Modern art wallpaper 05 1280x720
கோப்பைகளில்
குடியேறிய
இரவொன்றில்
வெறியின் முனை
கொண்டு மானுட
சாசனமொன்றை
எழுதவதாக அறிவித்தான்
நவன்..
விடிவதற்குள் தன்
பக்கங்களில் சூரியனை
இழுத்து வந்து புகுத்தி
விட கனவுகளின்
வெப்பத்தை கடத்தி
வந்திருக்கிறான்..
மிதக்கும் ஏடுகளில்
அடுக்கடுக்காய்
வார்த்தைகளை
நவன் வசப்படுத்தி
வரைந்திருந்த
பொழுதில்…
முறிந்த குழலில்
சொட்டிய இசையாய்
புனைவின் 68 ஆம்
பக்கத்திற்கு அருகே
அழுதுக் கொண்டிருந்த
அவனை சந்தித்து
விட்டான்…
என்னை கொன்று விடு
துயர் மிகு வரிகளால்..
என்று இறைஞ்சியவனின்
மூடிய இமைகளில்
சிறகுகள் வரையப்பட்டிருந்தன…
எழுதாப் பக்கங்களில்
தளும்பிக் கொண்டிருந்த
வேட்கை மேகமொன்றில்
அழுத அவனின்
விழி துடைத்து
இலட்சிய சமூகத்தின்
கனவு மனிதனாய் அமர
வைத்தான் நவன்..
புன்னகை கோலோட்சி
மானுட பிரகடனத்தை
முழக்க குரலால் அவன்
இசைக்க தொடங்கும்
போதுதான் அது நடந்தது..
காற்றின் நுனி கிழித்து
ஆழ் கனவின்
பள்ளத்தாக்கு ஒன்றில்..
நாக்கு தள்ளி
செத்துப் போனான்
இறுதிச் சமூகத்து
இலட்சிய மனிதன்…
உதிரம் உறைந்திருந்த
வெள்ளைப் பக்கத்தில்
தனது கண்ணீரால்
நவன் இவ்வாறு
எழுதினான்..
அவன் மரணத்திற்கு
நான் காரணமல்ல..
காற்று வீசி
கண்ணீர் வரிகளை
உலர்த்தி போனதோடு..,
மானுட வரலாற்றின்
கடைசி வரி முடிவிலியாய்
அந்தரத்தில் அலைகிறது..
-மணி செந்தில்