குடந்தை என்கிற இந்த முது நகரம் தன் நினைவுச்சுழிகளில் தன்வரலாற்று பெருமிதங்களைச் சுமந்து ஏறக்குறைய இரவு நேரத்தில் உறக்கம் வராத ஒரு வயதான கிழட்டுயானை போல தலை அசைத்துக் கொண்டே இருக்கிறது.வெறும் கண்களால் பார்த்து புரிந்து கொள்ள முடிகிற நகரம் அல்ல இது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூரிய ஒளி இன்னும் படாமல் இருள் படர்ந்து முதுமையின் பழுப்பேறிய வாசனையோடு முடங்கிக் கிடக்கும் இந்த நகரத்தின் மனித விழியறியா மூலைமுடுக்குகள் கடந்தகாலத்தை ஒரு திரவமாக மாற்றி இந்த நகரத்தில் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் முது மக்கள் மனதில் நிறைந்திருக்கும் நினைவுத்தாழியில் நிரப்பி, இவர்கள் புழங்கும் சொற்களோடு கலந்து விட்டிருக்கின்றன.இதன் ஒடுங்கிய தெருக்களில் முன்னோர் காலத்தில் எவர் எவரோ நடந்த காலடித் தடங்கள் பின்னிரவுகளில் ஆங்காங்கே ஒளிர்வதாக இரவுகளில் உலவுபவர்கள் சொல்கிறார்கள். காசியிலிருந்து புறப்பட்டு வந்த சாமியார்கள் புழுதியேறி சுருண்டு கிடக்கும் நீண்ட முடியோடு இந்த புராதன நகர வீதியில் சிவ பாணம் புகைத்து புகைச்சுருள் சூழ ஆங்காங்கே ஒடுங்கி படுத்திருக்கிறார்கள். மது அருந்தியும் உறக்கம் வராத அவர்களில் ஒருவன் கண் சிவந்து உன்மத்தம் ஏற‌ சொல்கிறான்.

இந்த நகரம் ஒரு கனவு என.ஆம். இந்த நகரம் ஒரு கனவுதான். கனவிற்கும் நினைவிற்கும் ஆன விசித்திர இடைவெளியை தன் புராதன அம்சங்களால்
இந்த நகரம் காலம்தோறும் அழித்துக் கொண்டே வந்திருக்கிறது. தெருக்கள் முழுக்க நிரம்பிக் கிடக்கும் கற்றுளி கோவில்களில் எப்போதோ கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருக்கிற முது தமிழ் உலராமல் இன்னும் உயிரின் ஈரத்தோடு பார்ப்போர் விழிகளுக்கு அசைந்து வளைந்து திரியும் மழைக்கால மரவட்டைகள் போல அசைந்து கொண்டிருக்கின்றன.குடந்தை என்கிற ‌பழம்பெருமையை தன் மேனியெங்கும் எழிலாக பூசி இருக்கிற இந்த வயதான பெண்ணின் சாயல் இந்த நகரத்தின் வீதியில் நெற்றி நிறைய பொட்டோடு மங்கும் மாலை நேரத்தில் சாலை ஓரத்தில் அமர்ந்து பூ விற்பதற்காக பூக்கட்டி கொண்டிருக்கிற நிறைந்த மஞ்சள் பூசிய வயதின் சுருக்கமேறிய முகங்களில் ஒளிர்கிறது.எங்கெங்கோ தொலைவிலிருந்து வித்தைகள் காட்டுவதற்காக வந்து கூடியிருக்கிற கழைக்கூத்தாடிகள், குரங்காட்டிகள், ராமன் /சிவன் /அனுமார் என வெவ்வேறு வேடமணிந்து உரத்த குரலில் பாட்டுப் பாடி காசு கேட்கின்ற பகல்வேடதாரிகள், திருநங்கைகள், பலூன் விற்பவர்கள், ராட்டினம் சுற்றுபவர்கள், மிட்டாய் வியாபாரிகள் என திருவிழா காலங்களில் மட்டும் ஊர்களுக்குள் திரிபவர்கள் எப்போதும் இந்த ஊரில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும்‌. வருடம் முழுக்க இந்த பழம் நகரில் வரலாற்றின் சாட்சியமாக கற்களாக உறைந்திருக்கும் ஏதோ ஒரு கோவிலில் வருடத்தின் ஏதோ ஒரு நாளில் திருவிழாக்கள் நடந்துகொண்டே இருக்கும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.அருகில் எந்த மலையும் இல்லாத வண்டல் மண் நிறைந்த இந்த மருத நில மண்ணில்ஏது இவ்வளவு மாபெரும் கற்கள் என அலை அலையாய் எழுந்து வருகிற கேள்விகள் இந்த நகரத்தில் இரவுகளில் ஆழ்ந்து உறங்குகிற இளம் சிறார்களின் கனவுகளில் விழுந்து அவர்களது அர்த்தமற்ற உளறல்களாக வெளி வருகின்றன. குடந்தை என்கிற அந்த மதர்த்த பெண்ணின் மார்பகங்களை தாண்டி ஒதுங்கி கிடக்கும் ஒற்றை முந்தானைப் போல காவிரியாறு ஊரின் ஒரு ஓரத்தில் வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே ஆற்றின் ஓரமாக இருக்கின்ற படிக்கட்டுகளில் யாரோ ஒருவர் குளித்துக்கொண்டும், யாரோ சிலர் வெற்றிலை மணம் ததும்புகிற இலக்கியம் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். மடத்துத் தெருவில் நடக்கின்ற போது எப்போதும் அருந்தியவுடன் உள்ளுக்குள் ஏதோ ஒன்றை பிடித்து இழுத்து உயிரை பிரகாசிக்க செய்கிற காபியின் வாசனை நடந்து போகும் அனைவரின் நாசித் துவாரங்களில்
படர்ந்து பரவுகிறது.

“ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி’ எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென்வேற் கொற்றச் சோழர்
குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள்,
அறன் இல் யாயே..”
(குடவாயிற் கீரத்தனார்-அகம் 60)

(பொருள்: தோழியின் கூற்று: காதலனின் ‘வேலையை’ கண்டால் குடந்தையில் கருவூலம் வைத்து நாட்டின் நிதியை மிகப் பாதுகாப்பாக பாதுகாக்கிற சோழனின் பாதுகாப்பை விட, மணல் கரைகளில் விளையாடிக் கொண்டிருக்கிற தன் மகளை பாதுகாக்க அவள் தாய் செய்யும் முயற்சிகள் இன்னும் அதிக மாகுமே..) வரலாற்றின் பக்கத்தில் சோழனின் கருவூலம் சுமந்த ஒரு பெரும் கருப்பையாக, ததும்பும் புராதன பெருமிதங்களால் கருவுற்று பொலிந்திருக்கிற பெண்ணாக
குடந்தை எப்போதும் மிளிர்ந்துக் கொண்டே இருக்கிறது.

*****

மறைந்த கலை விமர்சகர் தேனுகா குடந்தையின் காதலர். இந்தப் பழம் பெரும் நகரத்தின் வீதிகளில் முகத்தில் எப்போதும் சுமக்கிற புன்னகையோடு எங்கே சுவையான காப்பி கிடைக்கும், எங்கே நல்ல வெற்றிலை கிடைக்கும், இந்த ஊர் பக்கம் வாசித்த மாபெரும் தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் யார் யார்,கோவிலின் உறைந்து கிடக்கும் சிற்பங்களின் கலையம்சம் உணர்த்துகிற பொருள் யாது என்கிற பல அறியாத கேள்விகளின் பதில்களோடு அவர் சதா அலைந்து கொண்டே இருப்பார்.குறிப்பாக சிற்பங்கள் என்ன மொழியில் வடிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த இறுகிய கற்களின் நுண்துளைகளில் புகுந்து வாசித்து உரைப்பதில் அவர் ஒரு மேதை.ஒருமுறை சாரங்கபாணி கோவிலில் தேர் வடிவான மூலவர் சன்னதியை அசையாமல் உறைந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான சந்தனப் பொட்டிட்டவரை நானும், அவரும் கண்டோம். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர் அப்படியே அந்தக் கோயிலின் பிராகாரத்தில் சுவற்றில் பதிந்திருந்த ஆதித் தமிழ் மொழியின் மீது கை விரல் பதித்து வருடிக்கொண்டிருந்தார். அவருடைய செய்கையும், அவரின் தன்னை மறந்த நிலையும் எங்களை ஏதோ செய்ய.. அவரிடத்து நாங்கள் பேசத் தொடங்கினோம்.அவர் பெயர் மாதவன். மலையாளி.

ஒரு மலையாளிக்கு என்ன என் மொழி மீது ஆர்வம் என்கின்ற எனது கத்துக்குட்டி தனம் ஒரு கேள்வியாக தோன்றி அதை நான் தேனுகா விடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே மிக எளிமையாக சொன்னார்.இந்த கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் எங்கே இருந்தார்கள் மலையாளிகள்.. அவர்களுக்கும் தமிழ் தானே தாய்மொழி..??என்ற அவரது புன்னகைப் பதிலில் என் மனதிற்குள் ஏதோ ஒன்று நழுவியது போல நான் உணர்ந்தேன். அந்தப் பெரியவர் மாதவன் திருவனந்தபுரத்திலிருந்து வருகை தந்திருக்கிறார். தமிழகக் கோவில்களில் கல்வெட்டுகளில் உள்ள தமிழில் தென் படுகிற மலையாள எழுத்துருவின் ஒத்திசைவு புள்ளிகளை பற்றி ஆய்வு செய்வதற்காக அவர் வந்து இருக்கிறார். ஒவ்வொரு ஊராக சென்றவர் சாரங்கபாணி கோவிலுக்கும் வந்திருக்கிறார். அங்கே கண்ட கல்வெட்டுகளை பார்த்தவுடன் கண் கலங்கி நின்று கொண்டிருக்கிறார். கிமு ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் எழுத்துரு வடிவமாய் வடிக்கப்பட்ட தனது ஆதிமொழி மீது தீவிர காதல் கொண்டு கண் கலங்கி நின்று கொண்டிருக்கிறார். மலையாளிகள் எப்போதும் தங்கள் பண்பாட்டின் மீதும் அதன் விழுமியங்கள் மீதும் மாறாத பற்று உடையவர்கள். அவர்களது இலக்கியங்களில், திரைப்படங்களில் என எதிலும் அவர்களின் பண்பாட்டு பெருமிதப் புள்ளிகளை அடையாளப் படுத்தாமல் விடமாட்டார்கள். குறிப்பாக மலையாள இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டு விழுமியங்களில் பெரும்பாலானவை தமிழர் வாழ்வியலுக்கு நெருக்கமானவை. மலையாள இலக்கியங்களில் பிதாமகர்களாக திகழ்கிற தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முஹம்மது பஷீர், எம்டி வாசுதேவன் நாயர் என பலரும் தங்கள் கதைகளில் விவரிக்கும் பண்பாட்டுப் புள்ளிகள் வாசிக்கின்ற தமிழ் வாசகனது முகத்தில் ஒத்திசைவுப்பரவசத்தை ஏற்படுத்துபவை. 1887 இல் அப்பு நெடுங்காடி என்பவர் எழுதிய குந்தலதா என்கிற நாவலே மலையாளத்தின் முதல் நாவலாகும். 1889 இல் சந்துமேனன் எழுதிய இந்துலேகா (தமிழில் கிடைக்கிறது சாகித்திய அகாதமி வெளியீடு) மலையாள இலக்கிய உலகின் கலைப் பண்புகளுடன் அமைந்த மாபெரும் இலக்கியப் படைப்பு. அதேபோல் சிவி ராமன் பிள்ளை எழுதிய மார்த்தாண்டவர்மா (தமிழில் கிடைக்கிறது) வும் அக்காலத்திய முக்கிய இலக்கிய படைப்பு. பிற்காலத்தில் பஷீர், தகழி, கேசவதேவ், பொற்றே காட்டு பிசி குட்டி கிருஷ்ணன் என பலர் தீவிரமான இலக்கியச் செழுமை படைப்புகளை படைத்து மலையாள இலக்கிய உலகிற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பல மலையாள படைப்புகள் தமிழில் அண்மைக்காலமாக மொழிபெயர்க்கப்பட்டு வருவது தமிழிலக்கிய செழுமைக்கு மேலும் வளம் சேர்க்கிற பணிகளாகும். தமிழினை தனது ஆதி மொழியாகக் கொண்ட மலையாளம் சங்க இலக்கியங்களை தனது மொழியின் மூலமாக கருதிப் போற்றுவது என்பது மிக இயல்பானது. அந்த வகையில் சங்க இலக்கியங்களின் சாரத்தை வைத்து மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்ந நாள் என்கின்ற நாவல் தமிழில் கே வி ஜெயஸ்ரீ யால் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வருடத்தின் சாகத்திய அகாடமி விருது இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் சு. வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற நாவலான வேள்பாரி -க்கு மிக நெருக்கமான கதைக்களம் தான் இந்த நாவலுக்கும் என்பது மிகவும் ஆர்வம் ஊட்டக் கூடியது. முன்னுரையில் ஜெயமோகன் சொன்னதுபோல அன்னியரால் தீண்டப்படாத பரிசுத்தமான தமிழ்நிலம் கேரளம் தான் என்பதை தனது சங்கப்பாடல்களின் ஊடான அறிவு மூலம் படைப்பாளர் மனோஜ் நிரூபித்திருக்கிறார்.

ஒட்டு மொத்த கதையும் கொலும்பன், இவரது மகளான சித்திரை, கொலும்பனின் மகனான மயிலன் ஆகியோரின் பார்வைகளில் முறையே முதல் எழுத்து இரண்டாம் எழுத்து, மூன்றாம் எழுத்து என மூன்று பார்வைகளில் கதை விரிகிறது. வறட்சி வறுமை தாங்க முடியாமல் ஆதி கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க கிளம்பிய பாடல் பாடும் பாணரும், ஆடல் ஆடும் கூத்தரும் நிரம்பிய ஒரு சிறு ஆதி குடியின் கதைதான் நிலம் பூத்து மலர்ந்த நாள். சங்ககால மக்களின் வாழ்வியல் குறித்தான நுட்பமான விவரணைகளோடு பெருங்கதை என விரியும் இந்த நாவலில் கபிலர் பரணர் வேள் பாரி ஆகியோர் சிறுசிறு கதாபாத்திரங்களாக வருகிறார்கள். ஆதி வனத்தின் பசுமை போர்த்திய அழகியலை, அதன் அமைதியை, அதன் ஆபத்தினை, சங்ககால அரசியலின் காட்சிகளை மிக ஆழமான மொழியில் மனோஜ் விவரிக்க, அதை அப்படியே சிதைக்காமல் கே வி ஜெயஸ்ரீ மொழி பெயர்த்து இருப்பது ஆகச்சிறந்த வாசிப்பனுபவமாக இருக்கிறது. நாவலின் குறுக்கே நிறைய சங்கப்பாடல்கள் வருகின்றன. இடம்பெயர்தல், உடன்போக்கு, அருள்வாக்கு போன்ற பல ஆதித் தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை அப்படியே ஒரு திரைப்படம் போல நம் கண் முன்னால் நிறுத்தி விடுவதில் நிலம் பூத்து மலர்ந்த நாள் வெற்றி அடைந்து விடுகிறது. சங்கப்பாடல்கள் என்பதே ஆதி தமிழர்களின் நினைவுகளின் மொழிபெயர்க்கப்பட்ட சொற் கூட்டங்கள் தானே.இதை தமிழில் அருமையான சொற் வளத்தோடு மலையாள இலக்கிய செழுமையின் ஈரம் காயாமல் அப்படியே உயிர்ப்புடன் வழங்கிய கே.வி ஜெயஸ்ரீ அவர்களுக்கு, மனம் நிறைந்த பாராட்டுக்கள். இடம்பெயர்தல் என்பது தமிழினத்திற்கு புதிதல்ல. காலம் காலமாய், தேசம் தேசமாய், இந்த இனம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அந்தத் துயரம் மட்டுமே இந்த இனத்திற்கு என விதிக்கப்பட்ட சாபம் போல வரலாற்றின் வீதிகளில் துரத்திக் கொண்டே வருகிறது.

****
இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் என் மனதில் என்னவோ தேனுகாவும், கோவில் கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து கலங்கி நின்ற மாதவனும் தான் என் மனதுக்குள் வந்தார்கள். மாதவன் அந்த ஆதி தமிழின் கல்வெட்டு வளைவுகளில் மனம் கரைந்து கண் கலங்கி நின்றதற்கான காரணத்தினை மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாளில் உணர்ந்துகொண்டேன். எங்கெங்கோ மண்ணுக்கடியில் முடிச்சுகளாய், ஊடுருவி சென்றிருக்கும் ஆழமான வேர் விழுதுகளாய் மறைந்து கிடக்கும் வரலாற்றின் பக்கங்களை சற்றே வேறுவகையில் அறிவின் வெளிச்சம் கூட்டி வாசிக்கும்போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்து கிடக்கின்ற ஆதி மரபணுக்கள் உயிர்ப்பெற்று துடிக்கத்தான் செய்கின்றன. அப்படித் துடிக்க வைக்க தானே உண்மையான படைப்புகள் தன் ஆன்மாவிலிருந்து உதிரத்தைத் தொட்டு எழுதும் படைப்பாளர்களால் எழுதப்படுகின்றன..???

(நிலம் பூத்து மலர்ந்த நாள்-மலையாள மூலம்:மனோஜ் குரூர், தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ, வம்சி வெளியீடு)