15873112_240184553073087_4173025362634729673_n

 

வெளிச்சப்புள்ளிகள்
முளைக்காத
காட்டில்
கண்களிரண்டையும்
பிடுங்கி யாருக்கும்
தெரியாமல்
புதைத்து விடு..

கால்கள் இரண்டையும்
கட்டி.
கைகள் இரண்டையும்
வெட்டி..
ஒலி படா வண்ணம்
செவிகளை அறுத்து
புதை..

மறக்காமல்
என்
ஆணுறுப்பினை
வெட்டி
ஓநாய்களுக்கு
மத்தியில் வீசியெறி..

ஆழமாக புதை..
இன்னும் தோண்டு..

தப்பித்தவறி
முளைத்து விட
கூடாது என்ற கவனம்
உன் அறிவினை
பதட்டத்திலேயே
வைக்கட்டும்..

ஆழ புதைத்து..
உன் கால்களால்
மண்ணை மிதித்து
உறுதிச்செய்து
கொள்..

ஆழ புதைத்து
விட்டு மேலே
ரோஜா பதியம்
இட்டு விடாதே..

நாளை முட்கள்
கூட முனகக்கூடும்..

செய்து விட்டாயா..

சற்றே
கம்பீரமாக
உன் வெற்றியை
முழங்கிக்
கொள்..

அடிமையே செத்து ஒழி
என்று வாய் விட்டு
சிரி..

சிரித்துக் கொள்..

அதுவே உன்
இறுதிப் புன்னகையாக கூட
இருக்கலாம்.

வெட்டிய வாளின்
நுனியில் மிச்சமிருந்த
உதிரத்துளி கூட
இன்னும் உயிரோடு
இருக்கலாம்..

யார் கண்டது..???

அது மழையோடு கலந்து
ஆற்றில் ஓடி..
என்னைப் போலவே
இருக்கும் இன்னொரு
அடிமையின் உடலில்
கூட சேரலாம்..

அவனின்
அடித்தொண்டையில்
இருந்து மீண்டும்
நான் பிறப்பேன்..

அதற்காகவே …
என்னை அடிமையாகவே
வைத்து அழித்தொழி.

 

* எம் பண்பாட்டு உயிர் நிகழ்வான பொங்கல் திருநாளை இந்தியத்தேசியம் மறுத்து எம்மை அடிமைகள் என உணர்த்திய ஒருநாளில்….*