❤️❤️❤️❤️❤️❤️❤️

தம்பி குடவாசல் மணிகண்டனின் திருமணத்திற்கு திருவாரூர் வரை என் அம்மா சென்று வந்தது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களுக்கு இந்தத் திருமணம் குறித்து உள்ளூர ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார்கள் என நான் அறிந்தே இருக்கிறேன். அவன் சக்கர நாற்காலியில் நாம் தமிழர் கூட்டத்திற்கு பாடுவதற்காக வரும் போதெல்லாம் அம்மா அருகில் சென்று நின்று கொள்வார்கள். ஒருபோதும் அவனுக்காக நான் எந்த சகாயமும் செய்ததில்லை. அவன் வருவான். பாட அனுமதி கேட்டு வற்புறுத்துவான். பிடிவாதம் பிடித்து பாடியும் விடுவான்.

கால் நடக்க முடியாதவர்களுக்கு , மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பெண் கிடைப்பதில்லை. உடல் குறைபாடுள்ள பெண்கள் நிலை இன்னும் மோசம். நானும், தம்பி மணிகண்டனும் கொஞ்சம் அதில் விதிவிலக்கு. மனதைப் பார்த்து காதலியுங்கள் என்றெல்லாம் புத்தகத்தில் வரிகள் மின்னும் போது நானெல்லாம் சிரித்துக் கொள்வேன். அப்படி எல்லாம் எந்த காதலும் பிறக்காது. அப்படி பிறந்தால் அது குறுகிய கால அனுதாபமாகத்தான் இருக்கும் என்பதை என்னை ஒத்த பலர் வாழ்வில் நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

தம்பி மணிகண்டன் திருமண புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கு எனது கடந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. திருமணத்தன்று நான் தடுக்கி விழுந்து விடக்கூடாது என ‌ திருமணத்திற்கு முதல் நாள் நான் மண்டபத்திற்கு சென்று‌ என் அம்மா முன்னிலையில் ஒரு இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ராஜபார்வை என்ற ஒரு படம் உண்டு. கமலஹாசனின் 100வது திரைப்படம். கண்பார்வை திறன் அற்றவராக கமல் அதில் திறம்பட நடித்திருப்பார். எந்த அனுதாபத்தையும் எதிர்பார்க்காத கண் பார்வைத் திறனற்ற ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் சரியாக போகவில்லை என்பார்கள். அந்தப் படத்தின் தோல்வியில் தான் ‌ கமல் வெறுப்பில் சில வணிக திரைப்படங்களில் நடித்ததாகவும் சொல்வார்கள்.

அந்தத் திரைப்படத்தில் கண் பார்வைத் திறனற்ற கமலஹாசனின் வீடு அவர் புழங்குவதற்கு ஏற்ப திட்டமிட்ட அடிகளில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். சிறிது இடம்மாறி போனாலும்‌ அவர் தடுமாறி விடுவார். ஒருமுறை கதாநாயகி மாதவி வீட்டிற்கு வரும்போது சில பொருட்களை இடம் மாற்றி வைத்து விட, கமல் தடுமாறி விடுவார். இந்த நுட்பமான திரைப்படக் காட்சி எங்களைப் போன்றோரின் அனுதாபம் கோராத திட்டமிடலுடன் கூடிய ஒரு வாழ்வியலை ஆவணம் ஆக்கிய மிக முக்கியமான காட்சி. மாற்றுத்திறனாளிகளை போற்றுவதாக கூறிக்கொண்டு ராகவா லாரன்ஸ் போன்ற கோமாளிகள் எடுக்கின்ற முட்டாள்தனமான படம் அல்ல அது. படத்தின் முடிவு கூட மகிழ்ச்சியுடன் தான் இருக்கும். உடல் குறைபாடுள்ள சகமனிதனின் சுயமதிப்பை பற்றி ஆராய்கிற ராஜபார்வை தமிழின் மிக முக்கியமான ஒரு திரைப்படம்.

எந்த மாற்றுத்திறனாளியும் அனுதாபம்‌ கோருவதில்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை இடையூறு செய்யாத ஒரு உலகம். ஆனாலும் உலகம் அவ்வாறு இல்லை தானே..

அன்பின் மிகுதியால் சிலர் எங்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு எங்களுடைய சமநிலை தவறுவது போல சில செயல்களை செய்து விடுவார்கள். குறிப்பாக எனக்கெல்லாம் வலது கையை பயன்படுத்தி இடதுகையை காலில் ஊன்றிக்கொண்டு நடந்து செல்லும் உடலமைப்பு. ஆனால் உதவி செய்ய வருபவர் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மாற்றி வேறு கையைப் பிடிக்கும் போது நான் தடுமாறி விடுகிறேன். அது அவர்களது பிழையல்ல. அது அன்பின் ஒரு பகுதி என்று‌ நானும் உணர்ந்திருக்கிறேன்.

எங்கள் அமைப்பில் புதிதாக சேர்ந்த நண்பர் ஒருவர் என நேரடியாக அதுவரை பார்த்திராத ஒருவர், தஞ்சை கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னை முதன்முதலாக பார்த்தார்.‌ இன்று அவர் அலைபேசியில் என்னை அழைத்து இந்த உடல் சூழ்நிலையிலும் நீங்கள் கட்சி வேலை செய்கிறீர்கள், யூ ஆர் கிரேட் என்றெல்லாம் அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அதுகுறித்து நீண் ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அமைப்பில் வேலை செய்வதுதான் என்னை சமநிலையில் வைத்திருக்கிறது என்பதை எப்படி அவரிடம் விளக்கி புரிய வைக்க முடியும் என்பதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.

நான் உலகத்தில் அதிகம் விரும்பும்‌ அனைவருமே என்னிடம் அனுதாபம் காட்டாதவர்கள். குறிப்பாக என் அம்மா. பிறகு அண்ணன் சீமான். பின்னர் என் மனைவி உள்ளிட்ட சில பெண்கள் என இவர்கள் யாருமே என்னிடம் அனுதாபம் காட்டியதில்லை. என்னை வெகுவாக விரும்பிய (disclaimer: அது மிக நீண்ட காலத்திற்கு முன்னால்…) ஒரு பெண் என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீண்ட பயணத்தைக் கொண்ட ஒரு பணிக்கு என்னை அவள் அழைத்த போது என் உடல் நிலையை சிந்தித்து தான் இதை கேட்கிறாயா என நான் கேட்டதற்கு “உன்னால் ஒரு விஷயம் முடியாது என்று நான் இதுவரை நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் பார்வையில் இயல்பான மற்றவர்களைப் போலத்தான் நீயும் இருக்கிறாய். கிளம்பி வாடா”என்று அலட்சியமாகச் சொன்னாள்.

திருமணத்திற்காக நான் பெண் பார்க்கும்போது .. என் மனைவியிடம் நான் ஏதோ அறிவுரை சொல்வது போல பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம் எனவும் பிடித்திருந்தால் மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், விளக்கமாக அறிவுரை கூறி என் உடல் இருக்கும் தகுதி குறித்து அவளிடம் விளக்கி பேசினேன்.

அதை எல்லாம் அமைதியாக கேட்டு விட்டு நான் பேசிய எதையும் பொருட்படுத்தாமல், அவள் அப்பாவிடம் போய் சென்று “எனக்குத் திருமணம் என்ற ஒன்று ஆனால் இவரோடு தான்” என்று பெரியோர்களால் பேசப்பட்ட சாதாரண திருமணத்தை ஒரு அழகான காதல் திருமணமாக என் மனைவி மாற்றி விட்டாள்.

இந்த வரிசையில் என்னை மிகவும் வெறுக்கும் என் அரசியல் எதிரிகளும் வருகிறார்கள். அவர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் வசவுகளை எத்தனையோ முறை நான் ரசித்து இருக்கிறேன். அவர்களுக்கு நான் இவ்வளவு தொந்தரவாக இருப்பது குறித்து மட்டுமே வருந்தி இருக்கிறேனே தவிர, என் உடல் குறைபாட்டினை குறித்து எதையும் பொருட்படுத்தாது, அனுதாபமோ, கருணையோ காட்டாது என்னை தீவிரமாக எதிர்க்கும் அவர்களது எதிர்ப்பு கூட நான் விரும்புகிற ஒன்றுதான்.

ஏனெனில் ஒரு உலகம் இவ்வாறு அமைய எங்களைப் போன்றோருக்கு மிக மிக அரிது. எனது மகன்களுக்கு என் அப்பாவால் எல்லாம் முடியும் என்கிற மகத்தான நம்பிக்கை இருக்கிறது. அது நான் கொடுத்தது இல்லை. அவர்களாகவே மனதில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பல இடங்களுக்கு எனது மூத்த மகன் சிபி தான் என்‌ உடன் வருகிறான். என் கட்சி உறவுகள் போலவே அவனும் கவனமாக என்னை அழைத்துச் செல்கிறான்.

அண்ணன் சீமான் எப்போதும் நான் மேடை ஏறும் போது பார்த்துக் கொண்டிருப்பதாக பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். என்னை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். நான் தடுமாறி விடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டு இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். சில சமயங்களில் தடுமாறும் போது அவரது சிறிய கணைப்பு போன்ற ஒரு ஒலி என்னை எச்சரித்து சுதாரிக்க வைத்திருக்கிறது. ஒருபோதும் என் அண்ணன் சீமான் எனக்கு எவ்வித சார்பும் செய்தததில்லை. உன்னால் முடியாது என்று அவர் எப்போதும் சொன்னதில்லை. இன்னும் உன்னால் முடியும் என்றுதான் என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அவர் என் அண்ணன்.

அந்த வகையில் என்னை மதிப்பு மிகுந்தவனாக இந்த உலகம் நடத்தியிருக்கிறது. தம்பி மணிகண்டனுக்கும் ஏறக்குறைய அப்படித்தான். நான் எல்லாம் அவனை கடுமையாக திட்டி இருக்கிறேன். அவனும் சளைத்தவன் அல்ல. கல்லூரி வாழ்க்கை தொடங்கி சகலத்திலும் அவன் சேட்டைக்காரன் தான். சிறந்த பாடகன். பாடிப் பாடியே காதலித்து மனதுக்குப் பிடித்தவளைக் கரம் பிடித்தும் விட்டான்.தம்பி குடவாசல் மணிகண்டனின் மணவாழ்க்கை என்னைப்போலவே மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைய நான் மனதார வாழ்த்துகிறேன்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய என் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அந்த மகிழ்ச்சியின் ஊடே நெடுங்காலமாய் சுமந்துவரும் ஒரு பெரும் வலியை அவர்கள் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நான் அந்த நேரத்தில் உணர்ந்தேன்.

அம்மா என்றால் அப்படித்தானே.. மணிகண்டனுக்கு திருமணம் நடந்தால் என்ன.. எங்களைப் போல வேறு யாருக்கு நடந்தால் என்ன..

அம்மாவுக்கு எல்லாம் ஒன்றுதான்.

ஏனெனில் உலகத்தில் அம்மாக்கள் ஒரே மாதிரிதான்.

❤️