11-06-2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தேமுதிக வின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி பேசும் போது தமிழக முதல்வரை புரட்சித்தலைவி என்று பெருமைப் பொங்க விளித்தார். இதில் அதிர்ச்சியடைவோ, ஆச்சர்யம் கொள்ளவோ ஏதுமில்லை என்றாலும் கூட காட்சித்தாவும் அல்லது தாவ முயலும் ஒரு நபர் கொள்ளும் தயக்கத்தின் அளவு கூட  தற்போது சற்றும் இல்லாமல் போய் விட்டதுதான் வேதனை அளிக்கிறது. தொகுதி பிரச்சனைக்காகத்தான் முதல்வரை சந்தித்தேன் என்று கூறும் சாந்தியிடம் அவருக்கு எளிதாக கிடைத்த முதல்வர் தரிசனம்  அதே தொகுதிப் பிரச்சனைக்களுக்காக ஏற்கனவே முதல்வரை சந்திக்க மனு கொடுத்து காத்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் அதன் சட்டமன்ற கொறடா சந்திரக்குமாருக்கும் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் இருக்காது.  இப்போது தேமுதிகவிற்கு நிகழ்கிற இந்த சறுக்கல்களுக்கு அது கொண்டிருக்கிற கொள்கையற்ற அரசியல் தான் மிக முக்கிய காரணமாக நம்மால் உணர முடிகிறது.
 
கொள்கை சார்ந்து உருவாகிற எந்த அமைப்பும்  உளவியல் ரீதியாக இறுக்கமாக உருவாகிறது. கட்சித் தலைமையின் அறிக்கைகளும், ஆவணங்களும், பொறுப்பாளர்களின் உரைகளும் அந்த கொள்கை சார்ந்து அதன் ஊழியரை மேலும் இறுக்கமடைய செய்கிறது.  ஒரு அரசியல் கட்சியின் தோற்றம் நிகழ்ந்தவுடன் அதன் திசைவழி குறித்த பார்வை பிறக்கிறது. அரிதான சில சமயங்களின் வரலாற்றின் போக்கும் ஒரு அரசியல் கட்சியின் திசை வழியை தீர்மானிக்கிறது. அரசியல் திசைவழி தீர்மானிக்கப்பட்டதும் கட்சி ஊழியர்கள் ஒரு தீர்க்கமான அம்சம் ஆகின்றார்கள். அவர்களுக்கு திசைவழி குறித்து பயிற்றுவிப்பதும் ஒரு அரசியல் கட்சியின் போராட்டக் கடமை என்கிறார் மாவோ.
   
ஆனால் தேமுதிகவின் பிறப்பும், திசைவழியும் கொள்கை சார்ந்து விளைந்தவை அல்ல.அதன் தொண்டர்களும் கொள்கை அரசியலால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்ல. ரசிக மனப்பான்மையிலும், திமுக, அதிமுக என்கிற இரு பெரும் கட்சிகளில் இடம் கிடைக்காத அனாதைகளாலும் உருவானது தேமுதிக. கடவுள் மறுப்பு கொள்கையை அடிப்படை அம்சமாக கொண்ட திராவிட இயக்க அமைப்பொன்றின் முதல் பூசை திருப்பதியில் நடந்தது என்பதுதான்  தேமுதிகவின் கடந்த கால வரலாறு. அதனால் தான் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு ரேசன் பொருட்களை வீடு தேடி வந்து கொடுப்பது என்று விஜயகாந்தால் சிரிக்காமல் பதிலளிக்க முடிந்தது. அதனால் தான் இவரை புரட்சிக் கலைஞர் கேப்டன் என்று புல்லரித்து உச்சரித்த சாந்தியால் அடுத்த நொடியே ஜெயலலிதாவை புரட்சித்தலைவி அம்மா என பூபாளம் பாட முடிகிறது.
 
தேமுதிக நிகழ்த்தும் அரசியல் காட்சிகள் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை விட கோமாளித்தனமானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பெயர் மாற்றி தடுமாறி உச்சரித்த விஜயகாந்திடம் பெயரை சரியாக சொல்ல சொன்ன கட்சி வேட்பாளர் அடி வாங்குகிறார். விமான நிலையத்தில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் நீயா எனக்கு சம்பளம் தர்ற..? என கேட்டு அடிக்க பாய்ந்ததும், சட்டமன்றத்தில் நாக்கைத் துறுத்தி காட்டியதும் ….எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. என்ன..நாமெல்லாம் மக்களாய் இருக்க ..இவர்கள் எல்லாம் தலைவர்களாக இருக்கிறார்களே என்கிற வேதனைதான் இதயத்தை அறுத்துக் கொண்டே இருக்கிறது.  
 
திராவிடக் கட்சிகள் தமிழக அரசியலின் மீது ஏற்படுத்தியுள்ள கடுமையான தாக்கம் அதன் அற விழுமியங்களை பாதித்து இருக்கிறது. தன்னைப் புகழும் ஒரு கட்சிக்காரரை காமராசர் சட்டையை பிடித்து அமர வைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்றோ ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தை தனது பாராட்டு மன்றமாக பாவிக்கிறார். 90 கவிஞர்களை புகழ வைத்து மகிழ்ச்சிக் கொள்ளும் கருணாநிதியின் உளவியல்தான்  ஜெயலலிதாவிடமும் இருக்கிறது. சாராயக் கடை திறந்து முதல் சாந்தி கட்சி மாறுவது வரை திராவிடக் கட்சிகளின் காட்சிகள் எதுவும் காண சகிக்காதவை. சென்ற ஆட்சியில் கருணாநிதி மதிமுகவை  உடைப்பதில் குறியாக இருந்தார். இது அம்மா நேரம். கெட்ட நேரம் தேமுதிகவிற்கு.
கொள்கை சார்ந்து இயங்கும் ஒரு அரசியல் அமைப்பில் தேமுதிக வில் நிகழ்கிற காட்சிகள் போல நிகழ்வது அரிதான ஒன்றாக இருக்கிறது. கொள்கை சார்ந்து இயங்கும் அமைப்பில் துரோகங்கள் நடக்கலாம். ஆனால் தேமுதிகவில் நடப்பது போல கோமாளித்தனங்கள் நடக்காது. தேமுதிகவின் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமிழக முதல்வரை சந்தித்து உள்ளனர். தொகுதிப் பிரச்சனைகளுக்காகத்தான் அவர்கள் தமிழக முதல்வரை சந்திக்கிறார்கள் என்றால்.. முதல்வர் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையாவது தொகுதிப் பிரச்சனைக்காக சந்தித்து இருக்கிறரா..?. அல்லது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் தொகுதி பிரச்சனையே இல்லையா..?
 
 திராவிடக் கட்சிகளின் இரு பெரும் தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டு அரசியல் வெளியை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலை காசு போட்டு காசு எடுக்கும் கம்பெனியாய் கலர் மாற்றியவர் கருணாநிதி. உள்ளூர் கம்பெனியை உலக கார்ப்ரேட் கம்பெனியாக மாற்றியவர் ஜெயலலிதா. இதன் நடுவே குண்டுச்சட்டிக்குள் எம்ஜிஆர் குதிரை ஓட்ட வந்தவர் விஜயகாந்த். கறுப்பு எம்ஜிஆரின் குண்டுச்சட்டி இன்று உடைந்து கிடைக்கிறது.
 
முடிவாய் ஒன்று தோன்றுகிறது.
 
இங்கே..
யாருக்கும் வெட்கமில்லை.
 
-மணி செந்தில்.