைந்து கொண்டன. காஷ்மீர் பிரச்சனை பொறுத்து மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் பேசித் தீர்த்துக் கொள்வது எனவும் முடிவு செய்து கொண்டன.

கடந்த 1975 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தொடர்ச்சியாக போராடி வந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா ஏற்றுக்கொண்டார். ஆனாலும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி வழங்கக்கூடிய அரசியல் சட்டப் பிரிவு 370 தொடர்ந்து அமலில் இருக்கும் என்று இந்திய அரசு உறுதி அளித்தது.

இந்திய அரசின் தொடர்ச்சியான அதிகார அழுத்தங்களாலும், இந்தியா பாகிஸ்தான் என்ற இது வல்லாதிக்க நாடுகளின் அரசியல் விளையாட்டுகளாலும் படிப்படியாக உரிமைகளை இழந்த காஷ்மீர் நிலத்து மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக முறையிலும் ஆயுதங்கள் தாங்கிய முறையிலும் போராடிவருகிறார்கள். பாகிஸ்தான் இந்தியாவின் ஆளுகைக்குள் இருக்கின்ற ஜம்மு காஷ்மீரில் நடக்கின்ற தீவிரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது. அதேபோல இந்தியா பாகிஸ்தான் ஆளுகைக்குள் இருக்கின்ற ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகின்ற பகுதிகளில் நடக்கின்ற தாக்குதல்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது .

எதுவாயினும் இந்த வல்லாதிக்க அரசுகளின் சிக்கிக்கொண்டு தங்களது இறையாண்மை மற்றும் உரிமைகளை இழந்து காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியாக போராடி கொண்டு வருகிறார்கள். பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் மூலமாக காஷ்மீர் நிலத்தை தொடர்ச்சியாக பதட்டம் தணியாத பகுதியாக இந்திய அரசு பராமரித்து வருகிறது. எந்த நொடியிலும் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் சுட்டுக் கொல்லப்படலாம் என்கின்ற துயர நிலையில் மிகுந்த அச்ச சூழ்நிலைகளுக்கு மத்தியில் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தனக்கு கிடைத்த மாபெரும் பெரும்பான்மையை சாதகமாக வைத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி பல ஜனநாயக விரோத சட்டங்களை எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றி வருகிறது. இந்துத்துவ கோட்பாட்டின் நீண்டகால வேட்கையான காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமித்தல் என்கின்ற விருப்பத்தை தனக்கு கிடைத்திருக்கும் மாபெரும் பெருமையை வைத்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறது.

அதன் அடிப்படையில்தான் கடந்த 5 8 2019 அன்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கக்கூடிய பிரிவு 370 யை நீக்குவதற்கு அரசு பரிந்துரை செய்யும் என அறிவித்து இருக்கிறார்.

இதன்படி காஷ்மீர் அரசு இந்தியாவின் சிறப்பு மாநிலம் என்கின்ற அந்தஸ்தை இழக்கும். மக்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச உரிமைகளைக் கூட இழந்து காஷ்மீர் தேசிய இனத்திற்கான இருக்கின்ற இறையாண்மை உரிமையைக்கூட காஷ்மீர் மக்கள் இழப்பார்கள். மக்களின் விருப்பம் என்கின்ற ஜனநாயக விழுமியம் அழித்தொழிக்கப்பட்டு இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒரு மாநிலமாக காஷ்மீர் மாற்றப்படும்.

இதற்கான தயாரிப்பினை பாரதிய ஜனதா கட்சி ஜூலை இறுதி வாரத்தில் இருந்து செய்யத் தொடங்கிவிட்டது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் பாருக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இணையம் தகவல் தொடர்பு அலைபேசி தொடர்பு என அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் ஒரு அறிவிக்கப்படாத பெரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்தாலும் காஷ்மீர் நிலத்தில் இன்று ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழ்நிலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமே பொறுப்பாளிகள் ஆவார்கள்.

அன்று நைட்டிங்கேல் பறவைகள் இசையோடு திரும்பும் என கவிதை எழுதிய வாஜ்பாயின் பாரதிய ஜனதா அரசு தான் இன்று மனிதர்கள் கூட வாழ முடியாத நிலமாக காஷ்மீரை மாற்றி விட்டது என்பதுதான் துயர்நிலை.

தேர்தலில் கிடைத்திருக்கிற பெரும்பான்மையை வைத்துக்கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற மாபெரும் அதிகார வல்லாதிக்க உணர்வினை தான் பாரதிய ஜனதா கட்சியின் அரசு கொண்டிருக்கிறது என்பதைத்தான் காஷ்மீரத்து இன்றைய நிலைமை காட்டுகிறது.

இச்சமயத்தில் நமக்கு நமது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ.

எந்த வல்லாதிக்கமும் ஜனநாயக வேட்கை உடைய மக்கள் திரளால் எழுதப்படும் என்பதைத்தான் வரலாற்றின் பக்கங்கள் தொடர்ச்சியாக நமக்கு காட்டி வருகின்றன.

காஷ்மீர் நிலத்து மக்களின் துயர் நீங்க தமிழ் தேசிய இன மக்களாகிய நாமும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.

காஷ்மீர் காக்கப்படட்டும்.

மணி செந்தில்