07-1428394570-andhra-encounter43

 

பால்யத்தின்
பாடப்புத்தகங்களிலும்,
தேவதைக் கதைகளிலும்
சட்டென சந்தித்திட
இயலும் சாதாரண
மரம் வெட்டிகள்தான்
நாங்களும்..

தங்கக்கோடாலியை
எடுத்து தருகிற
தேவதையை
யாரோ கற்பழித்து
போட்ட தினத்தில் தான்…

அடிவயிற்றுப்
பசித்தீக்காக
நாங்கள் வெயில்
அலையும் வனத்தில்
நின்று கொண்டிருந்தோம்..

எம் காதோரம்
பெருகுகிற வியர்வைத்
துளிகளுக்குள்
வீட்டில் பூனை உறங்குகிற
எம் வீட்டு அடுப்படிக்
கதைகள் ஒளிந்திருக்கின்றன…

புன்னகை மறந்த எம்
உதடுகளில்
பசித்திருக்கும்
எம் குழந்தைகள்
உதிர்க்கும்
நடுநிசி முனகல்களின்
சாயல் படிந்திருக்கின்றன…

கனவுகளில் கூட
அச்சம் துறக்க மறக்கிற
நிலைக்குத்திய
விழிகளுக்கு சொந்தக்காரர்கள்
நாங்கள்…

அப்படித்தான்
அன்றும்
நீண்டது முடியத்துடிக்கிற
பயணமொன்றின்
இறுதி ஊர்வலம்..

அன்றுதான்…
காற்றின் துடுப்புகளை
முறித்துப்போட்டு
எங்களை நோக்கி
முன்னேறிய துப்பாக்கி
ரவைகளை நாங்கள் சந்தித்தோம்..

உடனே ஏதாவது சொல்லி
துப்பாக்கி சீறலில்
கருணை கசிகிறதா
என கணத்தில் கணக்கிட்டோம்..

நாங்கள் இந்தியர்கள்
என்றோம்.

இல்லாத முகவரியை
சுமக்கிற அடையாளமற்ற
அஞ்சலட்டைகள்
என்றன துப்பாக்கி ரவைகள்..

நாங்கள் திராவிடர்கள்
என்றோம்..

உங்களை வைத்து
பிழைப்பதற்காக
எங்கள் எஜமானர்கள்
செய்து வைத்து வைத்த
நூற்றாண்டு மோசடி
என்று நகைத்தன
துப்பாக்கி ரவைகள்..

நாங்கள் மனிதர்கள்
என்றோம்..

உயருகிற அதிகார முனைகள்
என்றுமே மனிதர்களை
தின்றுதான் பசியாறுகின்றன
என்று தர்க்கம் உரைத்தன
துப்பாக்கி ரவைகள்..

இறுதியாக
சொன்னோம்….
நாங்கள் தமிழர்கள் என…

உயிருள்ள சடலங்கள்
உயிரற்று விழுவதால்
எழப்போவது
எதுவுமில்லை..
என்று காறி உமிழ்ந்த
படியே
சீறி துளைத்தன
ரவைகள்…