16298627_248346298923579_4402940604851716045_n

 

நீல ஆகாயத்தின் கீழ் பச்சைப் போர்வை என விரிந்திருந்த பசும் புற்களின் நுனியில் சேகரித்த பனித்துளிகளை விற்பவன் நேற்று வந்திருந்தான்.

கண்ணாடிக்குடுவையினுள் மின்னிக் கொண்டிருந்த அந்த பனித்துளிகள் இதுவரை பார்த்தறியாத தூய்மையால் ஏரிப்பரப்பில் படர்ந்திருந்த நிலவொளியை ஒத்திருந்தன.
மெல்ல நெருங்கி பார்க்கும் போது அந்த பனிக்குமிழியை பார்ப்பவரின் பால்ய முகம் தெரிந்து பரவசப்படுத்தியது.

பனித்துளிகளை சுமக்கும் அந்த கண்ணாடிக்குடுவைவினை அப்படியே ஏந்தி முகத்தில் வைத்து மகிழ்ந்தவர் கன்னத்தில் முதல் முத்தம் தந்த இதழ்களின் தடம் பதிந்தது.

என்ன விலை..என்ன விலை

என கேட்பவர்களிடத்து பச்சை விழிகளைக் கொண்ட அந்த செவ்வண்ண சட்டைக்காரன் சொன்னான்.

உங்கள் ஆன்மாவின் அழியாத நினைவுகளில் முதல் மூன்றினை தாருங்கள். கூடவே உங்களின் ஈரம் அடர்ந்த முத்தம் ஒன்றினையும்.

விசித்திர விலையை கேட்டவர்கள் விக்கித்துப் போனார்கள். அழியாத நினைவுகள் காலத்தின் கலையாத ஓவியம் அல்லவா..அதை விற்று வெறும் பனித்துளிகள் வாங்குவதா…முத்தம் என்பது நம் அந்தரங்கத்தின் நுழைவாயில் அல்லவா..அதை கொடுத்து பசும் புற்களின் ஈரம் அடைவதா.. என்றெல்லாம் குழுமி இருந்தோர் மத்தியிலே குழப்பம் ஏற்பட்டது.

என்னிடத்தில் முத்தம் இருக்கிறது. ஆனால் என் நினைவுகளை வாழ்வின் எதிர்பாராத தருணங்களின் வண்ணம் கொண்டு வெறுப்பின் தூரிகையால் ஏற்கனவே அழித்து விட்டேன் ..எனக்கு பனித்துளிகளை தருவாயா என்று இறைஞ்சியவளை பனித்துளி விற்பவன் விரக்தியாக பார்த்தான்..

அவனே மீண்டும் சொன்னான்.

வெறும் முத்தம் எச்சில் ஈரம் மட்டுமே..உள்ளே சுரக்கும் நினைவுகளின் அடர்த்திதான் முத்தத்தை உணர்ச்சியின் வடிவமாக்குகிறது. உணர்ச்சியற்ற முத்தம் என்பது கழுத்தில் சொருகப்பட்ட கத்திப் போல கொடும் துயர் கொண்டது. உணர்ச்சியற்ற வெறும் இதழ்களின் ஈரத்தை வைத்துக் கொண்டு என்னை விஷத்தை முழுங்க சொல்கிறாயா என எரிந்து விழுந்தான்.

என்னிடத்தில் நினைவுகள் இருக்கின்றன. அதில் படர்ந்திருக்கும் கசப்பின் நெருப்பு என் முத்தங்களை எரித்து விட்டன ..முத்தங்கள் இல்லாத நினைவுகள் மதிப்பற்றவையா.. எனக்கு பனித்துளிகள் இல்லையா என்று புலம்பியவனை பார்த்து பனித்துளி வியாபாரி அமைதியாக சொன்னான்.

முத்தங்கள் இல்லாத நினைவுகள் இதழ்கள் எரிந்த முகம்.
இதழ்களற்ற முகம் சுமக்கும் நினைவுகள் எப்போதும் பனித்துளிகளை சுமக்காது என்றான்.

நேரம் ஆக ஆக சிரித்துக் கொண்டிருந்த பனித்துளிகள் வாடத்தொடங்கின. பனித்துளி விற்பவன் பதட்டமடைய தொடங்கினான்.

கூடியிருந்த கூட்டம் மெதுவாக கலையத்தொடங்கியது.

இந்த உலகில் நினைவுகளை சுமந்து..கனவுகளின் ஈரத்தோடு முத்தமிடுபவர் யாருமில்லையா… முத்தமிடும் போது நினைவுகளை விலக்கியும், நினைவின் நதியில் தொலையும் போது முத்தத்தை அழித்தும் தான் இவர்கள் வாழ்கிறார்கள்.

என்று மனம் வெறுத்து பனித்துளிக்குடுவைகளை அருகே சலசலத்து ஓடிக் கொண்டிருந்த நிலவாற்றில் வீசியெறிந்து விட்டு அந்த கிராமத்தை விட்டு அகன்றான் பனித்துளி விற்பவன்.

அன்றைய பெளர்ணமி இரவில் ஆற்று நீரை அள்ளிப் பருகிய எவரும்..நினைவுகள் கொப்பளிக்க..எதையோ முணுமுணுத்தவாறே நதிக்கரையில் இறந்துக் கிடந்தனர்.

தப்பிப் பிழைத்து எழுந்த சிலர் கண்கள் வெறிக்க நடைப்பிணங்களாக திரிந்தனர்.

நம்மைப் போன்று.