[youtube]https://www.youtube.com/watch?v=CB-J_4k8QKQ[/youtube]

 

“எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தை விட..
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்..
பரவுகிறது
மனதில் பிரகாசமாக..”
– கல்யாண்ஜி

80 கள்.. தமிழ் நிலத்தின் பண்பாட்டு அடையாளங்களில், இலக்கியத்தில், அரசியலில், திரைப்படங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டம். இலக்கியத்தில் ‌ தீவிர இலக்கியம் என்கின்ற வகைமை தோன்றி முழுநேர எழுத்தாளர்கள் பலர் தோன்றிய காலக் கட்டம். அரசியலில் இடதுசாரித்தனம் கலந்த தமிழ் உணர்வு சார்ந்த அரசியலுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. திரைப்படங்கள் ஏறக்குறைய அரங்கங்களை விட்டு வெளியே வந்து, நாடக தன்மையை ஏறக்குறைய சற்றே உதிர்த்து இயல்புணர்ச்சி ஊக்கமுடைய பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் என்றெல்லாம் அசலான கலைஞர்கள் தோன்றிய காலக் கட்டம். எல்லாவற்றையும் சேர்த்து சுருக்கமாக சொன்னால் இளையராஜா என்கின்ற அதிதீவிர கலைஞன் உணர்ச்சிகளின் அசைவோட்டத்தை மொழிபெயர்த்து தன் இசையால் காற்றை நிரப்பி தமிழர்களை சுவாசிக்க வைத்த காலம்.  தமிழ்த்திரைப்பட ரசனை என்றால் அப்போதெல்லாம் ரஜினி-கமல் விஜயகாந்த் சத்தியராஜ் மோகன் போன்றோர் முன்னணி கலைஞர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். கே. பாக்யராஜ்,டி.ராஜேந்தர், மணிவண்ணன்,ராஜசேகர், ஆர் சுந்தர்ராஜன், பாரதி – வாசு (பன்னீர் புஷ்பங்கள் பிறகு இவர்கள் இருவரும் தனித்தனியே நிறைய திரைப்படங்களில்..) தேவராஜ் மோகன், துரை (பசி), ராபர்ட் ராஜசேகர் போன்ற நிறைய இளம் தலைமுறை இயக்குனர்கள் நிறைய திரைப்படங்களை எடுத்துத் தள்ளினார்கள். வீட்டுக்கு வீடு டேப் ரிக்கார்டர்கள் (Tape recorder) முளைத்திருந்தன. சிறிய மரத்திலான ஒரு செல்ஃப் தயாரித்து அதில் ஆடியோ கேசட்டுகளை (Audio Cassette) வரிசையாக அடுக்கி வைத்திருப்பது வீட்டின் அந்தஸ்தை காட்டுகிற ஒரு தகுதியாக மாறத் தொடங்கியிருந்தது. இந்த ஆடியோ கேசட்டுகளில் பாடல்களை பதிவு செய்து கொடுப்பதற்காகவே வீதிக்கு வீதி பெரும்பாலும் பெயர் பலகைகளில் இளையராஜா படத்தோடு கேசட் பதிவு செய்யும் மையங்கள் ( Recording Center) முளைத்தன. அங்கே பெரும்பாலும் இளைஞர்கள் மணிக்கணக்கில் காத்து இருந்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ந்த இளைஞர்கள் எக்ஃகோ, லஹரி,ஏவிஎம்,ஏவிஎல் போன்ற பல்வேறு இசைக் கம்பெனிகள் வெளியிட்ட ஒரிஜினல் ஆடியோ கேசட்டுகளை வாங்கி சேகரிப்பதை வழக்கமாக கொண்டார்கள். மக்கள் ரேடியோ கேட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி நேரம் ரேடியோவில் நாடகங்கள் ஒளிபரப்பாகின. தொலைக்காட்சி பெட்டியில் தூர்தர்ஷன் என்கின்ற ஒரே ஒரு சேனல் கொடைக்கானல் மலை உச்சியிலிருந்து ஒளிபரப்பப்பட , அதற்கு ஆண்டனா வைத்து பூஸ்டர் ஸ்டபிலைசர் என அனைத்தும் வைத்து புள்ளி புள்ளியாக திரைப்படங்கள், கிரிக்கெட் மேட்ச்கள் ஒளிபரப்பாகின. கிரிக்கெட்டில் அன்று பெரும் பேட்ஸ்மேனாக விளங்கிய கவாஸ்கர் ஏறக்குறைய இறுதி காலத்தில் இருந்தார். கபில்தேவ் ஒரு வெற்றிகரமான பவுலராக அனைவரையும் மிரட்டிக் கொண்டிருந்தார். பெரும்பாலான மேட்சுகளில் இந்தியா தோற்று கொண்டிருந்தது. நானெல்லாம் தீவிரமான முகம்மது அசாருதீன் ரசிகன். கை மணிக்கட்டு களால் விளையாடுகிற அற்புதன். அவர் Square Cut Shot விளையாடும்போது அங்கே நின்று கொண்டிருக்கின்ற ஃபீல்டருக்கு பந்தைப் பிடிக்க தோணாமல் கைத் தட்டத்தான் தோன்றும் என்கிற அளவுக்கு நளினமாக விளையாடுகிற பெரும் கலைஞன். அற்புதமான fielder. எப்போதாவது Spin bowling ங்கும் செய்வார். நாங்கள் வாழ்ந்துவந்த மன்னார்குடி ஹவுசிங் யூனிட்டில் GCC என்கின்ற கவாஸ்கர் கிரிக்கெட் கிளப் என்ற ஒரு அணி இருந்தது. அதில் விளையாடிய ஸ்டீபன் அண்ணா தான் டீம் கேப்டன். காவுக்கனி , ராக்கெட் ராஜா என்கின்ற இருபெரும் வேகப்பந்து வீச்சாளர்கள். எதிரணியை மிரட்டி எடுத்துவிடுவார்கள்.குறிப்பாக ராக்கெட் ராஜா அண்ணன் பந்தினை யாராலும் தொடவே முடியாது.என் எதிர் ஃப்ளாட்டில் வாழ்ந்து வந்த ரவி அண்ணன் தான் அந்த டீமின் விக்கெட் கீப்பர். அவர்தான் எனக்கு அனைத்திலும் ஆதர்சம். அதிகமாக பேசமாட்டார். பிரமாதமாக கீப்பிங் செய்வார். அந்தக் காலகட்டத்தில் நான் நடப்பதற்காக Calipar போட்டிருந்தேன். ஆனாலும் ரவி அண்ணன் என்னையும் விளையாட வைப்பார். எல்லா விளையாட்டுக்களிலும் என்னை ஒதுக்கி வைக்காமல் சேர்த்துக் கொள்வார். என்னை நின்ற இடத்திலிருந்து பவுலிங் போட சொல்வார்.எங்கே சென்றாலும் நான்தான் அவருக்கு துணை. ஒரு நாள் மாலை ரவி அண்ணன் எங்கோ அவசரமாகக் கிளம்பி கொண்டிருக்க.. நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தேன். வேறு வழி இல்லாமல்‌ வீட்டில் சொல்லிவிட்டு என்னையும் சைக்கிளில் அழைத்து கொண்டு அவர் சென்று நின்றது எங்கள் ஊரின் சாந்தி திரையரங்கத்தின் முன்னால். அந்தப்படத்தின் போஸ்டரை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை. ஏதோ குடும்பப் படம் போல இருந்தது. ஆனால் ரவி அண்ணன் மிகுந்த ஆர்வமாக இருந்தார். அந்த 80 களின் காலத்தில் அதுபோன்ற திரைப்படத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். அது ஒரு மெலோ டிராமா. அதுபோன்ற ஒரு திரைப்படத்தை மன்னார்குடி போன்ற ஒரு நடுத்தர நகரத்தில் பார்ப்பதற்கு ஒரு தனிப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. ரவி அண்ணன் ஏறக்குறைய அந்த மனநிலையில்தான் இருந்தார். என்ன ஆச்சரியம் என்றால்.. மன்னார்குடி போன்ற ஒரு ஊரில் அந்தத் திரைப்படத்திற்கு ஒரு கூட்டமாக கல்லூரி மாணவிகள் வந்து இருந்தார்கள். அந்த மாணவிகளை சார்ந்து சில மாணவர்களும் வந்திருக்க.‌. தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டது. படம் தொடங்கியது. திரைப்படம் ஒரு பெண்ணைப் பற்றியது. அவளுடைய விருப்பத்தை மீறி அவளுக்கு திருமணம் நடக்கிறது. கணவன் மென்மையான மனதை உடையவன். ஏன் தன்னை தனது மனைவி விரும்ப மறுக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. இதுகுறித்து அவளிடம் அவன் ஆழமாக கேட்கின்ற ஒரு தருணத்தில்.. ஒரு வெள்ளை சுவற்றில் தலையைச் சாய்த்தவாறு அவள் அழுதுகொண்டே சரிய.. அவளது முற்காலம்(Flashback) காட்சிகளாக விரிகிறது. அதிரும் இசை துணுக்குகளுக்கு நடுவே சில இளைஞர்களோடு சட்டென ஒரு இளைஞன் வேகமாக நடந்து வருகிறான். திரையரங்கமே அதிர்கிறது.அக்காட்சியின் கேமிராவை கையாள்பவன் ஒரு கவிஞன் (P.C. ஸ்ரீராம்) என புரிகிறது. அந்தக் காட்சியில் அந்த கேமிரா தரையிலிருந்து நடந்துவரும் அந்த இளைஞனின் கோபம் மிக்க முகத்தை காட்டுகிறது. அதுபோன்ற ஒரு துள்ளல் மிகுந்த ஒரு ஆக்ரோஷமான வேக நடையை தமிழ்த் திரை அதுவரை பார்த்ததில்லை. வந்த வேகத்தில் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு அடி விழத் தொடங்குகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு காவல்துறை சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறபோது சரியாக சுவர் ஏறி குதித்து அந்த இளைஞன் தப்பித்துப் போய் விடுகிறான். அந்தக் காட்சியில் தன் இருக்கையிலிருந்து எழுந்து கூச்சலிடத் தொடங்கிய அந்த கல்லூரி மாணவிகள் அந்த இளைஞன் தோன்றும் போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அந்த இளைஞன் பைக்கில் சென்றான்/அந்தப் பெண் படிக்கும் கல்லூரிக்கே சென்று ஸ்பீக்கரில் சத்தம் போட்டு காதலை சொன்னான்/பேருந்திற்கு முன்னால் தன் பைக்கை நிறுத்தி தன் காதலியோடு பேசிக் கொண்டிருந்தான்/தன் காதலியின் முகத்தை பார்த்தவாறே கையில் கடலையோடு பின்னால் நடந்து சென்றான்./ அந்தப் பெண்ணோடு ஒரு ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு காபி சாப்பிடும் போது எதிர்பாராதவிதமாக வருகிற அந்தப் பெண்ணின் தந்தையை பேர்ச்சொல்லி அழைத்து அந்தப் பெண்ணின் முகத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறான்/ பிறகு அந்த அதிர்ச்சியையே ஒரு ரசனை மிக்க காதலாக மாற்றுகிறான்/ தன் காதலிக்காக தான் போக வேண்டியிருந்த ஒரு போராட்டத்திற்கு போகாமல் கொட்டும் மழையில் காதலியின் வீட்டின் ஜன்னலுக்கு முன்னால் காத்திருக்கிறான்/மறுநாளே திருமணம் செய்து கொள்ள கோருகிறான்/கடைசியில் அந்த இளைஞன் திருமணத்திற்காக காத்திருக்கும் காதலியின் கண் முன்னரே எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறான். ஒரு ரசவாத வித்தை போல அந்த 15 நிமிடங்களும் கண் முன்னால் வித விதமான உணர்வலைகளோடு நிகழ்ந்து முடிந்து விடுகிறது. அந்தப் பதினைந்து நிமிட காட்சிகளுக்கு பின்னால் ஆரவாரம் செய்து கொண்டிருந்த அந்த கல்லூரி மாணவிகள் அமைதியாக எழுந்து திரையரங்கை விட்டு வெளியே சென்று விட்டார்கள்.அவர்களைப் பொறுத்தவரையில் அத்திரைப்படம் அத்தோடு முடிந்து விட்டது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்கள் தியாகராஜ பாகவதர்/எம்ஜிஆர்/ கமல் என சிலவகை தனித்த நளினங்களோடு கூடிய ஆண்களை விரும்பியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள் போல தாங்கள் விரும்பும் நடிகனின் காட்சிகள் முடிந்த பிறகு திரையரங்கை விட்டு யாரும் வெளியே சென்றதில்லை.வெளியே விசாரித்தபோதுதான் சொன்னார்கள். மனோகர் என்கின்ற அந்த கதாபாத்திரம் சுடப்பட்டு இறந்து போன காட்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நாளும் பலர் எழுந்து சென்று விடுவதாக சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக எங்கள் மன்னார்குடிக்கு இது மிகப்பெரிய மாபெரும் ஆச்சரியத்தை கொடுக்கக்கூடிய பரபரப்பு செய்தியாக மாறிப்போனது. அது அக்காலத்தில் திரைப்பட ரசனைகளின் ஊடாக ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி. மனோகர் ஆக நடித்த அந்த இளைஞனின் பெயர் கார்த்திக். படம் மவுனராகம். அப்போதுதான் தெரிந்தது ரவி அண்ணன் கார்த்திக்கின் ரசிகன் என.அண்ணனும் படம் பார்த்துக்கொண்டிருந்த என்னை பார்த்து போகலாமா என்று கேட்டார். அப்போதுதான் எனக்கும் தெரிந்தது அங்கே வந்திருந்த கல்லூரிப்பெண்களில் யாரோ ஒருவருக்காகவும், கார்த்திக்கிற்காகவும் தான் அண்ணனும் அத்திரைப்படத்திற்கு வந்திருந்தார். இரண்டுமே முடிந்து சென்று விட்டபடியால் அண்ணன் அழைக்க, நானும் எழுந்து வந்துவிட்டேன். இவ்வாறாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் பலவற்றை அறிமுகம் செய்து வைத்த ரவி அண்ணன் தான் எனக்கு கார்த்திக்கையும் அறிமுகம் செய்து வைத்தார்.அதற்கு முன்னாலும் எனக்கு கார்த்திக்கை தெரியும். ஒரு வெகு சாதாரணமான சிறு நடிகன் போல துணை கதாபாத்திரங்களில் சில திரைப்படங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன். அக்காலத்தில் எனக்கு கமல் மட்டும் தான் பிடிக்கும்.அப்போது வித்தியாசமாக நடித்து கொண்டிருந்த சத்யராஜ் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. ஆனால் மவுனராகம் என்ற திரைப்படத்தினை என்னை அழைத்து சென்று காட்டியதன் மூலம் தன்னைப்போலவே ரவி அண்ணன் என்னையும் தீவிர கார்த்திக் ரசிகனாக மாற்றிவிட்டார். கார்த்திக்கை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் திரைப்படம் குறித்தான எனது ரசனைகள் மாறத் தொடங்கின. What is acting என்ற கேள்விக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஒரே ஒரு வார்த்தையில் சொல்கிறார் “living”.
நடிப்பு ஒரு நிகழ்கலை. புனைவு வெளிப்படுத்துகிற மிகை புள்ளிக்கும் , கலைஞனுக்கு இயல்பாக தோன்றுகிற கலையம்ச நேர்த்திக்கும் இடையே இருக்கின்ற நுட்ப இடைவெளியை உள் வாங்கி ஒரு கனவின் நகல் போல காட்சியளிக்கும் ஒரு மாய தோற்றத்தை உண்மையாக்குகிற வித்தை அது. அந்த மேஜிக் களியாட்டத்தில் ஒரு நுனி அளவு பிசகிவிட்டாலும் கலை தன் உயிரை இழந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாய விளையாட்டை தான் மிக இயல்பாக விளையாடுவதற்கான சாதுர்யத்தை கொண்ட மகத்தான கலைஞனாக கார்த்திக் திகழ்ந்தார்.

மவுனராகம் படத்தில் கார்த்திக்கு வருகின்ற காட்சிகள் 15 நிமிடங்களுக்கு மிகாதவை. ஆனால் அந்தப் பதினைந்து நிமிடங்கள் தான் கார்த்திக் என்ற இளம் கதாநாயகனை தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒரு இருக்கையில் அமர வைத்தது. வழமையான காதல் காட்சிகளுக்கு இளமையான துள்ளல் வண்ணம் தீட்டிக் கொண்டே இருந்தார் கார்த்திக். நொடிக்கு நொடி மாறிவிடும் அமர்க்களப்படுத்தும் அவரது முகபாவங்கள் அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாதது. அதன்பிறகு அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், அமரன், இதயதாமரை, கோபுர வாசலிலே என அமரத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் கார்த்திக் நடித்து கலக்க அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் பிரம்மாண்டமாக உண்டானது. அவருக்கென தனித்துவமான இசையை இளையராஜா உருவாக்க… அவரது கிராமத்து படங்களான கிழக்கு வாசல், பாண்டி நாட்டு தங்கம், உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் , பெரிய வீட்டு பண்ணக்காரன், பூவரசன், பொன்னுமணி, போன்ற பல படங்கள் பாடல்களுக்காகவும்,கார்த்திக்கின் வசீகரத்திற்காகவும் ஓடின.தென்மாவட்டங்களில் கார்த்திக்கின் சாதியை வைத்து வீட்டுக்கு வீடு அவரது புகைப்படங்களை வைத்து ஒரு பெரிய கூட்டமே அவரது ரசிகர்களாக மாறி வழிபட்டதெல்லாம் பெருங்கதை. கார்த்திக் மிக நுட்பமான உணர்வுகளை மிக அழகியலாக வெளிப்படுத்துகிற தேர்ந்த கலைஞன்.குறிப்பாக அக்னி நட்சத்திரம். அந்தப் படத்தில் பிரபுவின் கதாபாத்திரம் மிகுந்த நேர்மறையான கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரி பாத்திரம். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரத்தை போகிற போக்கில் அனாசியமாக செய்து அசத்தி இருப்பார் கார்த்திக். பேருந்து நிறுத்தத்திலும், பேஸ்கட் பால் மைதானத்திலும், பெட்டிக் கடைகளிலும் மிக எளிதாக தென்படுகிற வேலையற்ற இளைஞனின் பாத்திரத்தை கார்த்திக் ரசிக்கத்தக்க வகையில் செய்து இணை நடிகரான பிரபுவை தாண்டிலும் ஸ்கோர் செய்திருப்பார். ஷேவ் செய்யப்படாத இளம் தாடி முகத்தில் ஜீன்ஸ் பேண்டோடு, உடல் முழுக்க வியர்வையோடு, சட்டை இல்லாமல் மைதானத்தில் பந்தை தலைக்கு வைத்து கார்த்திக் படுத்திருக்கிற அந்த லாவகம் இயக்குனர் மணிரத்னம் எதிர்பார்த்த அளவை விட காட்சி அழகின் உச்சம். கார்த்திக் போன்று முக அழகு கொண்ட தமிழ் நடிகர்கள் இதுவரை தோன்றியதில்லை. அது அப்பட்டமான ஒரு தமிழனின் முகம். ஊருக்குள் களையான முகம் என்பார்களே அந்த முகம் கார்த்திக்கின் முகம் தான். இதயத்தாமரை திரைப்படத்தில் ஒரு காதல் தேவதை … பாடலில் கார்த்திக்கும் ரேவதியும் ஒரு பாடல் முழுக்க ஒரு மிதிவண்டியில் வருகிற அந்த கவித்துவ காட்சி போல பொங்கி எழுகிற காதலின் உற்சாகத்தை வெளிப்படுத்துகிற காட்சி அழகியல் தமிழ் திரைப்படங்களில் மிகக் குறைவு..

[youtube]https://youtu.be/0ziNk53ikVI[/youtube]

மிகையற்ற நடிப்பு தான் கார்த்திக்கின் மூலதனம். மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்ற மாபெரும் நடிகர்களிடம் காணப்படும்
உடல் மொழியில் ஆத்மார்த்த நெகிழ்வுத் தன்மை (flexibility) தமிழில் உடைய ஒரே நடிகர் கார்த்திக் மட்டுமே. அதற்கு பல காட்சிகளை உதாரணம் சொல்லலாம்.
குறிப்பாக இந்தப் பாடல்

[youtube]https://youtu.be/8Hjf-UyTSKg[/youtube]

கார்த்திக்கின் முகபாவங்கள் தனித்துவமானவை. நடிகர் திலகம் சிவாஜி, கமல் போன்றோரிடம் இருக்கின்ற சற்றே Over tone கார்த்திக்கிடம் இருக்காது. தன் காதலிக்கு விடிந்தால் திருமணம். ஏற்கனவே காதலியை பெண் கேட்டு தன் தாய் வேறு அவமானப்பட்டு இறந்தும் போய்விட்டாள். திருமணத்தின் முதல் நாளன்று தான் விரும்பிய பெண்ணின் வீட்டின் முன்னால் கூத்துக் கட்ட வேண்டிய பிழைப்பு கொண்ட அந்த எளிய கலைஞனாக கார்த்திக் கண்ணீரோடு “பாடி பறந்த கிளி.. பாதை மறந்ததடி” என ததும்பும் விழிகளோடு பாடிய போது திரையரங்கமே சேர்ந்து அழுதது. அதுவரை அழுகை என்பது மிகை நடிப்பு அம்சங்களில் ஒன்றாக இருந்ததை கார்த்திக் தான் அதன் இறுக்கங்களை தகர்த்து இயல்பின் மொழிக்குள் கொண்டு வந்து அட்டகாசப்படுத்தினார் ‌. அதேபோல வருஷம் 16 திரைப்படத்தின் இறுதிக்காட்சி. எல்லாவற்றையும் இழந்து விட்டு தன் தாய்க்கு முன்பாக கையறு நிலையில் கதறித் தீர்க்கிற மனிதனாக கார்த்திக் பிரமாதப் படுத்திய போது அதை மிகை நடிப்பாக யாருமே உணரவில்லை என்பதுதான் கார்த்திக்கின் கலையழகு. கார்த்திக்கின் பிற்காலம் எல்லா நடிகர்களை போலவும் அமைந்தது என்றாலும்.. கோகுலத்தில் சீதை போன்ற சில அற்புதமான திரைப்படங்களிலும் தான் ஒரு மாபெரும் கலைஞன் என்பதை தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டே இருந்தார். இதேபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்தாலும்.. கார்த்திக் கோகுலத்தில் சீதையில் நடித்த விதம் உலகத் தரமானது. கார்த்திக் போன்ற ஒரு மாபெரும் கலைஞன் தனது கலை வாழ்வின் இறுதிக்காலத்தில் உள்ளத்தை அள்ளித்தா போன்ற வணிக ரீதியிலான காமெடி படங்களில் நடிக்க வேண்டியிருந்தது வரலாற்றின் கோர விசித்திரம். இப்போதும் கார்த்திக் ராவணன்,அனேகன், சந்திரமௌலி போன்ற படங்களில் நடிப்பதை பார்க்க முடிகிறது. அது நான் பார்த்த கார்த்திக் அல்ல. இது வேறு நபர். மன்னனாக வாழ்ந்தவனை பிச்சைக்காரனாக மாற்றி வைத்து அழகு பார்ப்பது தான் காலம் என்ற கொடுங்கோலனின் தீராப் பகடையாட்டமாக இருக்கிறது.
..
ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் ஒரு உணவகத்தில் யாரோ பின்புறத்திலிருந்து என்னை கட்டிப்பிடிக்க.. சட்டெனத் திரும்பி பார்த்த நான் ஒரு நடுத்தர வயதுக்காரரை பார்த்து விட்டு இவர் யாராக இருக்கும் என யோசித்தேன். “அடையாளம் தெரியலையா” என கேட்டவாறே “நான்தாண்டா ரவி” என்று
அணைத்துக்கொண்ட ரவி அண்ணன் அவரது மனைவி, பிள்ளைகளை அறிமுகம் செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணனை பார்க்கிறேன். நாங்கள் மன்னார்குடியிலிருந்து குடிமாறி வந்துவிட்ட பிறகு அண்ணனைப் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை. அண்ணனுக்கு வயதாகி இருந்தது. தலைமுடி நரைத்து விட்டது. பிள்ளைகள் பெரியவர்களாக நின்றார்கள். ஒரு காலத்தில் நாம் கதாநாயகர்களாக பார்த்த அண்ணன்கள் வயதாகி ஒரு சாதாரண மனிதனாக, ஒரு குடும்பஸ்த்தனாக, சகல பாடுகளும் நிரம்பிய எளிய மனிதராக நாம் பார்க்கும் பொழுது உண்மையாகவே வருத்தமாகி விடுகிறது. ரவி அண்ணன் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். நிறைய விசாரித்தார். எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை கேள்விப்பட்டு கண்கள் மின்ன சந்தோஷப்பட்டார். மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டார்.அலைபேசி எண்ணை மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து விடைபெற்றுக் கொண்டோம்.
அப்போதுதான் அவரது அலைபேசி ஒலித்தது. அதே கார்த்திக்கின் மௌனராகம் பிஜிஎம். அண்ணன் என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தார். நான் அப்படியே அதே இடத்திலேயே உறைந்து அமர்ந்து இருந்தேன். என்னைப் பொருத்தவரையில் பெரும்பாலான மனிதர்கள் நினைவுகளிலும், கடந்த காலங்களிலும் தான் வாழ்கிறார்கள். ஏதோ ஒரு திரைப்படத்தில் நான் நான் கேட்ட வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது. “டேப் ரிகார்டரில் உள்ளது போல உண்மையான வாழ்க்கையிலும் ரிவைண்டர் என்கின்ற பொத்தான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..” கவிஞர் விக்ரமாதித்தியனின் கூண்டுப் புலிகள் என்ற ஒரு கவிதையில்…

“கூண்டுப் புலிகள் நன்றாக பழகி விட்டன;
நாறக் கூண்டினை பற்றி எந்த புகாரும் இல்லை:
நேரத்திற்கு இரை..
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்கத் சுகத்திற்கு தடையில்லை

என வரிசையாகச் சொல்லி வரும் அவர்… இறுதியாக

“ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்.”

என அதிர்ந்து முடித்திருப்பார். மனித வாழ்க்கையும் அவ்வாறு தானே இருக்கிறது..

மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் “நினைவில் காடுள்ள மிருகம்” என்கின்ற ஒரு புகழ்பெற்ற கவிதை உண்டு.

“நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.

அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.

அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன.
அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.

அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.

நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.”

அப்படித்தான் ரவி அண்ணன் போல மனிதர்களும். நினைவுகளில் கடந்த காலத்தையும், கூடவே கார்த்திக்கையும் சுமந்துக் கொண்டு அலைந்துக் கொண்டே இருக்கிறார்கள்.