♥️

ஒரு இளவேனில் காலத்தின் பின் மதிய நேரத்தில் கடலை பார்க்கப் போவோம்‌‌ என அவள் திடீரென கேட்டபோது ஏன் எதற்கு என தோன்றாமல் உடனே கிளம்பிவிட்டேன். சில அழைப்புகள் திரும்ப இயலா ஒற்றையடி பாதை போல. ஏற்பதைத்தவிர வேறு எதுவும் வழியில்லை.

எங்கோ தொலைதூரத்தில் கடலோசை கேட்கின்ற திசையில் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம்.

இங்கேயே எனக்கு அலைகளின் ஒலி கேட்கிறது என்றாள்.

எனக்கும் அலைகளில் கால் நனைக்காமலே கால்கள் நனைந்து விட்டது போல ஒரு உணர்வு.

உப்பினை சுமந்து உலர்ந்து திரியும் காற்றின் கரம்பிடித்து சென்றோம்.

சில மணி நேரங்களில் கடல் எங்கள் காலடிகளுக்கு சில அடி தூரத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
மின்னிய கண்களோடு ததும்பிக் கொண்டிருந்த அந்த கடலை பார்ததுக்கொண்டிருந்தவள் சட்டென என்னை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

ஒரு நீரலைப் போல அவள் மாறி இருந்தாள். அவள் விழிகள் முழுக்க இளநீலம் பரவி எதிரே விரிந்து கிடக்கும் கடலின் நகலாக அவள் மாறி இருக்கிறாள் என எனக்குத் தோன்றியது.

அவளை அணைத்த அப்பொழுதில் தான் காதலலை நிரம்புகிற தேநீர் குவளையாக நானும், என்னுள் நிரம்புகிற, தாகம் மிக்க என் ஆன்மாவின் வடிவத்திற்கு ஏற்றாற் போல் வார்த்துக்கொள்ளும் நேசத்தின் நீராக அவளும் மாறிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டேன்.

நீர்மையும், நடுக்கடல் ஆழமும் , அளக்க முடியா அமைதியும், எப்போதும் பெண்களுக்கு உரியவை. எனவேதான் கடலும் ஒரு பெண் என்று
அறிந்ததெல்லாம் புத்தகங்களில் மட்டும் காணப்படும் பொய்யழகு அல்ல, உண்மையின் தரிசனம் எனத் தெரிந்துகொண்டேன்.

♥️

எப்போதும் பார்த்தாலும் கடல் மட்டும் பார்க்கப் பார்க்க புதிதாகவே இருக்கிறது என்று முணுமுணுத்தாள்.

ஏறக்குறைய உன்னைப்போல என நான் அக்கணம் நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை.

ஏதோ யோசித்தவாறே.. உள்ளங்கையில் மணலை எடுத்து கொட்டிய வாறே..
இந்த மணல் துகள்களை என்றாவது எண்ண வேண்டும் என யோசித்து இருக்கிறாயா என விசித்திரமாக கேட்டாள்.

இந்த உலகத்தில் காதல் கதைகளை நான் கணக்கெடுப்பதில்லை என்றேன்.

சிரித்துக்கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து எப்போதும் ஏன் கடல் ஆச்சரியமாகவே இருக்கிறது என விழிவிரிய கேட்டாள்.

ஆழம் மிக்க எதுவும் ஆச்சரியமாக தான் இருக்கும். பெண்களைப் போல.
என்றேன்.

பெண்கள் அலையடிக்கும் கடல் என்றாலும் ஆண்கள் என்னவோ கொந்தளிக்கும் எங்கள் மீது எப்படியோ தத்தளித்து படகோட்டி விடுகிறீர்கள் என நக்கலாக சற்றே கடுப்புடன் சொன்னாள்.

நான் அமைதியாக கடலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். சில விஷயங்களுக்கு பதில் அளிக்கக் கூடாது. பெண்கள் ஒன்றிலிருந்து வேறொன்றை உருவாக்குவதில் தேர்ந்தவர்கள். சிறிய அலைக்கு பின்னால் வரும் பேரலை போல.

ஏதோ அவள் விழிகள் கலங்கி இருந்ததாக எனக்குத் தோன்றியது.

என்ன ஆயிற்று எனக் கேட்டதற்கு எப்போதும் உலகத்தில் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பதிலை அவளும் ஒருவித இறுக்கத்தோடு சொன்னாள்..

“ஒன்றுமில்லை”.

அந்த ஒன்றும் இல்லை என்பதில்தான் ஓராயிரம் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்துதான் வைத்திருக்கிறான்.

எங்களிடையே ஒரு உருகா மௌனம் ஒன்று பாதரசம் போல மிதந்துகொண்டிருந்தது

நீ வர வர அதோ அந்த பாறை போல இறுகி விட்டாய் என்றாள்.

நீ கவனித்தாயா.. அப்போதும் உன் கால்களை உரசும் அலைகளை தான் நான் தழுவிக் கொண்டு இருக்கிறேன் என்றேன்.

நிமிர்ந்து பார்த்தாள்.

ஏதேதோ பேசி சொற்களின் மயக்க கூட்டில் என்ன வைத்திருக்கிறாய் என தீவிரமான குரலில் சொன்னாள்.

அமைதியாக இருந்தோம்.

இவையெல்லாம் சொற்களை வைத்துக்கொண்டு நான் நிகழ்த்தும் மாய விளையாட்டு என நீ நம்புகிறாயா.. என நான் அவளிடம் உயிர் துடிக்கும் வேதனையோடு கேட்டபோது சில நொடிகளுக்கு அலைகள் எங்கள் பக்கம் வரவில்லை.

பதில் அளிக்காமல் அவள் அமைதியாக இருந்தாள்.

உன்னிடம் நான் சொல்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னாலும் உண்மையின் உதிரம் வழிகிற அசலான இதயம் ஒன்று வலியோடு அசைந்து கொண்டிருக்கிறது என்றேன்.

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதிர்பார்க்காத தருணம் ஒன்றில் அலை வீசும் காற்றில் மிதந்து வந்த நீர்த்துளி ஒன்று எங்கள் முகத்தில் பட்டு தெறித்து சிலிர்ப்பை உண்டாக்கிய அந்த நொடியில் எதையோ உணர்ந்தவள் என் தலையை மெதுவாக கோதினாள்.

அடுத்தடுத்து வருகிற இரு அலைகள் போல.‌. உன் உடன் இருக்கும் போது அளவற்ற மகிழ்ச்சியையும், பிரிவின் துயரில் அளவற்ற கண்ணீரையும் சுமந்தே அலைகிறேன் என்று ஏக்கத்துடன் சொன்னாள் அவள்.

அவள் கரங்களை மென்மையாய் பற்றினேன்.

அந்த நேரத்தில் வீசுகிற காற்றுக்கு லயம் பிடித்து அலைபாய்ந்து கொண்டிருந்த அவளின் கூந்தலை நான் கண்டேன். எப்போதும் அதை ஒரு கடலாகத்தான் நான் உணர்ந்திருக்கிறேன். அதன் கருநிற அலைகளில் எத்தனையோ முறை தொலைந்து இருக்கிறேன்.

தனித்திருக்கும் போது நாங்கள் பித்துப்பிடித்து ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்து மகிழ்ந்து இருந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி அவள் சரியாக உணர்ந்து விட்டாள் என்பதை சிவப்பேறுகிற அவளது கன்ன கதுப்புகள் காட்டின.

ஏதோ நினைத்துக்கொண்டே பேச்சை மாற்றுவதாக கருதி.. இந்தக் கடலுக்கு என்ன பெயர் என ஒரு சிறுமி போல அவள் கேட்டாள்.

இந்த கணத்தில் இந்தக் கடலுக்கு உன் பெயர்தான் என்று அவள் முகம் பார்த்து சொன்ன போது..

அவள் அவளுக்குள் ஒரு கடலை உருவாக்கிக்கொண்டு, ஏற்கனவே ஒரு கடலாகி போயிருந்த என் மீது வெட்கத்துடன் சாய்ந்துக்கொண்டாள்.

கடல் பார்க்க சென்ற எங்களை.. கடல் பார்த்துக்கொண்டிருந்தது.

❤️

மணி செந்தில்‌.

❤️

காட்சித்துளிக்கு கிருஷ் நடேஷ்க்கும்..
கவிதை அலைக்கு அண்ணன் அறிவுமதிக்கும்,
இசைக்கடலுக்கு இசைஞானிக்கும்
ஈர முத்தங்கள்.

❤️