Naam-Tamilar-katchi-Ina-ezhuchi-Manadu-TRICHY-Photos-3

 

மாநாட்டிற்கு முந்தைய நாள் அது. அந்த நள்ளிரவு நேரத்தில் அந்த மாபெரும் மாநாட்டு திடலில் தனியே அண்ணன் சீமான் மட்டும் நின்றுக் கொண்டிருந்தார் . நான் அவரை கவனித்த போது அவர் தனித்திருந்தார். சற்று தொலைவில் தான் நாங்கள் அனைவரும் இருந்தோம். ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாகி இருந்த அவர் தன் வாழ்நாளில் மறக்க முடியா நாளொன்றாக மறுநாள் அமையப் போவதை எதிர் நோக்கி இருந்தார். மெல்ல தன் காலடிகளை கவனித்தவாறே அந்த மாநாட்டு திடலெங்கும் நடந்து வந்துக் கொண்டிருந்தார்.  இது வரை அவர் நடந்த பாதை பூக்களால் நிரம்பப் பெற்றது அல்ல.. பாதையை தேடாதே..உருவாக்கு என்று அறிவித்தவரின் தம்பியாயிற்றே..  இதுவரை யாருமே சமைக்காத புதிய பாதையை கடந்த நான்கு வருடங்களாக தனது கடும் உழைப்பினால் சீமான் உருவாக்கி இருந்தார். விமர்சனங்களும், வசவுகளும், எதிர்ப்புகளும் எதிர்பட்ட அப்பாதையில் விமர்சனங்கள் என்பவை வெறும் சொற்கள் தானே ஒழிய,கற்கள் அல்ல என்ற தன் அண்ணனின் சொற்களோடு அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.  அவர் யாரையும் நம்பி நின்று நான் கண்டதில்லை. அடிக்கடி உரையாடல்களில் அவர் என்னிடம் பதிய வைக்கும் சொற்கள்..” தம்பி ..இன்று என்னுடன் நிற்கும் நீங்கள் அனைவரும் இதை விட்டு விட்டுப் போனாலும்.. நான் தனியே நின்று போராடி சாவேனே ஒழிய ,ஒரு போதும் இதிலிருந்து பின் வாங்க மாட்டேன்..”

உண்மையில் இச்சொற்களுக்கு அவர் மிக நேர்மையுடையவராக இருந்தார். கட்சியில் அவ்வப்போது நிகழும் சலசலப்புகளுக்கும் ,வெளியேற்றங்களுக்கும் அவர் சங்கடப்பட்டதே இல்லை. ஏனெனில் எங்கள் யாரையும் நம்பி அவர் இல்லை. ஆனால் அவரை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மே 24 -2015 திருச்சியில் நடந்த  இனஎழுச்சி அரசியல் மாநாடு நிரூபித்துக் காட்டி விட்டது.

மாநாட்டு நாளுக்கு முந்தைய சில இரவுகளாக அவர் தூக்கத்தை மறந்திருந்தார். இம் மாநாட்டு வெற்றிக்காக எதையும் அர்ப்பணிக்க அவர் தயாராக இருந்தார். அவரே இறங்கி சென்னை நகரத்துவீதிகளில் சுவரொட்டிகள் ஒட்டத் தொடங்கிய போது உடனிருக்கும் நாங்களே அதிர்ந்துப் போனோம்.  அவர் இதயம் முழுக்க இலட்சிய ஆவேசம் அனலடித்துக் கொண்டிருந்தது . அவரது வேகத்திற்கும், சிந்தனை ஓட்டத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் நாங்கள் திணறியது தினந்தோறும் நடந்தது.

 

மாநாட்டு நாளான மே 24 நெருங்க..நெருங்க..முக்கிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இனம் புரியாத பதட்டம் ஒட்டிக் கொண்டது. 5 வருடங்களாக நாங்கள் எழுதிய தேர்வொன்றுக்கு முடிவுகள் தெரியும் நாளாக மே 24 அமையப் போகிறது என நாங்கள் அனைவருமே உணர்ந்தோம்.  மாநாட்டுத் திடலில் மாநாட்டிற்கு முந்தைய நாள் இரவில் மாநாட்டு மேடையில் சீமான் –உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம் என்கிற நான் எழுதிய நூலை பெருந்தமிழர் தியாகம் அய்யா வெளியிட, பெருந்தமிழர் அரப்பா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். தொடர்ச்சியாக ஒரு வாரமாக மாநாட்டுத்திடலில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். மாநாட்டு மேடையை நள்ளிரவு வரை அண்ணன் செந்தமிழன் சீமான் நேரில் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். தனது வாழ்நாள் கனவொன்றினை நிஜமாக்கிட அந்த மனிதர் துடித்துக் கொண்டே இருந்தார்.  அதைத்தான் அவரது பேச்சிலும் அவர் குறிப்பிட்டார். “ நான் இதயத்துடிப்பில் வாழ்பவன் அல்ல , இலட்சியத் துடிப்பில் வாழ்பவன் .

உலகம் முழுக்க இருந்தும் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாட்டுக்கு முதல் நாளிலிருந்து இனமானத்தமிழர்கள் வரத்தொடங்கினார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகிற நாம் தமிழர் உறவுகள் மாநாட்டுத் திடலை ஆர்வமாக சுற்றிப் பார்த்தனர். மலேசியா நாட்டு நாம் தமிழர் உறவுகள் தனிச்சீருடையோடு வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. குடும்பத்தில் நடைபெறும் திருமணத்தில் நெருங்கிய உறவுகள் சந்திப்பது போல நாம் தமிழர் உறவுகள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தும்,கட்டித்தழுவியும், கை உயர்த்தியும் தங்களது அன்பினை பரிமாறிக் கொண்டது அது ஒரு கட்சி மாநாடு என்கிற தோற்றத்தை மாற்றி குடும்ப நிகழ்வு என்கிற தோற்றத்தை அளித்தது.

   மாநாட்டுத் திடலில் மாநாட்டு மேடையின் இருபுறமும் மாவீரர்களின் படமும், புரட்சியாளர்களின் படமும், மொழிப்போர் ஈகிகளின் படமும், தமிழ் முன்னோர்களின் படமும் பொறிக்கப்பட்டு இருந்தது. மாநாடு அன்று விடிய விடிய மாநாட்டு மேடை அமைக்கும் பணி மற்றும் இதர வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விடிந்தப் பிறகும் கூட மாநாட்டுத்திடலில் பணிகள் நடந்துக் கொண்டிருந்தன.

இவ்வேளையில் அண்ணன் சீமானின் மகிழுந்து தஞ்சைக்கு விரைந்துக் கொண்டிருந்தது,

எங்களுடைய மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் அந்நிகழ்வு இல்லை. முந்தைய நாள் இரவிலும் அதற்கான திட்டமிடல் எங்களிடம் இல்லை. ஒரு உரையாடலில் தஞ்சை பெரியகோவில் பற்றி ஒரு பேச்சு வந்தது. அந்தக் கோவிலின் பிரதான வாசலின் வழியே உள்ளே நுழையும் எவரும் அரசியலில் பெரிய சரிவை சந்திப்பார்கள்..அல்லது சாவை சந்திப்பார்கள் என்கிற மூடநம்பிக்கைப் பற்றி அண்ணன் செந்தமிழன் சீமானிடம்பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த மூடநம்பிக்கையை பலப்படுத்தும் வண்ணம் சில சம்பவங்களும் அதற்கு முன் நடைப்பெற்றதையும் விவரித்தார்கள்.அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் அதை நாம் உடைப்போம் என்றார். மாநாட்டு நாளன்று தஞ்சை கோவிலுக்குள் பிரதான நுழைவாயிலின் வழியே செல்வோம் என்றார்.

உடனே உரையாடிக் கொண்டிருந்தவர்கள் ஏன் இதைச்சொன்னோம் என்ற அளவிற்கு சங்கடப்பட்டார்கள்.. அதில் ஒருவர்..இல்லை.நாளை மாநாட்டை வைச்சிகிட்டு என்று மெலிதாக முனக.. அண்ணன் சீமான் உறுதியான தன் குரலில் நாளை கோவிலுக்குள் நுழைவோம். பார்க்கலாம். என்றார்.

பெரியாரின் வழித்தோன்றல்திராவிட இயக்கத்தின் அடையாளம், கடவுள் மறுப்பின் கடவுச்சீட்டு, மூடநம்பிக்கை ஒழிப்பின் முகவரி திமுக தலைவர் கருணாநிதி கூட வங்கிக் கொள்ளையர் போல பக்கவாட்டு சுவற்றில் துளை போட்டு தான் கோவிலுக்குள் வந்தார்..என்றதும்..அண்ணன் அட்டகாசமான சிரிப்போடுநாளை போறோம்.இதை உடைக்கிறோம்பாக்கலாம்.. பாட்டன் கட்டிய கோவில் பேரனை என்ன செய்யுது என

சரி..ஏதோ அண்ணன் சொல்றார். நாளைக்கு பாக்கலாம் என நாங்கள் எல்லாம் இருக்க..மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் தஞ்சையை நோக்கி மகிழுந்து விரைந்தது..

புலிக் கொடி மைந்தன்..புலிக்கொடி மன்னனின் கோட்டைக்குள் மூடநம்பிக்கை எரித்த தணலாய் உள் நுழைந்தான்..

கடவுள் மறுப்பாளன் மூடநம்பிக்கை தகர்க்க கோவிலுக்குள் நுழைந்தான்.

மறுநாள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த செய்திபுரட்சிஎன வந்திருந்தது .

அண்ணனிடம் இதைப் பற்றி சொன்ன போதுஅந்த அளவுக்கு ஒரு பொய்யை பரப்பி வைச்சிருக்கானுகடா என சொல்லி சிரித்தார்

 Naam-Tamilar-katchi-Ina-ezhuchi-Manadu-TRICHY-Photos-19

மாநாட்டு நாளான மே 24 அன்று காலை முதலே, தமிழகம் முழுக்க இருந்தும் தமிழர்கள் மாநாட்டுத்திடலில் வந்து குவியத்தொடங்கினார்கள். கடும் வெப்ப நாளான அன்று மதியம் 1 மணிக்கு பிறகு அலை அலையாய் தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இருந்து நாம் தமிழர் கட்சியினர் வாகனங்களில் வரிசையாக வந்து குவியத் தொடங்கினர்.   மாலை சரியாக மணிக்கு மாநாட்டுத்திடலில் புலிக்கொடி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. கொடிப்பாடல் இசைக்க..இசைக்க..வானில் படிப்படியாக ஏறிய புலிக்கொடி காற்றில் அசைந்து பறந்தக் காட்சி அங்கே திரண்டிருந்தவர்களை சிலிர்க்கச்செய்தது.   பின் , கலைவளர்மதி ஐயம்மாள் செந்தமிழ்ச்செல்வன் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியோடு கலை நிகழ்ச்சிகள்  தொடங்கின.. தமிழரின் பாரம்பரிய கலையான வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்வாக அமைந்தது பெருமைக்குரியதாக விளங்கியது. வில்லுப்பாட்டு நிகழ்ச்சி முடிந்ததும், புதுவை சித்தன் கலைக்குழுவினரின் எழுச்சிப்பாடல்கள் தொடங்கியது. ‘தலைமகனே எம் பிரபாகரனே’  என்ற பாடலை புதுவை சித்தன் பாடத்தொடங்கியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. அப்போது, மாநாட்டுத் திடலுக்குள் நுழைந்த திருச்சி,கும்பகோணம்,சிதம்பரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் தேசியத்தலைவரின் படம் பொறித்த பதாகைகளை தாங்கிபிடித்து, கூட்டத்தைச் சுற்றி வந்த போது, மாநாட்டுத்திடல் முழுக்க நிறைந்திருந்த தமிழர் கூட்டம் தேசியத்தலைவரே நேரில் வந்துவிட்டதாக எண்ணி ஆர்ப்பரித்து, உணர்வெய்தது. அதனைக் கண்டு பலர் மகிழ்ச்சி வெள்ளத்தில் கண்ணீர் சிந்தினர்.  சற்றே நெகிழ்ச்சியுடன் கண் கலங்கி நின்ற அண்ணன் சீமான் அவர்களை அனைவரும் கவனிக்கத் தவறவில்லை. தொடர்ந்த புதுவை சித்தனின் கொள்கை இசை. ‘எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய’ பாடலுடன் முடிவுற்றது. அடுத்து, தமிழனின் ஆதி இசையான பறையிசை ஆதித்தமிழர் இயக்கம் சார்பாக தொடங்கியது. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் படமும், பாட்டன் அயோத்திதாச பண்டிதரின் படமும் பொறித்த சீருடைகளை அணிந்து, ‘இது சாதிப்பறை அல்ல! ஆதிப்பறை!!, ‘தேடாதே பாதையை உருவாக்கு! இது தேசியத்தலைவரின் அருள்வாக்கு’ என்ற முழக்கத்தோடு பறையிசையை ஆண்களும்,பெண்களுமாக கொள்கை நடனத்தோடு நிகழ்த்தியது அங்குள்ளவர்களை எழுச்சியடைய வைத்தது. இதற்குள் மாநாட்டுத் திடலில் இலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு இருந்தார்கள். ஓயாத அலைகளாய் மாநாட்டுத் திடலை நோக்கி தமிழர்கள் வந்துக் கொண்டே இருந்தார்கள்.  பறையிசை நிறைவு பெற்றதும், சரியாக மாலை 06.10 மணிக்கு ஈழ நாட்டின் மாவீரர் துயிலுமிட பொறுப்பாளர் பெருந்தமிழர்.பொன் தியாகம் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அங்கே ஈழப் பெருந்தேசத்தில் நம் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு முன் ஈகைச்சுடர் ஏற்றிய பெருந்தமிழர்.பொன் தியாகம் அவர்கள், அவரது தம்பியான செந்தமிழன் சீமான் அவர்களுக்கு முன் ஈகைச்சுடர் ஏற்றியது வரலாற்றியல் நிகழ்வு. அளப்பரிய ஒழுங்கமைவோடு நடைப்பெற்ற இந்நிகழ்வில் அங்கே கூடியிருந்த உலகத்தமிழர்கள் அனைவரும் நம் இனத்திற்காக,நம் தாய்மொழிக்காக, நம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஓர்மைக் கொண்டனர்.

 இம் மாநாட்டின் முதல் நிகழ்வாக அகவணக்கம்,வீரவணக்கம், உறுதிமொழி ஆகிய நாம் தமிழர் கட்சியின் நிகழ்வுகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களே முன் நின்று நிகழ்த்தியது மிகவும் பொருத்தமாக அமைந்தது. அதன் பின் இன எழுச்சிப் பேருரைகள் தொடங்கியது. மாநாட்டு மேடையில் இருக்கைகள் ஏதும் அமைக்கப்படாது, உரை நிகழ்த்துவோர் மட்டும் நின்று பேசும்படி மேடை அமைக்கப்பட்டிருந்தது. ‘பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை’ என்பதற்கேற்ப முதலில் மகளிர் பாசறையினர் எழுச்சிப் பேருரை நிகழ்த்தினர். மகளிர் பாசறையினர் பேருரை நிகழ்த்திய பிறகு, மாணவர் பாசறை, இளைஞர் பாசறை என ஒவ்வொரு பாசறையினரும் இன எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். 

 

இறுதியாக அண்ணன் சீமான் பேச வரும் போது சரியாக 9 மணி. அவர் பேசுவதற்கு முன்பாக மாநாட்டு திடலில் கம்பீரமாக ஒரு குரல் ஒலித்தது. “ தம்பி சீமானிடம் விட்டு செல்கிறோம் “ என்று ஒலித்த அக்குரல் கடற்புலிகளின் தலைவர் அண்ணன் சூசைக்கு சொந்தமானது. கடந்த 2009 மே மாத இறுதிச்சூழலில் அண்ணன் சூசை அவர்கள் இங்கே இருக்கும் ஒரு உணர்வாளரிடம் பேசிய அந்த அலைபேசி உரை மாநாட்டுத் திடலில் கூடியிருந்த இலட்சக்கணக்கான தமிழர்களை விம்மியெழ செய்தது. அண்ணன் சூசை அவர்களின் அழைப்போடு..நெஞ்சம் முழுக்க கனக்கும் உணர்ச்சிப் பெருக்கோடு அண்ணன் சீமான் மேடையேறினார்.

கடந்த 5 வருடங்களாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி இன விடுதலைக்காக, மொழி வளர்ச்சிக்காக, தமிழரின் இனமானம் காக்க , இன நலன் ஒன்றே நோக்கமென எழுந்த அக்குரல்…அந்த மாநாட்டு திடலிலும் எழுந்தது…

அந்த குரல் அன்று ஒரு ஒற்றைத் தெறிப்புதான்…

ஆனால்….அது தான் இன்று பெருந்தீயாய்

இலட்சியத்தை சுமந்து பரவிக் கொண்டே இருக்கிறது…

அடக்குமுறைகளும்,வழக்குகளும்,தடைகளும்

காற்றென வீசி அத்தீயை பெருந்தீயாய்… ஊழி பெருந்தீயாய் வளர்க்கின்றன…

  • மணி செந்தில்