♥️

அந்த அறைக்கு வெளியே யாரோ நடப்பது போன்ற ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. இரவின் புதிரான அடுக்கொன்றின் விசித்திர முடிச்சியின் இடறலில் திடுக்கிட்டு விழித்த போது அருகிலே அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.என்னை தழுவி இருந்த‌‌ அவளது கரங்களை மெதுவாக எடுத்துவிட்டு, அறையின் ஜன்னல்களை திறந்தேன். உறங்கா அந்தப் பெரு நகரம் தன் வரலாற்றுப் பெருமித நினைவுகளில் லயித்து இருந்தது. இரவு ஒரு திரவமென முகிழ்ந்து அந்த முது நகரத்தின் மேனியில் வழிந்துகொண்டிருந்தது. பகலெல்லாம் வேறுமாதிரி காட்சியளிக்கும் அந்த நகரம்
இரவில் மட்டும் நாணமும், மென்மையும் உடைய ஒரு பெண்ணாகி விடுகிற மாயத்தினை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.

“என்னடா பண்ற” என்ற அவளது குரலில் திரும்பிப் பார்த்த நான் என்னை நோக்கி நீண்ட இரண்டு வெற்றுக்கரங்களை கண்டேன். அந்த அழைப்பினை என்னால் எப்போதும் தவிர்க்க முடிந்ததில்லை. அந்தக் கரங்களுக்குள் நான் நுழைந்தபோது மழை நிரப்பிய குளம் ஒன்றில் கால் நனைத்தது போல எப்போதும் அடைகிற ஒரு சிலிர்ப்பினை அடைந்தேன்.

“இந்த ஊர் ஒரு பெண்” என்றேன்.
“வர வர தென்படும் எல்லாவற்றிலும் பெண்ணை உணர்பவனாக.., தேடி அலைபவனாக நீ மாறிக்கொண்டே போகிறாய்..” என்றாள் அவள்.

இது போன்ற தருணங்களில் திக்கு தெரியாத, ஒரு திசையற்ற வெளியாய் அவளது உடல் மாறிப் போவதை நான் உணர்ந்து இருக்கிறேன். திசைகள் தெரியாமல் நான் கலைந்து, அலைவதைதான் பெரும்பாலும் என் கவிதைகளில் அவள் கண்டதாக சொன்னது ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

“எங்கேயாவது வெளியே போவோமா..?” என்று கேட்டாள்.

“இந்த நள்ளிரவிலா..” என சிறகடிப்பின் விரிதலில் ஒரு வானத்தையே அளந்து பார்த்த ஒரு சிறு பறவை போல மாறி இருந்த நான் மென்மையாக கேட்டேன்.

“இது உறங்கா நகரம்.
ஏனெனில்..இந்த நகரத்தின் விழிகளுக்கு இமைகள் கிடையாது.” என்று அவள் சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை.

அப்படியே எழுந்து, கிடைத்த ஆடைகளை அணிந்துகொண்டு.. நாங்கள் காரில் பயணிக்கத் தொடங்கியபோது.. வளைவும், நெளிவும் உடைய அந்த பாதைகள் பெண்ணாக அந்த நகரத்தை நான் உணர்ந்த என் கணிப்பினை உறுதி செய்தன.

நாங்கள் சென்ற பாதையில் எதிர்ப்பட்ட ஒரு பெரிய கோபுரத்தின் வாசலுக்கு முன்னால் என்னை நிறுத்த சொல்லி.. விட்டு காரைவிட்டு இறங்கி,
அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் ஏதோ சிரித்து இவள் பேசிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இந்த பின்னிரவு நேரத்திலும் குளித்து, மஞ்சள் பூசி, நெற்றி நிறைத்து பொட்டிட்டு, பூ விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவிடம் புன்னகையை மட்டும் வாங்கிக்கொண்டு பூ வாங்காமல் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

மீண்டும் காரில் ஏறிக்கொண்ட அவளிடம் “என்ன அந்த அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாய்..?” எனக்கேட்டேன். “அந்த அம்மா பெயர் மீனாட்சி. நேற்று கோவிலில் பார்த்தேன்..” என்றாள் அவள்.
ஏன்.. அந்த அம்மா தோளில் பச்சைக்கிளி ஒன்றைக் காணவில்லை என எனக்குள் கேள்வி எழும்பியதை அவளிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

திடீரென ஏதோ நினைத்தது போல என் தோளில் சாய்ந்து என் இடது கரத்தினை இறுக அணைத்துக் கொண்டாள். ஒரு பெரிய தெப்பக் குளத்திற்கு முன்னால்.. நாங்கள் சென்று சேர்ந்தபோது.. அந்தக் குளத்தில் தண்ணீர் இல்லை. “மீன்கள் இல்லாத குளம்..” என்றேன் நான். எனது பின்னந்தலையை உன்னிப்பாக கோதியவாறே.. “அந்தக் குளத்தை பார்க்கின்ற எல்லோரது விழி பார்வைகளும் மீன்களாக மாறி உலவிக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது..” என்றாள் அவள்.
“ஆனால் இது தண்ணீர் இல்லாத குளம்” என்றேன். “ஒருவகையில் ஆடை இல்லாத பெண்..” என்றாள் அவள்.

“எப்போதும் எதிலும் முழு நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ள மனித மனம் ஏனோ விரும்புவதில்லை‌” என்று சொன்ன என்னை பார்த்து அவள் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள்.

“உன் வெட்கம் எப்போதுமே ஒரு அல்லி மலரை தான் நினைவு படுத்துகிறது..” என்றேன். அவள் சற்று கடுமையாக
“ஆனால் இது மல்லிகையின் ஊர்.” என்றாள்.. ” ஓ அதனால்தான்
நீ அடிக்கடி பெருமூச்சு விடுகிறாயோ..?” என்று கேட்ட என்னை பார்த்து மெலிதாக சிரித்தாள்.

“சரி வா.. போவோம்” என்றவாறே அவள் திரும்பியபோது அவளது பின்னப்படாத கேசத்தில் சில நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.

மீண்டும் அறைக்கு நாங்கள் திரும்பியபோது அறையின் சுவர்களில் பாசியேறி, பசுமை நிறைந்த கொடிகள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு, படர்ந்திருந்தன. அறைக்குள் ஒரு கடல் உருவாகியிருந்ததையும், அதில் சில தங்க மீன்கள் உலவிக்கொண்டு இருந்ததையும் நாங்கள் கவனித்தோம்.
எங்கள் கட்டிலின் தலைமாட்டில் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று தழைத்து வளர்ந்து, கிளைகள் செழித்து, விழுதுகளோடு பூரித்து நின்றதை நாங்கள் கண்டோம்.

இதுவெல்லாம் எப்படி என்று நாங்கள் இருவருமே யோசிக்கவில்லை. அந்தக் மாய கணத்தின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அந்த பெருமரத்தில் மடியில் தலை சாய்ந்தோம். எங்களை சுற்றி அடர்வனம் ஒன்றின் சூரிய ஒளி படாத
தரையின் குளிர்ச்சி பரவத்தொடங்கியது.

“நழுவிக் கொண்டே போகும் உன் விரல்களின் நுனியில் மயிற்பீலி முளைத்திருக்கிறது” என்றாள் அவள். அப்போதுதான் சற்றே மூடியிருக்கும் அவளது விழிகளில் இருந்து சிறு பறவை ஒன்றின் இறகு ஒன்று பிரிந்து அந்தர வெளியில் மிதக்கத் தொடங்கியது.

எங்கிருந்தோ வந்த நிலவு எங்களது இருவர் கண்களிலும் நுழைந்ததை நாங்கள் உணர்ந்தோம். எப்போதும் அவள் அருகில் இருக்கும்போது மென்மையாக உணரும் தாழம்பூவின் வாசனை அன்று மட்டும் மல்லிகை பூ மணமாக நான் உணர்ந்தது குறித்து எனக்கு அப்போது எந்த வியப்பும் இல்லை.

…..

எப்போதோ வாழ்வின் எதிர்பாராத தருணங்களில், அவளை நான் நழுவ விட்ட பிரிதான, வெகு காலத்திற்குப் பிறகு..

தனித்து நான் அந்த முது நகரத்திற்கு சென்றபோது ஒரு நள்ளிரவில் பூ விற்ற அந்த அம்மாவைத் தேடி அலைந்தேன்.

எதிர்பார்த்தது போல அதே கோபுரம். அதே வாசல்.

அங்கே யாரோ ஒரு பெண் மூப்பேறாமல் இருந்த அதே அம்மாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

அருகே யாரோ ஒரு இளைஞன் இதையெல்லாம் புன்னகையோடு கவனித்துக்கொண்டே நிற்கிறான்.

எனக்கு எதுவும் தோன்றாமல் நான் அறைக்குத் திரும்பியபோது.. நான் எதிர்பார்த்தது போல அந்த அறை ஒரு வனமாக மாறிவிடவில்லை என்பதுதான் அக்கணநேரத்து ஆறுதலாக எனக்கு அமைந்தது.

 

(நன்றி முத்தங்கள்.
இசைக்கு: இசைஞானி, காணொளி வடிவமைப்பிற்கு: கிருஷ் நடேஷ்)