1358672
நீல நதிக் கரையோரம்
இடறிய சொற்களை
சேகரித்து
ஒரு கதை வீடு
கட்டினேன்..
நாயகனும், நாயகியும்
கொஞ்சி குலாவிய
கதை வீட்டிற்கு
வெறுமை நிரம்பி
கோப்பை தளும்பிய
தருணத்தில் வில்லன்
ஒருவன் வந்தமர்ந்தான்..
பின்னரவின் கனவொன்றில்
உதிர்ந்த புன்னகை
வாசத்தோடு விதூசகன்
ஒருவனும் வந்து சேர்ந்தான்.
அலை கடல் ஓரமாய்
ஒதுங்கிய ஒற்றை
செருப்பு,
நதியில் மிதந்த
பெளர்ணமி நிலவின்
நிழல்
குப்பைத் தொட்டியில்
கிடந்த  ஒஷோவின்
கிழிந்த பக்கம்
என அடுக்கடுக்காய்
துணை நடிகர்கள் வந்து
சேர்ந்தனர்
அங்கே நவரசம் நிரம்பிய
கதைப் பின்னல்
தன்னைத்தானே பின்னிக்
கொண்டது..
எழிலார்ந்த உரு கொண்டு
மின்னலின் நுனி விழியாய்
விளைந்த பெண்ணொருத்தி
வில்லனின் துணையாய்
குடியேற
கதைப் பின்னலில்
 துருத்திய
சுரமாய்..சுயமாய்
 துடித்தது
யாரோ ஒருவனின்
இடது விழி ஒன்று..
சட்டென்று வீசப் பட்ட
கல் வீசலில்
கலைந்து போன
நதி நிலா பிம்பமாய்
கதை வீடு சரடு
பிரிந்து கலைந்தது
கலைந்த கதை வீட்டின்
அருகே  நிராசையாய்
போன கனவுகள் சில
சிதறிக் கிடப்பதாய்
மனநிலை கலைந்த
ஒருவன் உளறி விட்டு
போனான்….