thalaivar1

அடிமை இடுகாட்டின்
பற்றி எரியும் வரலாற்று
பெருமித பிணங்களுக்கு
நடுவே…

குனிந்த தலைகளாய்..
முணுமுணுத்த உதடுகளாய்..
கடந்துப் போன துயரோடிய
சாட்சிகளாய்..

நீண்டிருந்த வரிசைகளுக்கு
நடுவே..
ஏதிலியாய் ஏதுமற்று
எதுவுமற்று எல்லாமும் அற்று
மானம் விற்று வாழ்ந்த
மானுட சவங்களுக்கு நடுவே..

உதிரம் உறைந்த ஆயுத முனைகள்
குத்தி கிழிக்கும் சதை துணுக்கில்
சதா ஒழுகிக் கொண்டிருக்கும்
சிங்க இன இறுமாப்புகளுக்கு
நடுவே..

வலிகளின் தடம் சுமந்து
இழப்பின் பெருமூச்சாய்
அனல் காற்று அலைகழித்த
அவலங்களுக்கு நடுவே..

அலைகழிக்கும்
துயர் காற்றின்
சிறகுகள்
ஒடித்து
சீறி பாய்ந்தது
ஒளி கமழும் தோட்டா ஒன்று…

பஃருளி ஆற்றின்
பன்மலை அடுக்கமும்,
பத்து தலையாய்
பரவிக் கிடந்த ஒற்றை
உடலின் உயிர் நுனியும்,
சோழத்து கொடியில்
பாய்ந்திருந்த வரிப்புலியின்
தோல் வரியும்
சிலிர்த்தன..சிலிர்த்தன..

அடுக்கடுக்காய்
எழுந்த ஆதிக்க அலைகளின்
வளை நெறித்து
தாழ் பணிந்த முதுகுகளின்
நிமிர்வாய் உலவியது
அந்த தோட்டாவின் சீறல்..

பேரினவாத
பூட்ஸ் கால்களில்
மிதிப்பட்டு கிடந்த
விடுதலை
விழிகளின் விலங்கொடிக்க
புதிய பூபாளத்தினை
புகட்டி விட்டுப் போனது
அந்த தோட்டாவின் பாடல்..

குருதிச் சிவப்பேறிய
விளைநிலத்தில்…
மண்டையோடுகள்
உருண்டு,புரண்ட
அலைகடல் ஓரத்தில்..

தொடைமிச்சங்களும்,
மார்பு கறிகளும்
விற்கப்பட்ட
சாத்தான் வீதிகளில்…

தாழ்ந்திருந்த தலைகளை
வெட்டத்துணியும் வல்லாதிக்க
வாட்களின் மின்னிய
நுனிகளுக்கு அப்பால்..

பெருமுழக்கத்தோடு
தோட்டாவின் பாடல்
கேட்டிற்று..

இருண்மை வீதிகளில்
உயிரற்ற உடலாய்
கிடந்த
மானுட வாழ்வின்
மகத்தான பிரகடனம்
தோட்டாவின்
ஒளிச்சிறகுகளால்
உயிர்த்தெழுந்தது.

அது ஒற்றைத் தோட்டா
அல்ல..

எம் இனத்தின் பெரும் வரலாறு..